Wednesday, August 02, 2017

சக்ரதீர்த், நைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 38)

ஒரு காலத்துலே  பனிரெண்டு  மஹரிஷிகள் சேர்ந்து, ஒரு பனிரெண்டு வருச காலம் தவம் செய்ய தீர்மானிச்சாங்க. அப்போ அதுக்கு ஏத்த இடம் எதுன்னு  பிரம்மாவிடம் போய் கேட்டதும், அவர் ஒரு தர்பைப் புல்லை எடுத்து வட்டமா சுத்தி அதை பூலோகத்தில் உருட்டி விட்டார். உருண்டு போன  அந்த வளையம் போய் நின்ன இடம்தான் இந்தக் காடு! சக்கரம் போல உருண்டோடிச்சாமே !
இடத்துக்குப்பெயர்கூட இப்படி வந்ததுதான். நேமி ன்னா சக்கரம். அது போய் நின்ன இடம் ஆரண்யம். நேமி ஆரண்யம்  இப்ப நைமிசாரண்யமா  ஆகி இருக்கு!  நமக்கு இப்படின்னா வடக்கர்களுக்கு இந்த இடம் நீம்சார்!

சக்கரம் நின்ன இடத்துலே  கூடி இருந்து தவம் செய்யறாங்க ரிஷிமுனிவர்கள்.   பனிரெண்டு வருச தவம் பூர்த்தியாகும் சமயம் தீ வளர்த்து யாகம் செஞ்சு, தவத்தின் பயனை  பெருமாளுக்கு அர்ப்பணிக்கிறாங்க. தன்னலமாக் கடவுளை  வேண்டிக்கும் பழக்கம் எல்லாம் இல்லாத காலம் அது! எனக்கு இது கொடு, அது கொடுன்னு இல்லாம எல்லாமே  உலகமக்கள் நன்மையை வேண்டி  மட்டுமே!

(எனக்குக் கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. அவனுக்குக் கொடுத்துறாதே!)

நாராயணனே  வேள்வியில் இருந்து வந்து   படையலை ஏத்துக்கிட்டார்.  அப்போ  இந்தக் காட்டில் தோன்றியவர் இங்கேயே  இருக்கார்னு  ஐதீகம். இவரைத்தான்   நம்ம திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்களில் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.

நமக்கு ஷ்யாம் மோஹன் இருப்பதால் கவலையே இல்லை.  சக்ரதீர்த் போறோம்.
சக்கரம் போய் நின்ன இடம் இதுதான்னு  சொன்னாங்க. வாசலில் ஒரு  ஆஞ்சி சந்நிதி.  வடக்கத்து  ஆஞ்சி என்பதால் சிந்தூரத்தில் இருந்தாலும், கண்ணும் மூக்குமா முகம் ரொம்பவே அழகு!   தன்னுடைய  நெஞ்சில் சீதாராமர் இருக்காங்கன்னு  காமிக்கிறார். அவர்கூடவே  சின்னதா ஒரு  வெண்பளிங்குப் புள்ளையார்.   ஆஞ்சிக்கு ரெண்டு பக்கமும் பெரிய வெங்கல மணிகள் தொங்குது.  சங்கிலியில் பூட்டு!  சாமிகிட்டேயே திருடும் கூட்டம் இருக்கு பாருங்க  !
சக்கரதீர்த்தத்துக்குன்னே தனியா நுழைவு வாசல். சக்ரதீர்த் த்வார்!


சின்ன வாசலாத் தான் தெரிஞ்சது. கடந்து உள்ளே போனால்....  ஹா.... பெரிய  மண்டபத்தில்  மரக்கட்டில் / மரபெஞ்சுகளாப் போட்டு வச்சுருக்காங்க. அநேகமா ஒவ்வொரு பெஞ்சுக்கும் ஒரு பண்டிட் இருக்கார் போல!

பக்தர்களுக்கு  வேண்டிய எல்லா பூஜை புனஸ்காரங்களையும் நடத்திக் கொடுக்கறாங்க. வளாகம் ரொம்பவே பெரூசு.  வெளியே இருந்து பார்த்தால் பிரமாண்டம் தெரியாதவகையில் பரந்து கிடக்கு!

