கோவில் புதையுண்டு இருந்த காலத்தில், இந்தப்பக்கமா வேட்டையாட வந்த தர்மவர்மன் காதில் கோவில் இருக்கும் விவரத்தைச் சொன்னதே கிளிதானாம். அதை நினைவு கூறவே கிளிமண்டபம் ஒன்னு கட்டினாராம் அரசர். எப்பவும் ரெங்கா ரெங்கன்னு அழகாக் கிள்ளை மொழிகள் பேசிக்கொண்டிருக்குமாம் அங்கே! ஹைய்யோ!!! மயக்குமோ! மயக்கத்துடன் அனுபவிக்கணும்.
பெரிய கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். இப்பவும் ரங்கா ரங்கா ரங்கா கோபுர முகப்பு கண்ணில் படலை:( சரியா கோபுரவாசலுக்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்துனா????
ரெங்கவிலாஸ் மண்டபக் கோவில்கடைகள் வெய்யில் தணிஞ்சதால் முன்னேறி இருக்கு. காலையில் கண்ணில்படாத குட்டிக்கல்லுரல்களின் அழகு வரிசை அபாரம். கோபுரதரிசன சீட்டு விற்கும் மேசைக்குப்போய் அங்கிருந்த பெண்ணிடம் அன்னப்பெருமாளைப் பற்றி விசாரிச்சேன். இப்ப மூணாவதுமுறையா நம்மைத் தொடர்ந்து பார்த்ததால் ஓரளவு பரிசயமாகி இருந்தோம். அப்படி ஒன்னு இங்கே இல்லையேன்னு முழிச்சாங்க.
அதுக்குள்ளே நம்ப காளி முத்து அங்கே வந்து சேர்ந்தார். நம்மைப் பார்த்ததும் புன்சிரிப்பு. கிளிமண்டபம் பார்க்கலை விட்டுப் போச்சுன்னேன். அது அங்கெதானே இருந்ததுன்னு சொல்லி எங்ககூடவே வந்தார். 'பச்சைக்கிளிகள் எல்லாம் ரெங்கா சொல்லுதா?'ன்னேன். அங்கே ஏது கிளின்னார். தர்மவர்மனுக்கு கோவிலைக் காட்டுச்சாமே கிளி! அதுக்குத்தானே நன்றி சொல்ல ஒரு கிளிமண்டபமே கட்டியிருக்காங்கன்னதும்..... அப்படியெல்லாம் ஒன்னுமே இல்லை. இது கிள்ளிவளவன் கட்டிய மண்டபம். கிள்ளிமண்டபம் இப்போ கிளிமண்டபமா ஆகி இருக்குன்னார்.
"அப்போ கிளி? "
"சின்ன கூண்டுலே ஒன்னு இருக்கு. அது பொம்மைக்கிளி"
சோகமாப்போயிருச்சு எனக்கு. ரேவதி மண்டபம், அர்ஜுனமண்டபம் இருக்கும் திருச்சுற்றிலே கிளிமண்டபம் இருக்கு. சொன்னாப்படி உள்விதானத்தின் உச்சியில் சின்ன கூண்டும் பொம்மைக் கிளியும்:( அப்பதான் கவனிக்கிறேன் எதிர்மூலையில் குட்டியா ரெண்டு சந்நிதிகள். உள்ளே சிலை ஒன்றுமில்லை. ஓவியம்தான். துலுக்க நாச்சியார்! இன்னொரு சந்நிதியில் சேரகுலவல்லி!
Thanks to Deepak Saagar
தில்லிப்படைகள் கோவிலில் இருந்த செல்வங்களையும் நம்பெருமாளையும் மற்ற விக்கிரங்களையும் கொள்ளையடிச்சுக்கிட்டுப்போய் தில்லி சுல்தானுக்குக் காணிக்கையாக் கொடுத்துட்டாங்க. மனம் மகிழ்ந்த சுல்தான் படைவீரர்களுக்கு செல்வத்தைப் பங்கு பிரிச்சுக்கொடுக்கும்போது அங்கே வந்த சுல்தானின் மகள் சுரதாணி, அழகிய மணவாளனின் அழகில் மயங்கி தனக்கு அந்த 'பொம்மை' வேணுமுன்னு கேட்டு வாங்கிக்கிறாள்.
