Friday, December 11, 2009

சூடிக் கொடுத்தச் சூடாமணி

போ போன்னு சொல்லிக் கண்டுக்காம இருந்தவுங்க, வா வான்னு கூப்பிட்டுத் தங்கத்தட்டுலே நிக்கவச்சது போல! இத்தனை உசரத்துக்கு வர எவ்வளோ பாடுபட்டுருக்கணும்??


நாலைஞ்சு நாளைக்கு முன்னே சேதி தெரிஞ்சு போச்சு, இந்த வருசம் ந்ருத்ய சூடாமணி விருது யாருக்குப் போகுதுன்னு. பொருத்தமான நபருக்குத்தான்னு மனசு நினைச்சாலும், ஒரு மடல் போட்டு வாழ்த்தி இருக்கலாமோ? அப்புறம்ன்னு நினைச்சு விட்டுப்போகும் காரியங்களில் இப்படி ஒன்னு.

அதுக்குள்ளே அவுங்களே மடல் அனுப்பி இருந்தாங்க. கூடவே இந்த இசை நாட்டிய விழாவில் அவுங்க நிகழ்ச்சி எங்கெங்கே நடக்குதுன்ற விவரமும் அழைப்பிதழும். பாராட்டி ஒரு மடல் அனுப்புனேன். இந்த மின்மடல் வந்தபிறகு எல்லாமே விரல் சொடுக்கும் நேரம்தான். ஆனா...அதுக்கும் சோம்பல் சிலசமயம்(-:

ஆற அமர ஒருநாள் சந்திக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தாலும், கலைஞர்களுக்கு இருக்கும் வேலைச் சுமையில் நாம் வேறு..... தொந்திரவோன்னு நினைச்ச சமயம், ஒரு நேரம் குறிப்பிட்டு சந்திப்புக்கு வாங்கன்னு ஒரு அழைப்பு அனுப்புனாங்க.

வி எஸ் வி கோவில் தெரு, மாதவப்பெருமாள் கோவிலுக்குச் சமீபம். தொலைபேசி எண்கள் இப்படி எல்லா விவரமும் அழைப்பில் இருந்துச்சு. வரசித்தி விநாயகரா இருக்கலாமுன்னு நினைச்சேன். ஆனால் அவர் வரகூர் செல்வ விநாயகராம். (இந்தப் பி.வி. கோவில் தெரு கூட பரிபூர்ண விநாயகர்!)

கிளம்பும் தினம் தொலைபேசுனேன். காத்திருக்கேன் பதினொரு மணிக்கு. இப்ப நடனப்பயிற்சி நடக்குதுன்னு சொன்னாங்க. நம்மவனையும் சேவிச்சுக்கிட்டே போகலாமுன்னு கோவிலுக்குள் நுழைஞ்சேன். கார்த்திகை மாசம். மூலவருக்கு தைலக் காப்பாம். குறுக்கே கட்டுன வேட்டித் திரைக்குப் பின்னே ஒளிஞ்சுருக்கார். ஜிலுஜிலுன்னு நிற்கும் உற்சவரைக் கண்குளிரப் பார்த்தாயிற்று. 'எங்கே இருந்து வரேள்? ஸ்மார்த்தாளா?'ன்னு குலம்கோத்திரம் விசாரிக்க ஆரம்பிச்சார் பட்டர். வைஷ்ணவனுக்கு ஏது ஜாதி? ராமானுஜர் சொன்னது நினைவில்லையான்னு எதிர்க்கேள்வி போட்டேன். 'ஜாதியைச் சொல்றதில்லைன்னு ஒரு ப்ரதிக்ஞை எடுத்துண்டுட்டேன்' னு சொல்லிவச்சேன்:-) 'மனுஷ்யன், மனுஷ்யனாக இருந்தால் போறாதா?'ன்னு கூடவே கொசுறு லெக்சரும்.

நல்ல தமிழ்ஞானம் உள்ள பட்டர். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதெல்லாம் (முழுக்கச்) சொல்லி அதுக்கு விளக்கமெல்லாம் சொல்லி சகஜமாப் பேச ஆரம்பிச்சார். வெறுன்ன கேட்டேன்னார். போயிட்டுப் போறது போ(ங்கோ) பெருமாள் பார்த்துண்ட்ருக்கன்.

