Tuesday, December 01, 2009

ஏம்ப்பா.... உன் 'பெட் ரூம்' எங்கே இருக்கு?

இதுதானே வேணாங்கறது? பசின்னு வந்தே, இருப்பதைப் போட்டேன். அதுவும் எனக்குன்னுக் கொஞ்சம்கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் நீயே தின்னுட்டே! உண்டமயக்கம். அசதி தள்ளுது, இப்போ எங்கே போய் படுக்கலாமுன்னு கேக்கறே! இருக்க இடம்கொடுத்தாப் படுக்கப் பாய் வேணுங்கற கேஸா நீ? என்னது, பாய் வேணாமா? டன்லப் மெத்தையே வச்சுருக்கியா? அடப் போப்பா.....

ஆதி யுகத்தில் ஒரு கணவன் மனைவி. புருபுண்யர் & ஸதி ன்னு பெயர். அவுங்களுக்குப் புத்திரபாக்கியமே இல்லை. சாலியக்ஞம் என்ற யாகம் செய்யறாங்க. ஒரு வருசம் செய்யவேண்டியதாம் இது. கடைசி நாளில் 'கடவுள்' தோன்றி என்ன வரம் வேணுமுன்னு கேட்க, புள்ளை வரமுன்னு இவுங்க சொல்ல, அப்படியே ஆகட்டும். புள்ளைக்கு சாலிஹோத்ரர்ன்னு பெயர் வச்சுருன்னு ஆசிகள் கிடைச்சது.

சாலிஹோத்ரர் நல்ல பண்புகளுடன் பெரியவனா வளர்ந்து கலியாணம் கட்டி, இல்லற தர்மத்தைக் கடைப்பிடிச்சு, தீர்த்தயாத்திரை செஞ்சுக்கிட்டே வீக்ஷாரண்யம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஹ்ருத்தாப நாஸினி ன்னு ஒரு திருக்குளம் இருக்கு. தேவர்கள் காந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், ரிஷிமுனிகள் இப்படி பலரும் அங்கே வந்து நீராடி பூஜைகள் செஞ்சு, தர்ப்பணம் கொடுத்துட்டுப்போறதையெல்லாம் பார்த்தார். (மனசுலே எந்தவிதமான கஷ்டங்கள் இருந்தாலும் இங்கே நீராடி, சாமி கும்பிட்டால் அதெல்லாம் தீர்ந்துருமுன்னு ஒரு நம்பிக்கை)

நாமும் இங்கே தவம் செய்யலாமுன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. தவம் ஆரம்பிக்குமுன் சாப்பிடலாமுன்னு நெல்மணிகளைப் பொறுக்கிச் சேர்த்து அதைப் பக்குவமா மாவா ஆக்கிவச்சுட்டாங்க வீட்டம்மா. அதுலே ஒரு பங்கை யாராவது விருந்தாளி(அதிதி) வந்தால் கொடுத்துட்டுச் சாப்புடணுமுன்னு நியதி இருக்கு(ஐயம் இட்டு உண்). ஒரு கிழவர் வந்தார். அவரை வரவேற்று, உபசரிச்சு, கால் பங்கு மாவைக் கொடுத்தாங்க. அதெப்படி வெறும் மாவை விழுங்குவாங்க? விக்கிக்காதோன்னு கேக்கப்பிடாது. பார்க்கதான் ஒல்லியா இருந்தாரே தவிர கிழவருக்கு நாய் வயிறு! அடங்கலை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமுன்னு இருந்த மாவெல்லாம் இவருக்கே போச்சு. யானைப் பசி. வந்த வேலை முடிஞ்சதுன்னு கிழவர் போயிட்டார். வெறும் சட்டிபானையை வீட்டம்மா கழுவி கமர்த்தியாச்சு.

