Monday, February 16, 2015

மோஹினியாட்டம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 22)

கண்டதும் வருவது காதலா இல்லை காமமா?
அழகியைப் பார்த்ததும்  ஆசையில் பித்து தலைக்கேறிப் போச்சு! அவளைக் கண்ட அத்தனை பேருக்குமே! ஒரே ஒருவருக்கு மட்டும்தான் இல்லை... ஏன்? அவர்தான் அழகியைப் பார்க்கவே  இல்லையே:-)

இப்படி ஒரு அழகியை இந்த ஈரேழுபதினாலு உலகங்களில் கண்டதுண்டோ?

ஐய்ய....  இது ஆம்பளைன்னு  யாருக்காவது  புரிஞ்சதோ?  ஊஹூம்.....

திருப்பாற்கடலைக் கடைஞ்சு  அதுலே இருந்து வெளிவந்த அம்ருதத்தை,  கொடுத்த வாக்கின்படி  அசுரர்களுக்கும் தேவர்களுக்குமா பங்கு போட வேண்டிய நேரம். எல்லோரும் பந்தியிலும் உக்காந்தாச்சு.

இங்கோ தேவர்களுக்கு  வயித்துலே பயம் பிடுங்கி எடுக்குது.  சும்மாவே இந்த  அரக்கன்களின் தொல்லை தாங்கமுடியலை. இதுலே  அம்ருதம் சாப்பிட்டு  சாகாவரம் அடைஞ்சுட்டாச் சொல்லவே வேணாம்?  தங்களுக்குக் கெட்ட பெயர்,  அதான் வாக்கு மீறல்  வராமத் தங்களைக் காப்பாத்திக்கணும் இப்போ! என்ன செய்யலாமுன்னு யோசிச்சவுடன்,  மஹாவிஷ்ணுதான் சட்னு நினைவுக்கு வர்றார். அவர்  பெட்ரூமாண்டைதானே இருக்காங்க இப்போ.

பொழுதன்னிக்கும்  உங்களைக் காப்பாத்தறதே எனக்கு வேலையாப்போச்சுன்னு  சலிப்போடு  சொல்லிக்கிட்டே யோசிக்கிறார். இதுவரை எடுக்காத அவதாரம்  எதுன்னு....   பார்த்தால்   பொம்னாட்டி வேஷம் கட்டுதல்.

நம்ம தமிழ் சினிமாக்களில் கூடப் பாருங்க....நிறையப்பேரு பொம்பளை  வேசம் போட்டுருக்காங்க. அந்தக் காலத்து நாடக மேடைகளில்  ஆம்பிளைங்கதான் பெண் வேஷமும் கட்டுவாங்களாம்.  பெண்கள் நடிக்க வந்ததெல்லாம்  ரொம்ப நாளைக்குப்பின்புதான்.  ஒரு படத்துலே சத்யராஜ் பெண் வேஷம் ரொம்ப லக்ஷணமான  இருந்துச்சு.  சரத்குமாருக்கும் பொருத்தமாத்தான் இருந்துச்சு  பெண் வேடம்.

பெருமாளிடம் இல்லாத நகை நட்டா? இல்லே பட்டுப் பீதாம்பரமா?  யாராலும் கண்டுபிடிக்கவே முடியாதபடி  மோஹன உருவத்தில்  அவதாரம் எடுத்ததும்  மனம் மயங்கிய தேவர்கள் ஹா........மனமோஹினின்னு .....உருக ஆரம்பிச்சாங்க.

ஆமாம்... ஒன்னு கவனிச்சீங்களா?  சாதாரணமா நிஜப்பெண்கள் நடக்கும்போது தேவையில்லாத குலுக்கல் மினுக்கலோடெல்லாம் நடக்கறதில்லை. நாங்கபாட்டுக்குப் போய்க்கிட்டு இருப்போம். ஆனால் பெண்வேஷம் கட்டுன ஆண்கள் நடக்கும்போது இல்லாத ஒய்யாரமெல்லாம் வந்துரும்.  தளுக்கலும் குலுக்கலுமாத்தான், கண் இமைகளை  தேவைக்கு மீறிப் படபடன்னு  மூடித்திறப்பது, உதடுகளை (கொஞ்சம் அசிங்கமா!) குவிச்சுக் காமிக்கிறது, மேலாடையை  இழுத்து இழுத்து விட்டுக்கறதுன்னு......அய்ய....  யக்:(

