Wednesday, November 14, 2018

மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... !!!!!(பயணத்தொடர், பகுதி 33 )

பெட்டான்னா  மலை, குன்று....  தொட்டபெட்டா  நினைவிருக்கோ?
மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க.
அடிவாரத்துலே  கார்பார்க் இருக்கு.  நம்ம  வண்டியை அங்கே நிறுத்திட்டு, கர்நாடகா அரசு பஸ்ஸில்  போகணும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. மேலே போகும் சாலைக்கு ஒரு தடுப்பு போட்டுருக்காங்க.

பண்டிப்பூர் வனப்பகுதி இது !   புலிகள் வாழும் இடம் !   கர்நாடகா அரசு வனத்துறையின் பொறுப்பில் இயங்குது எல்லாமே!  நாம் போய்ச் சேர்ந்தபோது மணி பதினொன்னரை.

காலை எட்டரை முதல் மாலை 4 வரைதான் அனுமதி.
நல்ல கூட்டம்தான்.  கிடைக்கும் நிழலில் அங்கங்கே மனித முடிச்சுகள்.  பஸ் வந்ததும்  தடுப்பைத் திறந்து விடறாங்க. நாம் போய் ஏறிக்கலாம்.  பத்து நிமிட் காத்திருப்பில் மலையில் இருந்து கீழிறங்கிய வண்டியில் ஏறினோம்.

ஆளுக்கு இருபது ரூ கட்டணம்.  கூடி வந்தால் ஒரு  காமணி நேரப்பயணம்தான்.   மலைப்பாதை வளைவில் முக்கல் முனகலோடு பஸ் மெள்ள ஏறிப்போகுது.  அங்கங்கே தெரியும் காட்சிகளை க்ளிக் செஞ்சுக்கிட்டே போறோம். அடர்ந்த வனப்பகுதிதான் கீழே!

இப்ப மணி பனிரெண்டு ஆகப்போகுது. மட்ட மத்யானம் நேரம் ஆனாலும் தொலைவில் லேசா மிஸ்ட் தெரியுது.
காலை நேரங்களில் இந்த மலையே மூடுபனியால் மூடி இருக்கும் என்றதால்தான்  ஹிமவாட் என்ற  அடைமொழியே இந்த பெட்டாவுக்கு வந்துருக்கு!  ஹிமவாட் கோபாலஸ்வாமி பெட்டா!

பஸ் நின்னதும் இறங்கிப் பார்த்தால் கொஞ்சம் உயரத்தில் கோவில் மதிலும், எட்டிப்பார்க்கும் கோபுரமும் தெரிஞ்சது.
மேலே போகும் படிகளுக்கான நுழைவு வாயில்தோரணத்தில் 'உள்ளே இருப்பது யார்'னு காமிச்சுட்டாங்க.
அங்கேயே செருப்பை விட்டுட்டுப் படிகள் ஏறிப்போறோம். அடர்த்தியான துளசியை வாங்கி 'நம்மவரின் ' கைகளில் கொடுத்தேன்! க்ளிக் ஆச்சு. இப்போ துளசியின் கையில் துளசி :-)  சாமிக்கு இன்றைக்குப் பழம் வேற  கிடைச்சுருச்சு! இவ்ளோவான்னது இதுக்குத்தான்  ! 
அவ்வளவா உயரம் இல்லை. ஒரு அம்பது படிகள் இருக்கலாம்.  மேலே சுத்திவர  கைப்பிடிச்சுவர் உள்ள பெரிய தரையின் நடுவில் மதில் சுவருடன்  மேடையில் நிற்கும் கோவில்!  நடுவில் நுழைவு வாசல் தலையில் சின்னதா ஒரு நிலை ராஜகோபுரம்!