போயிட்டுப் போகுதுன்னு சாலிஹோத்ரர், தவம் செய்ய உக்காந்தார். இது ஒரு வருசத் தவமாம். தை அமாவாசைக்கு தை அமாவாசை.. அடுத்த வருசமும் வந்துச்சு. (பாவம். வீட்டம்மா(-: அவுங்களும் வருசப் பட்டினியோ என்னவோ!) தவம் முடிச்சு இன்னிக்கு எதாவது சாப்பிடணுமுன்னு எல்லாம் ரெடியாகுது. 'டான்'னு கிழவர் இன்னிக்கும் இங்கே ஆஜர். இன்னிக்கும் அதே மாதிரிதான். பூராவும் விழுங்கிட்டு, 'அசதியா இருக்கு. கொஞ்சம் தூங்குனாத்தான் சரியாகும். எங்கே எந்த அறையிலே படுத்துக்க?'ன்னு கேட்டார். பெரிய பங்களாவா என்ன? இத்துனூண்டு குடிசை. 'உள்ளே போய் இருக்கும் இடத்தில் தாய்ச்சுக்கோ'ன்னு சொல்லிட்டார் சாலிஹோத்ரர். சின்னக் குடிலில் கிழக்காவது மேற்காவது?

கிழவர் தெற்கே தலைவச்சுப் படுத்தார். ஆகாயத்துலே இருந்து மலர்மாரி பெய்யுது. மங்கள வாத்தியங்கள் ஒலிக்குது. 'என்னடா இது இம்மாம் சத்தமு'ன்னு சாலிஹோத்ரர் குடிசைக்குள் எட்டிப் பார்க்க, ஏதோ மேஜிக் ஷோ போல ஸீன் மாறுது. ஆதிசேஷன் படுக்கை விரிக்க, சங்கு சக்கரம் ஏந்திய கைகளோடு மகாவிஷ்ணு 'கிடந்தார்'.

இவருக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. அப்படியே பிரமிச்சு நின்னு பெருமாளை வணங்கினார். 'என்ன வரம் வேணுமுன்னு அவர் கேக்க, எப்பவும் உன்னையே பார்த்துக்கிட்டு உன் அருகிலேயே இருக்கணுமுன்னு இவர் சொல்ல 'அப்படியே'ன்னு அனுகிரகம் ஆச்சு'.

இந்த க்ஷேத்திரத்துக்கு பதிவுலகத்தோழி ஒருத்தருடன் ரெண்டு வாரத்துக்கு முன் போய்வந்தேன். ரெண்டு மணிநேரப் பயணம் சென்னையில் இருந்து. கோவில் வாசலில் போய் இறங்குனோம். ஆன்மீகச் செம்மலை நினைவுபடுத்தும் விதமா....(அட!) ராகவா!

'எவ்வுள்ளே கிடக்க'ன்னு கேட்டதால் இந்த ஊருக்கு எவ்வுள்ளூர்ன்னு பெயர் வந்துருச்சு. 'திருஎவ்வுள்ளூர்'. இந்தப் பெயரை ஒரு பத்துதரம் வேகமாச் சொல்லிப் பாருங்க. ஆங்..... திருவள்ளூர்ன்னு கேக்குதா? அதே அதே. பெருமாளுக்கும் 'எவ்வுள்கிடந்தான்'ன்னு காரணப்பெயர் உண்டு. இதைச் சொல்லிப் பார்க்க வேணாம். ஸ்வாமி பெயர் வீரராகவன் என்று சொல்றாங்க. (இதுக்கும் ஒரு கதை இல்லாமப்போகுமா? இருக்கு!) வஸுமதியாக இங்கே அவதரித்த தாயாரை, வீரராகவன் என்னும் இளவரசனா வந்து திருமணம் செஞ்சுக்கிட்டார் பெருமாள். தொழில்முறையில் பக்தர்களின் நோய்களைப் போக்கும் வைத்தியர். அதனால் வைத்ய வீரராகவன். நம்ம டாக்டர் வீரராகவன், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட். வார்ட்ஸ் (Warts) மரு, கட்டி, இதெல்லாம் கரையணுமுன்னா இவரை வேண்டிக்கலாம். . ஃபீஸ் ஒன்னும் அதிகம் இல்லை. உப்பும் குறுமிளகும் வாங்கித் தந்தால் போதுமாம்.

