Friday, February 20, 2015

மனக்கோட்டை கட்ட விதிகள் ஏதும் உண்டா?

ஊஹூம்.... விதிகளும் இல்லை. இதற்கு எல்லைகளும் இல்லை. ஈரேழு பதினான்கு உலகங்களும் சுற்றிவந்து, ஒரு நாள் பாற்கடல் கூடப்போய் பார்த்துட்டு வந்தேன்!  ஆனால் மணற் கோட்டை கட்டுவதற்கு ஏகப்பட்ட விதிகள் உண்டு! ஒரு பெரிய  அட்டையில்  விதிகளை அச்சடிச்சு மாட்டி விட்டுருந்தாங்க.


எங்கே?   எல்லாம் எங்க ஊரில்தான்.  சம்மர் முடியுமுன் எல்லாத்தையும்  கொண்டாடி முடிக்கும்  ஆவேசம்.  இன்னும் மூணே வாரம்தான் இருந்தது  அப்போ. போட்டிகள் நடந்தே இப்ப ரெண்டு வாரமாச்சு. எனக்குத்தான் எழுதக் கைவரலை:(

காலை  பத்துமணிக்கு ஆரம்பம்.  நம்ம பெயரைப் பதிவு செஞ்சுக்கிட்டால் போதும்.  வலைமூலமாகவும் பதிவு செஞ்சுக்கலாம். விவரம் ஏற்கெனவே சம்மர் டைம்ஸ் ஈவண்ட் புத்தகத்தில் கொடுத்திருந்தாங்க.  போட்டியில் கலந்துக்கறவங்க  காலை எட்டரைக்கு   கடற்கரையில்  போட்டு வச்சுருக்கும் அலுவலகக் கூடாரத்துக்குப்போயிறனும். அங்கே குறிப்பிட்ட நேரத்துக்குப் போனால்..... விதிமுறைகளைச் சொல்லி  கடற்கரையில்  ஆறுக்கு,  மூணு  மீட்டர் இடம் (6X3) ஒன்னு தருவாங்க.  வரிசையா (விக்கறதுக்கு ) ப்ளாட் போட்டு நம்மூரில் வச்சுருக்காங்க பாருங்க அதைப்போல் வரிசையா ரிப்பன் கட்டி இடம் விட்டுருந்தாங்க. நடுவிலே நடைபாதையா ஒரு  மூணு மீட்டர் அகலம் விட்டுருக்கு.  ஜட்ஜுங்க நடந்து போய்ப் பார்த்து மதிப்பீடு செஞ்சு மார்க் போடணும் இல்லையா?

கோட்டைகளை பகல் ரெண்டு மணிக்கு முடிச்சுடணும். அதன்பிறகு  நீதிபதிகள்  வந்து பார்ப்பாங்க.  அரைமணி நேரம் இதுக்கு.அப்புறம் பரிசளிப்பு  மூணுமுதல் மூணரை.  நாலுமணிக்கு ஆட்டம் க்ளோஸ்!

பரிசுன்னா....  கூடாரம், நாற்காலிகள் , ஸ்லீப்பிங் பேக் இப்படி அவுட் டோர் சமாச்சாரங்கள்தான். கேம்பிங் போகப் பயனாக இருக்கும்.

எங்க கிவியாட்கள்  என்னதான் நல்லவீடு இருந்தாலும்  கோடைக் காலத்தில் முக்கியமா பள்ளி விடுமுறையில்  (கிறிஸ்மஸ், புதுவருசம் முடிஞ்சாட்டு) புள்ளைகுட்டிகளுடன்  வீட்டைவீட்டு எங்காவது காடுகள்,கடற்கரை,ஏரிகள் இப்படி  கேம்பிங் போயிருவாங்க.  புள்ளைகுட்டிகளின் பிடுங்கல் இல்லாமல் காட்டுலே போய் அக்கடான்னு  கிடக்கணும். நகரத்தில் இருந்தால்தானே தினம் அங்கே இங்கேன்னு கூட்டிப்போகணும்.  சமையல், வீட்டுவேலைன்னு ஓய்வே இருக்காதில்லையா?