வளாகத்தின் நடுவில்  பெரிய  குளம்!  நடுவில் வட்டமா ஒரு அமைப்பு. சக்ரம்!  இதுக்குள்ளேயும் தண்ணீர்தான்.    சக்ரதீர்த்(தம்) ! மொத்தக்குளத்துக்குள் வட்ட  அமைப்பை இறக்கி வச்சது போல் இருக்கே! வெளியே வட்டத்தைச் சுற்றி இருக்கும்  தீர்த்தத்தில்  பக்தர்கள் இறங்கி தண்ணீரில் நடந்து  வலம் வர்றாங்க.  வட்டத்துக்குள் இறங்காதீர்னு எழுதி வச்சுருக்காங்க அந்த வட்டச் சுவரில்!
இந்த இடத்தின் இன்னொன்னு சொல்லிக்கறேன். கேள்விப்பட்ட சேதிதான். இந்த பெரிய குளத்தின் நட்ட நடுவில் ஆழம் காணமுடியாத ஒரு நீர் ஊற்று இருக்குன்னும், இதுதான் பூமிப் பந்தின் நடு சென்டர்ன்னும் சொல்றாங்க.
வெள்ளையர் ஆண்ட காலத்தில், இந்த நடுப்பகுதி எவ்ளோ ஆழமுன்னு அளக்கறதுக்காக ஒரு தொரை (!)  நீளமான கம்பியை  அதுக்குள்ளே இறக்குனதாகவும், அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கே தவிர தரையைத் தொடவே இல்லைன்னும், அதுவரை அனுப்புன கம்பியின் நீளமே மூவாயிரத்து முன்னூறு அடின்னும்,  இனி முடியாதுன்னு  முயற்சியைக் கைவிட்டதாயும் சொன்னாங்க.  சம்பவத்தை உறுதிப்படுத்த  ஒரு வெள்ளைக்காரனைக் கோர்த்து விட்டாச்சு.
வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டானாமே!  

குளத்துக்குள் இறங்கச் சுற்றிலும் படிகள், படிகளுக்கு வெளியே சுற்றிலும் சந்நிதிகள்னு  மொத்த வளாகமும் ஜேஜேன்னு இருக்கு!
வியாஸ மஹரிஷி தொடங்கி,    ஆஞ்சி,   பெருமாள், மஹாலக்ஷ்மி, ராதாவிஹாரி, காயத்ரி,   மஹாதேவ் இப்படி  ஏகப்பட்ட சந்நிதிகள்.

பக்தர்கள்  குடும்பம் குடும்பமா வந்து  பூஜை புனஸ்காரங்களைப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எல்லாம் வெளியூர் பக்தர்கள்தான்!  கொண்டு வந்துருக்கும் மூட்டை முடிச்சுகளை வச்சு ஒரு யூகம்!

சக்ர தீர்த்  என்னும் பெயருக்குப் பொருத்தமா அங்கங்கே சக்ர வடிவில் அலங்கார அமைப்புகள்.  வாசல் கேட்டில்கூட சக்ர வடிவம்!  எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

வெளியே வந்து இன்னொருக்கா அந்த அழகிய ஆஞ்சியை தரிசனம் பண்ணிக்கிட்டு  வேற இடத்துக்குப் போறோம்.PINகுறிப்பு:  என்னுடைய  வழக்கம்போல் நீண்ட பதிவுகளாக இல்லாமல்  ரொம்பச் சின்னச்சின்னதா இருக்குன்னு  துளசிதளத்தின் புரவலருக்கு    ரொம்பவே   ஆதங்கம்!

என்ன செய்ய...   இது இப்படித்தான்  எழுத முடியும்!    எல்லாக் கோவில்களையும் சேர்த்து எழுத வேணாம்... தனித்தனியா இருக்கட்டுமுன்னு நான் எடுத்த முடிவு இது. மேலும்... நடந்தது நடந்தபடி என்னும்போது... இவ்ளோதான் நடந்ததுன்னு இருக்கேன் :-)    

 இந்த    நைமிசார் முடியட்டும்.....  நம்ம  பாரதத்தை வச்சுக்கலாம்  :-)

தொடரும்.........  :-)

20 comments:

said...

சுவாரஸ்யமான தகவல்களையும் கண்கவர் படங்களையும் ரசித்து...

தொடர்கிறேன்.

said...

சக்கர தீர்த்தத்தைத் தரிசித்தோம். த ம . வளாகத்தில் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. தொடர்கிறேன்.

said...

நடு சென்டர் = நல்ல சொற்றொடர். இதே மாதிரி - பேப்பர் காகிதம். என் நண்பர் இந்த மாதிரி பல வார்த்தைகளைச் சொல்வார்.

said...

சக்கர தீர்த்தம் மிகஅழகாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் நவக்கிரி என்ற இடத்தில் நிலா வரைக்கும் ஆழமானது என சொல்லப்பட்ட ஆழ்கிணறுஇருக்கிறது.இது தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப்பட்ட நவசைலேஸ்வரம் என பலரும் நம்பும் சிவன் கோவில் அருகில் இருக்கிறது.
இராமபிரான் தனது வானரைபடைகளின் தாகம் தீர்க்க எய்திய அப்பால் தோன்றியது என்ற கர்ண பரம்பரை கதையும்உண்டு.
இதை ஆராய்ச்சி செய்த பிரித்தானிய செக்கோசிலாவி ஜேர்மனி ஆய்வாளர்கள் 382'க்கும் ஆழமானது என உறுதி செய்துள்ளார்கள் இங்கும் வெள்ளையர்தாம்:)
என்றும் வற்றாதகிணறு நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

said...

சக்கர தீர்த்.....

இடமும், தகவலும், படங்களும்.....

அனைத்தும் அருமை..

அஞ்சிநேயர் ரொம்ப அழகு...அந்த அங்கி கூட...

said...

