Friday, January 11, 2019

வெட்டவெளியில் வெக்காளியம்மன்!!! (பயணத்தொடர், பகுதி 53 )

குணா வீட்டில் இருந்து கிளம்பிய காமணி நேரத்தில் கோவிலாண்டை வந்துட்டோம்.  அருள்மிகு ஸ்ரீவெக்காளியம்மன் திருக்கோவில்.
ராஜகோபுரத்தின் அழகை முழுவதும் ரசிக்கமுடியாதபடி  கோபுரவாசலுக்கும், எதிரில் உள்ள  கோவில் கட்டடத்துக்கும் இடையில் உள்ள பகுதிக்கு தகரத்தில் மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க. அடிக்கிற வெயிலுக்கு இதம்தான் என்றாலும்.... கொஞ்சம் ஐ ஸோர்.
மூணு நிலை ராஜகோபுரத்தாண்டை நின்னு பார்த்தால் உள்ளே  வரிசைத் தூண்களோடு பெரிய  மண்டபமும் , அந்தாண்டை கருவறையும்,  உள்ளே அம்மனுமாத்தான்  தெரிஞ்சாங்க. கருவறை இருட்டறையாக இல்லாமல் பளிச்ன்னு  இருந்துச்சு.  நல்ல லைட்ஸ் போட்டு வச்சுருக்காங்க. இப்படி இருந்தால் மூலவரைக் கொஞ்சம் தூரத்தில் இருந்தும் கூட ஸேவிக்கலாமே....  (ஏன் திருப்பதியில்  இப்படி வெளிச்சத்தில் பெருமாளை  வைக்காமல், இருட்டில் பிடிச்சுப் போட்டுருக்காங்கன்னு வழக்கமான எண்ணம் வரத்தான் செஞ்சது)
பாதி மண்டபத்தில் ஆரம்பிச்சுக் கம்பித்தடுப்புகள், உண்டியல்கள்  எல்லாம்......  ஓ... இது தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் என்றதை ஞாபகப்படுத்தியது உண்மை....

(இந்து சமயம்.... அதானே.... மற்ற சமயங்களில் மூக்கை நுழைக்க முடியுமா? ஒன்னுமே செய்யாம உண்டியல் வரவில் கொள்ளை அடிக்க  வேற மதங்கள்தான் விட்டுருமா என்ன?  இதுக்குத்தான் காணிக்கைகளை உண்டியலில் போடுன்னு பல இடங்களிலும் சோம்பல் இல்லாம எழுதிப்போட்டுருக்கு... )
உள்ளே படம் எடுக்க அனுமதி வாங்கிக்கலாமுன்னா....   அலுவலகத்தில் யாரையும் காணோம்.  கோவில் காலை அஞ்சு முதல் இரவு ஒன்பதுவரை திறந்தே இருக்குமாம். தகவல் பலகையில் கிடைச்ச தகவல் இது.
தினசரி அஞ்சு கால பூஜை.  காலையில் அஞ்சரைக்கு விஸ்வரூபம்,  ஆறேகாலுக்குக் காலைச்சந்தி (உஷத் காலம்) , பகல் பனிரெண்டுக்கு உச்சி காலம், மாலை ஆறேகாலுக்குச் சாயரக்ஷை, ராத்ரி ஒன்பதுக்கு அர்த்தஜாமம்.....  இப்படி!

நாம் போன நேரத்தில் அவ்வளவாக் கூட்டமில்லை. ஒரு ஏழெட்டுபேர் இருக்கலாம். கம்பித்தடுப்புக்குள் நடந்து கருவறை வாசல் பக்கம் போய் நின்னால்....  அது வெறும் வாசல்தான்னு தெரிஞ்சது. உள்ளே கொஞ்ச தூரத்தில் ஒரு மேடையில்  வலதுகாலை மடக்கி, இடதுகாலை ஒரு அரக்கன் மேல் வச்சபடி,  ரொம்பவே பளிச்ன்னு உக்கார்ந்துருக்காள் காளி!  வெய்யில்தான் அவள் முகத்தில்!  திறந்த வெளி!  வானமே கூரை !  (ஆஹா..... அதான் இத்தனை பளிச்! )
அடடா....  இப்படி இருந்தால்  வெயிலின் கடுமையை எப்படித் தாங்குவாள்னு மனம் அல்லாடியது உண்மை.  (அப்புறம் நம்ம ரோஷ்ணியம்மா  சொன்னாங்க கோடை காலத்தில் வெட்டிவேர் பந்தல் போட்டுருவாங்களாம்.)  ஆமாம்...  தமிழ்நாட்டில் கோடை காலத்தை விட்டால் வேறேது மற்ற காலங்கள்?  சூடு, அதிகச் சூடு,  ரொம்பவே சூடு, அனல் பறக்கும் சூடு இப்படித்தானே  நான்கு பருவகாலங்கள்.  நடுவில் எப்பவாவது கொஞ்சம் மழை....

