Friday, January 18, 2019

மீண்டும் பார்த்த சாரதி......... விலாஸ்.... (பயணத்தொடர், பகுதி 56 )

நேற்று வந்து பார்த்துட்டுப்போன இடம் என்பதால்  சட்னு போய்ச் சேர்ந்தோம்.  திறந்துருக்கு. பழைய வீடு போலத்தான் இருக்கு பார்க்க.  நேரா உள்ளே போக நீண்ட பாதை.....  பக்கவாட்டில் கல்லா!



சட்னு  பார்க்கும்போது, ரொம்ப சுமாரான  கிராமத்து 'ஓட்டல்' போல....  ரொம்ப வெளிச்சமெல்லாம் இல்லை. ஆரம்பகாலத்துலே இருந்ததை அப்படியே வச்சுருக்காங்க போல. சுவையும்  அமர்க்களமுன்னு  ஆரம்பகாலம் போலவே இருக்குன்னு கேள்வி. அதான்..... எப்படி இருக்குன்னு பார்த்துடலாமே.....

போய் உக்கார்ந்தோம்.  தப்பான ஐட்டத்தைச் சொல்லி இருக்கேன்....  இட்லி வடை.  காலங்கார்த்தாலை தோசையான்னு  இருந்துட்டேன். அப்புறமாத்தான்  நண்பர் மணிசேஷன் பதிவின் மூலமாக தோசை... தோசை மட்டுமே வாங்கி இருக்கணுமுன்னு.... 
அடடா.... கோட்டை விட்டுட்டேனே

பரிமாறியவர் பெயரை  மறந்துட்டேன்...  தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் ப்ளீஸ்.....
இலையைப் போட்டதும் நாம் கேட்ட ஐட்டங்களைப் பரிமாறினவர் பெரிய சாம்பார் வாளியோடு வந்தார். ஐயோன்னுட்டேன்.  உடனே திரும்பிப்போய் சின்ன எவர்ஸில்வர் வாளியில் சட்னி, சாம்பாரோடு ஆஜரானார்.
எனக்கு இட்லி வடை மேல் சாம்பார் அபிஷேகம் பிடிக்காது.  கொஞ்சமாத் தொட்டுக்கிட்டு சாப்பிடுபவள் நான். இட்லிமேல் அபிஷேகம் ஆனதும் இன்னொரு ஐயோ.....  நல்லவேளை சட்னு நிறுத்திட்டார் :-)

சம்ப்ரதாயமா முடிக்கணுமேன்னு அப்புறம் ஒரு காஃபி.
ருசியைப் பத்தி ஒன்னும் சொல்லறதுக்கில்லை......  அந்த தோசை வாங்கி இருந்தால் தெரிஞ்சுருக்கும்....  ப்ச்....

கடையைக் காலை அஞ்சு மணிக்கே திறந்துடறாங்க. பதினொரு மணிவரைதான் பிஸினஸ். அப்புறம் மத்யானம் மூணுமுதல் எட்டுவரை !

நண்பரின் பதிவில் இருந்து தெரிந்து கொண்டது நேரமாற்றம். காலை ஆறுக்குத் திறக்கறாங்களாம்.  அதுலே குறையும் அந்த ஒருமணி நேரம் மாலை/ இரவு  எட்டுக்குப் பதில் ஒன்பதாகி இருக்கு. பார்த்து வச்சுக்குங்க....

மணி சேஷன்......

சாப்பிட்டதும் இலையை எடுத்து நாமே தொட்டியில் போடணும்!  ஹைய்யோ.... இப்படி ஒரு அறிவிப்பைப் பார்த்தே எத்தனையோ வருஷங்களாகிப்போச்சே!   இப்படி டிஸ்போஸபிள் தட்டு அந்தக் காலத்துலேயே இருந்துருக்கு தெரியுமோ!
ஒரு உழக்குப் பருப்புக்குப் பதினாலு உழக்கு மாவாம்!   உளுந்து விளம்பரம் :-)    பொங்கிவரும் மாவு ...   பூப்போல இட்லி !!!

அடுக்களை, பார்ஸல்  கட்டுமிடம் எல்லாம்  ஒரு சில க்ளிக்ஸ் மட்டும்....  இன்னும் கொஞ்சம் சுத்தமா, பளிச்ன்னு வச்சுருக்கப்டாதோ?

கல்லாவில் இருந்தவரிடம் சில வார்த்தைகள்.  அப்பா காலத்துலே ஆரம்பிச்சதை, இவர் இப்போது நிர்வகிக்கிறார்!  சிலபல பதிவுகளைப் பார்த்துட்டுத் தேடி வந்தோமுன்னதும் அவருக்கு  மகிழ்ச்சி!


