Monday, August 28, 2017

வச்சுக் கொடுப்பதில் ஒரு விசேஷம் ..... (இந்திய மண்ணில் பயணம் 48)

நம்ம லோட்டஸில்      ரொம்பப் பிடிச்ச விஷயம்   இங்கத்து ப்ரேக்ஃபாஸ்ட்தான்.   எனக்கான வடைகள் தினமும் உண்டு.  'உண்டு, உண்டு' கொழுத்துதான் ஊர் திரும்புவேன் எப்போதும். அடுத்த பயணம் வரை இது தாக்குப் பிடிக்கணும்.  வீட்டுலே வடை செய்வதை விட்டாச்சு. நம்மவர்தான் வாயாலே வடை சுட்டுடுவார் அப்பப்ப :-)
லோட்டஸின்  சென்னை 24 ரெஸ்ட்டாரண்டின் பெயரை க்ரீன்வேஸ்ன்னு மாத்தியாச்சுன்னு சொல்லி இருக்கேனோ? அது போன பயணத்துலே... 2016 ஜனவரி.
காலை எட்டேகாலுக்குத் தயாராகிக் கீழே போய்  இட்லிவடைகள் தரிசனம் ஆச்சு.  சைட் டிஷ் கொஞ்சூண்டு பைனாப்பிள் கேஸரி :-)

ஒரிஜினல் இட்லிகளை முழுங்குனதும் உடம்புக்குத் தெம்பு வந்துருச்சு. வயிறு நிறைஞ்சதும்  அலங்கார ஆசை வந்துருமே எனக்கு!   இந்தியப் பயணங்களில்  குறிப்பாச் சென்னைப் பகுதின்னா.... (இருக்கும் கொஞ்சூண்டு) கூந்தல் மலருக்கு அழும்.
தெருவில் இறங்கி எட்டிப் பார்த்தால் அதோ கொஞ்ச தூரத்துலே   கோவை பழமுதிர்நிலயத்தையொட்டியே பூக்காரம்மா கடை போட்டுருக்காங்க.

பகல் வெளிச்சத்துலே சிங்காரச்சென்னை  அழுக்கும்புழுக்குமா மின்னுது.  பூனையாரின் தரிசனமும் லபிச்சது :-)

ஞாயித்துக்கிழமை என்பதால் இன்னும் ட்ராஃபிக் ஆரம்பிக்கலை. பொடிநடையில் போய்   பழமுதிர்நிலயத்தில்  கொஞ்சம் பழங்கள், தயிர் வாங்கிக்கிட்டு அப்படியே மல்லிப்பூ!
திரும்பி வரும்போது ஒரு எட்டு சுஸ்வாதுக்குள்.   கோதுமை அல்வா, கை முறுக்குன்னு சிறுதீனிகள்.....   இன்றைக்கு விஸிட் போகும்  இடங்களுக்கு  வெறுங்கையாவாப் போறது?  தீபாவளிக்கு  வேணுங்கறதை இப்பவே ஆர்டர் கொடுத்துடலாமாம்!   ஹூம்.....    சென்னையில் கிடைக்கும் சுகங்களில் இதுவும் ஒன்னு!    கொடுத்துவச்ச மகராசிங்கப்பா.... சென்னை மக்கள்ஸ்.




பத்துமணிக்கு நம்ம    சீனிவாசன் வந்துட்டார். முதலில் போனது  வெங்கடநாராயணா சாலை... திருப்பதி தேவஸ்தானக் கோவில்!  பெருமாள்  அட்டகாசமா இருக்கார்.  நம்ம கன்ஸெர்ன்  தாயார் முகத்தில் கூட  கொஞ்சூண்டு  இனிமை வந்த மாதிரி தோணல்.  இனி கவலைப்பட்டு  என்ன ஆகப்போகுதுன்னு விட்டுட்டாங்க போல.... என்னைப்போல :-)

வந்தியாம்மா...... வா வான்னு தரிசனம் கொடுத்துக் கையில் ததியன்னமும் கொடுத்தார்னா பாருங்க!   ப்ரம்மோத்ஸவம் நடக்குது. நவராத்ரியாச்சே....      வரும் வருசக் கேலண்டர் விற்பனைக்கு வந்தாச்சு. அதுலே ஒரு நாலைஞ்சை  வாங்கினோம்.  உறவுகள் வருசம் பூராவும் நினைச்சுக்கட்டுமே :-)
அடுத்த ஸ்டாப் அண்ணன் வீடு.  நம்ம சீனிவாசனுக்கு  நம்ம உறவுகள் எல்லாம் அத்துப்படி.  பேட்டை பேரைச் சொன்னதும் வீட்டு வாசலுக்குக் கொண்டு போயிருவார்:-)

இதுவரை நடந்தது என்னன்னு   விலாவரியாப் பேசி,  பகல் சாப்பாட்டையும் முடிச்சு,  அப்புறமும் பேசோ பேசுன்னு  பேசி....  நாலு மணிக்கு  காஃபி,  சிறுதீனி முடிச்சுட்டு, பாக்கி பேச்சு இன்னொரு நாளைக்கு ஆகட்டும்னு  கிளம்பி  நம்ம அநந்தபதுமனை அடைந்தோம்.

