Monday, February 25, 2019

ஸ்நேஹம் உள்ள சிம்ஹம் !!!!!(பயணத்தொடர், பகுதி 71 )

ஜன்னலுக்கு  பர்ப்பிள்/நீலம் கலந்த ஃபில்ம் ஒட்டி இருக்காங்க. அதன் வழியாப் பார்த்தால் நீலப்படமாத் தெரியுது மதுரை!
குளிச்சுத் தயாராகி அதே 'மண்டபத்துக்கு'  காலை உணவுக்குப் போனோம்.   இடியப்பம், தேங்காய்ப்பால், சக்கரைப்பொங்கல், மத்தபடி வழக்கமான இட்லி வடை உப்புமான்னு இருந்தது.  குடிக்க ஜூஸ் மட்டுமில்லாமல் ரோஸ் மில்க் வேற ! 
ஒன்பதரைக்குச் சுத்தக் கிளம்பினோம்.  இப்பப் போற இடமும் இதுவரை பார்க்காததே...... நம்ம 'விஷ் லிஸ்ட் ' ஆஞ்சி வால் நீளம் இல்லையோ!

சுமார் பனிரெண்டு கிமீ தூரம். யானை மலை அடிவாரம்! மேலூர் மெயின் ரோடுலே போறோம். மதுரை ஹைகோர்ட் பார்த்ததும் நம்ம பிரபு ராஜதுரை நினைவு வந்தது உண்மை. இன்றைக்கு வலைஉலகில் உங்களை இவ்ளோ   இம்சைப் படுத்திக்கிட்டு இருக்க இவர்தான் முதல் காரணம். முறுக்கைத் தேடிப்போன நான் எழுத்தில் விழுந்தவள் நான் :-)  அந்த முறுக்கை எனக்கு அனுப்பியவர் இவரே!!
கொஞ்சதூரத்தில் மலை கண்ணுக்குப் பட்டது. ஆனைமலைன்னு சொன்னாலும், சட்னு பார்க்க முதலைத் தலை போல்தான் எனக்குத் தெரியுது :-)
இந்த ஊருக்கு நரசிங்கம் னு தான் பெயரே!  அதுவும் யா. நரசிங்கம்!  அது என்ன யா?  ஆனை, யானைன்னு இருக்கேனே....   அந்த  யானையோ?  முக்கால்மணி நேரமாச்சு இங்கே வந்து சேர.  காலையிலேயே சாலை முழுக்க  பயங்கரப் போக்குவரத்து.


ஊருக்குள் நுழையும்போதே அரசியல் கட்சிக்கூட்டம் ஒன்னு.  இன்றைக்கு ஜூலை 15 ஆச்சே.  நம்ம பெருந்தலைவர் காமராஜ் ஐயாவின் பிறந்தநாளைக் கொண்டாடறாங்களாம்!  அதிலும் இந்தக் கட்சி, ஐயாவைச் சொந்தம் கொண்டாடுது !  மற்ற கட்சிகளும்  விட்டுருமா?  அவர் போலவே ஆட்சியை நடத்துவாங்களாமே....   ஜெயிச்சு வந்துட்டால்....   நெசமாவா?  அ. வியாதிகள்  சொல்வதெல்லாம்  ஆத்தோடு போயிடாதோ..... 
அருள்மிகு  யோகநரசிம்ஹர் ஆலயம்.   சின்னதா ஒரு மூணு நிலை ராஜகோபுரம்.   வெளியே  அழகான மண்டபம். அதைச் சுத்திப் பரந்த இடம். கோவில் மதில்சுவரையொட்டி ரொம்பவே அழகான ஒரு தாமரைக்குளம்! கோவில் புஷ்கரணி !  வாவ்......   இவ்ளோ தாமரைப் பூக்களும்  பூத்து நிற்கும்போது  எவ்ளோ அழகா இருக்கும், இல்லே!!!
நம்ம கஜேந்த்ரமோக்ஷம் திருவிழா இங்கே நடக்குமாம்! அப்ப முதலைத் தலைன்னு நினைச்சது.... ஹைய்யோ.... என்ன பொருத்தம் பாருங்க....
சொல்ல மறந்துட்டேனே.... திருவந்திக்காப்பு மண்டபத்தாண்டை ஒரு  வண்டி நிக்குது.  அது யார் படம்?  எம் ஜி ஆர்?


ராஜகோபுரவாசல் வழியா கோவிலுக்குள் போறோம்.  முன்வாசலில் நம்மை வரவேற்கும் ஜயவிஜயர்களுடன்  சின்ன மண்டபம். நமக்கு இடப்பக்கத்தூணில் அழகான  லக்ஷ்மிநரசிம்ஹர். பலிபீடம். அதுக்குப் பக்கத்தில் குத்துவிளக்கு!   பக்தர்கள் கோவிலுக்குக் கொண்டுவரும் எண்ணெய், நெய்களை  இதுலே சேர்த்துடலாமாம்! கொஞ்சம் பெரிய கிண்ணமா வைக்கப்டாதோ?