சக்ரதீர்த்.... சிறப்பு. வழக்கம் போல் படங்கள் சொல்லும் கதைகள்....

தொடர்கிறேன்.

said...

//எனக்குக் கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. அவனுக்குக் கொடுத்துறாதே//

நம்ப வீட்டில கரண்டு போனால் 'உங்க வீட்டுலேயும் போயிடுச்சான்னு?' பக்கத்து வீட்டுல கேட்டு கான்ஃபோர்ம் பண்ணிக்குவோமே, அவிங்களும் 'ஆமா' ன்னு சோகமா சொல்லும்போது ஒரு ஆனந்தம் பிறக்குமே, that moment ......


// சாமிகிட்டேயே திருடும் கூட்டம் இருக்கு பாருங்க !// மன்னிப்பு ன்னு கால்ல விழுந்த போச்சி. In corporate world, its said - easy to get apologized than to get approval.


said...

சக்ர தீர்த் படங்களும் தகவலும் அருமைம்மா

said...

என்னை மாதிரியே கதைகளை நீங்களும் ரசிப்பீர்கள் போலும்

said...

வாங்க ஸ்ரீராம்,

ரசனைக்கும் தொடர் வருகைக்கும் நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

கேட்டுக் கதவு கூட இருக்கு :-)

said...

வாங்க மாதேவி.

ஆஹா.... புதுத் தகவலுக்கு நன்றி!

நீர்ப்பாசனத்துக்குப் பயன் படுவது சிறப்பு. இங்கே அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். இதே வளாகத்துலே இன்னொரு சின்னக் குளம் (பெரிய தண்ணீர்த்தொட்டி போன்ற செயற்கைக் குளம்) பாசி பிடிச்ச தண்ணீரோடு இருக்கு. ப்ரம்மா உக்கார்ந்துருக்காரே அந்த செயற்கைக் குளம்தான் ..... அதுலே தண்ணீர் நிரப்பியிருக்கலாம் தானே?

said...

வாங்க அனுராதா ப்ரேம்.


எனக்கும் ஆஞ்சியை ரொம்பவே பிடிச்சுப்போச்சுப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

செல்லப்பெட்டியைத் தூக்கிப்போனால் கனம் அதிகம். அதான் சின்னக் கெமெராவில் படம் எடுக்கறேன். உங்கள் படங்கள் போல் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதே உண்மை !

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

இப்பெல்லாம் சாமி கிட்டே பேரம் பேசறது அதிகமாயிருச்சு. உலக நன்மையை யாரும் கண்டுக்கறதில்லை.... ப்ச்....

said...

வாங்க ராஜி.

மிகவும் நன்றிப்பா.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நம்ம வீட்டுலே என்னைவிட கதையை ரசிப்பவர் கோபால்தான். அவருக்காகவே கதை கேட்டு இங்கே எழுதி வைக்கறேன் :-)

said...

கதைக்கு வெள்ளைக்காரனையும் கூட்டுச் சேத்துக்கிட்டாங்களா... ஹாஹாஹா... ஆனா பாருங்க, மூவாயிரத்து முன்னூறு அடி கம்பியை உருவாக்கும் அறிவியல் வெள்ளைக்காரன் காலத்துல இருந்திருந்திருக்குமான்னு யோசிச்சாலே போதும். உருண்டையான ஒரு கோளத்தில் எல்லாப் புள்ளியுமே நடுப்புள்ளிதாங்குற அடிப்படை அறிவை மறந்துட்டதன் பிரச்சனை இதுதான். எஸ்பானிய நாட்டுல மாத்ரித் நகர்ல கிலோமீட்டர் சீரோ-ன்னு ஒரு இடம் இருக்கு. பூமியின் மையப் பகுதி அதுதான்னு அவங்க சொல்லல. அப்புறம் ஏன் கி.மி.0? ஏன்னா... அவங்க அந்த எடத்துல இருந்துதான் ஒவ்வொரு எடமும் எவ்வளவு தூரம்னு அளந்தாங்க. அதுனால அந்த எடத்துக்கு அப்படியொரு பேரு.

வடக்க பயன்படுத்துற நிறங்கள்ளாம் கண்ணுல பளிச்பளிச்சுன்னு அடிக்குது. இராமராஜன் நிறங்கள்.

கடைசில இருக்கும் மந்தி அழகு.

said...

வாங்க ஜிரா.

கோளத்தில் குத்தும்போது நேரா கீழே வரை குத்தாம ஓரத்துலேயே கம்பியை விட்டா வெளியே வந்துறதா? :-)

இந்த செயற்கை சரிகை வந்தாலும் வந்தது.... ஒரே பளபளாதான் !

எனக்கும் அந்த குரங்கு பிடிச்சது. எப்படியாவது போங்கன்னு கண்ணை மூடிக்கிட்டு இருக்கு... அதுக்குப்பின்புறம்தான் வளாகத்தில் இருக்கும் பெண்களுக்கான உடைகள் மாற்றும் அறை !!!