Wednesday, February 18, 2015

கூடலழகரின் கதை சொல்லும் கோபுரம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 23)

பதிவர் மாநாடு முடிஞ்சு வரும் வழியில்தான் கூடலழகர் இருக்கார்.  கோவில்வாசலைக் கடப்பது  இன்றைக்கு இது நாலாம் தடவை.  அறைக்குப்போயிட்டு வரலாமுன்னு  நினைக்கும்போது,  போறபோக்குலே  கோவிலுக்குப்போய் தரிசனம் முடிச்சுக்கிட்டுப் போயிடலாமேன்னு  கோபால் சொன்னதுக்கு (அபூர்வமா) சரின்னேன்:-)

'சொன்ன பேச்சை இப்பவாவது கேட்டாளே'ன்னு பெருமாளுக்கு சந்தோஷம் போல!   அவ்வளவாக் கூட்டம் இல்லை. சுடச்சுட ததியன்னம்  கொடுத்தார். 'இருந்த' கோலத்தில் அப்படி ஒரு அழகு!

கடைசியா எப்போ வந்தேன்? ம்ம்ம்ம்......  சண்டிகரில் இருந்துட்டு மறுபடி நியூஸி திரும்பும் சமயம்.  மாமியார் வீட்டுக்குப்போய் பைபை சொல்லிக்கலாமுன்னு மதுரை வந்திருந்தோம். அப்பதான் நம்ம  முப்பத்தி ஏழு! பெருமாள் தரிசனத்துக்குக் கிளம்பி காலையில்  அழகர் கோவில்,  திரும்பி வரும் வழியில்  ஸ்ரீ நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் பிருந்தாவனக்கோவில், ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடாஜலபதி  கோவில் (ஜஸ்ட் எட்டிப்பார்த்துக் கும்பிட்டதோடு சரி) அப்படியே பந்தடி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் (இது சாத்தியிருந்தது) வழியாக  மஹல் வழியா வந்து  கீழமாரட் வீதி மூலையில்  ஃபேமஸ் ஜிகர்தண்டா.ரெண்டே ரெண்டு இடத்தில் இவுங்க கடை இருக்காம். கிளை ஒன்னுதானாம்.  ஏகப்பட்ட கடைகள் இந்தப்பெயரில் முளைச்சுருக்கும். நம்பாதீங்கன்னு எச்சரிக்கை  சொல்லும் போர்டு. நல்ல கூட்டம். நாங்களும் ஜோதியில் கலந்தோம். ருசி எப்படி இருக்குமோன்ற  எதிர்பார்ப்பு!  பொதுவாகப் பயணங்களில் சாப்பிடக் கொஞ்சம் யோசிப்பேன்.  சுடச்சுட இருக்கும் வெறுஞ்சோறைத் தவிர்த்து  மற்றவைகள் (வடை நீங்கலாக!என் கண்ணாலும் கேமெராக்கண்ணாலும் தின்னால் போதும்.

பயணத்தில் வயிற்றுக்கேடு வந்தால் இந்தியா போன்ற நாட்டில்  அவ்ளோதான்:(  சூஷிச்சால் துக்கமில்லை,கேட்டோ!

இந்தமுறை, இன்னும் ஒரு மாசத்தில் இந்திய நாட்டைவிட்டு மீண்டும் நியூஸி திரும்பப்போறோம். மதுரைக்கு  வருவது அநேகமா இன்னும் ரெண்டு வருசம் ஆகலாம். ஆவது ஆகட்டும் என்ற அசட்டு தைரியம் வந்துருச்சு. கைப்பையில் டயா ஸ்டாப்   மாத்திரை  ஒரு டஸன் இருக்கு!

பகல் சாப்பாட்டுக்கு முருகன் இட்லிக்கடை. எனெக்கென்னவோ சுமாராத்தான் இருக்குன்னு தோணல். அங்கே தெருப்பார்த்த ஒரு கவுண்ட்டரில் ஜிகர்தண்டா செஞ்சு விக்கறாங்க. இங்கேயும் ஒரு க்ளாஸ் அடிச்சேன்:-)  அந்த ஃபேமஸ் கடையின் சுவைபோல இங்கில்லைதான்:(

