Friday, August 04, 2017

மா லலிதா தேவி....... சக்தி பீடம் (இந்திய மண்ணில் பயணம் 39)

கடைவீதி போல ஒரு இடம்.  பூஜைக்கான பொருட்கள் விற்கும் கடைகள்தான் எல்லாமே!     கார்பார்க்ன்னு     ஷ்யாம் மோஹன் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்திட்டு  சாலையைக் கடந்து எதிரே போனால்  லலிதா தேவி மந்திர். சக்தி பீடக் கோவில்!  இருக்கும் கூட்டத்தை வச்சுப் பார்த்தால் இதுதான் ஊரின் முக்கிய கோவிலாக இருக்கணும்.


ரெண்டுபக்கமும் இருக்கும் கடைகளுக்கு நடுவில் நடந்து உள்ளே போகும் பாதையில் போனால் பெரிய வளாகத்தில் ஏகப்பட்ட கட்டடங்கள். உள்ளே பெரிய அரசமரத்தடி மேடையில்   சின்னதா சில சிலைகள்.  மக்கள் கூட்டம் அதிகமாவே இருக்கு.



இங்கே இடது பக்கக் கட்டட வரிசையில்  நடுநாயகமா  ஸ்ரீ லலிதாம்பிகைக்கு ஒரு கோவில்.  உள்ளே போய் லலிதா தேவியை ஸேவிச்சுக்கிட்டோம்.
தக்ஷயாகமும், தாக்ஷாயிணியின் கதையும்  உங்களுக்கு  நம்ம துளசிதளத்துலேயே வேற சில பயணங்களில் விஸ்தாரமாச் சொல்லியாச்சு என்பதால்.... தெரியாதவர்கள்  இப்போ இந்தச் சுட்டிகளில் போய் பார்த்துக்குங்க.... நேரம் இருந்தால்!

குடும்பச் சண்டை



மாமானார் வீட்டில் ஆட்டம்



சக்தி பீடக் கோவில்களின் எண்ணிக்கைதான்  வெவ்வேற இடங்களில் வெவ்வேற விதமா இருக்கு. 108, 64, 51 இப்படி. அதுலே வேறெங்கேயும் போகமுடியலைன்னாகூட....  ஆதி சக்திபீடமுன்னு நாலு இடங்கள் இருக்காம். அங்கெயாவது போய் வாங்கன்னு சொல்றாங்க.  அப்புறமும்,   சப்த சக்தி,அஷ்ட சக்தி, நவ சக்தின்னு  முக்கிய பீடங்கள்னு ஒவ்வொருத்தரும் சொல்றதைப் பார்த்தால்..... எனக்கு தலை சுத்தல்தான்.

நம்ம காஞ்சி காமாக்ஷியம்மன் கோவிலுமொரு சக்தி பீடக் கோவில்தான் கேட்டோ!  அது தேவியின் ஒட்டியாணம் விழுந்த இடமாம்!  (இது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு!) 
(இப்பதானே  அந்த இடத்தில் நின்னப்பக் கொடுத்தேன். மறுபடியும் நாலடி நடந்து வந்து கேட்டால் எப்படி? )

இங்கே லலிதா தேவி கோவிலில்  தாக்ஷாயிணியின் உடலில் எந்த பாகம் விழுந்ததுன்னு சரியாத் தெரியலை. இதயம்னு  சொல்றாங்க. இது உண்மையாக இருக்கலாம்.  பக்திபூர்வமா வரும் பக்தர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது. இதயம். இதய தெய்வம்!  ஒரு பத்து வருசத்துக்கு முன்னால் ஒரு பக்தர், தேவிக்குத் தன் உயிரையே காணிக்கையாக் கொடுத்துட்டார்னு  செய்தி.  வேண்டுதல் நிறைவேறிடுச்சுன்னு,    இங்கே வந்து தன் கழுத்தை  அறுத்துக்கிட்டாராம்!  (அம்மாடியோவ்.....  )

இப்பக்கூட இங்கே வரும் பாதையில்  கீழே விழுந்து சாஷ்ட்டாங்கமா நமஸ்கரிச்சுக்கிட்டே  ஒரு பக்தை  விழுந்து எழுந்துன்னு  வந்துக்கிட்டு இருக்காங்க. பக்தின்றதுக்கு ஏது எல்லை?

