Monday, April 20, 2020

சாப்பாடும் சரித்திரமும்...... (பயணத்தொடர் 2020 பகுதி 41 )

போற இடத்துலே  பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. அதனால் முதலில் போய் மதியச் சாப்பாட்டை முடிச்சுக்கலாம்னு சொன்னாங்க ரெய்னா.  அதுவுஞ்சரிதான். இப்பவே பனிரெண்டே முக்கால் ஆகுது....  போற வழியெல்லாம்  காய்கறிக் கடைகள்.  தெருவிலேயேதான்....   மார்கெட்ன்னு இல்லை....   எனக்கு இந்தக் காய்கறிகளைப் பார்க்க ரொம்பவே பிடிக்கும். அப்பதானே நியூஸியில் கிடைக்காதவைகளைப் பார்த்து மகிழ்ச்சி (?? !!!) அடையலாம் :-)  ஆனாலும் வண்டியை நிறுத்தச் சொல்லலை.... போற போக்கிலேயே க்ளிக்ஸ் ஆச்சு.



சாப்பிடப்போற இடம் பற்றி ரொம்பவே பில்ட்டப் கொடுத்தாங்க.  பஃபே ரெஸ்ட்டாரண்ட்தான். உங்களுக்கு ஏகப்பட்டக் காய்கறிகள் சாய்ஸ் இருக்கும். இந்த ஊருலே ரொம்பவே புகழ் பெற்றது...... அது  இதுன்னு...  Bonne Soirée Restaurantsக்குப் போய்ச் சேர்ந்தோம்.  மாடியில்  பஃபே ஹால். அங்கே போனால் பயங்கரக்கூட்டம். அப்புறம் தெரிஞ்சது....  இது எல்லா டூர் கம்பெனிகளுக்கும் ஃபேவரிட்னு :-)

எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்துட்டு,  எனக்கானதை எடுத்துக்கிட்டேன்.  நமக்குத்தான் வெறுஞ்சோறு போதுமேன்னு பார்த்தால்..... அதுலே ப்ரவுன் நிறத்துலே என்னமோ கலந்துருக்கு.  சேமியாவா  என்ன?  அதேதானாம்.
சேமியாவை வெண்ணையில்  வறுத்து சோறோடு கலந்துருவாங்களாம். Delicacy....  ஓ.....   அப்புறம் 'அந்த ' உருளைக்கிழங்கு... அதே நறுக் நறுக்.... அரைவேக்காடு....   கூடவே கொஞ்சம் நிறைய வெள்ளரிக்காய்.
டிஸ்ஸர்ட் செக்‌ஷன் பரவாயில்லை. நிறையதான்  வச்சுருந்தாங்க.  ரைஸ் புட்டிங், தேங்காய் ஸ்வீட் ஒன்னும் எனக்காச்சு.  ரெஸ்ட் ரூம் நல்லா இருந்தது. அதுதான் முக்கியம் !
அப்புறம் கிளம்பிப்போனது  கய்ரோ ம்யூஸியத்துக்கு !
ரெய்னா போய் டிக்கெட் வாங்கி வந்தாங்க.  ஆளுக்கு  200 பவுண்ட்.
சுமார் ஏழாயிரம் வருஷ சரித்திரம் இந்த நாட்டுக்கு இருக்குன்னால்.... இந்த  ம்யூஸியத்துக்குமே மூணு நூற்றாண்டு சரித்திரம் இருக்கு!  1835 லே   இங்கத்து அரசு ஆரம்பிச்சு  வச்சுருக்கு  பழைய கய்ரோன்னு  நாம் போய்ப் பார்த்துவந்த Coptic Cairo விலே.  அப்புறம் கொஞ்சநாட்களில்  நாம் காலையில் பார்த்த கோட்டைக்கு மாத்தி இருக்காங்க.
1858 லே புதுசா ஒரு கட்டடம் நைல்நதிக்கரையாண்டே  கட்டி அங்கே குடிபோயாச்சு. அங்கெயாவது நிம்மதியா இருந்துச்சோ? எண்ணி இருபது வருஷத்துலே 1878, நைல்நதியிலே பெருசா வெள்ளம் வந்து, ம்யூஸியத்துலே இருந்த காட்சிப்பொருட்கள் பலதும் சேதமாகிருச்சு. அப்படியும் அதையெல்லாம் கூடியவரை சீர்படுத்தி ஒரு பதிமூணு வருஷம் அதே இடத்துலே குப்பை கொட்டிட்டு, அதுக்கப்பால்  1891 லே  பெரிய பிரமிடு இருக்கும் பேட்டையில்  (Giza) இருக்கும் பழைய அரண்மனைக்கு மாத்திக்கிட்டாங்க.