உள்ளே கூட்டமா இருக்கேன்னு  முதலில் வெளிப்ரகாரம் சுத்தப் போனோம்.ராஜகோபுரத்தில் ஒருபக்கம், சுதர்ஸனன், அடுத்த பக்கம் ஸ்ரீவேணுகோபாலன் ருக்மிணி & சத்யபாமா.
நடுவில் யாகம் நடத்தும் முனிவர். அவியுண்ண வந்த மஹாவிஷ்ணு, சிவன், பிரம்மா முதலியோர்.  எல்லாருக்கும் போட்டாச்சு நாமம். ஹாஹா... நம்ம வீட்டு சமாச்சாரம் தெரிஞ்சு போச்சு இவுங்களுக்கும் :-)

'ராஜ கோபுர'வாசலைக் கடந்து உள்ளே காலடி வச்சால் உள் பிரகாரம்!   ஆனால் சுத்திவரும் வசதி இல்லைன்னு  நினைக்கிறேன். உள்முற்றமுன்னு வச்சுக்கலாம் :-) வரிசையில் பக்தர்கள். நாங்களும் சேர்ந்துக்கிட்டோம்.  கொடிமரம் உயர்ந்து நிக்க, அந்தாண்டை ஒரு முன்மண்டபம். அதன் தலைப்பில்?
தசாவதாரச் சிற்பங்கள்  இந்தப்பக்கம் அஞ்சு, அந்தப்பக்கம் அஞ்சுன்னு. நடுவில் கல்யாணக் காட்சி!  மஹாவிஷ்ணு , மஹாலக்ஷ்மியைக் கல்யாணம் பண்ணிக்கிறார்.  பிரம்மதேவன், சிவன் இவுங்கெல்லாம் கல்யாணத்துக்குச்  சாட்சியா நிக்கறாங்க. சிவன் உள்பட எல்லாருக்கும்  நாமமே நாமம்!
கொடிமரத்துக்கு வலப்பக்கம்  சின்னதா ஒரு மாடச்சந்நிதி. அதுக்குப்பின்னே துளசிமாடம்.  அந்தக் குட்டிச் சந்நிதியில் வழக்கம்போல் பெரிய திருவடி இருப்பார்னு நினைச்சேன். ஆனால்.... அங்கே  அதுக்குள் நாகதேவதைகள்!  சேஷனின் சொந்தங்கள்!   துளசியும் கொஞ்சம் காய்ஞ்சுதான் கிடக்காள். கோவில் தலவிருக்ஷத்தில் (புன்னை மரம்) நிறைய வேண்டுதல்கள்.

கொடிமரத்துக்குக் கவசம் போட்டு அதுலேயே சங்கு சக்கரம், பெரிய சிறிய திருவடிகளை வச்சுட்டதால்  தனிச் சந்நிதி இல்லை !!!
இடப்பக்கம் ஒரு கம்பித்தடுப்பு போட்டு அதுக்குள்ளே சனம் இன்னொரு வரிசையில் நிக்கறாங்க.  கோவிலுக்குள்  தரிசனத்துக்குப் போகும் வரிசையோன்னு  பார்த்துவரப்போனேன்.  இது சாப்பாட்டு வரிசை!
நம்ம சோழமன்னர் ஆட்சியில் வல்லாளதேவர் ஆண்ட காலத்தில் (1315 ஆம் ஆண்டு) இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்க.  அதன்பின் மைஸூரை ஆண்ட / ஆளுகின்ற உடையார் வம்ச அரசர்கள் போற்றி வளர்த்த கோயில் இது!
கருவறை விமானம் ரொம்பவே அழகு!

 முன்மண்டபம் கடந்து  கருவறைக்குச் சமீபிக்கும்போது, தரையெல்லாம் ஒரே ஈரம். சாக்குப்பைகளைப் போட்டுத் துடைச்சுக்கிட்டு இருக்காங்க. கூட்டம் வேற அம்முது.  பெண்போலீஸ் நின்னபடி, தங்களுக்கு வேண்டிய ஆட்களை  வரிசையைச் சட்டை செய்யாமல், கயிற்றைத்  தூக்கித்தூக்கி உள்ளே அனுப்பிக்கிட்டு இருக்காங்க.

