Wednesday, January 16, 2019

விஸ்வரூபம்........... காமிச்சுட்டான்..... (பயணத்தொடர், பகுதி 55 )

டான்னு அஞ்சு மணிக்கு ரெடி ஆனதும்  கீழே வந்தோம். ரமேஷும் தயார்.  அதிகாலையில்  ட்ராஃபிக்  நெரிசல் இல்லை என்பதால்  தோழி வீட்டுக்குப் பத்தே நிமிட்டில் போயாச்சு.  மாடி  பால்கனியில் இருந்து பார்த்துக்கிட்டு இருந்தாங்க தோழியும் கணவரும். வந்து அவரை முரளிக்குக்  கூப்ட்டுப்போவோம் என்ற சேதியை சொல்லிட்டுக் கோவில் வாசலுக்கு வந்தாச்சு. ரங்கா கோபுரம்!
கோவில் வெளிப்ரகாரங்களில் கூட்டமே இல்லை. காலை வீசிப்போட்டு நடக்கலாம்.  இன்னும் இருட்டே விலகலை....எல்லா சந்நிதிகளும் சாத்தியே இருக்கு. ஆனாலும் அந்தந்தத் திசை பார்த்து கும்பிடு போட்டுக்கிட்டே போறோம்.
கருடமண்டபம் முன்  நிமிஷ நேரம் நின்னு பெரிய திருவடியை மனசாரக் கும்பிட்டேன்.  இன்னும்  சந்நிதி திறக்கலை.....
கொடிமரத்தாண்டை போயாச்சு.  கொஞ்சம் கூட்டமா இருக்கு.  கம்பித்தடுப்பாண்டை கோவில் ஊழியர்களும், சில பட்டர்ஸ்வாமிகளுமா நின்னு  விஸ்வரூப தரிசனத்துக்கு புக் செஞ்சுருந்தவங்களை, என்ன ஏதுன்னு விவரம் கேட்டுட்டு உள்ளே அனுப்பறாங்க.

எங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நபர் வந்து கூட்டிப்போவார்னு  பெயரைச் சொல்லி இருந்தார் குணா.  நாங்கள் கம்பித்தடுப்புக்குப் பக்கம் போய் நின்னதும், 'நம்மவர்' அந்த மந்திரச் சொல்லைச் சொன்னார். நாலு பேர் என்றதும் நானூறு வாங்கிக்கிட்டார்  தடுப்பாண்டை சின்ன  ஸ்டேண்டு மேஜை போட்டு  உக்கார்ந்துருந்தவர்.

உள்ளே போகக் காலடி எடுத்து வைக்கும்போது  பறந்துவந்த ஒருவர், அந்த மந்திரச்சொல்லைக் குறிப்பிட்டு  அவர்தானேன்னு விசாரிச்சவர்,  கட்டணம் வாங்கிப்போட்டுக்கிட்டு இருந்தவரிடம் , ஏன் இவுங்களிடம் பணம் வாங்குனீங்கன்னு  கேட்டு, அந்த நானூறைத் திருப்பி வாங்கி வந்து நம்மவரின் கையில் திணித்தார்.

எங்களுக்கு ஒரே திகைப்பு......    ஆனால்  திகைச்சு நிக்க நேரமில்லைன்னு உள்ளே ஓடறோம். கருவறைக்கதவு மூடி இருக்கு!  அதுக்கு முன்னேயும் ஒரு திரை!

கதவாண்டை ஒருத்தர் உக்கார்ந்து வீணை வாசிச்சுக்கிட்டு இருக்கார். பார்த்தால் ரொம்பவே வயசானவரா இருந்தார். என்ன ராகமா இருக்கலாமுன்னு கொஞ்சம்  யோசனை பண்ணினேன்.....

(இந்த வேலைதானே வேணாங்கறது? பெருமாள், அவனே காலங்காலமாக் கேட்டுண்டு கிடக்கான். உனக்கென்ன ....  மனசுதான். பேயாட்டம் போடவும், மூக்கை நுழைக்கவும் சொல்லித்தரணுமா என்ன?) 

பூபாளமா இருக்குமோ? பிலஹரி, ஸாவேரி, மலையமாருதம், தன்யாஸின்னு  இங்கே வாசிப்பதுண்டாமே!  காலையில் நம்ம தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்களைத்தான் வீணையில் வாசிப்பது வழக்கமாம்.  பனிரெண்டு ஆழ்வார்களில், ரங்கநாதரை விட்டு விலகாமல்  இங்கேயே இருந்து ரங்கனை மட்டுமே பாடியவர் இவர்! திருப்பள்ளிஎழுச்சி பாசுரங்கள் இவருடைய ஸ்பெஷல் என்றும் சொல்லலாம்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்!
கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய்,
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,
வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்த்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,
அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!