இதே தளுக்கல், மினுக்கலுடன்  அம்ருதம் உள்ள குடத்தைத் தூக்கி  இடுப்பில் வச்சுக்கிட்டு ஒய்யாரமா  நடந்துபோறாள் 'மோஹினி' . எல்லோருக்கும் ஜொள்ளு. அரக்கர்களின் பந்தி வரிசைக்கு முதலில் வந்து நின்னு,  மயக்கும் பார்வையை வீசுனதும்.....  கொஞ்சம் பொறுங்கன்னு கொஞ்சும் மொழியில் சொல்லிக்கிட்டே தேவர்கள் வரிசைக்கு வந்து பரிமாற ஆரம்பிச்சாள்.

இடைக்கிடை  இங்கே கொஞ்சல் பார்வையை வீசுனதும்  இதோ இப்ப வரேன்னு ஜாடை காமிச்சதும்.... அரக்கர்கள் எல்லோரும்  வச்ச கண்களை வாங்காம அவள் உருவத்தையே மனசுக்குள் பருகிக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொருவர் மனசுக்குள்ளும் அப்படி நுழைஞ்சு ஆட்டுவிக்கிறாள்.

உண்மையைச் சொன்னால்.... இந்த அரக்கர்கள் கடுமையான  உருவத்துடன், கொடுமைக்காரரா இருப்பாங்களே தவிர ஒருவிதத்தில் அப்பாவிகளே. தேவர்களைப்போல் சூழ்ச்சி கீழ்ச்சி எல்லாம் பண்ணத் தெரியாது. நிதானமா யோசிக்கும் புத்தியும் கிடையாது. எல்லாம் அப்போதைக்கப்போது....  அழகான பொண்ணா.... தனக்கு வேணும். தனக்கே வேணும். நல்ல பொருட்களா.... உடனே அங்கேபோய்  அதுக்குண்டான  உரிமை உள்ளவர்களைக் கொன்னு போட்டு அதைக் கவர்ந்துக்கணும் இப்படி. ப்ச்....

இதுக்குள்ளே அம்ருதம் இருந்த சட்டி ஸாரி குடம் காலி. தேவர்கள் எல்லோரும் அம்ருதம்  சாப்பிட்டாங்க, ஒரே ஒருவரைத் தவிர!  உண்மையில் ஒரே ஒரு ஜோடியைத் தவிர!  ஆலகால விஷத்தை முழுங்கி மயக்கமாக் கிடக்கும் புருஷனை மடிமேல்  தூக்கி வச்சுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்காள்  ஒருத்தி. மோஹினி அவதார அழகை அப்போது காணாமல் மயங்கிக் கிடந்தவர், இன்னொருசமயம்  கண்டு மயங்குனது தனிக்கதையாக்கும், கேட்டோ!

கடைசியில் அரக்கர்களுக்கு நாமம் போட்டுட்டாள்  மோஹினி!  எல்லோரும் ஜொள்ளுவிட்டு ஏமாந்ததுதான் மிச்சம்.  ஆனாலும் இதுலே ரெண்டு பேர் அம்ருதத்தின் ருசியை அனுபவிச்சுட்டாங்க. நைஸா தேவர்கள் கூட்டத்து பந்தியில் போய் உக்காந்துக்கிட்டாங்க.  மோஹினி பரிமாறிக்கிட்டே வர்றாள். இவர்களில் ஒருவன் இலையில் அம்ருதம் விளம்பியாச்சு. சட்னு எடுத்து வாயிலும் போட்டுக்கிட்டான். அப்பப் பார்த்துப் பக்கத்தில் உக்கார்ந்திருந்த  தேவரில் ஒருவர்,  மோஹினிக்குக் கண் ஜாடையில்  அங்கே இருப்பவர்கள் இருவரும் அசுரர் என்று காட்டியதும், கையிலிருக்கும்  கரண்டியால் சட்னு ஒரே வீச்சில் அவுங்க கழுத்துகளைச் சீவி எறிஞ்சுட்டாள் மோஹினி.

