Wednesday, February 13, 2019

மனுஷனைச் சும்மா இருக்க விட்டாலும்.......... (பயணத்தொடர், பகுதி 66 )

காலையில் சீக்கிரமே விழிப்பு வந்துருச்சு.  செல்லை எடுத்து தொடர்பு இருக்கான்னு பார்த்துட்டு கொஞ்சம் வெளியே போய் இணைப்பு கிடைக்குதான்னு  தேடணும்.  நம்மவர் முதலில் கதவைத் திறந்து பார்த்துட்டு, 'ரமேஷ் எழுந்துட்டார் போல.... ஆளைக் காணோமு'ன்னார்.
கிடைச்ச வைஃபை வச்சு தோழிகளுக்கு செய்தி அனுப்பிக்கிட்டு இருந்தேன். அப்படியே  மாடிக்குப்போய் வ்யூ பார்க்கணும். ரெண்டு அறைகள் இருக்கும் கட்டடங்களுக்கு  ஒரு மொட்டை மாடின்ற கணக்கு.


சுத்திவர மலைகள், நடுவிலே ஊரு.....  பார்க்கவே பரவசமா இருந்தது உண்மை!  இன்னும் பொழுதே முழுசா புலராத  இனிமையான காலைப்பொழுது........    நிசப்தமான  இடத்தில் நான் பேசறதே  எதோ  கூச்சல் மாதிரி  கர்ணகடூரமா எனக்குக் கேக்குது.  ரிஸார்ட்டில் அங்கங்கே வண்டிகள் நிக்குது. இன்னும் அங்கத்து மக்கள் எழுந்துருக்கலை.
அப்பதான் தோழி செய்தி அனுப்பறாங்க....   'மூணாருக்குப்போறே தானே....   குறிஞ்சி பூத்துருக்காம்!'

ஹா.....   சும்மாவே ஆடுற மனசுக்குச் சலங்கை கட்டி விட்டாச்:-)    நா.பா.வின் பூரணியும், அரவிந்தனும்  குறிஞ்சிமலரா நெஞ்சத்தில் வந்து  நிறைஞ்சுட்டாங்க.  கட்டாயம் பார்த்தே ஆகணும்..... அடுத்த முறை மலரும்போது நான் இருக்க மாட்டேன்.... (வழக்கமாப் போடும் அஸ்த்திரம்தான்...  ஹிஹி...)

ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டுப் போகலாமுன்னார் 'நம்மவர்'.  அதுக்காகக் காத்திருந்தால் எப்படியும் கிளம்ப ஒன்பதாயிரும். அதான் நேத்தே மூணார் பற்றிப் பேசுனப்ப, தம்பி அங்கே ' போடிமெட்  பாண்டியில் சுடச்சுட இட்லி ரொம்ப நல்லா இருக்கும்' னு சொன்னாரே...  அங்கெ போய் சாப்பிட்டுக்கலாம். ச்சலோன்னு  துள்ள ஆரம்பிச்சேன்.... சாமி வருது.... :-)

ரமேஷை ரெடியாகச் சொல்லலாமுன்னு கீழே வந்தால்.... அவர் வண்டிக்குள் இருந்து எழுந்து வர்றார். "அடராமா.... இங்கெயா படுத்தீங்க?"   காலையில் அஞ்சு மணிக்கு முழிப்பு வந்துருச்சாம். அதான் வண்டிக்குள் போய் படுத்துருக்கார்.
ஏழேகாலுக்குக் கிளம்பறோமுன்னு சொல்லிட்டு, நாங்களும் தயாராகிப் புறப்பட்டாச்!   இந்த ரிஸ்ஸார்ட் மூணார் போகும் பாதையில்தான் இருக்கு. 
மலைப்பாதையில் மெள்ள ஏறிப்போகுது வண்டி. அதிகாலைப் போக்குவரத்து இன்னும் ஆரம்பிக்கலை. புதுசாப் பளபளன்னு தார்ரோடு போட்டுருக்காங்க. இன்னும் ரோடு மார்க்கிங்ஸ் கூடப் போடலை....
கொஞ்சம் உயரம் போனதும் வண்டியை நிறுத்தி இறங்கி சில க்ளிக்ஸ்.   தெங்கின் தலைகள் எக்கச் சக்கம் !
'அந்தக் காலத்துலே பாதை எல்லாம் இப்படி இருக்காது. குண்டும் குழியுமா மோசமான ரோடு.  போடியில் இருந்து சாந்தாம்பாறை வரை பஸ்.  ரொம்பக் கஷ்டப்பட்டு ஏறிப்போகுமு'ன்னு ஆரம்பிச்சார் நம்மவர்.  அங்கிருந்து  ஒரு மைல் நடந்து போகணுமாம் தோட்டத்துக்கு!
 "இதுக்கே  ஒரு நாள் ஆகிரும். காலையில் பஸ் ஏறுனா இருட்டறதுக்குக் கொஞ்சம் முன்னேதான் வந்து சேருவோம்.   காஃபி தோட்டத்துக்கு போகணுமுன்னா.... குரங்கணிக்குக் கிட்டே போகணும். அதுக்கு  இன்னும் ரொம்ப தூரம் நடக்கணும்.  மேலே தோட்டத்துலே மருந்தடிக்கும்  போது  போய்  ரெண்டு மூணு நாள் தங்கியிருந்துட்டு வருவோம். "