இதென்னடா இப்படி பொழுதன்னிக்கும் இடம் மாறிக்கிட்டு இருக்கோமேன்னு, நிரந்தரமா ஒரு நல்ல கட்டடம் கட்டிக்கலாமுன்னு தீர்மானிச்சு,   ஃப்ரான்ஸ் நாட்டுக்  கட்டடக்கலை நிபுணர் Marcel Dourgnon  வரைஞ்சு கொடுத்த திட்டத்தின்படி,  இத்தாலிக்காரக் கம்பெனி  1902 லே கட்டிக்கொடுத்த ம்யூஸிய வாசலில்தான் இப்ப நாம் நிக்கறோம்.  வாங்க உள்ளே போகலாம்.
ஆச்சே இதுக்கும் நூத்திப்பதினெட்டு வயசு.  இங்கேயாச்சும் நிம்மதி கிடைச்சதான்னா.... இல்லையே.... அரசை எதிர்த்து 2011 ஆம் ஆண்டு நடந்த புரட்சியில்,  எதிர்ப்பாளர்கள், ம்யூஸியத்துக்குள்ளே புகுந்து பலத்த சேதம் பண்ணிட்டாங்க. ரெண்டு மம்மிகளை அடிச்சு நொறுக்கியிருக்காங்க.  ஒரு அம்பது காட்சிப்பொருட்களைக் காணோம்.... இப்படி...ப்ச்...  (பாவம்... அந்த மம்மீஸ் இல்லையோ ? )  அப்புறம்  காணாமப்போனதுலே பாதி கிடைச்சதாம்.

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' ன்றது ரொம்பச்சரி.  இதெல்லாம் திரும்பக் கடையில் வாங்கிக்கிற சமாச்சாரமா? நடந்துபோன  சேதத்தைச் சரிப்படுத்தியெடுக்கவே ரெண்டு வருஷம் ஆகி இருக்கு. 2013 லே  சரி செஞ்சு வச்சுட்டாங்க.

ரெண்டு மாடிகளில்  சின்னதும் பெருசுமா ஒரு லக்ஷத்து இருபதாயிரம்  பொருட்களைக் காட்சிக்கு வச்சுருக்காங்க. நின்னு நிதானமாப் பார்க்க ஒரு முழுநாள் எடுக்கும். நமக்கு வழக்கம்போல் ஏது நேரம் ?  கிடைச்சவரை பார்க்கணும்தான்.
நுழைஞ்சதும்  பெரிய பிரமாண்டமான ஹால். பெரிய சிலைகள் ரெண்டு பக்கங்களிலும் நிக்குது (நம்ம ஹொட்டேலில் பார்த்தோமே அதே மாதிரி  )
'நல்லா இருங்க'ன்னு சொல்லிட்டு உள்ளே போறோம்.
கண்ணாடிப்பொட்டிக்குள்ளே சிற்பங்கள். எல்லாம் சமாதிகள் இருக்கும் குகைகளுக்குள்ளே  கண்டெடுத்தவைகள். முதலில் இருக்கறது என்ன தெரியுமோ?  வேலைக்காரர்கள்தான்.  வேலையாட்கள் இல்லைன்னா.... வேலை எப்படி நடக்கும்? நெல்லுக்குத்த, மாவரைக்க, நீரிறைக்க, ஆக்கி அரிக்கன்னு எத்தனையெத்தனை வேலைகள் கிடக்கு இல்லையோ
.....   கண்ணைப் பார்த்தால்.... ஜீவன் இருக்கு!






