Wednesday, February 20, 2019

வழக்கத்துக்கு மாறாக........(பயணத்தொடர், பகுதி 69 )

நாலு கோபுரமும்  கட்டடக்குவியலுகளுக்கிடையே அங்கங்கே முளைச்சிருந்தது.
இங்கேயே இருக்கும்  'மண்டபம்' ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாட்டுக்குப் போனோம்.  ரமேஷ் வெளியே போய் சாப்புட்டுக்குவாராம்.  நமக்கு   ருமாலி ரோட்டி, வெஜிடபிள் கறி. கூடவே ஒரு லஸ்ஸி.  அப்பதான் நினைவுக்கு வருது... போடியில் இளநீர் வியாபாரத்தைப் பார்க்கவே இல்லைங்கறது... அவ்ளோ தெங்கு இருந்துமா..............


சாப்பாடு முடிச்சு அறைக்கு வந்ததும்,  'இந்த வெயிலில் எங்கேயும் சுத்த வேணாம். கொஞ்சம் ரெஸ்ட் எடு'ன்னுட்டு 'நம்மவர்'  தூக்கம்போட ரெடி ஆனார்.   வைஃபை கனெக்‌ஷன்தான்  இருக்கே, நம்ம வேலையைப் பார்க்கலாமுன்னு  .... 

இவருக்குத் தூங்கக் கொடுத்து வைக்கலை. எல்லாத்துக்கும் காரணம் இந்த வைஃபைதான்.  கீழே டெஸ்கோடு போராட்டம்.  ஒவ்வொரு பாஸ் வேர்டா அனுப்பறாங்க.... ஒன்னுகூட வேலை செய்யலை.  எரிச்சல்தான் மிச்சம்.  கீழே வைஃபை வேலை செய்யுதாம்.  அங்கே போனா... சுத்தம்.....
இல்லைன்னா இல்லைன்னு சொல்ல என்ன தயக்கம்?

இவ்ளோ நேரம் வேலை செஞ்சதே மேடம்.... ஓ.... என்னைப் பார்த்து பயந்துருச்சு....

"ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க மேடம். இப்ப வந்துரும்..... உடனே  உங்களுக்குச் சொல்றேன்  மேடம்...."

இந்தத் தகராறுலேயே  நேரம் போய் இப்ப மணி நாலு.  காஃபியைக் கொண்டுவரச் சொல்லிட்டு, ரெடியாகி இப்போ கோவிலுக்குப் போறோம்.

மீனாக்ஷியையே எப்பவும் பார்க்கணுமா? இதுவரை போகாத,  ஆனால் போகணுமுன்னு நினைச்ச கோவிலுக்கு முதலில் போகலாம். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதிக்கு முன்னுரிமை.
ஹொட்டேலுக்கு எதிரில் ஒரு பழைய புத்தகக்கடை!  போய்ப் பார்க்கணும்.  மேற்கு மாரட் வீதி இது.  ரெண்டுபக்கமும் நெருக்கமா அடைச்சுக்கிடக்கும் கடைகள், வீதியின் 'வீதி'யைத் தின்னுருந்தது...

பார்க்கிங் ஒரு புது ஸ்டைல் இந்த ஊரிலே. இருக்கும் ரோடில் சரிபாதியில் குறுக்கு வாட்டுலே டூவீலர்களை அடுக்கி நிறுத்திக்கறாங்க. மிச்சம் இருக்கும்  அரை ரோடில் எதிரும் புதிருமா வரும் வாகனங்கள் படும் திண்டாட்டம்   பார்க்கணுமே.... 

அதுக்குத்தான் ஒன்வே போட்டுட்டோம்ல...... 

 ஆனால் ஹூ கேர்ஸ்?  ஒன்வே நீங்க போட்டாலும் நாங்க டூவேன்னுதான் வருவோம்ல..... 

வெறும் நாலே கிமீ தூரத்தைக் கடக்க நாப்பது நிமிட் ஆச்சுன்னு சொல்றேன். நம்புங்க.  ரமேஷுக்கு இந்தப்பக்கமெல்லாம்  புதுசுன்றதும் ஒரு காரணம்.  இதுலே 'நம்மவர்' வேற கூகுள் மேப் சொல்றதையெல்லாம் கேக்கறார்.....
உண்மையில் அந்த நேரம், நம்ம சீனிவாசனை நினைச்சுக்கிட்டேன்.  அவர்மட்டும் நமக்கு ட்ரைவராக் கிடைச்சுருந்தால் இந்தப் பயணம் இன்னும் நல்லாவே இருந்துருக்கும். அதிலும் இந்த மதுரைப்பக்கமெல்லாம் அவருக்கு வழிகள் அத்துபடி. இடம் சொன்னால் போதும், சட்னு கொண்டுபோய் விட்டுருவார்.