இதைப் பார்த்துக்கிட்டு இருந்த அசுரர்களில் ஒருவர் ஓடிவந்து  ரெண்டு தலைகளையும்  உடம்போடு பொருத்தினார். அவசரத்தில்  தலைகளும் உடம்புகளும் மாறிப்போச்சு! அம்ருதம் விழுங்கியபடியால்  ஒரு  அரக்கனுக்கு மரணமில்லை. துண்டான உடல்கள்  வெவ்வேறு தலையில் சேர்ந்ததால்  ரெண்டு பேருக்குமே மரணமில்லைன்னு ஆகிப்போச்சு.  இவுங்க ரெண்டு பெரும்தான்  ராகு , கேது என்று நவகிரக வரிசையில் சேர்க்கப்பட்டாங்க!

கதை இப்படித்தான் இருக்கணுமுன்னு நினைக்கிறேன். லாஜிக் சரியா வருதான்னு பாருங்களேன்!

இப்படியாக இந்த மோஹினி அவதாரம் எடுத்த இடம்  இந்த மோஹூர் என்றபடியால் திருமோஹூர் என்று திவ்யதேசத்தில் ஒன்றாக இருக்கு. மோஹனக்ஷேத்ரம் என்பதே  இதன் பூர்வீகப்பெயர்.

தாயாருக்குப் பெயர் மோஹனவல்லி.  உற்சவருக்கு  ஆப்தர் என்று பெயராம்.  அப்ப மூலவர்?  காளமேகப்பெருமாள். பக்தர்களுக்குத் தன் கருணையை மழையாகப் பொழிஞ்சு தள்ளிருவார் என்பதால்  இப்படிப் பெயர் லபிச்சுருக்கு. இவரைக் கும்பிட்டால் மோக்ஷம் உறுதி. கூடக் கைபிடிச்சு நடந்து  மோக்ஷத்தில் கொண்டு போய் சேர்த்துடுவாராம் இந்த ஆப்தர். நம்ம நம்மாழ்வாருக்கும்  கைபிடிச்சுக் கூட்டிண்டுபோய் மோக்ஷம் கொடுத்துருக்கார் . ஆப்தர் என்றால்....  என்ன அர்த்தம்?  நண்பேண்டா :-)

புலஸ்திய மகரிஷி இங்கே வந்து பெருமாளை சேவித்து, உன் மோஹினி அவதாரத்தின் அழகைக் கொஞ்சம் காட்டுன்னு வேண்டுனதும் 'இதோ'ன்னு  காமிச்சாராம்.  வழக்கமா ரிஷிகள் கேட்டுக்கொள்ளும் ' இதே ரூபத்தில் இங்கிருந்து பக்தர்களுக்கு அருள் செய்ய வேணும்'  என்ற கோரிக்கைக்கு இணங்கி அப்படியே இங்கே இருக்காராம்.  அதென்ன 'ராம்,ராம்  '?

திருக்கோஷ்டியூரில் இருந்து  அம்பத்தினாலு கிலோ மீட்டர் தூரம் அடிச்சுப்பிடிச்சு இங்கே வந்து சேரும்போதே கோவில் பூட்ட வேண்டிய சமயமாக ஆகிப்போச்சு. 'போய்ப் பார்க்கலாம். திறந்திருந்தால் நம்ம அதிர்ஷ்டம்' என்று போனோம்.

திறந்திருக்குன்னதும் உள்ளே ஒரே பாய்ச்சல். காளமேகரைக் கண்டோமா,  மோஹனவல்லியைப் பார்த்தோமா, பள்ளிகொண்டவனை தரிசித்தோமான்னு  ஒன்னுமே  சரியா நினைவில் இல்லை. ஓடியோடிக் கண்டு கன்னத்தில் போட்டுண்டதோடு சரி.



உள்ளே ஒரு மண்டபத்தில் கொஞ்சம் கூட்டம் இருக்கேன்னு  எட்டிப் பார்த்தபோது அங்கே சக்கரத்தாழ்வார் ! உற்சவர்.  பெரிய உருவம்தான்.  அக்னி க்ரீடமும் பதினாறு கைகளுடனும் நூற்று  ஐம்பத்து நாலு மந்திர அக்ஷரங்களுடனும் இருக்கார்.  அவரைச் சுற்றிக் கயிற்று வேலி. தரிசனம் கிடைச்சதேன்னு  புறப்பட்டோம்.





தாயார் , தன் சந்நிதியை விட்டு வெளியே வரவே மாட்டாங்களாம். புருஷன் பெண் வேஷம் போட்ட தலம் என்பதால் அவருக்கே மதிப்பு இருக்கட்டுமுன்னு நினைப்பாம். ஐயோ  பாவம் என்று சொல்லும்போதே...மனசு கொஞ்சூண்டு குதூகலிச்சதும் உண்மை. புறப்பாடுகளில்  பெருமாளுடன்  கூட வர்றது  நம்ம ஆண்டாளாம்.  அடிச்சாள் ப்ரைஸ்!