குடும்பத்தோடு போனால் இந்த வேலைகள் அங்கேயும் இருக்குமேன்னு நினைக்கப்டாது. பிள்ளைகள் அதுகள் பாட்டுக்கு கிடைச்சதை வச்சு விளையாடிக்கிட்டு இருக்கும்.  ரங்க்ஸ் சமைச்சுருவாரு.  சுட்டுத்தின்னால் ஆச்சு இல்லையோ?  இட்லிக்கு அரைக்கணுமா என்ன?

இப்படி நாலுநாள் போயிட்டு வந்தால்தான் நம்ம வீட்டோட அருமை தெரியும் இல்லே?

இந்த மணற்கோட்டைப் போட்டி இப்ப நாலாவது வருசமா நடக்குது. 2012 லே ஆரம்பிச்சது.  எப்படியோ போன வருசம் நாம்போகலை:(   எப்படி விட்டு வச்சேன் தெரியலையே:(   அநேகமாக கோபால் ஊரில் இருந்துருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.

கோட்டை கட்டி முடிச்சபிறகு போய்ப் பார்க்கலாமுன்னு மதியானச் சாப்பாட்டுக்குப்பின் ஆற அமரக் கிளம்பிப்போனோம்.  பட்டத் திருவிழா நடந்த அதே ந்யூப்ரைட்டன் பீச்  இது.  இன்னொரு பீச்சான சம்னரில் ஆர்ப்பாட்டம் ஏதும் இருக்காது.  அடக்கமான  குடும்பப்பொண் அது. ஆரவாரமில்லாமல் இயற்கை அழகோடு இருக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்சமான பீச்சும் சம்னர்தான்.

வரவர எங்கூர் சனத்துக்கு  'எப்படா கூப்பிடுவாங்க. உடனே போய்ப் பார்க்கலாமே'ன்ற எண்ணம் உடம்பில் ஊறிப்போச்சு.  2011 வருச நிலநடுக்கம்.... மக்கள் மனசை இப்படி மாத்தி வச்சுருக்கு பாருங்க. நிலையாமை!  இன்றைக்குச் செத்தால் இன்றைக்கே பால்!  என்ன வாழ்க்கைடா.... இருக்கும் வரை அனுபவிச்சுட்டுப் போகலாமே!  நாம் மட்டும்  விதிவிலக்கா என்ன? எனக்கு  இதுலே இன்னொரு சுயநலமான பொதுநலமிருக்கே!பதிவுக்கு மேட்டர் தேத்துதல்:-)

பார்க்கிங் கிடைக்காமல் நாலு சுத்து சுத்தினபிறகு  ரெண்டாவது தெருவில் ஒரு இடம் கிடைச்சது. நடந்து போக சோம்பல் பட்டால் வேலைக்கு ஆகாது.  பொடிநடையில் ஒரு பத்து மினிட்.








மணற்கோட்டை என்ற சமாச்சாரத்தின் பொருள் சரியா விளங்கிக்காத  மக்கள். முக்கால்வாசி மணல் சிற்பங்களாக இருந்தன. ஒவ்வொன்னா பார்த்துக்கிட்டே போறோம்.

அப்புறம் தான் தெரிஞ்சது மூணுவகையான முறைகளில்  செஞ்சுக்க விட்டுருக்காங்களாம்.
Castles of Your Mind
Creatures of the Sea
Kiwiana (மவொரி ஆர்ட் சம்பந்தமுள்ளது)








ஓட்டுப்பெட்டிக்கு பதிலா உண்டியல் போல ஒன்னு.  என்னடா இது புதுசான்னு பார்த்தால்.....