பத்திரிகைகளில் பாராட்டி இருக்காங்கன்னார். ஆனாலும்..... அந்தக் காலத்துலே  இதைவிடக் கொஞ்சம் நல்லாவே இருந்துருக்குமோன்னு  ஒரு சம்ஸயம்  எனக்கு!  இப்பெல்லாம் ஹொட்டேல் தொழிலில்  உள் அலங்காரம், கொஞ்சம் ஆடம்பரம் எல்லாம் முக்கியமானதாகப் போயிருக்கே!

பேர்தான் கிடைச்சுருச்சேன்னு ச்சும்மா இப்படியே விட்டுவச்சா  கிடைச்சது ரிப்பேர் ஆகிரும்...... 

உள்ளே நுழையும்போதே  அவரிடம் கேட்டுருக்கலாம் உங்க ஸ்பெஷல் ஐட்டம் என்னன்னு....  ப்ச்....

அடுத்த முறை போவேனான்னு தெரியாது, இப்போதைக்கு....

 பார்க்கலாம்... தோசையில் நம்ம பெயர் எழுதறானான்னு....

கண்ணாடிப்பொட்டிக்குள்  ஐயப்பன்.  அடடா....
பெயருக்கேத்தாப்ல ஒரு கீதோபதேசம் வச்சுருக்கப்டாதோ?


ஹயக்ரீவா திரும்பும்போது மணி  எட்டு பத்து !  இன்றைக்கு இன்னொரு பயணம் போயிட்டு வந்துடலாமா?ன்னார் 'நம்மவர்'

"அப்ப   என் ரெங்கன்?"

"சாயங்காலம் கோவிலுக்குப் போகலாம். இப்பதானே பெரியவரைப் பார்த்துட்டு வந்தே?"

அதுவுஞ்சரிதான்.

எட்டரைக்குக் கிளம்பிடலாம் !

தொடரும்........ :-)

6 comments:

said...

ஓட்டலுக்குள் நுழைந்த அனுபவம் என்பதைவிட ஏதோ நமக்குத் தெரிந்தவர் இல்லத்திற்குச் சென்றுவந்ததுபோல இருந்தது, உங்களின் அனுபவப்பதிவு.

said...

நானும் தேடிப்போய் அந்த நெய் தோசை சாப்பிட்டேன். ரொம்பவே நல்லா இருந்தது. ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டோம். ஆனால் சாம்பார் சட்னி எல்லாம் பாடாவதி. ஒண்ணுமே தொட்டுக்காம சாப்பிட்டோம்.நான் ஓனர் கிட்டயே சொல்லிட்டேன் , இவ்வளவு நல்ல தோசைக்கு இப்படி ஒரு சாம்பாரான்னு ! அவர் , " நீங்க சொல்றது சரிதான் ஆனால் நல்ல சாம்பார் குடுத்தா விலைபக் கூட்டணும் அப்புறம் உள்ளூர்ல யாரும் வரமாட்டா " ன்னு சொன்னார். ����

said...

அருமை நன்றி

said...

நல்ல அறிமுகம் எங்கு போனாலும் நானும் இட்லி சொல்லிப்பழக்கம் இனி அதை விடுத்து என்ன இங்கு ஸ்பெஷல் எனக் கேட்டுச் சொல்லணும் என்கிற பக்குவம்இந்தப் பதிவைப் படிக்க வந்தது வாழ்த்துக்கள்

said...

நான் எந்த ஹோட்டலுக்குப் போனாலும் இங்குள்ள சிறப்பு உணவு என்ன என்பதைக் கேட்டபிறகுதான் ஆர்டர் செய்வேன்.

தஞ்சையில் ஒரு கைடு என்னிடம், தேவர் ஹோட்டலில் சாம்பார் நல்லாருக்கும், போய் சாப்பிட்டுப் பாருங்கள் என்றதால் தேவர் ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். அங்கயும் என்ன சிறப்பு என்று கேட்டுத்தான் ஆர்டர் செய்தோம்.

இன்னொரு முறை பார்த்தசாரதி வாய்க்குமா?

said...

பார்த்தசாரதி விலாஸ்னாலே தோசைதான். நான் போனப்போ இட்லியே இல்லை. தோசை மட்டுந்தான்னு சொன்னாங்க. பழைய கடைங்குறதால தேடிப்பிடிச்சு சாப்பிட்டேன். தோசை மாவை கையால் அள்ளி அப்படியே கல்லில் தேய்ப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எதோவொரு பதிவில் கைரேகையே தோசையில் தெரியும்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உயர்வு நவிற்சியா எழுதியிருந்தாங்க.