அகோபிலமடத்தின் பொறுப்பில் இருக்கும் கோவில். வழக்கம்போல் புகைப்படத்துக்கு அனுமதி இல்லை. வெளிப்புற மண்டபத்துக்கு நேரா பிரமாண்டமான கதவுகளோடு, கோபுரவாசல். உள்பிரகாரம் கடந்து நேராப் போனால் மூலவரை தரிசிக்கலாம். எனெக்கென்னமோ இங்கே கருவறைக்கு ரொம்பப் பக்கமாப்போய் நிற்கும்படியான ஏற்பாடா இருக்கேன்னு வியப்பா இருந்தது. பெரிய திருவுருவம். வலது பக்கம் லேசாத் தலையைச் சாய்ச்சு புஜங்க சயனமாப் படுத்து, வலக்கையை சாலிஹோத்ரர் தலையில் வச்சு ஆசீர்வாதம் செஞ்சுக்கிட்டே, கால்களை நீட்டிப் பாதங்களை ரொம்ப ரிலாக்ஸா, ஒரு பாதம் நேராவும் வலது பாதம் ஒரு முப்பது டிகிரி கோணத்துலேயுமா வச்சுக்கிட்டு போர்வை ஒன்றைப் போர்த்துக்கிட்டுக் கிடக்கிறார். (பப்ளி துப்பட்டியாம். சிகப்பு வெள்ளைக் கட்டம் போட்டது. கோவிலில் மட்டுமே கிடைக்குமாம்.)

மூலவர் ரொம்ப அழகுன்னா, உற்சவர் அதி அழகு. அவருக்கு வலப்பக்கம் தாயார் சந்நிதி. பெயர் கனகவல்லி. மூலவர் முகம் பார்க்கப் பார்க்கப் பரவசம். ரொம்பத் தெரிஞ்ச ஒரு பொண்ணைப் பார்க்கறதுபோல் இருக்கு. உருண்டை முகமா இல்லாமக் கொஞ்சம் நீண்ட சின்ன முகம். பார்வையில் ஒரு அன்பும் கருணையும் ததும்பிக்கிடக்கு. (இதை எதுக்குச் சொல்றேன்னா..... நம்ம வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தானக் கோவிலில் வச்சுருக்கும் தாயாரை ஒரு முறை போய்ப் பார்த்துட்டு வாங்க. ஏற்கெனவே புலம்பினதுக்கு இங்கே சுட்டி கொடுக்க முடியலை. ப்ளொக்கர் நாலைஞ்சு நாளா மிரட்டுதுப்பா. எதையும் எடிட் செய்ய முடியாம அப்படியே போட்டுக்கிட்டு வர்றேன்)

ஸ்ரீராமர் சந்நிதியில் அந்த உற்சவர்களையும், குட்டியூண்டா நிற்கும் ஹனுமனையும் பார்த்துக்கிட்டே நின்னுடலாம். ஹைய்யோ.....இவ்வளவு திருத்தமான முகத்தை நான் என் (இந்த) ஜென்மத்துலே பார்த்ததே இல்லை. அழகு அழகுன்னு வாயாரச் சொன்னதைக் கேட்ட பட்டர், 'பிரம்மோத்ஸவம் நடக்கும்போது வந்து பாருங்கோ. தாயாரும் பெருமாளுமா மேட் ஃபார் ஈச் அதர் ன்னு இருப்பா'ன்னார்!

ஸ்ரீவேணுகோபாலனுக்கும் ஒரு சந்நிதி இருக்கு, கொஞ்சம் பாழடைஞ்ச மாதிரி. இறுக்கமா மூடிக்கிடக்கு. கோவிலை வலம்வந்தும் நம்மாளைக் காணோமேன்னு விசாரிச்சேன். 'வலப்பக்கம் மூலையில் தேடு'ன்னு உத்தரவாச்சு. நம்மாழ்வாரும் ஆண்டாளம்மாவும் இருட்டு மூலையில் ஒரு விளக்குக்கூட இல்லாமல் மூடுன டபுள் கதவுக்குப் பின்னே(-:. அந்த மண்டபம் முழுசும் கண்டாமுண்டான்னு மரச்சாமான்கள் அடைஞ்சு கிடக்கு. 'நேரடியாப் புருஷன் கவனிப்பு இல்லைன்னா இப்படித்தான்'. பௌர்ணமிக்குத் திறப்பாங்களாம். 'இப்போ வேணுமுன்னா திறக்கச் சொல்லவா?'ன்னு கேட்டார் பட்டர் ஒருத்தர். (அட! நம்ம முகம் முழுநிலவு போல பொழியுதா என்ன!!!!) வேணாம். கதியைப் பார்த்தால் மனசு தாங்காது........