மாலை ஒரு நாலுமணிக்குக் கிளம்பி கூடலழகர் கோவிலுக்குப்போனோம். நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுக்கு நாப்பத்தி ஏழாவது இடம்.  பல்லாண்டு பல்லாண்டு பாசுரம் இங்கே இயற்றிப் பாடியவர் பெரியாழ்வார் . திருமங்கை ஆழ்வார் திருமழிசை ஆழ்வார்கள் வந்து பாடிய ஸ்தலம்.
மூலவர் கூடலழகர். தாயாரின்பெயர் மதுரவல்லி. கோவில் யானைக்கும் மதுரவல்லி என்ற பெயர்தான். குழந்தைக்குக் சக்கரை வந்துருச்சு. கால்நகம் ஒருமாதிரி பச்சை பிடிச்சு இருந்தது:( அதனால் கடுமையான  டயட், தேவையான உடற்பயிற்சின்னு பாகர் பார்த்துப் பார்த்துச்  செய்யறார்.

தாயாருக்கு தனிச்சந்திதி. ரொம்பவே பெருசு. இதை  மதுரவல்லி  தினம் மாலை வேளைகளில் பலமுறை சுற்றி வர்றாள். 'தங் தங்'ன்னு சுற்றிவருவதைப் பார்த்தோம். சக்கரை குறைஞ்சுருக்கான்னு விசாரிச்சார் கோபால். பாகர், தன் கையில் இருந்த  செல்லில் வெளிச்சம்  போட்டு, காலைக் காமிடா என்றதும் பாதம் தூக்கிக்  காமிச்சது குழந்தை. இப்போ நல்ல குணம் இருக்காம்.  நல்லா இருக்கட்டும்!

கோவில் திறக்கும் நேரம்  காலை 6 முதல் பகல் 12. மாலை 4 முதல் 9 வரை.
பெருமாள் சாப்பிடும் நேரத்துக்குச்  சரியாப்போய்ச் சேர்ந்துருந்தோம். ததியன்னம், வெள்ளைக்கடலை  சுண்டல் .நமக்கும் கிடைச்சது.  இருந்த கோலத்தில் அஷ்டாங்க விமானத்தின் கீழிருந்து சேவை சாதிக்கிறார் கூடலழகர்.

ப்ரம்மாவின் புத்திரர் சனத் குமாரருக்குக் காட்சி கொடுத்தார்  பெருமாள் தன் தேவியருடன். பரவசமடைந்த  சனத் குமாரர், தேவலோக சிற்பியான  விஸ்வகர்மாவிடம்  பெருமாளின் இக்கோலத்தை சிலையாக செதுக்கித்தரச் சொல்லி, அந்த சிலையையே இங்கே தானே தன் கைகளால் அஷ்டாங்க  விமானம்  கட்டி அதன் கீழ் பிரதிஷ்டை செய்தாராம்.

மூலவருக்கு  உண்மையான வயசுன்னா  இப்போ நாலாவது யுகத்தில் இருக்கார்னு சொல்லணும். கிருத யுகத்தில் பிரதிஷ்டையானவர். த்ரேதா, த்வாபர , முடிஞ்சு இப்போ கலியுகம் நடக்குதே!
திவ்ய தேசக்கோவில்களில் ரெண்டே ரெண்டு கோவில்களில்தான்  அஷ்டாங்க விமானம். இங்கேயும், நேத்துப் பார்த்த திருக்கோஷ்டியூரிலும்தான்.மேலே போய் விமானங்களை தரிசிக்க முடியும் இங்கே. தனிக்கட்டணமா  ஒரு சின்னத்தொகை. அஞ்சு ரூபாய்ன்னு நினைவு. நல்ல  அகலமான படிகள் .சிரமம் இல்லாமல்  ஏறிப்போக முடியும்.

மாடியில்  போய் நிற்கும்போது கண்முன்னே அழகான விமானம். ரெண்டு பக்கமும் படிகள்.நுழைவு வாசலில் சூரிய நாராயணர் சந்நிதின்னு  எழுதி இருக்கு . படிகளில் ஏறிப்போனால்  சூரியநாராயணர் நின்ற கோலத்தில் தேவிகளுடன் சேவை சாதிக்கிறார்.  அடுத்த மாடிக்குப்போனால்  கிடந்த கோலம்.

இருந்தார், நின்றார், கிடந்தார் என்று மூணு கோலங்களிலும்  காட்சி கொடுத்த கருணையை நினைக்கும்போதே மனம் நெகிழ்ந்துதான் போறது.

கிடப்பே ரெண்டு விதம்!