இதே போல ராத்ரி நடையடைக்குமுன்  ஏகாந்த வீணைன்னு  வாசிச்சே இவரைத் தூங்கப்பண்ணும் பழக்கமும் இருக்காம்.  அப்போ நம்ம குலசேகராழ்வாரின் பாசுரங்களை நீலாம்பரி, ஆனந்தபைரவி, ஸஹானா, ரேவதின்ற ராகங்களில் வாசிப்பாங்களாம். முக்கியமா 'மன்னுபுகழ் கோசலை மணிவயிற்றுதித்த....  '  பாசுரம்!  எல்லாம் நம்ம ராமானுஜரின் ஏற்பாடுகளே!  ஆச்சு தொள்ளாயிரம் வருஷப் பழக்கம்னு  தெரியவந்தது.

ஒரு சில குறிப்பிட்ட வீணை விற்பன்னர்களின் பரம்பரையில் வந்தவர்கள்தான் வாசிக்கப் பாத்யப்பட்டவர்களாம். இப்போ இன்றைக்கு வாசிப்பவரும் அப்படி ஒரு பரம்பரைதான். ரொம்பவே பெரிய பதவியில் இருப்பவர்களும், ரெங்கனுக்கு ஸேவை என்பதால்  அது ஒருபக்கம், இது ஒருபக்கமுன்னு தங்கள் பாத்யதையை விட்டுக்கொடுக்காமல் வந்துடறாங்க.  புண்ணியம் செய்தவர்கள் !!  ரொம்பவே மெல்லிஸான குரலில் பாசுரம் சொல்லியபடியே வாசிக்கிறார்.  அவர் குரலுக்கேத்தமாதிரி வீணையும் ரொம்ப மெல்லிஸாவே  ......   (பூனை முணங்குறாப்போல......   சரியா ட்யூன் ஆகலையோ என்னவோ..... ) இத்தனைக்கும் அவருக்கு எதிரில்  தூணோரமா உக்கார்ந்துருக்கேன். தினம் வீணை வாசிப்பு ஒரு அரைமணி நேரம் உண்டு.

வீணை வாசிப்புன்னதும் நம்ம ராஜேஷ் வைத்யா போல கம்பீரமா இழையும் வகையில் இருக்கக்கூடாதான்னு தோணுச்சுன்னாலும்.... 'நல்லாத் தூங்கறவரை'த் தலையில் தட்டி எழுப்பினால் நல்லாவா இருக்கும்? அவருக்கே  'திக்'ன்னு  ஆகிடாது....

மெள்ள கருவறைக் கதவு திறந்ததும் ஆவலோடு எட்டிப்பார்க்கிறோம்..... அங்கேயும் ஒரு திரை, அதுக்குப்பின்னே லேசாத்தெரியும் ஜோதி..... தீபாராதனை...


இங்கே லயிப்புடன் இருந்தப்ப, ஓசைப்படாமல் மஹாலக்ஷ்மியும், ஆண்டாளும் வந்துருக்காங்க.  மஹாலக்ஷ்மி, ஆண்டாளைப் பார்த்து நிக்க, ஆண்டாளோ பெருமாளைப் பார்த்தபடி..... 'ஒய் திஸ் ரூட் பிஹேவியர்'னு மஹாலக்ஷ்மியைக் கேட்கப்டாது.....  காராம் பசுவின் பின்பாகத்தில்தான்  ஒரிஜினல் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்னு .....

 கட்டண ஸேவையில் நாம் பொதுவாப் பெருமாளை தரிசிக்கப் படியேறி சந்தனு மண்டபத்துக்குள் (!) வர்றோமே அந்த வழியில் ஒரு பால் வெள்ளைக்குதிரை வந்து நின்னது!

பெருமாள் முன்னே இருந்த திரை விலகியதும் அவர் கண்பார்வை நேராப்போறது  மஹாலக்ஷ்மியின் பின்னம்பக்கத்துக்கும், ஆண்டாளின் முன்னம்பக்கத்துக்கும்தான். உசரமான பாம்புப் படுக்கையில் கிடப்பவனின்  ஐ லெவலுக்கு அதுதான் சரியாகும்.  அதுக்கப்புறம் விழியைக் கொஞ்சம் தாழ்த்திக் கீழே உக்கார்ந்துண்டு இருக்கும்  நம்மைப் பார்ப்பானா இருக்கும், இல்லே.....?