கோவில் ரொம்பப் பழசுன்னு சொல்ல முடியாது.  அம்மன் சிலையும்தான்.... அநேகமா ஒரு  நூறு இருநூறு வருஷங்கள்னு சொல்லலாம். ஆனால்  இங்கே அம்மன் குடி இருப்பது ரொம்பப் பழைய காலத்தில் இருந்தே!

சோழமன்னர்கள்  உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய காலக்கட்டத்தில், ஊர் நிர்மாணம் செய்யும்போது, எல்லைக்காவல் தேவதையா, வெக்காளி அம்மனைப் பிரதிஷ்டை செய்து கும்பிட ஆரம்பிச்சாங்க.


அம்மனுக்குத் தீபாராதனை காண்பிச்சு, நமக்குப் பிரஸாதம் கொடுத்தாங்க !
நம்ம கஷ்டங்களைத் துண்டுச் சீட்டுலே  எழுதி, அம்மனிடம் சேர்ப்பிச்சால் போதும்....  எல்லாம் விலகிடும் என்ற நம்பிக்கை இருக்கு என்பதால், தினம் முன்னூறு பேருக்குக் குறையாமல் சீட்டுலே எழுதி, அம்மன் காலடியில் வச்செடுத்துச் சூலத்தில் கட்டி விடுறாங்களாம்.
கோவில் நிர்வாகமே  மஞ்சள் நிறத்தில் பிரார்த்தனைச் சீட்டு அச்சடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கு இப்பெல்லாம். போன வருசம் மட்டும் எம்பதாயிரம் சீட்டு விநியோகிச்சு இருக்காங்களாமே!  (அதானே.... மனுஷனுக்கு இல்லாத ப்ரச்சனைகளா? ஆளாளுக்கு ஆயிரம் இருக்காது? )
அம்மன் இப்படி மழை வெயிலுன்னு பார்க்காம திறந்த வெளியில் ஏன் இருக்காளாம்?  அதுக்கு(ம்) ஒரு கதை இருக்கு !

சோழர்கள் ஆட்சியில் இந்த அம்மனை ஊர்க்காவல் தெய்வமா நிறுவி வழிபட்டு வந்தாங்க. அரசர் போருக்குப் போகுமுன் அம்மனை வணங்கி, 'வெற்றிக்கு வழிகாட்டு'ன்னு விசேஷ பூஜைகள் செய்வார். இவள்தான் கேட்டதும் கொடுப்பவளாக இருக்காளே! வெற்றி நிச்சயம்.  திரும்பவும் வந்து விசேஷ வழிபாடுகள் எல்லாமும் நடக்கும்.
இப்படிப் பலகாலங்கள் போனபிறகு  வன்பராந்தக சோழன் என்னும் மன்னன், தன் மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்யும் காலம். சாரமா முனிவர் என்பவர், தாயுமானவர் மேல் உள்ள பக்தியாலும் அன்பாலும்  ஒரு பூந்தோட்டத்தை அமைச்சு, அதில் பலவித நறுமணமுள்ள மலர்களுக்கான செடிகளைப் பயிரிட்டு  வர்றார். தினமும் அந்தப் பூக்களைத் தாயுமானவருக்கு அர்ப்பணிச்சும் வர்றார்.

இது இப்படியிருக்க, பிராந்தகன் என்ற பூ வியாபாரி, மன்னருக்கு மலர்கள் விருப்பம் என்றதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு ( அரசியாருக்குத்தான் இருக்கணும். பூ விரும்பாத பூவையர் உண்டோ? ) சாரமா முனிவரின் நந்தவனத்திலிருந்து கொஞ்சம் அபூர்வமான வகைகளை நைஸா எடுத்துக்கிட்டுப்போய்  மன்னருக்குக் காணிக்கையாத் தர்றான்.

மன்னர், மலர்களை மகாராணிக்கு அனுப்பறார்.  ஆஹா.... இவ்ளோ நல்ல பூக்கள் கிடைச்சதேன்னு  மகிழ்ந்ததோடு, 'தினமும் இதே மாதிரி பூக்களைக் கொண்டுவரச்  சொல்லிடுங்க'ன்னு உத்தரவு போட்டுட்டாங்க ராணி!

அரசரும், பூ வணிகனிடம், 'தினமும் இப்படி பூ சப்ளை செஞ்சுரு'ன்னுட்டார். இதேதடா வம்பாப் போச்சுன்னு வணிகன் கொஞ்சம் பயந்தாலும், அரசரின் குட் புக்ஸில் இருக்கணும் என்ற ஆசை காரணம் (காக்கா புடித்தல்! ) சரின்னு தலையாட்டிட்டான். அதான் முனிவரின் நந்தவனத்தில் எக்கச்சக்கமா இருக்கே.... தினம் கொஞ்சூண்டு எடுத்துக்கிட்டா யாருக்குத் தெரியப்போகுதுன்னுதான்....