 முன்மண்டபத்து நடுப்பாதையில் கொடிமரத்துக்கு இந்தாண்டே   பிரசாத ஸ்டால். லட்டு வாங்கி அங்கேயே நாங்க மூணு பேரும் நின்னவாக்கில்  உள்ளே தள்ளிட்டுக் கிளம்பினோம்.


புஷ்கரணிக்குப்பெயர் திருப்பாற்கடல், வில்வம் கொண்டு அர்ச்சனை,  தாயார் பெருமாள் சேர்த்தி வருஷத்துக்கு  ஒரு நாள்  மூணு மணிநேரம், ரதி மன்மதன்  இப்படி நிறைய சுவாரசியமான சமாச்சாரங்கள் இந்தக் கோவிலில் இருக்கு. மதுரைக்கு எத்தனை தடவை வந்திருக்கோம். (மாமியார் வீட்டுக்கு  இதுதான் வழி) ஒருதடவை கூட போகணுமுன்னு தோணலை பாருங்க.  இந்த முறைதான்   போகணுமுன்னு முடிவு செஞ்சது. அதிலும்  திருமயம், திருக்கோஷ்டியூர் போய் வந்ததால்....  பொழுதோடு இங்கே வர முடியலை:(

சரியாப்பார்க்கலையேன்னு மனசு கிடந்து தவிச்சது உண்மை. இன்னொருநாள் வரலாம் என்று 'நம்ம  ஆப்தர்' ஆறுதல் மொழி சொன்னார். இன்னும் 12 கிலோமிட்டர் போகவேணும் மதுரைக்கு.

போகும் வழியில் அண்ணனுக்கு செல் கால். திருமோஹூர் கோவிலைவிட்டுக் கிளம்பிட்டேன்னதும்  அண்ணி கேட்ட முதல் கேள்வி, 'சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தாச்சா? ' என்பதே.

என்னை  யானை , யானை மெமரின்னு சொல்றீங்களே....  எங்க அண்ணியும் அண்ணனும்  கோவில் சமாச்சாரத்துலே  படுபயங்கர  மெமரி உள்ளவர்களாக்கும் கேட்டோ!



மதுரை ராயல் கோர்ட் வந்து சேரும்போது கிட்டத்தட்ட ஒன்பது மணி.   முதல் வேலை முதலில் என்று நம்ம சீனா ஐயாவுக்கு  செல்லடிச்சேன்.  நோ ரிப்ளை. அடுத்த எண் நம்ம தமிழ்வாசி பிரகாஷ்.  ஊர்வந்து சேர்ந்த விவரத்தைச் சொன்னதும், மகிழ்ச்சி தெரிவித்ததோடு சீனா ஐயாவிடம் செல்லைக் கொடுத்தார்.

நாளைக் காலை ஒன்பதுக்கு  நடனகோபால நாயகி மண்டபத்தில் சந்திக்கப்போறோம்.

ரூம் சர்வீஸில்  தோசையைத் தின்னுட்டுக்  கொஞ்சநேரம் வலை மேய்தல்,  அவரவர் வீட்டுக்கு சேதி சொல்லுதல் ஆனதும் கட்டையைக் கிடத்தியாச்சு.

 இன்றைக்கு மூணு திவ்ய தேச தரிசனம். எல்லாமே நாம் முதலில் திட்டமிடாமலே கிடைச்சது.   பெருமாளுக்கு  நன்றி சொல்லத்தான்வேணும். சொன்னேன். கேசவா,நாராயணா, கோவிந்தா....

தொடரும்:-)

முக்கியக்குறிப்பு:  திருமோஹூர்  தலவரலாறு புத்தகம் அங்கே கோபால் வாங்கி வச்சுருக்கார். இப்பதான் கவனிச்சேன்.அதில் உள்ள படங்களை இப்போ ஸ்கேன் பண்ண நேரமில்லைன்னு  ஜஸ்ட் க்ளிக்கி இங்கே சேர்த்துள்ளேன்.  கில்லர்ஜி, வேண்டிய அளவு  எடுத்துக்கலாம். நோ ஒர்ரீஸ்:-)

PIN குறிப்பு: நம்ம பதிவர் மாநாட்டு சமாச்சாரங்களை  'மதுரைக்கு முன்னுரிமைன்னு மூணு பதிவுகள் மூலம் சொல்லியாச்சு.  அதன்பிறகு நடந்தவைகளை அடுத்த இடுகையில் தொடரலாம்.





