Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Monday, November 04, 2019

கிச்சா முதல் வெங்கி வரை !!!!!!(பயணத்தொடர், பகுதி 164 )

நம்ம பயணம்  முடிவுக்கு வரும் நேரம்  இது. இன்னும் ஆறு நாட்கள்தான்  இருக்கு. உறவினர்களை ஒரு வட்டம் பார்த்தாச்சு. இன்னொருக்காப் போகணும். உற்றார், நண்பர்களை  வரும் நாட்களில் சந்திக்கணும். நமக்கு நேரம் இருக்கும்போது, அவுங்க பிஸி. அவுங்க வரேன்னு சொல்லும்போது, நாம்  வெளியூரில்.....   இப்படித்தான் ஒவ்வொரு பயணங்களிலும்..... ப்ச்....
இந்த ஆறு நாட்களை முறையாப் பயன்படுத்தினால்  ஓரளவு  சமாளிக்கலாம். இன்றைக்கு நம்ம க்ருஷ்ணனின் டியரஸ்ட் தோழியைச் சந்திக்கணும். அதுக்கு முன்னால் ஒரு சில வேலைகளை முடிச்சுக்கணும். அப்படியே தோழி இருக்கும் ஏரியாவில் 'நம்ம தேவைகள்' இருக்குமிடங்களுக்கும் போய் வந்துடணும்.   முக்கியமா , தோழி வீட்டில் இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.

கடந்த ரெண்டு வாரமா 'நம்மவருக்கு' உடல் நிலை கொஞ்சம் சரியில்லை.  எதுக்கும் நம்ம டாக்டரைப் பார்த்துடலாமுன்னு 'ஸில்வர் பார்க்' போனோம்.   அவுங்களும் ஒரு ப்ளட் டெஸ்ட் செஞ்சுருங்கன்னு எழுதிக் கொடுத்தாங்க. தி நகர்  ஏரியாவே என்பதால்  உடனே போனோம்.  சாயந்திரமா ரிப்போர்ட் தருவாங்களாம். அதை உடனே கொண்டுவந்து  காண்பிக்கச் சொன்னாங்க டாக்டர்.  ரத்தம் கொடுத்துட்டு (!) நேரா  மயிலை.

நம்ம சீனிவாசன் இல்லாததால்  வண்டி ஒன்னும் வச்சுக்கலை.  கால்டாக்ஸிதான்.  போகும்போதே தோழிக்கு ஒரு ஃபோன்.  வீட்டில்தான் இருக்காங்களாம்.  எவ்ளோ பெரிய எழுத்தாளர். எவ்ளோ ப்ரசித்தம். எத்தனை புத்தகம், எத்தனை பத்திரிகை, என்ன ஒரு கலைகள் எல்லாம் கைவரப் பெற்றவர் ! இவ்வளவுக்கும்  கொஞ்சமே கொஞ்சூண்டு  தலைக்கனம், கெத்து  இருக்கப்டாதோ?   ஊஹூம்.....  மனம் முழுக்க இருக்கும் அன்பு முகத்தில் ஜொலிக்க, ஓடிவந்து கதவைத் திறந்தாங்க.
அடுப்பிலே பால்... பொங்கி வழியப்போகும் விநாடி.... சட்னு அடுப்பை அணைச்சதும்தான் எனக்கு உயிர் வந்தது....  கண்டுபிடிச்சுருப்பீங்களே  ...... இவுங்க யாருன்னு!  க்ளூ:   பால், பொங்கும்பால் :-)
நம்ம வித்யா சுப்ரமணியம் அவர்கள்தான்!  பூஜை அறையில்  மாயக்கிருஷ்ணனின் அருள் பரிபூரணமா நிறைஞ்சு வழியுது! என்ன ஒரு அழகு இவன் !!!  கண்ணைக் கட்டி அப்படியே இழுத்துருவான்! உண்மையில் இவனுக்கப்புறம்தான் எல்லாமே  கண்ணில் படும் வகையில்தான் வீட்டின் அமைப்பே இருக்கு !
லயன் உம்மாச்சி பார்த்ததும் குழந்தை ஸாதிகா நினைவு !

காஃபி  தரட்டுமான்னு கேட்டதும்  காய்ச்சினபால் நமக்காகக் காத்துருக்கேன்னு சரின்னேன். அட்டகாசமான காஃபி ! கிச்சா முன்னால் உக்கார்ந்து கொஞ்சநேரம் கதை பேசினோம். கேரளபாணி சித்திரக்கலையில் அட்டகாசமான படங்களை வரைஞ்சு தள்ளி இருக்காங்க. எதைச் செய்தாலும் திருத்தமா, அழகாச் செய்யறதில்  இவுங்களை அடிச்சுக்க முடியாது!  இவுங்க நட்பு கிடைச்சதும் 'அவன்' அருளே!  நல்லா இருக்கட்டும் !
வித்யாவுக்கு அப்புறம் விஜயா.....   சென்னையில்  ஷாப்பிங் கிளம்பினால், நகைக்கடை, துணிக்கடைகளை விட இந்த விஜயா ஸ்டோர்ஸ்தான் எனக்கு ரொம்பவே பிடிச்ச கடை.  எப்பப் போனாலும் புதுசுபுதுசா ஏராளமாக் கொட்டிக்கிடக்கும். என்ன ஒன்னு..... ஒரு முறை வாங்கிப்போனது ரொம்ப நல்லா இருக்கேன்னு அடுத்த முறை அதே பொருளைத் தேடினால் இருக்காது. புதுசு புதுசா வேறெதாவதுதான் இருக்கும்.  எனக்கு 'நாமம்' வாங்கிக்கணும். நாஞ்சொல்லலே.... யார் நம்ம வீட்டுக்கு வந்தாலும் நாமம் போட்டுருவேன்னு.... அந்தக் கணக்கில் எவ்ளோதான் ஸ்டாக்  வாங்கிப்போனாலும் தீர்ந்துருது.  பழைய ஸ்டைலில் ரொம்பக் குட்டியா அழகா இருப்பதெல்லாம்  இப்ப வர்றதில்லை(யாம்) கிடைச்சது கொள்ளாமுன்னு வாங்கிக்கணும். விலை வேற வருஷாவருஷம்  ரொம்ப ஏறிக்கிட்டே போகுது. நாப்பது ரூபாய்க்குக் காசு மாலை வாங்குனதெல்லாம் அந்தக் காலம், கேட்டோ !