அல்லும் பகலும் பொம்மைகூடவே பொழுது போறது. இனி அந்த பொம்மையை விட்டு ஒரு நாளும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்ற நிலைக்கு வந்துட்டாள்.
Thanks to Deepak Saagar.
இங்கேயோ ரெங்கனை விட்டுப் பிரிஞ்ச துயரில் வாடிக் கிடக்கிறாள் இன்னொருத்தி. கோவிலில் ஆடிப்பாடி இறைவனை மகிழ்விக்கும் பெண்களில் ஒருத்தி. இவளும் நம்பெருமாளைத்தேடி தில்லிப்படைகள் போன வழியாப்போய் கடைசியில் சுல்தான் மகளிடம் அவன் இருப்பதைக் கண்டு பிடிச்சுடறாள். பூஜை புனஸ்காரங்கள் ஒன்னும் இல்லாம விரிச்சோடிக்கிடக்கும் ஸ்ரீரங்கம் வந்து கோவில் பொறுப்பாளர்களுக்கு சேதி சொல்லிடறாள். இவளுக்கு 'பின் சென்ற வல்லி'ன்னு பெயர் உண்டாச்சு.
எப்படியாவது நம்பெருமாளைத் திரும்பிக்கொண்டு வந்துடணுமுன்னு திட்டம் போடறாங்க. பெரிய நடனக்குழு ஒன்னு புறப்பட்டுப்போய் சுல்தான் முன் ஆடுது. மனம் மகிழ்ந்த சுல்தான் பொன்னும் பொருளுமா வாரிக்கொடுக்கிறான். இதெல்லாம் வேண்டாம். விக்கிரஹத்தைத் திருப்பித்தந்தால் போதுமுன்னு கெஞ்சறாங்க. என்ன ஏதுன்னு புரியாமல் முழிக்கும் சுல்தானுக்கு அவனுடைய மகளின் பொம்மை பற்றிய விவரம் கிடைக்குது. கேட்டால் குழந்தை தரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாள்.
என்ன செய்யலாமுன்னு யோசிச்சுக் கடைசியில் குழந்தை தூங்கும் சமயம் பொம்மையைத் தூக்கிக் கொடுத்துடறார். ஆனந்தத்தோடு அதை வாங்கிக்கிட்டவுங்க ஓட்டமும் நடையுமா ஊருக்குத் திரும்பறாங்க. மறுநாள் பொழுது விடிஞ்சவுடன் பொம்மையைக் காணோமுன்னு குழந்தை அழுது அடம்பிடிக்கறாள். அன்ன ஆஹாரமில்லாமல் அழுது அழுது உடல்நிலை மோசமாகிருது. தாங்க முடியாத நிலைக்குப்போன சுல்தான், திரும்பப்போய் வாங்கி வர படை வீரர்களை அனுப்பறான். குழந்தை சுரதாணியும் கூடவே வர்றாள்.
தொடர்ந்து வரும் தில்லிப்படை வீரர்களிடமிருந்து நம்பெருமாளைக் காப்பாத்த அவனைத் தூக்கிக்கொண்டு போனவர்கள் திருவரங்கம் வராமல் கர்நாடகா மேலக்கோட்டைக்குக் கொண்டு போயிடறாங்க. ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதாணி, அவளுடைய பொம்மை இன்னும் இங்கே வந்து சேரலைன்ற விவரம் தெரிஞ்சதும் மயங்கி விழுந்து உயிரை விட்டுடறாள். அவளைத்தான் பெருமாள் மேல் காதல் கொண்ட பீபி நாச்சியார்ன்னு கோவில்கட்டி கும்பிட ஆரம்பிச்சது சனம்,.
Thanks to Deepak Saagar
தில்லிக்காரிக்கு சோறு ஆகாதுன்னு சப்பாத்தி நைவேத்தியம் ஸ்பெஷலா நடக்குது இங்கே! பெருமாள் லுங்கி கூடக் கட்டிக்கறானாம்! எங்காத்துலே பழக்கம் இல்லைன்னு சொல்லி மனசை நோகடிக்காமல் உனக்காக இதையெல்லாம் நான் செய்வேன்னு சொல்லிச் செய்யறான் பாருங்க அந்த அன்புதான் பெருசு.
