Wednesday, April 29, 2020

மாமன்னர்களுக்கு மட்டும்........... (பயணத்தொடர் 2020 பகுதி 45 )

இந்த இடமும் சமாதிக்குகைகள் இருக்கும் இடம்தான். எல்லாம் மன்னர்களின் சமாதிகள். Valley of the Kings.  லக்ஸர் நகரில் இருந்தே இருபத்தியொன்பது கிமீ தூரம்.  ஒரு சமவெளியைச் சுத்திவர மலை இருக்கு. அதன்  அடிவாரங்களில்  குடைஞ்சு குடைஞ்சு,   குகை போலத்தோண்டித்தோண்டி........ மலைக்கு அடியில் போய்க் கல்லறைகளைக் கட்டி விட்டுருக்காங்க.
மாமன்னர்களுக்கு மட்டுமே  இங்கே அனுமதி. அதுவும் கடவுள் அம்சம் இருக்கும்  பேரரசர்கள்.இந்த மன்னர்கள் எல்லோரும் சூரியபுத்திரர்கள்தானாம்.  ஓ....   அப்போ சூரிய வம்சம் !  (பெயர்களில் ராம் (Rameses )   இருக்கறதுக்கு இதுகூடக் காரணமோ ? )     இவுங்களைத்தான் pharaoh என்ற டைட்டிலோடு சொல்றாங்க. தெய்வமாகவே இவுங்களை வணங்கறதால்   இவுங்க சமாதியைக் கோவில்னும் சொல்றாங்க. இந்தத் தலையலங்காரம் எல்லாம் இவுங்களுக்கு மட்டுமே!

அப்புறம் போனால் போகட்டுமுன்னு,  மற்ற அரசர்களுக்கும், கொஞ்சம் முக்கியம் வாய்ந்த  அரசவை நபர்களுக்கும் கொஞ்சம் இடம் விட்டுருக்காங்க. சில குகைகளுக்குள் போனால், அப்படி ஒரு விஸ்தாரம்...  ஒரு குகைக்குள் சின்னதும் பெருசுமா  நூத்தியிருபது அறைகள் இருக்காம்!  இப்படியாப்பட்டக் கல்லறைக்குகைகள் சிலதில் ஏழெட்டு  மம்மிகள் கூட இருந்துருக்கு.  குடும்பக்கல்லறைன்னு  இப்பக்கூட சில  இடங்களில்  இருக்கு பாருங்க... அப்படியாப்பட்டது போல !

எல்லாம் கிட்டத்தட்ட ஒரு  மூவாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முந்தைய சமாச்சாரங்கள். எத்தனையோ நூற்றாண்டுகாலம், இதெல்லாம் இருக்குமிடமே யாருக்கும் தெரியாமத்தான் இருந்துருக்கு.
இதுவரை அறுபத்திமூணு கல்லறைகளைக் கண்டுபிடிச்சுருக்காங்க. இன்னும் எத்தனையெத்தனை மண் மூடி ஒளிஞ்சுருக்கோ ?

யாருக்கும் தெரியாதுன்னு சொல்றேனே.... அதுதான் இல்லை. ஒரு சிலருக்கு  அந்தக் காலத்துலேயே தெரிஞ்சுருக்கும் போல.....  பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்கள் , இங்கே கல்லறைக்குகைகள் இருப்பதைக் கண்டுபிடிச்சு உள்ளே போய் பார்த்தப்ப,  நிறைய சமாதிகள்  ஏற்கெனவே  திறக்கப்பட்டு இருந்ததாயும், அதுக்குள்ளே இருந்த  பழங்காலப் பொருட்கள் எல்லாம்  அந்த 'யாரோக்கள்' திருடிக்கிட்டுப் போயிட்டதாயும் சொல்றாங்க.  Coptic Monks  ஒரு குகையின் வழியை எப்படியோ கண்டுபிடிச்சு அதுக்குள்ளே போய் தங்கி இருந்ததும் இல்லாம....   ஏற்கெனவே சித்திரங்கள் உள்ள சில சுவர்களில்,  சிலுவை அடையாளத்தையும், தங்கள் பெயர்களையும் கிறுக்கி வச்சிட்டுப் போயிருக்காங்க !  (  சரியான கிறுக்கனுங்க....)
இந்த பழங்கால ஈஜிப்ட் மக்களுக்குத்தான் மறுபிறவிகளில் ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கே! அப்போ அப்படி மறுபிறவி எடுத்துப் பிறக்கும் மன்னர்களுக்குத் தேவையான  செல்வம் இல்லைன்னா எப்படிப் பொழைச்சுக்கிடப்பாங்கன்ற  எண்ணத்தில்தான் மறுமைக்கான செல்வங்களை, மன்னரோடு சேர்த்துக் கல்லறைகளில் வச்சுட்டுப்போறது.