கொஞ்சமா நகைநட்டுகளையும்,  ஒரு சின்ன அம்மனையும் எடுத்துக் கூடையில் வச்சேன். 'நம்மவருக்கு'  திடுக் !   'இருக்கறதுலேயே சின்னது இது'ன்னு சொல்லிக்கிட்டே இடத்தை விட்டு நகர்ந்துடணும்.  அப்புறம்  அந்த சைஸ் அம்மனுக்கான முகம். ஆச்சு நம்ம பர்ச்சேஸ். ரொம்ப அழகா இருந்தாள் !

அடுத்தாப்லே இருக்கும் சரவணபவனில்  லஞ்ச். (வடக்கு மாட வீதி ) அறைக்குத் திரும்பினதும் 'தெய்வா'  நம்மைப் பத்தி விசாரிச்சதா  வரவேற்பில் சொன்னாங்க.  இதே லோட்டஸில்தான்  தங்கி இருக்காங்களாம். அட!  உடனே அவுங்க அறைக்குக் கனெக்ட் பண்ணச் சொல்லிப் பேசினால்.... நாம் இருக்கும் அதே தளத்தின் மறு கோடி. அடுத்த ரெண்டாவது நிமிட், நம்ம அறைக்கு வந்தாங்க.
டாக்டர் தெய்வா, விஞ்ஞானி ! ( அஞ்ஞானியை   சந்தித்த விஞ்ஞானின்னு தலைப்பு மனசுலே வருது இப்போ ! ) Ecologist & Ecosystems Management Specialist, நாட்டின் பல பாகங்களில் வேலை. நியூஸி விஸிட் வரப்போறாங்கன்னதும்  ரொம்ப சந்தோஷமா இருந்தது.  இப்ப ஆகஸ்ட் ஆச்சே. ஜனவரியில் வாங்கன்னு சொன்னேன்.  எங்க கோடை அப்போதான். நிம்மதியா ஊர் சுத்தலாம் .  முதல்முறை நேரில் சந்திக்கறோம் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை.....  அவுங்களும் பிஸிதான். அப்புறம் பேசலாமுன்னு திட்டம்.

சாயங்காலம் அஞ்சரைக்குக்  கிளம்பி போற வழியில் கீதாவில் ஜஸ்ட் ஒரு காஃபி மட்டும். 'லேப்' லே போய்  ப்ளட் ரிஸல்ட் வாங்கினதும், ப்ரியா க்ளினிக்.  டாக்டர்  பவானி பார்த்துட்டுப் பயப்பட ஒன்னும் இல்லைன்னு மருந்து எழுதிக் கொடுத்தாங்க. ஒரு வாரம் சமாளிச்சுக்கிட்டு, ஊருக்குப்போய் இன்னொருக்கா பரிசோதிச்சுக்கணும்.

நம்ம  வீடியோ கேஸட்ஸ்லே இருப்பதை, டிவிடியா மாத்திக்கொடுக்கச் சொல்லி இருந்தோமே.... அதைப் போய் வாங்கிக்கணும். ஒரு டிவிடிக்கு ஐநூறுன்னு சொல்லி இருந்தார். அங்கே போனால்.....  60 நிமிட் வரும் டிவிடியில் ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கார்.  ஏழு கேஸட் கொடுத்துருந்தோம். இருபத்தியாறு டிவிடி பண்ணி வச்சுருக்கார்.  நல்லவேளை.... முப்பது நிமிட் அளவுன்னு அம்பத்தியிரண்டு பண்ணலை......   என்னமோ போங்க..... யாரை நம்பறது.....

நம்ம குமாரின் ஃபேன்ஸி ஸ்டோர் மாடியில் இருக்கும்  Zenith Photo Studio வுக்குப் போய் டிவிடிக்களை வாங்கிக்கிட்டு, 'நம்மவரின்' பென்ட்ரைவைக் கொடுத்தோம். அதிலும் பதிஞ்சு தர்றேன்னார்.  புகைப்படக்காரர் ஆனந்திடம், நம்ம கேமெராவைக் கொடுத்து ஒரு படம் எடுக்கச் சொன்னேன். அட! நல்லாத்தான் வந்துருக்கு!  நானும் பதில் மரியாதை பண்ணியாச்:-)

மணி ஆறேமுக்கால்தான். பெருமாளைப் பார்த்துட்டு வரலாமுன்னு  வெங்கடநாராயணா ரோடு போனால்....  வாசலில் என்னவோ ஹோமம் பண்ண குண்டங்கள் எல்லாம் இருக்கு.  பெருமாள்  தரிசனம் ஆனதும்  பார்த்தால்...   உள்ளே ஹாலில் கதாகாலக்ஷேபம் நடக்குதாம்.  ராஜலக்ஷ்மி & பார்ட்டின்னு போட்டுருக்கு.  நம்ம ரஜ்ஜுவின் நினைவு வந்ததும்  மனம் கசிஞ்சது உண்மை. பாவம்... குழந்தை எப்படி இருக்கானோ?

