Friday, November 16, 2018

எலேய் டைகரு.... புலி வந்துச்சாலே? !!!!!(பயணத்தொடர், பகுதி 34 )

எம் ஸி. ரிஸார்ட்ஸ் ஆஃபீஸில் போய் செக்கின் செஞ்ச கையோடு,   மத்யானம் போகும் ஸஃபாரிக்கு இடம்  கிடைக்குமான்னு விசாரிச்சதும், இருக்குன்னாங்க.  மூணே காலுக்கு இங்கேயே வந்து பிக் பண்ணிக்குவாங்க.  இப்பவே மணி ரெண்டாகப் போகுது.  டைனிங் ஹாலுக்குப்போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ரெடியா இருங்கன்னார் வரவேற்பில் இருந்தவர்.  வைஃபை பாஸ்வேர்ட் வாங்கிக்கிட்டு அறைக்குப் போனோம்.


இதுவும் ரிஸார்ட்தான் என்றாலும், என்னமோ கொஞ்சம் கமர்ஸியலா இருக்காப்போல இருக்கு.  கபினி மாதிரி ஹோம்லியா இல்லை.  1999 ஆம் வருஷம் ஆரம்பிச்சுருக்காங்க. மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம்.  20 டீலக்ஸ் அறைகளும், 3 எக்ஸிக்யூடிவ் ஸ்யூட்களும் இருக்காம். நாம் டீலக்ஸ் அறை புக் பண்ணி இருக்கோம். ப்ரமாதம் ஒன்னுமில்லை. கட்டிலைச் சுத்தித் திரை!  ஃபோர் போஸ்டர்ஸ் பெட் !!    துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சலம் :-)
ஒரு காலத்துலே   மைஸூரு ராஜாக்கள் வேட்டையாடும் இடமா இருந்துருக்கு இந்தக் காடு.  வெள்ளைக்கார துரைமார்களோடு புலி வேட்டைக்குப் போய் சுட்டுத்தள்ளுவது  ராஜாக்களின் பொழுதுபோக்கு.  கூடப்போகும் பட்டாளத்தில் இருக்கும் நல்ல வேட்டைக்காரர் சுட்டுத்தள்ளிய புலியின் தலைமேல் (செத்துப் போச்சான்னு  பார்த்துட்டுத்தான்!) கால் வச்சபடி, துப்பாக்கியை ஒரு கையில் ஏந்திக்கிட்டுப் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்கறதுதான். !  எத்தனை கோட்டைகளிலும், அரண்மனைகளிலும்   பார்த்திருக்கோம், இல்லை !

 1930 ஆம் வருஷம் இதை காட்டுவிலங்குகள் பார்க்கா  மாத்தினாங்க.  அப்போ இதுக்குப் பெயர் வேணுகோபால் வைல்ட்லைஃப் பார்க்.  (அடடா.... நல்ல பெயராச்சே!  அப்படியே வச்சுருக்கக்கூடாது? ஹூம்.... அந்த ஹிமவாட் வேணுகோபாலா இருக்கணும்.  மன்னர்கள் அவர் பக்தர்கள், இல்லையோ? )

1941 இல் பார்க் பகுதியை , நேத்து நாம் பார்த்த கபினிக்காடு நாகரஹோளே நேஷனல் பார்க் வரை விஸ்தரிச்சுட்டாங்க.  இதுக்கும் பெயரை மாத்தி, பண்டிப்பூர் தேசியப்பூங்கான்னு ஆனது அப்போதான்.  புலிகள் இங்கே ஏராளமா இருந்துருக்கு.  வேட்டையாடுனது போக மிச்சம்தான்....  இந்த இனம் அழிஞ்சுடப் போதேன்னு புலிகள் சரணாலயம் ஏற்படுத்தினாங்க.  அதுகளுக்குத் தெரியுமா.... சரணடையணுமுன்னு ?  ஹிஹி....

