Friday, March 10, 2023

காசி வராஹி அம்மனின் தரிசனம் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 24

காலை மூணரைக்கு எழுந்து குளிச்சுத் தயாராகி ஒரு காஃபி குடிக்கவும் நேரமில்லாம .... நாலரை மணிக்குக் கிளம்பி சீதாவாண்டையே இருக்கும் பங்கால் டோலா ரோடு வழியா வேகவேகமா நடக்கறோம்.  எல்லாக்கடைகளும் மூடியிருப்பதால் சந்தில் ஆள் நடமாட்டம் இல்லை.
தஸ் அஸ்வமேத் ரோடுக்குக் குறுக்கில்போய், விசாலாக்ஷி கோவில் பக்கமாப் போறோம்,   இதுவரை தெரிஞ்சுக்காத கோவிலுக்கு !  சமீபத்தில்தான் இந்தக்கோவில் பற்றி  ஃபேஸ்புக்கில் வாசித்தேன். ஸ்ரீ வராஹி அம்மன் கோவில்.  காலை நாலு முதல் ஆறரைவரைதான் தரிசனமாம்.    

ஏற்கெனவே நம்ம நேபாள் பயணத்தில் பராஹியைத் தரிசித்து இருந்தாலும்,  காசியில் ரொம்ப விசேஷம் என்பதால் இந்த ஓட்டம் !  கீழே சுட்டி :  நேபால் பராஹி

http://thulasidhalam.blogspot.com/2017/01/8.html

சந்துகளில் விளக்குகள் எரிஞ்சுக்கிட்டுதான் இருக்கு.  அங்கங்கே எதாவது முக்கில் ஒரு சில காவல்துறை மக்கள் உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க. நைட் ட்யூட்டி.  இவுங்களுக்குக் காவலாக  வாலண்டியர் வேலையில் நாயார்ஸ். கடைகள் எல்லாம்  அடைஞ்சுகிடக்கு. 

நம்ம விசாலாக்ஷி கோவிலைத்தாண்டித்தான் போகணும்.... இந்தக்கோவிலும் மூடித்தான் இருந்தது. ஒரு சந்தின்  ஆரம்பத்தில் சோம்பலோடு உக்கார்ந்திருந்த  போலிஸிடம்,  வராஹி மந்திர்ன்னதும் நேரப்போகணுமுன்னு கை காமிச்சார்.கடைசியில் போய் ஒரு படி வரிசையில் இறங்கறோம். உடைஞ்சுருக்கும் படிகள் கோணாமாணான்னு இருக்கு.  ரொம்பக் கவனமா இறங்கணும் . அப்ப நாலைஞ்சு பெண்கள் படிகளில் ஏறி வர்றாங்க.  ஸாத் பஜேன்னு சொல்லிட்டுப் போனாங்க.   

நாம் இறங்கினதும்  வலப்பக்கம் இருக்கும் சந்துக்குள் போகணும்.  வழக்கத்தைவிட ரொம்பவே குறுகலான சந்துக்குள் ஜேஜேன்னு மக்கள் கூட்டம். யஹி ஹை ரைட் ப்ளேஸ் !