இப்படியே கொஞ்சநாள் போகுது!  ஆனால் முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்துருது.  அதுபாருங்க.....  தினம் தினம் பூப்பறிக்கும்போது அப்படியே  அடுத்த நாள் மலரப்போகும் பூக்களைப் பொதுவாக கவனிப்பாங்கதானே? ( இத்துனூண்டு தோட்டம் வச்சுருக்கும் நானே.... ஒரு செடியை, ஒரு  பூவைக் காணோமுன்னா துடிச்சுப் போயிருவேன்! முதல் சந்தேகம், ரஜ்ஜு மேலேதான். தோண்டிட்டானோன்னு..... ரெண்டாவது சந்தேகம் யார் மேலேன்னு உங்களுக்கே தெரியும் :-)  'வீடு'ன்னு நினைச்சுப் பிடிங்கிப் போட்டுட்டாரோ.......  )

பலநாள் திருடன் ஒருநாள்  'தொழில்' செய்யும்போது  கண்ணில் பட்டுட்டான்!   மன்னரிடம் போய் முறையிட்டார். அநியாயத்தைத் தட்டிக்கேட்க மன்னர் தான்  சரி என்ற நம்பிக்கை!  ஆனால் மலர்களைத் திருடிக்கிட்டுப்போய் மன்னரிடம்தான்  தர்றான்னு  முனிவருக்குத் தெரியாதே!

மன்னனுக்கும், அப்பதான் பூ வணிகன் கொண்டுவரும் அருமையான பூக்கள் எல்லாம் திருட்டுப் பூக்கள்னு புரிஞ்சது.    திருடனுக்குத் தேள் கொட்டியமாதிரி இருந்துருக்கும். திருட்டுச் சொத்துக்கு ஆசைப்பட்டவனும் திருடன்தானே! முனிவருக்கு எதோ சமாதானம் சொல்லி அனுப்பிடறான்.

மஹாராணியிடம் போய்  'நாளை முதல் பூக்கள்  கிடையாது'ன்னு சொல்லி இருக்கலாம்.  என்னதான் அரசன் என்றாலும்.... மனைவிக்கு முன் நாக்கு மேலே பல்லைப்போட்டுப் பேசி இருக்க முடியுமோ? மனைவியின் கோபத்துக்கு ஆளாக வேணாமே.... இனிய இல்லறம் பாழாகிட்டால்?  கண்டுக்காம இருப்பது நல்லதுன்னு தோணிப்போச்சு!

திருடனைக் கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை......  தெரிஞ்சமாதிரி காமிச்சுக்கவும் இல்லை.

இத்தனைக்குப் பின்னும் பூக்கள் திருட்டு நடந்துக்கிட்டேதான் இருக்கு!  மன்னனிடம் கூறிப் பயன் இல்லைன்னு நேரா மஹாதேவரிடம் போய் முறையிடறார் முனிவர்!  தாயுமானவருக்குப் பொறுக்கலை....  பொறுமையின் சிகரமாம் சிவனுக்கே  பொறுக்கலைன்னா பாருங்க..... நீதி தவறிய மன்னனைத் தண்டிக்கறதுக்காக, அவன் நாட்டையே அழிக்க நினைச்சா எப்படி?  ( இங்கெதான் சிவன் ஒரு தப்பு பண்ணிட்டாருன்னு நான் நினைக்கறேன்.... . )  தவறு செஞ்ச மன்னனை மட்டும் அழிச்சாப் போதாதோ?

அரசனின் நாட்டை மண்மாரி  கொண்டு அழிக்க ஆரம்பிச்சார்.  ( ஆலமரம் அடியோடு விழும்போது, அருகில் உள்ள செடிகளும் நசிக்கப்படும் என்று  அ.வியாதி சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்குதே.... )  ஊரே  மணலால் மூடிக்கிட்டு இருக்கு. திகைச்சுப்போன சனம், என்ன ஏதுன்னு புரியாம, எல்லை தெய்வம் காளியாண்டை ஓடிப்போய் 'அம்மா....தாயே  இது என்ன இப்படி'ன்னு குய்யோ முறையோன்னு.... முறையிடறாங்க.

மண்மாரியை எதிர்பார்க்காத மாரிக்கும் திகைப்பு!  உடனே 'எல்லாத்தையும் நிறுத்த'ச் சொல்லி தாயுமானவரை வேண்டறாங்க. காளியும் சக்தியின் அம்சமாச்சே....    கேட்டால் மறுக்க முடியுமா? நிறுத்திட்டார்!  ஆனா அதுக்குள்ளே ஊர் போனது போனதுதான்....