எல்லாம் பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் ஸ்பெஷல்ஸ்தான். வீட்டுலே இருந்து வம்படி செய்யாம , தோட்டத்துக்குப் பத்தி விட்ருவாங்க போல (என்) மாமியார்!  ச்சும்மா ஜாலி நடை கிடையாது.  மேலே ஒன்னும் மளிகை சாமான்கள் கிடைக்காது என்பதால் அங்கே தங்கி இருக்கும் ஆட்களுக்கான  சமையல்  சாமான்களைக் கீழே இருந்து மூட்டை கட்டிக்கிட்டுத் தலைச்சுமையாக் கொண்டு போய்க் கொடுக்கணும். ஆளுக்கொரு மூட்டை ! தாத்தா பாட்டி, மாமன்களுடன் இன்னும் சில வேலைக்கான ஆட்கள்னு ஒரு கூட்டமாத்தான் போறது வழக்கமாம்.

தேயிலைச்செடிகளும்  சட் னு வந்து போகும் சின்னச் சின்ன அருவிகளுமா அருமையாப் போகுது  'நம்ம' பயணம்.
சாலையில் ஒரு இடத்துலே  படிகள்  மேலேறிப்போகுதேன்னு பார்த்தால் கருப்பசாமி கோயில்!   கீழே படிகள் ஆரம்பிக்கும் இடத்துக்குப் பக்கம்  நியூட்ரினோ  ஆய்வை  விரட்டப்போவதா ஒரு தகவல் பலகை. அதுக்குள்ளே ஒருத்தர் என்னவோ சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தார்.
அதுவரை இனிமையா இருந்த காலநிலை சட்னு மாறி மழை ஆரம்பிச்சது....

சுமார் ஒரு மணி நேரத்துலே போடிமெட் வந்துட்டோம். எங்கே அந்த பாண்டி? நிறைய வண்டிகள் நிக்குற இடமாத்தான் இருக்கணும்....  கரெக்ட். அதே தான் அந்தப் பாண்டி!
நீங்க மலையாளம் சினிமா பார்க்கிறவங்களா இருந்தால் இந்த பாண்டி என்ற சொல்  பரிச்சயமா ஆகி இருக்கும். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சேரநாட்டு மக்கள் சொல்ற  சொல்லுன்னு நினைச்சால்.....  நீங்க அப்பாவி!  அந்தக் காலத்துலே நல்ல சொல்லாக இருந்தது, காலப்போக்கில் ஒரு  வசவுச் சொல்லா ஆகி இருக்கு. காரணம் சினிமான்னு தனியா சொல்லணுமா?  தெறி பறயும்போள்  தமிழன்மாரை மானம் கிடத்துன்னது அங்கெனயா ...  இதொக்க   வேணோ? ச்சீச்சீ.....
ஹொட்டேல் பாண்டியில் வடை வகைகள், பஜ்ஜிகள் எல்லாம் கண்ணாடிப்பெட்டியில் ஷோ காமிக்குது.  கல்லாவில் இருப்பவர்தான்  ஓனர். பெயர்க்காரணம் கேட்டேன். அப்பாவின் பெயராம். அவர் ஆரம்பிச்சு வச்ச வியாபாரம், இப்போ மகன் நடத்தறார்.

சுடச்சுட இட்லிகள் அருமை!   யார் விரோதமும் வேணாமுன்னு சகல கட்சிக் கேலண்டர்களும் இருக்கும் சின்ன இடத்துச் சுவரில் அடிச்சுப்பிடிச்சு இடம் புடிச்சுருக்கு!  வியாபாரம் நடத்துறவங்க இப்படித்தான் இருக்கணும். இருக்கார்.  கூட்டத்துலே கோவிந்தான்னு என் பெருமாளும், குழந்தைக் கண்ணனும் கூட இருக்காங்க.  அப்ப சைவர்கள் கோச்சுக்கிட்டா? நோ ஒர்ரீஸ்... இதோ  'தக்ஷிணா மூர்த்தி' !    இன்னும் ஏராளமான சாமிகளும்  கூடவே ரெண்டு கழுதைகளும்!  எதாவது குறியீடோ?

சின்னதா ஆரம்பிச்ச தூறல்கள் வலுத்துப் பெரிய மழை ஆரம்பிச்சது. ரமேஷ் முதல்முறையா இந்தப் பகுதிக்கு  வர்றார் என்பதால்  நிதானமா ஓட்டச் சொன்னோம்.  'கல்யாணத்துக்காப் போறோம்... முஹூர்த்த நேரம் முடிஞ்சுடப்போகுதுன்னு ஓட?'