அதைத்தான்  இன்றைக்குப் பார்க்கப்போறோம்.  அறை பெருசாத்தான் இருக்கு. பாத்ரூம் அவ்வளவா சரி இல்லை. போகுது.... இன்றைக்கு ஒருநாள் தங்கல்தான். எதோ காலனி போல் வரிசையா அறைகள். செங்கல் பாவிய நடைபாதைகள் அமைச்சுருக்காங்க.
நம்ம அறைக்கு எதிரில் கொஞ்சம் இடப்பக்கம் தள்ளி டைனிங் ஹால். வட்டக்கட்டடம். பஃபே ஸ்டைல்தான்.  ஏகப்பட்ட ஐட்டம்ஸ் இருக்குன்னாலும், என்னுடைய பீன்ஸ் கறி பார்த்ததும்  மகிழ்ச்சி வந்ததும் உண்மை. நல்லா தளதளன்னு பச்சைப்பசேர்னு இருக்கு. அதுவும் கொஞ்சம் பருப்பும் போதும் எனக்கு :-)சாப்பாடானதும் சின்ன ஓய்வுக்குப்பின்  ஆஃபீஸாண்டை போகும்போது ரெண்டு ஜீப்களைப் பார்த்தேன். இதுலேதான் கூட்டிப்போவாங்களோன்னு பார்த்தால் மூணேகாலுக்கு பஸ் வந்துச்சு.  பிக்கப் இங்கே இருந்துதான் என்பதால்  அது காலிதான்.
முன்னால் இருக்கும் சிங்கிள் ஸீட்  'நம்மவருக்கு' ன்னதும், வேண்டாம் நீ உக்கார்ந்துக்கோன்னுதான் சொன்னார். ஆனால் நான் ரொம்ப நியாயஸ்தி இல்லையோ?  நேத்து அந்த அனுபவம் எனக்குக் கிடைச்சது, இன்று இவர் அனுபவிக்கட்டுமே!

'நல்ல மழை வரப்போகுது. எப்படி இருட்டிக்கிட்டு வருது பாரு. பேசாம ரெய்ன் கோட்டு போட்டுக்கோ.  மழையில் நனைஞ்சு அப்புறம் உன் ஆஸ்த்மா வேலையைக் காட்டிடப்போகுது'ன்னு வம்படியா எனக்கு  அதை மாட்டி உக்காரவச்சுட்டார். விநோத ஜீவராசி போல உக்கார்ந்துருந்தேன்.

கிளம்புன அஞ்சாவது நிமிட்  டைகர் ரிஸர்வ் வாசலுக்குப் போயாச்சு.  உள்ளே வண்டி நுழையும்போதே மனசுக்குள்ளே ஏராளமான எதிர்பார்ப்பு!   அங்கிருந்து ஒரு நாலைஞ்சு நிமிட்லே  பண்டிபுரா ஃபாரெஸ்ட்  ஆஃபீஸும், கடைகண்ணிகளுமா இருக்குமிடத்தில் ஒரு ஸ்டாப் போட்டார் ட்ரைவர்.

ஸஃபாரி போக புக் பண்ணி இருக்கும் ஆட்களை பிக்கப் பண்ணிக்கணுமாம். கிட்டத்தட்ட இருவது நிமிட் காத்திருந்தோம்.  ஆஞ்சீஸ்  நமக்குப் போரடிக்காமப் பார்த்துக்கிட்டாங்க.  வளாகம் முழுசும் வராஹங்கள் வேற !

பஸ், ஜீப்புன்னு வெவ்வேற வகை வண்டிகளில் ஸஃபாரி போகும் மக்கள் !  நம்ம வண்டியிலும் ஆட்கள் வந்து நிறைஞ்சாங்க. கிளம்பிப்போறோம்.  காட்டில் தேக்கு பூத்து நிக்குது.
கொஞ்ச நேரத்தில் வண்டி ஸ்லோவானதும், என்ன பார்க்கப்போறோமுன்னு எட்டிப் பார்த்தேன். (இதுக்குள்ளே தேறிட்டேனே.... ) மான் வகையில் பெருசா ஒன்னு! தீனி கொடுக்காதேன்னு  போர்டு இருந்தாலும், அதுக்குப் படிக்கத்தெரியாதே!  சனத்தும்தான் படிக்கத் தெரியலைன்னு ......
அப்புறம்  நல்ல மினுமினுப்போடு பளபளன்னு இருக்கும் காட்டெருமையின் தரிசனம். இதுக்கு யாராவது இறங்கிப்போய் தீனி கொடுக்கப்டாதோ?
அப்புறம் மயிலும், மானுமாத்தான் வழியெங்கும்! காட்டிலாக்கா ஏராளமான தேக்குமரக்கன்றுகளை நட்டு வச்சுருக்காங்க.
காட்டெருமைகள் அங்கங்கே!  எல்லாம் ஒரே மாதிரி சொக்காய் போட்டுருக்கு :-) காலில்  ஒயிட் ஸ்டாக்கிங்க்ஸ் வேற !
மழையை வேற காணோம். பொறுக்கமுடியாத ஒரு கணத்தில் மழைக் கோட்டைக் கழட்டிட்டேன். சல்யம்....
எங்கேயோ யானை பிளிறும் ஒலி......  வண்டி நின்னது. சுத்துமுத்தும் பார்க்கிறோம். கொஞ்ச தூரத்தில்  மண்ணைத் தூக்கி எறியறார் போல.....புகையா மண்சிதறல்..... சத்தம் மட்டும் வந்துக்கிட்டே இருக்கு!  தன்தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கிட்டு இருக்கார். முகம் காட்டக்கூடாதோ?
காய்ஞ்சு போய் கீழே விழுந்துகிடக்கும் மரத்தில் உயிர் இருக்கு!  ஆயுசு முடியலை.....
மான் கூட்டங்கள்தான் வண்டிக்கு முன்னால் பாதையில் குறுக்கும் நெடுக்குமாப் போகுதுகள். 
எதிரில் வந்த பஸ் டிரைவரும், நம்ம வண்டியின் ட்ரைவரும்  தகவல் பரிமாறிக்கிட்டாங்க.  புலி வருதா என்ன?