வெள்ளைக்குதிரை கல்கியை ஞாபகப்படுத்தவோ?  இதை  அடல்மா என்று சொல்றாங்க.  பெருமாளுக்கு முன்  வந்து நிற்க இதுக்கு உத்தரவாகலை. ஆனாலும்  அங்கே வந்து ஆஜர்னு ஒரு ஓரமா நிக்கணும் என்றுதான் கட்டளை. எதுக்காக வெள்ளைக்குதிரைன்னு இன்னும் கொஞ்சம் யோசனையாத்தான் இருக்கு.  ஒருவேளை திருப்பாற்கடல் கடையும்போது கிடைத்த செல்வங்களில் ஒன்றான உச்சைஸ்ரவஸ் (பால் வண்ண வெள்ளைக்குதிரை) ஆக இருக்குமோ?  எல்லாம் நம்ம ஸ்ரீ ராமானுஜரின் ஏற்பாடுதான். 'கோவிலொழுகு' லே விஸ்தாரமா எழுதி வச்சுருப்பார் !
குட்டியூண்டு பல்லக்கில்  குட்டியூண்டு  ரங்கன் வந்தார். அவருக்கு முன்னே  கையில் வெள்ளிப்பூண் போட்டக் கைத்தடியுடன்  'பராக்' சொல்றதைப்போல்  தலைப்பாகை கட்டுன  ஒருவர் வந்தார்.  தாயார் சந்நிதியில் இருந்து திரும்பி வர்றாராம் ரங்குடு!

இதுக்குள்ளே நாமெல்லாம் எழுந்து நின்னுடறோம்..... சுத்தும் முத்தும் பார்த்தால் ஒரு  அம்பதறுவது  பேர் இருக்கலாமுன்னு தோணுச்சு. நூறோ என்னவோ?

இன்னொருக்கா தீபாராதனை ஆனதும்..... கூடி இருக்கும் மக்கள் உள்ளே  காயத்ரி மண்டபத்துக்குள்  வரிசையில் நுழையலாம். வாசலில் நிக்கற ஜய விஜயர்களை வணங்கி உத்தரவு வாங்கிக்கிட்டு நாங்களும் உள்ளே போகும் வரிசையின் வாலில் ஒட்டிக்கிட்டோம்.

ரெண்டு நிமிட் நிக்கவும் விட்டாங்க.  இங்கே வந்த மூணுநாளா நமக்கு தினமும் பெரிய பெருமாளை தரிசிக்க வாய்ச்சது அதிசயம்தான்!  எல்லாம் அவனருள்!  வேணுமுன்னா எல்லாமும் செய்வான் ! 

உண்மையில் இது நிர்மால்ய ஸேவைதான். அர்ஜுனனுக்குக் காண்பிச்ச மாதிரி 'விஸ்வரூபம்' எல்லாம் காமிக்கலை கேட்டோ!  ஆனால் எப்படி இப்படிப் பெயர் வச்சுருக்காங்கன்னு தெரியலை. நம்ம ஸ்ரீ ராமானுஜர் இப்படிச் சொல்லி இருப்பாரோ? 

விஸ்வரூப சேவை காலை ஆறு முதல் ஏழேகால் வரை இருந்தாலும்,  கடைசியாக நின்ன நாமே ஆறரைக்கு  வெளியே வந்துருக்கோமுன்னா பாருங்க!  இதுக்கப்புறம் , கட்டணமில்லா சேவையில் தரிசனத்துக்குக் காத்திருக்கும் பக்தர்களை உள்ளே விடறாங்க.
நேத்துக் காலையில்  இதே நேரத்துக்கு நம்மை சில்பா ரங்கராஜன் அவர்கள்  பெரிய பெருமாள் சந்நிதிக்கு நம்மைக் கூட்டி வந்துருந்தார்!


கருவறைக்குப் பின்பக்கம் இருக்கும் மண்டபத்தின் படியில் ஏறி  ரெங்கவிமானத்தை தரிசிக்கலாம். ஆச்சு!
அப்படியே பக்கவாட்டில் இருக்கும் கிளிமண்டபத்துக்குள்ளும்  போய், அங்கே  குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து  விமானத்தை தரிசிக்கலாம்.   தரையில் அந்த இடத்தைக் குறிச்சுருப்பாங்க.

