Friday, April 05, 2019

வெள்ளைப்புள்ளையாரும்..... சடைநாதரும்..... (பயணத்தொடர், பகுதி 88 )

விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகனை வழிபடாமல் பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருந்துருக்கு தேவ அசுரகூட்டம். அமிர்தம் வரும் அடையாளமே இல்லையாம். போதாக்குறைக்கு ஆலகால விஷம் வேற வந்துருக்கு. (அதைத்தான் விழுங்கிவச்சார் சிவன். பார்வதி தேவி பயந்துபோய் அவர் தொண்டையை,'கப்'னு பிடிச்சதால் அவர் நீலகண்டர் ஆனாருன்னு போகுது கதை.) அப்போதான், 'அச்சச்சோ... புள்ளையார் சுழி போடலை'ன்னு தோணியிருக்கு. பாற்கடலில் நின்னுக்கிட்டுப் புள்ளையார் பிடிக்க மண்ணுக்கு எங்கே போறதுன்னு, கடையும்போது நுரைச்சுக்கிட்டு வந்ததையே எடுத்துப் பிள்ளையார் பிடிச்சு வச்சுட்டாங்களாம். அவர் தான் இவர்!!!
அழகான அஞ்சுநிலை ராஜகோபுரத்தில்  கோவிலின் பெயரும், உள்ளே இருக்கும் கடவுளர்களின் படங்களும் போட்டு ஒரு போர்டு வச்சுருக்காங்க. ரொம்பச் சரி!  ஆனால்.... இதுலேயும்  'நாந்தான் கொடுத்தேன்'ன்னு பெயர் எழுதி வைக்கணுமா?  என்ன விளம்பர மோஹம் போங்க......  ப்ச்...

திருவலஞ்சுழி, வெள்ளைப்பிள்ளையார். ஸ்வேத விநாயகர்.  ஸ்வாமிநாதனை தரிசனம் செஞ்சுக்கிட்டு அடுத்த  எட்டாவது மினிட் வந்திறங்கிய  இடம் இதுவே!  தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையில்   வெறும் 2.3 கிமீ.  வர்றவழியில் ரெண்டு ஆத்துப்பாலம் கடக்கிறோம். காவிரியும்  அரசலாறும்!  அரசலாறு நம்ம காவிரியின் கிளைநதிதான்.   இந்த இடத்தில்  நேராப் போகாமக் கொஞ்சம் வலதுபக்கம் திரும்பிப் போனதால் இந்த ஊருக்கு (!) திருவலஞ்சுழின்னு பெயர் வந்துருக்கு!
மேலே படம்: கோபுரத்தின் மறுபக்கம்.

கோவில் வாசலுக்குக் கொஞ்ச தூரம் உள்ளே நடக்கணும். இப்படி இருந்தால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் :-) தென்னந்தோப்புக்குள் போறமாதிரி இருக்கு.  வலப்பக்கம்  கோவில் புஷ்கரணி.  நல்ல சுத்தமாவே இருக்கு. குளத்தைப் பார்த்தபடி ஒரு புள்ளையார் சந்நிதி. ஜடா தீர்த்தமும், ஜடாதீர்த்தப் பிள்ளையாரும்!  குளத்துக் கட்டைச்சுவரில்  நந்திகள், அழகு!
கோபுரம் இல்லாத முகப்பு வாசல்!  உள்ளே என்ன சாமின்னு ப்ரிவ்யூ காமிக்கறமாதிரி முகப்பில் சுதைச் சிற்பங்கள்!  வாசலுக்கு ரெண்டுபக்கமும் த்வாரபுள்ளையார்கள்  இருவர்!  ஆஹா....

