Friday, March 24, 2023

சட்னியில் சாம்பாரும் இருக்கு :-) கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 29

காலையில் கொஞ்சம் நிதானமாக எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வெராந்தாவுக்குப் போனோம்.  இது இங்கத்து ரெஸ்ட்டாரண்டுலே ஒன்னு. ராத்ரி சாப்பாடுதான் சரியில்லையே....  இப்பக் கொஞ்சம் நல்லா சாப்புட்டுக்கலாம்னு நினைப்பு.
பஃபேதான். வடைக்கு பதிலா குட்டிக்குட்டியா  போண்டா  வச்சுருக்காங்க. அதே உளுந்த மாவுதானே ?  மூணு எடுத்துக்கிட்டேன். கூடவே ரெண்டு இட்லியும்.


யம்மாடி..... இது என்ன ரப்பரில் செஞ்ச போண்டாவோ ?  வாயிலே வச்சால்  இழுக்குது... இதி ஏமிட்டிரா கொடவன்னுட்டு.... இட்லி மட்டும் ஆச்சு. கொஞ்சம் பழங்கள் & தயிர்.  காஃபி கூட ரொம்பவே சுமார்.... நம்மவர் தோசைக்குச் சொன்னார்.... அரை தோசை வந்தது.

 வந்த நோக்கம் நிறைவேறும் இடத்துக்கு  இன்று  மூணுமணிக்குத்தான் போறோம். அதுவரை ரெண்டாவது நோக்கத்தை முடிச்சுக்கலாம்!   ஊர் சுத்த ட்ராவல் கார் ஒன்னு புக் பண்ணி இருந்தார்  நம்மவர். 

நரேஷ் (ஓனர் ட்ரைவர் ) வந்தார். அதுக்குளே வலையில் ஏற்கெனவெ பார்த்து வச்ச  விவரங்களை புக் மார்க் பண்ணியாச்.  நியூஸியில் இருக்கும் ஹைதராபாத் தோழி, இன்னொரு இடமும் சொல்லி இருந்தாங்க. ஒரு புடவைக்கடைக்குப்போக இத்தனை முஸ்தீபா ? 

கத்வால் புடவையின் ரசிகை ஆகி இருந்தேன், போன முறை ஹைதை ( இந்தச் சொல் நம்ம பதிவர் புதுகைத் தென்றல் வச்ச பெயர் ) வந்ததில்  இருந்து. அது ஆச்சு 13 வருஷம். சென்னையிலும் தேடித்தேடி ஓய்ஞ்சுபோனதுதான் மிச்சம். சென்னை சில்க்ஸில் கிடைக்கும் என்று வலை சொன்னாலும்.....  அங்கே போனால்  வேறேதோ புடவைகளை எடுத்துப்போட்டு இதுதான் கத்வால் னு வேட்டியைப்போட்டுத் தாண்டறார் விற்பனையாளர். அதனால் ஒரிஜினல் புடவையைத் தேடிக்கிட்டு இருந்தேன். 

கலாஞ்சலி நோக்கிப் போறவழியில் பெருமாள் கண்முன்னே  வந்தார்.  எப்படி இந்தக் கோவிலை மறந்தேன் ? போனமுறை பிர்லா மந்திர் தரிசனம்  ஆச்சு.  இந்தக் கோவில் அப்போ வரலை போல....  ஸ்டாப் ஸ்டாப்னு நரேஷை வண்டியை நிறுத்தச் சொல்லிக் கோவிலுக்குள் போனால்.... ஏகாந்த தரிசனம் !!!!!   பட்டர் கூட இல்லை. அப்புறமா பட்டர் வந்து தீபாராதனை காமிச்சார் ! 


 
நல்ல பிஸியான ஊருக்குள்தான் கட்டியிருக்காங்க. திருப்பதி தேவஸ்தானக் கோவில்தான். தரிசனம் முடிஞ்சதும், கலாஞ்சலிக்குப் போனோம். 
கடைக்குள் நுழைஞ்சதுமே   கண்ணில்பட்டார் அட்டகாசமான பெருமாள்  ! 
கிடந்த நிலை !  மஹாலக்ஷ்மி புடவை செலக்ட் செய்யும்வரை தூங்கலாமுன்னு படுக்கை போட்டுட்டார் போல ! சுவர் முழுசும் ரவிவர்மா !