வர்ற வழியிலேயே இருக்கும் வார்மெமோரியலை ஒருநாள் இறங்கிப்போய்ப் பார்க்கணும் என்ற  ஆசை இன்னும் நிறைவேறலை.  எப்பவும் போல் போற போக்குலேயே  ஒரு பார்வை ,  சில க்ளிக்ஸ்.  (இங்கெ நியூஸி வார் மெமோரியல் படங்களை ஒரு ஆல்பமாத் தயாரிக்கச் சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். கொசுறுத்தகவல்!)
அடையார்   ஸ்ரீஅநந்த பத்மநாபன் கோவிலில்  வேலைகள் நடக்குது.  கோவிலில் புது  ஹால் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஏற்கெனவே ஒன்னு இருக்குன்னாலும் இது மாடியில் வரப்போகும் மினி ஹால்.  இருக்குற இடத்துலேயே கோவிலை விரிவுபடுத்தணுமுன்னா வேறவழி?  ஆனால் ஒன்னு  இந்தக்கோவிலின் நிர்வாகம் அருமையா செயல்படுது.  வசூலாகும் தொகையில்  அறநிலையத்தார்  'கொள்ளை அடித்தது' போக மீதி எல்லாம் கோவிலுக்கு மட்டுமே செலவாகுது.

கொடிமரம் சேவிச்சு,  வாசல் பிள்ளையாரையும் கும்பிட்டு,  கருடாழ்வாருக்கு ஆஜர் போட்டுக்கச் சொல்லிட்டு கோவிலுக்குள் போறோம். உச்சிகால பூஜை  முடிச்சு மூடிய நடை,  திறக்கும் நேரம் இது!  மணி  நாலரை.  எப்பவும் இந்த நேரத்தில் கோவிலில் கூட்டம் இருக்காது.

நிம்மதியான உறக்கத்தில் இருக்கும் பதுமனை மனநிறைவோடு கண் நிறையப் பார்த்துட்டு, 'அவன் முன்னால்'  உக்கார்ந்து கொஞ்சநேரம் தியானம் என்ற பெயரில் அவனை   அணுஅணுவா அனுபவிச்சுட்டுப் பிரகாரம் வலம் வந்து  பெரிய, சிறிய திருவடிகள், உற்சவர்கள், தங்கத்தேர், சுதர்ஸன், லக்ஷ்மிநரசிம்மன், விஷ்ணுதுர்கைன்னு எல்லோருக்கும்  கும்பிடுபோட்டு வருகையைத் தெரிவிச்சதும் ஒரு திருப்தி வரத்தான் செஞ்சது:-)

அங்கே பக்கத்துப் பேட்டையில் இருக்கும்   நெருங்கிய தோழி வீட்டுக்குப் போனோம்.  ஹாய் ஹாய் பை பைதான் :-) அப்படியும் அங்கேயும் ஒரு காஃபி ஆச்சு.  வுடறதில்லைபா..... கொலு சமயம் வேற இல்லையா.....    குட்டியூண்டு கொலுவைப் பார்த்துட்டு,  சுண்டல் எல்லாம் இப்போ ஜூஜுபி  ஆனதை சந்தோஷமா ஏத்துக்கிட்டு,  மஞ்சள் குங்குமம் வாங்கிக்கிட்டு  (ஹல்தி குங்கும்) கிளம்பி நேராப் போனது.... சாலிக்ராமம்.

புதுத்தம்பி வீட்டு கொலுவுக்குப் போகணும். எப்போ வர்றேன்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்கார். தம்பி மகன் இப்போ எங்கூர்லே  படிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் அவருக்குப் பதிலாப் போறோம்:-)


அழகான கொலு.   முறுக்கிய மீசையோடு மிரட்டும்  பார்த்தனின் சாரதி, ரொம்பப் பிடிச்சது எனக்கு. போனமுறை சாப்பிடக் கூப்பிட்டப்ப டிமிக்கி கொடுத்ததுக்கு  இப்போ சாத்துப்படி கிடைச்சது.  (நேரமில்லாமப் போயிருச்சுப்பா) அம்மாவும் கோவிச்சுக்கிட்டாங்க.
சுண்டல் இருக்கும் கொலு  என்பதால் அதையும் முடிச்சுக்கிட்டோம்:-)
( இதை எழுதும் போது  அம்மாவின் நினைவு மனசுக்குள்....  பெருமாளிடம் போய்ச் சேர்ந்துட்டாங்க இப்போ சில மாசங்களுக்கு முன்....  )
கொலு என்னமோ பெண்கள் பண்டிகைன்னும், ஆண்களுக்கு ஒன்னுமே வச்சுக்கொடுக்கறதில்லைன்னும் சொல்லும் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கினார் தம்பி. தங்கக்கம்பி :-)
ஊரை எனக்கு நினைவுபடுத்தும்விதமா கிவி வேற !