சிரமமே இல்லாமல் சட்னு வீட்டைக் கண்டுபிடிச்சேன். ரொம்பப் பெரிய ஆட்கள் இருக்குமிடத்தில் உதவியாளர் வந்து கதவைத் திறப்பாங்க. என்னன்னு சொல்லணுமுன்னு அரை வினாடி மனசுக்குள் பயிற்சி எடுக்கறதுக்குள்ளே..... கதவைத் திறந்ததே நான் கண்டுகொள்ளப்போன
வி ஐ பி.
பளிச் ன்னு இருந்தது வாய் நிறைந்தப் புன்னகையா, இல்லே அந்த வரவேற்பு அறையான்னு பட்டி மன்றம் வச்சே ஆகணும். 'அந்தக் காலங்களில்' சம்மன் இல்லாமலேயே அடுத்தவீடு, எதுத்தவீடுன்னு பெண்கள் புகுந்து புறப்படுவோம். தெருவில் எல்லோரும் ஏதோ நம்ம உறவுக்காரர் மாதிரிதான் ஒரு நினைப்பு இருக்கும். உள்நாட்டு அரசியல் முதல் மார்கழி மாசக் கோலம்வரை பேச்சு அப்படியே காவேரி (இதுவும் அந்தக் காலத்துக் காவேரியாக்கும்)யாட்டம் கரைபுரண்டு போகும். அதெல்லாம் கனவில் எப்பவோ நடந்ததுன்னு... நாகரிகம் என்ற பெயரில் இந்த டிவிச் சனியன் வந்து எல்லாத்தையும் கெடுத்துச்சேன்னு பெருமூச்சு விடும் நான்..... அப்படியே காலயந்திரத்தில் பயணிச்சது போல, இயல்பா நம்ம பக்கத்துவீட்டுப் பொண்களிடம் பேசியது ஒரு இனிய அனுபவமா இருந்துச்சு.

"வணக்கம். இனிய வாழ்த்து(க்)கள். ஷக்தி எங்கே? "இதுதான் கொஞ்சம் ஃபார்மலான ஆரம்பம். சிரிச்சமுகத்தோடு ஷக்தி வந்து வாங்க வணக்கமு''ன்னு சொன்னாங்க. ஆஹா...இந்த நர்த்தகியின் பின்னால் நின்று அவுங்க முழுவெற்றிக்கும் காரணமான கல்த்தூண் இவுங்கதானா?

ஆமாம்...நர்த்தகி என்ற பெயர் எப்படிப் பொருத்தமாத் தேர்ந்தெடுத்தீங்க?

எல்லாம் என் குரு வச்ச பெயர். நொடிக்கொருதடவை சுவரில் மாட்டி இருக்கும் தஞ்சை கிட்டப்பாப் பிள்ளை அவர்களின் படத்துக்குக் கண்கள் பயணிச்சுக்கிட்டே இருக்கு. 15 வருசம் அவரிடம் குருகுல பாணியில் கூடவே இருந்து வித்தையைக் கற்றுத் தேறியது மனக்கண்ணில் ஓடுது. ஆரம்பகாலங்களில் இவரது குரு ஜெயராமன் அவர்கள்ன்னு வேற எங்கியோ ஒரு பேட்டியில் படிச்ச நினைவு.

நிராகரிப்புன்றது எத்தனை மனவலியைக் கொடுக்குமுன்னு நமக்குதெரியும். ஆனா அதுவே எத்தனை மனோவலிமையையும் கொடுத்துருக்குன்றதுக்கு எடுத்துக்காட்டா.........

ந்ருத்திய சூடாமணி விருதுன்னு சொல்றது நடனக்கலைஞர்களின் ஆஸ்கார் விருதுன்னு சொன்னா அதன் மதிப்பு சட்னு புரிஞ்சுரும். நாளைக்கு இந்த விருதை (12/12/2009) ஸ்ரீகிருஷ்ணசபாவில் நம் நர்த்தகிக்குக் கொடுத்து அந்த விருதைக் கௌரவப்படுத்தப் போறாங்க. சிலபல வருசங்களுக்கு முன்னால் இதே சபாவில் நாட்டியம் ஆட அனுமதி கேட்டு இவுங்க அனுப்பிய ஒரு கடிதம், பிரிச்சு என்ன எழுதியிருக்குன்னு பார்க்காமலேயே (??!!!)திரும்பி அனுப்பப்பட்டு இருக்கு!