 நல்ல கூட்டம் . ஒரு நாளைக்கு அஞ்சாயிரம் முதல் ஏழாயிரம்  பார்வையாளர்கள் வர்றாங்களாம் !
முக்கிய தலைகள் எல்லாம் தாடி வச்சுருக்கு!  ஒரு  சிலையைக் காமிச்சு இது ஆணா பெண்ணான்னு  ரெய்னா கேட்டாங்க. பார்த்தால் பொண்ணுபோலத்தான் தெரியுது. ஆனால் தாடி இருக்கே....
Queen Hatshepsut . இருபது வருஷங்களுக்குமேல்  அரசாட்சி செஞ்ச மஹாராணி. மஹாராஜாக்களுக்கு ஈடாக, இல்லையில்லை .... அதுக்கும் மேலேயே  அருமையான ஆட்சியா நடத்துனதால்.... ராஜாக்களுக்கான தாடியை ராணிக்கும் வச்சு செஞ்ச சிலையாம்!  இந்த சிலையை  மஹாராணியம்மாவின்  சமாதிக்கோவிலுக்குள் இருந்து  எடுத்துவந்து இங்கே வச்சுருக்காங்க.  ராணியம்மா முகம் வச்ச சிங்கம்,  ஸ்பிங்க்ஸ் கூட இருக்கு இங்கே!
ஏகப்பட்ட சிலைகள் , பரந்து விரிஞ்சு போகும் கூடங்கள்னு பார்த்துக்கிட்டே மேலே மாடிக்குப் போயிருந்தோம்.



கட்டில்கள். தனியாத் தலையணை கூட வேண்டாம் போல. கழுத்துக்கு சப்போர்ட்டா இருக்குமோ ?
ஸ்பா  ....  Spa ?
காவல்காரன் !
என்ன சைஸோ?
தனியா ரெண்டு கூடங்களில்  அந்தக் கால நகை நட்டுகள் காட்சிக்கு வச்சுருக்காங்க.  இங்கே மட்டும் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. நீங்க போய் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னாங்க ரெய்னா.  டூர் கைடுக்கும் அனுமதி இல்லை போல !  போனோம் வந்தோமுன்னு பார்த்துட்டு வந்துட்டோம்.  டிஸைன் எல்லாம் நல்லாவே இல்லைப்பா :-)  பட்டைபட்டையாத்தான் கிடக்கு............. !!!

நகை அருளிச்செய்த கூகுளாண்டவருக்கு நன்றி !

ம்யூஸியம் முழுசும் எல்லாக் காட்சிப்பொருட்களும் கண்ணாடிப்பொட்டிக்குள்ளேதான் வச்சுருக்காங்க, கற்சிலைகளைத்தவிர. ஒரு இடத்தில்  பெரிய அளவிலான கண்ணாடிப் பொட்டிக்குள்  தங்க நிறத்தில் ஒரு பெரிய மரப்பொட்டி. ராஜாக்களின்  சமாதி குகைக்குள்ளில் இப்படி வச்சு அதில்  அவருக்குத் தேவையான (!) சாமான்கள் எல்லாம்  அடுக்கிருவாங்களாம்.  தங்கத்தகடு போர்த்திய பொட்டியின் வெளியே வேலைப்பாடு அருமை... !


