Monday, April 06, 2020

The Great Pyramid of Giza (பயணத்தொடர் 2020 பகுதி 36 )

எந்த சமாச்சாரம் எடுத்தாலும்  இருக்கறதுலே பெருசு, வயசுலே மூத்தது, பிரபலமானது, அது இதுன்னு  எதாவது இருக்குமில்லையா..... அந்தக்கணக்கில்  மேலே சொன்ன மூணுமே அமைஞ்சு போச்சு இப்போ நாம் பார்க்கப்போகும் ப்ரமிடுக்கு!   Great Pyramid of Giza.
இதுவரை நாம் பார்த்த பிரமிடுகளைப்போல இல்லாமல் , தூரத்துலே  வரும்போதே கண்ணுக்குத் தெரிஞ்சுருது. ஏன்னா.... உயரம் அப்படி?  நூத்திநாப்பத்தியேழு மீட்டர் !
புகழுக்குத் தகுந்தாப்லெ வளாகம் ரொம்பவே பெருசு. அதுக்கேத்தாப்ல கூட்டமும்! ரெய்னா போய் டிக்கெட்ஸ் வாங்கி வந்தாங்க. ஆளுக்கு இருநூறு. உள்ளே போனால் கொஞ்சம் நடக்கத்தான் வேணும்.



படிப்படியா இருக்கு. அதுலே சனம் ஏறிப்போறாங்க.   உள்ளே போய் பார்க்க விடறாங்களாம். ஆஹான்னு  கிட்டக்கப் போனால்....   ஐயோ என் கால்......
ஒவ்வொரு கல்லும் ஆள் உயரம்  இப்போ ஆட்கள் ஏறிப்போக அதுலேயே கொஞ்சூண்டு வெட்டி , ஒரு கல்லுக்கு நாலுன்னு சின்னப்படிகளா ஆக்கி இருக்காங்க. அதுவுமே ஒரு ரெண்டு மூணு வரிசைக்குத்தான்.

நாமும் பிரமிட்டை 'ஏறி'ப் பார்த்தோமுன்னு இருக்கட்டுமே.... 


மேலே ஏறிப்போனால் பாதி தூரத்துலே  உள்ளே போகும் 'வாசல்'  வச்சுருக்காங்க. அதுக்குள்ளே நுழைஞ்சால்  ஏறி வந்த உயரத்துக்குக் கீழே இறங்கிப்போகணும். பொதுவா பிரமிடுகளுக்கு வாசல் வைக்கறதில்லை.   இது சாமிக்கிட்டே போன மன்னருக்கான சமாதிதான்.   கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சக்கராவில் சமாதிகளைப் பார்த்தோமே.... நீளமாப்போகும் குன்றுகளின் அடியில் சுரங்கம் மாதிரி தோண்டிக்கிட்டே போய்  உள்ளே பெரிய  கட்டடம் எல்லாம் .....
அப்படி இல்லாம அரசரின்  'பூத உடலை' மம்மிஃபைடு செஞ்சு, அதை சுட்டகளிமண் சவப்பொட்டிக்குள்ளே வச்சுட்டு, அந்தப் பொட்டியைத் தூக்கித்  தங்கத்தால் ஆன சவப்பொட்டிக்குள்ளே வச்சுடறதுதான்.  தரைப்பரப்பில்  அறைகள்  கட்டி அரசரின் அடுத்த பிறவிக்கான செல்வம், இன்னபிற  சாமான்கள் எல்லாமும் வச்சுட்டுச் சுத்திவரக் கல் அடுக்கிக்கிட்டே போய் சமாதி ஆக்கிடறதுதான். இவுங்க மறுபிறவி நம்பிக்கை அதிகம் உள்ள சனம் அந்தக் காலத்துலே! இதுலே பாருங்க..... உடலை மம்மிஃபைடு பண்ணும்போது, இதயத்தை மட்டும் விட்டு வச்சுருவாங்களாம். அதுலே 'Ka' என்ற ஒரு சமாச்சாரம் இருக்காம். அடுத்த பிறவி எடுக்கும்போது இதே 'Ka' அந்த உடம்புக்குள் போயிருமாம். ஆஹா.... எங்கியோ கேட்டாப்லெ இல்லே? 

