Friday, April 26, 2019

சென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )

மால்களையும், ஷாப்பிங் ஏரியாக்களையும் தவிர்த்துப் பார்த்தால் சென்னை ஒரு கிராமம்தான் இல்லே ? என்ன ஒன்னு.....  கிராமம்னால் வயல்வெளிகள் இருக்கும். இங்கே பயிர் செஞ்சுருப்பது வீடுகளை!   அதுவும்  நகரை விரிவாக்கறோமுன்னு கொஞ்சம் கொஞ்சமா அக்கம்பக்கம் சுத்துப்பட்டுலே இருந்த உண்மையான கிராமங்களைக் கபளீகரம் செஞ்சாச்சு. கிராமக் கோவில்கள் மட்டும், அங்கிருக்கும் மக்களின் பக்தியால் கொஞ்சம் தப்பிச்சுருச்சுன்னு சொல்லலாம்....
இன்றைக்கு முத்துமாரியம்மன் நம்மளைக் கூப்டுட்டாள் !  நானும் வரேன்னு வாக்குக் கொடுத்துட்டேன்:-)

அதென்னமோ காலையில் எழுந்துருக்கும்போதே.... பதுமனின் நினைவு. அங்கே போயிட்டு  மயிலையில்  கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கிட்டுப் போகலாமுன்னு திட்டம்.  ஆனால் தோழி வீட்டு அரிசியிலும் ஸேமியாவிலும் நம்ம பெயரை  'லஞ்சு'ன்னு .... ஆண்டவன் எழுதிட்டான்.....


வேளச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  மச்சினர் வீட்டாண்டைதான்  முத்துமாரி குடியிருக்காள்.  கோவிலுக்கு எதிரில் அகலமான மெயின் ரோடு வந்துட்டதால்  கடந்துபோறதே கஷ்டமுன்னு ஆகி இருக்கு!

 ஒரு காலத்துலே பக்கத்துலே பெரிய ஏரியும், சின்னக்கோவிலுமா இருந்துருக்கு.  இப்போ ஏரியும் சின்னதாப் போச்சுன்னு ஒரு  அம்மா சொன்னாங்க.
இன்றைக்குக் கோவிலில் தீ மிதித் திருவிழாவின் கடைசி நாள் !! பதினொரு நாள் விழா.  கடைசி மூணுநாள் பெரிய அளவில் விழா நடத்தறாங்க. அம்மனுக்குக் காப்புக் கட்டி  ஒன்பதாம் நாள் பால் குடம், பத்தாம் நாள் கரகம், பதினோராம் நாள்  தீமிதினு.... 
மச்சினர் மனைவி கோவிலுக்குப் போகத் தயாரா இருந்தாங்க. இப்போ போய்  பூஜைகளை  முடிச்சுக்கணுமாம்.  நாலுமணிக்குத் தீமிதி.  லேடீஸ் மட்டும் கிளம்பிப்போனோம்.
வெளி முற்றத்தில்  கொளுந்துவிட்டு எரியும் தீ!   இது முழுசும் எரிஞ்சதும்  தீக்கங்குகளைப் பரத்தி விடுவாங்களாம்.....    கட்டைகள் எரிஞ்சு அடங்கட்டும்.  கோவிலுக்குள்ளே போனோம். பூசாரி ஐயா பலமாகவே வரவேற்றார்!  இந்தப் பகுதியின்  ஆரம்பகாலத்தில் (!) இங்கே  வீடுகட்டிக் குடிவந்தவர்களில் மச்சினரும் ஒருவர்.
அம்மனுக்கு அலங்காரம் அருமையாத்தான் பண்ணி இருந்தாங்க.  கருவறையில் ரெண்டு பெரிய மூர்த்தங்கள்.  உற்சவர் தனியா இருக்கார். படம் எடுத்துக்க அனுமதியும் கிடைச்சது. அம்மனுக்கு எதிரில் காவல்தெய்வமா வீரபத்திரர்!(அப்படின்னு நினைக்கிறேன்!)
தரிசனம் முடிச்சுக்கிட்டுக் கோவிலை வலம் வர்றோம். சின்னக் கோவில்தான். ஒரு பக்கம் நாகர் சந்நிதி. புத்து ஒன்னு புடவையில் இருக்கு!
இந்தாண்டை நவகிரஹ சந்நிதி!
சின்ன மாடத்தில் தக்ஷிணாமூர்த்தி ! இன்னொரு பெரிய மாடத்தில் அம்மனும்!