டாக்டர் ஃபீஸ் ஒரு பக்கமா குவிஞ்சுகிடக்கு. ப்ளாஸ்டிக் பையில் இருந்து உப்பைக் கொட்டிட்டு அந்தக் காலிப் பொதியையும் அங்கேயே கடாசிட்டுப் போகுது நம்ம ஜனங்கள். நம்ம தோழிதான் முடிஞ்சவரை அவைகளைப் பொறுக்கி ஒரு குப்பைத் தொட்டியில் போட்டாங்க. (நான்? சரிவர செய்யறாங்களான்னு சூப்பர்வைஸ் செஞ்சேன்)

சிலவருசங்களுக்கு முன்னே பிரம்மோற்சவம் சமயம் ரத்தினக்கற்கள் பதிச்ச தலை அலங்காரக் கொண்டை ஒன்னு செஞ்சு பெருமாளுக்குச் சாத்தினாங்களாம். ஜிலுஜிலுன்னு கண்ணைப் பறிச்சது. அப்பவே அதுக்கு ரெண்டுகோடி ரூபாய் செலவுன்னு கணக்கு சொன்னார் நம்ம வண்டி ஓட்டுன டிரைவர். 'கும்பி கூழுக்கு அழுது கொண்டை பூவுக்கு அழுது' ன்னு சொல்லிவச்சது சரியா இருக்கே! ஸ்வாமிக்கு நகைநட்டு போட்டா அலங்காரமா, நமக்குப் பார்க்கவும் நல்லா இருக்குன்னாலும்...... அப்பழுக்கு இல்லாம கோவிலைச் சுத்தமா வச்சு எல்லா சந்நிதிகளையும் கோவில் நேரங்களில் திறந்து வச்சு குறைஞ்சபட்சம் ஒரு விளக்கேத்தி வச்சா சாமி வேணாமுன்னா சொல்லப்போறார்?


வெளிப்பிரகாரத்துலே ஒரு உச்சி மாடம் கட்டி பிரமாண்டமான ரெண்டு வெங்கல மணிகளைக் கட்டித் தொங்கவிட்டுருக்காங்க. சமீபத்துலே செஞ்ச திருப்பணி. ஆராய்ச்சி மணி போலவே இருக்கு. கோவிலில் மற்ற சந்நிதிகளில் இருட்டில் உக்கார்ந்துருக்கும் திருவுருவங்கள் எல்லாம் இதை அடிச்சு, நியாயம் கேட்டாக்கூட நல்லா இருக்குமேன்னு எனக்கு ஒரு தோணல்.
பழைய குளத்துக்கும் இப்போ இருக்கும் குளத்துக்கும் எவ்வளோ இடைவெளின்னு அந்தப் படிக்கட்டுகளைப் பாருங்க.

வெளியே வந்து, புஷ்கரணிக்குப் போனோம். பிரமாண்டமா இருந்து, இப்போ வத்திப்போன இடமெல்லாம் குறுக்குத் தெருக்களா மாறிக்கிடக்கு. நடுவில் நீராழிமண்டபத்தோடு குளம். இப்பவுமே பெருசாத்தான் இருக்குன்னா, முந்தி எப்படி இருந்துருக்குமுன்னு மனக்கண்ணால் பார்க்கலாம். திருக்குளம் ஸ்பெஷலா, வெல்லம் வாங்கிவந்து இங்கே கரைக்கணுமாம். நம்ம மனசுலே இருக்கும் தாபங்கள் எல்லாம் வெல்லம் கரைவது போல அப்படியே கரைஞ்சு போயிருமாம். (நல்லவேளை. இன்னும் குட்டியாக் குளம் வெட்டி இருந்து அதுலேயே கொஞ்சம் பால், காப்பிப்பொடி போட்டால்........) பெரிய பெரிய நீண்ட படிகள். ஜோடிகள், கடலைகள், இப்படி இது ஒரு திருவள்ளூர் பீச். பாவமோ புண்ணியமோ எதுவானாலும் அது இங்கே பலமடங்கா விருத்தியாகுமுன்னு நம்பிக்கை. எதுக்கும் வம்பு வேணாம்? புண்ணியமாவே இருக்கட்டும்.
நீராழிமண்டபம்.