இதே போல்  நிறையப்பொட்டிகள்  இருக்குன்னாலும் அடுத்தாப்லெ இன்னொரு பொட்டி அழகு !  தங்கக்குழந்தைகள்  பொட்டியைக் கட்டிப்பிடிச்சுருக்கு.
அட்டகாசமா இருக்கேன்னு பார்த்தால், எல்லாம் தங்கம்! நம்ம டூட்டன்காமன் Tutankhamun  இருந்தார் பாருங்க. அவருடைய  கல்லறைக்குகையில் இருந்துருக்கு.  அப்படியே தூக்கிட்டு வந்து எப்படித் திறக்கலாமுன்னு பார்த்தால்..... எங்கேயும் திறக்கறதுக்கான  கதவோ வழியோ தெரியலை. எப்படி எப்படின்னு மண்டையை உடைச்சு யோசிச்சும் வழி தெரியலை.  ரொம்ப நாள் அப்படியே இருந்துருக்கு.  அப்பதான் அதி புத்திசாலி ஒருத்தர்  மேலே தூக்கிப் பார்க்கலாமேன்னு சொல்ல,  குழந்தைகளைப் பிடிச்சு மேலே தூக்கினால் பலகை மேல் கவுத்து வச்ச கிண்ணத்தை எடுக்கறாப்போல் அப்படியே அலாக்கா  வருது!  ஆஹா.....
உள்ளே பார்த்தால் எல்லாம் விளையாட்டுச் சாமான்கள்.  பொம்மைகள் பலதும் தங்கம். எதுக்கு  இவ்ளோ விளையாட்டுச் சாமான்கள் ?  மம்மியாகிக்கிடக்கும் மன்னருக்குப் பொழுது போகணுமே..........
ஈஜிப்ட்ன்னதும் க்ளியோபாட்ரா நினைவு வர்றதைப்போல....  Tutankhamun நினைவும் வராமல் போகாது.  குழந்தைப்பையன்.....    ஒரு ஒன்பது வயசாகும்போதே  அரசனாக ஆயிட்டார் (ர்... மன்னர் ஆனபடியால் !)ரொம்ப நல்லபடியா  அரசாட்சி நடத்துனதும்  அதே ஒன்பது வருஷங்கள்தான்.  அப்புறம் சாமிகிட்டே போயாச்சு :-(  இயற்கை மரணமா இல்லை யாராவது கொலை செஞ்சுட்டாங்களான்றது இப்பவும் மர்மம்தான்.  ஏன்னா.... அரச குடும்பம், அதிகாரவர்க்கம் இதிலெல்லாம்  போட்டுத் தள்ளிடறது ரொம்பவே சகஜம் இல்லையோ.... மரணம் எப்படி நடந்துருக்குமுன்னு ஏகப்பட்ட தியரி இருக்கு கேட்டோ !

1922 லேதான்  மன்னரோட கல்லறை இருக்கறதைக் கண்டுபிடிச்சவர் பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவார்ட் கார்ட்டர். இடம், தெரிஞ்சு போச்சுன்னாலும்  கல்லறையைத் திறந்து பார்க்க இன்னும் ஒரு வருஷம் கூடிப்போயிருக்கு. அதானே..... எடுத்தேன் கவுத்தேன்னு இருக்க முடியுமா?  இந்த நாட்டுத் தொல்பொருள்,  அதை இன்னொரு நாட்டுக்காரர் திறந்து பார்க்க அனுமதி எல்லாம் வாங்க வேணாமா?  கல்லறையைத் தேட அனுமதிச்சதே பெரிய சமாச்சாரம் இல்லையோ ?
அப்புறம் திறந்து பார்த்துட்டு,  பலவித மருத்துவ நிபுணர்களைக் கொண்டு  ஆராய்ச்சி, எக்ஸ்ரே, சி டி ஸ்கேன் எல்லாம் எடுத்து சிலபல உண்மைகளைக் கண்டுபிடிச்சுருக்காங்க. கார்ட்டர் , தன் டயரியில்  கண்டுபிடிப்பைப்பற்றி நிறைய எழுதி வச்சுருக்கார். அதெல்லாம்தான் ஆதாரம்.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் வலையில் தேடுனப்போ ரொம்ப சுவாரஸ்யமான ஒன்னு கிடைச்சது. அதைப் படிக்கப்படிக்க ஆச்சரியம் தாங்கலை எனக்கு !  யாருக்காவது  சுட்டி வேணுமுன்னா சொல்லுங்க.