ஹாங்.....  நம் உயிர் பிரிந்ததும் உடல் மட்டும் அழியுமே தவிர,    ஆன்மாவுக்கு அழிவில்லை. அது நாம் செய்யும் கர்மத்துக்கேத்த பிறவி எடுக்கும்போது அதுக்குள்ளே போய் சேர்ந்துரும்....  நம்ம ஹிந்து மதத்தில் சொல்றாங்களே... அதுதானே?

பிரமிடுக்குள் என்னதான் இருக்குமுன்னு தெரிஞ்சுக்க  அநேகமா எல்லோருக்கும் ஒரு ஆர்வம் இருக்குமில்லே?  ஆயிரக்கணக்கான வருஷங்கள் போனபிறகு,  ஒன்பதாம்  நூற்றாண்டுலே அப்போ அரேபியா கவர்னரா இருந்தவர்,  தன்னுடைய ஆட்களை வச்சு உள்ளே போக வழி இருக்கான்னு ஏறிப் பார்த்துருக்கார்.   கல் கட் பண்ணும் மெஷீன் எல்லாம் அப்போ ஏது?  உளிவச்சு உடைக்கறதுதான்..... ஏகப்பட்ட ஆட்கள் உடைக்கும் வேலையில் இருந்துருப்பாங்க போல...  அதிர்வு உண்டாகி,  பிரமிடு தலையில்  கும்மாச்சியாக் கட்டிவிட்டுருந்த கல் அப்படியே பெயர்ந்து உள்ளே விழுந்துருச்சு. அப்போ அகஸ்மாத்தா  இன்னொரு கல் , இவுங்க உடைக்கிற இடத்துலே கொஞ்சம்   விலகினதும்,  மெள்ள ஒரு  ஆள் நுழையற அளவு உடைச்சுட்டு உள்ளே போய்ப் பார்த்திருக்காங்க.

உள்ளே  ஒன்னுமே இல்லையாம்!  ஆனா சனம் இதை நம்பலை. கவர்னர் ஆட்டையைப் போட்டுட்டாருன்னுதான்  நினைச்சுக்கிட்டு இருந்தாங்க.  அதுக்கப்புறம் கவர்னர்  பிரமிட்க்குள்ளே போகும் எண்ணத்தையே விட்டுட்டார்.

வெள்ளைக்காரனுக்குத்தான் எல்லாத்துலேயும் நுழைஞ்சு பார்த்து மூக்கை விடணுமே.... இவ்ளோ ப்ரமாண்டமா  நின்னுக்கிட்டு இருக்கும் பிரமிடுகளை விட முடியுமா?   கடந்த ரெண்டு நூற்றாண்டுகளில் வேற சில சின்னதுகளுக்குள் போய்ப் பார்த்துருக்காங்கதான். இயற்கை சீற்றம், நிலநடுக்கம் காரணம் சரியாக் கட்டாத  பிரமிடுகள் குலுங்கியதால் கல்லெல்லாம் கீழே குவியலா விழுந்து கிடந்ததும் இவுங்களுக்கு நல்லதாப் போயிருக்கும்.  உள்ளூர்  மக்கள் மசூதி கட்ட இந்தக் கற்களை  இங்கிருந்து கிளப்பிக்கிட்டுப்போனதும் அப்பப்ப நடந்துருக்கு.

காலங்கள் மாறி, ஆட்சி செய்யும் வகைகளும் மாறிப்போன பிறகு, அரசாங்கம் அனுமதி கொடுத்தால்தான் பிரமிடு கிட்டேயே போக முடியுமுன்னு ஆகிப் போச்சு.  அதுக்குள்ளே கிடைச்ச  சில மம்மிகளை, வெளிநாட்டுக்கு எடுத்துக்கிட்டு/ கடத்திக்கிட்டுப் போனதும் நடந்துருக்கு. அதுலே ஒரு மம்மி எங்க ஊர் ம்யூஸியத்துலே இருக்குன்னு நான் சொல்றதை நம்புவீங்களா?  அதுக்கு ஸி டி ஸ்கேன் கூட எடுத்துப் பார்த்தாச்சு !