கல்லூரி மாணவி நிவேதிதாவின் ஹரிகதை. சின்னப்பொண்ணுப்பா....  அருமையாச் சொன்னாங்க.!

நாங்க கடைசி வரை இருந்து கேட்டோம்.  நன்றி நவிலல்  சொன்னாங்க  டீச்சர் ராஜலக்ஷ்மி. கோலசரஸ்வதி வைஷ்ணவ் ஸீனியர் செகன்ட்ரி ஸ்கூல் ! இந்தப் பெயரை முதல்முறையா இப்பத்தான் கேள்விப்படறேன்.  சென்னைக்கும் நமக்கும் தொடர்பு  1974 இல் விட்டுப்போயிருச்சே......    போய் வந்துக்கிட்டு இருந்தாலும் நாட்டுநடப்பு ஒன்னும் சரியாத் தெரியலையேப்பா.....  பள்ளிக்கூடம் ஆரம்பிச்சது 1975 லேயாம் !

இப்போ ஸ்ரவண் மாசம் நடப்பதால்  (தமிழ் மாசம் ஆடி ) தினமும் எதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குது  திருப்பதி தேவஸ்தானக் கோவிலில். நாளைக்கு ஜாகீர் ஹுஸைன் உபன்யாசம்னு  தகவல் பலகையில் பார்த்தேன்.  தப்லா வாசிக்கிறதை விட்டுட்டாரா என்ன?
இன்னொருக்காப் பெருமாளை தரிசனம் பண்ணிட்டு,  ரெண்டு கட்டடம் தள்ளி இருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் போய் கொஞ்சம் இனிப்பு, காரம் வகைகளை வாங்கினோம்.  நாளைக்குக் கொஞ்சம் விஸிட்ஸ் உண்டு.  இங்கேயே அடுத்தஹாலில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டில்  போளியும், இளநீருமா டின்னரை முடிச்சுட்டு லோட்டஸ் வந்தோம்.

ஓ..............   வாட் அ லாங் டே............

 உண்மையாவே டயர்டா இருக்கு.
நாளைக் கதையை நாளைக்குப் பார்க்கலாம்.

குட்நைட்.....

தொடரும்.......... :-)


Monday, February 02, 2015

ட்ரெஸ் கோட் வந்துருச்சாம், திருமலையில்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 18)

'நாளைக்குக் காலையிலே கிளம்பணும்.  கொண்டு போகும் சின்ன சூட்கேஸில் உனக்குத் தேவையானவைகளை எடுத்து வச்சுரும்மா. புடவை ரெண்டு மூணு கட்டாயம்  இருக்கட்டும்.  ட்ரெஸ் கோட் இருக்காம் 'என்று சொல்லி பயமுறுத்திக்கிட்டு இருக்கார்  கோபால்.

கேரளப் பயணம் போக முடிவு செஞ்சதுலே இருந்தே  தினம் 'புடவை,  புடவை, ட்ரெஸ் கோட்' எல்லாம் கேட்டுக்கேட்டே காது புளிச்சுப்போனது உண்மை. ஒரு முண்டு செட்டும் கொண்டுபோயிருந்தேன்.

புடவை ஒன்னும் பிரச்சனையே இல்லை.வில்லியாக இருப்பது ப்ளவுஸ்தான்.   தீர்வும் அப்பவே  கண்டுபிடிச்சுட்டேன்!  நல்லா ஒர்க்கவுட் ஆகுது.  குட்டிச்சாத்தான் வேலை!

சுட்டி வேலை செய்யலையோன்னு ஒரு சம்ஸயம்.   இதைப் பாருங்க நேரம் இருந்தால்....
http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_04.html

//பிரச்சனைன்னு வந்தபிறகு அதுலே இருந்து தப்பிக்க வழி தேடும் மனசு, ஒரு ஐடியாவைக் கண்டு பிடிச்சது. தேவைகள்தானே கண்டுபிடிப்புகளின் தாய்! கேரளா முண்டு பாரம்பரிய உடைதானே? அதை எடுத்துக்கிட்டுப் போகலாம். தேவைப்பட்டால் சல்வார் மேலேயே அடிமுண்டு சுத்திக்கிட்டு, மேல்முண்டை தாவணியாப் போட்டுக்கலாம். அப்ப ப்ளவுஸ்? நோ ஒர்ரீஸ். அதான் கமீஸ் போட்டுருக்கோமே!!!!! சரிகை முண்டு என்பதால் ப்ளவுஸுக்கு எந்தக் கலரும் ப்ரிண்டும் ஓக்கே:-) கட்டிப் பார்த்தேன். ரெண்டே நிமிஷம். பர்ஃபெக்ட்!//



ஆளுக்கொரு கேபின் பேக். மற்ற பெரிய பெட்டிகளை  இங்கே லோட்டஸிலோ இல்லை அண்ணன் வீட்டிலோ வச்சுட்டுப் போகலாம் என்ற எண்ணம்.