'காதறுந்த ஊசியும் வாராது  காண் கடைவழிக்கே'  எல்லாம் நம்மைப்போல இருக்கும் சாதாரண சனத்துக்குத்தான்  :-( 

இதோ  இதிஹாப் டிக்கெட் வாங்கியாந்துட்டார். ஆளுக்கு 240 பவுண்ட்.  அதுவும் மூணே மூணு கல்லறை தரிசனத்துக்குத்தான்.  போகட்டும்.... அறுபத்து மூவரையுமா பார்க்கப்போறோம்?  எல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் பார்க்கற மாதிரியேதான்.

ஆனா ஒன்னுங்க.....  'செத்துங்கொடுத்தான் சீதக்காதி'  ன்றதைப்போல.... மூவாயிரத்து ஐநூறு வருசங்களுக்கு முன்னே செத்த மன்னர்களால் இப்போ  நாட்டுக்குப் பயங்கர வருமானம்.  இங்கத்துச் சுற்றுலாத்துறையும் லேசுப்பட்டதில்லை.... ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனியா டிக்கெட் போட்டு வசூலிக்குது.  பெரிய தொழில் இது. இதைச் சாக்கிட்டு  ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு, உள்நாட்டு மக்களுக்குக் கிடைச்சுருக்கு பாருங்க.
இதைத்தவிர  நினைவுபொருட்கள் விற்கும் கடைகள், பயணிகளுக்கான தீனிக்கடைகள்னு   ஏகப்பட்ட கடைகளும்  அங்கங்கே  இருக்கு. அந்த மக்களுக்கும் வாழ்வாதாரமா வியாபாரம் நல்லா நடக்குது. இந்த நினைவுப்பொருட்கள் தயாரிப்பில்  ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்யறாங்க..... இப்படி எல்லாமே அமோகம். இங்கெ நாம் வரும்போதுகூட  நிறையக் கடைகளைக் கடந்துதான்  வந்தோம்.
மம்மி மம்மின்னு மம்மியைத் தேடிக்கிட்டுச் சுற்றுலாப்பயணிகளும் கூட்டங்கூட்டமாப் பலாப்பழத்துலே ஈ மொய்க்கிறமாதிரி  வந்துக்கிட்டெ இருக்காங்க.  ஒரு சில வருஷம்  கிட்டத்தட்ட ஒன்னரைக்கோடிப் பயணிகள் கூட வந்துபோனதா கணக்கு சொல்றாங்க.  2019 வருஷத்துக்குக் கணக்கு, ஒருகோடியே இருபது லக்ஷமாம் (நம்ம ரெண்டுபேரையும் சேர்த்துத்தான் )

நம்ம ஊர்களிலும் மன்னர்கள்  செத்தாங்கதான்....  யாருடைய கல்லறையாவது  எங்கே ஏதுன்ற விவரம் உண்டா?  எல்லா மன்னர்களும் பெரிய பெரிய கோவில்களாக் கட்டி விட்டுட்டுப் போய்ச் சேர்ந்தாங்க.  கட்டுனதுதான்  கட்டுனாங்களே.... தன்னுடையப் பெயரை எல்லோரும் பார்க்கும்படி  பொறிச்சுட்டாவது போயிருக்கலாம். அதையும்  செய்யலை.  கோவிலுக்கு மான்யம் கொடுத்த விவரத்தை மட்டும்  கல்வெட்டுலே போட்டு வச்சுருக்காங்க.  அதுலே இன்னார் கொடுத்ததுன்னு இருந்தால்தான் , நமக்குத் தெரிஞ்சுக்கும் பாக்கியம்.  கோவில் சொத்தை யாரும் அமுக்காமல் இருக்கத்தான் அதையும் வெட்டிவச்சுருக்கணும். அதுக்கெல்லாம் அஞ்சும் மக்களா இப்ப ?  முக்காலே மூணுவீசம் முழுங்கி ஏப்பம் விட்டாச்சு.... நினைக்க நினைக்கக் கோவமா வருது..... 