என்ன இதுன்னு  முழிச்சுப் பார்த்ததைப் (முறைச்சுப் பார்த்துட்டேனோ?)  பார்த்துட்டோ என்னவோ  எங்களையும் அந்தப் பாவத்தைப் பங்குபோட்டுக்கச் சொல்லிக் கயிற்றை அவிழ்த்துட்டுத் திரும்ப மாட்டினாங்க.

கருவறையில் ஸ்ரீ வேணுகோபாலனாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு தலையை லேசா இடது பக்கம் சாய்ச்சு, நின்ற கோலத்தில்  ஸேவை சாதிக்கிறார் எம்பெருமாள்!  நடனம் ஆடுறாப்போல ஒரு பாதத்துக்கு முன்னால் குறுக்காக இன்னொரு பாதம் வச்சுக் 'கிருஷ்ணர்' போஸ் :-)
கல்லில் செதுக்குன பிரபைதான் . அதுலே  ருக்மிணி, சத்யபாமா, மாடுகள், மரம்,  மாடுமேய்ச்சகாலத்து ஃப்ரெண்ட்ஸ்ன்னு இருக்காங்களாம்.பூ அலங்காரம் சுத்தி இருந்ததில் அதொன்னும் சரியாத் தெரியலை.

(உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை . கோவில் வலைப்பக்கத்துலே படம் கிடைச்சது!)

அகஸ்திய மகரிஷி,  (காவிரியை பூமியில்  ஓடவிட்ட கையோட ) இங்கே வந்து, விஷ்ணுவை நினைச்சுத் தவம் செஞ்சதும், அவருடைய யாகத் தீயில்  புல்லாங்குழல் வாசிக்கும் 'வேணுகோபால கிருஷ்ணரா'க் காட்சி கொடுத்தாராம். (ஓ.... அதுதான்  கோபுரவாசலில் மேலே இருக்கு போல ! )

ரொம்பவே மகிழ்ந்துபோன முனிவர்,  தான் செய்யும் சிலையில் ஸ்ரீகிருஷ்ணர், இப்படி கோக்களை மேய்க்கும் காலத்துக் கோபாலனாகவே தங்கி எல்லோருக்கும் அருள் செய்யவேணுமுன்னு பிரார்த்திச்சதும் அப்படியே ஆச்சு.
இப்போ நாம் தரிசிக்கும் இந்த ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி சிலையை, அகஸ்தியரே உண்டாக்கிப் பிரதிஷ்டை செய்தாருன்னு ஐதீகம்.

கையில் இருந்த வாழைப்பழங்களைப் பட்டரிடம் கொடுத்து  சாமிக்குன்னால், அவர் வாங்கி அதைக் கோபாலன் காலடியில் வச்சுட்டு, அதில் இருந்து ரெண்டே பழங்களை எடுத்துக்கிட்டு மீதிப் பழங்களை நமக்கே பிரஸாதமாக் கொடுத்துட்டார்.
சாமிக்கு  ஸிண்டிகேட் பேங்கில் அக்கவுண்ட் இருக்குன்னு தெரிஞ்சது .

ரொம்பவே சக்தி வாய்ந்த சாமி என்பதால் பதினெட்டுப்பட்டி சனமும்  வந்துடறாங்க.  இன்றைக்கு சனிக்கிழமை என்பதால்  வீக் எண்ட் கூட்டமும்  சேர்ந்துருக்கு! அக்கம்பக்கம் ஊரும் இல்லை, ஓட்டலும் இல்லை பாருங்க.... கோவிலே சாப்பாடு போட்டுருது!  நம்மையும் சாப்பிடச் சொல்லிக் கூப்புட்டாங்க.  என்னமோ சாப்பிடணுமுன்னு தோணலை எனக்கு.  நம்ம பெயர் எழுதுன அரிசி அங்கே மிஸ்ஸிங்.

வெளிப்ரகாரம் சுத்தப்போனோம். பெரிய மொட்டைமாடி போல இருக்கு!