இன்னொரு புராணக் கதையும் லலிதைக்கு இருக்கு.  ப்ரம்மா  தன் மனோமயச் சக்கரத்தை உருட்டி விட்டாரில்லையா....   அது வேகமாப் போற போக்கில் பாதாள லோகத்தில் இருக்கும்  நீர்நிலைகளையெல்லாம் அடிச்சுத் தள்ளிக்கிட்டுப்  போகுது. இதென்னடா வம்பாப்போச்சுன்னு  ஆதி சக்தியிடம் போய் முறையிடறார்.  சக்தி தானே தோன்றி சக்கரத்தைச் சட்னு   நிறுத்துனாங்கன்னும்,  சக்கரம் நின்ன இடத்தில் பாதாளத்துத் தண்ணீர் அப்படியே பொங்கி வந்து  பெரிய  கடல்  போல  குளமா ஆயிருச்சுன்னும் சொல்றாங்க. அப்போ இங்கெ வந்த அம்பாள்  , இங்கேயே  கோவில் கொண்டுட்டாள்னும்,  இங்கே யாகம் செய்ய வந்த எண்பத்தியெட்டாயிரம் ரிஷிமுனிவர்களையும்  காத்து அருள் செய்தாள்னும் ஒரு  பேச்சு!

அமாவாசை, பௌர்ணமி தினங்களில்  சக்ர தீர்த்தத்தில் புனித நீராடி லலிதாம்பிகையை  வழிபட்டால்  செஞ்சபாவம் அனைத்தும் போயே போச் என்பதால்  மேற்படி தினங்களில் இன்னும் கூட்டம் அம்மும்னு  நம்ம ஷ்யாம் மோஹன் சொல்லிக்கிட்டு வந்தார். நல்ல வேளை நாம் போன நாள் சஷ்டிதான். இதுக்கு என்ன பலன்னு தெரியலையே......

நிறையப்பேர் குழுக்களாப் பயணிச்சு வந்துருக்காங்க போல.  அங்கங்கே முடிச்சு முடிச்சாக் கூட்டம். இங்கேயும் தனிப்பட்ட வகையில்  பூஜை, புனஸ்காரங்கள் நடத்திக் கொடுக்கறாங்க .......  பண்டிட்டுகள்!
மா லலிதா தேவி லிங்கதாரிணி தரிசனம், நாம் எதிர்பார்க்காம லபிச்சது,  மனசுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

இன்னொரு விஷயம் தெரியுமோ?   மொத்த  நைமிசாரண்யத்திலும்  அம்பாளுக்கான கோவில் இது ஒன்னுதான்.  பெண்தெய்வத்துக்கான தனிக்கோவில் வேறேதும் இல்லை!

நம்ம காஞ்சிபுரத்திலும்  காமாக்ஷியம்மன் கோவிலைத் தவிர வேறெங்கும் ( காஞ்சியில் உள்ள சிவன் கோவில்களில்) அம்மனுக்குன்னு  தனி சந்நிதி  கிடையாது பாருங்க....  அதே மாதிரியே இங்கேயும்!!!!

அதென்னமோ  ஒரு  இடத்தில் ஒருசமாச்சாரத்தைக் கேட்டாலோ பார்த்தாலோ  உடனே  அது சம்பந்தமாவோ, இல்லை ஏறக்கொறைய அதே போலவோ இருக்கும் இடங்கள் ஞாபகத்துக்கு வந்து  கொசுவத்தி சுத்தும்படியா ஆகிருது.  சரின்னு அதோட விடுவேனோ?   நம்ம வாசகர்களுக்கும் கொசுவத்தி சப்ளை செய்யாட்டி மனசுக்குத் திருப்தி இல்லை கேட்டோ :-)

மொத்த நைமிசாரண்யத்தையும்  வலம் வரணுமுன்னா   16 கிமீ தூரம்  நடக்கணும்.  பரிக்ரமா செய்யும் மக்களும் இருக்காங்கதான்.  நாம்தான் நோகாம நோம்பு கும்பிடும் வகை ஆச்சே.... :-(


கடைகளையெல்லாம் தாண்டி கார் நிறுத்தத்துக்குப் போய்ச் சேர்ந்த   அஞ்சு நிமிஷத்தில்  நம்ம ஷ்யாம் மோஹன் வழி காட்டுதலில் பெருமாளிடம் போய்ச் சேர்ந்தோம்  :-)

தொடரும்...........  :-)


16 comments:

said...

// நாம்தான் நோகாம நோம்பு கும்பிடும் வகை ஆச்சே.. //
ஆமாங் டீச்சர். நீங்களாச்சு காரெடுத்துக்கிட்டு போய் தரிசனம் செய்யறீங்க. நானோ ......... எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம்.

said...

படங்கள் அருமைம்மா

said...

உங்களுடன் சக்தி பீடம் வந்தோம் பதிவின் வழியாக. நன்றி.

said...