டிக்கெட் ஆபீஸை அடுத்து ஒரு பெரிய ஹாலின் நடுவில்  இந்த சமவெளி எப்படி இருக்குன்றதைக் காமிக்கும் மாடல் வச்சுருக்காங்க.  இந்த சமவெளியைசுத்தி இருக்கும் இடத்தின் பராமரிப்புக்கு ஜப்பான் நாடு பொருளுதவி செஞ்சுருக்குன்னு மாடர்ன் கல்வெட்டு பார்த்தேன்.

இந்த ஹாலுக்கு அந்தாண்டை இருக்கும்  வாசல் வழியாகப்போனால்  தூரத்தில் இருக்கும் மலைக்குன்றுகள் தெரியுது. அவ்ளோதூரம் நடக்கணுமா?  ஊஹூம்.... வேணாம்.  ட்ரெய்லர் கார்  மாதிரி ஒன்னு  இருக்கு. ஆளுக்கு அஞ்சு பவுண்ட் சார்ஜ்.  அதுவும் போகவர!  மலிவுதான் இல்லே?  ரெண்டு வண்டிகள் ட்ரிப் அடிக்குதுகள்.  மூணே மினிட் சவாரிதான் .
நாமும்  இந்த வண்டியில் ஏறிப்போய்  இறங்கினோம். இனி எல்லாம்  நடந்தேபோய்ப் பார்க்கணும். King's Valley 1,2 3 4 ன்னு 63  வரை எண்கள் கொடுத்துருக்காங்க. ஆனா வரிசைக்கிரமப்படி இல்லை. ஒவ்வொன்னாக் கண்டுபிடிக்கப் பிடிக்க நம்பர் கொடுத்துக்கிட்டே போனதுதான். இனியும் அந்த வரிசை வளரும்தான். எல்லாம் வெள்ளைக்காரர்களின் வேலை. அகழ்வாராய்ச்சி செய்யறேன்னு ஒரு கூட்டம் எப்பவும் இருந்துக்கிட்டே இருக்குதானே....

இத்தனை குகைகள் இருந்தாலும் ஒரு எட்டு குகைகளுக்கு மட்டுமே பயணிகளை அனுமதிக்கறாங்க,  எப்பவும் எதாவது பழுது பார்க்கும் வேலை நடந்துக்கிட்டே இருப்பதால் என்ற காரணத்தைச் சொல்றாங்க.  நம்ம டிக்கெட்டுலே மூணு கல்லறைக் குகைகளுக்கு மட்டுமே அனுமதின்னு சொல்லி இருக்குல்லே.... இந்த எட்டிலே மீதி இருக்கும் அந்த அஞ்சையும் பார்க்கணுமுன்னா......... கீழே டிக்கெட் ஆஃபீஸ்லேயே  அதுக்கான டிக்கெட் வாங்கிக்கணும்தான்.  குகையாண்டை வந்தபின் மத்ததையும் பார்க்க ஆசைப்பட்டால்.... திரும்பக் கீழேதான் போய்வரணும், கேட்டோ !
எட்டுக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லுனு... முதல்லே போனது.... KV 2. Rameses IV    'ராம் ராம்'னு சொல்லிக்கிட்டே கொஞ்சதூரம் நடந்து  குகை வாசலுக்குப் போனோம்.
நுழைவு வாசலை, ரூம் மாதிரிக் கட்டி,  கம்பியழி (இரும்பு கேட்) போட்டு வச்சுருக்காங்க.  செக்யூரிட்டி நம்ம டிக்கெட்டை வாங்கி அதுலே ஒரு ஓட்டை போடறார். ஆச்சு ஒன்னு.....  இப்படியே மூணு ஓட்டை டிக்கெட்டுலே விழுந்துருச்சுன்னா....   அதுக்கப்புறம் இந்த டிக்கெட் செல்லாது.  அதான் 'மூன்று மட்டும்' என்ற கணக்கு இருக்கே!
உள்ளே நுழைஞ்சால் சரிவான பாதை.... மரப்பலகையால்   நீளமாப்போட்டு வச்சுருக்காங்க.  சுமார்  ஒரு நூறு மீட்டர் இருக்கலாம். (88.48 மீட்டர்) ரெண்டுபக்கமும் கைப்பிடி இருப்பதால் நின்னு நிதானமாப் போக முடிஞ்சது. உண்மையில் ரொம்பவே நிதானமாத்தான் போகணும்....  ரெண்டு பக்க சுவர்களிலும்  சித்திரங்கள், கொஞ்சம்கூட இடைவெளி இல்லாம இருக்கு.  வரைஞ்ச படம் மாதிரி இருந்தாலும்,  சுவரில் புடைப்புசித்திரமா, லேசாச் செதுக்கிட்டு, அதுக்குக் கலர் பூசி விட்டாப்லெதான் !   Painted on stucco