20 comments:

said...

லாஜிக் சரியாத்தான் இருக்கு...

சந்தேகமேயில்லை... படுபயங்கர மெமரி அம்மா...

said...

காள்மேகப்பெருமாள்.மதுரையில் இருந்தபோது அடிக்கடி சென்று சேவித்து இருக்கிறேன்.
இவர் வழித்துணை பெருமாள். நமது ஜீவன் கரை ஏறும்பொழுது வெளிச்சமாக வந்து நம்மை அழைத்து செல்வாராம்.

சிறப்பான பகிர்வு.

said...

இதுதான் காளமேகத்தூரா? இங்க இருந்து திருவரங்கத்து மடப்பள்ளியில் பொங்கல் கிண்டப் போயிட்டாரே. அது சரி. திருவானைக்காவல் மோகனாவோட காதல் இழுத்திருக்கும். இதை வெச்சு முன்ன எழுதுன கதை நினைவுக்கு வருது.

இந்த அமிர்தமெல்லாம் தேவர்களுக்குத்தான் தேவைப்படுது. ஏன்னா சுகவாசிகள் அவர்கள். சுகத்தை அனுபவிக்கவே நேரம் சரியா இருக்கும். அதுல மறந்து வேலையை ஒழுங்காச் செய்றதில்ல. எங்க மழை பெய்யனுமோ... அங்க வெயில் அடிப்பாங்க. எங்க வெயில் வந்தா நல்லாருக்கும்னு நெனைக்கிறாங்களோ, அங்க மழையும் வெள்ளமும். அடிச்சா புயல் இல்லாட்டி வெக்கை. அடுப்புல இருக்க வேண்டிய நெருப்பு, இப்ப பைலட் வரைக்கும் எரியுது. கோடானுகோடியா கொள்ளையடிச்சவன் நல்லா இருப்பான். நல்லது பண்றவன் சீக்கிரமே போவான்.

இப்படித்தான் இருக்கு அவங்க பண்ற வேலையெல்லாம். இதுக்கு அப்ரைசல் மீட்டிங் வெச்சா தேவர்கள் இதுவரைக்கும் குடிச்ச அமிர்தத்தையெல்லாம் வாந்தி எடுக்கனும். :)))))))))))))))))

பெருமாளே நீயாச்சும் எல்லாரையும் நல்லபடி பாத்துக்க.

திருமோகூர் பத்தி சில வரலாற்றுத் தகவல்கள். படிச்சு நினைவிருக்குறதச் சொல்றேன். சங்ககாலத்துல இந்த ஊருக்கு மோகூர்னு பேர். மோகூர்ல அப்பக் கோயில்கள் இல்ல. அந்த ஊர் வேப்பமரந்தான் கடவுள். அதுதான் அவங்களோட உயிர்.

சேரன் செங்குட்டுவன் இங்க படையெடுத்து வந்து அந்த வேப்பமரத்தை வெட்டிக் கொண்டு போய் அவனுக்கு அதுல முரசு செஞ்சிக்கிட்டானாம். இவனும் சிலப்பதிகாரச் செங்குட்டுவனும் ஒரே ஆளான்னு தெரியல.

அந்தப் போர்ல இறந்து போன வீரர்களின் மனைவிகள் சோகத்துல கூந்தலை அறுத்துக்கிட்டாங்களாம். அந்தக் கூந்தல்ல கயிறு திரிச்சு முரசுக்கு வெச்சுக்கிட்டானாம் செங்குட்டுவன்.

said...

//சாதாரணமா நிஜப்பெண்கள் நடக்கும்போது தேவையில்லாத குலுக்கல் மினுக்கலோடெல்லாம் நடக்கறதில்லை. நாங்கபாட்டுக்குப் போய்க்கிட்டு இருப்போம். ஆனால் பெண்வேஷம் கட்டுன ஆண்கள் நடக்கும்போது இல்லாத ஒய்யாரமெல்லாம் வந்துரும். தளுக்கலும் குலுக்கலுமாத்தான், கண் இமைகளை தேவைக்கு மீறிப் படபடன்னு மூடித்திறப்பது, உதடுகளை (கொஞ்சம் அசிங்கமா!) குவிச்சுக் காமிக்கிறது, மேலாடையை இழுத்து இழுத்து விட்டுக்கறதுன்னு......அய்ய.... யக்:(//

சரியா சொல்லியிருக்கீங்க டீச்சர். நானும் எப்போதும் நினைப்பதுண்டு.