பி.கு: வெளிச்சம் குறைவா இருந்ததால் ...... மணிரத்தினம் படங்கள்'' தான் எடுக்க முடிஞ்சது:-)

31 comments:

said...

// அதனால் வைத்ய வீரராகவன். நம்ம டாக்டர் வீரராகவன், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் //
போலி டாக்டரா? பார்த்து டீச்சர் பதிவைப் படித்து அவர் மேலே கேஸ் போடப் போறாங்க.

// நான்? சரிவர செய்யறாங்களான்னு சூப்பர்வைஸ் செஞ்சேன்) //
அதான பார்த்தேன். நீங்க எப்படி குனிந்து, நிமிர்ந்து குப்பை பொறுக்குவது?

பெரிய பெரிய நீண்ட படிகள். ஜோடிகள், கடலைகள், இப்படி இது ஒரு திருவள்ளூர் பீச்.
எந்தக் கடலை டீச்சர்? சப்பிடற கடலையா, அல்லது ஜோடிகள் அறுக்கின்ற கடலையா?

படங்கள் அருமை. நல்ல பதிவு டீச்சர். நன்றி.

said...

நீங்க அழகு, அழகுன்னு சொல்லும் போது ஒரே 'J' வா இருக்கு அம்மா :( 'made for each other' தம்பதியை விசாரிச்சதா சொல்லுங்க!

said...

கனகவல்லி - அழகான பெயர் :)

said...

//நம்மாழ்வாரும் ஆண்டாளம்மாவும் இருட்டு மூலையில் ஒரு விளக்குக்கூட இல்லாமல் மூடுன டபுள் கதவுக்குப் பின்னே(-:. அந்த மண்டபம் முழுசும் கண்டாமுண்டான்னு மரச்சாமான்கள் அடைஞ்சு கிடக்கு. 'நேரடியாப் புருஷன் கவனிப்பு இல்லைன்னா இப்படித்தான்'. பௌர்ணமிக்குத் திறப்பாங்களாம். 'இப்போ வேணுமுன்னா திறக்கச் சொல்லவா?'ன்னு கேட்டார் பட்டர் ஒருத்தர். (அட! நம்ம முகம் முழுநிலவு போல பொழியுதா என்ன!!!!) வேணாம். கதியைப் பார்த்தால் மனசு தாங்காது........//

எந்த பெருமாள் கோவிலுக்கு போனாலும் ஆண்டாள் சன்னதியை மட்டும் ஸ்பெஷலா சேவிக்கறீங்களா??

said...

மணிரத்னம் படங்கள் அருமை.

said...

பெருமாள் ரஜினி மாதிரி, கார்மேக வண்ணனா இருந்தாலும் கவர்ச்சியானவன். அருமையான புராணக் கதையை சொல்லியிருக்கீங்க. அவ்வப்போது இந்த மாதிரி கதைகளை எதிர்பார்க்கிறோம்.

http://kgjawarlal.wordpress.com

said...

பி.கு விலும் சிரிக்க வச்சுட்டீங்க. ஒரே முழு மூச்சுல ஆர்வம் குறையாம படிக்க வச்சுட்டீங்க டீச்சர்.

வலது கால் முப்பது டிகிரி கோணத்துல இருக்குங்கிறதை துல்லியமா சொல்லி இருக்கீங்களே :)

முழுசும் படிச்சுட்டேன். அனுகிரகம் கிடைக்குமா டீச்சர்?

said...

நீங்க தான் நல்ல சூப்பரவைசர். :-))

said...