சந்துக்குள் ரெண்டு பக்கங்களிலும் வீடுகள்.  வெளியே வாசப்படிகளில் கிடைச்ச இடங்களிலெல்லாம்  சனம் உக்கார்ந்துருக்கு. கோவில் கதவு  போல இருந்த இடத்துலே பக்கத்துச் சுவரில் தரிசனம் ஏழரை முதல் ஒன்பதரை வரைன்னு எழுதி இருக்கு. அட ராமா.... இப்படி நிஜமாவே தேவுடு காக்க வச்சுட்டாங்களே !  ஏழரை என்பது ஒரு குறியீடோ ?
என்ன செய்யலாமுன்னு யோசிக்கும்போது, ஒரு போலிஸ்காரரைத் தொடர்ந்து ரெண்டு பெண்கள் வந்தாங்க. முதலில் வந்தவங்களைப் பார்த்தால் பெரிய இடத்துப்பெண் என்று ஊகிக்கும்படி தோற்றம். விஐபி குடும்பம், அரசு அதிகாரி, பெரிய  அரசாங்க அதிகாரியின் மனைவி இப்படி எனக்குள்ளே பல ஊகங்கள்!  போலிஸ் வந்தால்தான் என்ன... சந்துக்குள்  நிக்கறதுக்கூட இடம் இல்லையே....  அந்த பெண்மணி, போலிஸுக்குக் கையமர்த்திட்டு, ஒரு வாசல் படிகிட்டே  சுவர் ஓரமா நின்னாங்க. கையில் ஒரு ப்ளாஸ்டிக் பேஸினில் பூஜைக்கான பொருட்கள். 
கொஞ்ச நேரத்துலே இன்னும் கொஞ்சம்  உயர்வு நிலை போலிஸ் அதிகாரிகள் ரெண்டுபேர் வந்து அவுங்களிடம்  ஏதோ கேட்க, அவுங்க தலையை ஆட்டி என்னமோ சொன்னாங்க.  'கதவை உடைச்சு உள்ளே அனுப்பவா'ன்னு  கேட்டுருப்பாங்களோ ? 
'நம்மவர்' இதோ வரேன்னு போனவரைக் காணோமேன்னு  கூட்டத்தைக் கண்ணால் துழாவினால் கையில் ஒரு ப்ளாஸ்டிக் பேஸின் நிறையப் பூவுடன் நிக்கறார். அப்படியெல்லாம் வாங்கற ஆள் இல்லையேன்னு நான் அவராண்டை போனேன். அந்தப் பூ ஒரு பாஸ்வேர்டு மாதிரியாம் ! ஹா..............
இவ்ளோ கூட்டத்துக்கிடையிலும்  பூக்கடை போட்டுருக்கும் ஒருவர்தான் ஸீக்ரெட் ஏஜெண்ட்.  அவுங்கதான் சொன்னாங்களாம், ஆறு மணிக்கு உள்ளே போகணுமுன்னா  அதுக்கொரு வழி இருக்கு. ஆளுக்கு ரெண்டு நூறு !  எங்கேயும் போகாம இங்கேயே நில்லுங்கன்னு உத்தரவு !
 விசாரிச்சதில் தெரிஞ்சது, இப்போ ரெண்டுவாரமாத்தான் கோவில் நேரத்தை மாத்தியிருக்காங்கன்னு !  பெண்களுக்கிடையில் தள்ளுமுள்ளு ஆகிப்போய் பெரிய கலாட்டா நடந்து  இருக்கு.  போலீஸ் வந்து கலைக்குமளவுக்கு  அடிதடி.  கோவிலில் போலீஸ் பாதுகாப்பு வேணுமுன்னு கேட்டுருக்காங்க.   மூணு மணிக்கெல்லாம் வர இயலாதுன்னு  ஆறுமணிமுதல் தான் ட்யூட்டின்னு சொன்னதால் , நாலை,  ஏழரையா மாத்திட்டாங்க.  சீக்ரெட் ஏஜண்டு தந்த தகவல் ! 

அப்பதான்  'நம்மவர் 'கேக்கறார், ஏன் நெத்தியில் பொட்டே வைக்கலைன்னு........  அடராமா.......அதிகாலைன்னாலும் எனக்கு வேர்த்து ஊத்திக்கிட்டு இருந்ததில் எங்கெயோ விழுந்துருக்கு.  (பயணத்தில் எப்பவும் ஸ்டிக்கர் பொட்டுதான் ) கைப்பை இல்லாமத்தான்  வந்துருந்தேன். 
என்ன செய்யறதுன்னு முழிக்கும்போது,  அந்த விஐபி,  கை அசைச்சு இங்கே வான்னு கூப்பிட்டாங்க.  அவுங்க கைப்பை திறந்து, உள்ளே இருக்கும் ஸ்டிக்கர் பொட்டு அட்டையைப் பிரிச்சு ஒரு பொட்டு எடுத்து என் நெத்தியில் வச்சு விட்டாங்க.  கையில் தருவாங்கன்னு நான் கை நீட்டிக்கிட்டு இருந்தேன். அதிகாரத்தோடு கூடவே  அகம்பாவம் இல்லாத குணம். பாராட்டத்தான் வேணும். 'தேங்க் யூ 'ன்னேன் .
சொல்லிவச்சதுபோல்  இந்தாண்டை  பூக்கடைக்கு எதிரில் இருந்த புதுக்கதவு மெல்லத் திறந்தது. காத்திருந்த மொத்தக்கூட்டமும் அதுக்குள்ளே பாயறாங்க. கதவுக்கு அந்தாண்டை இருந்தவர் பலம் கொண்டமட்டும்  உள்ளே இருந்து கதவைத் திரும்ப மூட முயல்கிறார். ஒரே War Zone தான்.  அப்போ திடுதிடுன்னு நாலைஞ்சு போலிஸ் வந்தாங்க. கூட்டம் பம்முது.  'நானும் எரநூறு தரேன்,  நானும் எரநூறு தரேன்'னு  ஒரு ஆள் கத்திக்கிட்டு இருக்கார்.