இந்தப்பதிவு எழுதும் சமயம் நம்ம கோபால் எதோ ஒரு தெலுகு சானல் போடப்போய்  அதுலே திருப்பதிக்கு ட்ரெஸ் கோட் என்னன்னு வரிகள்  ஸ்கிரீன் அடியில் போய்க்கிட்டு இருந்துச்சு.  புடவை  ஓக்கே. சுடிதார்  வித் துப்பட்டா  ஓக்கே. ஸல்வார் கமீஸ் வித் துப்பட்டா ஓக்கே.  அப்ப துப்பட்டாவில் தான்  இருக்கு,  சூக்ஷ்மம் :-)    பாவடையுடன்  தாவணி கட்டாயம் இருக்கணுமாம்.  ஹாஃப் ஸாரீஸ்.  அப்ப  சின்னக்குழந்தைகள்  பட்டுப்பாவாடையுடன் தாவணி போட்டுக்கணும். பிஞ்சுகள் கவுன் நோ வா?  ஹூம்.... பழங்காலத்து சிற்பங்கள்,  சித்திரங்களைப்  பார்த்து  ட்ரெஸ் கோட் வைக்கலை என்பதே இப்போதைய ஆறுதல். மார்க்கச்சை  வேணுமுன்னு கச்சை கட்டுனாங்கன்னா  நாம் அம்பேல்:-))))


இந்த வருசத்தின் முக்கிய திட்டம், கேரள மாநிலத்திலிருக்கும் திவ்ய தேசங்களை தரிசிப்பது. அதுக்கான திட்டம்'தீட்டிக்கொண்டு' இருந்தப்பதான்  மதுரை தமிழ்ப் பதிவர் மாநாட்டு சமாச்சாரமும் கிடைச்சது.

பயணத்திட்டத்தில்  இருந்த  சேலம்,  திருச்செங்கோடு,நாமக்கல், கரூரை கழற்றிவிட்டுட்டு மதுரையை சேர்த்துக்கிட்டோம்.  ஞாயிறு மாநாடு என்பதால் சனி மாலை மதுரை போய்ச் சேரும்படியான திட்டம்.

இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நம்ம அநந்தபதுமனை ஸேவிச்சு, பயணச் சேதியை சொல்லிட்டு வரணும்.  அடையாறு கிளம்பினோம். தி. நகரில் ரெண்டு தெரு தாண்டிக்கிட்டு  இருக்கும்போதே நம்ம  கண்ணாடிக்கடைக்கு ஒரு ஃபோன் போட்டு கண்ணாடி ரெடி செய்ய ஒரு நினைவூட்டல் கொடுத்தால்.... கண்ணாடிகள்   தயாரா இருக்குன்னாங்க.   மதியம் போய் வாங்கிக்கணும்.

 இப்போ பெருமாள்! அடையார் அனந்த பத்மநாபன்!

வழக்கம்போல் ஹாயா தாய்ச்சிண்டு  மேலே  கண்களை நட்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கார்!  ஹை அண்ட்  பை சொல்லிட்டு, வழக்கம்போல்  தர்மபரிபாலன சபாவை எட்டிப் பார்த்தால் பயங்கரக்கூட்டம். கோவிலில் இருந்து  அந்த ஹாலுக்குப்போகும் கம்பிக்  கதவு மூடி வச்சுருக்கு. என்னன்னு பார்க்கணுமேன்னு வெளிப்புறம் சுத்திக்கிட்டுப்போகும்போது விஷயம் தெரிஞ்சது. இன்றைக்கு கந்தசஷ்டி விழாவின் ஆரம்பநாள்.


கல்யாணவீட்டு வரவேற்பு போல் சந்தனம், குங்குமம், விபூதி, கல்கண்டு எல்லாம் வச்சு கூடவே அன்றைக்குப் பாடப்போகும் திருப்புகழ் பதிகங்களை அச்சடிச்ச  தாள்.  ஒரு பத்து பதினைஞ்சு பாட்டுகள் இருக்கு அதில்.





ஹாலில் வரிசைகளில் மக்கள் தரையில் உக்கார்ந்திருக்காங்க. இந்தப்பக்கம் சில வரிசை நாற்காலிகளில் மூட்டு கேஸ்கள்.  ஒரு அரைமணி போல நாமுமிருந்து  சில பாட்டுகளைக் கூடவே பாடிட்டு(?!) ஏற்கெனவே சொல்லி வச்சுருந்தநேரத்துக்கு  அலைகள் அருணா சீனிவாசன் வீட்டிற்குப்போனோம். இதே அடையார்தான். இவுங்க இண்டியன் எக்ஸ்ப்ரெஸில் எழுதறாங்க. நம்ம மரத்தடி காலத்தோழி!