இங்கே புடவைகள் மட்டுமில்லாமல் கைவினைப்பொருட்கள் விற்பனையும் இருக்கு !  நமக்குக் கண்ணில் பார்த்தால் போதும். வாங்கணுமுன்னு............  கனவிலும் நினைக்கப்டாது ! 

கத்வால்...கத்வால்......   கடைசியில் கத்வால் பார்த்ததும்  கத்தாமல் இருந்தது  அதிசயம்!  எல்லாமே அம்பதாயிரத்துக்கு மேலே.....  நியூஸிக்கு இது ஆகுமோ ? ஊஹூம்.... காஞ்சிக் காட்டன் போல...கத்வால் காட்டன் இருக்குதான். ஆனால் இங்கே இந்தக் கடையில் இல்லை.
மாடிக்குப்போய் கை'வினை' பொருட்களைப் 'பார்த்துட்டு', அங்கே இருந்த ஒரு பகுதியில்  சாதாரணக் காட்டன்  புடவைகள்  ரெண்டு வாங்கினேன். ஏன் ரெண்டு ?  அதொன்னுமில்லை    பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ ஸேல் !
(அதுலே ஒன்னு இது. நேத்து  ஸ்ரீராம்நவமி உத்ஸவத்துக்குப் போனேன் )
விட்டேனா பார்னு கத்வால்  வீவர் சொஸைட்டி நடத்தும் கடைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  இங்கே  ஹைதையில் கவனிச்சது  மெட்ரோ மேம்பாலத் தூணுக்கடியில் பயணம் செய்யும்போது,  கடந்துபோகும்  தூணில்  பக்கத்துள்ள கடைகளின்  டோர் நம்பர்கள் எழுதியிருக்காங்க.  நாம் விலாசம் தேடிப்போகும் போது  அந்த எண்களைப்பார்த்து  ஏகதேசம் நாம் போக வேண்டிய இடத்துக்கு வந்துட்டோமான்னு தெரிஞ்சுருது ! 
(6-3-803/1/13 1st floor sss chamber ameerpet metro pillar no C-1449, Hyderabad, India, Telangana)ஒருவழியாக் கடைக்குள் போய்  நம்மவருக்கு ஹார்ட் அட்டாக் வரவழைக்காம  ஒரு காட்டன் புடவை வாங்கினேன்.   இத்தனை நேரம் சுத்துனதுக்குப் பசி வந்துருக்கணுமே !


 


  எனக்கு நீர்தோசையும், நம்மவருக்கும் நரேஷுக்கும்  ரவா தோசையும் ஆளுக்கொரு அட்டகாசமான ஃபில்டர் காஃபியுமா லஞ்சு. போன முறை நம்ம புதுகைத்தென்றல் குடும்பத்துடன் சட்னிக்குப்போனது நினைவுக்கு வந்தது !   


இனி நேரா 'த பார்க்'தான். ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின் நாம் இங்கே வந்த வேலையைப் பார்க்கலாம். ரெடியா இருங்க :-)    

தொடரும்............ :-)

10 comments:

said...

அதென்ன அரைதோசை?  தோசை இட்லி எப்படி இருந்தாலும் அது சுவை பெறுவது சட்னி சாம்பாரால்தான்.  சின்ன கோவில் முதல் பெரிய கோவில் வரை தரிசித்து வந்தீர்கள் போலும்.

said...

ரெடியா இருக்கேன், நன்றி

said...

பெருமாள் தரிசனம்.
இட்லி, காட்டன் சாறி,
நீர்தோசை , பில்டர் காப்பி .....
அடுத்து ....தொடர்ந்து வருகிறோம்.

said...

விவரங்கள் சிறப்பு. அனைத்தும் ரசித்தேன்.

said...

அனைத்தும் சூப்பர் அது சரி கடைசில இருக்கும் கட்டம் கட்டமா அழகான ஒரு கட்டிடம் அது என்ன, துளசிக்கா?

கீதா

said...

வாங்க ஸ்ரீராம்,

ஒரு கல்லில் ஓவல் ஷேப்லே நாலைஞ்சு தோசையைப் பக்கம்பக்கமா ஊத்திட்டு, எல்லாம் ஒன்னா ஒட்டிக்குது. அதை எடுக்கும்போது கிடைப்பது அரை தோசைகள்.

சின்னதோ பெருசோ... சாமி சாமிதானே !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

தொடர்வது மகிழ்ச்சி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

வாங்க கீதா,

சார்மினார்களைக் கொண்டு வரிசைகட்டி நிக்கவச்ச அமைப்பு! நல்லாத்தான் இருக்கு, இல்லே !