திருமோகூர் காளமேகப் பெருமாளின் தரிசனம் திவ்யமா கிடைத்து விட்டது.

தொடர்கிறேன்.

said...

இந்தக் கதைகளை எல்லாம் ஏன், எப்படி என்று கேட்கத் தோன்றாவிட்டால் ரசிக்கலாம்

said...

சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பஷிபேகம் சில நாட்களில் நடக்கும் மூச்சுவிட இடம் இருக்காது. காலை வேலையாயிருந்தால் சாக்கிர புஷ்கரிணி பார்த்திருக்கலாம். நாங்கள் பார்க்கும் போது தாமரைகள் நிரம்பி இருந்தது. இப்போது இல்லை என்றார்கள். இப்போதும் சுமி வீட்டில் சுதர்சனரோட காலண்டர் இருக்கு.மதுரை வந்தாச்சா. சரி.

said...

Love your blog and look forward to reading it every day.

said...

திருமோகூர் பக்கத்தில உள்ள ஆனைமலை அடிவாரத்திலே மதுரை விவசாயக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கே அடியேன் ஐந்து வருட வாசம். காளமேகப் பெருமாள் அப்போது எனக்கு மிகவும் ஆப்த நண்பராகிப் போனார். அடிக்கடி சந்தித்து அளவளாவிக் கொள்வோம்.

said...


வணக்கம் மேடம் சக்கரத்தாழ்வார் புகைப்படத்தை தங்களின் அனுமதியோடு சுட்டுக்கொள்கிறேன்.
மதுரைப்பதிவை இன்றுதான் பார்த்தேன் என்னையும முள்ள புகைப்படத்தை எடுத்து உலகமே கண்டு ரசிக்கும்படி போட்டு இருகீங்க.... இவ்வளவு நாள தெரியாமல் போச்சே...
எனது புதிய பதிவு அ.அ.அ. சிரிக்கலாம் வாங்கோ...

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அப்ப வீடு முழுக்க யானைகள்தானே:-))))

said...

வாங்க ரமா ரவி.

இருட்டுலே போயிட்டோமேன்னு இருக்குப்பா. கொஞ்சம் வெளிச்சம் காட்டி இருக்கப்டாதோ?

இன்னொருக்கா கூப்பிடுவார்தான். அப்ப இன்னும் விளக்கமா எழுதுவேன்.

said...

வாங்க ஜிரா.


அடடா.... இப்படிப் புதுத்தகவல்கள் ஏராளமா வச்சுருக்கீங்க!!!!

வாவ்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நானும் இப்பதான் உங்க சதுரகிரி மலை ஏறிட்டு வந்தேன்:-)

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

உண்மைதான். ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்:-)

said...

வாங்க வல்லி.

இப்படி இருட்டுலே வரவழைச்சுட்டானேப்பா! விடுவதில்லை. அடுத்த முறை!

said...

வாங்க வித்யா.

வணக்கம். முதல் வருகையோ?

உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்குப்பா.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஆஹா... அஞ்சு ஆண்டுகளா!!!

ஆப்தர் உங்களுக்கு ஆப்தராகவே ஆகிட்டார்!

said...

வாங்க கில்லர்ஜி.

தலவரலாறு புத்தகம் வாங்கியது தெரியாமல் வலை ஆண்டவரிடம் கேட்டு ஒரு படம் போட்டேன்.

இப்ப புத்தகத்தில் இருந்ததைச் சுட்டுப்போட்டுருக்கேன். கொஞ்சம் பெட்டர் க்வாலிடி. இதை எடுத்துக்குங்க.

சிரிக்க வந்துக்கிட்டே இருக்கேன் அங்கே:-)

said...

திருமோகூர் - அருமையான தலமாகத் தெரிகிறது.......

படங்களும், தலவரலாறும் அருமை.

தொடர்கிறேன்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மதுரைப் பயணத்தில்போய் வாருங்கள்.

தொடர்வதற்கு நன்றி.