அதைப்பற்றி நான் எழுதுன பதிவின் சுட்டி இது. நேரம் இருந்தால் பாருங்க. ஆச்சு பதினொரு வருஷம்.....  இப்பவும்  எங்க மம்மி பத்திரமாத்தான் இருக்காங்க.


மம்மி பேச்சு வந்தப்ப, நம்ம ரெய்னாவுக்கு, 'நம்ம மம்மி' சமாச்சாரம் சொல்லி, துளசிதளம் பதிவைக் காமிச்சேன். மொழி தெரியலைன்னாலும் படம் தெரியாதோ?

இப்ப  எட்டு மம்மிங்கதான்  அவுங்க நாட்டுலே இருக்காங்களாம். அப்ப  மீதி?  வேறெந்தந்த நாட்டுலே இருக்கோ, யார் கண்டா....
அது இருக்கட்டும்... இப்போ கண் முன்னாலே இருக்கும் இந்த ப்ரமாண்டத்தைப் பார்க்கலாம்.  உயரம் நூத்திநாப்பத்தியேழு  மீட்டர்னும், கட்டி முடிக்க இருபது வருஷம் ஆச்சுன்னும் சொல்றாங்க. ஒவ்வொரு கல்லும் ரெண்டரை டன் கனம். இப்படி  இருபத்திமூணு லக்ஷம் கற்கள் !
அதான்  நம்மால் உள்ளே போய்ப் பார்க்க முடியலையே...    போய்ப் பார்த்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்தால் உயர உயரக் கல் மேலே ஏறிப்போய் அங்கிருந்து கீழே இறங்க ஏணி இருக்குன்னுன்ற படம் பார்த்தவுடன்... ஒரு நிமிட் மூச்சு நின்னே போச்சு..... கம்பி ஏணி!   அதுமட்டுமில்லாம....    நிறைய வௌவால்களும்  (ஐயோ.... வௌவாலா? இதால் உலகமே  நடுங்கறதுதான் நடக்குதே இப்போ) விஷச்சிலந்திகளும்  அங்கே  நிறைஞ்சுருக்காம்..... ப்ளாக் விடோஸ் ?

மூணு கல் ஏறி முன்னால் இருக்கும்  வளாகத்தை க்ளிக்கிட்டு இறங்கினேன்.  ப்ரமிடில் ஏறி நிக்கும் படத்தை எடுத்தது நம்ம ரெய்னாதான்.! நிறைய குதிரை வண்டிகள் இருக்கே!  பிரமிடைச் சுத்தி  நல்ல பாதை போட்டு வச்சுருப்பதால்..... குதிரை வண்டியில் ஒரு சுத்து போயிட்டு வரலாம். அப்போ தோணலை... இப்போ தோணுது....
கொஞ்சதூரம் நடந்து ரோடுகிட்டே போனோம்.அதுக்குள்ளே  இஸ்லாம் நாம் இருக்கும் இடத்துக்கு வண்டியைக் கொண்டு வந்துட்டார்.
முழு பிரமிடும் படத்துலே வரணுமுன்னா கொஞ்சம் தள்ளிப்போகணும். போனோம். பெரிய பிரமிடு மாத்திரம் ஒத்தையா நிக்காம  அக்கம்பக்கம் சின்னதும் பெருசுமா நாலைஞ்சு  இருக்கு.  ராஜா தனக்கு ஒன்னு கட்டிக்கும்போதே குடும்பத்துலே மனைவி, மகன், மகள்னு ஆளுக்கொன்னு கட்டியிருக்கார்.
(அப்ப....   பிரமிடைக் கட்டி வச்சுட்டு, சாமிகிட்டே போனபிறகு பூத உடலைக் கொண்டு போய் வைப்பாங்களோ?  எப்படி?  உள்ளே போக வாசல் எதாவது இருக்கவேணும்தானே?  நான் நினைக்கிறேன், காரியம் முடிஞ்சதும்  வாசலைக் கல்வச்சு அடையாளம் தெரியாம மூடி இருப்பாங்க போல.... )