இந்த மண்டபத்துலேதான்  அந்த பெரிய வெங்கல மணியும் தொங்குது!  இதே மண்டபத்தின்  அந்தாண்டைக் கோடியில் சின்னதா  சில சந்நிதிகள். சேரகுலவல்லி நாச்சியார், பீவி நாச்சியார்  (சிலை கிடையாது. சுவரில் படமாக வரைஞ்சு வச்சுருக்காங்க )

 விஸ்வரூப சேவையில் படங்கள் எடுக்க அனுமதி இல்லைன்றதால் நான் கெமெரா கொண்டு போகலை.  வெளியே வந்தபின் நம்மவரின் செல் மூலமாக சில க்ளிக்ஸ்.
 அப்புறம் தோழிக்கு நம்ம  அன்னமூர்த்தியை தரிசனம் செஞ்சு வச்சேன்.  அவுங்களுக்கும் எப்போதும்  எங்கும் அன்னம் கிடைக்க வேணும்தானே? அட்லீஸ்ட் ஒரு ரசஞ்சாதம்!  ரமேஷுக்கும் தரிசனம் ஆச்சு.
ரங்க விலாஸ் முற்றத்துலே  அங்கங்கே சில ஆட்கள்.  கடைகள் ஒன்னும் இன்னும் திறக்கலை.  மணி ஏழுதான் இப்போ!  சில க்ளிக்ஸ் மட்டும். இன்னும் கெமெரா டிக்கெட் வாங்கிக்கலைன்னு மனசுலே உறுத்தல்.  பேசாம  மூணுநாளைக்கானதை உண்டியலில் போட்டுடணும். போட்டேன்.


கிளம்பிப்போய்த் தோழியின் கணவரைக் கூப்பிட்டுக்கிட்டு நேரா முரளி கடை.  ஆளுக்கொரு காஃபி ஆச்சு!



ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போகலாமான்னு கேட்டதுக்கு, தோழியும் கணவரும்  வேணாமுன்னுட்டாங்க.

அப்ப நாங்க?  விட்டதைப் பிடிக்கலாம்....

சலோ........

தொடரும்.......... :-)

P C:  'Nammavar' :-)

மற்ற சில படங்கள் ஏற்கெனவே துளசிதளத்தில் வந்தவையே!

6 comments:

said...

மூன்று நாட்களும் அவன் தரிசனமா? அருமை.

மற்ற சன்னிதிகள் எல்லாம் போக முடிந்ததா

said...

விஸ்வரூப தரிசனம் ஆச்சி, நன்றி;

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

காலையில் வேறெந்த சந்நிதிக்கும் போகலை...... பெரிய திருவடிக்கும், ஆஞ்சிக்கும் கும்பிடு போட்டு வந்ததோடு சரி. மனம் நிறைஞ்சுருந்ததால் வேறெங்கும் போகத் தோணலை....

said...

வாங்க விஸ்வநாத் !

ஆமாம்..... காண்பிச்சுட்டான் !!!!

said...

விசுவரூப தரிசனம் டீச்சரைக் கூப்பிட்டுக் கொடுக்கிறான் அரங்கன். வாழ்க வளர்க.

மந்திரச் சொல் சிபாரிசுதான் அதற்குத் தேவைப்படுது. இந்த நிலை மாறி வந்தோருக்கெல்லாம் அரங்கன் பாகுபாடில்லாது அருள் வழங்கும் நிலை வேண்டும். அரங்கனுக்கு தொண்டு செய்யும் பணியும் குலவேறுபாடின்றி எல்லா சாதியினருக்கும் அமைய வேண்டும். அனைவருக்கும் பொதுவாய் அரங்கத்தில் இருப்பவன் அனைவருக்கும் பொதுவானவனாய் மாறும் நாள் அந்நாளே.

முரளி காப்பிக்கடை அவ்வளவு பிரபலமா... டீச்சர் சொன்னா நல்லாத்தான் இருக்கும். அடுத்து போறப்போ கூட வர்ரவங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டாப் போச்சு.

said...

ஜி.ராகவன் சார்... அப்படித்தான் இப்போவும் இருக்கு. நான் அங்கு சில சமயங்களில் தரிசனம் செய்யும்போது (விசுவரூபம் மற்றும் பிற நேரங்களில்), அனைவரும் அவனுக்குத் தொண்டுசெய்வதைப் பார்த்திருக்கிறேன். (கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, சன்னிதி முன்பு சரிபார்ப்பது என்று பலப் பல தொண்டுகள்)