பலிபீடம், கொடிமரம் இரண்டுக்கும் இடையில் அழகான குட்டி விமானத்தோடு ஒரு சந்நிதி. மூஞ்சூறு   செய்த பாக்கியம்! கும்பிட்டுக் கடந்தால் முன்மண்டபம்.  முகப்பில் புள்ளையார்!
உள்ளே கருவறையில் இருக்கும் ஸ்வேத விநாயகரைக் கும்பிட்டோம். ஒரு அடி உயரம் இருக்கலாம். ஒரு மாடத்துக்குள்ளே இருந்தார். நுரை கரைஞ்சுருமுன்னு அபிஷேகம் எல்லாம் கிடையாதாம்.பிள்ளையாருக்கு வலது பக்கம் தும்பிக்கை சுழிச்சு இருக்கான்னு  இப்பவும் கவனிக்க மறந்துட்டேன். கூகுளார்  கொடுத்த படத்தில்  இடஞ்சுழிதான்.
இந்தக் கோவிலுக்கும் நம்ம  நவகிரஹ யாத்திரை சமயம் வந்து போயிருக்கோம் என்றாலும்......  சரியா ஞாபகம் இல்லைன்னு இப்ப ஒரு சாக்கு :-)
முன்மண்டபத்துத் தூண்களும் கருங்கல்  கிடையாது.  வெள்ளைப்பிள்ளையாருக்கு மேட்ச்சா  வெள்ளைமாதிரி ஒரு நிறம்.  இதிலுள்ள வேலைப்பாடுகளும் வழக்கமா நாம் கருங்கல் தூண்களில் பார்க்கும் டிஸைனும் இல்லை.  கர்நாடகா கோவில்களில்  பார்த்துருக்கோமோ.....   இல்லே.....  குஜராத்  கோவில்களிலா? ஒரு ஏழெட்டுக் கல் குத்துவிளக்குகளும் இருக்கு இந்த மண்டபத்தில்.

சிற்பிகள் வெவ்வேற நாட்டுப்பணிகளுக்கு வந்திருக்கலாம்தானே?

நம்ம ஆராமுதன் கருவறை போல இங்கேயும்  ஒரு தேரில் இருக்கார். சின்னத்தேர். அதுவும் நகரமுடியாமல் சக்கரம் பூமியில் அழுந்திக்கிடக்கு.....  அடடா..... 

கதை உண்டோ?

உண்டு.

அகலிகை சமாச்சாரத்தில் இந்திரனுக்கு சாபம் கொடுத்துட்டாள்  அகலிகை.  பாவம் தீரணுமேன்னு புள்ளையாரைக் கையில் ஏந்திக்கிட்டு சிவன் கோவில்களை தரிசனம் பண்ணிக்கிட்டே வர்றான்.  இந்த இடத்துக்கு வந்ததும் எதிரில் வந்த சின்னப்பையனாண்டே புள்ளையாரைக் கொடுத்துட்டு,  'சுயம்பு'வா இங்கே  எழுந்தருளியிருக்கும் சிவனைக் கும்பிடப் போயிருக்கான்.  திரும்பி வந்து பார்த்தால் பையனைக் காணோம்.
தேடிப்பார்த்தால் புள்ளையாரைக் கீழே வச்சுட்டுப் போயிருக்கான் பையன்.... ப்ச்....    இதுக்குத்தான் சின்னப்பசங்க யாரையும் நம்பிக் கொடுக்கக்கூடாதுன்றது.... :-)  ஏற்கெனவே  இந்தப் பசங்க இந்தமாதிரி செஞ்ச கதைகளை நிறையப் பார்த்துருக்கோமில்லை :-)  ஒரு Bபேக்Pபேக் இருந்தால்  தொல்லையே இல்லை..... 
மேலே படம்: கூகுளாண்டவர் அருளியது.