அங்கங்கே ஓட்டுக்குக் காசு கொடுத்தால் இங்கு ஓட்டே காசுதானாம்!  பிடிச்சிருக்குன்னால் ஒரு தங்கநாணயத்தை உண்டியலில் போடணுமாம். எங்கூரில் ஒருடாலர், ரெண்டு டாலர் காசுகள் தங்கக்கலரில் இருக்கும்:-)

சேரும் காசெல்லாம் உள்ளூர் தர்மகாரியங்களுக்குப் போகுதுன்னு சொல்றாங்க. இதுலே ஏமாத்து கிடையாது, என்பதே உண்மை. சனம்  சொன்ன பேச்சைக் கேக்குது. கோவில் முன்னால் வரிசையில் உக்கார்ந்திருக்கும் பிச்சைக்காரகளுக்கு  ஒரு ரூபாய் காசை வரிசையாப் போட்டுக்கிட்டுப்போற தர்மவான்கள் போல் இங்கும் சிலர்!


 நிலநடுக்கம் நம்பர் 1  நினைவு (மறக்க முடியலையேப்பா:(


பார்வையாளர் கூட்டம் அதிகம்தான்.  நடுவிலே பாதையில் போறோம் ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டே.  சிற்பிகள்  அவுங்க கட்டத்துக்குள்ளே உக்கார்ந்துருக்காங்க.  வெயிலில்  மணல் காய்ஞ்சு போச்சுன்னா.... அடிக்கும் காற்றில் பறந்து போயிருமேன்னு  கையில்  பாட்டில்களில்  ஸ்ப்ரே கேன் பொருத்தி சிற்பங்களை ஈரமாக்கிக்கிட்டே இருக்காங்க சிலர்.

நம்ம அழகு நமக்குத் தெரியாதா? இதாவது பரிசு வாங்குவதாவது..என்ற தீவிர நம்பிக்கை உடையவர்கள்  சிற்பத்தைச் செஞ்சோமா..... விட்டு வச்சுட்டுப்போனோமான்னு  போயே போயிட்டாங்க.




ஆக்டபுஸ், ஆமை, கடற்கன்னி இது மூணும்தான் ஃபேவரிட் போல. செய்வது சுலபமோ என்னவோ?

க்ரிக்கெட் போட்டி:-)  நாட் அவுட்!



ஒரு சில திமிங்கிலங்கள் அங்கங்கே!

சிப்பிகளால் அலங்கரிச்ச  கச்சணிஞ்ச   கடற்கன்னி! (வருங்கால டிஸைனர் உருவாகிறார்!)


 கேம்பிங் செய்யும் குடும்பம் ஒன்னு.


சில குழந்தைகள்  ஆர்வத்துலே ஆரம்பிச்சுட்டு, அப்புறம் ஒன்னும்பண்ணத் தோணாமல் கொண்டுவந்த பிக்னிக் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு  அவுங்க ஏரியாவில்  உக்கார்ந்துருந்தாங்க. (என் கேமராவுக்கு போஸ் கொடுத்துட்டு கை ஆட்டி ஹை சொன்ன  இளம் போட்டியாளர்  )எப்படியும் ரெண்டரை வரை அவுங்க இருந்தாகணும் தானே?   அவுங்களுக்குத் துணையா அப்பாம்மாக்களும்  ......

கோட்டையை வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர்.

அங்கே போக கார் வேணாமா?  இந்தப்பக்கமொரு சிறுவன் வண்டி தயார்பண்ணிக்கிட்டு இருந்தான்:-)

எல்லாத்தையும் பார்த்து க்ளிக்கிட்டு பீச்சின் வாசப்பக்கம்(!) வந்தால்


 மணற்கோட்டை கட்டும் நிபுணர்  வேற  நாட்டில் இருந்து வந்தவர் , (  ப்ரூஸ் ஃபிலிப்ஸ்  ஃப்ரம் அமெரிக்கா)  பாஸ்கெட்பால் கோர்ட்டில்  உண்மையாகவே கோட்டை கட்டிக்கிட்டு இருந்தார்.