ஒளிச்சு வைக்கப்பட்ட அழகியமணாளனை ஒரு வழியா பெரிய கோவிலுக்குக் கொண்டு வந்துடறாங்க. இங்கிருந்து போனவன் , திரும்பிவர அறுவது ஆண்டுகளாச்சாம். இதுக்கிடையில் கொஞ்ச நாளுக்கு முன்னாலே பூமிக்கடியில் ஒளிச்சு வைக்கப்பட்ட ரங்கநாயகித் தாயாரின் திருவுருவம், தானே கிளம்பி மேலே வந்துருக்கு! தாயார் சிலை எங்கிருக்குன்னு தெரியாமல் அல்லாடிய அன்பர்களும் அரசனும் வேற ஒரு சிலை செய்து மூலவராக்கிட்டாங்க. இப்ப ஒன்னு மண்ணில் இருந்து கிளம்பியதும் என்ன செய்யறதுன்னு யோசிச்சு, இவர்தான் ஒரிஜினல்னு புரிஞ்சுபோனதால் இவரை மறுபடியும் தாயார் சந்நிதிக்குள்ளேயே ஸ்தாபனம் செஞ்சாங்க. அதுவரை மூலவரா ஆக்ட் கொடுத்தவரை அப்படியே ஒதுக்கித் தள்ளிட முடியுமா? அதனால் தாயார் சந்நிதியில் இப்போ ரெண்டு மூலவர்களும் இருக்காங்க.
இப்பத் திரும்பி வந்த அழகியமணவாளன் கூட ஒரிஜினலா இல்லையான்னு சந்தேகம் வந்துருது. இவன் கூடப்போனவர்கள் யாருமே இப்போ உயிரோடு இல்லை. இவனைத் தெரிந்த பக்தர்கள் யாராவது இருக்காங்களான்னு தேடுனப்ப, 90+ வயசில் ஒருத்தர் கிடைக்கிறார். பெரும்ஆளுக்கு உடைகளைத் துவைச்சுக்கொடுத்த பெரியவர். மூத்து ,வயசாகி இப்போ கண்பார்வையும் இல்லை இவருக்கு. 'பெருமாளைக் குளிப்பாட்டிய திருமஞ்சன நீர் கொடுங்கோ, இவர் நம்மவரா'ன்னு சொல்றேன்னார். அப்படியே ஆச்சு. அதை முகர்ந்து சுவைத்தவர், கரகரன்னு கண்ணில் நீர் வழிய 'இவர் நம்பெருமாளே, நம் பெருமாளே' ன்னு பக்திப் பெருக்கால் கூவினார். அப்போலெஇருந்துதான் அழகியமணவாளருக்கு நம்பெருமாள் என்ற பெயர் கிடைத்தது! அழகியமணவாளரின் திருமஞ்சன நீருக்கு அப்படி ஒரு தனிச்சுவையும் மணமும் உண்டாம்!!!!
சேரகுலவல்லி? நம்ம குலசேகராழ்வாரின் மகள். சேர நாட்டு மன்னர் குலசேகரர் , பெருமாளிடம் அளவில்லாத பக்தி. அவர் 'படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'ன்னால் அவர் மகள் இன்னும் ஒரு படி மேலே போய் கல்யாணமுன்னு பண்ணிக்கிட்டால் உன்னைத்தான்னு சொல்லிட்டாள். ஒரு நாள் கல்யாணமும் ஆச்சு. அன்னிக்கு ஸ்ரீராம நவமி வேற! பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தவர், மாமனார் என்ற ஹோதாவில் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்காம எதுவும் வேணாம் உன் கோவில் வாசலில் ஒரு படியாகக்கிடந்தாலும் போதும் என்கிறார்.
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
இப்படி டௌன் டு எர்த் ஆகி பரமபதநாதனை விட்டால் வேற யாருமில்லைன்னு இருந்தே ஆழ்வார்கள் வரிசையில் சேர்ந்துட்டார் நம்ம குலசேகராழ்வார். திருப்பதி வேங்கடவனுக்கும் திருவரங்கம் ரெங்கனுக்கும் நிறையச் செய்கிறார். பெரிய கோவிலில் மூணாவது சுற்றுக்கே குலசேகரன் திருவீதி என்றுதான் பெயர்.
நம்ம ரெங்கனுக்கு ஏகப்பட்ட நாச்சியார்கள் இங்கே! எண்ணிப்பார்த்தால் பனிரெண்டுன்னு தாளிச்சுட்டாங்க நம்ம ஜெயஸ்ரீ.