வைகைப் பாலம் கடந்து  'ஆற்றை' (?) ஒட்டின பாதையில் போறோம்.  கள்ளழகர் ஆத்துலே இறங்கற அன்றைக்கு மட்டும் சுத்தமா வச்சுக்கிட்டாப் போதாதா என்ன? அதுவே அதிகம் இல்லையோ.....
உலகத்தமிழ்ச் சங்கம்னு ஒரு கட்டடம்... அழகா இருக்கு!  அதுக்கு முன்னால் ஒரு நாய் உக்கார்ந்துருந்துச்சு.  சங்கம் வளர்த்த மதுரை இல்லையோ!
அடுத்த அஞ்சாவது நிமிட்டில்  அருள்மிகு பிரசன்ன வெங்கிடாசலபதி கோவில் வளாகத்துக்குள் போயிருந்தோம்.  சின்னதா ஒரு மூன்று நிலை ராஜகோபுரம்.  இந்தாண்டை ஒரு மண்டபம். கம்பிஅழி போட்டு வச்சுருக்காங்க.

கோபுரவாசல் கடந்து உள்ளே போனால் பெரிய ப்ரகாரம்.  நேரெதிராக் கொடிமரம், பலிபீடம், பெரிய திருவடிக்கான சந்நிதி. அந்தாண்டை தூண்களோடு மண்டபம்.
நமக்கிடப்பக்கம்  வெளிப்ரகாரத்துலேயே  சக்ரத்தாழ்வார் தனிச்சந்நிதி.  ஒத்தைக்கல்லில் செதுக்கி இருக்கும் சிலா ரூபம். திருவாசியும் இந்தக் கல்லுலெயே  செதுக்கி இருக்காங்க.



ப்ரகாரம் வலம் வர்றோம்.  நம்ம ஆஞ்சிக்குத் தனி சந்நிதி !  சுமார் ஆறடி உயரம்.  பின்னால் தலைக்குமேலே உயர்ந்து நிக்கும் வாலில்  மணி! இடுப்பில் கத்தி, ஒரு கையில் தாமரை மொட்டு, இன்னொரு கை அபய முத்திரை காமிச்சபடி. சட்னு எங்கியோ ஓடும் அவசரத்தில் இருக்கும் கால்கள். கழுத்து, மார்பு, கைகால்களில்  நகையும் நட்டுமாய், கொஞ்சம் பல்லைக் காமிச்சபடி, கண்களை உருட்டி முழிக்கிறார். உக்ர ஹனுமானாம்.  காதில் குண்டலம் வேற !  தலைமுடியைத் தூக்கிக் கொண்டை போட்டுக்கிட்டு இருக்கார். கேச பந்தனம்!  வாவ்....





 வலத்தில் இப்போ பின்வாசலாண்டை வந்துருக்கோம்.  சொர்கவாசல். ரெட்டைத்தாழ்பாள்! சட்னு  யாரும் சொர்கத்துக்குள் புகுந்து போகச் சான்ஸே இல்லை!  பரவாயில்லாம ஓரளவு சுத்தமா இருக்கு.



சொர்கவாசலுக்கு அந்தாண்டை பசுமடம். அகத்திக்கீரை விற்பனைக்கு! ஆறேழு பசுக்கள்  மேடையில் நிக்க, நாம் கீழே நின்னு கீரை  ஊட்டலாம். வாழைப்பழம் கொடுக்காதே, அரிசி கொடுக்காதேன்னு  போர்டு வச்சுருக்காங்க. இன்னொரு பசுக்கொட்டிலில் மூணு பசுக்கள்.  கோபூஜை ஏத்துக்கிட்டு வந்த வெள்ளையம்மா அழகு !

கீரையின்  நன்மைகளை எழுதிப்போட்டுருக்காங்க. எல்லாம் நமக்குக் கிடைக்கும் நன்மைகளே!  ரொம்ப நல்லது. ஆனால் இதெல்லாம் அந்த அகத்திக்கீரைக்கு மட்டுமா? பாவம் இல்லையோ அந்தப் பசுக்கள்.  அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம் என்றாலும்  அதையே தின்னு தின்னு போரடிக்காதா?    அதுகள் வயித்துக்கும் அளவுக்கு மிஞ்சினால் கேடுதானே?  மத்த கீரைவகைகளோடு, ஒரு இணுக்கு அகத்திக்கீரை வச்சுச் சின்னக் கட்டாக விக்கலாமே!