புள்ளையாரைத் தூக்கினால் எடுக்க வரலை.  தேவதச்சனைக் கூப்பிட்டு  புள்ளையார் தேரில் இருக்கறாப்படி ஒரு தேர் செய்யச் சொல்லி, தேரோடு இழுத்துக்கிட்டுப் போகலாமுன்னு பார்த்தால் தேர் நகரலை. சக்கரம் பூமியில் அழுந்திக்கிடக்கு. இனிமேல் இங்கேதான் இருப்பேன்னு புள்ளையார்  முடிவு பண்ணிட்டார்.  'கூட வந்துருப்பா'ன்னு புள்ளையாரையே தியானிக்க,  'நீ வருஷத்துக்கொருக்கா இங்கே வந்து என்னைக் கும்பிட்டுப்போ. என்னைக் கூடவே  கொண்டுபோறதால் உண்டாகும் பலன்  அத்தனையும் கிடைக்குமு'ன்னு  சொல்லிட்டார். இப்பவும் புள்ளையார் சதுர்த்திக்கு, 'டான்' னு வந்துட்டுப் போறானாம்!
சின்ன உருவமா இருந்தாலும் ஸ்ரீவாணி அண்ட் கமலாம்பாள்னு ரெண்டு மனைவிகளோட இருக்கார் இவர் !!!  இவர் 'பொறந்தப்ப '  மஹாபாரதக் காலம் எல்லாம் ஆரம்பிக்கவே இல்லை. வியாஸரே  பொறந்துருக்க மாட்டார் என்பதால் ரெண்டு தந்தங்களும் முழுசாவே இருக்கு :-)

புள்ளையாரைக் கும்பிட்டதும் வளாகத்தின் அந்தாண்டை போனால் இன்னொரு கோவில் இருக்கு.  முகப்பு வேற வச்சுருக்காங்க போல. பத்து வருசத்துக்கு முந்தி இங்கே வந்தப்பப் பார்த்த நினைவில்லை.... மொட்டை வாசலா இருந்ததுன்னு நினைக்கிறேன்.

அப்ப என்ன எழுதினேன்னு நான் போய் எட்டிப் பார்த்தால் குருக்களின் வைரக் கடுக்கண்தான் ப்ரதானமா இருந்துருக்கு....  (ப்ச்.....  ஞானம் போதாது..... )

உள்ளே நுழைஞ்சுக் கடைசியில் போய் வலப்பக்கம் திரும்பினா இன்னொரு பெரிய கோயில் இருக்கு. வலஞ்சுழிநாதர், சிவலிங்க வடிவில். பிரமாண்டமான கோயில். சிற்பம் செதுக்கியக் கல்தூண்களும் மண்டபங்களுமா..... ஹைய்யோ!!!வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இப்படி ஒரு பிரமாண்டம் ஒளிஞ்சுருக்குன்னே தெரியாது!!!! குருக்களாக இருந்த இளைஞர் போட்டுருந்த வைரக் கடுக்கண் (கொட்டைப்பாக்கு சைஸ்) என் கண்ணைப் பறிச்சது என்னவோ நிஜம்.


இப்ப  மேலே ப்ரிவ்யூ  காமிப்பதில்  ஹரிஹரன்/ சங்கரநாராயணன் இருக்கார்.   அப்புறம் தனிப்பேனல்களில் ரெண்டு பக்கமும் அம்மன்கள்!  தலைக்குமேல் ரிஷபாரூடர் !
அருள்மிகு ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி திருக்கோவில் (சடைமுடிநாதர்)   ஸ்வாமி பெயரையும் மாத்திட்டாங்களா என்ன? திருவலஞ்சுழிநாதர் இல்லையோ....

உள்ளே போய் மூலவரைக் கும்பிட்டோம். லிங்கவடிவில்தான் இருக்கார்.

பிரகாரம் எல்லாம் படுசுத்தமாத்தான் இருக்கு!  நிறைய மண்டபங்கள் வேற !  முகப்பில் தெரியும் தூண்கள் ஒரு வகையாவும் உள்ளே இருக்கும் தூண்கள் நாம் நம்ம ஊர் கோவில்களில் (!) வழக்கமாப் பார்த்திருக்கும் வகையாவும்  இருக்கு!  எல்லாம் கலந்துகட்டி ஒரு புது ஸ்டைல்  பண்ணிட்டாங்க!

