Tuesday, November 27, 2018

சென்னைக்குன்னே சில..... !!!!! (பயணத்தொடர், பகுதி 38 )

நியூஸியில் இருந்து கிளம்பும்போதே....  சென்னைக்குன்னு சில வேலைகளை ஒதுக்கி வச்சுக்கறதுதான். முக்கியமா நகைநட்டு ரிப்பேர்!  நம்ம  வகை நகைகள் எதாவது பழுதானால்  இங்கே  செஞ்சு வாங்கிக்கறது மஹா கஷ்டம்.  ஹைகேரட்டாமே!  துக்கினியூண்டு பத்த வச்சுக் கொடுக்கவே  அம்பதறுபது டாலர்  வாங்கிருவாங்க.
தங்கமாளிகைக் கடை நம்மை நல்லா ஏமாத்திய அனுபவத்தால் அந்தப் பக்கம் காலடி எடுத்து வைப்பதில்லைன்னு சபதம் போட்டுருக்கேன்.  தி நகர் மங்கேஷ் தெருவில் இருக்கும் சீனிவாச ஆச்சாரி கடைதான் இப்ப  ஒரு பத்து வருஷமா நமக்கு ஆகி வந்துருக்கு!
அப்புறம்  தையல் கடை!  எனக்கே தைக்கத் தெரியும் என்றாலும்,  இங்கே ஒரு நூல்கண்டு வாங்கும் விலையில்  கொஞ்சம் கூடப்போட்டால் ஊரில் தைச்சே வாங்கிட்டு வந்துடலாம்னு ஒரு கணக்கு.
அப்புறம்  உறவினர், நண்பர்கள் வீட்டு விஸிட்,  'நம்மவரு'க்குப் பேண்ட்ஸ் தைச்சு வாங்கறது, கோவில்களுக்குப் போய்வர்றது,  நண்பர்கள் நம்மை சந்திக்க வர்றதுன்னு  எதாவது ஒன்னு இருந்துக்கிட்டே இருக்கும்.  கடைகண்ணிகளுக்குப்போய்  புதுசா என்ன வந்துருக்குன்னு 'பார்க்கிறது' சொல்ல விட்டுப்போச்சோ :-)

பெரிய பாத்திரங்கள், கடாய்கள் இதுக்கெல்லாம் 'மூடிகள் மட்டும்' வாங்கிக்கணுமுன்னு இங்கிருக்கும் பாத்திரங்களின் அளவை எடுத்துக்கிட்டுப்போனோம்.  ஏழு மாடி  சரவணா ஸ்டோர்ஸ்!

28 செமீ தட்டு வேணும். அதே நம்பரில் கிடைச்சது. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அதிலிருந்து கீழ்நோக்கி இன்னும் மூணும் வாங்கியாச்சு. நாலு தட்டு வாங்கிட்டேன்னு 'ஆரம்பம்' ஆச்சு கச்சேரி.  அச்சச்சோ....   இதுவே ஒரு கிலோ வருமோ..... அப்ப இனி இருபத்தியொன்பது, இருக்கு. 

கல்யாணத்துக்கு என்னென்ன கொடுக்கணுமுன்னு சீர்வரிசைகளை அடுக்கிக் கொலு வச்சுருந்தாங்க. மறந்துட்டேன்னு 'சம்பந்திகளிடம்' சொல்ல முடியாது!  இதுலே பித்தளைப் பாத்திர ஸெட், எவர்ஸில்வர் பாத்திர ஸெட்ன்னு ரெண்டு வகைகள் வேற! சும்மாச் சொல்லக்கூடாது.... அந்த பித்தளைப் பாத்திர ஸெட் அழகு!  யார் தேய்ச்சு மினுக்குவாங்க? மாமியாரா இருக்குமோ?

சாயங்காலமாக் கிளம்பி ம்யூஸிக் அகடெமி போறோம். நம்ம எம் எல் வி இருந்தாங்கன்னா.... இன்றைக்கு அவுங்களுக்கு தொன்னூறு !  குரு வந்தனமாக, நம்ம சுதா ரகுநாதன் அவர்கள் ஏற்பாடு செஞ்சுருக்கும் விழா! புது தபால்தலையும் வெளியிடறாங்க. என் உ.பி சகோ தான் கட்டாயம் மறக்காம வந்துரணுமுன்னு கட்டளை போட்டுருந்தார். அவுங்க இலாகாதான் தபால்தலை வெளியீடு!

முக்கிய புள்ளிகள் வரும் விழா என்பதால்  ரொம்ப கெடுபிடி இருக்குமோன்னு பயந்துதான் போனேன். அங்கே  எல்லாம் வழக்கம் போல்.....
நாலுமணிக்கு விழா ஆரம்பம்.  சரியான நேரத்துக்கு ஆரம்பிச்சுட்டாங்க. தெரிந்த பெயர்கள், தெரிந்த முகங்கள், பிரபலங்கள் என்று  மேடையில் வந்து பாடிட்டுப்போறாங்க. நம்ம ஜயந்தி ஸ்ரீதரன்  பாடிய  'அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ' ரொம்பவே அருமை!
அடுத்துப் பாடுன சின்னக்குட்டிப் பையரை முதல்முதலாக் கேக்கறேன். ராஹுல் வெல்லால்!  சரணு சித்தி விநாயகா,  சந்த்ரசூட சிவசங்கர பாலகா,  பாரோ க்ருஷ்ணைய்யா  இந்த மூணு பாடல்களையும் கேட்டப்ப அப்படியே மனம் உருகி மெய்மறந்துபோனது உண்மை!  என்னமா பாடுறான் பாரேன்னு   மனசு கூத்தாடுது!   குழந்தை நல்லா இருக்கணும்!
திருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன் பாட்டுகளுக்குப்பின் நம்ம கன்யாகுமாரி!  நம்ம எம் எல் வி அம்மாவின் இசைக்குழுவில் ரொம்பநாளாக் கூடவே இருந்தவங்க!   ஒன்பது வருசங்களுக்கு முன்னே  சென்னையில் டிசம்பர் ம்யூஸிக் சீஸனில் ஒரு விழாவில் எம் எல் வி அம்மாபற்றி டாகுமென்ட்ரி படம் (தூர்தர்ஷன் எடுத்ததாம்) காமிச்சாங்க.  அப்ப அதைப்பற்றி நம்ம துளசிதளத்துலே எழுதுனதுக்கு நம்ம அமைதிச்சாரல்,  'எம்.எல்.வி அம்மா அண்டார்டிகாவுக்கே போய் கச்சேரி செஞ்சாலும் கன்னியாகுமரி அம்மாதான் வயலின்' அப்படின்னு பின்னூட்டினாங்க. அது உண்மைதான்!
அந்த நிகழ்ச்சியில் க்ளிக்கினது இது!  யார் யாருன்னு தெரியுதோ?  :-)
கோவிந்தா ஹரி கோவிந்தான்னு .... நம்ம கன்யாகுமாரி.....
விழா ஏற்பாட்டாளர் பயங்கர பிஸி !!




'The Maiden of Spring'  என்ற தலைப்பில் ஒரு குறும்படம்!  எம் எல் வி அம்மாவைப் பற்றிப் பிரபலங்கள்  கூறியவை!
இதுக்குப்பின் ஒரு இடைவேளை.  ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய ஸ்வீட் காரம்  ஃபில்டர் காஃபி!

திரும்ப  உள்ளே போறோம். இப்போதான்  முக்கிய புள்ளிகளின் வருகையும், முக்கிய நிகழ்ச்சியும்!
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும்,  தொலைத்தொடர்பு & ரயில்வே அமைச்சர் திரு மனோஜ் ஸின்ஹா அவர்களையும்  வரவேற்க மேடை தயாராக இருக்கு!