இங்கே(யும்) தீபாவளி இனிப்புகளை உள்ளே தள்ளினேன். பெருமாளே..... டாக்டர் வீலருக்கு சேதியைச் சொல்லிறாதே.  இவுங்க  நியூஸியில் நம்ம ஃபேமிலி டாக்டர். நல்லவேளை தமிழ் படிக்கத்தெரியாது அவுங்களுக்கு:-)

அரட்டைக் கச்சேரியை முடிச்சுட்டு,  லேட்டிஸ் ப்ரிட்ஜ் சாலையிலிருக்கும்  லைட்டுக் கடைகளில் ஒரு ரெண்டு மூணு கடைகளுக்குப்போய் குத்து விளக்குக்கான மின்சாரவிளக்கு தேடினோம். இங்கேயும் கிடைக்கலை:(

மதிய சாப்பாடு மயிலை சரவணபவன். கோபாலுக்குத் தாலி. எனக்கு பூரி:-)

அப்படியே பக்கத்தில் இருக்கும் விஜயா ஸ்டோர்ஸ். சாமிக்கான சாமான்களை வாங்கிக்கணும். தனித்தனியா கடைக்குன்னு கிளம்பாம போற போக்கில் எந்தக் கடைகள்  கிடைக்குதோ அங்கெ போய்த் தேடினால் சிலசமயம் கண்டடைவோம். கலசத்துக்கு வைக்கும்  அலங்காரத் தேங்காய் கிடைச்சது.நகைநட்டு ஒன்னும் சரிப்படலை.  கல்வச்ச நாமங்களும், கண்களும் ஆப்ட்டது:-)  இன் னும் பலருக்கு நாமம் போட வேண்டித்தான் இருக்கு நம்மூட்டில்!

அறைக்கு வரும்வழியில்  தோழி வீடு அடுத்த ஸ்டாப்.  செட்டில் ஆயிட்டாங்களான்னு  பார்த்துட்டு பைபை சொல்லிக்கணும். இன்னும்  ஒரு பதினேழு நாளைக்குப் பார்க்கமாட்டோமே:-(

வரப்போகும் விசேஷத்து ஏற்பாடுகளில் ரொம்ப பிஸியா இருக்கும் நேரம் என்றாலும் நமக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினாங்க.

அவுங்க வீட்டிலிருந்து கிளம்பி எல்டாம்ஸ் சாலை வழியா வரும்போது ஒரு வீட்டின் முன் நிறையக் கூட்டம். டிவி சேனல் ஒன்னு  பெரிய வேன் வச்சுக்கிட்டு  என்னமோ ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. டிவி சீரியலோன்னு பார்த்தால்.... இல்லையாம்.  பழைய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் வீடு அதுன்னு நம்ம சீனிவாசன் சொன்னார்.  அப்புறம்  மாலையில்தான் டிவி போட்டப்ப  அவர் சாமிகிட்டே போன விஷயம் தெரிஞ்சது:(


பொதுவா  நீண்டகாலமாக  ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுபவர்களுக்கு  முக்கிய புள்ளிகள் வீடெல்லாம் (சின்னவீடு உட்பட!)  தெரிஞ்சிருக்கு. போறபோக்குலே இது இன்னார்வீடுன்னு  சொல்றது வழக்கம்:-)


அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கிட்டு  மறுபடி அக்குப்ரெஷர் டாக்டர் ஜெயலக்ஷ்மியை  பார்க்கப் போனோம். வரச்சொல்லி இருந்தாங்களே.  நேத்து மாலை முதல் காதுகளைக் கிள்ளிக்கிள்ளித் தோள்வலி கொஞ்சம் குறைஞ்சுதான் இருந்துச்சு.


இன்றைக்கு  இன்னும் சில புள்ளிகளைக் குறிச்சுக்கொடுத்து  அழுத்தம் கொடுக்கச் சொன்னதுடன்,  மோதிரம் ஒன்னும் கொடுத்தாங்க.  அதெப்படி ரெண்டு ஆளுக்கு ஒன்னுன்னு இன்னொன்னும் கேட்டு வாங்கினோம்:-)  இதை கை விரல்களில் (பின்னே? மோதிரமாச்சே!) போட்டுக்கிட்டு  விரலில் ஒவ்வொரு கணுவிலும் மும்மூணுமுறை உருட்டணும்.  நரம்புகளில் அழுத்தம் கொடுப்பதோடு ரத்த ஓட்டமும்  சீராகுமாம்.

எனக்கு மட்டும்  ஒரு காது மடலில்  மொட்டைக் கம்பி வச்சு  லேசாய் துளைப்பதுபோல்  திருகுனதும்  'ஓ...காது குத்தி விடப்போறாங்க. புதுசா  சின்ன அழகான  காதணி வாங்கிக்கணும். வைரமா இருந்தால் விசேஷமு'ன்னு நினைக்கும்போதே கடுகு சைஸில் ஒரு கருப்பு சமாச்சாரத்தை அந்தப் பள்ளத்தில் வச்சு அதுக்கு மேலே ஒரு  துளியூண்டு டேப் போட்டு ஒட்டுனாங்க. அட....  இதுநம்மூரில்  செல்லங்களுக்கு மைக்ரோ சிப் வைக்கும் சமாச்சாரம்போலன்னு நினைச்சேன்.

ஆனா.... இது   சரியாக் காதின் எந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுக்கணுமுன்னு நமக்கு அடையாளம் காமிக்கும் கைடாம். ரெண்டு மூணு நாளில் விழுந்துரும். ஆனால் அதுக்குள்ளே சரியான புள்ளி எங்கேன்னு உங்களுக்குப் பழகிருமுன்னும் சொன்னாங்க டாக்டரம்மா.

