Monday, March 20, 2023

எல்லாத்துலேயும் பேர் போட்டு வைக்கிறதுதான் வேலையோ !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 28


ஷாஸ்த்ரி ஜி யின் உருவச்சிலை பார்த்ததும்..... அவருடைய எளிமையும்,  அதிர்ச்சியைக் கொடுத்த  அவருடைய  மர்ம மரணமும் ( இன்னும் தெளிவு கிடைக்கலை..ப்ச்....)மனசில் வந்து போச்சு. புதைக்கப்பட்ட  எத்தனையோ ரகஸியங்களில் இதுவும் ஒன்னு.....
வாரணாசின்னதும்  கங்கையின்  படித்துறைகள்தான் நினைவுக்கு வரணும் என்ற  எண்ணப்படி  தோட்டத்தில் Ghats of  Benaras னு  சின்னதா  ஒரு அலங்காரம் செஞ்சு வச்சுருக்காங்க.  ஃபோட்டோ கார்னர் !   வந்து படமெடுத்துக்கிட்டு, நினைவுகளில் வச்சுக்குங்கன்னு சொல்றாங்க.  சின்ன தடுப்புக் கம்பியைத் தாண்டி ட்ராலியைத் தள்ளிக்கிட்டு புல்வெளியில் நடக்கக் கஷ்டம். அதனால் கொஞ்ச தூரத்துலே இருந்தே க்ளிக்கினேன். ஒரு  செல்லம் வேற கிட்டே வந்து   'காசியில் இருந்து என்ன கொண்டுபோறீங்க' ன்னு  கேட்டுக்கிட்டே இருந்தான் :-)
தேசியக்கொடி மேடையில்  நம்மவரைக் க்ளிக்கும்போது,  பயணிகளில்  ஒருவர், உங்க ரெண்டுபேரையும் சேர்த்துப் படம் எடுக்கவான்னு உதவிக்கு வந்தார்.  நன்றி தெரிவிச்சேன்.உள்ளே போனோம். அங்கேயும்  ஃபோட்டோ ப்ரேம்  இருக்கு. விடமுடியுமா ? நல்ல சுத்தமான ஏர்ப்போர்ட். தீபாவளிக்காக ரங்கோலி போட்டு வச்சுருந்தாங்க. இண்டிகோவில் செக்கின் ஆச்சு.   ஸ்நாக்ஸ்  செலெக்‌ஷனில் நாம் PTSW   கேட்டுருந்தோம்.  இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு   நமக்கு. 
நேத்து வாங்கிவந்த  துணிகளின்  படத்தை மகளுக்கு அனுப்பி,' உனக்கு க்ரே வாங்கியாச்சு'ன்னேன். மத்த ரெண்டும்கூட ரொம்ப நல்லா இருக்குன்ன்னாள்.  மனசு கேக்காம உனக்கு வேணுமுன்னா எடுத்துக்கோன்னு  (ஒரு பேச்சுக்காக!)சொன்னதும்  ஓக்கே. தேங்க்ஸ்ன்னுட்டாள்.  அரிசியில் மட்டுமில்லாமல், இப்பெல்லாம் காஃபி, துணிமணி, நகைநட்டுன்னு ஒன்னு விடாம பெயர் எழுதும் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கான் பெருமாளுன்னு புரிஞ்சு போச்சு :-)

காத்திருந்த நேரத்தில்  ஒரு தமிழ்க்காரத் தம்பதிகளைச் சந்திச்சோம்.  சென்னைதானாம்.  இப்ப நாம் போகும் ஊருக்குத்தான் அவுங்களும் வர்றாங்களாம். எந்த ஊருன்னு சொன்னேனோ ?  ஹைதராபாத் !  அறிமுகக் கதைச்சுருக்கம் ஆச்சு. இவர் கேட்டரிங் கம்பெனி நடத்தறார். சென்னையில் ஒரு கெஸ்ட் ஹௌஸ் வச்சுருக்கார். நமக்கு விருப்பமுன்னா அங்கே தங்கிக்கலாம். நானும் பதில் உபசாரமா... நியூஸி வந்தால் எங்க வீட்டில் தங்கலாம்னு  அழைப்பு வச்சேன்.

கொஞ்சம் நடக்கலாமேன்னு எழுந்தப்ப,  அவருடைய மனைவியை பார்த்து, நீங்களும் ஒரு ரவுண்டு என்னோடு வர்றீங்களான்னதுக்கு  ஆர்வமா சரின்னுட்டாங்க. வெறும் விண்டோ ஷாப்பிங்தான்னு  நம்மாட்களுக்கு ஆறுதல் சொல்லிட்டுக் கடைகள் பக்கம் நகர்ந்தோம். அவ்வளவு சுவாரஸியமில்லை. உத்திரப்ரதேஷ் கைவினைப் பொருட்கள்னு  கயிறு சாமான்கள்  கொஞ்சம். 