நடராஜர், ரெட்டைப் புள்ளையார்கள், தெட்சினாமூர்த்தி, பிச் ஆண்டவர்,  நர்த்தன கணபதி,  வலஞ்சுழி வினாயகர், லிங்கோத்பவர், ஆறுமுக கடவுள் ஸ்ரீ வள்ளி தெய்வானை இன்னும் பெயர் எழுதாத சந்நிதிகள்னு  ஏராளம்!  பிரகாரமும் மண்டபங்களும் மட்டுமே சுத்தம், சந்நிதிகள் இல்லை.... தினம் விளக்கு வைக்கிறோமுன்னு சொல்றாங்க போல.....  கருப்பாப் பிடிச்சுருக்கும் எண்ணெய்க் கறைகள்.....  ப்ச்....

இந்தியா க்ரிக்கெட் மேட்ச்லே ஜெயிக்கணுமுன்னா இவரை வேண்டிக்கணுமோ!!!!
கஜலெட்சுமி இருக்காள்!

ஒரு பிரகார மண்டபத்தில்  ஏராளமான சிவலிங்கங்கள்.  நாம் முழிக்காமல் இருக்க விவரம் எழுதிப்போட்டுருக்காங்க !



தனியா ஒரு தபஸ் நாச்சியார் !
இந்திரன் பூஜித்த லிங்கம், சப்தமாதாக்கள்..... என்னன்னு எழுத? கணக்குவழக்கில்லாமல் அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு.....

 பேசாம கபர்தீஸ்வரருக்கு(ம்) ஒரு ஆல்பம் போட்டே ஆகணும். செஞ்சுடலாம்..... 
அஷ்டபுஜ மகாகாளிக்கு ஒரு சந்நிதி. ஒவ்வொரு போருக்கும் புறப்படுமுன் இவளை வந்து வணங்கிட்டுப்போவானாம் ராஜராஜன். வெற்றி நிச்சயம் !
வளாகத்தின் ஒருபக்கம் தனிக்கோவில் போலவே  இருக்கு அம்பாள் சந்நிதி. ப்ரஹன்நாயகி என்னும் பெரியநாயகி அம்பாள். ஆளுயச்சிலை!  ரொம்பவே அழகு!
இந்தப்பகுதியில்தான் கோவிலின் நந்தவனமும் கிணறும். ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லை.... அதுவும் அந்தக் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தது என் தப்பு.... யக்...  எல்லாம் சனம் செய்யும் அக்கிரமம்தான். இடங்களை அழுக்குப் பண்ணுவதே வாழ்வின் நோக்கம்னு நினைக்குது....

  மகாகணபதிக்கு ஏகப்பட்ட  டிமாண்ட். பேக் ட்ராப் சித்திரங்கள் பாரீர்
இன்னொரு ப்ரகார ஓரத்து வராந்தாவில்(அம்பாள் சந்நிதியின் கோஷ்டத்தில்)  தஞ்சாவூர் பெயின்டிங்/ படங்கள்னு கொண்டாடுறோமே அதைப்போலவே.....  அட்டகாசம்! விஜயநகர கால ஓவியங்கள்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. காலம்  பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாம்!



முக்கால்வாசி வண்ணம் போய் நிறம் மங்கித்தான் இருக்குன்னாலும்....  புனரமைக்கிறோமுன்னு  விவரம் தெரியாத யாராவது வந்து  ரசாயனம் கலந்த வண்ணம் பூசி, மெழுகி வைக்காமல் இருக்க, அந்த அம்பாளும் ஈசனுமே கருணை செய்யணும்.  நினைக்கும்போதே நெஞ்சு  பதைக்குது.....
வாகன மண்டபங்களில்   இருக்கும் வாகனங்களின் நிலமை மோசம்....    விழா சமயத்துலே  (மட்டும்) கவனிப்பாங்க போல....   கோவிலுக்கு எண்ணெய் டின்கள் வாங்கினோமுன்னு கணக்குக் காமிக்கறாப்பல......
தூக்கிப்போடாம இது என்ன வெட்டிவேலை.....   குப்பை சேர்க்கத் தயக்கமே இல்லை பாருங்க....