புண்ணியமுன்னதும் நம்மவர் சட்னு அ. கீரையை வாங்கி  என் கையில் கொடுத்துட்டார். நான் அதுலே கொஞ்சூண்டு எடுத்து ஊட்டப்போக, முதலில் கிட்டவந்து இலையை முகர்ந்து பார்த்துட்டு நாக்கை நீட்டுச்சு.  அதுக்குள்ளே இன்னும் ரெண்டுபேர் கீரையோடு அங்கே ஆஜர். வேணாமுன்னு தலையை ஆட்டுனது அழகு!


நான் மீதிக்கீரையை நம்மவரிடமே கொடுத்துட்டேன். அவர் அந்தக் கோடியில் இருந்த  பசுக்களுக்குப் போட்டார்.
வலம் முடியும்போது பக்கவாட்டுப் படிகளில் வரிசைகளில் சனம் ஏறிப்போறாங்கன்னு நாங்களும் அந்த வரிசையில் நின்னோம். உள்ளே சாயரக்ஷை பூஜை ஆரம்பம். மண்டபத்தில் மேளச்சத்தம்  கேட்டது.  நாதஸ்வரம் வாசிக்கிறாங்க ஒரு பெண்மணி.
எனக்கு நாதஸ்வரம் பிடிக்கும். அதுவும் கல்யாண வீடுகளிலும்   கல்யாண மண்டபங்களிலும் வாசிக்கறதைவிடக் கோவிலில் வாசிப்புன்னாதான்.  அதுவும்  ராத்திரி நேரங்களில் ஸ்வாமி புறப்பாடு நடக்கும் போது  கேக்கணும்.... அந்த ஊர்வலத்தோடு போகலாமான்னு இருக்கும்...  என்ன ஒரு சுகம்! என்ன ஒரு கம்பீரமான  ஒலி!  வாசிக்கவும் நல்ல பலம் வேணும். இல்லைன்னா.... தி.மோ.வில் நம்ம ஜில்ஜில் ரமாமணி வாசிச்சாப்லதான்.  வெறும்...பீப்பீ......

விஸ்தாரமான பூஜை முடிஞ்சு, மற்ற சந்நிதிகளுக்குப் போகுது வாத்யகோஷ்டி! தெரிஞ்சபாட்டுதான் வாசிச்சுக்கிட்டுப் போறாங்க. பின்னாடியே கொஞ்ச தூரம் போனேன். என்ன பாட்டுன்னு இப்ப சட்னு நினைவுக்கு வரலை.... 'நாலாட்டே பதுக்கு நாட்டகமு'.... தானே? 
கூட்டத்துக்குள்ளே  கடைசியில்  நின்னதால் மூலவரை ஸேவிக்க முடியலை... அதனால் திரும்பி வந்து காலியா இருந்த மூலவர் சந்நிதியில் நின்னு  வெங்கிடாசலபதியையும்,  உற்சவர் சீனுவையும் நல்லாவே ஸேவிக்க முடிஞ்சது.  சட்னு கூட்டம் எப்படி வடிஞ்சதுன்னா....  சாயரக்ஷை முடிஞ்சதும் ப்ரசாத விநியோகம் நடக்குமே அங்கே போயிருக்கு!

மரத்தடி மேடைகள் அங்கங்கே இருக்கறதால் சனம், எதோ பீச் லே  இருக்கறமாதிரி அங்கங்கே உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. அதுவும் சரிதான். ஊருலே வைகை இருக்குன்னாலும்  ஒரே குப்பைக்காடா இருக்கே! ஆத்தங்கரையோரம்  பாட்டுப்படிப்போமா.....  எல்லாம்  அந்தக் காலத்தோடு சரி....

கோவிலுக்கு வயசு ஒரு அறுநூறுன்னு (குத்து மதிப்பாச்) சொல்றாங்க. திருமலைநாயக்கர் கட்டுன கோவில் என்பதால்  பதினேழாம் நூற்றாண்டு  ஆரம்பத்தில்னு கணக்கு வச்சாலும் ஒரு  நானூறு வருஷம்தான் வரும்.   ஊர் அபிமானத்துலே  ஒரு இருநூறைக் கூட்டிக்கிட்டாங்கன்னு வச்சுக்கலாம்.

திருமலை மன்னர், நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னாரின் பக்தர். அங்கே பெருமாளுக்குப் பூஜை முடிஞ்சதும்தான் இவர் அன்றைய நாளுக்கான அன்னஆகாரம் எடுத்துக்குவார்.  அங்கே பூஜை ஆச்சுன்னு எப்படித் தெரிஞ்சுக்கறதாம்?  செல்ஃபோனா இருந்துச்சு அப்போ?