அன்னமூர்த்தியைப் பற்றி விசாரிச்சதில் கொஞ்ச நேரம் யோசித்த கே எம் கொடிமரத்துக்கு வலது பக்கத்தில் இருக்குன்னு நினைக்கிறேன் என்றார். இதுக்குள்ளே நாங்க பேசிக்கிட்டே வெளியே நாலாம் சுற்றுக்கு (ரெங்கவிலாஸின் மறுபக்கத்துக்கு )வந்திருந்தோம். சரி. நாங்க பார்த்துக்குறோம். உங்கள் சேவை வேற யாருக்காவது தேவைப்படுமுன்னு அவருக்கு நன்றி சொல்லிட்டு நாங்க தேடிக்கிட்டு இருந்தோம். கடைசியில் கொடிமரத்துக்கு வலது பக்கம் வெளி முற்றத்தை நோக்கி ஒரு மூலையில் சந்நிதி ஒன்னில் தனியா ஆடாம அசையாம உக்கார்ந்துருக்கார் அன்னமூர்த்திப்பெருமாள். ஒரு கை அபய ஹஸ்தம் காண்பிக்க மறு கையில் சோற்றுருண்டை! கொஞ்சம்கூட வருமானமே இல்லாத சந்நிதி போலிருக்கு. ஈ காக்காவைக் காணோம். நமஸ்காரம் செஞ்சு ஃப்யூச்சர் ரசஞ்சாதத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மன்றாடிட்டு வெளியே அதே ரெங்கவிலாஸின் மறுபக்கத்துக்கு(சக்ரத்தாழ்வார் சந்நிதி இருக்கும் பக்கம்) வந்தோம்.
Thanks to Hindu.
மண்டபத்தில் இருக்காள் ஆண்டாள்! கால்களைக் கொஞ்சம் கொஞ்சமாக் கவனமா வச்சு ரிவர்ஸில் நடப்பதை வியப்போடு பார்த்தேன். மண்டபத்தின் ஓரத்துக்கு வந்துட்டாள். இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் தொபுக்கடீர் என்று விழநேரிடும். அப்போ ஒரு பணியாளர் பெரிய ப்ளாஸ்டிக் ட்ரம்மைக் கொண்டு வந்து வைக்க,செல்லம் ஒன் பாத்ரூம் போறதுப்பா!!!! கேமெரா டிக்கெட் வாங்கிக்கலையேன்னு இருந்தாலும், பாவம் பொண். எதுக்குப் படமெடுக்கணும்? ப்ரைவஸி வேணாமான்னு இருந்துட்டேன். அவளுக்கு முன் கூட்டம் கூட ஆரம்பிச்சது. நல்லா இருடீம்மான்னு வாழ்த்திட்டு ரங்கா ரங்கா கோபுரத்தை முற்றத்துள்ளிருந்து ஏறிட்டு பார்த்துட்டு வெளியே வந்தோம்.இனி எப்போ வரப்போறோமோன்னு இருந்துச்சு.
கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் பல பகுதிகளும் தில்லிப்படையினரால் அழிக்கப்பட்டு பலமுறை சேதமாகி இருக்கு. கோவிலுக்குள்ளேயே வந்து குடி இருந்துருக்காங்கன்னா பாருங்க:( பக்தர்களும் அப்போதிருந்த மன்னர்களும் மனம்தளராமல் மீண்டும் மீண்டும் புதுப்பிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க. அதனால்தான் நமக்கு இவ்வளவாவது காணக்கிடைச்சிருக்கு.
ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்திய ஒழுங்கு முறைகள் எல்லாம் தில்லிப்படை வரும்வரை ஒழுங்காவே நடந்துருக்கு. அப்புறம்தான் சில மாற்றங்கள் சப்பாத்தி சமாச்சாரம் எல்லாம் அப்புறம் வந்தவையே! பொதுவா நாம் வெத்தலை போட்டுக்க சுண்ணாம்பை வெத்தலையின் பின்புறத்தில் தானே தடவுவோம். இங்கென்னன்னா பெருமாளுக்குத் தாம்பூலம் தரும்போது வெற்றிலையின் முன்பக்கத்தில் சுண்ணம் தடவுறாங்களாம். எல்லாம் ஸோ அண்ட் ஸோ படையெடுத்து வந்தபின் ஏற்பட்ட மாறுதலே!