பிரகாரம் நல்லாவே பெருசா இருக்கு!   ஆமாம்.... பலிபீடத்துக்கு முன்னால் கொடிமரத்தைக் காணோமே.....  இந்தக் கோவிலில் கொடிமரம் இல்லைன்றது கூட ஒரு விசேஷம்தான், போங்க.

பொதுவா  கருவறை விமானத்தின் நீள, அகல, உயரத்தைக் கணக்கில் வச்சுத்தான் கொடிமரம் அமைப்பாங்களாம். இங்கே  கருவறையே  மலையைக் குடைஞ்சு அதுக்குள்ளேதான் இருப்பதால் விமானம் கிடையாது.  அதனால் கொடிமரமும் கிடையாது!  தானிக்கி தீனி சரிப் போயிந்தி!

பல்லவர்கள் காலத்துலே கட்டப்பட்டக் குடவரைக் கோவில் இது.  பல்லவர்களுக்கு, ஒரு மலை அதுவும் இதைப்போல இருக்கும் கல்மலை கண்ணில் பட்டால் போதும். அதைக் குடைஞ்சு அங்கே பெருமாளைச் செதுக்கினால்தான் மனசு நிம்மதி ஆகும். அதுவும்  நரசிம்ஹராகவேதான் பெரும்பாலும்!  சிங்கத்தின் மீது தீராத ஆசை. கொடியும் அவுங்களுக்குச் சிங்கக்கொடிதான்.  ஒரு சில பல்லவ மன்னர்கள்தான் நந்தியைக் கொடியில் வச்சுக்கிட்டவங்க.

பிரமாண்டமான மலை  கிடைச்சால் விடமுடியுமோ?  இங்கே ஆறடி உயரக் குகை முழுசும் ரொம்பி நிற்கும் அளவில் நரசிம்ஹரைச் செதுக்கி  இருக்காங்க. குகை நரசிம்ஹர்களில் பெரிய உருவம் இவர்தானாமே!!!!

ரோமச முனிவர், குழந்தைவரம் வேண்டி சக்ரத்தீர்த்தக் குளத்தில் ( இங்கே இருக்கும் தாமரைக்குளம்தான்)முங்கி எழுந்து  பெருமாளை தியானிச்சு தவம் செய்யறார்.
வகைவகையான விஷ்ணு அவதாரங்களில், இவர் மனசுலே பதிஞ்சது நரசிம்ஹம்தான் போல.....    அன்று ப்ரஹலாதனைக் காப்பாத்த எடுத்த நரசிம்ஹம் போலவே எனக்குக் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டவும், ஆஹா.... வேஷங்கட்ட இன்னொரு சான்ஸுன்னு பெருமாளும் அதே கோபாவேசத்தோடு உக்ர ரூபத்தில் வந்துட்டார்.  முனிவருக்குத் திக்னு ஆகிப்போச்சு. இவ்ளோ உக்ரம் தாங்க முடியலையேன்னு  தவிக்கிறார். தேவர்களும் ஃப்ரீ ஷோ நடக்குதேன்னு வந்து குமிஞ்சுட்டாங்க.

இப்போ இந்த உக்ரத்தை எப்படித் தணிக்கலாமுன்னு  யோசனை. ஏற்கெனவே நடந்த சம்பவம் ரிபீட் என்பதால் அப்போ என்ன செஞ்சாங்களோ அதையே இப்பவும் செய்யணும்.  கூப்பிடு அந்தப் பொடியன் ப்ரஹலாதனை.....  அவனும் வந்தான்.  நமோ நாராயணான்னு  உள்ளம் உருகச் சொல்லிக்கிட்டேக் கிட்டப்போறான். குழந்தையைப் பார்த்ததும் ஆவேசம் அடங்குச்சுன்னாலும்  முழுசும்  கோபம்  போகலை.  அடுத்து என்ன செய்யலாம்? கூப்பிடு தங்கமணியை..... யாராக இருந்தாலும் பொண்டாட்டியைப் பார்த்தால்  பொட்டிப் பாம்பில்லையோ.....

வேண்டிக்கூப்பிட்டதும், 'என்ன கலாட்டா இங்கே'ன்னு கேட்டுக்கிட்டே லக்ஷ்மி வந்தாங்க.  அவ்ளோதான்.... 'ஒன்னும் இல்லையேம்மா.... இங்கே ரோமச முனிவர் கேட்டாரேன்னு வந்தேன்,  அதுக்குள்ளே நீ  இங்கே.... ஹிஹி...'