போலிஸ் உதவி வந்த தைரியத்தில் உள்ளே இருக்கும் நபர் கதவை இன்னும் கொஞ்சம் திறந்தார்.  மேற்படி பெண்கள் உள்ளே போனாங்க.  கதவைத் திறந்தவர் , அடுத்து யாருன்னு பூக்காரம்மாவைப் பார்க்க அடுத்த விநாடி நாங்க உள்ளே  அனுப்பப்பட்டோம். கதவடைப்பு ஆச்சு. சின்ன ஹால்தான் இது.  ஒன்னுமே இல்லை. காலி ! அங்கே நின்னுக்கிட்டு இருந்தவர்,  விஐபிகளைப் போகவிட்டுட்டுக் கைநீட்டினார். நம்மவர் நாலு நூறுகளை சமர்ப்பித்தார்.  விஐபி போன வழியில் நம்மை அனுப்பினாங்க.  குறுகலான ஒரு இடம். பாத்ரூமா என்ன ? வலப்பக்கம் ஒரு குழாய் இருக்கு. நமக்கிடப்பக்கம் ஒரு ஜன்னல். அந்த அறையில்  குமிஞ்சுருக்கும் சேலைகள். எல்லாம் அம்மனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டவைகள். நமக்கு முன்னால் ஒரு தகரக்கதவு.  மூடியிருக்கு.  ஓ.... அப்ப இந்த இடம் முந்தி பாத்ரூமாத்தான் இருந்துருக்கணும், இல்லே ?   அடுத்து இருக்கும்  கூடத்துக்கு வருமானத்தை உத்தேசித்துக் கதவு வச்சுருக்காங்க போல !  கதவு புதுசா இருக்கே !

தகரம் எப்போ திறக்குமுன்னு தெரியாம நிக்கறோம். அந்தாண்டை ஆள் நடமாடும், பேசும் சத்தம் எல்லாம் கேக்குது. பத்து நிமிட் ஆச்சு, தகரம் திறக்க.... நாம்  கடந்து போனோம்.  இப்ப நாம் வலப்பக்கம் திரும்பணும்.  இடப்பக்கம்  மூடியிருக்கும் ஒரு  பழைய மரக்கதவு.  கதவுக்கு அந்தாண்டை  பேச்சுச் சத்தமும், கதவைப் பிறாண்டும், இடிக்கும்  சத்தமும் போனஸ். அதுதான் கோவிலுக்குள் வரும் மெயின் கதவு.

வலப்பக்கம் துளசிமாடம் போல ஒன்னு.  ஆனால் துளசி இல்லை. அதையொட்டி சின்னதா ஒரு சிமெண்டு பாதை.  துளசிமாடத்துக்குப்பின்னால்  ஒரு அறை.  முழுசா சிகப்புத்துணியில் திரை தொங்குது. அறையை ஒட்டி இன்னுமொரு கதவு. அதுக்குள்ளே போகணும் நாம். அங்கே  ஒரு மாடிப்படி. அதுலே ஏறிப்போறோம்.  படிகள் முடியும் இடத்தில்  ஒரு திறந்த தளம்.  அரைச்சுவர் கட்டியிருக்கு.  வலப்பக்கம் இன்னொரு அறை போல!  ஓரமா ஒரு பெஞ்சு, கதவு ஒருக்களிச்சுருக்கு.  திடீர்னு கதவுக்குள்ளில் இருந்து ஒரு கை நீண்டதும், என்னன்னு பார்த்தால்....  விஐபி கூட வந்திருந்த பெண், அந்தக் கூடையை எடுத்துக்கொடுக்கச் சொன்னாங்க. பெஞ்சுமேல்  அந்த ப்ளாஸ்டிக் பேஸன் இருந்தது. எடுத்துக்கொடுத்ததும்  கதவு சாத்திக்கிட்டாங்க. 

 அதுக்குள்ளே கிடைச்ச இடைவெளியில் என் கண்ணை உள்ளே ஓட்டினேன்.  இடப்ப்பக்கம் ஒரு  பண்டிட் உக்கார்ந்திருக்க,  அவருக்கு  இடப்பக்கம்  கதவைப் பார்த்தபடி விஐபி  தரையில் சம்மணம் போட்டு உக்கார்ந்துருக்காங்க. பூஜைத்தட்டு ஒன்னு அவுங்க முன்னால் இருக்கு.   அவ்ளோதான் தெரிஞ்சது.  கதவுதான்  சாத்தியாச்சே !