கொஞ்சம் நகர்ந்துடக் கூடாதே. அடுத்த பதிவு வந்திடுச்சுப்பா:)
ரொம்பப் பேருக்கு வயித்து வலி, மத்த எல்லாம் தீர்த்து வைக்கிறதுனால வைத்த்ய வீரராகவன்னு பேரு வச்சிட்டாங்கப்பா.
இப்பவும் இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்களான்னு தெரியவில்லை. எங்க குடும்பத்துக்கு இவர்தான் லீகல் வைத்யர்:)
இவர்ட்ட வேண்டிக்கொண்ட பிறகுதான் வழக்கமான வைத்தியரிடம் போவது வழக்கமாகி விட்டது.
படங்கள் வெகு அழகு துளசி. அதுவும் குளக்கரைக் காட்சிகள் உண்மையில் வண்ணக் கோலம். வாழ்த்துகள் மா.

said...

Excellent Narration.Ennaku ennamo ella perumal kovililum Aandalku intha nilamainu thonuthu.Example Srimushnam Perumal temple,mayavaram parimala renganathar.

said...

வாங்க பித்தனின் வாக்கு.


வருகைக்கும் 'ரசிப்புக்கும்' நன்றி:-)

said...

வாங்க கவிநயா.

அடுத்தமுறை போகும்போது ( கோபாலை ஒருதடவை கூட்டிக்கிட்டுப் போகணும்)கவிநயா கேட்டதாச் சொல்லச்சொன்னாங்கன்னு சொல்லிடறேன். போதுமா?:-)

அவர் 'கநகவல்லி'யாம்.

நகம்கூட அழகாத்தான் இருக்கு.

said...

வாங்க கைலாஷி.

என்ன ஆனாலும் நம்ம ஆண்டாளம்மா நம்ம கூட்டம் இல்லையோ? அந்தக் காலத்துப் பதிவர்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆமாமாம். மணிரத்னம் படங்களே 'அருமை'தான்:-))))

said...

வாங்க ஜவஹர்.

சொன்னது நிஜம்தான். ஆனால் wig செய்யறவங்களுக்குத்தான் அத்தனை புகழும்:-)

said...

வாங்க நான் ஆதவன்.

அனுகிரகத்தை அள்ளி வழங்கியாச்சு!

said...

வாங்க குமார்.

மேனேஜ்மெண்ட் ஸ்கில் இதுதான்:-)

வேலை தெரிஞ்சுருக்கணுமுன்னு அவசியமில்லை. ஆனால் வேலை வாங்கத் தெரியணும்!

said...

வாங்க வல்லி.

மனுசனுக்கு வயித்துவலி ரொம்பவே சகஜமான வியாதிப்பா.

அடுத்தவன் வாழ்ந்தா......வலியோ வலிதான்:-)

said...

வாங்க விஜி.

ஒரு சில கோவில்கள் மட்டும் எப்படியோ விதிவிலக்கா இருக்கு.

சமீபத்துலே பார்த்தவைகளில் மல்லை ஸ்தலசயனப்பெருமாள் ஒன்னு. மயிலை மாதவப்பெருமாள் ஒன்னு.

சிங்கை சீனிவாசன் கோவிலில் எப்போதும் ஆண்டாள் அருமையான அலங்காரத்துடன் இருப்பாள். கம்பிக்கதவு மூடித்தான் இருக்கும்.

ஒன்னு கவனிச்சீங்களா? ஆண்டாளுக்கு முன்னால் துளசி இருப்பாள் எல்லாக் கோவில்களிலும்.

said...

\\ஒன்னு கவனிச்சீங்களா? ஆண்டாளுக்கு முன்னால் துளசி இருப்பாள் எல்லாக் கோவில்களிலும்.
//

:-))

Don't know what to say. Arumaiyana Aanmiga tour.

said...

ஸ்தல புராணம் அருமைங்க!

said...

திருஎவ்வுள் வீரராகவர்தான் எங்கள் குலதெய்வம். ஒரு 10 வருஷம் முன்னாடி ரொம்ப பரிதாபமா இருந்தது.சமீபத்துலதான் எல்லாம் செப்பனிட்டு குடமுழுக்கு பண்ணினாங்க.

பக்த்தர்கள் தங்கள் உடல் உபாதைகள் தீர வைத்தி வீரராகவனை வேண்டிக்கொண்டு வெல்லம் கரைக்கவாவது தண்ணீர் வேண்டும் என்பதற்காக நாலு குடம் தண்ணீர் விட்டா மாதிரி திருக்குளம் இருக்கிறது. அநேகமாக தமிழகத்தில் இருக்கும் பல திருக்குளங்களின் நிலையிம் இப்படியேதான் இருக்கிறது.