மேல்தளம்முழுசும் செங்கல் பாவி அருமையான தரை. கஷ்டமே இல்லாமல் நடந்து கோபுரத்துக்குப் பக்கம் போய் பார்க்க முடியுது.  கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சொல்லும் கதைகளே ஏராளம். எந்த சிற்பம் என்னன்னு  பார்த்து அதன் கதையை நினைவுக்குக்  கொண்டுவந்து கோபாலுக்குச் சொல்வது  ஒரு கூடுதல் மகிழ்ச்சி.  அடடா.... மான் உடம்பில் ரிஷியா?  ஓ இது லக்ஷ்மணான்னு  ராமன் குரலில் கூப்பிட்ட  மாரீச்சன் இல்லையோ!ராவணன், மூக்கறுபட்ட சூர்ப்பனகா, கோவர்தனகிரியை தலைக்குமேல் தூக்கிப்பிடிக்கும் க்ருஷ்ணன், நரசிம்ஹர், ஆஞ்சநேயர், வசுதேவர்,  யசோதையின் மடியில் கண்ணன், வாமனர் ,ராமர் இப்படி ஏராளம்.  எல்லாம் இந்த ஒரு பக்கத்தில் இருப்பவை.  தெருப்பார்த்த சைடில் இன்னும் என்னென்ன  இருக்கோ?


இவர் யாரோ?  அகலிகையா?

ஆலயமணி!

ஏற்கெனவே  கூடலழகரை தரிசனம் செஞ்சது  இங்கே!


பிரகாரத்தை வலம் வந்து முடிக்கும்போது மதுரவல்லி  இங்கே கோவிலில் நவகிரக சந்நிதிக்குப் பக்கம் அவளுக்குண்டான இடத்தில்  வந்து நின்னுக்கிட்டு இருந்தாள்.

பெருமாள் கோவிலில் நவகிரகமா?  எஸ்ஸூ!  இதுவும் ஒரு அதிசயமுன்னும் சொல்லலாம்.

அறைக்குத் திரும்பி உடை மாத்திக்கிட்டு  மீண்டும்  வெளியே சுத்தக் கிளம்பினோம்:-))))

தொடரும்..........:-)

PINகுறிப்பு:  இந்தப்பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் போனமுறை (2011) வந்தபோது  எடுத்தவைகளே.  அப்போ துளசிதளத்தில்  'ராஜஸ்தான் பயணத்தொடர் ' ஓடிக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் எழுதலாமுன்னு நினைச்சு .....    நியூஸி திரும்பியதும், நிலநடுக்கம் அழிவு கண்டு  கலங்கிப்போய்  அதை எழுத ஆரம்பிச்சேன்.  

கைவசம் இருக்கும்  படங்களை இப்போ  மதுரை நினைவுகளில் கலந்தாச்சு.  அதானே.... பாழாக்கலாமோ?அழகர் கோவில்,  திரும்பி வரும் வழியில்  ஸ்ரீ நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் பிருந்தாவனக்கோவில், ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடாஜலபதி  கோவில்  பந்தடி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் படங்களை ஒரு படப்பதிவாக மட்டும் ரெண்டொருநாளில் போடவா?27 comments:

said...

துல்லியமான படங்கள்... நுண்ணிப்பாக பார்க்க முடியாதவை... ஒதுக்காமல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா...

அதே கடையில் தான் நாம் பதிவர் விழாவில் ருசித்தது...

said...

Please post the other temple pictures also akkaa

said...

முருகன் இட்லிக்கடை எப்போவுமே சுமார் தான். எந்தத் தெரு? மேலமாசிவீதி? தளவாய் அக்ரஹாரம்? கூடலழகர் கோயில்னு சொல்றதாலே மேலமாசி வீதியாத் தான் இருக்கும். ஜிகிர்தண்டாவும் நல்லா இருக்காது. எக்கச்சக்க விலை மட்டும்! :(

said...

சின்ன வயசிலே மேலே ஏறிப் பார்த்தது! அப்புறமாக் கல்யாணம் ஆனப்புறம் ஒரே முறை போனோம்னு நினைக்கிறேன். கூடாரவல்லித் திருநாளுக்குக் கொடுக்கும் சர்க்கரைப் பொங்கல்/அக்கார அடிசில் சுவைக்கு ஈடு இணை இருக்காது. பலநாட்கள் கோஷ்டியில் கலந்து கொண்டு பிரசாதங்கள் வாங்கிக் கொண்டது உண்டு. இங்கேயும் வடக்குக் கிருஷ்ணன் கோயிலிலும் கோஷ்டி அப்போல்லாம் நானோ, என் தம்பியோ இல்லாமல் நடக்காது! :)))))

said...

சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்

said...

ஜிகிர்தண்டா நீங்க குடிச்ச கடைல நானும் முந்தி குடிச்சிருக்கேன்னு நெனைக்கிறேன். பிரபலமான கடைன்னு கூட்டிட்டுப் போனாங்க மதுரை நண்பர்கள்.

இந்தக் கோயில் தல்லாகுளத்தில் இருப்பதுதானே?

பல்லாண்டு பல்லாண்டு இங்கதான்னு தெரிஞ்சு வியப்பு. அவ்வளவு பிரபலமான பாசுரம்.

உங்களுக்குன்னு விமான தரிசன வாய்ப்புகள் கிடைக்குது. ஆண்டவன் அருள்.

யானைக்கும் சர்க்கரையா? காட்டுல சத்துள்ளதா சாப்பிட்டுக்கிட்டு இருந்த யானைக்கு மூனு வேளையும் சோத்துருண்டை போடுறதால வந்த வினையா இருக்கும். அதோட ஒரே எடத்துல பெரும்பாலும் நிக்க வேண்டியிருக்குல்ல. பாவம் மரகதவல்லி.

said...

படம்கள் பிரமாதம்..இப்பொழுதான் முறையாக இந்தக் கோவிலைப் பார்க்கிறேன். ஜிகர்தண்டா சர்க்கரை இருப்பவர்கள் சாப்பிடலாமா.
கோபுரம் ஏறிப் பார்ப்பதற்கும் கொடுப்பினை வேண்டும் துளசிமா. நீண்ட ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ததாஸ்து.

said...

//இந்தக் கோயில் தல்லாகுளத்தில் இருப்பதுதானே//

இல்லை, மேலமாசி வீதி. இம்மையில் நன்மை தருவார் கோயிலுக்கு அருகே உள்ளது. :)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதே கடையா!!! அதான் அமிர்தமா இருந்தது. ஒரே ஒரு குறை. க்ளாஸ் சின்னதுன்னு நினைச்சேன்:-))))))

said...

வாங்க குமரன் தம்பி.

பந்தடின்னு தட்டச்சும்ப்போதே உங்க நினைவுதான்!

சரியா நீங்களும் வந்துருக்கீங்க. நாளைக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுடலாம்.

வெறும் படங்கள் என்பதால் நேரம் கிடைக்கும்:-)

said...

வாங்க கீதா.

மேலமாசி வீதியே தான். சின்ன க்ளாஸ் அப்போ 15 ரூதான்.

கூடலழகரை தரிசிக்க நான் ஒரு ஆறேழுமுறை போயிருக்கேன். ஏதோ இந்த முறைதான் ததியன்னம், சுண்டல் கொடுத்தார், பெரியமனசு பண்ணி:-)

சக்கரைப்பொங்கல் எல்லாம் கண்ணுலேயே காட்டலை!

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

அப்போ நாம் ராயல் கோர்ட் ட்ராவல் டெஸ்க்கில்தான் வண்டி எடுத்திருந்தோம். அந்த ட்ரைவர்தான் இந்தக் கடைக்குக் கொண்டுபோய் விட்டார்.

இந்தக்கோவில் , மேற்கு வடம்போகி தெருவில் இருக்கு. ஹொட்டேல் ஆரத்தி இருக்கு பாருங்க அதுக்குப் பக்கம்.

பஸ் டெப்போவில் இருந்து ரெண்டு தெரு.பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால் .

பாவம்தான் மரகதவல்லி. சின்ன வயசு என்பதால் தாக்குப்பிடிக்குது.

said...

வாங்க வல்லி.

தாராளமா ஒரு சின்ன க்ளாஸ் சாப்பிடலாம். ஒரேதா சாப்பிடாமலே இருந்தால் மனசு கிடந்து அடிச்சுக்கிட்டு ப்ரெஷர் ஏறிடும். தினந்தோறுமா? இல்லையேன்னு அப்பப்ப கொஞ்சமா இனிப்பு சாப்பிட்டுக்குவேன்:-)

திருக்கோஷ்டியூர் போல இல்லைப்பா. நல்ல படிக்கட்டுகள் பிடிச்சு ஏற கைப்பிடிச்சுவர்கள் எல்லாம் இருக்கு. நிதானமா ஏறிப்போய் பார்க்கலாம். உண்மையைச் சொன்னால் ஸ்ரீரங்கம் கோபுரத்துக்கு ஏறும் படிகளை விட நல்லது இங்கே!

said...