"சரி. சரி.  முனிவருக்கு என்ன வேணுமுன்னு கேட்டுக் கொடுத்துட்டுச் சட்னு வாங்க.   வீட்டுக்கு (வைகுண்டம் ) போகலாம்."

முனிவர் பார்த்தார்.....   இந்தச் சான்ஸை விட்டால் இனி இப்படி ஒன்னு கிடைக்கவே கிடைக்காது. 'பெருமாளே  நீங்களும், லக்ஷ்மியம்மாவும் இங்கே இப்படியே  தங்கி,  வர்றவங்க எல்லோருக்கும் அருள்புரிய வேணும்'னு விநயமா வேண்டினார். அப்படியே ஆச்சு!

நரசிம்ஹரும், நரசிங்கவல்லியுமா நமக்கும் காட்சி கொடுக்கறாங்க. 

அதென்னவோ  இந்தப் பயணத்துலே  நிறைய நரசிம்ஹர் கோவில்களே நமக்கு அமைஞ்சு போச்சு.  கருணைக் கடல்.....  அவன்  அன்புக்கு எல்லை இருக்கா என்ன?  தன்னை எப்போதும் துவேஷிச்ச ஹிரண்ய கசிபுவைக்கூட, வதம் செய்ய அவதரிச்ச சமயத்தில், அவனை ரெண்டு கைகளாலும் தூக்கிப்போய், வாசப்படியில் உக்கார்ந்து, அவனை ரெண்டு தொடைகளிலும் இருக்கும்படி மடியில் கிடத்தியவன், சட்னு வயித்தைக் கிழிச்சுத் தள்ளாமல்....  மெள்ள மெள்ளக் கீறினான். இட்ஸ் நாட் டூ லேட்..... இப்பவும் மனம் திருந்திட்டால் விட்டுடலாம்.  கோபம் முகத்தில் இருக்கே தவிர விரல் வழியா அன்பே வழியுது ! (ஒரு உபன்யாசத்தில் கேட்டது, நம்ம வழக்கம் போல் துளி மஸாலா சேர்த்தேன் ) 
எவ்ளோ ஸ்நேகமுள்ள சிம்ஹம் பாருங்க....
படுசுத்தமான பிரகாரம். உள்ளே போய் கருவறைக்கு முன் நின்றால் போதும்....  யோக நிலையில் அமர்ந்தபடி, நம் மனம் நிறைஞ்சு வழிய தரிசனம் கொடுக்கறார்  நரசிம்ஹர்! தகதகன்னு தங்கக்கவசம் ! கண்களில் துளிக் கோபம் இல்லை!
ஸ்ரீ நரசிங்கவல்லித் தாயாருக்குத் தகதகன்னு தங்க விமானத்தோடுத்  தனிச்சந்நிதி!   தாயாருக்கு இங்கே ஸ்பெஷல் ட்யூட்டி ஒன்னு இருக்கு. கோபக்காரப் புருஷனை அடைஞ்ச பெண்கள், இங்கே வந்து வேண்டிக்கிட்டால் போதும்.  அவரைப் பொட்டிப்பாம்பா ஆக்கிருவாங்க. எல்லாம் ஏற்கெனவே எக்ஸ்பீரியன்ஸ்டு இல்லையோ!
இந்திரனே இங்கே மலையாக படுத்திருப்பதாக ஐதீகம். அதனால் பௌர்ணமி கிரிவலம் இங்கேயும் உண்டு.   அஞ்சு மைல் நீள மலையைச் சுத்திவரப் பாதை இருக்கணுமே....  கருவறையைச் சுத்தி வரமுடியுமுன்னு நினைக்கிறேன். அங்கே ஒரு படிகளைப் பார்த்தும் மேலே ஏறிப் போகலை.
நரசிம்ஹ அவதாரம் செஞ்சது தேய்பிறை சதுர்த்தசி என்பதால் பிரதோஷ பூஜை இங்கேயும் விசேஷமாம்.
பிரகாரம் வலம் வந்தோம்.  படு சுத்தம்!  'என்னை' மட்டும்தான் தரைக்குள்ளே பாதி இறக்கிட்டாங்க.... ப்ச்....

கோவில் காலை 6 முதல் 11 வரையும், மாலை 5 முதல் எட்டுவரையும் திறந்து இருக்கும். அதுக்கேத்தாப்போலப் போய் தரிசனம் பண்ணிக்கலாம்.