ஒவ்வொரு  புள்ளிகளைப்பற்றி சொல்லும்போதெல்லாம்.... எல்லாம் புத்தகத்தில் இருக்கு. தரேன் தரேன்னு சொல்லிக்கிட்டும் இருந்தாங்க.
இவுங்க  உடல்நலம்பற்றி முக்கியமா அக்குப்ரெஷர்  சிகிச்சை பற்றி விளக்கமா நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. அதுலே உடல்நலம் உங்கள் கையில் என்ற புத்தகத்தைக் காமிச்சு இது இங்கிலீஷிலும் இருக்கு. எது வேணுமுன்னு கேட்டதும் அதுலே ஒன்னு இதுலே ஒன்னுன்னு  ஒன்னுபோலச் சொன்னோம்.


சான்ஸ் கிடைச்சா விடமுடியுமான்னு நம்ம கோபால், என்னைக்காமிச்சு ' இவுங்க எழுதுவாங்க'ன்னார்:-) அடடே அப்படியான்னு  ஆர்வத்தோடு விவரமெல்லாம் கேட்டுக்கிட்டு, ஒரு பெரிய அலமாரியைத் திறந்து அவுங்க எழுதிய புத்தகங்களைக் காமிச்சாங்க. ஏகப்பட்டவை.  அதிலிருந்தும் ரெண்டு புத்தகங்களை  எடுத்துக்கிட்டோம்.


சந்தடிசாக்குலே  மதுரையில் பதிவர் மாநாட்டுக்குப் போறோம். அப்படியே  கோவில்கள்  விஸிட்ன்னு தெற்குப்பக்கம் போறோமுன்னு சொன்னோம்.   தென்நாட்டுப் பயணம் போய் வந்ததும்  ஒருமுறை வந்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க.

இந்த ரெண்டு நாட்களில் நான் கவனிச்சது , ஏராளமான நோயாளிகள்(!)  வந்துக்கிட்டே இருக்காங்க. திங்கக்கிழமை விடுமுறை. அன்றைக்குத்தான் எழுதுவாங்களாம். நம்மைப்போல் டொக் டொக்ன்னு தட்டச்சு இல்லையாம்.  பேனாவும் பேப்பருமா வச்சு  பயங்கர ஸ்பீடில் எழுதுவாங்களாம். அம்பதறுபது பக்கமெல்லாம்  ஜூஜுபின்னதும்  'ஹைய்யோ'ன்னு இருந்துச்சு எனக்கு.

வர்ற கூட்டத்தைப் பார்த்தால்  இதுவரை ஒவ்வொரு புத்தகமும் ஏகப்பட்ட பதிப்புகள் ஆகி இருக்கும். இப்பக்கூட ஒரு பெரிய புத்தகம் (விலை 1000 ரூ) பற்றிய விமரிசனம்  ஹிந்துவில் வந்திருக்குன்னு  நோட்டீஸ் போர்டில் இருந்த விமரிசனக்கட்டிங் காமிச்சாங்க. இன்னும் விற்பனைக்கு வரலை. அநேகமா அடுத்த வாரம் வந்திருமுன்னு அவுங்க பப்ளிஷர் (லிஃப்கோ)  சொன்னாராம்!

கன்ஸல்ட்டிங் ஃபீஸ் ஒரு பக்கமுன்னா இந்த மோதிரம், புத்தகங்கள்  எல்லாமும் சேர்த்து ஒரு தொகை வந்துருது.  இதை எங்கூர் டாலரில் மற்றும்போது  அப்படியொன்னும் பெரிய தொகை இல்லை என்பது ஒரு ஆசுவாசம்.

அறைக்கு வந்து புத்தகங்களையும் மோதிரங்களையும் வச்சுட்டு, கண்ணாடிகளை வாங்கிக்க  (தி.நகர் ராகவேந்திரா  கோவிலுக்குப் பக்கத்துக்கடை) போனோம். போட்டுப் பார்த்து  ஃபிட்டிங் சரியா இருக்கான்னு  செக்  பண்ணிட்டு, அடுத்ததாக   கோபாலுக்கான ஸ்பெஷல் ஷாப்பிங்.


ஐஸ்வர்யம்   ரேமாண்ட்ஸ். 90 பாண்டி பஸார். (நம்ம ஷாப்பிங் முக்கால்வாசி இந்த திநகர் ஏரியாவிலேதான்  எப்பவும்)   நாம் போன நேரத்தில் மெஷர்மெண்ட் மாஸ்டர் வெங்கட்  அங்கில்லை. கொஞ்ச நேரத்தில் வந்துருவார்,   உக்காருங்கன்னாங்க. இந்த 'கொஞ்ச நேரத்தில்'  எனக்கு நம்பிக்கை போய்  பலவருசங்களாச்சு.

பழைய ஆர்டர் நம்பரைச் சொன்னார் கோபால்.  ஆர்டர் எடுக்கும்  புத்தகங்கள் அடுக்குகளா ஒருஇடத்தில் .  சரியாச் சொன்னால்  ஒரு பத்து மாசத்துக்கு முந்திதான் வந்துருந்தோம்.  ஜனவரின்னதும்  தேடி எடுத்துட்டார் கடைப்பணியாளர்.  நம்பரைப் பார்த்தால்  கரெக்ட்!  எனக்கு ஒரே ஆச்சரியம்.  எப்படி இவர் சரியா இந்த ஆர்டர் நம்பரை நினைவு வச்சுருக்கார்? சகவாசதோஷமோ!!!!