கீதா,

இது வடம்போகி தெரு இல்லையா? அடராமா.....

said...

அழகிய படங்கள் சிறப்பான தகவல்கள்.

உங்களோட திருமோஹூர் மற்றும் கூடலழகர் பதிவுகளையும், படங்களையும் பார்க்கும் போது உடனே மதுரைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி பகிர்வுக்கு.
திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோவிலுக்கு போகவில்லையா?

said...

வாங்க ரமாரவி.

இந்த முறை நேரம் இல்லை. போனமுறை போய் வந்தோம். படங்கள் நாளைய ஸ்பெஷலில்:-)

said...

மதுரைக்கு ஆறேழு முறைகள் போயிருக்கிறோம். கூடலழகர் கோவில் பற்றி யாரும் சொன்னதில்லை. தெரியாமல் போய் விட்டது. படங்கள் அட்டகாசம்..!

said...

பெருமாளை நாங்களும் தரிசித்த ஆனந்தம் ...

அம்மா உங்கள் தளத்தை எவ்வாறு தொடர்வது...பலமுறை முயற்சித்தும்
முடியவில்லை ..

said...

படங்களும், கதையும், ஜிகிர்தண்டாவும் என ஜோர் டீச்சர். மீனாட்சி அம்மன் கோவில் தவிர எங்கும் சென்றதில்லை.சிறுவயதில் மதுரைக்கு போனது தான். மாமா அங்க இருக்கார். அவர் மகளுக்கு மே மாதத்தில் கல்யாணம். அப்போ தான் மற்ற கோவில்களுக்கெல்லாமும் போயிட்டு வரலாம் என்று எண்ணம்.

திருச்சியில் தான் ஜிகிர்தண்டாவை சமீபத்தில் இரண்டு முறையாக ருசித்தேன். முதல் தடவை வசந்த பவனிலும், இரண்டாவது மதுரை ஃபேமஸ் என்று இங்கயும் ஒரு கடையில் தான் ருசித்தோம்....:) பாதாம் பிசின், பால் என்று சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது.வயிற்றுப்புண்ணை ஆற்றக்கூடியது என்று எழுதி தான் விளம்பரமே இங்கு...:)

said...

ஜிகிர்தண்டா.... இட்லி

என சுவையான பகிர்வு.

படங்கள் மூலம் நாங்களும் இங்கே வலம் வந்தோம்.....

said...

மேடம் அற்புதம் மிக்க நன்றிகள்,சிறுவயதில் ஓடியாடிய இடங்களை மீண்டும் பார்த்தேன்.

said...

வாங்க கார்த்திகேயன்.

சிறுவயது நினைவுகள் மனதில் கல்வெட்டுதான்!

நினைக்கும்போதெல்லாம் அனுபவிக்கலாம், மீண்டும் மீண்டும்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

முந்தி கூகுள் ரீடரில் போட்டு வைப்போம். அது போயிருச்சு:(

இப்ப http://feedly.com/ என்று வந்துருக்காம். அதுலே போட்டு வச்சுக்கிட்டால் புதிய பதிவுகளைக் காண்பிக்கிறது.

இதெல்லாம் வேணாமுன்னா..... வாரம் 3 பதிவுகள்தான் துளசிதளத்தில். திங்கள், புதன் வெள்ளி என்று. இடைக்கிடை சிறப்புப்பதிவுகள் எப்பவாவது தேவை இருந்தால் செவ்வாய்களில்.

புக்மார்க் செஞ்சும் வச்சுக்கலாம்.

நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இப்படித்தான் பயணங்கள் போனாலும் பல இடங்கள் ஓட்டத்தில் விட்டுப்போகுது:(

இன்னும் ஏராளமான இடங்கள் மதுரையில் இருக்கு. அடுத்தமுறை சில நாட்கள் தங்கி இருந்து பார்க்கணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்தக் கோவில் 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்று.

உங்க கேமெராவுக்கு சரியான தீனி.

மாடி ஏறிப்பார்க்கலாம்.