மதுரையை ஆண்ட  மன்னர் வரகுணபாண்டியரின் அமைச்சர் மாறன்காரி, இந்தக் கோவிலை சீரமைச்சு விரிவு பண்ண ஆரம்பிச்சுருக்கார்.  அவர் காலத்துக்குப்பின் அவருடைய தம்பி மாறன் எயனர் திருப்பணியை முடிச்சுக் கொடுத்து குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு சொல்லுது.   இதெல்லாம் நடந்தது கிபி 770 னு கோவில் குறிப்பு. ஆமாம்... அந்தக் காலத்தில் நமக்கு இந்த கிபி கிமு எல்லாம் எப்படித் தெரியுமாம்? கல்வெட்டில் இது இருக்காதுன்னு நினைக்கிறேன். நமக்குத்தான் கல்வெட்டு மொழி தெரியாதேப்பா....
 இந்தக் கோவில், நம்ம  திருமோஹூர் கோவிலின்  உபகோவிலாம். ஒரே நிர்வாகம்.  அங்கத்துக் காளமேகப் பெருமாள்,  கஜேந்த்ர மோக்ஷம் விழாவுக்கு இங்கே வந்து போறார்!
இதே ஒத்தைக்கடை ஏரியாவில்தானே  ஒரு நாலு கிமீ தூரத்தில்  அந்தக் கோவிலும் இருக்குன்னு அங்கேயும் போனோம். நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு! 
மோஹினி அவதாரம் எடுத்துப் பிறரை மோஹிக்க வச்சத் திருமோஹூர் பெருமாள், நம்ம சக்கரத்தாழ்வார் தரிசனம் கிடைச்சது.

ஆண்டாளம்மா   அலங்காரம் அருமை. நம்ம தூமணிமாடத்தும் ஆச்சு :-) இங்கே கோவில் பகல் பனிரெண்டுவரை திறந்துருக்கும் என்பதால் ஒரே நாளில் அங்கேயும் இங்கேயுமாப் போய் வந்துடலாம்தான்.



உள்ளே கோவில் சுத்தம் பரவாயில்லை என்றாலும், ராஜகோபுரத்துக்கு முன்  தெருவாசல் சுத்தம் போதாது........   கோவில் நிர்வாகம் கவனிச்சால் தேவலை.
 கோவிலைப்பற்றி முந்தி எழுதுன அதேதான் இப்பவும்.  அப்பப் படிக்கலைன்னா இப்பப் படிச்சுக்கலாம். 
 

அப்போ இருட்டு. இப்போ வெளிச்சம். அதான் இப்ப எடுத்த படங்களை(யும்) இதுலே சேர்த்துருக்கேன்.

தொடரும்.......  :-)


6 comments:

said...

அவ்வளவு வருடங்கள் மதுரையில் இருந்திருந்தும், நான் சென்னை வந்த பிறகு ஒருமுறை - ஒரே ஒரு முறை - சென்று வந்த கோவில்.

said...

யானை மலை யோகநரசிம்ஹர் ஆலயம் - மிக சிறப்பான தரிசனம் ..

படங்கள் எல்லாம் அழகோ அழகு

said...

வெகு சிறப்பு, அருமை.

மதுரையிலிருந்து வாராவாரம் தஞ்சாவூர், இந்த மலை வழியா போயிருக்கேன்; but இந்த கோவில் அங்கே இருக்குன்னே தெரியாது.

said...

மதுரைக்குப் போய் இருந்தபோதூங்கு போக நினைத்துகைகூடாமல் போனது

said...

பொதுவாகவே குடைவரைக்கோவில்கள் என்றாலேயே பல்லவர்கள் நினைவுதான் வரும்! ஆனால் நரசிங்கம் கோவில் பல்லவர்கள் காலத்தையது அல்ல. ஒரு பாண்டிய மன்னனுக்கு மந்திரிகளாக இருந்த அண்ணன் தம்பி இருவர் தங்கள் சொந்தக் செலவில் கட்டிய கோவில் இது.கும்பாபிஷேகம் கண்டு பலநூறு வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் குடமுழுக்கும் இப்போது பார்க்கிற விதத்திலும் கோவில் இருக்கிறது.

உற்சவ மூர்த்தி அத்தனை அழகு! பொக்கைவாயுடன் சிரித்த முகமாக, நீ என்னைக் கூப்பிடேன்! ஓடோடி வந்துவிடுவேனே என்று சொல்கிற மாதிரி அப்படி ஒரு முகபாவம்!

மலையைச் சுற்றி வரப்பாதை இருக்கிறது. ஒரு பத்துப்பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் என்றால் கிரானைட் எடுக்க வெடி வைத்துக்கொண்டு இடைஞ்சலாக! விட்டிருந்தால் யானைமலையையே ஏப்பம் விட்டிருப்பார்கள்!

சிறுசிறு தகவல் பிழைகள் இருக்கின்றன என்றாலும், நெடுநாட்களாக அந்தப்பக்கம் போக முடியாத எனக்கு புகைப்படங்கள் மிகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சி தருவதாகவும்!

said...

அழகான படங்கள். உங்கள் மூலமாக இக்கோவில் தரிசனம் எங்களுக்கும். நன்றி டீச்சர்.