நம்ம அலாஸ்கா பயணப்பதிவு முடிஞ்சதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாமேன்னு இன்னொரு பயணத்துக்கு ஆயுத்தமானோம். இந்த முறை இந்தியா. ஏறக்கொறைய ரெண்டு வருஷமாச்சே......
ஆகஸ்ட் கடைசியில் கிளம்புவதால் இந்த வருஷப் பிள்ளையார் சதுர்த்திக்கு இங்கே இருக்கமாட்டோம். நம்ம ஹிந்து ஸ்வயம் ஸேவக் குழுவின், களிமண் பிள்ளையார் செய்யும் ஒர்க்ஷாப்பும் செப்டம்பர் முதல் தேதிக்குத்தான் வச்சுருக்காங்க. இந்த வருஷம் பிள்ளையாரும் செய்ய முடியாது......
மேலும் நம்மூர் புள்ளையார் கோவிலுக்காக வந்திறங்கிய மூலவரை, சாஸ்த்திர சம்ப்ரதாயப்பிரகாரம் செப்டம்பர் 15 தேதி பிரதிஷ்டை செய்யும் வைபவம் வச்சுருக்காங்க கோவில் நிர்வாகத்தினர். ஒரு மண்டலம் ஜலவாஸம் முடிச்சு, அதுக்குப்பிறகு தனம், தான்யம், புஷ்பம், வஸ்த்ரம் என்ற வகை வகையான வாஸங்கள் எல்லாமும் முடிஞ்சு இப்போ சயனவாஸத்தில் இருக்கார். கும்பாபிஷேகத்துக்கு நாம் இங்கே இருக்கமாட்டோம்..... என்ன செய்யறது..... புள்ளையாரிடமே மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். 'ஆக்கப்பொறுத்தவள், இப்படி ஆறப்பொறுக்கலைன்னா எப்படி? இரு உன்னை....'ன்னு, கடைசியில் புள்ளையார் சதுர்த்தி, கோவில் கும்பாபிஷேகம், நவராத்ரி எல்லாம் இங்கேயே இருந்து செய்யும்படி உத்தரவாச்சு !
நல்ல வேளையா ஸ்ரீக்ருஷ்ண ஜயந்தி, ஆகஸ்ட் மாசமே வந்ததால் வீட்டுக்ருஷ்ணனோடு கொண்டாட முடிஞ்சது. இந்தியாவில் நவராத்ரி எல்லாம் முடிச்சு, தீபாவளிக்கு ரெண்டு நாட்கள் இருக்கும்போது திரும்பிவர்றதா இருக்கு, நம்ம திட்டம்.
ஆகஸ்ட் தொடக்கத்திலேயே கால் வலி கொஞ்சம் அதிகரிச்சதுதான். நமக்குத்தான் ஒரு பதினைஞ்சு வருஷமா இந்த முழங்கால் முட்டி பிரச்சனை இருக்கேன்னு அவ்வளவாப் பொருட்படுத்தலை. இந்த அழகில் ஒருநாள் யோகா வகுப்பில் முழங்காலை தொன்னூறு டிகிரியில் திருப்பும் பயிற்சி வேற இருந்ததா...... ஆ...... காரணம் ஆப்டுடுச்சு.... முழங்கால் வலி திடீர்னு அதிகமானதுக்கு இந்த தொன்னூறே காரணம் என்ற பழியைத் தூக்கி அதன்மேல் போட்டேன்.
நம்மவர், உடனே ஃபிஸியோதெரபி க்ளினிக் போய் சரிப்படுத்திக்கலாமுன்னு ஏற்பாடு செஞ்சுட்டார். அங்கே போய் விவரம் சொல்லி பயிற்சி ஆரம்பிச்சது. முதல்நாள் முழங்கால் மஸாஜ்தான். நல்லா வீங்கிக்கிடக்கு ! காலில் வெயிட் போடாமல் நடக்க ரெண்டு கட்டைக்கால் (ஊன்றுகோல் )கொடுத்தாங்க. இது ஒன்னுதான் நம்ம அனுபவங்களில் பாக்கி இருந்தது போல.....