4842 அடி உயரத்தில்  கட்டி இருக்கும் கோவிலாச்சே!  அங்கிருந்து பார்க்கும்போது கீழே காட்டில்தான் ஒரே ஹிமவாட். நட்டநடு மட்ட மத்யான வேளையில் நாம் கோவிலுக்கு வந்துருக்கோம்!
கோவிலுக்குப் பின்பக்கத்துலே சரிவா இறங்கும் மலைப்பகுதியில் ஒரு குட்டை  இருக்கு. ஹம்ஸதீர்த் என்று பெயர். இதைத்தான்  அகஸ்தியர் காலத்துலே  அபிஷேகத்துக்குப் பயன்படுத்தினாராம். இப்பவும் அதே!

இந்த சரிவு வழியா யானைகளும், மற்ற வனவிலங்குகளும் சாயங்கால நேரம் இங்கே வர்றாங்களாம்.  குட்டையில் தண்ணீர் குடிக்க வருவாங்க போல!  உண்மை என்று அங்கங்கே 'அடையாளம்' வச்சுட்டுப் போயிருந்தது யானைகள்!
அதனால்தான் சாயங்காலம் நாலுமணிக்குக் கோவிலைப் பூட்டிக்கிட்டு எல்லோரும் கீழே போயிடறாங்க.  எதோ ஆஃபீஸ் மாதிரி எட்டரைமுதல் நாலு மணி வரை மட்டுமே திறக்கறதால், பகல் நேரம் கோவிலை மூடறதில்லை!

பண்டிப்பூர் வனப்பகுதியிலேயே மிகவும் உயரமான இடம் இதுதான் என்பதால்  வெள்ளையர் ஆண்ட காலத்துலே  அம்மக்கள்  வியூ பார்க்க அடிக்கடி வந்து போவாங்களாம். நல்ல வேளை.... கோவிலை இடிச்சுட்டு, கெஸ்ட் ஹவுஸ் கட்டிக்கலை.   காரணம் ஒருவேளை.....  சாயங்காலங்களில்  யானை, புலி விஸிட்டாக இருக்குமோ!  இருக்கணும்தான். கோவில் தப்பிச்சது!

இந்த விஸிட்டர்ஸ் பத்திய விவரம் தேடுனப்ப இந்தப் படம் கிடைச்சது.  கூடவே ஒரு சேதியும். இந்தச் சுட்டியில் பாருங்க !

அக்கம்பக்கக் காட்சிகளைக் க்ளிக்கும்போதே சரசரன்னு மழை பிடிச்சுக்கிச்சு.  கோவில்தேர் நிறுத்தி இருக்கும் கட்டடத்தில் பத்து நிமிட் போல நின்னுருந்தோம். இந்த வெளிப்ரகாரத்துலேயே சுத்தி வரும் தேர் !
லேசா மழை நிக்கறதுபோல் இருந்ததும் படி இறங்கிட்டோம்.
எதிரில் யாசகம் கேட்ட சிலருக்கு வாழைப்பழம்தான்! கடைசிப்பழம் அசோக்குக்கு.  பழத்திலும் என் பெயரை எழுதலை 'அவன்'
மழையில் நம்ம காலணிகள் எல்லாம் ஊறிப்போய்ச் சதசத......
ஒரு மணி பஸ்ஸில் ஏறுனதும் அடுத்த காமணியில் அடிவாரம் ! இறங்கறது லகுவா இருக்கே!


வந்தவழியாவே ஒரு பதினொரு கிமீ திரும்பிப்போய், ஹங்களா என்ற ஊரில்  ரைட் எடுத்து  போகும்போது, கொஞ்ச தூரத்தில்  ரோடுமேலேயே  நம்ம ஆஞ்சி கோவில்     (Gaali Anjaneya ) இருக்குன்னு போய் கும்பிட்டுக்கிட்டோம்.

