அடடா.... எதைச் சொல்ல ஆரம்பிச்சாலும் திரும்பத் திரும்ப இந்த 2011 இல் 'நடந்து' போன(!?) நிலநடுக்கத்தின் அழிவு மையத்தில்தான் வந்து நிக்கவேண்டி இருக்கு:(
ஏற்கெனவே மக்கள் நிலைகுலைஞ்சு போய், அழுது அழுது அதனாலேயே, மனம் கெட்டிப்பட்டு, ஸ்மசான வைராக்கியம் போல் ஏதோ ஒரு வைராக்கியத்துக்கு ஆளாகிட்டோம். ஆனாலும் மனசு உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டுத்தான் கிடக்கு.
நம்பிக்கை இல்லாமல் குனிஞ்சு கிடக்காதே, 'நிமிர்ந்து நில்' என்று சொல்வது போல இந்த வருசக் கோடை காலத்துக்கு, முக்கியமா பள்ளிக்கூட விடுமுறையில் இருக்கும் பசங்களுக்காக( பெரியவங்களுக்கும்தான். பின்னே யார் கூட்டிப்போவா?) ஒரு ஆர்ட் ப்ராஜெக்ட் Standing Tall Christchurch என்ற பெயரில் உண்டாக்கிக் கொடுத்துருக்கு நம்ம சிட்டிக் கவுன்ஸில். ( இங்கே சிட்டிக்கவுன்ஸில்கள்தான் நம்மூர் மாநில அரசு போல் செயல்படும்)
இன்னொரு வகையில் பார்த்தால் , இடிபாடுகளை எல்லாம் நீக்கியாச்சு. புதுக்கட்டிடங்கள் வளரத் தொடங்கியாச்சு. நகரம் உயரமாக எழுந்து நிற்கட்டும் என்றும் வச்சுக்கலாம்.
மனுசனைத்தவிர உயரமா தலை நிமிர்ந்து நிற்கும் ஜீவராசின்னு பார்த்தால் அது ஒட்டைச் சிவிங்கிதான்.இல்லே?
Wild in Art என்ற வகையில் ஒரு ப்ரிட்டிஷ் கலை நிறுவனத்தின் உதவியுடன் முதலில் 49 பெரிய அண்ட் 50 சிறிய ஒட்டை சிவிங்கிகளை இறக்குமதி செஞ்சாங்க. பளிங்கு உருவம்போல் ஜொலிக்கும் ஃபைபர் க்ளாஸ் சமாச்சாரம் . பெருசு ஒவ்வொன்னும் ரெண்டரை மீட்டர் உசரம்.
உள்ளூர் ஓவியக் கலைஞர்களைக் (ஆர்ட்டிஸ்ட்கள்! வெளிச்சத்துக்கு வந்தவர்களும் இதுவரை வராதவர்களும் இதில் சேர்த்தி ) கூப்பிட்டு ஆர்வம் இருப்பவர்கள் ஆளுக்கொரு ஒட்டைச்சிவிங்கியை அலங்கரிக்கலாமுன்னு சொன்னாங்க. தனியா செய்ய முடியாதுன்னா நண்பர்களா சேர்ந்துக்குங்கோ!
சித்திரங்களை வரைவது மட்டுமில்லாமல் கண்ணாடி ஒட்டுதல், ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தல், இப்படி அவரவர் மனோதர்மங்களுக்கு நேர்ந்து விட்டாங்க. நகர்முழுசும் எங்கெங்கே ஒட்டச்சிவிங்கி வைக்கப்போறாங்கன்னு சொல்லிட்டதால் கலைஞர்கள் இடத்துக்கு ஏற்றமாதிரியும் கற்பனைகளை முடுக்கி விட்டாங்க.
இந்த ஒட்டைச் சிவிங்கிகளை பெரிய நிறுவனங்கள் ஸ்வீகாரம் எடுத்துக்கிட்டு அவைகளுக்கு ஆன செலவை ஸ்பான்ஸர் செஞ்சாங்க.
சின்னப்பசங்களை எல்லாம் சின்னப்பசங்களை விட்டே அலங்கரிக்கச் சொல்லியாச்சு. பள்ளிக்கூடங்கள் 'எனக்குத் தா எனக்குத்தா'ன்னு சொல்லி வாங்கி வச்சு அவரவர் பள்ளியில் இருக்கும் கலை ஆர்வம் மிக்க மாணவர்களைக் கொண்டே அலங்கரிச்சாங்க.
அலங்காரங்கள் முடிஞ்சதும் ஒட்டைச் சிவிங்கிகளை ஊரெல்லாம் அங்கங்கே கொண்டு போய் நிக்க வச்சாச்சு! அப்புறம்?
இதுக்குன்னு நவீன யுக கணினி வசதிகளில் ஒரு ஆப்ஸ் போட்டு வச்சு, மக்களே..... ஊர் முழுசும் போய் அங்கங்கே இருக்கும் ஒட்டைச்சிவிங்கிகளுடன் படமெடுத்து எங்களுக்கு அனுப்பி வையுங்கன்னதும் இளைஞர் கூட்டம் 'ஆஹா' ன்னுச்சு. சின்னப்பசங்களும் வீட்டில் மற்ற பெரியோர்களின் துணையுடன் ஒட்டச்சிவிங்கி படம் எடுத்து அனுப்புவதில் கில்லாடி ஆனாங்க!