எதுக்கும் அசராம நடனம்தான் தன் வாழ்க்கைன்னு முழுமூச்சா அதுலேயே லயிச்சபிறகு..... அதே சபா இவுங்களை அழைச்சு (2002 வது வருசம்) அபிநயம் & பாவத்துக்கான விசேஷ விருதைக் கொடுத்துருக்கு. தகுதியுள்ள விஷயம் ஜெயிச்சுத்தானே ஆகணும்?

போனமாசம், ந்ருத்யசூடாமணி விருது உங்களுக்குன்னு தகவல் வந்தப்ப..... என்னடா இது......... நம்மை வச்சு காமெடிகீமெடி ஒன்னும் பண்ணலைதானே? ன்னு நினைப்பு. கலைத்துறையில் உள்ள கடும் போட்டிகளைத் தெரிஞ்சவங்களுக்கு இப்படித்தான் தோணி இருக்கும். அந்த மகாசமுத்திரத்தில் திமிங்கிலங்கள் ஏராளம் இல்லையோ!!!

இது, உங்க உண்மையான உழைப்புக்குக் கிடைச்ச வெற்றி. அந்த விருதுக்குத்தான் இது பெருமைன்னு சொன்னேன்.(நமக்குப் பேசத்தெரியாதா என்ன?)

"உங்களைப் பார்க்க நாங்களும் ஆவலாத்தான் இருந்தோம். நீங்க வீட்டுப் படியேறிவரும்போது ஜன்னலில் பார்த்தேன். முகம் பார்த்ததும் நினைவு வந்துருச்சு. அன்னிக்கு நிகழ்ச்சி முடிஞ்சவுடன் ஒரு வார்த்தை பாராட்டுனீங்களே"

பரவாயில்லையே..... அத்தனை கூட்டத்திலும் நம்மை 'முகவிலாசம்' கைவிடலை:-)

நீங்க பாடுவீங்களா? பாட்டு நடனம் இதுகளில் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்துருக்கீங்களான்னாங்க. பாட்டு கேப்பேன். கோபத்தில் பாடவும் செய்வேன். ஆட்டமோ கேக்கவே வேணாம். சின்ன வயசுலே நடனம் படிக்க ஆரம்பிச்சு, அம்மாவின் வேலைகாரணம் வருசத்துக்கு ஒரு ஊராப் போய்க்கிட்டே இருந்ததால் பல ஊர்களில் நடன வகுப்பில் சேர்ந்துத் தட்டிக்கும்பிட்ட ஆள் நானாத்தான் இருந்துருப்பேன்னேன். அதுவுமில்லாம நான் படிச்ச பள்ளிக்கூடங்களில் நான் ஆடுவதுதான் ஆட்டம். 'இப்போதையத் தொழில் எழுத்து'ன்னேன்:-)
சக்தி அதுக்குள்ளெ ரெண்டு மூணுமுறை என்ன சாப்புடறீங்க? காஃபி, ஜூஸ்ன்னு விடாமக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. மனசு நிறைஞ்சுகிடக்கும்போது பசியும் இல்லை தாகமும் இல்லைன்னு சொல்லிவச்சேன்.

வரவேற்பு அறை அதிகம் இருக்கைகள் இல்லாம, இருப்பதன் காரணம், அங்கேதான் இவுங்களோட நடனப்பள்ளியின் பயிற்சிவகுப்புகள் நடக்குது. அங்கங்கே நூத்துக் கணக்கா மாணவர்கள் இருக்காங்கன்னா.... இங்கே நவரத்தினங்களைத் தரம் பிரிச்சுப் பொறுக்கி எடுத்த மாதிரி ஒரு இருபது பேர்தானாம். அவசர யுகத்தில் எல்லாமே அவசரமா நடந்து பள்ளியில் சேர்த்த மூணுநாலு வருசத்துக்குள்ளே அரங்கேற்றம் செஞ்சுறனுமுன்னு துடிச்சுக்கிட்டு இருக்கும் பெற்றோர்களுக்கு இவுங்க சொல்லும் முதல் நிபந்தனை ...... "தஞ்சாவூர் பாணியில்தான் நடனம் சொல்லிக் கொடுப்பேன். நின்னு நிதானமா கலையை, கலைக்காகவே கற்றுக்கொள்ளும் ஆர்வமும் பொறுமையும் இருந்துசுன்னா உங்க பிள்ளைகளைக் கொண்டுவந்து சேர்க்கலாம்"