இந்தப் பகுதியில் மூணு பிரமிடுகள் ஒரு கோணத்துலே இருந்து பார்த்தால் ஒரே வரிசையில் தெரியுமுன்னு கேள்விப்பட்டுருக்கேன்.  அந்த மூணுக்கும் Khufu , Khafre, Menkaure Pyramids என்று பெயர். மன்னர்  Khufu தான்  பெரிய பிரமிடுக்குள் இருக்கார்!


  இன்னும் கொஞ்சம் போனதும் ஏராளமான ஒட்டகங்கள், சவாரிக்கு ரெடியா நிக்குது. நம்ம  சுற்றுலாவில்  ஆளுக்கரை மணி ஒட்டக சவாரி உண்டு.  ஒட்டகக்காரர்கிட்டே  ரெய்னா பேசி ஏற்பாடு செஞ்சாங்க.  இந்த ஆட்டத்துக்கு நான் இல்லைன்னதும், என் ஒட்டகம்  'சரி, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் போ' ன்னுட்டு என் முன்னால்  உக்காந்துக்கிச்சு.

நம்மவர் மட்டும் சவாரி செய்யறார்.  போய் வாரும்.... நிறையப் படங்கள் எடுத்துட்டு, வெற்றியுடன் திரும்பி வாரும்னு  க்ளிக்ஸ் ஆச்சு.  இது இவருக்கு ரெண்டாவது ஒட்டகச் சவாரி. நம்ம ராஜஸ்தான் பயணத்துலே ஒட்டகப்பண்ணைக்குப் போயிருந்தோமே அப்ப முதல் முறை !  அவர் திரும்பும்வரை நானும் ரெய்னாவும் ஒட்டகக்காரரும் பேசிக்கிட்டு இருந்தோம்.  ரெய்னாதான் முழி பெயர்ப்பாளர் :-)

என் முதல் கேள்வி 'என்'  ஒட்டகத்துக்கு என்ன பெயர்?

 ஒட்டகக்காரருக்குச் சிரிப்பு தாங்க முடியலை.... பெயரொன்னும் இல்லையாம்.....   பாவம்.... அது....
இங்கெ இருக்கும் ஒட்டக சவாரிக்கு  நாம் நுழைவு டிக்கெட் வாங்கும்போதே தனியா பணம் கட்டிடணுமாம். அரை மணி, ஒரு மணின்னு தனிச்சார்ஜ்.  அந்த டிக்கெட்டைக் கொடுத்துட்டு நாம் சவாரி செஞ்சுக்கலாம்.  கடைசியில் எத்தனை டிக்கெட்டுகள் கிடைச்சதோ  ... அதுக்குத் தகுந்தாப்லெ டிக்கெட் ஆஃபீஸ் பணம் கொடுக்குமாம். முந்தி நல்ல வருமானம் இருந்ததாம். இப்போ நிறைய ஒட்டகங்கள்  வந்துருச்சு. குதிரை வண்டிகளும், தனிக்குதிரைகளும் கூட  சவாரிக்கு வந்துட்டதால் அவ்ளோ வருமானம் இல்லையாம்.
காலையில் ஏழு மணிக்கு முந்தியே இங்கே ஒட்டகத்தைக் கூட்டிக்கிட்டு வந்துரணுமாம். சாயங்காலம் இருட்டியே போயிருமுன்னார்.  அப்புறம் ரெய்னா சொன்னாங்க....  சம்மர் டைம், வின்ட்டர் டைமுன்னு இருக்கு பிரமிட்ஸ்  பார்க்க.  சம்மர்ன்னா காலை ஏழு முதல் மாலை ஏழு வரை. இப்ப வின்ட்டர் என்பதால் காலை எட்டு முதல் மாலை அஞ்சு வரைதான்.