மூணாம் நாள் பயிற்சி கொஞ்சம் கடினமா இருந்தது. அன்றைக்கு ஒரு இந்தியர்தான்(கேரளா) நம்ம தெரப்பிஸ்ட். வலி வலின்னு சும்மா இருக்கக்கூடாது..... காலைப் பயன்படுத்தணும். இல்லைன்னா.... காலை இழக்கவேண்டியும் ஆகலாம்னு (Use it or loose it )சொன்னாரா.... உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது உண்மை.
இதுக்கிடையில் நம்ம உள்ளூர் நண்பர் , ஒரு மருந்து கொண்டு வந்து கொடுத்துட்டு , சீக்கிரம் காலில் குணம் தெரியும்னு சொன்னார்.
நம்மவர் சும்மா இருப்பாரா..... கூகுள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டாரோ இல்லையோ.... ஏகப்பட்ட மருந்து மாயங்களுக்கு விளம்பரங்களா வந்து நம்ம செல்ஃபோனில் குவிய ஆரம்பிச்சது. நம்ம சம்பந்திகள் , முழங்கால் வலிக்கு நல்லா கேக்குதுன்னு, அவுங்களுக்கு வாங்கியதில் ஒரு பேட்ச் கொடுத்தாங்க. உடனே நம்மவரும் மெயில் ஆர்டரில் நாலு பேக்கட் வாங்கிட்டார்.
இந்தமாதிரி வலிகளுக்கெல்லாம் ஆயுர்வேதம்தான் சிறப்புன்னு வலையில் தேடியதில், வடக்குத்தீவில் ஒரு ஆயுர்வேத டாக்டர் இருக்கறாங்கன்னு தெரிஞ்சது. கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை மருந்துகள் அங்கே கிடைக்குமாம். அவுங்ககிட்டே இருந்து 'பங்கஜக் கஸ்தூரி ஆர்த்தோஹெர்ப் ஆயில்' ஒரு வரவழைச்சார் நம்மவர்.
உண்மையில் இவர் என்ன மருந்து மெயில் ஆர்டரில் வாங்கறார்னு எனக்குத் தெரியவே தெரியாது. தினம் ஏதாவது கூரியர் நம்ம வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கு ! 'எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் ' என்ற நிலையில் இருக்கார். விளம்பரங்களையெல்லாம் நம்பும் அப்பாவி!!!! இதெல்லாம் போதாமல்.... கைத்தடி, மூணு வகைகளில் Knee Braces..... etc. காரில் ஏறி ஸீட்டில் சரியா உக்கார ஒரு டர்ன்டேபிள் போல 360 டிகிரி சுத்தும், (Car Seat Swivel – Rotating Car Seat Cushion) சமாச்சாரம். உடம்பைத் திருப்பி ஈஸியா இறங்க காரில் மாட்டும் கைப்பிடி......(Universal Car Door Handle ....)
இந்தியன் கடைக்கு உப்புப்புளிமொளகா வாங்கப்போனப்ப, அங்கிருந்து 'டாக்டர் ஆர்த்தோ' ன்னு ஒரு தைலம்.
மருத்துவர்தோழி, எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கலாம் என்றவுடன், நம்ம குடும்ப மருத்துவரிடம் சொல்லி எக்ஸ்ரேயும், அல்ட்ரா ஸ்கேனும் ஆச்சு. ரிப்போர்ட் வந்தாட்டுதான் முழங்காலில் உள்ளே நீர் கட்டிக்கிட்டு இருக்குன்னு தெரிஞ்சது. இன்னும் நம் நிலையைத் தெளிவாத் தெரிஞ்சுக்கலாமேன்னு MRI வேற எடுத்தோம். சுத்தம்...... எலும்பில் சின்ன முறிவு, அடுத்துள்ள தசையில் கிழிசல்கள் , கூடவே குளம் கட்டி இருப்பதும். போதுமா ?