எல்லோருமா மாடிக்குப் போனோம்.  ஆளுக்கொரு  காஃபி .  போர்டிங் டைம் ஆச்சு.  அவரவர் அவரவர் இடத்துக்குப் போனோம். டேக் ஆஃப்  காமணி   லேட்.  நம்ம  PTSW  வந்தது. கூடவே ஒரு மாதுளை ஜூஸ். டோஸ்ட் ப்ரெட்டை வச்சு  சாண்ட்விச் பண்ணி இருக்காங்க.  தடிதடியா இருக்கு ! ரெண்டு மணி பத்து நிமிட் பறக்கும் நேரம்.  பகல் நேரப்பயணம் என்றாலும்  மேகத்தையும் வானத்தையும் தவிர வேறொன்னும் வேடிக்கை இல்லை. கைவசம் இருக்கும் உடையாரில்  கொஞ்சம் வாசிப்பு.   பறக்கத்தொடங்கி கிட்டத்தட்ட  ஒன்னரை மணி நேரத்துக்குப்பின் உயரத்தைக் குறைச்சவுடன்  கீழே  காட்சிகள்  பார்வைக்கு லேசா வந்தது. ஊர் நெருங்கறோம்.  கண்ணு நட்டுக்கிட்டே  அப்பப்ப க்ளிக்கிக்கிட்டு வந்தேனா....  சட்னு ஃப்ரேமில் தெரிஞ்சது....  நாம் ஹைதை வந்த  காரணம் !  குருவே நமஹ!


அடுத்த ஏழாவது நிமிட், விமானம் தரையைத் தொட்டது.  லேட்டாக் கிளம்பினாலும் லேட்டஸ்ட்டா,  ஒரு பத்து நிமிட் முன்னாலேயே கொண்டுவந்து சேர்த்துட்டார் பைலட் ! நல்லா இருக்கட்டும் !பொட்டி வந்து சேரத்தான் நேரமாச்சு. ஏர்ப்போர்ட் அட்டகாசமா இருக்கு. போனமுறை இங்கே வந்தப்பதான் புது ஏர்ப்போர்ட் திறந்து ஒரு வருஷம் ஆகி இருந்தது.  இப்ப இந்த பதினாலு வருசத்தில்  இன்னும் விரிவாக்கங்கள் நடந்து, இப்போ  சூப்பர்! 

நமக்கு ஹொட்டேல் அனுப்பும் பிக்கப் வண்டிக்காக முக்கால்மணி நேரம்  காத்திருக்க வேண்டியதாப் போச்சு.  ஃபோன் செஞ்சு கேட்டால் பிக்கப்பா..... ஙேன்னு முழிச்சது   குரலிலேயே தெரிஞ்சது.  சின்னதா ஒரு அர்ச்சனை ஆனதும்,  இதோ அனுப்பறேன்னு சொல்லி பத்தே நிமிட்டில் ஒரு வண்டி வந்தது.  கிட்டத்தட்ட  32 கிமீ.  எக்ஸ்ப்ரெஸ் வே என்றதால் ஊருக்குள் போக  ஒரு முக்கால் மணி நேரம்.  

  'பேரு பெத்த பேரு' ன்னு  'த பார்க் ஹொட்டேல் ! பிக்கப் அப் காசு எல்லாம் ஏற்கெனவே வசூல் செஞ்சுட்டு, நம்ம பேரை பதிவே  பண்ணலையாம். ஒரு வழியா அஞ்சாம் மாடியில்  ரூம்  கிடைச்சு மேலே போனோம்.   பெல்பாய் பையன், இப்ப ட்ரெய்னீயாம்.  அறையைப் புகழ்ந்து தள்ளிட்டான். புதுசா பாத்ரூமை,  மாத்தியமைச்சுருக்காங்களாம். சரி சரின்னு தலையாட்டிட்டு ஒரு டீ மட்டும் போட்டுக் குடிச்சுட்டு கொஞ்சநேரம் ஓய்வு.


எதிரில் ரயில்வே ஸ்டேஷன் (Necklace Road Station),  கூரை மேலே புறாக்கூட்டம், அந்தாண்டை ஹுஸைன் சாஹரின் ஒரு ஓரம்.  புத்தர் தெரியறாரான்னு  கண்ணை ஓட்டினால் காணோம்.அறையின் உள் அலங்காரம், செட்டிங் எல்லாம் படுமோசம்.   அபூர்வ சமாச்சாரம்னு நினைச்சுக்கிட்டு சுவரில் ஒரு பச்சை வட்டம். எதுக்கு ? ஙே....
நல்ல ஆலோசகன் கிடைச்சுருப்பான் போல்....