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கும்,  அரசமாளிக்கைக்கும் இடையில் அங்கங்கே மண்டபங்கள் கட்டி விட்டு, அதில் மணியையும் தொங்க விட்டுருக்கார். அங்கே பூஜை ஆனதும்  முதல்மண்டபத்துலே மணி அடிப்பாங்க. அதைக் கேட்டதும் அடுத்த மண்டபத்து மணி அடிக்க, அப்புறம் அதுக்கடுத்த  மண்டபங்களில் வரிசையா  மணியோசை வழியாவே சேதி வந்துரும். இதுதான் உண்மையான தொலைத்தொடர்பு !

இதே டெக்னிக்கை இன்னும் சில மன்னர்களும்  கடைப்பிடிச்சதாக் கேள்விப்பட்டுருக்கேன்.  இது பூஜைக்கு மட்டுமில்லை.... எதிரி வர்ற சேதியைக் கூடச் சட்னு தெரிஞ்சுக்கிட்டு, இங்கே பாதுகாப்பைப் பலப்படுத்தவும் தான்.

 யாரங்கே.... கோட்டைக் கதவுகளை உடனே சாத்துன்னதும்............  மூடிருவாங்க, இல்லே?

நம்ம திருமலை நாயக்கர்  மன்னருக்குப் பெருமாள் பக்தி அதிகமாம். அதனால் திருப்பதியில் பூஜை செஞ்சாச்சுன்னு தெரிஞ்சாதான் இவர் இங்கே சாப்புடுவாராம். அதான் திருப்பதியில் இருந்து மதுரை வரை மண்டபம் கட்டி விட்டு மணியையும் தொங்கப்போட்டாருன்னு  இன்னொரு  கதை வேற போய்க்கிட்டு இருக்கு.   திருப்பதி எங்கே மதுரை எங்கே?  இந்தக் கணக்குலே போனா....    பெருமாளுக்கு ஏகாந்த ஸேவா பண்ணும் நேரம்தான் (அர்த்தஜாம பூஜை)இவர் சாப்பிடணும்....இல்லை?  போகட்டும்.........


கோவில் வந்த விவரம்  பார்க்கலாம்.  அரசர்கள் அந்தக் காலங்களில் இரவு நேரங்களில் மாறு வேஷத்தில் நகர் வலம் போவது உண்டு. நாடும் நகரமும் நல்லவழியில் நடக்குதான்னு பார்க்கணுமுல்லே? அப்படி ஒரு சமயம்  மன்னர் திருமலை நாயக்கர் போன சமயம்,  இந்தப்பகுதியில் வரும்போது, மனசுக்குள்ளே  கடவுள் சாந்நித்யத்தை  உணர்கிறார். அந்த  இடத்தில்  நிக்கும்போது மனசுக்குள் ஒரு பேரானந்தம்  வந்துருக்கும் போல....   பெருமாள் பக்தர் ஆனதால் அந்தப்பெருமாளே அங்கே நிக்கறாப்போல உணர்ந்துருப்பார் போல.... என்ன ஏதுன்னு பார்க்கணுமுன்னு அந்த இடத்தை மறுநாள் பகலில்  கொஞ்சம் விலாவரியாத் தேடிப்பார்க்கும்போது ஆஞ்சநேயர் சிலை ஒன்னு அம்புடுது!
இது தெய்வத்தின் அருள்னு நினைச்சவர் அதே இடத்தில் ஒரு கோவில் கட்டிடலாமுன்னு கட்டுன கோவில்தான் இது.  இஷ்ட தெய்வம் பெருமாளை மூலவராக வச்சும், பக்கத்துலே  சுயம்புவாத் தோன்றின ஆஞ்சிக்கு தனிச்சந்நிதியுமா  கட்டி இருக்கார்.  பெருமாள் பிரசன்னமாயிட்டார் என்றதால்  கோவிலுக்குப் பிரசன்ன வெங்கிடாசலபதி கோவில்னு  பெயரும் வச்சாச் !