வெளிப்ரகாரத்திலும் பராமரிப்பு இல்லை.....  ப்ச்...

ஆங்............சொல்ல மறந்துட்டேனே..... 

வெள்ளைப்பிள்ளையாரைக் கருங்கல் பலகணி மூலம் பார்க்கறது விசேஷமாம்.  சனம் இங்கேயும் கைவரிசை காட்டி இருக்குன்னு இப்போ  ஜன்னலுக்கே கம்பித்தடுப்பு போட்டுருக்காங்க. ஒருவிதத்தில் நல்லதுதான்.  உடைச்சு வச்சால்.... அம்மான்னா வருமா, ஐயான்னா வருமா.....

 பொதுவாக் கோவிலுக்குப் போனா... மன நிம்மதியோடு  வெளியே வரணும். ஆனால்....   அக்கிரமம் பார்த்து மனக்கொதிப்போடு  வரவேண்டியதா இருக்கு, இப்பெல்லாம்..... ப்ரெஷர் ஏகத்துக்கும் எகிறுதுன்னா.....    ஏறாம? இன்னும் ரெண்டு மாத்திரையைக் கூடப்போட்டுக்கணும்....  பெருமாளே...............

முகப்பில் சங்கரநாராயணனா இருக்காரே.... அதுக்கு என்ன காரணம்?  பெருமாள் சந்நிதி இருக்கான்னு தேடினால்.... ஊஹூம்....  மார்கழி சதுர்த்திக்குப் புள்ளையாரைப் பார்க்க வந்துட்டுப்போறாராம்.  பாற்கடல், வெள்ளை நுரைன்னு  ஒரு சம்பந்தமும் இருக்கு, இல்லே?

புள்ளையார் முன்மண்டபத்தில் இருந்து பார்த்தால் வெளிப்புறம் இப்படி......   அழகான கோவிலுக்கான முன்வாசலையொட்டியே அன்னதானக்கூடம் அசிங்கமாக் கட்டி வச்சுருக்காங்க. போதாததுக்குப் பொன்னம்மான்னு அதன் தலையில் இன்னும் அசிங்கமா ஒரு தண்ணித்தொட்டி..... எல்லாம் த்ருஷ்டிப்பரிகாரம்.....
வாசல்லேயே சோறு போட்டு அனுப்பிடணுமாக்கும்....    கொஞ்சம் ஒதுக்குப்புறமாக் கட்டினால் ஆகாதா?   வளாகம் பெருசாத்தானே கிடக்கு....  என்னவோ போங்க....
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை ஆறுமுதல் பனிரெண்டு, மாலை நாலு முதல் எட்டு.

தொடரும்............ :-)


4 comments:

said...

இதுவரை செல்லாத கோவில்... பார்க்க அழகா இருக்கு.

said...

திருவலஞ்சுழி... போக நினைத்த கோவில். இதுவரை வாய்க்கவில்லை.

பாலகுமாரன் அவர்கள் இக்கோவில் பற்றி ஒரு முறை எழுதி இருந்தார். அப்போதிலிருந்தே போக நினைத்த கோவில். உங்கள் மூலம் இங்கே தரிசனம். நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

சந்தர்ப்பம் அமைஞ்சால் விட்டுடாதீங்க. பார்க்க வேண்டிய கோவில்தான் இது!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... பாலகுமாரன் எழுதி இருந்தாரா !!!!

அருமையான கோவில்தான். உங்களுக்கு கும்மோணம் பயணம் விரைவில் அமையட்டும்.