தண்ணீர் குடிக்க 'யாராவது' வருவாங்களோன்னு கொஞ்சநேரம் நின்னு பார்த்தோம்.  ஊஹூம்..... மழைக்கான அறிகுறியும் அவ்வளவாக வெயில் இல்லாததாலும் 'யாருக்கும்' தாகம் எடுக்கலை  போல....
அங்கங்கே சின்னதும் பெருசுமா இப்படிக் குட்டைகள்....
ஒரு இடத்தில் காட்டெருமைகள்தான்   குட்டையாண்டை பிக்னிக் வந்துருக்காங்க.

   மான்களும் மயில்களுமே....  கொஞ்சம் ஓய்வில்!
 கோவில் ஒன்னு கண்ணில் பட்டது.
மழை வரும்போல் இருந்தால் மயில் ஆடுமாமே.....  உலாத்துதுகளே தவிர ஆட்டம் எல்லாம் இல்லை.... ஒரு  பெரிய முயலார் இருந்தார். Hare என்ற வகை.


காட்டின் அடுத்த கேட்டுக்குள் போனால் நிறைய வண்டிகள் நிக்குது. அங்கே இருந்து கிளம்புனவைகள்.  நம்ம ட்ரைவரும் இறங்கிப்போனார். எவ்ளோ நேரம் ஸ்டாப்னு சொல்லாததால் யாரும்  இறங்கலை.  அப்புறம் பார்த்தால் இது நாம் நுழைஞ்ச அதே கேட் தான். இன்னொருபக்கமா வந்து சேர்ந்துருக்கோம். ட்ரைவர் வந்து சொன்னதும்  இங்கே ஏறுன மக்கள்ஸ் எல்லாம் இறங்கினாங்க.
'என்ன துள்ஸி, புலி ஒன்னும் கண்ணுலே படலையா'ன்னு அக்கறையா வந்து விசாரிச்சுட்டுப் போச்சு ஒரு சின்ன ஆஞ்சி.
மறுபடியும் கிளம்பிப்போகும்போது  சாலை ஓரமாவே கண்ணில்பட்டார் கணேசர்.  முதுகெல்லாம் ஒரே மண்!  அவனா நீயி?  ஆஹா.....   முகம் காமிச்சதுக்கு நன்றின்னுட்டு க்ளிக்ஸ் ஆச்சு.