நம்ம கீதாம்மா இருக்காங்களே (கீதா சாம்பசிவம்) அவுங்க இந்தப் படையெடுப்பினால் ரெங்கன் பட்ட பாட்டையெல்லாம் ஆராய்ந்து ரொம்பவே அருமையா ஒரு தொடர் எழுதி இருக்காங்க. ஒரு 27 இடுகைகள் இதுவரை. வரலாறு ஒரு 15 பகுதிகள். அதுக்கப்புறம் அங்கே கொண்டாடப்படும் விழாக்களைப்பற்றிய விரிவான வர்ணனைகள் என்று தொடர் அபாரம்! நான் ரசித்துப் படிக்கும் தொடர்களில் இது(வும்) ஒன்னு. முதல் முகவுரை இது.இப்படியே நூல்பிடிச்சுப்போய் வாசிங்க. உங்களுக்கெல்லாம் கட்டாயம் பிடிச்சுப்போகும்,ஆமாம்!
இங்கே நியூஸி, ஆஸி, சிங்கைன்னு அநேகமா எல்லா வெளிநாடுகளிலும் ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க் போனால் கூட எதெது எங்கே இருக்குன்ற விவரங்கள் அடங்கிய மேப் ஒன்னைக் கையில் கொடுத்துருவாங்க. நமக்கும் எதையும் விடாமப் பார்த்து அனுபவிச்ச திருப்தி இருக்கும்.
இங்கே இது ஒன்னும் சின்னக்கோவில் இல்லை.156 ஏக்கர்! கிட்டத்தட்ட 80 சந்நிதிகள், கணக்கில்லாத மண்டபங்கள் என்று இருக்கும்போது கோவில் வரைபடம் ஒன்னு அச்சடிச்சு விற்றால்கூட ரொம்பப் பயனாக இருக்கும். நமக்கும் எந்த சந்நிதியையும் விடாமல் பார்த்த மனநிறைவு இருக்கும்தானே?
இப்பப் பாருங்க மூணு முறை வந்தும் பார்க்காமல் கோட்டை விட்டவை அநேகம். ஹனுமன் சந்நிதிக்குப் பக்கம் தங்கவிமானம் பார்க்க ஏறிப்போகும் படிவரிசை கூட இருக்காமே!
ஸ்ரீரங்கம் விட்டுக் கிளம்புமுன் கடைசியா காஃபி ஒன்னு குடிக்கணும். அதுவும் அந்த முரளி கடையில் என்று தோணுச்சு. சீனிவாசன் போய் விசாரிச்சுக்கிட்டு வந்து வண்டியை அங்கே செலுத்தினார். ஸ்ரீரங்கம் போலிஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கு கடை. பயங்கரமான கூட்டம்! வண்டியை நிறுத்த இடமில்லை. ஸ்டேஷன் வாசலில் டபிள் பார்க்கிங் போட முடியுமா? நாங்க மட்டும் இறங்கினோம். கோபால் போய் பத்து ரூபாய் ஒரு கப் என்று ரெண்டு காஃபி வாங்கியாந்தார்.
நல்ல காஃபியா இருந்துச்சு. வெளியே நிறைய மேசைகள் மட்டும் போட்டு, நின்னவாக்குலே குடிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். பெரிய பெரிய பித்தளை ஃபில்ட்டர்களில் டிகாஷன் இறங்கிக்கிட்டே இருக்கு ஒரு பக்கம். பணியாளர்கள் எல்லாம் பயங்கர பிஸி. சுறுசுறுப்பாய் வேலையில் மூழ்கி இருந்தாங்க. பெயர்ப்பலகை கூட இல்லாமல் சிம்பிளா பலவருசங்களா நடக்குதாம் இந்தக் காஃபிக் கடை!
இருளில் வண்டி திருச்சியை நோக்கிப் போனது. கோவிலை சரியாப் பார்க்கவே இல்லைன்னு முணுமுணுத்தேன். மூணு முறை வந்துமான்னார் கோபால். ஆமாம்னு நான் தலையாட்டியது இருட்டில் அவருக்குத் தெரிஞ்சுருக்குமோ?
தொடரும்.............:-)