Friday, March 03, 2023

கங்கா ஸ்நானம் ஆச்சோ ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 21

ஆச்சே!  தீபாவளிக்கு  இந்தியான்னு  இந்தியப்பயணம் முடிவானதும்,  காசியில்தான் அசல் கங்கா ஸ்நானத்தோடு தீபாவளின்னு  முடிவு செஞ்சுட்டேன்.   ஆரத்தி பார்த்துட்டு வந்தவுடன், அறைக்குப்போய்   டவலை எடுத்துக்கிட்டுக் கீழே படித்துறைக்குப் போனோம்.  முதலில் நம்மவர் !  இது அவருக்கு மூன்றாம் முறை !  தண்ணீர் என்னவோ ரொம்பக் கலங்கலாத்தான் இருக்கு !   நமக்குக் கம்பெனி கொடுக்கன்னே ஒருத்தார் சிமெண்ட் மேடை மேல் காத்திருந்தார். 

ரொம்ப அறிவா, நிதானமாக் காலடி எடுத்துப் படியில் வச்சு உக்கார்ந்து நாய்க்குளியல் !  கங்கையைத் தலையில் தெளிச்சுக்க வேணாமாம். அப்படியே நக்கிக் குடிச்சார்!   பாவம் ஏதோ செஞ்சு, நாய் ஜன்மம் எடுத்தாலும்   ஏதோ புண்ணியம்   பாக்கி இருந்து காசியில் பொறந்துருக்கார் போல !

https://www.facebook.com/1309695969/videos/3507251409594117/

 அடுத்து நான் கங்கையில் இறங்கினேன்.  படிக்கட்டுகள் இன்னும் நிறைய, தண்ணீருக்கடியில் இருக்குபோல !  நாலைஞ்சு படிகள் இறங்கியும், காலில் தட்டுப்பட்டது அடுத்த படி.    மூணுமுறை முங்கி எழுந்து  கங்கைக்கும் சூரியனுக்கும் நமஸ்காரம் செஞ்சு இதுவரை செஞ்ச பாவங்களைப் போக்கிட்டேன். இனி வேறொன்னும் செய்யாமல் இருக்கணும், பெருமாளே !  பதிவு எழுதி வாசகர்களைப் படுத்தறது, பாவக்கணக்கில் சேருமோ ?  
அறைக்குப்போய்  ஷவரில் குளிச்சபிறகுதான்  மேலே ஒட்டி இருக்கும் மண் போயிருக்கணும்.  கீழே அதுக்குள் ஏராளமான மக்கள் கங்கையில் குளிக்க வந்துருக்காங்க.  நாம் போனப்ப யாருமே இல்லை. ஏகாந்தக் குளியல்தான் எங்க மூவருக்கும் ! நான் படியேறும் சமயம் சிலர் வந்தாங்க.
புத்தாடைகள் அணிஞ்சு, ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.  தீபாவளி ஸ்பெஷல் ஐட்டமா அதே டோஸ்ட்டும் சாயாவும்தான் :-)  பராந்தா, ஸப்ஜி கொண்டுவரவான்னார் பணியாளர்.  காலையில் அதெல்லாம் நம்மால் முடியாது.  எங்களை ஒரு படம் எடுத்துக் கொடுத்தால் போதுமுன்னேன். ஆச்சு !
ஒன்பதே காலுக்குக் கிளம்பி நம்ம வழக்கமான 'செங்கல் ரூட்'டில் போறோம்.  வழியெங்கும் தீபாவளி  என்ற அடையாளம் கிஞ்சித்தும் இல்லை. 

ஒரு ஆட்டோ கிடைச்சது.  நமக்கு இப்போ  ராமானுஜ மடம் போகணும்.  துல்ஸிகாட் பக்கம் இருக்கு.  போனமுறை போனபோது எடுத்த  படம் ஒன்னு (அட்ரஸ் காமிக்க ) செல்லில் வச்சுக்கிட்டேன். 
ஆட்டோக்காரர்கிட்டே படத்தில் இருக்கும் அட்ரஸ் காமிச்சதும்  வண்டியைக் கிளப்பிட்டார்.  போறோம் , போறோம் போய்க்கிட்டே இருக்கோம். ஒரு இடத்தில்  பாலத்தில் ஏறிப்போய் கங்கையைக் கடந்தோம்.  அக்கம் பக்கம் விசாரிக்கலாமுன்னா....   எங்கே...   ஏதோ இன்டஸ்ட்ரியல் ஏரியா மாதிரி இருக்கு.  வண்டியை நிறுத்தச் சொல்லி, நம்மவர் இறங்கி ஒரு டீக்கடையில் விசாரிச்சார்.  என் செல்ஃபோன் படத்தைக் காமிச்சதும் சுத்தியிருந்த  ஒரு ஏழெட்டு மக்கள், ஃபோனை ஒருத்தர் மாத்தி ஒருவர் வாங்கிப் படத்தை உத்துப்பார்த்துட்டு, ஏழெட்டு வழி சொன்னாங்க.  ஒருத்தர் மட்டும் நீங்க ரொம்ப தூரம் வந்துட்டீங்கன்னவர், ஆட்டோக்காரர்கிட்டே  வழி சொன்னார்.  திரும்பப் பாலம் கடந்து போய் இடப்பக்கம் திரும்பினோம்.  
இங்கேயும் ஒவ்வொரு  தெருவிலும் இருக்கும்  டீக்கடையில்தான் விசாரிக்க வேண்டி இருக்கு.  அங்கேதானே  எப்படியும் ஒரு ரெண்டு மூணுபேராவது  இருக்காங்க !  அவுங்களும் ஆளாளுக்கொன்னு  சொன்னாங்க.  சுத்திச் சுத்தி வந்தோங்க....   மஹாவிஷ்ணு மந்திர்......  'லெய்ட்டேஹுவா மூர்த்தி....'    ன்னு  'கிடந்தான் போஸ்'  எல்லாம் அபிநயிக்க வேண்டி இருக்கு. 

ஒன்னரை மணி நேரச் சுத்தலின் கடைசியில்  ஒரு பெட்டிக்கடையில்  விசாரிச்சால்... இதோன்னு எதிரில் கை காட்டினார் !
காம்பவுண்டு சுவர் கட்டி கேட் எல்லாம் போட்டுருக்காங்க. 'ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ' ஒருக்களிச்சுருந்த கேட் வழியாப் பார்த்தால்........ ஹா.... இதுதான்....  இதுதான் !
அன்றும் இன்றும் ஏகப்பட்ட மாறுதல்கள் !  படிகள் மட்டும் அப்படியே....    மேலே கோவில், சந்நிதிகள் எல்லாம் அன்று போலவே !

கீழே முற்றத்தில் முன்பு வாழைத்தோட்டம். இப்போ ஒரு யாககுண்டம் கட்டிக்கிட்டு இருக்காங்க.   கொடிகட்டித் துணிகள் காயப்போட்டுருக்காங்க.
காசியில் பெரிய திருவடிக்குத் தடா இருந்த காலம் மாறிப்போயிருக்கு ! (தடா சமாச்சாரம் போனபதிவில் இருக்கு. கீழே ஒரு சுட்டி கொடுத்துருக்கேன்.  பார்க்க விருப்பம் இருந்தால் பார்த்துக்கலாம் )  முற்றத்தில்  மேலே மாடியில் இருக்கும் மூலவரை நோக்கியபடி  பெரிய சிறிய திருவடிகள் !
போனபயணத்தில் எழுதிய பதிவின் சுட்டி கீழே !

http://thulasidhalam.blogspot.com/2014/05/blog-post.html

மாடியில்  சேஷன் குடைபிடிக்க விஸ்ராந்தியாக் கிடக்கிறார் ரங்கநாதர் ! போக சயனமாம். காலாண்டை மஹாலக்ஷ்மி.


கம்பிக்கதவு வழியாக தரிசனம். பண்டிட் கூட இல்லை. இந்த இடத்தோட சரியான விலாசம் அவராண்டை கேட்டுக்கணும் என்றிருந்தேன். 







ஆழ்வார்களும், ஆண்டாளும், ஸ்ரீ ராமானுஜரும், பெருமாளும்தாயாரும், நம்ம ஆஞ்சியும்   இருந்த  இடத்தில்  இருந்தபடி !  'தூமணிமாடத்து' ஆச்சு !
அப்பதான் ஒரு பாட்டியம்மா வந்தாங்க. ஒடிசலான ஒடம்பு.  கையோடு கொண்டுவந்துருந்த  , எண்ணெயில்  முக்கி எடுத்த திரியைக் கொளுத்தி தீபம் காட்டினாங்க.  ஆச்சு தீபாராதனை !  வீடு பக்கத்தில்தானாம்.  மகன் தினமும் கொண்டு விட்டுட்டுப் போவாராம். சாமிகிட்டே குறையெல்லாம் சொல்லி அழுது, கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்துட்டு, மெல்ல நடந்து வீட்டுக்குப் போயிருவாங்களாம். 
மனுச ஜன்மம், எதுக்குன்னுதான் கவலைப்படறது ?  ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தேன்.  விதி முடியும்வரை வாழ்ந்துதானே ஆகணும்.  அப்பதான் கேக்கறாங்க.... இது என்ன சாமின்னு !  எங்கூரு சாமி. பக்கா மதராஸி,  இந்த ரங்கன்னு சொன்னதும் ஒரே சிரிப்பு :-)

பாட்டிக்குத் தீபாவளி அன்பளிப்பு கொஞ்சம் கொடுத்துட்டு, நம்மவராண்டை, 'உண்டியலில் போடும் காசைப் பாட்டியிடம் கொடுத்து கொஞ்சநாளைக்கு தினமும் நம்ம வகையில் ஒரு திரி விளக்குப் போடச் சொல்லலாமா'ன்னு கேட்டேன். 'பிரச்சனையே இல்லை. ஆனால் கோவில் இருக்கும் நிலை பார்த்தியா ?  உண்டியலிலும் போடத்தான் வேணும்' என்றார். ஆச்சு !  பாட்டிக்கும் சந்தோஷமே !  ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டேன்.

கருவறையில்தான் சில மாற்றங்கள்.   திரைக்குப் பதிலா கம்பிக் கதவு !  உள்ளே ஒரு பக்கம் சிம்ஹாஸனம் போட்டு, சிலபடங்கள் வச்சுருக்காங்க. க்ருஷ்ணன் !  ஜீயர் ? 
தீபாவளிக்குப் பெருமாள் தரிசனம் திருப்தியா அமைஞ்சது. ஆனால்  சரியாச் சொல்ல அட்ரஸ் தெரியலையே.....




பத்து நிமிட் உக்கார்ந்துருந்துட்டுப் பாட்டியிடமும் பெருமாளிடமும்  சொல்லிக்கிட்டுக் கிளம்பினோம்.

தொடரும்............. :-)      



7 comments:

said...

தீபாவளி அன்று நிஜமாகவே கங்கா ஸ்நானம்! சூப்பர்.


என்ன சாமின்னே தெரியாம குறைகளைக் கொட்ட வந்த பாட்டி... ஏதோ ஆறுதல் கிடைச்சா சரி.

said...

வாங்க ஸ்ரீராம்,

எனக்கும் நிஜ கங்கா ஸ்நானம் கிடைச்சதில் திருப்திதான் !

பாட்டிதான் நிஜமான அத்வைதி ! சாமி எதுவானாலும் ஒன்னுதான்னு மனசார நம்பி, தினம் வந்து தீபாராதனை செஞ்சுட்டுப்போறாங்க பாருங்க !

said...

அருமை நன்றி

said...

தீபாவளி நன்நாளில் புனித கங்கா ஸ்தானம் அதுவும் அவளருள் கொடுத்து வைத்தவர் நீங்கள்.

பெருமாள் தரிசனமும் கிடைத்திருக்கிறது. குதூகலம் தீபாவளி தான் அந்நேரம் தீ பட்ட கை வேதனையும் பறந்திருக்கும்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. எல்லாம் அவன் அருள் !!!

நல்லவேளையாகத் தீ பட்ட இடத்தில் கொப்புளம் வரலை. தப்பித்தேன். லேசான எரிச்சல்தான் இருந்தது. பெருமாளைப் பார்த்ததும் அதுவும் போனது !

said...

கங்கா ஸ்தானமும், அருமையான தரிசனமும் ...அருமை மா