விஸ்தாரமான பெரிய பூஜை போல......  பத்து நிமிட் போல நிக்கறோம். படம் எடுக்கக்கூடாதுன்னு சுவத்துலே எழுதியிருக்கு. நான் என் செல்ஃபோனை நம்மவரிடம்  கொடுத்துவச்சேன். 

நம்மை உள்ளே அனுப்புனதும் போனோம்.  அங்கே பண்டிட்டும் இன்னொரு ஆளும்  (சின்ன பண்டிட் ? )மட்டுமே இருந்தாங்க.  நம்மவரிடமிருந்து  பூக்கூடையை வாங்கின பண்டிட், கீழே உக்காரச் சொன்னார். நம்மவர் உக்கார்ந்துட்டார். எனக்கு முழங்கால் பிரச்சனை என்பதால் கொஞ்சம் குனிஞ்சமாதிரி நின்னேன்.  

பண்டிட்டுக்கு முன்னால் ஒரு சதுரமான  த்வாரம்.  (குட்டியூண்டு ஜன்னல்)  நம்ம ஊர் மச்சு வீடுகளில் மொட்டை மாடியில் நெல் காயவச்சுட்டுக் காய்ஞ்சதும், இப்படி இருக்கும் ஒரு த்வாரம்   வழியாக் கீழே இருக்கும்  அறைக்குத் தள்ளிவிடுவாங்களே, அதே போலத்தான்.  

பண்டிட் ,  மாயி, மாயின்னு வராஹிக்கான மந்திரங்களைச் சொல்லியபடி  அர்ச்சனை செஞ்சுக்கிட்டே, நாம் கொண்டுபோன பூக்களை, ஒவ்வொரு பூவாக எடுத்து   அந்த த்வாரத்தில் போட்டுக்கிட்டு இருந்தார்.  நாம் கைகூப்பியபடி இருக்கோம்.  பூஜை முடிஞ்சு, தக்ஷிணையைத் தட்டில் போட்டோம்.  நம்ம நெத்தியில் குங்குமம் தீற்றிவிட்டதும், அந்த த்வாரத்தினூடே குனிஞ்சு பார்க்கச் சொன்னார். 'மாயி கோ தேக்கோ !'   நம்மவர் கீழே உக்கார்ந்துருந்ததால் சுலபமா எட்டிப்பார்த்தார். நான் ?  ஒரு மாதிரி சரிஞ்சு பார்வையை அனுப்பினேன்.  வலப்பக்கம் கொஞ்ச தூரத்தில்  சைடு போஸில் வராஹி அம்மன் சுவரையொட்டி  நிக்கறாள் !  முகம் சரியாத் தெரியலை.  கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பறோம். ரெண்டு எட்டில் தரையில் இன்னொரு சின்ன த்வாரம் இருக்கு.  சின்ன பண்டிட்  'அதுலே பாருங்க'ன்னார்.  நின்னவாக்குலேயே தலையைக் குனிஞ்சு பார்க்கலாம். கீழே.... வராஹியின் பாதங்கள் ! குங்குமம் கொட்டிக்கிடக்கு !  பாத ஸேவை ஆச்சு.  சரியான கோணத்தில் த்வாரம் அமைச்சுருக்காங்க.  அங்கே நேரா இருக்கும் கதவுக்கப்பால் படிக்கட்டு வரிசை.  கீழே இறங்கியாச்சு.  அந்த சிகப்புத்துணித்திரைக்குப்பின்தான் வராஹி இருக்குமிடம். இந்த அறைக்கு நேர் மேலாகத்தான் குட்டிஜன்னல்கள்  அறை இருக்கு !  இவள் பாதாள வராஹியாம் ! 

கீழே படம்: வலையில் சுட்ட வாராஹி . ப்ரவீண் மோகனுக்கு  நன்றி !
காசி நகரின் ,காவல்  தெய்வம் நம்ம வராஹிதான்.  சூரிய அஸ்தமனம் முடிஞ்சாட்டு, நகரக்காவல் இவள் வசம்.  ஊர் முழுசும் சுத்திச் சுத்தி நடந்து, ப்ரம்ம முஹூர்த்தத்தில்  திரும்பி வரும் இவளை வரவேற்று  அபிஷேகம், அலங்காரம் ,ஆரத்தி எல்லாம்  நடத்திட்டு,  ராத்ரி ட்யூட்டி பார்த்துட்டுக் களைப்பாக இருப்பாளேன்னு ஓய்வெடுக்க விட்டுவாராம் தலைமைப் பண்டிட் !  இவரைத்தவிர  வேற யாரும்   அவளருகில் போகக்கூட முடியாது ! அதுதான் அதிகாலையில் மட்டும் கோவில் திறந்திருக்கும் ரகஸியம் ! 