இவ்ளோ சனம் வீடில்லாம இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன வீடு வேண்டி இருக்கு?  அவுங்களுக்கெல்லாம் வீடு கிடைக்கும்வரை நானும் அவுங்களைப்போலவே வெட்ட வெளியில் தலைக்கு மேல் கூரையில்லாம இருக்கப்போறேன்னு இப்படி உக்கார்ந்துட்டாள் !

(ஹைய்யோ.... இப்படி நினைக்கும் தலைவர்கள் நம்ம நாட்டுக்குக் கிடைச்சுருந்தால்......   உலகிலேயே உச்சத்துக்குப் போயிருக்குமே இந்தியா  !!! நமக்குக் கொடுப்பனை இல்லை பாருங்க....ப்ச்.... ) 

இங்கேயும் காளி கொஞ்சம் அவசரப்பட்டுட்டாள்னு நினைக்கிறேன்.  சனம் இப்படிப் பெருகி வழியப்போதுன்னும்,  எப்பவுமே கோடிக்கணக்கான சனம் வீடில்லாமத்தான் இருக்கப்போகுதுன்னும்  அப்போ ஒரு விநாடி எதிர்காலத்தைப் பார்த்திருக்கக்கூடாதோ? ப்ச்....
கருவறைன்னு இருட்டறையில் அடைக்காம வெட்டவெளியில்  பளிச்ன்னு இருக்கும் காளியைப் பார்க்கப் பரவசமா இருந்தாலும்.... நாம் மட்டும் மண்டபத்துக்குள்ளில் பாதுகாப்பா நின்னுக்கிட்டு தரிசனம் செய்யறது.... கொஞ்சம் என்னவோ மாதிரிதான் இருந்துச்சு எனக்கு.

அன்பே உருவான தாயுமானவரையும் இப்படி  வில்லனாக்கிட்டாங்களே இந்தப் 'புராணக் கதை'யில்!  இத்தனையும் பண்ணினவர், மலைக்குகையில் பத்திரமா இருக்கார் பாருங்க......

ஆனா.... ஒன்னு தெய்வம் எப்படிக் காட்சிக்கு எளியதா இருக்கணுமுன்னு நம்ம வெக்காளியைப் பார்த்து மற்ற தெய்வங்கள் கத்துக்கணும்.

அதை விட்டுட்டு, இருட்டறையில் நின்னு,  கோவில் ஊழியர் என்ற பெயரில் அரக்கர்களை வச்சுக்கிட்டுக் காசே குறியா இருந்தால் நல்லாவா இருக்கு?  கால்கடுக்க நின்னு/ நடந்து  கஷ்டப்பட்டு வர்ற சனத்தை  விநாடி நேரம் பார்க்கவிடாமக் கையைப்பிடிச்சு இழுத்துக் கடாச விட்டு வேடிக்கை பார்த்தவனை வாழ்நாள் முழுசும் இப்படித்தான் திட்டிக்கிட்டே இருக்கப்போறேன்....

மன்னிக்கணும்,   காளிதரிசனம் பற்றி எழுதும்போது இப்படி  உள்மனசுக்குள்ளே வர்ற எண்ணங்களை நிறுத்த முடியலை. அதான் இங்கே கொட்டிட்டேன். எனக்கும் இதைச் சொல்லிக்க உங்களை விட்டால் வேற  யார் இருக்காங்க?
மேலே: பழைய படம்! 

திரும்பி ஸ்ரீரங்கம் போறோம். கொஞ்சம் ஓய்வுக்குப்பின் பெரிய கோவிலுக்குப் போகலாமான்னு நினைக்கும்போதே....
தொடரும்..........  :-)


8 comments:

said...

தூரமா நின்னு பார்த்தாலும் அம்மன் தரிசனம் இங்கு ரொம்ப எளிது தான் மா..

அருமையான படங்கள் ...

said...

முன்பெல்லாம் குரையே இருக்காது இப்போது கூரை மாதிரி ஒன்றாவது இருக்கிறதே

said...

திருச்சி பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயில். இக்கோயிலுக்குச் சென்றபோது அதிகமான மன நிறைவினை அடைந்தேன். நான் சென்ற கோயில்களில் என் மனதில் நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.

said...

அருமை நன்றி

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கடவுள் காட்சிக்கு எளியவராக இருக்கணும். அம்மா அப்படியே இருக்காள் !

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

இப்பவும்தான் அம்மனுக்குத் தலைக்கு மேல் கூரையே இல்லை! ச்சும்மா ஒரு வாசல் போல் கட்டி இருக்காங்க. அதன் வழியா அம்மனைப் பார்க்கிறோம் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கும் நிறைவான தரிசனம் கிடைத்தது. இனி ஸ்ரீரங்கம் போகும்போது இவளையும் தரிசனம் செஞ்சுக்கத்தான் வேணும்!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !