Wednesday, August 09, 2017

ஸ்ரீ நைமிஷ்நாத் (இந்திய மண்ணில் பயணம் 41)

கடவுள் இருக்காண்டான்னு சொல்லத்தான் வேணும். பாலாஜி கோவிலில் பார்த்த கோவில்கள் பட்டியலை க்ளிக்கி இருந்தேன். அதை ரீ வொய்ன்ட் செஞ்சு  பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  ஷ்யாம் மோஹனின் வழி காட்டுதலில் வண்டி போய் நின்னது  இன்னொரு கோவிலில்.




வெளியே  வாசலில் ஒரு  வெற்றித்தூண் போல ஒன்னு.  அதில் நம்ம ராமர் அண்டு கோ முழுசுமா இருக்காங்க. ஸ்ரீ ராம்தர்பார் கி ஜெய் னு ....   இதே மாதிரி தூண் ஒன்றை நம்ம காசிப் பயணத்தில் பனாரஸ் யுனிவர்ஸிட்டி வளாகத்தில் இருக்கும்  தோட்டத்தில் பார்த்திருக்கோம். இங்கேதான்    பிர்லா கட்டிய காசி விஸ்வநாதர் கோவிலும் இருக்கு.  
கோவில் வாசலுக்குப் போனால் இன்ப அதிர்ச்சி! ஸ்ரீ நைமிஷ்நாத் பகவான்!     திவ்யதேசக் கோவில்னு  வாசல் முகப்பில் போர்டு!  ஆஹா...  பெருமாளே.....   நீ இருக்கேடா.... ஐ லவ் யூ.....
நிறைய தூண்களோடு சின்ன மாளிகை போல முன்மண்டபம்.  கருவறையில் கண் திறந்த பெருமாள் நின்ற கோலத்தில்!  முன்னால் உள்ள மேடையில் பெருமாளும் தாயார்களுமா உற்சவர்கள். மூலவர் தேவராஜன் என்ற தேவநாராயணன். சந்நிதி வாசலில் ஜயவிஜயர்கள் இதுவரை நான் பார்க்காத  ரூபத்தில்!


இவருக்கு  வலப்பக்க சந்நிதி தாயார்  ஸ்ரீஹரிலக்ஷ்மி என்னும் புண்டரீகவல்லி.  தாயார் சிலை  பஞ்சலோகமுன்னு நினைக்கிறேன். சேடியர் மட்டும் பளிங்குச்சிலைகளாகக் கையில் சாமரத்துடன்.  மஞ்சள் பட்டில் தாயார்  கொள்ளை அழகு!


அலங்கார மண்டபத்தில் தாயாருக்கு  வலப்பக்கம் ஒரு ராமர் பட்டாபிஷேகப்படமும், இடப்பக்கம் பளிங்கு ஆஞ்சியுமா ......  நல்ல தரிசனம். அதுவும் நமக்கு ஏகாந்த ஸேவைதான் !

கருடவாஹனம் ஒன்னு இருக்கு.  கொஞ்சம் பெரிய வடிவம்தான் பெரிய திருவடிக்கு!
பெருமாள் சந்நிதிக்கு இடப்பக்கம் ராமானுஜரும், திருமங்கை ஆழ்வாருமா தரிசனம் கொடுக்கறாங்க!
பட்டர் மஹேஷ்வர் மித்ரா, கற்பூர ஆரத்தி காமிச்சு,  தீர்த்தம் , துளசி, சடாரி எல்லாம் கொடுத்தார்.  நாம் தமிழ்நாட்டுக்காரர்கள் என்றதில் ரொம்பவே சந்தோஷமாம். படம் எடுத்துக்க அனுமதியும் கிடைச்சது.  அப்புறம் வெளியே வந்து அவரே(ப்ரகாரம்) சுற்றியும் காட்டினார்.


கோவில் விமானம் எட்டிப் பார்க்கிறது !   ஸ்ரீஹரி விமானமாம்!
 உள்ளே கோவில் முன்மண்டபத்து சுவரில் நம்ம திருமங்கை ஆழ்வாரின் பத்து பாசுரங்களும்  பளிங்குக் கல்வெட்டில் இருக்கு. எல்லாம் ஹிந்தி மொழியில்தான்.





வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன் அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன் பிறவி    நோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனே மாயா! வானவர்க்கரசனே! வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்ற எற்றிவைத்து, எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையைப் பாவீ ! தழுவெனமொழிவதர்க்கஞ்சி,
நம்பனே.! வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால்படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல்கிடந்தாய்!,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்!


நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய!.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா!  தானவர்க்கென்றும் நஞ்சனே!,
வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே.! திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்!,
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத் தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே.

  திருமங்கை  ஆழ்வார் மட்டும்தான் இங்கே வந்து தரிசனம் செய்து  அவருடைய வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  ஆழ்வார்களிலேயே அதிக எண்ணிக்கையில் திவ்யதேசக் கோவில்களுக்குப் போய் பெருமாளைக் கண்டு ஆனந்தம் அடைஞ்சு  பாசுரங்களாப் பாடித்தள்ளியவர் இவர் மட்டும்தான். மொத்தம் 86  கோவில்களுக்கு  வந்துருக்கார்.

இங்கே வந்ததும் அவருக்கு என்னவோ தன் செய்கைகள் ( கலியனாக இருந்த காலத்து?) மேலேயே எதோ மனக்குறை வந்துருக்கு போல....  தன் குற்றங்களையெல்லாம்  மன்னிக்கச் சொல்லிக் கரைந்துருகி  பாடி இருக்காருன்னா பாருங்க.

பிரகாரம் வலம் வந்து கோவில் வாசலுக்கு வந்தப்ப அடுத்திருக்கும் மண்டபத்தில் மாதாஜி இருந்தாங்க. மாதாஜி சுதர்ஸன் தாஸி.  வணங்கினதும் ஆசி வழங்கினாங்க.  இங்கேயே ராமானுஜகூடத்தில்தான்  தங்கி இருந்து சேவை செய்யறங்க இவங்கெல்லாம்.  ..... எதோ பெருமாள்தான் படியளக்கிறார்...
 கோவிலும் பரிசரமும் பார்த்தால் செல்வச் செழிப்பையே காணோம்.  திவ்யதேசக் கோவிலுக்கே இந்த கதியான்னு தோணுச்சு. இத்தனைக்கும்  பெருமாள் தானே   சுயம்புவாகத் தோன்றிய  எட்டு  ஸ்வயம்விக்த க்ஷேத்ரங்களில் இதுவும் ஒன்னு.
திவ்யதேசக்கோவில் கட்டடமா ஆதிகாலத்துலே இல்லைன்னாலும்... இப்போ  கோவில் இருக்கு. நமக்கும்  இங்கே வர்றதுக்கு  அருள் செய்த பெருமாளின் அளவில்லாத கருணையை  நினைச்சு  மனம் ஒரு நிமிசம்  இளகுனது உண்மை.
ரொம்பவே மன திருப்தியோடு இங்கிருந்து புறப்பட்டோம்.  பெருமாளே.... பெருமாளே....

தொடரும்............   :-)


18 comments:

said...

படித்தேன், ரசித்தேன், தொடர்கிறேன்.

said...

திவ்யமான தரிசனம்.

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

said...

தூண் போன்ற அமைப்பைப் பார்த்ததும் இங்குள்ள கலியபெருமாள் கோயில் நினைவிற்கு வந்தது.

said...

நல்ல தரிசனம். தொடர்கிறேன்.

திருமங்கை ஆழ்வார், தன் வாழ்நாளை பெண்களுக்காக வீண்டித்துவிட்டேனே என்று வருந்தி (பெருமாள் தரிசனம் கிட்டியபின்) திவ்யப்ப்ரபந்த பெரியதிருமொழி ஆரம்பப்பாடலாக "வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்.... கூடினேன் கூடி இளையவர் தம்மொடும் அவர்தரும் கலவியே கருதி" என்னு ஆரம்பிக்கிறார். முதல் பாடலில் (பத்து) தஞ்சை மாமணிக் கோவில் வருகிறது. வாணிலாமுறுவல் 5ம் பாடல் (நைமிசாரண்யம்) அதற்கு முன்னாலேயே "கலையும் கரியும் பரிமாவும்" என்று முக்திநாத்தைப் பாடுகிறார்.

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

படங்கள் அருமை.

வடநாட்டு கோவில் இவ்வளவு சுத்தமாவா இருக்கு..

said...

வேணும்னு மனசுக்குள்ள உறுதியா நினைக்கிற விஷயங்கள் நம்ம கிட்ட எப்படியாவது வந்து சேந்துரும். அப்படித்தான் இந்தக் கோயிலும் உங்களுக்குக் கிடைச்சிருக்கு.

வழக்கமா வடமொழி சுலோகங்களை தமிழில் எழுதிப் பாத்திருக்கேன். தமிழ்ப் பாசுரத்தை இந்தியில் எழுதி வெச்சிருக்குறது மகிழ்ச்சியா இருக்கு.

said...

உங்கள் தயவால் வடக்கே இருக்கும் கோவில்கள் பற்றி அறிய முடிகிறது நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.


வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தென்னிந்திய வகைத் தூண்கள்தான், இல்லையோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ராஜி.

பரவாயில்லாமல் எல்லாக் கோவில்களும் தமிழ்நாட்டுக்கோவில்களை விட சுத்தம் என்றுதான் சொல்லணும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

எனக்கும் பார்த்தவுடன் அப்படித்தான் தோணுச்சு. தமிழை ஹிந்தியில் பார்க்கிறோமேன்னு !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எதோ என்னையும் கூப்பிட்டு தரிசனம் தருபவனையும், அவன் இருக்குமிடங்களையும் கொஞ்சமாவது சொல்லத்தானே வேணும்!

எல்லாம் நான் பெற்ற இன்பம் வகை!

said...

திவ்ய தேச கோவில் காணக்கிடைத்தது

said...

வாங்க மாதேவி.

மிகவும் நன்றிப்பா !