சுவர் முழுக்க Hieroglyphs  பட எழுத்துகள்தான்.... என்னவோ சேதி சொல்லிக்கிட்டு இருக்கு. நமக்குப் படிக்கத் தெரியலையேப்பா.....
அப்புறம் அவுங்க கும்பிட்ட கடவுளர்கள் அநேகமா எல்லா இடங்களிலும்....  ரெண்டாயிரம் சாமிகள். அதுலே   சூரியன் முக்கிய கடவுள்.  சூரியனுக்குப் பெயர்தான் வேற ...  RA ன்னு சொல்றாங்க.

(எனக்குமே நியூஸி வந்தபிறகு, கண்கண்ட தெய்வமா  சூரியன்தான் கடவுள்.  வெயில் வராதான்னு வருஷம் முழுசும் ஏங்கிக்கிட்டுத்தான்  இருப்பேன்.  அப்படி வர்ற வெயிலும் உடம்பில் உரைக்காது...  சரியான எருமைத்தோல்.... இல்லே ?)

அநேகமா எல்லா சாமிகளுக்கும் மனுஷ உடம்பும், பறவை இல்லேன்னா மிருகத்தலைகள்தான்.  (நம்ம பெரிய சிறிய திருவடிகள் !!!! )

இதுலே பாருங்க....  ஆதிகாலத்தில் இயற்கையைத்தான் கடவுளாக வழிபட்டுக்கிட்டு இருந்துருக்காங்க. வானம், பூமி, காடு, மலை, அக்னி, சூரியன், சந்திரன் இப்படி....  எல்லாமே கண்ணுக்குத் தெரிஞ்ச கடவுளர்கள். இங்கே எங்க நியூஸி மவோரிகள் கூட வானமே தந்தை, பூமியே தாய் என்றுதான்  இருக்காங்க இப்பவும். இவுங்களுக்கும்  காடும் காற்றும், மலையும்  கூட கடவுளர்களே!

 மாத்தி யோசின்ற படி  ஈஜிப்ட் நாட்டில் வானம் தாய்,  பூமி தந்தைன்னுது  இவுங்களுடைய பழங்கால மதம். Nut  is the name of  Mother,  who is  Sky God.  Geb is the name of  Father , who is Earth God . 
மேலே படம்  : வானத்தாய் NUT / Newt ன்னு உச்சரிக்கணுமாம் !
வானத்தாய் எப்படி முழு பூமியையும்  வளைச்சுருக்கு பாருங்க !   வலையில் சுட்ட படம். அன்னாருக்கு நன்றி !

நம்ம சனாதன தர்மப்படியும், வேதங்கள் சொன்னபடியும் நமக்கும் எக்கச் சக்கமான கடவுளர்கள் இருக்காங்களே!  பஞ்சபூதங்களையும் வணங்கறோம்தானே!  அதனால்....   ஈஜிப்ட்டின் ஆதிகாலக் கடவுளர்களைப் புரிஞ்சுக்கறது நமக்குக் கொஞ்சம் சுலபம்தான்.    என்ன ஒன்னு பெயர்கள்தான் மனசுலே நிக்கமாட்டேங்குது !