இதைப் பற்றி குருவிடம் சொன்னப்ப, 'பறந்துபறந்து எல்லாத்தையும் செய்யணுமுன்னா இது என்ன மைதானமா?'ன்னாராம். மேடையில் ஏறும் பக்கும்வரும்வரை பொறுமையாப் படிக்கிறவங்ககிட்டேதான் கலைமகளும் குடி இருப்பாள்.

நர்த்தகியே ரொம்ப நிதானமாத்தான் பேசறாங்க. வேண்டாத சிந்தனைகளைத் தன் தலையில் இருந்து கழட்டிவீசிட்டதால் மனம் லகுவாப் போயிருக்கு. செய்யும் தொழிலை தெய்வமாமட்டும் மதிச்சுத் தூக்கி ஒரு பக்கம் வச்சுறாம, அந்தக் கலையை அனுபவிச்சு ஆத்மார்த்தமா அதை ஆடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடும் கிடையாது இணையும் கிடையாது. சத்தியமான உண்மை.

இதுவரை ஏகப்பட்டக் கோவில் கும்பாபிஷேகங்களில் ஆடி இருக்காங்களாம். இறைவன் சந்நிதிக்கு முன்னே ஆடும்போது மனசுக்குள்ளே பொங்கிப் பெருகிவரும் நிம்மதியைச் சொல்ல வார்த்தைகளே இல்லையாம். ஒரு முறை கோவிலில் (திருச்செந்தூர்?) தங்கரதம் ஊர்வலம். அது முடிஞ்சதும் இவுங்க நிகழ்ச்சி. அப்ப, அந்தக் கோவில் பொறுப்பாளர், இவுங்ககிட்டே பேச்சுவாக்கில், 'அந்தக் காலத்தில் ஸ்வாமி ஊர்வலம் போகும்போது நடனமங்கையர் தேருக்கு முன்னால் ஆடிச்செல்வது வழக்கம்'ன்னாராம். உடனே இவுங்க நான் ஆடவான்னு கேட்டு ஒவ்வொரு பிரகாரத்துக்கும் திருப்பத்துக்கும் ஒவ்வொரு திருப்புகழாப் பாடி ஆடி இருக்காங்க. ( இதைச் சொல்லும்போது ஏதோ ஒரு பரவசநிலையில் இருந்துச்சு அவுங்க முகம்.) அதுக்குப்பிறகு நாலுமணி நேர நிகழ்ச்சி வேற.

கூடியவரையில் எல்லாம் தமிழ்ப் பாடல்களே இவுங்க நிகழ்ச்சிகளில். பொருத்தமான அரிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதுக்குத் தோதான வகையில் நடனத்தை வடிவமைச்சு நடனநிகழ்ச்சிகளில் புதுமைகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தாலும் பாணியைவிட்டு ஒரு போதும் நழுவறதில்லை.


ரொம்ப எளிமையான வாழ்க்கை முறை. பெரிய எதிர்பார்ப்புகள் ஒன்னும் இல்லாததால் அமைதியா இருக்கும் மனசு. எல்லாப் பொறுப்பையும் ஷக்திகளிடம் விட்டுட்டாங்க. அதுலே ஒன்னு மானிட ரூபத்தில் கூடவே வீட்டில்.

கடவுளிடம் சரணாகதின்னு விட்டுட்டால் எல்லாம் அதன் பொறுப்பு.