இனி இதற்கான சிறப்பு மருத்துவரைப் பார்க்கணும். இங்கே சட்னு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்காது. நம்ம குடும்ப மருத்துவரைப் பார்க்கவே மூணுநாள் காத்திருக்கணும். அந்த அழகில் சிறப்பு மருத்துவர்..... ? ஒரு மூணு மாசம்.... அதுவும் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்!!! சில சமயம் ஆறுமாசங்கூட ஆகலாம். நம்ம விதி நல்லா இருந்தால் அதுவரை மேலே போகாமல் இருப்போம்.
உள்ளுரில் பொதுமருத்துவமனை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்றாலும். அங்கே நம் நிலையின் வீரியத்தைப் பொறுத்து காத்திருக்க வேணும். எவ்வளவு நாள்/மாதம்/ வருஷம் எல்லாம் சொல்ல முடியாது. உயிருக்கு ஆபத்து இருந்தால்தான் முன்னுரிமை ! ஒன்னு சொல்லிக்கணும்.... இங்கே மருத்துவமனையில் எல்லாம் முற்றிலும் இலவசமே !!!
இங்கே தனியார் மருத்துவமனைகள் கிடையாது. ஆனால் சகல நோய்களுக்கும் தனித்தனி சிறப்பு மருத்துவர்கள் ஏராளம். அப்படி ஒருவரை நாம் பார்த்தே ஆகணும். இந்தியாவுக்குப் போய் வைத்தியம் பார்த்துக்கலாமான்னால்.... நடக்கவே முடியாத நிலையில் பயணம் எப்படி ? அதுவும் சிங்கப்பூர் வரைக்குமே பதினொரு மணி பறக்கணுமே.....
மனசில்லா மனத்தோடு ஊருக்குக் கிளம்ப ரெண்டுநாள் இருக்கும்போது இந்தியப் பயணத்தை கேன்ஸல் செஞ்சோம். இனி ஓரளவாவது குணம் ஆகும்வரை எங்கேயும் போகக்கூடாது......
காலில் வெயிட் போடாமல் நடக்கறது அவ்ளோ சுலபமில்லை. Elbow crutches வச்சு நடக்கும்போது தோளிலும் மேற்கையிலும் ப்ரெஷர் கூடுதலாகி அது ஒரு எக்ஸ்ட்ரா வலி. அதனால் மொபிலிடி சென்ட்டரில் ஒரு 4 Wheel Rollator Walker வாடகைக்கு எடுத்தோம். சமீபத்தில் சொந்தமா ஒன்னு வாங்கியிருக்கோம். உண்மையில் எனக்கு அந்த பேட்டரி வீல்ச்சேர் மேலே ஒரு இது. எங்கே போகணுமுன்னாலும் சட்னு கிளம்பிப்போகலாம். தினசரி வாக்கிங் போறதுகூட ரொம்ப ஈஸி இல்லே !!!!
நம்ம ரிப்போர்ட் பார்த்த மருத்துவர்தோழி, பரிந்துரைத்த ஆர்த்தோ ஸர்ஜனின் க்ளினிக்கில் செப்டம்பர் மாதம் அப்பாய்ன்ட்மென்ட் கிடைச்சது. எகிப்து நாட்டவர். படிப்பெல்லாம் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும். பரிசோதனைகள் முடிஞ்சதும், நமக்கு 'ஸர்ஜரி இல்லை'ன்னார். ஆத்தரைடீஸ் இருப்பதால் ஆபரேஷனுக்கு லாயக்கில்லை. வலி நிவாரணத்தைத்தவிர வேறு வழியில்லை ! தீர்ப்பு வந்தாச்! இப்போதைக்கு ஸ்டீராய்ட் ஊசி போட்டுக்கலாம். ஆனால் அது நிரந்தர வலி நிவாரணி கிடையாது. எதுக்கும் போட்டுப் பார்க்கலாமுன்னு ஒரு ஊசி ஆச்சு. இந்த ஊசி அனுபவம் நம்ம தோள்பட்டை வலியால் ஏற்கனவே கிடைச்சுருக்கு. முதல் மூணு நாள் பரவாயில்லாமல் இருக்கும். அப்புறம்.... போனமச்சான்..... திரும்பிவந்தான்.......
எதுவும் சரியாகலைன்னால்..... PRP போட்டுப் பார்க்கலாம்......