ரொம்பவே பழைய கோவிலாம்.  ஹைவே மக்களைக் காப்பாத்த இங்கே கோவில் கொண்டுள்ளார்னு பட்டர் சொன்னார்!  படம் எடுக்க அனுமதியும் தந்தார்.  மேடையில் ராம லக்ஷ்மணர், சீதை இருக்காங்க. கீழே சிலா ரூபத்தில் ஆஞ்சி!  சுயம்புன்னு சொன்னார் பட்டர்.
இவரை இங்கே பிரதிஷ்டை செய்தவர் நம்ம வியாஸர்.   கருநாடக தேசத்தில் மட்டும்  அறுநூறு ஆஞ்சி கோவில்களை ஆரம்பிச்சு வச்சுருக்காராமே !  அதுலே இதுவும் ஒன்னு!
கோவிலுக்குள்ளே வியாஸமகரிஷிக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க.
இங்கிருந்து ஒரு  நாலைஞ்சு  கி.மீட்டரில் சட்னு பார்க்க எதோ அம்யூஸ்மென்ட் பார்க் போல 'கான்'ஸ் ரெஸ்ட்டாரண்ட்.'  வாசலில் புலி!

 இதோ  பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்து எல்லைக்குள் வந்துட்டோம்.....  நேராப் போனது எம் ஸி. ரிஸார்ட்டுக்கு!   இன்றைக்கு நாம் தங்குவது இங்கேதான்!


தொடரும்............ :-)
10 comments:

said...


அடடே... நம்ம சோழ வம்சத்தினர் கட்டிய கோவிலா? நன்றாயிருக்கிறது. மிகப்பெரிய மொட்டைமாடி போலதான் இருக்கிறது!!! உள்ளே எட்டிப்பார்க்கும் யானை! அதைப்பற்றிய செய்தி படிக்க பாவமாய் இருக்கிறது.

said...

கோபாலஸ்வாமி பெட்டா

அட அட...நாங்கக இங்க போயிருக்கோம் எட்டு வருசத்துக்கு முன்னே..நினைக்கும் போதே சாரல் அடிக்குது ..அப்படி பட்ட இடம் ...

காட்சிகளும், கண்ணனும் அழகு..

நாங்க போனப்ப அங்க யாருமே இல்ல பட்டர் மட்டும் தான் இருந்தார் ...
அதே மாதரி நாங்க போன வண்டியிலே தான் மேலே போனோம் நாங்க கொண்டு போன சாப்பாட்டு மூட்டையை மேலே விடல சோ அங்கே காவல் காரங்கட்ட வச்சுட்டு போனோம் ...

GUEST HOUSE அங்க பக்கத்தில் இருக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் ..

அருமையான இடம் ..மிக குளிச்சியா பசுமையா இருக்கும்..

இனி தான் மத்த பதிவுகளை பார்க்கணும் மா..

said...

மிக அருமை நன்றி;

said...

கோபாலசுவாமி பெட்டா பத்தி கேள்விப்பட்டிருக்கேன். போனதில்ல. படங்கள்ளாம் பாக்குறப்போ போயிருந்திருக்கலாம்னு தோணுது. அழகான மலை. அழகான கோயில். அழகான ஊர்.

said...

கொடுத்த வாய்ப்பைத் தவறவிட்டுட்டீங்களே... ஆஞ்சி படம் ஆடிப்போயிருக்கிறதே...

இடங்கள் பற்றிய விவரணை சுவாரசியம். தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

காட்டுயானைகளையும் கெடுத்துவச்சுருக்கோமோ........ ப்ச்....

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

மேலே ரொம்ப நேரம் இல்லை. மழை வந்துருச்சு.....

அருமையான இடம்!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி!

said...

வாங்க ஜிரா.

அதென்னமோ ரொம்பப்பக்கத்துலே போனாலும், சிலசமயம் குறிப்பிட்ட இடங்களைத் தவற விட்டுடறோம்.

அப்போதைக்கு அது நமக்கில்லைன்னு 'அவன்' நினைச்சுருப்பானோ!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

குரங்கு.... ஒரு இடத்துலே ஒரு நிமிஷம் கையைக்காலை ஆட்டாம நிக்குதா?

நான் என்னைச் சொன்னேன்..... :-) எடுத்துக்கோன்னதும் அதிர்ச்சி அடைஞ்சுட்டேனோ!!!