விருதுகளுக்கு இந்த மதுரைக்காரவுஹளைப் பிடிச்சுப்போச்சு. 1994 வது வருசம் 'நாயகிபாவ ரத்தினம்' என்ற பெயரோடு இங்கே வந்து சேர்ந்ததுதான் ஆரம்பம். அப்புறம் இதோ எண்ணிக்கோன்னு வரிசை வரிசையா, வண்டிவண்டியா விருதுகள் வந்து குமிஞ்சுகிடக்கு. இதோ ஆச்சு 25 வருசம். 22 விருதுகள் இதுவரை. இதெல்லாம் உள்ளுர். இதைத் தவிர வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கிடைச்சதையும் சேர்த்தா...... ஹப்பா.... கொஞ்சம் இருங்க மூச்சு வாங்குது எனக்கு.

கிளம்பும் சமயம் மஞ்சள் குங்குமத்தோடு சில்க் ரவிக்கைத் துணி. எனக்குப் பச்சை பிடிக்குமுன்னு அவுங்ககிட்டேப் போய் சொன்னது யாரு? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்,ஆமா. குங்குமம், மதுரை மீனாக்ஷியின் ஸ்பெஷலான தாழம்பூக் குங்குமம். வாசனை அப்படியே வீட்டைத் தூக்குது.
அட! இந்தக் குங்குமத்தைத்தானே மதுரையில் வாங்கிக்கணுமுன்னு நினைச்சுக் கடைசி நிமிஷம் கோட்டை விட்டுருந்தேன்! எவ்வளோ பெரிய ஆட்டகாரி! (தில்லானா மோகனாம்பாள், மனோரமா ஸ்டைலில் படிக்கணும்.) ஒரு தலைக்கனம் வேணாமோ? ஊஹூம்.... எல்லாம் நம்மைப்போலவே ரொம்ப யதார்த்தமாவும் இனிமையாவும். நம்ம நட்பு வட்டம் பெருகிக்கிட்டே போகுது:-)


கலைமாமணி நர்த்தகி, ந்(ரு)த்ய சூடாமணியா ஜொலிக்க இன்னும் 24 மணிநேரம்கூட இல்லை. கலைக்கே தன்னை அர்ப்பணிச்சுக்கிட்ட இவுங்க எல்லா நலன்களும் பெற்று நீடூழிவாழ்ந்து, அவுங்களுடைய குருவின் தஞ்சைப் பாணியை அழியாது காக்கவேணும் என்று மனமார வாழ்த்துக்கின்றேன்.

( அதெல்லாம் வாழ்த்த வயசு இருக்கு,ஆமாம்)

38 comments:

said...

துளசியம்மா,மாதவப் பெருமாள் கோவில்,மயிலாப்பூர் கோவிலா?

மயிலையில் வசித்தீர்களா என்ன? எங்க வீடு கூட பக்கத்துலதானே !

said...

வாங்க அறிவன்.

அதே அதே.... மயிலை மாதவந்தான்.

வந்துபோவேன் அடிக்கடி.

ஆமாம்...நீங்கள் இப்போதும் அந்த ஏரியாவில்தானா?

ஆமாம் என்றால் விவரம் சொல்லுங்கோ.

பின்னூட்டமிட்டாலும் போதும் விவரம் வெளியிடமாட்டேன்.

said...

இவங்க பேட்டியை பத்திரிகையில் படித்திருக்கிறேன். சந்திப்பை அழகா எழுதியிருக்கீங்க வழக்கம் போலவே.
ந்ருத்திய சூடாமணிக்கு என் நல்வாழ்த்துக்கள்!

said...

டீச்சர்..டீச்சர் ...உங்க நட்பு வட்டத்துல நாங்களும் இருக்கோமில்ல?!
இருக்கோமா..இல்லையா? சொல்லிட்டு அடுத்த பதிவைப் போடப் போங்கோளேன்.
:)))
நர்த்தகி உடன் உரையாடல் ...நல்லா இருக்குங்க.எழுத்தே பேச்சு ...எழுத்தே உயிர்மூச்சுன்னு இறங்கியாச்சாக்கும்.இன்னும் சுவாரஸ்யமானவர்கள் நிறையப் பேரை சந்திச்சு எழுதுங்க ,படிக்க ரொம்ப நல்லா இருக்கு ...