இவுங்களுக்குக் கஷ்ட ஜீவனம்தான்.  சவாரி போகும் சனம் டிப்ஸ் கொடுக்கறாங்க என்பதால் ....  டிக்கெட் ஆஃபீஸ்லே காசு குறைவாத்தான் கொடுப்பாங்களாம். ப்ச்....

அதுக்குள்ளே  சவாரி போன நம்மவர் வந்துட்டார். சின்னப்புள்ளே ஒன்னு ஓடிப்போய் ஒட்டகக்கயிறை வாங்கிருச்சு.  ஒட்டகக்காரருக்கு நாலு ஒட்டகம் இருக்கு. அதில் சவாரிக்குக் கொண்டு போகும் நாலு  ஆட்களுக்கும்  இவர்தான் சம்பளம் கொடுக்கணுமாம். ரெண்டு பேர்  மகன்கள், மத்த ரெண்டு பேரும் சொந்தக்காரப் பையன்கள்தானாம்.  இன்னும் கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு.
பத்திரமாக் கூட்டிப்போய், திருப்பிக் கூட்டிவந்த  இளைஞருக்கு கொஞ்சம் அதிகமாவே டிப்ஸும் ஆச்சு. அப்பப்ப ஃபொட்டாக்ராஃபராவும் இருந்துருக்காரே !



சவாரிக்கு நாம் தனியா பணம் கட்ட வேணாம். டூர் கம்பெனி இதுக்கெல்லாம் சேர்த்தே நம்மாண்டை வசூல் செஞ்சுருது.
டூர் கம்பெனி விளம்பரத்துக்கு  படம் எடுத்துக்கவான்னு  கேட்டுட்டு, நம்மைப் படம் எடுத்தாங்க ரெய்னா. நாமும் நம்ம செல்லைக் கொடுத்து  ரெய்னாவோடவும், இஸ்லாமோடவும்  படம் எடுத்துக்கிட்டோம்.


எனக்கு ரெய்னாவை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நல்ல தன்மையான லேடி.  இப்போ அவுங்க நம்ம தோழிகள் கூட்டத்தில் ஒருவராகிட்டாங்க.  ஃபேஸ்புக் ஃப்ரெண்டும் கூட.  இந்தப் பயணக்கட்டுரைகளைப் படிக்கணுமாம். படம் பார்த்துக்குங்கன்னு சொன்னதுக்கு, கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் போட்டு வாசிக்கிறேன்னு சொல்லி இருக்காங்க . நம்ம தமிழை அது என்ன பண்ணப்போகுதோ !



வண்டியில் ஒரு சுத்துப் போனோம். நல்ல ரோடு போட்டு வச்சுருக்காங்க. ஒரு பிரமிடுக்குள் போக  தூண்கள் வச்ச முகப்பு வாசல் கூட இருக்கு. ஆனால்  பின்னால் இருப்பவை சுமாரான நிலையில்தான்.

ஸ்பிங்க்ஸ் உக்கார்ந்துருக்கும்  இடத்துலே வண்டியை நிறுத்திட்டுக் கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு.  நல்லா பெருசாத்தான் இருக்கு. மனுஷத் தலையும் சிங்க உடலுமா... மொத்தம் எழுபத்திமூணு மீட்டர் நீளமும், இருபது மீட்டர் உயரமுமான சிலை!  உலகத்துலேயே பெரிய சிலை இதுதான்னு சொன்னாங்க. கீழே  உடம்புக்குள்ளே ரகசிய  அறைகள் இருக்காம். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. பெரிய பிரமிடைக் கட்டுன அரசரின் முகம்தான் ஸ்பிங்ஸ்க்கு! நூறு சிற்பிகள் சேர்ந்து ஒத்தைக் கல்லில்  செதுக்கி இருக்காங்க. மூணு வருஷம் ஆச்சாம்  வேலை முடிய.