அப்படியே பக்கத்துல பஞ்சமுக ஆஞ்சநேயரயும் (புதுசா கட்டியிருக்காங்க) திருமழிசை ஜெகந்நாதபெருமாளையும், ஒத்தாண்டேஸ்வரரையும் பாத்தீங்களா?

said...

டீச்சர் அருமையான பயணக் கட்டுரை.. எழுத்தில் நீங்க எங்கயோ போயிட்டீங்க டீச்சர்.. அருமையான வரைவு..!
www.unmaithamilan.blogspot.com

said...

தலைப்பிலேயிருந்து, தலபுராணம் வரை ஒரு வித லொள்ளோடு சொல்ல உங்களை அடிச்சுக்க ஆருமில்லை. சுவையாயிருந்தது.
இதே திருவள்ளூரில் ரெண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை தெப்பக்குள படியில் அமர்ந்து குன்னக்குடி கச்சேரி கேட்டது மட்டுமே நினைவிருக்கிறது.

said...

வாங்க நன்மனம்.

ஒன்னும் சொல்லத் தெரியலையா? துளசி இலை ஒன்னு வாயில் போட்டுக்குங்கோ. அனுகிரகம் உண்டு:-)

said...

வாங்க பத்மஹரி.

முதல் முறையா நம்ம வீட்டுப் பக்கம் வந்துருக்கீங்க போல!

வணக்கம். நலமா?

அடிக்கடி விஜயம் செய்யவேணும். நன்றி.

said...

வாங்க கிவியன்.

குளத்துக்கே வேலிபோட்டுச் சின்னதா ஆக்கி இருக்காங்க. அதுக்கும் பத்து லட்சம் செலவாச்சாம்.

சீக்கிரம் இருட்டிப்போகுது. ஒரு இடம் பார்த்துத்துட்டு இன்னொரு இடம் போகும் வேலையெல்லாம் இங்கே ஆறதில்லை. பொதுவா...நாலரைக்குக் கோவில் திறக்கறாங்க. ஆறுமணிக்கே கும்மிருட்டு.

போகும் வழியில் ஒத்தாண்டேஸ்வரர் கோவிலைப் பார்த்து வச்சுருக்கேன். திருமழிசைக்கு இன்னொரு நாள் அதுக்குன்னே போகணும். திண்ணனூரில் எட்டடி ராமர் இருக்காராம். அவரையும் விடக்கூடாது.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

காணாமப்போயிட்டீங்கன்னு பதறிட்டோம். நல்லவேளை மீண்டு வந்தீங்க.

எழுத்துலே எங்கேங்க போகமுடியும்?

எல்லாம் இங்கேதான் 'குதிரை ஓட்டுறேன்'

said...

வாங்க நானானி.

உள்ளூர்லே இருந்தால் அதன் உண்மையான மதிப்பு தெரிவதில்லை. மாற்றான் தோட்டத்து மல்லி மட்டுமே மணக்குது:-)


குளக்கரை அளவு பார்த்தால்..... கச்சேரிக்கு ஆம்ஃபி தியேட்டர் அட்டகாசமா இருந்துருக்குமே!

said...

கடவுளே... இந்தப் பதிவை ஏன் என் கண்ணுல காட்னீங்க டீச்சர்? நான் ஏதோ தோணினதைக் கிறுக்கிட்டு நல்லா எழுதியிருக்கோம்னு மனசுல நெனச்சுட்டிருந்தா... இங்க அழகா ஹ்யூமர் கலந்து, கையப் பிடிச்சு கூட்டிட்டுப் போய் காட்ன மாதிரி நடையில நீங்க எழுதியிருக்கறதப் பாத்ததும் இப்படிக்கூட சொல்லலாமான்னு நினைச்சு மயக்கமே வந்தடுச்சு. நான் இதுல பாதிகூட எழுதலை. அருமையோ அருமை டீச்சர்!

said...

வாங்க கணேஷ்.

எல்லாம் ! 'பெரும் ஆள்' கிருபை!