ஊர்க்காவல் முடிஞ்சு வரும் வராஹி, ரொம்ப உக்ரமாக இருப்பாளாம். அதான் நேருக்கு நேர் தரிசனம்  செய்யாமல் பக்கவாட்டில் பார்க்கிறோம். 
நகரைக் காக்கும் நைட் ட்யூட்டி வராஹிக்கு ஒதுக்கியாச்சு. அப்ப டே ட்யூட்டி யாருக்கு ?  ஹாஹா.... வேற யாருக்கு... அதான் நம்ம காலபைரவர் இருக்காரே.... அவருக்குத்தான் !  அவர் கொஞ்சம் கூடுதல் ஐடியாஸ் வச்சுருக்கார். தனக்கு உதவியா இன்னும் ஏழுபேரை நியமிச்சதால் அஷ்ட பைரவர்கள் திசைக்கொன்னா நின்னு ஊர்க்காவல் படை உத்யோகம் !  ஸ்ட்ரெஸ் குறைவு இல்லையோ ! 

இந்தச் சந்தில்  வசிக்கும் மக்களுக்கு இது ஒரு வகையில் வசதிதான்.  காலையில் அவுங்க எழுந்திருக்கும் முன்னாலேயே  கோவில் வேலைகள் முடிச்சுருக்கும்.  ஆறரைக்குச் சந்து காலியாகத்தான் இருக்கும்.  தினசரி வாழ்வு பாதிக்காமல் அது பாட்டுக்கு நடக்குமே! 
குட்டிஹாலுக்கு வந்துருந்தோம்.  இன்னும் நிறைய மக்கள் நின்னுக்கிட்டு இருக்காங்க. எரநூறுகள் புழங்குது.  நம்மவர் கூடத்தின் ஓரத்தில் உக்கார்ந்துட்டார்.  வெறும் வயறு கூப்பாடு போடுது.  நல்லவேளை தண்ணீர் பாட்டில் கைவசம்   Bபேக் Pபேக்கில் இருந்தது.
 அவர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கட்டுமுன்னு நான் திறந்திருந்த  தகரக்கதவு வழியே போய்  துளசிமாட ஸைடுலே ரெண்டு க்ளிக்கிட்டு  வந்தேன். சிறப்பு தரிசனத்துக்கு மக்கள் வரிசையில்  நிக்கறாங்க.  நேராக இருக்கும் மரக்கதவு இன்னும் திறக்கலை. ஏழரை ஆகணுமே !  அதுக்குள்ளே எரநூறு தரிசனம்  முடிஞ்சுரும்தான் !

வெளியே வந்ததும் சந்து முனையில் இடப்பக்கம்  இருக்கும்  உடைஞ்ச படிகளில் ஏறாமல் வலப்பக்கம் திரும்பி நடந்தோம். வேற  எதாவது சந்துகள் வழியாகப் போகலாமே .....   

தொடரும்......:-)



9 comments:

said...

காவல் தெய்வத்தையே லஞ்சம் கொடுத்துதான் பார்க்க வேண்டி இருக்கு!!

said...

வாழ்க வராஹி !
அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

கோவில் திறப்பு நேரம் சரியாத் தெரியாததால் கொஞ்சம் இப்படி ஆகிருச்சு. கூர்க்காவுக்கு நாம் காசு தருவதில்லையா.... அதைப்போலன்னு வச்சுக்கலாம்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

அருமை வாராஹி தர்சனம் மீண்டும் போகனும் என்ற ஆர்வம் இருக்கு .

said...

மிகவும் குறுகலான சந்தைகள். இவ்வளவு சிரமத்தின் மத்தியில் வராஹி தரிசனம்.

said...

வாங்க மாதேவி,

நேரம் மாத்தினது ஒரு வகையில் நல்லது. இருட்டில் சிரமப்பட வேண்டாம் :-)

said...

வாங்க தனிமரம்,

அடுத்தமுறை போகும்போது தரிசன நேரத்தை விசாரிச்சுக்கிட்டுப் போங்க. போன முறை தரிசனம் எப்படி இருந்தது ?

said...

ஸ்ரீ வராஹி அம்மன் கோவிலும் தரிசனமும் கொஞ்சம் திகிலாக தான் இருக்கு ....நல்ல தகவல்கள் மா .