அந்தச் சரிவுப்பலகையில் இறங்கிப்போய்க் கடைசியில் நின்னது  நாலாம் Rameses மன்னரின் கல்லறைக்கு முன்னால்தான்.  கல்லால் ஆன சமாதி.  மூடியெல்லாம் அதே கல்லில் செஞ்சுருக்காங்கதான். உள்ளே ரெண்டு சவப்பொட்டிகள் ஒன்னுக்குள் ஒன்னா இருக்காம். அதில்தான் மன்னரின் மம்மி கிடப்பு. கல்லறை செக்யூரிட்டி நம்ம கூடவே நடந்து வந்துருந்தார்.  உள்ளே  'மம்மி' இருக்கான்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னார். ஙே......   
அப்புறம் விவரம் கிடைச்சது.  மன்னர் மம்மி உள்ளேதானாம். இப்படி இருக்கார் !
சமாதியைச் சுத்தியும், மேலே விதானத்திலும் ஏராளமான சித்திரங்கள். சமாதியின் மேலேயும்  செதுக்கி இருக்காங்க.  பார்க்கரதுக்கு ஸோப் ஸ்டோன் மாதிரிதான் இருக்கு. ஆனால் க்ரானைட் கல்லாமே!   மன்னரின் செல்லங்கள்  காவல் காக்குதோ ?

 கடவுளே காப்பாத்து !!!    கைகளைப் பார்த்தால் நம்ம இஸ்கான் கோவில்  கௌரா & நித்யானந்தாக்கள் நினைவு வந்தது உண்மை. 

சமாதியைச் சுத்தி வரலாம். அந்தப் பக்கச் சுவர்களில் இருக்கும் சித்திரங்கள், என்னமோ நேத்துதான் வண்ணம் அடிச்ச மாதிரி பளிச்ன்னு இருக்கு. ஒரிஜினல்தானாம் !


சித்திரங்களில்  படமெடுக்கும் நாகங்கள் ஏராளம் !  பாம்புச்சாமி !  நம்மவர் 'பயமில்லாமல்' நின்னு போஸ் கொடுத்தார் :-)

அங்கங்கே உடைஞ்சு, உதிர்ந்துபோனவைகளை, மறுபடி சீராக்கிக்கிட்டு இருக்காங்க.  கம்ப்யூட்டர் டெக்னாலஜி வந்தாட்டு இப்பக் கொஞ்சம் சுலபமாத்தான் இருக்கு.  எங்கெங்கே போச்சோ... அந்த இடம் எப்படி இருக்குமுன்னு  பார்த்து அதைப் பூசிட்டு அப்புறம் வண்ணம் தீட்டுவாங்களா இருக்கும்.  அங்கேயே உக்கார்ந்து  சீரமைப்பு வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. 

இறங்கறது எனக்கொன்னும் பிரச்சனை இல்லை. இப்ப அவ்ளோதூரமும் திரும்ப ஏறிவரணுமே........ அங்கங்கே நின்னு, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிட்டு  மெள்ள மெள்ள ஏறிப்போயிட்டேன்.
அப்பாடா....    வாசலில் இதிஹாப்  உக்கார்ந்துருந்தார்.  இந்த கைடுங்க உள்ளே வரப்டாதோ? அவுங்களும் டிக்கெட் வாங்கணும் என்பதால்  வர்றதில்லையாம்....

வாங்க.... இன்னும் என்ன இருக்குன்னு பார்க்கலாம்....

தொடரும்....... :-)



8 comments:

said...

புதிய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. புதிய இடங்களையும் பார்க்கிறேன்.

படங்கள் அருமை. காணொளி எடுத்தீர்களா?

சமாதிக்கெல்லாம் போனீர்களே... குளித்தீர்களோ? ஹா ஹா

said...

குகைக்குள் சமாதிகள்.

அங்கே செதுக்கி/வரைந்து இருக்கும் சிற்பங்கள் எல்லாம் அழகு.

உங்கள் பதிவு வழி விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

said...

அருமை நன்றி

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

வீடியோ எடுக்கலை. நல்ல கூட்டம்.... குறுக்கும் நெடுக்கும் பயணிகள் போறதால் கஷ்டம்.


குளியல் ? இல்லையா பின்னே ? .....

பயணத்தில் அறைக்குத் திரும்பியதும் களைப்பைப் போக்க சூடான குளியலுக்கு ஈடுஇணை உண்டோ ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மலையைக் குடைஞ்சு அதில் கொண்டுபோய் சமாதி கட்டி இருக்காங்களேன்னுதான் எனக்கும் வியப்பு!

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

இவ்வளவும் மலை குகைக்குள் அடங்கி இருக்கிறதே ஆச்சரியம் தான். பல தகவல்கள் தெரிந்து கொண்டோம்.

said...

வாங்க மாதேவி,

கண்டது கடுகளவு, காணாதது உலகளவுன்னு சொல்லிக்கறேன் .