நவராத்ரி முடிய இன்னும் ஒரே நாள்தான் இருக்கு. அதுக்குள்ளே போக வேண்டிய  இடங்களுக்குப் போய் வசூலை முடிச்சுக்கணும், இல்லே?  :-)
களைப்போடு லோட்டஸுக்கு வந்து சேர்ந்தோம். நாளைக் கதையை நாளைக்குப் பார்க்கலாம்....  ஓக்கே?

தொடரும்..........:-)


15 comments:

said...

நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சேர்த்து விடுங்க ப்ளீஸ்...

said...

கொலுவைப் பார்த்து சுண்டலும், ஜாங்கிரியும் எடுத்துக்கிட்டேன்..

said...

ஒரு நாளில் எப்படி இவ்வளவு இடங்கள் சென்றுவந்தீர்கள்? அதுவும் நண்பர்களைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் 'சாப்பிடமாட்டேன்' என்று சொல்வதே கடினம்தான். (த ம சேர்த்தாச்சு, போட்டாச்சு)

said...

எனக்கும் இப்போது கப்பலில் உங்கள் தளத்தை பார்க்க முடிகிறது. சந்தோஷம். இட்லி, வடை எனும் போதுதான் ஒரு ஏக்கம்.

said...

அடுத்த தீபாவளி வருகிறது!

அடையாறு அனந்தபத்மநாபன் கோவிலில்தான் முதல் முறை சந்தித்தேன்... அபிஷேக் ரகுராமை! எனக்கு மிகவும் பிடித்துப் போன இளைய பாடகர்!

said...

அருமை நன்றி தொடர்கிறேன்

said...

அடையாறில் க்ராண்ட் ஸ்வீட்ஸில் நொறுக்குத் தீனிகள் சுவையாக இருக்குமே

said...

Madras nalla Madras.:)

said...

சுஸ்வாதில் நெல்லை மனோகரம் நல்லா இருக்கும். பொதுவா அங்க விலை மிக அதிகம், ஆனால் neatஆ பாக்கெட்ல போட்டு வச்சிருப்பாங்க. நான் மந்தவெளி சுஸ்வாதில்தான் வாங்குவேன்.

கிராண்ட் ஸ்வீட்ஸ்-இரண்டாப் பிரிஞ்சப்பறம், குவாலிட்டி கொஞ்சம் குறைந்துவிட்டது. அவங்க, எண்ணெய் (நெய்) விட்டு பண்ணற அடையை, குழிப்பணியாரத்தைப் பார்த்தாலே 'ஹார்ட் அட்டாக்' வந்துடும்னு தோணும். அங்க எனக்குப் பிடித்தது, தேங்காய் பர்பி (எங்க அம்மா பண்ணற ஸ்டைல்ல இருக்கும்), அதிரசம்.

மற்றபடி காரம், எனக்கு எப்போவுமே பிடிக்காது. சமீப காலமா, நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் மிக்சர் பிடிச்சிருக்கு.

உங்கள் பதிவையும், ஜி.எம்.பி சார் பின்னூட்டத்தையும் பார்த்த உடனே எனக்கு எழுதத் தோன்றியது.

said...

சுஸ்வாதுக்கு இதுவரை போனதேயில்லை. எதுன்னாலும் கிராண்ட் சுவீட்ஸ், அடையாறு ஆனந்தபவன், கிருஷ்ணா சுவீட்ஸ்லயே முடிஞ்சிரும். பெரும்பாலும் அடையாறு ஆனந்தபவன். சில குறிப்பிட்ட வகைகள் (அதிரசம், சத்துக்கஞ்சி மாவு மாதிரியான) கிராண்ட் சுவீட்ஸ்.

பார்த்தசாரதிக்கு ஏன் மீசை மட்டும் வெள்ளையா இருக்கு?

said...

கொலுவைப் பார்த்ததும் கும்பகோணத்தில் பள்ளிப்பருவத்தில் எங்கள் வீட்டில் 9 படிகள் வைத்து (எங்கள் தெருவில் அதிமான கொலு பொம்மை வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று) கொண்டாடிய நாள்கள் நினைவிற்கு வந்தன. குடும்ப சூழல் என்னை கும்பகோணத்தைவிட்டுப் பிரிக்க, தஞ்சையில் தஞ்சம். மனம் சிறிது நேரம் கனத்தது. பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

said...

Thulasi sir. You came to Chennai and I missed to meet you. Are you still in Chennai ?

said...

ஆஹா சென்ற நவராத்ரி சுண்டல் இப்பதான் கிடைச்சுருக்கு - அடுத்த நவராத்ரி இன்னும் சில நாட்களில்! :) எல்லாம் எழுதணுமே! அதனால கொஞ்சம் லேட்டாயிடுது!

தொடர்கிறேன்.

said...

இனிய சந்திப்புகள்கோவில் தர்சனம் இனிய அனுபவங்கள்.

said...

நண்பர்களே,

மன்னிக்கணும். தனித்தனியாக பதில் எழுதமுடியாத நிலை.

அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.