சொன்னபடியே மூணுநாள், மூணே நாள் கைத்தடி இல்லாமல் நடக்கமுடிஞ்சது. மெதுநடைதான். அப்புறம் ? வேறென்ன வலியோ வலி மட்டும் !
வலி நிவாரண மருந்துகள் எடுத்துக்கறதால் வயிறு அப்ஸெட். அதைக் குறைக்க இன்னொரு மருந்து.... இப்படி மருந்தே உணவு......
ஒரு மாசம் போனதும் அக்டோபரில் அடுத்த வகை ஊசிக்கு அழைப்பு. Platelet-rich plasma (PRP) injection. நம்ம ரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மாவைப் பிரிச்செடுத்து, நமக்கே ஊசியாப் போடுவாங்க. வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி ப்ரஸாதமாத் தர்றமாதிரி.... இது தனியார் லேப். ஒரு மருத்துவரும் ரெண்டு நர்ஸுகளுமா நம்மை கவனிச்சுக்கிட்டாங்க.
அந்த ஊசி போட்டதும், ஒரு அடியெடுத்துக் கட்டடத்தை விட்டு வெளியே வரக்கூட முடியாம அப்படி ஒரு வலி. மருந்து உடலில் வேலை செய்யவே எட்டுவாரம் ஆகுமாம். அடுத்த ஊசி அடுத்த வாரம் இதே நேரம். தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்து, நாலுநாட்கள் காலில் கல்லைக்கட்டி விட்டாப்லெ..... நரகம்....
அடுத்த வாரம் போட்ட ஊசி அவ்வளவாப் படுத்தலை. இந்த முறை ஊசி போட்ட மருத்துவர் சீனர். முழங்காலில் இருந்து ஒரு நாப்பது மில்லி, திரவத்தை வெளியில் எடுத்தார். குளம் வத்திப்போச்சு ! ஒருவேளை அதனால் கூட , காலில் கல் கட்டப்படலைன்னு தோணுது.
ஒரு மாசம் கழிச்சு நவம்பரில் நமக்கு சிறப்பு மருத்துவரிடமிருந்து அழைப்பு. இதுக்குள்ளே கொஞ்சம் வலி குறைஞ்சுத் தத்தித்தத்தி நடக்க ஆரம்பிச்சுருந்தேன். லங்கடூ ! வாரம் ஒரு முறை நடக்கும் யோகா வகுப்புக்கும் போய்வந்தேன். நாற்காலியில் உக்கார்ந்தபடி செய்யும் சின்னப் பயிற்சிகள் மட்டுமே எனக்கு.
( ஆளுக்கொரு வண்டி )வலி முழுசா குணமாக ஆறுமுதல் எட்டு மாசங்கள் ஆகுமாம். அடுத்த முறை நமக்கு ஆறு மாசம் கழிச்சுத்தான் செக்கப். அப்போ உள்ள நிலை பார்த்துட்டு, ப்ளாஸ்மா ஊசி போடும்படி இருக்குமாம்.
பயணம் செய்யலாமான்னு கேட்டுக்கிட்டோம். கூடவே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கலாமான்னும் கேட்டோம். பிரச்சனையே இல்லையாம்.
இதுக்கிடையில் ஆயுர்வேத மருத்துவர், நம்ம மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு, இந்தியாவில் இருந்து விசேஷமருந்துகள் உள்ள பெரிய பொதியை அனுப்பி வைச்சாங்க. உள்ளுக்கு முழுங்கவேண்டிய மாத்திரைகள் , லேஹ்யம், மஸாஜ் செய்யும் தைலம், கிழி கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டிய பொடிகள் , அரிஷ்டங்கள் இன்ன பிற !
இப்படியாக நாளொரு வலியும், மஸாஜும், தைலமுமா 2024 முடிஞ்சு 2025 ம் வந்துருக்கு !
உடல்நலம் எவ்வளவு முக்கியமுன்னு பட்டபிறகுதான் புத்தி வந்துருக்கு. அதனால் எதுவுமே ஆரம்ப நிலையில் இருக்கும்போதே கவனிச்சு, உடம்பைப் பார்த்துக்கணும்.