இன்னிக்கு  அவர் போட்டுருக்கும்  பேண்ட்ஸ், போனமுறை  இங்கே தைச்சு எடுத்துப்போனதுதானாம். இன்னிக்குத்தான் முதல்முறையா அணிஞ்சுருக்கார். அதுலே உள்பக்கம் பாக்கெட் துணியில்  இந்த நம்பர் பால்பாய்ண்ட்லே எழுதி இருந்துச்சாம். போட்டுக்கும்போது கவனிச்சுருக்கார்:-)
ஒரு ஆறேழு துணிகளைத் தேர்ந்தெடுத்துட்டு  இதே அளவில் தைச்சு வைக்கச்சொல்லிட்டு அறைக்குப் போனோம்.

கோபாலுக்கு  துணி எடுக்கும்போது நான் ரொம்பவே தாராளமாத்தான் இருப்பேன். ரெண்டு போதுமுன்னு ஆரம்பிப்பார்.  சரின்னுட்டா..... என்ன ஆகுமுன்னு ஒருக்கா பார்க்கணும்:-))))

பாக்கிங் ஆரம்பிக்கணும் . நாளைக்கு    காலைப்போக்குவரத்து ஆரம்பிக்குமுன்   சீக்கிரமாக் கிளம்பணும்.  ஒரு பத்து நாளைக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வச்சுக்கிட்டு  கொஞ்சம் பெரிய வண்டியை எடுத்துக்கிட்டு எட்டு மணிக்கு  வந்துருங்கன்னு சீனிவாசனிடம்  சொல்லியாச்சு.

சென்னைக்குள்ளேயே சுத்தறோமுன்னா நமக்கு டாடா இண்டிகா போதும்.

தொடரும்..............:-)





Wednesday, June 04, 2014

கோபாலபுரம் விஸிட்!

பொழுது விடிஞ்சதும் இன்னும் எத்தனைநாள் இங்கே இருக்கப்போறோம்னு மனசு கணக்குப் போட்டது. எண்ணி ஆறே நாட்கள். முதலில் கண்ணாடியைச் சரி செஞ்சுக்கணும். கடைகள் பத்து மணிக்குத்தான் திறப்பாங்க என்று நினைச்சதால், ஸ்ரீ வேணுகோபாலனைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துடலாமேன்னு கிளம்பினோம். கிளம்பி ஒரு அஞ்சு நிமிசத்தில், இவர் கடைக்குப் போன் போட்டுப் பார்க்கிறேன்னார். அட! கடை திறந்துருக்காம். சட்னு வண்டியைத் திருப்பச்சொல்லி கடைக்குப்போயிட்டோம். இது நம்ம தி. நகர் ராகவேந்த்ரா மடத்தின் கோவிலுக்கு அடுத்தது.

 கண்ணாடியை வாங்கிப் பார்த்தவர், உள்ளே கொண்டு போய், ரெண்டாம் நிமிசம் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்தார்! ஃப்ரேமை சரி செஞ்சுட்டாங்க. வில்லாதி வில்லர்கள்! வந்ததுதான் வந்தோம், பக்கத்து மடத்தில் ஒரு நிமிட் கண்ணனைப் பார்த்துட்டு போயிடலாம். வழக்கம்போல் அழகா நிக்கறான், கையில் குழலோடு! நல்லா இருடா. நான் கோபாலைப் பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு கோபாலபுரம் பறந்தோம்.

 மார்கழி மாசம் காலை ஒன்பதுக்குக் கோவிலை மூடிருவாங்க. அதான் இந்தப் பயணத்தின் ஆரம்பத்தில், வருசக் கடைசி (2013 டிசம்பர் 31 )நாள் போய் மூடுன கோவிலைப் பார்த்துட்டு வந்தோமே:( இன்றைக்கு(ம்) விடக்கூடாதுன்னு தான்...... ஒன்பதடிக்கப் பத்து நிமிசம் கோவிலுக்குள்ளே போயிட்டோம். அதுக்குள்ளே கோபுரவாசல் கதவுகளில் ஒன்னு மூடிக்கிடக்கு.


 சின்னக்கோவில்தான். ஆனால் அழகோ அழகு! கருவறையில் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி, பின்புலத்தில் பசு நின்னுருக்க, குழல் ஊதிக்கிட்டு இருக்கார். உத்துப் பார்த்தேன். கைகள் நாலு!!! சதுர்புஜம். பின் கைகள் சக்கரம், சங்கு ஏந்தி இருக்கின்றன. முன் கைகள் வாசிப்புக்கு. பிரகாரம் முழுசும் சின்னச்சின்னதா சந்நிதிகள். சட்னு கைகளில் எடுத்து விளையாடலாம் போல குட்டியான சிலைகள்.

 பெருமாள் கோவில் என்றாலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், காமாக்ஷி அம்மன், நந்தி இருக்காங்க. அந்தப் பக்கம் மரத்தடியில் ஒரு புள்ளையார். அவருக்கு அடுத்ததா முருகன், தன் துணைவி &இணைவியுடன்! .

ஆதிசங்கரருக்கும் ஒரு இடம். ராமர் கூட்டம் ஹனுமனோடு ஒரு சந்நிதியில். இன்னொரு வராந்தா போலுள்ள இடத்தில் மஹாவிஷ்ணு, லக்ஷ்மிநரசிம்ஹன், லக்ஷ்மிவராஹமூர்த்தி ன்னு சின்னச் சிலைகளும் அய்யப்பனும்!