அடுத்த மூணாவது நிமிட் எம் ஸி ரிஸார்ட் வந்துருச்சு. ஓ.... அப்பக் கடைசி  நிமிட் தரிசனம் கொடுக்க வந்துருக்கு 'நம்மாள்' !  வாவ்.....
ஆஃபீஸ் முன்னால் வண்டியை நிறுத்தியதும்,  'பொல்லாத புலியைப் பார்த்துட்டு வந்தயாக்கும்'னு செல்லம் ஓடி வந்து அடையாளம் வச்சது. அடுத்த முறை புலிக்கு சேதி அனுப்புது  போல!  பேசாம இதுக்கு டைகர் னு பெயர் வச்சுருந்தால், டைகரைப் பார்த்தேன்னு சொல்லிக்கலாம்.  அப்புறம் விசாரிச்சதில் இவர் பெயர் கெம்ப் னு சொன்னாங்க. எந்த கெம்ப்? கெம்ப கௌடாவா? இல்லை கெம்பு நவரத்தினமா?  எதாக இருந்தாலும் சரி. நான் வச்ச பெயர் டைகர்தான் :-)
இன்றைக்கு நமக்கு அதிர்ஷ்டம் இல்லை.....  போகட்டும் தினம்தினம் நமக்கே  கிடைக்குமா?
டைனிங் ஹாலுக்குள் போய்  டீ ஒன்னு குடிச்சோம்.  அப்புறம்  அறைக்குப்போய்  ஓய்வு. எட்டரைக்கு ராச்சாப்பாடு ரெடியாம். போனால் டைகர் வாசலில் படுத்துருந்துச்சு! பயமே இல்லாம டைகரைத் தாண்டிப் போனேன் :-)
அலங்காரப் பாத்திரங்களில்  வரிசையா, விதம் விதமா......  குலாப்ஜாமூன் தான் டிஸ்ஸர்ட்.
சாப்பாடானதும்  அரை இருட்டுலேயே  செங்கல் பாதையிலே ஒரு உலாத்தல்.

நல்லா தூங்கி எழுந்துக்கணும். நாளைக்கு இட்ஸ் கோயிங் டுபீ அ  வெரி லாங் டே!
இது பண்ட்டிப்பூர் புலி, தோழியின் படம்! போனவருஷம் போயிருந்தாங்களாம்!

தொடரும்........ :-)


10 comments:

said...

மிக அருமை, நன்றி.

said...

வழியில் கண்ட மான்கள் எருமைகள் எல்லாம்புலியாருக்கு வேட்டைக்காகவா

said...

ஆஹா... ஆனையையும் மானையும் பார்க்க அவ்வளவு தூரம் போகவேண்டியதாகிவிட்டதா? ஒருவேளை செடிகளில் புலி மறைந்து நின்றிருக்கும் என்று மனதைத் தேத்திக்கவேண்டியதுதான்.

said...

அடா அடா அடா... காட்டு விலங்குகளைப் பாத்தாலே எவ்வளவு நல்லாயிருக்கு. காடு வளர்ப்பு ரொம்ப அவசியம். நம்ம ஊர்லயும் அரசாங்கம் காடு வளக்க எதாவது செய்யனும். அதுக்கேத்தாப்போல மழையும் பெய்யனுமே.

காட்டெருமை நல்லா கெதியா இருக்கு. ஒரு முட்டு போதும் மண்டை தெறிக்கிறதுக்கு. குரங்காரும் மயிலாருமே நல்ல அழகு. விலங்கியற்பூங்காவுல கூண்டுக்குள்ள பாக்குறதவிட இது நல்லாருக்கு.

ஆனையாருக்கு முதுகு நமநமன்னு இருந்திருக்கு போல. அதான் புழுதி விளையாடியிருக்காரு.

கெம்ப்புன்னா கன்னடத்துல சிவப்பு. கெம்புக்கல்லுன்னு சொல்றோம்ல. அதுவும் சிவப்புக்கல் தானே. ஆனாலும் டீச்சர் பேர் வெச்சதால அது டைகர்தான்.

said...

காட்டுக்குள்ளே கலைவண்ணம்...
அழகிய படங்கள்...

அதுசரி.. கடேசி வரைக்கும் புலி வரலையா!..
பாவம்... அதுக்கு கொடுப்பினை இல்லை!..

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆ............ யாருக்கு விதியோ அதுமட்டுமே!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மை. அது எங்காவது மறைந்து நின்னு நம்மைப் பார்த்திருக்கும்தான் :-)

said...

வாங்க ஜிரா.

அவரவர் சூழலில் அவரவர் அழகே!

அம்மம்மாவின் கெம்புக் கம்மல் ஞாபகம் இருக்கோ?

காட்டெருமைக்குத் தலை கொஞ்சம் சின்னதோ? உடம்புக்கும் தலைக்கும் ப்ரப்போஷன் சரி இல்லைன்னு எனக்கொரு தோணல்....

said...

வாங்க துரை செல்வராஜூ.

சரியாச் சொன்னீங்க..... அதுக்குக் கொடுப்பனை இல்லைதான் :-)