நம்ம  கள்ளழகர் கோவிலின் மேற்பார்வையில் இந்தக் கோவில்   நடக்குது.  அழகர் சுந்தரராஜர், தங்கை கல்யாணத்துக்கு  வர்றார் பாருங்க.... அப்போ  இங்கே வந்து ராத்ரி தங்கிட்டுத்தான் மறுநாள்  வைகையில் இறங்குவார் !  அதுவும்   அழகர் கோவிலில் இருந்து இங்கே வரும்போது கள்ளன் வேஷம் போட்டுக்கிட்டு வர்றது ஏன்னா.... திருட்டு பயம்தான்......   கல்யாணத்துக்குக் கொண்டுவரும் பொன்னும் பொருளும் கள்வர்கள் கவர்ந்துகொண்டு போயிட்டால் என்ன செய்யறது?  உக்கார்ந்து யோசிச்சுத் தானும் கள்வர்களில் ஒருவன் போல வேஷம் போட்டுக்கிட்டால்....  திருடன், இன்னொரு திருடனாண்டை என்னன்னு திருடுவான்?  அவனுக்கும் ஒரு தொழில் தர்மம்,  நியாயம் எல்லாம் இருக்குமுல்லெ?   என்னா  டெக்னிக் பார்த்தீங்களா?  ஹாஹா... கள்ளன் வேஷம் போட்ட அழகர் கள்ளழகர் ஆனார்!!!

மறுநாள்  இவர் போகாமலேயே கல்யாணம் முடிஞ்சு போயிருது.  கொண்டுவந்த நகைநட்டையெல்லாம்  இவரை ரிஸீவ் பண்ணக் காத்திருக்கும் ஸ்ரீ வீரராகவப் பெருமாளாண்டை கொடுத்தனுப்பிட்டு, இவர் கோச்சுக்கிட்டு ஊர் திரும்பிருவார்.  இதெல்லாம் ஒரு தனிக்கதையாத்தான் ஒருநாள் எழுதவேணும்...

இப்படித்தான் சாமிகளும் எல்லாம் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க !


தரிசனம் நல்லபடியாக் கிடைச்ச  சந்தோஷத்தில் திருப்தியா வெளியே வந்தால், நாதஸ்வரம் வாசித்த பெண்மணி யாரோடோ பேசியபடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. அவுங்க வாசிப்பைப் பாராட்டி, அந்தப் பாட்டு 'நாலாட்டே பதுக்கு' தானேன்னு கேட்டதும், அவுங்களுக்கும் ரொம்பவே சந்தோஷமாகிருச்சு.  'நல்லா இருங்க'ன்னு வாழ்த்திட்டுக் கிளம்புனோம்.  இவுங்க பெயர்தான்  சட்னு நினைவுக்கு வரலை.....   தெரிஞ்சவங்க யாராவது சொன்னால் தேவலை....
திரும்பி வரும் வழியில் அப்படியே கூடலழகரை எட்டிப் பார்த்தால் அங்கே ஒரு நிறைமாத கர்ப்பிணி !

தொடரும்......... :-)


6 comments:

said...

வெகு சிறப்பு.
3 years from 1996, myself was in TVS/Madurai. கொசுவர்த்தி ....

said...

தல்லாகுளம் பெருமாள் கோயில் இதுவரைக்கும் போனதில்ல. இத்தனைக்கும் அதுக்கு பக்கத்துல இருக்கும் நண்பர் வீட்டுக்கெல்லாம் போயிருக்கேன். எப்படியோ விட்டுப் போச்சு. உங்களால இன்னைக்கு படங்களாகப் பாத்தாச்சு.

அழகர் ஆத்துல எறங்குறதைப் பத்தி நீங்க சொன்னதும் சட்டுன்னு நினைவுக்கு வருது. அழகர்கோயில் பத்தி ஆராய்ச்சி செஞ்சு தொ.பரமசிவம் அழகர்கோயில் அப்படின்னே பெயர் வெச்சு ஒரு புத்தகம் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கு.
http://honeylaksh.blogspot.com/2017/04/blog-post_4.html
மதுரைக்குப் போனா நானும் வாங்கனும். அங்க தெரிஞ்சவங்க இருந்தா வாங்கிப் படிங்க.

said...

அட பேட் அப்பளம் ..

தல்லாகுளம் பக்கத்தில் தான் அக்கா வீடு ...அவங்க எல்லாம் இங்க வழக்கமா போறவங்க ...ஆன நாங்க இன்னும் போனது இல்ல ..அடுத்த முறை போயிட்டு வரோம் ...

said...

கோயில் படங்கள் அற்புதம் டீச்சர்.
வைகை ஆற்றைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு படம் போடாமல் விட்டுட்டீங்களே :(

said...

கள்ளழகர் பற்றி வேறு வேறுகதைகளும் இருக்கு போலிருக்கே

said...

'நாலாட்டே பதுக்கு நாட்டகமு'.... தானே?

/nAnATi patuku nATakamu
kAnaka kannati kaivalyamu/

Revathi Ragam.