நேயர் விருப்பம் :
அடுத்ததா சௌகார் ஜானகி எங்க இருக்காங்கனு தேடுங்கோளேன்...அப்படியே தொடர்ச்சியா வைஜெயந்தி மாலா...
சொல்ல மறந்துட்டேன் காலைல தமிழ்மணத்துல ஒரு அறிவிப்பு பதிவு பார்த்தேன் சரியா ஞாபகம் இல்லை சாக்கிய புத்தன்னு ஒரு புத்தகம் போட்டிருக்காராம் அந்தப் பதிவர்.எதோ நாடக விழாவுக்கான அழைப்புன்னு ஞாபகம்,முடிஞ்சா போய் பார்த்துட்டு வந்து ஒரு பதிவை தட்டி விடுங்க,போக வாய்ப்பில்லாத என் மாதிரி ஆட்கள் படிச்சிக்கிறோம்

said...

நர்த்தகி நிருத்யசூடாமணிக்கு வாழ்த்துக்கள்.

அவர்களைப் பற்றி நன்றாக எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

விருது பெற்ற நர்த்தகிக்கு வாழ்த்துக்கள்...
அதைப்பற்றி எழுதிய..
நவரசத்திலும் பாடும் பாடகி,
பலப்பல ஊர்களில் குருவணக்கம் கற்ற
நடன வித்தகி துளசிக்கு பாராட்டுகள்..

said...

துளசி!
இருவர் முகத்திலும் காணும் புன்னகையும், சாந்தமும் சொல்கிறது அவர்கள் கடந்து வந்த பாதையை.
இந்த நம்பிக்கை எல்லாப் பெண்களுக்கும் இருந்தால் எத்தனையோ
'
சாதிக்கலாம்.நிருத்திய சூடாமணி நர்த்தகி நடராஜுக்கு நம் வாழ்த்துகள்.
அவர்களுக்குச் சக்தி கொடுக்கும் சக்தி அவர்களுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துகளும் ஆசிகளும்.
நல்லதொரு காரியம் செய்திருக்கிறீர்கள் துளசி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

said...

உங்களோட சேர்ந்து நானும் வாழ்த்திக்கிறேன்

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அவுங்க கடந்துவந்த பாதை லேசுப்பட்டதல்ல. எல்லோருடைய வாழ்த்து(க்)களும் அவுங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும்

said...

வாங்க மிஸஸ்.தேவ்.

நீங்க எல்லோருமே எனக்கு நண்பர்கள் இல்லை. உறவுதான்:-)

உரையாடல் எழுத்துக்கு வந்தப்ப, நம்ம வித்யாவின் புத்தகம் பற்றிச் சொன்னேன். லிவிங் ஸ்மைல் வித்யாவான்னு ஆர்வமாக்கேட்டாங்க.

சௌகார் ஜானகியா? அச்சச்சோ.... அவுங்க(மகளின்) சம்பந்தியைப் பத்திச் சொல்லவா?

சாந்தம்மான்னு கூகுளிக்கவும். ஏற்கெனவே எழுதியாச்சு:-)

ஐயோ இப்படி வைஜயந்திமாலாவைப்[ பத்திக் கேட்டால்.... சொன்ன நம்பமாட்டீங்க. ரெண்டு வாரம் முன்பு ஒரு நிகழ்ச்சியில் அவுங்களைப் பார்த்தேன். எழுவத்தி மூணாம். நம்பமுடியலை. உடம்பு ஒல்லியாத்தான் இருக்கு. முகத்துலேதான் வயசு லேசாத் தெரியுது.

போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

said...

வாங்க கோமதி அரசு.

உங்களைப்போன்ற பெரியவர்கள் ஆசியால் அவர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

said...

இனிமே சென்னையில் விலாசம் தெரியவில்லை என்றால் உங்களை கேட்கலாம் போலிருக்கு. :-))

said...

வாங்க கயலு.

ஒரு ந்ருத்ய சூடாமணியிடம், தட்டிக் கும்புட்டதை மட்டும் என்ன தைரியமாச் சொல்லி இருக்கேன் பாருங்க:-)

said...

வாங்க வல்லி.

உங்க அன்பும் ஆதரவும் அவர்களுக்கு மேன்மை அளிக்கட்டும்ப்பா.

ஆசிகளுக்கு நன்றி.

said...