மாண்புமிகு அமைச்சர்கள், குத்துவிளக்கை ஏற்றி வைத்து விழாவைத் தொடக்கிவைத்தார்கள். அப்போ பின்னணியில் என்ன பாட்டு தெரியுமோ?  துளசி ஸ்பெஷல்! 'தூமணி மாடத்து....'  வாவ்!  தேன்குடிச்ச  துளசியை நீங்க அப்போ பார்த்துருக்கணும்....  :-)

விழா அமைப்பாளர் நம்ம சுதா ரகுநாதன், எல்லோரையும் வரவேற்றுப் பேசுனாங்க. அவுங்களோட சமுதாயா ஃபவுன்டேஷன் செய்யும் சேவைகளைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொன்னாங்க. அப்புறம் முக்கியப்புள்ளிகளுக்கு பொன்னாடை, நினைவுப்பரிசுகள் வழங்குதல் எல்லாம் ஆச்சு. 



பரிசு வழங்குனதைவிட அதை ரொம்பவே பணிவா வாங்கிய முறை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  எவ்ளோ பெரிய பதவியில் இருக்காங்க. ஒரு பந்தா, ஒரு அலட்டல் இப்படி  எதாவது காமிக்கப்டாதோ? ஊஹூம்..... நம்ம பாரதி கண்ட புதுமைப்பெண். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்!
பாதுகாப்புத்துறையில் முதல் பெண் தலைவர் என்ற சேதி தெரிஞ்சுருந்தாலும், இவுங்களை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை! உண்மையைச் சொன்னா.... இவுங்களுக்காகவே இந்த விழாவுக்குப் போனேன்னும் சொல்லலாம்.
அடுத்து இவுங்க பேச ஆரம்பிச்சதும்...... ஹைய்யோ!  அரசியல் கலக்காத அருமையான பேச்சு.  ரொம்ப இயல்பா.... பாட்டுக்கும் இவுங்களுக்கும் உள்ள சம்பந்தம் பற்றிப்பேசுனதைக் கேட்டப்ப, எதோ பக்கத்துவீட்டுப் பெண்மணின்னு தோணுச்சு எனக்கு!  இவ்ளோ எளிமையா!!!!!  வாவ்!!!!

இப்ப நான்  திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் விசிறி !

அவுங்க அன்றைக்குப் பேசுனதின் லிங்க் இது. விருப்பம் இருந்தால் கேளுங்களேன்!
அப்புறம்  தமிழகத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல், எம் எல் வி அம்மாவின் தபால்தலை வெளியிட்டார்.


 நினைவுப்புத்தகம் வெளியீடும் ஆச்சு.  ஹாலுக்கு வெளியே  இவைகளை விற்பனைக்கும் வச்சுருந்தாங்கன்னு 'நம்மவர்' போய் வாங்கி வந்தார்!
நம்ம உ பி சகோவும் ரொம்பவே பிஸியா மேடைக்கு வந்து போய்க்கிட்டு  இருந்தாரா, அவரையும் க்ளிக்கி, அப்புறம் அவருக்கே அனுப்பினேன்:-)


நன்கொடை வழங்குதல்



விழா நிகழ்ச்சியின் கடைசிப் பகுதியா, நம்ம சுதா ரகுநாதன் பாட,  ரமா  வைத்தியநாதன் ( ந்ருத்திய சூடாமணி 2017) அவர்களின் நடனம்.  எம் எல் வி அம்மா இசை அமைத்த புரந்தரதாஸரின் பாடல்!

எதோ போன ஜென்மத்தில் கொஞ்சூண்டு புண்ணியம் செஞ்சுருக்கோம் போல !  மனநிறைவுடன்  லோட்டஸ் போய்ச் சேர்ந்தோம்.

தொடரும்...:-)


3 comments:

said...

ஓ இதெல்லாம் இங்க நடந்ததா?

எம் எல் வி பாடலுக்கு வாரிசு சுதா ரகுநாதன் அவர்கள். நல்ல கச்சேரி அனுபவம் கிடைத்தது போலிருக்கு.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அவங்க ஸ்பெஷல் மைசூர்பாவை விட்டுட்டாங்க போலிருக்கு.

said...

இனிய நிகழ்வுகள்...

உங்கள் மூலம் நாங்களும் நிகழ்வில் கலந்து கொண்ட உணர்வு.

said...

மிக அருமை, நன்றி