அப்புறம் 1925 லே கய்ரோ ம்யூஸியத்துக்கு  மம்மிஃபைடு மன்னரைக் கொண்டு வந்துட்டாங்க. அப்புறமும் கூட ஆராய்ச்சியாளர்களை இவரை ஓய்வெடுக்க விடவே இல்லை.  எப்பப் பார்த்தாலும்  மன்னரின் வாலை/ காலைப் பிடிச்சுக்கிட்டே இருந்தால் எப்படி?  காலுன்னதும் தான் இன்னொன்னும் சொல்லிக்கிறேன்.... மன்னரின் கால் உடைஞ்சு போயிருக்காம்.  மரணம் சம்பவிக்கறதுக்கு சில நாட்கள் முன்னால்தான் ஆகி இருக்கணுமுன்னு சொல்றாங்க.  சவப்பொட்டிக்குள்ளே ரெண்டு  ஊன்றுகோல்கள் வேற இருந்துச்சாமே !

 பொட்டிகூட ஒன்னு இல்லையாம். மூணு சவப்பொட்டிகள் ஒன்னுக்குள் ஒன்னா வச்சுருந்துச்சாம்.  எல்லாம் தங்கப்பொட்டிகள்தான். ஆனால் முதலிரண்டு பொட்டிகள் மரத்துலே செஞ்சு, தங்கத்தகடு போர்த்தி இருந்தது. அந்த  மூணாவது மட்டும்  தங்கமே தங்கம்.110.4 கிலோ எடையாம் !!!!  உள் பொட்டியில் மன்னரை வைக்கும்போது  கொஞ்சம் இடம் போதாமத் திணிச்சு வச்சுருந்ததாகவும்,  அடாப்ஸி செய்யறதுக்கு மம்மியை வெளியே எடுக்கவே முடியாமல் போயிருச்சுன்னும்,  எம்பாமிங் பண்ண எண்ணையைக் கொஞ்சம் இளக்க வேண்டி, வெயிலில்கூட  சவப்பொட்டியை வச்சுப்பார்த்தாங்கன்னும் எததனையெத்தனை சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் இருக்குன்னு பார்த்தால் பிரமிப்புதான் எனக்கு!

 Tutan kh amun  என்ற பெயரில் இருக்கும் கடைசிப்பகுதி, அந்தக்கால மக்களின் கடவுளுடைய பெயராம்.  சாமி பெயரையே பிள்ளைக்கு வச்சுருக்கார் அப்பா. (நம்ம பக்கங்களிலும் சாமி பெயர்தானே வச்சுக்கிட்டு இருந்தோம்.  இப்பத்தான்  சினிமாக்காரர் பெயர், ஷ் ஷ் ன்னு முடியற பெயர் எல்லாம்தான் நாகரிகமானதுன்ற எண்ணம் ஏற்பட்டுப்போயிருக்கு பாருங்க.... )