அறிவன்,

விவரம் கிடைச்சது. நன்றி.

said...

சந்திப்பில் கூடவே இருந்தது போல இருந்தது டீச்சர் (வழக்கமாக இருப்பது தானே!)

நர்த்தகி அவர்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

அப்புறம் முத்துக்கா சொன்னது போல உங்களுக்கும் வாழ்த்துக்கள் ;))

நான் அனுப்பிய ஒரு பழைய மெயிலுக்கு பதிலே இல்லை.

said...

ஆகா, நர்த்தகி அவர்களுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்துகள் அம்மா.

பாடகி+நடனமணி+எழுத்தாளராகிய உங்களுக்கும் :)

said...

// 'ஜாதியைச் சொல்றதில்லைன்னு ஒரு ப்ரதிக்ஞை எடுத்துண்டுட்டேன்' னு சொல்லிவச்சேன்:‍) //


இந்த பிரதிஜ்ஞையை இந்த பதிவைப்படிக்கிற எல்லோருமே மனப்பூர்வமா
எடுத்துக்கணும்.

மீனாட்சி பாட்டி.

said...

வாங்க நசரேயன்.

நர்த்தகிக்கும் இந்தப் பதிவின் லிங்க் அனுப்பியிருக்கேன். உங்க வாழ்த்து(க்)கள் எல்லாம் டைரக்டா அவுங்களே படிப்பாங்க(ன்னு நம்புகிறேன்)

said...

வாங்க குமார்.

சென்னைத் தெருக்களா?

சிடி மேப் ஒன்னு வாங்கி வச்சுருக்கேன். ஆனாலும் அதுலே பார்த்து இடம் கண்டுபிடிக்கறதுக்குள்ளே தாவு(?) தீர்ந்துருது.


வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கோபி.

எனக்குமா வாழ்த்து?

ஏஏஏஏஏஏன்......? (ஜில்ஜில் ரமாமணி)

ஒரு ஓரமா நின்னு ஆடிக்கிடவா?:-)))))

பழைய மெயில் எதுன்னு புரியலையேப்பா? கோட்டை விட்டுட்டேனா?

இன்னொருக்கா அனுப்பமுடியுமா ப்ளீஸ்.

said...

வாங்க கவிநயா.

கவிதை ராணியின் வாழ்த்துகளை அனுப்பிடறேன். ஸார்...போஸ்ட் :-))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.
நலமா?

ஆமாங்கா. நீங்க சொல்வது ரொம்பச் சரி. ஒவ்வொருத்தரும் தன்வரையில் சாதியை ஒழிக்க முயற்சிக்கலாம்.

said...

நிருத்திய சூடாமணி நர்த்தகி நடராஜுக்கு வாழ்த்துக்கள்.

பேட்டியும் தொடங்கியாகி விட்டது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

said...

இவங்களை பத்தி வார இதழ்களில் படிச்சிருக்கேன்...பணத்துக்காக மட்டும் நடனத்தை சொல்லி கொடுக்கும் எத்தனையோ பேர்க்கு மத்தியில் கலைக்காக மட்டும் பயிற்சி கொடுக்கும் இவங்களை நினைச்சு ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு டீச்சர்.

சந்திச்சதோட இத்தன விஷயங்களை சொன்ன டீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.பெங்களூர் வர்ற ஐடியா எதும் இருக்கா டீச்சர்?

said...

இவங்க ரொம்ப நாளா ஆடறாங்களா துளசி. 1975/76 ஆ இருக்கும் சின்மயானந்தா திர் மஹாராஜா காலனில discourse க்கு வந்தப்போ ஒரு நர்தகின்னு ( இன்னும் ஒரு பேரும் இருந்ததா ஞ்யாபகம்.) பேருடயவங்களோட dance பார்த்திருக்கேன். photo லேந்து இவங்களானு தெரியல்ல அப்போ எனக்கு ரொம்ப அந்தம்மா கிட்ட striking ஆ இருந்தது அவங்க one pointed concentration. அவங்க தஞ்சாவூர் பாணில ?தாம்பாளத்தில/ ?குடம் மேல ஆடினாங்க. அட்டஹாசம்.அதே அம்மா தானானு தெரியல்ல. யாரா இருந்தாலும் நிறைய முயற்சி போட்டிருக்கணும். அதுக்கு கௌரவிக்கறது தர்மம் . நன்னா இன்னும் மேல மேல அவார்ட்ஸ் வாங்கட்டும். எளிமை என்னிக்குமே அழகுதான்.

said...