சில இடங்களில் மழை இல்லை,  சில இடங்களில் அதிகமுன்னு ஒரு விளையாட்டு.
ரோடுக்கு ரொம்பப் பக்கமாவே தேயிலைச்செடிகள் !  அந்த நேரத்துலேயே தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு வந்துருக்காங்களேன்னு  கடிகாரத்தைப் பார்த்தால் மணி எட்டேமுக்கால். அட! ஒன்னரை மணி பயணிச்சும் அலுப்பே தெரியலை.
 ராஜகுமாரி, தேவிகுளம்னு கடந்து போய்க்கிட்டே இருக்கோம். வழி தவறிட்டோமா என்ன? ராஜகுமாரி?  அட!   இது ஊர்ப்பெயர்தாங்க !
அங்கங்கே தோட்டத்தொழிலாளர்கள்  தேயிலை மூட்டையைத் தலையில் சுமந்துக்கிட்டு நடக்கறாங்க. ஒரு இடத்தில்  எல்லாத்தையும் சாலை ஓரத்தில் குவிச்சு வச்சுட்டால், கம்பெனி வண்டி வந்து அள்ளிக்கிட்டுப் போயிருமாம்.

மூணார் போய்ச் சேரும்போது மணி பத்தரை.
முதல்லே குறிஞ்சிப்பூ......   எரவிக்குளம் தேசியப் பூங்காவாண்டை போகணும்.  அதுக்கும் முதலில் எதாவது ரெஸ்ட் ரூம் கிடைக்குமான்னு பார்க்கணும்.
அலிபாபாவும் நாப்பத்தியொரு  பதார்த்தங்களும்..... 
நல்ல வசதிதான்.  வந்ததுக்கு எதாவது  அட்லீஸ்ட் ஒரு காஃபி குடிச்சுட்டுப் போகலாமுன்னா ரெஸ்ட்டாரண்டுலே  ஈ காக்கா இல்லை. வாசலில் இருக்கும் ஜூஸ் கடையிலும் யாரும் இல்லை. வியாபாரம் ரொம்பவே நிதானமா ஆரம்பிக்கும் போல!    இந்தியாவில் குளிர் ஊர்களில் இப்படித்தான்....



இந்தப்பக்கம் நல்ல மழை பெய்ஞ்சுருக்கு..... சாலையில் தண்ணீர்....    இங்கிருந்து ஒரு பதிமூணு கிமீ  போகணும், எரவிக்குளம் தேசிய பூங்காவுக்கு....
 நாம் அங்கே போய் பார்க்கிங்கில் வண்டியை விட்டுட்டு, டிக்கெட் வாங்கிக்கணும். அவுங்க வனத்துறை  வண்டியிலே கூட்டிப் போவாங்க. ஒருநாளைக்கு  ரெண்டாயிரத்து இருநூத்தம்பது ஆட்களுக்கு மட்டுமே அனுமதி.  காலை ஏழரை முதல் மாலை நாலுவரை வண்டிகள் போய் வந்துக்கிட்டு இருக்குமாம்.  எல்லாஞ்சரி.நமக்கு டிக்கெட் கிடைக்குமான்னு தெரியலை.... போய்த்தான் பார்க்கலாம். இந்த மழையில் ரெண்டாயிரத்துச் சொச்சம் டிக்கெட் வித்துப்போயிருக்குமா என்ன?
போய்ச் சேர்ந்தோம்....

ரொம்பச் சுத்தம்......

இன்றைக்கு    மேலே  மலையில்  கனமழை பெய்வதால்.....     வண்டிகள்  போக ச்சான்ஸே கிடையாது. ட்ரிப் கேன்ஸல்.....
அடடா....  குறிஞ்சி... பூக்கும்போதே.... கருகிப் போச்சே.... பூரணி.... அரவிந்தா....

நாம் பார்க்காம விட்டவைகள் எதெதுன்னு போர்டு பார்த்துப் பெருமூச்சு விட்டுட்டுக் கிளம்பறோம்.  மக்காச்சோளத்தை உரிச்சுத் தொங்கவிட்டுச்  சுட்டுக் கொடுக்கும் ஒரு வியாபாரம். மழைக்கு நல்லாத்தான் இருக்கும், இல்லே?

தொடரும்........:-)





4 comments:

said...

குறிஞ்சிப்பூ காட்டுறேன்னு ஆசை காட்டிட்டு இப்படி ........

said...

வாங்க விஸ்வநாத்,

நானும்தான் ஏமாந்து போனேன்.....

பொழைச்சுக்கிடந்தா அடுத்த முறை..... பார்க்கலாம்.

said...

அடடா.. பார்க்க முடியாமல் போச்சே....

மலைப் பகுதியை பார்க்கப் பார்க்க அப்படி ஒரு ஆனந்தம்...

said...

பாண்டி ஓட்டல் பதார்த்தங்கள் எல்லாமே பாக்க அருமையா இருக்கு. சாப்பிடவும் நல்லாத்தான் இருந்திருக்கும்னு நெனைக்கிறேன்.

படங்களைப் பாக்கும் போதே குளுகுளுன்னு இருக்கு. குறிஞ்சிப்பூ இதுவரைக்கும் நானும் பாத்ததில்ல. பாக்கக் கெடச்சா பாத்துக்கலாம்.