குழந்தை மன்னரை சாமியாகவே பார்த்துருக்கு சனமும்.  அதான் ரொம்பவே அலங்காரமா, மதிப்பா இருக்கணுமுன்னு கல்லறை முழுசும் தங்கத்துலே நிறைச்சு வச்சதுமில்லாம,  உடலை மம்மிஃபைடு பண்ணி அதுக்கு ஒரு முகக்கவசம் வேற போட்டு வச்சுருக்காங்க. இந்த  முகக்கவசம் அப்படிக்கப்படியே மன்னரின் முகம்தானாம். எடை கிட்டத்தட்ட பதினொரு கிலோ சொக்கத் தங்கம்.
இங்கே இந்த ம்யூஸியத்தில் ஒருமுறை( 2015 ஆம் ஆண்டு)  முகக்கவசத்துலே இருந்த தாடிப்பகுதி எப்படியோ இளகிக் கீழே விழுந்துருக்கு. அது மட்டுமே ரெண்டரைக்கிலோ தங்கம் !  அப்புறம் அதை ஒட்ட வச்சுட்டாங்களாம்.  அதையும் சரியாச் செய்யலைன்னு இப்போ ஒரு தகவல்.

இதெல்லாம் இல்லாமல்... 2013 லே  பிபிஸிக்காக எடுத்த விவரணப்படத்துலே வேற மன்னரின் மம்மி நடிக்கும்படிகூட  ஆகி இருக்கு.
வேறொரு   கூடத்தில்  ரெண்டு மூணு மம்மிகள்.   அதுலே ஒரு குழந்தைகூட.....


குழந்தை மன்னரின் மம்மி இப்போ இங்கே இல்லையாம்.    அவரோட சொந்தக் கல்லறைக்கே போயிருச்சுன்னாங்க.  அது ரொம்ப தூரத்தில்  வேறொரு ஊரில் இருக்கு.  அடப்பாவமே....   விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் இங்கே இருக்கே.... எப்படிப் பொழுது போகும்?

Tutankhamun இப்போ மட்டும்  உயிரோடு (!!! ) இருந்துருந்தா வயசு 1342 + 2020 ன்னு 3362  ஆக இருக்கும்  :-)

இந்த சமயத்தில் ஒரு  துன்பம் நடந்து போச்சு.... என் செல் கேமெராவில் பேட்டரி உயிரை விட்டுருச்சு..  அதான் பேக்கப் பவர் பேங்க் இருக்கேன்னு 'நம்மவராண்டை' பவர் பேங்க் வேணுமுன்னால்.... ஒரு விநாடி முழிச்சவர், அதை  வண்டியில் விட்டு வந்த பையில் வச்சுருக்கேன்றார். ஐயோ.........  (மூஞ்சைத் தூக்கி வச்சுக்க எனக்கொரு சான்ஸ்!) சரி. அப்போ  என்னுடைய கெமெராவைக் கொடுங்கன்னால்.... அதுவும் அந்தப் பையில்தானாம்.  கெமெராவுக்கு அனுமதி இல்லைன்னு ரெய்னா சொன்னாங்களாமே.....   எப்போ? ஙே.........

'அப்ப உங்க செல்லில் படம் எடுத்துக்கிட்டே வாங்க'ன்னுட்டேன்.  என் முகம் போன போக்கைப் பார்த்து....  'நமக்கு ஒரு ஃப்ரீ டே  இருக்கே.... அப்போ நாம் தனியா இங்கே இன்னொருக்கா வரலாம்'னு சொன்னார். ( ச்சும்மா... சமாதானப்பேச்சாவும் இருக்கலாம்.... )

இவர் எடுத்த படங்கள் ரொம்பவே சுமார்தான். நல்ல செல் இல்லையாமே!... இவ்ளோதான் வருமாம்! உன்னோட செல்ஃபோன் கேமெரா மாதிரி இல்லைன்னார்.  உண்மைதான். நானும் இது கிடைச்சதில் இருந்து  நம்ம கெமெராவை மறந்துட்டேன். அதுலேதான்  இவர் அப்பப்பப் படங்கள் எடுத்துக்கிட்டு வர்றார்.

சரி. கிடைச்சது இவ்ளோதான்னு மனசை தேத்திக்கிட்டு, இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பினோம். இந்த ம்யூஸியம் நல்லாவே இருக்குதான்.