இன்றைக்கு திருவீதி உலாவுக்கு அலங்காரம் ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருக்கு!
வெளிவளாகத்தில் ஒரு புறம் சமையல் நடக்குது.
சி.ராம், பிரியாணி நிபுணராம். பத்து வயசில் கையில் பிடிச்ச கரண்டியை இன்னும் விடலை!!
ரெண்டு ஆடுகளாமே !!!  (ஐயோ.... )

என் கண் போன போக்கைப் பார்த்துட்டு,  'இப்ப இல்லை மேடம்....   அப்புறமா....... '

அம்மன் திருவீதிவலம் வந்து கோவிலுக்குத் திரும்பியதும் 'விருந்து' தானாம்.  அதுவே  நடுராத்ரி ஆயிருமுன்னு சொன்னார்!
அப்ப தீ மிதி? நாலுமணின்னு போட்டுருக்கே....  அதான் நாலுமணிக்குக் கொளுத்தியாச்சுல்லே....   எப்படியும்  ஆறு மணி ஆகிருமுன்னு  மச்சினர் மகள் சொன்னாள்.
அதுவரை இங்கே என்ன செய்யறது? உங்களுக்கு ஷாப்பிங் செஞ்சுக்கணுமான்னு  கேட்டதுக்குச் சரின்னேன்.
நாங்க இன்னொருக்கா அம்மனைக் கும்பிட்டுக் கிளம்பினோம்.
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்....   பள்ளிக்கரணை.  வாசலில் யானையும்  அது தின்னக் கரும்புக்குவியலுமா இருந்துச்சு :-) யானைக்குப் பக்கத்துலே மிக்கி!!!
கடையில் திருவிழாக்கூட்டம். ஆடி ஸேல்ஸாம்.  திகைச்சு நின்ன என்னைக் கைபிடிச்சுக் கூட்டத்தில் நீந்திப்போனாள் மகள்!   "பெரியம்மா.... இப்படி நின்னுக்கிட்டு இருந்தால் இங்கேயே நிக்க வேண்டியதுதான்"  ரொம்பத் தேறிட்டாளே  :-)
புடவைக்குவியல்கள் கிட்டேயே போக முடியலை..... யானை இருக்கு.....  தரம் சுமார்னு நினைக்கிறேன்.  இப்பெல்லாம் ஒரு புடவை வாங்கினால் அதிகபட்சம் மூணு முறைதான் கட்டறாங்களாம்.  யூஸ் அண்ட் கீப். அதான் லேடீஸ் அலமாரியைத் திறந்தால்  புடவைகளா அடுக்கி இருப்பதைப் பார்த்து ஆண்கள் வயிறெஞ்சு போறாங்க. இவ்ளோ இருக்கே..... இனியும் எதுக்குன்னு?

இதுலே பாருங்க.....   ஃபேஷன் போயிருச்சு, இனி கட்டச் சான்ஸே இல்லை, ஏற்கெனவே மூணு நாலு முறை கட்டியாச்சு, அது இதுன்னு கோடிக் காரணம் சொன்னாலும், புடவை விஷயத்தில் மட்டும் யூஸ் அண்ட் த்ரோவுக்கு மனசே வர்றதில்லை.  எப்பவும்  யூஸ்டு ஒன் கீப் ஸே(க்)ஃப் தான்:-)
தரம் சுமாரா இருந்தாலும் யானை.... யானைன்னு மனசு அடிச்சுக்கிட்டது  உண்மை. இங்கே நியூஸியில் யார் தரம் எல்லாம் பார்க்கறாங்க... சொல்லுங்க.... கலர்ஃபுல்லாக் கட்டுனோமா,  யூ லுக் ஒன்டர்ஃபுல் என்ற (போலி) கமென்ட்ஸை ஏத்துக்கிட்டோமான்னு இருந்துடணும்:-) ஆனாலும் வாங்கிக்கலை.....  என்ன  ஒரு மன உறுதின்னு என்னை நானே மெச்சிக்கும் வேளையில்  ஜிமிக்கிக்கம்மல் ஒன்னு என்னை இழுத்துப் பிடிச்சுருச்சு. ஆனால் புடவை ஸேல் ஆஃபரில் இல்லை.  நியூ ஸ்டாக்.
ஷாப்பிங் முடிச்சு வீட்டுக்கு வந்தால் , கை/பையில் புடவை பார்த்ததும்   முகம் போன போக்கைப் பார்க்கணுமே....  மகளும் கட்டிப்பாள் என்று சொன்னதும்  அப்பன் கப்சுப் :-)

சரி, தீமிதி பார்க்க எல்லோரும் கிளம்புங்கன்னா....  அதெல்லாம் நீங்க கடையில் இருக்கும்போதே முடிஞ்சுருச்சுன்னு சொல்றார் மச்சினர்.

அட ராமா.....

ராத்திரி வீட்டுவாசலில் 'சாமி வர' பதினொரு மணிக்கு மேல் ஆகுமாம். அதுவரை காத்திருக்க முடியாதாம் 'நம்மவருக்கு'.  மகளிடம்  திருவீதிவலம் வரும் அம்மனைப் படம் எடுத்து அனுப்புன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.

படம் வந்ததோ? 

ஊஹூம்.....  தூங்கிட்டாளாம்.... சுத்தம்...

தொடரும்........ :-)


4 comments:

said...

அருமை

said...

மகள்களும் மனைவியும் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் ஒவ்வொரு இடமாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

said...

சிமிக்கி வென்றுவிட்டது :)

said...

@ நாகேந்த்ர பாரதி

@ ஜோதிஜி

@ மாதேவி

வருகைக்கு நன்றி, நன்றி, நன்றி !