மூக்கு கொஞ்சம் பழுதாகி இருக்கு.  காலம் தின்னதோ இல்லையோ.... கதைகள்  கட்டத் தெரியாதா சனத்துக்கு? நெப்போலியன், பீரங்கி வச்சு மூக்கைச் சுட்டுட்டான், பதினாலாம் நூற்றாண்டுலே சூஃபி முஸ்லீம் ஒருத்தர்,  சிலைவழிபாடு கூடாதுன்னு  மூக்கை வெட்டிட்டார் ( சரியான லக்ஷ்மணன் போல....  சூர்ப்பணகன் மூக்கு  போச்சு...)

இறங்கிப்போய்ப் பார்க்கணுமான்னு ரெய்னா கேட்டாங்கதான். அவ்ளோதூரம் நடக்கத் தெம்பில்லை. (இதுக்குத்தான் கொஞ்சம் சின்ன வயசா, ஆரோக்கியமா இருக்கும்போதே பயணங்கள் போயிருக்கணும். எங்கே?)  
முழுசாப் பார்க்கணுமுன்னா தூரத்துலே இருந்து பார்த்தால்தான் உண்டு இல்லையோ. கொஞ்சம் கிட்டக்கக் கொண்டுவந்து பார்த்துட்டேன் :-)

தொடரும்........... :-)

11 comments:

said...

சூர்ப்பணகன்.... :)))

படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு.

சிறு வயதிலேயே பயணம் அமைந்து விட்டால் நல்லது தான். பலருக்கும் அமைவதில்லை.

தொடர்ந்து பயணிப்போம்.

said...

என்ன நீங்க.. பிரமிட் உள்ளலாம் போய் ரெண்டு மூணு மம்மிகளைக் காண்பிப்பீங்கன்னு பார்த்தால், ஊரைச் சுத்திக் காட்டிய மம்மியின் படத்தைப் போட்டிருக்கீங்களே

புதிய இடத்தினைப் பற்றிய பல செய்திகள் தெரிஞ்சுக்கறேன். என்ன ஒண்ணு..வெயில் காலத்துல அந்த இடத்துக்கே போக முடியாது. ஆமாம்..நம்மூர் மாதிரி கூல்டிரிங்க்ஸ் கடைலாம் இருந்ததா?

said...

அருமை சிறப்பு நன்றி,
நாங்க போயிருந்தபோது ஒட்டகம் மட்டும் தான், குருதையெல்லாம் latest தொழில்நுட்ப வளர்ச்சி போலிருக்கு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் போக ஆண்களாக இருப்பதில் ஒரு சௌகரியம் உண்டு. ஆனால் யாராக இருந்தாலும் இளவயதில் போவதுதான் நல்லது. ஆனால் பயணத்துக்கான விருப்பம் இருக்கணுமே....

மூக்கு உடைபட்டது ! பாவம்....

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

'உள்ளே' போகக் கொடுத்து வைக்கலையே....


எல்லா இடங்களிலும் தீனிக்கடைகள் இந்தியாவில்தான். தின்னுட்டுக் குப்பை போட்டால்தான் மனசே ஆறும்.

இங்கே அப்படியெல்லாம் ஒன்னும் பார்க்கலை.....

said...

வாங்க விஸ்வநாத்,


குருதை வண்டி மட்டுமா? தனிக்குருதைகளும் ஏராளம்! அதைத்தான் ஒட்டகக்காரரும் சொன்னார்..... வருமானம் குறைஞ்சு போச்சுன்னு...

said...

உங்கள் பகிர்வில் நாங்களும் ப்ரமிட்டை பார்த்து வந்தோம். நன்றி.

said...

அருமையான பயணம்

said...

வாங்க மாதேவி,

நல்லதுப்பா ! நன்றி !

said...

வாங்க வேல்முருகன்,

வருகைக்கு நன்றி !

said...

பிரமிடு கட்டியவர்களெல்லாம் ஆதி இந்துக்கள் என்றே நினைக்கிறேன் .. ஏனெனில் இந்து கோவில் கோபுரங்களும் பிரமிடு வடிவிலேயே இருகின்றன .. அதுமட்டுமல்ல இந்துக்களுக்கும் மறுபிறவி கொள்கை மிகவும் அழமாக வேரூன்றி உள்ளன .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<