"மொத்த நைமிசாரண்யத்திலும் அம்பாளுக்கான கோவில் " தரிசிக்க கிடைத்தது மகிழ்ச்சி.

said...

இந்தக் கோவிலை சேவித்த ஞாபகம் வரலயே. சாஷ்டாங்க நமஸ்காரத்தைப் பார்க்கும்போது, திருப்பதி மலை ஏறும்போது, ஒவ்வொரு படியிலும் குங்கும்ம், சந்தனம் பூசி, கற்பூரம் ஏற்றி ஏறிவந்த பக்தர்களைக் கண்ட ஞாபகம் வந்தது. நீங்க சொல்றமாதிரி பக்தி என்பதற்கு எல்லை கிடையாது.

எனக்குப் பிடித்த பூசணி இனிப்போடு (பேடா?) தொடர்கிறேன்.

said...

எனக்கு புரிவதே இல்லை. எது பக்தி எது நம்பிக்கை எது கதை அப்பப்பா போதுமடா சாமி

said...

நாம பேசுறது கடவுளுக்கு கேக்குமா கேக்காதான்னு மக்களுக்குத் தெரியுறதில்ல. சாதாரணமா பேசுறது கேக்காட்டியும் உடலை வருத்தி பக்தியை வெளிப்படுத்தும் போது கவனிக்க மாட்டாரான்னு ஒரு ஏக்கம். அதுதான் மக்களை இப்படியெல்லாம் நடந்துக்க வைக்குது. இது சரி தப்புன்னு விவாதிக்கலாம். ஆனா மக்கள் அறிவுக்கும் பக்திக்கும் ஒரு வரைமுறை வெச்சுக்கிறது நல்லது.

சக்தி பீடங்கள் எத்தனைன்னு கணக்கு பாக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வீடும் சக்தி பீடம் தான். தாயின் கருணையை விட பெரிய சக்தி என்ன இருக்கப் போகுது? பெண்ணின் பொறுமையை விட என்ன பெரிய சக்தி இருக்கப் போகுது?

said...

மிதமிஞ்சிய பக்தி - வ்ருந்தாவன் பரிக்ரமா செல்லும் சில பக்தர்கள் 108 நமஸ்காரம் ஒவ்வொரு இடத்திலும் செய்து - பரிக்ரமா செய்பவர்கள் உண்டு - மொத்த பரிக்கரமா முடிக்க மாதக் கணக்கில் ஆகும்!

உங்கள் வாயிலாக நானும் கண்டு களித்தேன். பல இடங்களில் இப்படி சக்தி பீடங்கள் - கணக்கு என்ன என்று புரிவதில்லை!

said...

வாங்க விஸ்வநாத்.

நம்ம ஆழ்வார்களில் பலரும் ஞானக்கண்ணால்தான் திவ்யதேசங்களை தரிசனம் செஞ்சுருக்காங்க.

எனக்கு ஊனக்கண் தரிசனம்தான்.... அவ்ளோ ஞானம் இருந்துட்டாலும்.............. ஹஹ

said...

வாங்க ராஜி.

ரசித்தமைக்கு நன்றிப்பா!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர் வருகைக்கு நன்றிகள் !

said...

வாங்க மாதேவி.


ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு... அதுவும் பெண்ணே பெண்ணு !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நைமிசாரண்யத்தின் முக்கிய கோவிலே இதுதானாம்! வைஷ்ணவர்கள்தான் பெருமாளைத் தேடிக்கொண்டு வர்றாங்க போல !

எனக்கும் Petha ரொம்பப் பிடிக்கும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மனுஷ்யன் சிருஷ்டிச்ச மதங்களில் கதைகளுக்குப் பஞ்சமா என்ன?

நம்பிக்கை, பக்தி எல்லாம் அவரவர் மனதின்படி!

said...

வாங்க ஜிரா.

//சக்தி பீடங்கள் எத்தனைன்னு கணக்கு பாக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வீடும் சக்தி பீடம் தான். தாயின் கருணையை விட பெரிய சக்தி என்ன இருக்கப் போகுது? பெண்ணின் பொறுமையை விட என்ன பெரிய சக்தி இருக்கப் போகுது?//

ஹைய்யோ!!

எவ்ளோ சிம்பிளாத் தெளிவுபடுத்திட்டீங்க !!!! ஆஹா....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோவர்தனகிரியில் இப்படி பரிக்ரமா செஞ்சுக்கிட்டு இருக்கறவங்களைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்!

சக்தி பீடம் பற்றி நம்ம பதிவர் ஜி ராகவன் சொன்னதைப் பார்த்தீங்களா?

எவ்ளோ சத்தியமான உண்மை!!!