You are amazing teacher. I really liked the article. எளிமையும் செருக்கும் ஒரே இடத்தில் இருக்க முடியாதுன்னு நிரூபிக்கறாங்க... ஆடும் நடமெல்லாம் சிவனுக்கே என்று இவர் வாழ்வதற்க்கு பல ஆயிரம் கோடி விருதுகள் கொடுத்தாலும் தகும்.விருது பெற்ற நர்த்தகி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உற்ற தோழி சக்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

பதிவுலகின் கலாய்டாஸ்கோப் - நீங்க தான் டீச்சர்!!!! உங்கள் மூலம் பல நாடுகள் /பலதரப்பட்ட மக்கள்/ஆன்மீக பயணம்/பலவிதமான அனுபவங்கள் எல்லாவற்றயும் அனுபவிக்க கொடுத்துவைத்து இருக்கிறோம்...

Anonymous said...

//சிலபல வருசங்களுக்கு முன்னால் இதே சபாவில் நாட்டியம் ஆட அனுமதி கேட்டு இவுங்க அனுப்பிய ஒரு கடிதம், பிரிச்சு என்ன எழுதியிருக்குன்னு பார்க்காமலேயே (??!!!)திரும்பி அனுப்பப்பட்டு இருக்கு!//

இப்ப அந்த சபாவுக்கு இவங்கனால பெருமை.

said...

வாங்க மாதேவி.

துளசிதளம் இலச்சிணையைப் பாருங்கோ.

'எதை வேண்டுமானாலும்......'
வெரி வெரி அன்ப்ரடிக்டபில்:-))))))

said...

வாங்க சிந்து.

அபூர்வ மனுஷியைச் சந்திச்ச திருப்தி இருந்துச்சுப்பா.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

இவுங்க அவுங்கதானான்னு தெரியலை. வயசு ஒரு நாப்பதுக்குக் கிட்டே இருக்கலாம். நீங்க சொன்ன வருசம் வச்சுப் பார்த்தால் சான்ஸ் இல்லை!

பெண்களிடம் வயசு கேக்கப்படாதுன்னு சும்மா இருந்துட்டேன்:-)

ஆனாலும் இவுங்க கடந்து வந்த பாதை பிரமிப்பாத்தான் இருக்கு.

said...

வாங்க இலா.

நம்மைச் சுற்றி எவ்வளோ நல்ல விஷயங்கள் இருக்குன்ற பிரமிப்புலே நான் இருக்கேன்.

தெரிஞ்செடுத்துக்கத்தான் இன்னும் திறமையை நாம் வளர்த்துக்கணும்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

சரியாச் சொன்னீங்க! அதே அதே!

said...

இவுங்களைப்பத்தி நிறைய படிச்சிருக்கிறேன். நாயகிபாவ நாட்டியம் (பரதத்தில்) இவுங்க மட்டுந்தான் ஆடுறதா சொல்லி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்தியிருந்தாங்க. இப்போதைய விருதுக்கும் வாழ்த்துகள்

said...

வாங்க ஐம்கூல்.

நாயகிபாவத்துக்கே தனியா ஒரு விருதும் அதே கிருஷ்ணகான சபாவில் கிடைச்சுருக்கு இவுங்களுக்கு.

அத்தனையும் உழைப்பு & டெடிகேஷன்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

ஆஹா.எழுத்தில் நீங்கள் ஆடும்அற்புதமான நர்த்தனம் இந்தப் பதிவிலும்..மிகக் குறிப்பாக அடைப்புக்குள் பதிவு நிச்சயம் தில்லானாதான்..தொடர.வாழ்த்துகள்

said...

வாங்க யாதோரமணி,

தாமதமாப் பதில் சொல்றேனே.... மன்னிச்சூ

தில்லானாதான்னா, அப்புறம் மங்களம் இல்லையோ? எப்படித் தொடர்வதாம் ? 🤣🤣🤣🤣