களைப்பா இருக்கே.... எங்கேயும் போக வேணாம். குளிச்சுட்டு ஓய்வெடுக்கலாமுன்னு  குளிக்கப்போனேன்.  படுக்கையை ஒட்டிய பாத்ரூம் ஷவர்.  பச்சை வட்டத்துக்கு அடியில்  ஓவல்வடிவ பாத் டப். ஓ.... அந்தப் பச்சை வட்டம் போர்ட் ஹோல் !!!  :-)

ஷவர் முடிச்சு  உள்ளே வந்தால்  கட்டிலைச் சுத்தித் தண்ணீர்.  மிதக்கும் படுக்கையோ !  ஃபோன் பண்ணிச் சொன்னதும் ஆள்வந்து துடைச்சுட்டு போச்சு.  ரிசப்ஷனில் இருந்து  கூப்பிட்டு,  'மன்னிக்கணும். தண்ணி வந்தா சொல்லுங்க. உடனே துடைக்க ஆள் அனுப்பறோம்'   அஞ்சு நக்ஷத்திரத்துலே ஒன்னைக்கூடக் காணோம்.  

நமக்கு வேற வேலை இல்லையா.....   இன்னொரு அஷ்டோத்திரம்  ஆனதும்,  டேமேஜர் வந்து ,  பார்த்துட்டு வேற ரூம் மாத்திதரேன்னு சொல்லி, ஆச்சு. அங்கே ஆரஞ்சு போர்ட் ஹோல்.   நோ பாத் டப். பாத்ரூம் ஷவர்  மற்ற ஓரத்தில். 
ராச்சாப்பாடுக்கு ரூம் சர்வீஸ் போதும்.  திரும்ப உடை மாத்திக்கிட்டுப்போக சோம்பலா இருக்கு.  மெனு பார்த்தவர் கத்தரிக்காய்க்கு ஆசைப்பட்டுட்டார். சின்னக்கத்திரிக்காய்  க்ரேவி & சோறு. கொஞ்ச நேரத்துலே கிச்சனில் இருந்து ஃபோன். சின்னக்கத்தரிக்காய் நறுக்கிப் பார்த்தால் முத்திப்போச்சாம் !!!!!! கத்தரிக்காய் குழம்பு ரெடி ஆகுது. அனுப்பவா  ?அனுப்புன்னார். வந்தது..... எனக்குக் காரமே ஆகாது. அதிலும் இது ஆந்த்ரா.....  இருக்கவே இருக்கு, வெறுஞ்சோறு. அதுவே எனக்குப்போதும் !


பொழுது விடியட்டும் பார்த்துக்கலாம்..... போனமுறையும் இதே ராஜ்பவன் ரோடுலே Katriya Hotel லில்தான் தங்கினோம். அது மூணு ஸ்டார். ஆனாலும்  நல்லாவே இருந்தது.  இங்கே அஞ்சு, பெயரில் மட்டும் :-(   

தொடரும்........... :-)


9 comments:

said...

நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

மகிழ்ச்சி !

said...

பெயரில் தான் ஐந்து ஸ்டார் : (
தொடர்வோம்......

said...

வாங்க மாதேவி,

ஆமாம்ப்பா. தேடிப்பார்த்தால் ஒரு ஸ்டாரைக்கூடக் காணோம்!

said...

சட்டென வாரணாசியிலிருந்து ஆஞ்சி போல ஹைதைக்கு தாவி விட்டீர்கள்!

said...

அஞ்சு நட்சத்திரமா இப்படி? ஃபேக் ன்னு தோணுது எப்படி வாங்கினாங்க அஞ்சு?!!!

ஹைதை ஏர்போர்ட் சூப்பரா இருக்கும்...படங்கள் வழக்கம் போ ஜோர்!

கீதா

said...

வாரணாசி ஏர்போர்ட்டுக்குள்ள போறதுக்கு முன்ன முதல் செக்கிங்க் நம்ம செல்லம் போல!!!!

படித்துறைகள் மாடல் அழகா இருக்கு

கீதா

said...

வாங்க ஸ்ரீராம்,

காசியில் எத்தனைநாட்கள் தங்கினாலும் போதும் என்ற நிலை வராது. அதனால் ஒரே மூச்சில் தாண்டினால்தான் முடியும் :-)

said...

வாங்க கீதா !

ஆமாம் செக்கிங் இன்ஸ்பெக்டர் அவர் கடமையைச் செஞ்சார் :-)

இப்பெல்லாம் ஏர்ப்போர்ட் முன்பகுதிகள் அழகாகவே இருக்கு. லோக்கல் பஸ் ஸ்டாண்டு எல்லாம் உள்ளே கேட்டாண்டையில்தான் !