இப்ப என்னன்னா.... இன்னொரு புது ம்யூஸியம், பெரிய அளவில் கட்டப்போறாங்களாம்.  ப்ளான் எல்லாம்  ரெடி.   120 ஏக்கர்  இடம்.  ( பரந்து விரிஞ்சு கிடக்கும் பாலைவனத்தில்  இன்னொரு ஆயிரம் ஏக்கர் கூட  எடுத்துக்கலாம் ! ) பெரிய பிரமிடாண்டைக் கட்ட ஆரம்பிச்சே ஏழரை வருஷம் ஆகுது. அடுத்த வருஷம் (2020) திறக்கறாங்கன்னு கேள்வி.
இப்போ இந்தப் பதிவு எழுதும் நேரம், நடந்துக்கிட்டு இருக்கும்  கொரோனா வைரஸ்  திருவிழா உலக நாடுகளையெல்லாம் ஆட்டி வைப்பதால்,  புது ம்யூஸியத்தின் வேலை முடிக்க இயலாமல் போய் அடுத்த வருஷம் 2021க்குத் தள்ளிப்போயிருக்கு!

சரி வாங்க..... அடுத்த இடத்துக்குப் போகலாம்....

தொடரும்.......  :-)

10 comments:

said...

மம்மிகள் கதை சுவாரசியம்.

மியூசியம், நான் பாரிசில் பார்த்த ஒரு மியூசியத்தின் அச்சு அசல் வடிவம். அங்குதான் அமெரிக்காவின் சுதந்திரச் சிலையின் ஆரம்ப மாடலைப் பார்த்தேன் (இரும்பில் அந்த சிற்பி செய்திருந்தார்).

சுட்டிகளையும் இணைத்திருக்கலாம். தேவையானவர்கள் போய்ப் பார்ப்பாங்க.

said...

படங்கள் இந்தப் பதிவில் மிக சிறப்பாக இருக்கு. நன்றி.

//பேக்கப் பவர் பேங்க் இருக்கேன்னு 'நம்மவராண்டை' பவர் பேங்க் வேணுமுன்னால்// இந்த வரியைப் படித்ததும் எனக்கே heart attack வந்திருச்சு.

said...

மியூசியம் விபரங்கள் படங்கள் அருமை.

said...

ஐயோ ராமா ... மம்மி எல்லாம் டம்மியா இருக்கும்ன்னு பாத்தா அம்புட்டும் தங்கமாமே ... ஐயகோ படிக்கும்போதே படபடப்பா இருக்கே !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

said...

ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

ரொம்பவே அழகு.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நாலாயிரம் வருஷத்துக்கு முன்னே மனுஷன் எப்படி இருந்தான்ன்னு பார்க்க, மம்மியை விட்டா வேற வழி ? :-)

இந்த ம்யூஸியம் டிஸைன் செஞ்சவர் ஒரு ஃப்ரெஞ்சு ஆர்க்கிடெக்ட்தான். அதான் பாரிஸில் பார்த்த மாதிரியே இருந்துருக்கு போல !

உண்மை ஆர்வம் இருப்பவர்கள் கேட்டால் சொல்லலாமேன்னுதான் விட்டுட்டேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

அதெப்படி இந்தப்பதிவில் 'மட்டும்' படங்கள் சிறப்பாக இருக்கு ?

ஆணாதிக்கம் என்று சொல்லிக்கொண்டு..............

said...

வாங்க மாதேவி,

இந்த ம்யூஸியங்கள் எல்லாம் அப்படியே சரித்திரம் சொல்லுதேப்பா !

பயணங்களில் ம்யூஸியம் பார்ப்பது முக்கியம் !

said...

வாங்க சிவா,

இதுக்கே இப்படின்னா... ஒரு கல்லறையில் சவப்பெட்டி மட்டும் 108 கிலோ தங்கத்தில் செஞ்சுருக்காங்களே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர் வருகைக்கு நன்றி !