இதுவரை பார்க்காத நகரின் மூலை முடுக்குகளுக்குப் பயணம் தொடங்குச்சு. ஊரில் எந்தெந்தப் பேட்டையில் எத்தனை ஒட்டைச்சிவிங்கிகள் இருக்கு. அங்கே போக வழி என்ன என்றெல்லாம் விலாவரியாப்போட்டு ஒரு ட்ரெய்ல் மேப்.
சம்மர் டைம்ஸ் ஆக்டிவிட்டியா நாங்களும் அங்கங்கே போய் ஒட்டைச்சிவிங்கி பார்த்துப் படம் எடுத்துக்கிட்டு இருந்தோம் என்றாலும் இந்த தொன்னுத்தியொன்பதையும் பார்க்க நேரமில்லாமல் போச்சு. மகள் ஒன்னுவிடாமல் போய்ப் பார்த்து படம் எடுத்து அனுப்பினாளாம். ஆஹா...வீட்டுக்கு ஒரு ஆள் போதாதா?
மொத்த ஒட்டைச்சிவிங்கிகளின் படங்களுடன் போஸ்ட் கார்ட்கள் (ஒரு 66 கார்டுகள் உள்ள பொதி 49 + 17. சின்னப்பசங்களுக்குத் தனி கார்ட் இல்லை! )
போட்டு எங்கூர் கஸீனோ அவுங்க ஸ்பான்ஸார் செஞ்சு அங்கே வாசலில் வச்சிருக்கும் பொன் ஒட்டச்சிவிங்கியைத் தரிசிக்க வரும் மக்கள்ஸ்க்கு தானம் செஞ்சுக்கிட்டு இருக்கு.
பொன்னா? ஆமாம். அவுங்ககிட்டே காசா இல்லை, தங்க நிற பெயிண்ட் வாங்க:-))))
Sculpture Trail...Souvenir Guide ஒன்னு போட்டு அவ்வஞ்சு டாலர்னு வித்துக்கிட்டும் இருக்காங்க. எல்லாக் காசும் தர்மத்துக்குப் போகுது என்பதால் மக்கள்ஸ் தயக்கமே காட்டலை இதையெல்லாம் வாங்க!
அதென்ன வெறும் தொன்னுத்தியொம்பது? இன்னொன்னு சேர்த்தா முழுசா செஞ்சுரி அடிச்சுறாதுன்ற 'தொலை நோக்குப் பார்வையில்' உள்ளூரில் குவிஞ்சுருக்கும் கட்டிடத்தொழிலாளர்கள் ( நகரை மீண்டும் நிர்மாணிக்க எக்கச்சக்கமான கட்டிடத்தொழிலாளர்கள் வந்து குமிஞ்சுருக்காங்க. பிலிப்பீனோஸ் மட்டுமே இருபதாயிரம் பேர்! ) நூறாவது ஒட்டைசிவிங்கியை தங்களிடமிருந்த பொருட்களால் உருவாக்கி வச்சுட்டாங்க!!!!
சூப்பர்மா!!!
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டா கிராம், இலவச டௌன்லோட் செஞ்சுக்கும் ஆப்ஸ் (ஆப்பிளுக்கும் ஆன்ட்ராய்டுக்கும்) இப்படி சகல விதங்களிலும் இடம்பிடிச்சு படங்கள் அனுப்பச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த ஜனவரி 24 தான் கடைசிநாள்.
அப்புறம் என்ன ஆச்சு?
எல்லா ஒட்டைச் சிவிங்கிகளையும் வண்டியிலே ஏத்திக்கொண்டுபோய் எங்கூர்லே இருக்கும் ஒரு கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் அடுக்கி வச்சுருவாங்களாம். வர்ற ஞாயித்துக்கிழமை பிஃப்ரவரி 8 ஆம் தேதி நாம் போய் மந்தையைப் பார்வையிடலாம்.
பனிரெண்டாம் தேதிக்கு பெருசுகள் ஏலத்தில் போகுது. ஏலத்தில் கிடைக்கும் வருமானத்தில் முக்கால் பங்கை Life Education Trust, Child Cancer Foundation, Life in Vacant Spaces, Gap Filler என்ற நாலு தர்ம ஸ்தாபனங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துருவாங்க. மீதி கால்வாசி? இறக்குமதி செஞ்ச செலவுன்னு ஒன்னு இருக்கே..... அதுக்கு!
சின்னதுகளை எல்லாம் அதுகளை அலங்காரம் செஞ்ச பள்ளிக்கூடங்களுக்கே தானம் கொடுத்துருவாங்க.
எனக்குப் பிடிச்ச ஐடியா!
இவ்ளோ நாளா அங்கங்கே கண்ணுலே தெம்பட்டுக்கிட்டு இருந்தவைகளை மிஸ் செஞ்ச உணர்வு இப்போ!
ஊர்சனத்தை மகிழ்விச்சதுக்கு டேங்கீஸ் ஒட்டைச்சிவிங்கிகளே!
PIN குறிப்பு: ஓடியோடி எடுத்த படங்களைப் பதிவெங்கும் நிமிர்ந்து நில் என்று 'நிக்க' வச்சுருக்கேன், பார்த்துக்குங்க:-)
இதுலே எனக்கு ரொம்பப் பிடிச்சது உலகத்தையே உடம்பில் சுமந்துக்கிட்டு இருக்கும் இதுதான்:-)