 இன்னும் விஷ்ணுதுர்கை, இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தின்னு முப்பெரும் சக்திகள், தக்ஷிணாமூர்த்தி!!! போதாக்குறைக்கு நவக்ரஹங்கள் வேற!!!!

 அடடா.... எல்லோரும் ஒருசேர வந்துருக்காங்களேன்னு அதிசயம்தான்:-)

 இந்தக் கோவிலால்தான் இந்தப்பகுதிக்கு கோபாலபுரம் என்ற பெயரே வந்துருக்கு. கோவிலுக்கு வயசு 94!!!! 1920 வது வருசம் தான் கோவிலின் ஆரம்பம். கோவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் தனியார் கோவில் கமிட்டி வசம்.

 மார்கழி தவிர, மற்ற மாதங்களில் காலை அஞ்சரை முதல் பத்து, மாலை அஞ்சு முதல் ஒன்பது. மார்கழி மாசத்தில் காலை நாலரை முதல் ஒன்பது. மாலை அஞ்சு முதல் எட்டு. இவைதான் கோவில் திறந்திருக்கும் நேரங்கள். ஆஃபீஸ் டைமில் சாமிக்கு வேற வேலை இருக்கோ! அவரும் ஆஃபீஸ் போயிட்டு டாண்னு அஞ்சு மணிக்கு வந்திருவார். நமக்கும் காலை பத்துமணிக்குப்பின் வெயிலில் அலைய வேணாம்.

 ஒரு ஹிந்துப் பண்டிகை விடாமல் கோவிலில் கொண்டாடறாங்க. அதான் எல்லா சாமிகளும் ஒன்னாவே இருக்கே! மார்கழி உற்சவத்தையும் விடுவதில்லையாம்!

 மனம் நிறைஞ்ச தரிசனம். இன்னிக்கு வேற ஏதோ வேலையாக் கோவிலுள்ளே என்னமோ செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நமக்கு அடிச்சது ச்சான்ஸ். யாரும் யாரையும் விரட்டலை. நின்னு நிதானமா ஒவ்வொரு சந்நிதியா தரிசனம் ஆச்சு. உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் வெளியே வந்து கோபுரத்தைக் க்ளிக்கிட்டு அப்படியே தலையைத் திருப்பினால்......... முன்னால் ஒரு வெள்ளை மாளிகை. அதுதான் திமுக தலைவர்/முன்னாள் முதலமைச்சர் வீடாம். கிளிக்கிட்டு வண்டியில் ஏறி உக்கார்ந்தோம். கையைக் காட்டியபடி பறந்து வந்தார் செக்யூரிட்டி. வீட்டைப் படம் எடுக்கக்கூடாதாம். ஓக்கேன்னேன். ஆசுபத்திரியாகப் போவது இந்த வீடுதானே? 

சின்னதா அழகான மூணுநிலைக் கோபுரம். பெருமாள் கோவில் திருமண் சின்னம் இல்லாமல் சிவன் கோவில் போல 'ஓம்' இருக்கு! ஓம் ஓம் !


மேலே: சுட்டது.


விரும்பியோ விரும்பாமலோ தினம் தினம் கோபுரதரிசனம் கிடைக்குது பாருங்க, அவருக்கு! அதான் பெருமாளின் அனுக்ரஹத்தால் நீண்ட ஆயுள் கிடைச்சுருக்கு. நேத்து பொறந்த நாளாமே! நல்லா இருக்கட்டும். இன்னும் பத்து வருசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தால் ஆயுசு நூறு!

 அங்கிருந்து கிளம்பி, உயிர்த்தோழி வீட்டில் இருக்கும் 'எனக்கு' ஒரு வணக்கம் போட்டுட்டு கபாலியை தரிசிக்கப் போனோம். தோழி ஊரிலில்லை:( தோட்டம், சுத்தமான பராமரிப்பில்!

 மயிலை திருக்குளம் பரவாயில்லைன்னு சுத்தமா இருக்கு. தெப்பத் திருவிழா வருதாம். பெரிய ட்ரம்களைக் கயிறுகளாலும் சவுக்குமரக் கட்டைகளாலும் பிணைத்து தெப்பம் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. இது ஒன்னும் சுலபமான வேலை இல்லையாக்கும். சரியாக் கட்டலைன்னா...சாமிக்குக் கஷ்டம்:(














மணி மதியம் பனிரெண்டேகால்.  கயிலையாம் மயிலைக் கோவிலை மூடிட்டாங்க. பலமுறை வந்துருந்தாலும் ஆனாலும் இந்தக் கதவு இன்றுதான் கண்ணில் பட்டது. அழகா இருக்கே!!!


சரவணபவனில் போய் லஞ்சை முடிச்சுக்கிட்டு நிதானமா கிரி ட்ரேடர்ஸ்க்குப் போனோம். சின்னதா ஒரு பர்ச்சேஸ். சாமி புத்தகங்கள்.

 அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வு. இன்னிக்கு மாலை ஒரு விசேஷ நிகழ்ச்சி இருக்கு. வாங்க எல்லோருமாப் போய் அரங்கை நிறைப்போம்:-))))

 தொடரும்...........:-)