இன்னொரு நிபுணரும் ட்ராகன் செஞ்சு வச்சுருக்கார். சீனராக இருக்கணும். ட்ராகனுக்கு  கடைசிக்கட்டவேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.

கடமை முடிச்ச திருப்தியில் வீடு வந்தோம்.

போட்டியில் வென்ற இரண்டுமே ஆக்டபுஸுக்கள்தான்.



சும்மாச் சொல்லக்கூடாது.....  எங்க சிட்டிக் கவுன்ஸில், நகர  மக்கள்  கோடைகாலத்தைக் கொண்டாடட்டுமேன்னு மெனெக்கெடுதுதான்.
 எங்க சம்மர் முடிய இன்னும் ஒன்பது நாட்கள்  மட்டுமே! போனால் வராதே இன்னும் ஒரு வருசத்துக்கு:(

சரி. நான் போய் இட்லிக்கு அரைச்சுட்டு வர்றேன்:-)




27 comments:

said...

விட்டுட்டு போனவைகளும் நல்லாத்தான் இருக்கு அம்மா...!

said...

ஆஹா.. பிரமாதம். மணல்சிற்பங்கள் ஒவ்வொன்றும் அசத்தல். நடுவில் நம்ம ஊர் சிவலிங்கம் போல் ஒன்றுகூட காணக்கிடைக்கிறதே... கோடை முடியப்போவதை நினைத்து எனக்கு இப்போதே கலவரமாத்தான் இருக்கு.

said...

கந்தசாமி ஐயா பதிவைப்பார்த்தீர்களா.கொஞ்சம் பெரிய font உபயோகித்திருக்கலாம்.மேலும் margin ஆகியவைக் கடைப்பிடுதிருக்கலாம்.

--
Jayakumar

said...

நியூசி பீச்சுக்கு நேர்ல வந்த மாதிரி இருந்தது மேடம். சிற்பங்களும் நேர்முக வர்ணனையும் பிரமாதம்!

said...


எனக்கு எப்பவுமே தோன்றும் சந்தேகம்தான் பெரிய மணல் சிற்பங்கள் செய்யும் போது அவை அப்படியே எப்படி நிற்கும்? மணலை ஒட்டுவதற்கு ஏதாவது பிசின் இருக்கிறதோ? சிற்பங்கள் செய்யும் போது அருகிருந்து பார்க்கவேண்டும்

said...

சிறப்பான படங்கள் .
கடைசியில் உள்ள ப்ரூஸ் ஃபிலிப்ஸ் அவர்களின் கோட்டை அற்புதமாக இருக்கு. அந்த சின்ன படிக்கட்டுகள் ரொம்ப அழகு.

said...


வணக்கம் மேடம்
மணல் கோட்டை அருமை

said...

அற்புதமான படைப்புகள். கடைசிக் கோட்டை வெகு சூப்பர். பொறுமையா நல்ல முயற்சி எடுத்துச் செய்திருக்கிறார்கள். இப்படித்தான் கொண்டாட வேண்டும். நானும் லிங்கம் பார்த்தேன். அவங்க என்ன நினைச்சு செய்தாங்களோ. கடலும் பதிவும் ஹைய்யோ

said...

இவ்வளவு உயரமாய் மணற்கோட்டை எப்படி கட்ட முடியும் ,உள்ளீடாக வேற எதையாவது பயன்படுத்தி உருவானவைகளா ?

said...

ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. அருமையான கலை. நல்ல முயற்சி. அழகான வெளிப்பாடு.

said...

நிலையாமை புரிஞ்சிருச்சுன்னா மனசுல ஒரு அமைதி வந்துரும். வாழ்க்கையை உண்மையாகவே அனுபவிக்கத் தொடங்கும். அதான் கிரைஸ்ட்சர்ச்சுல நடந்திருக்குன்னு நெனைக்கிறேன்.

மண்ல விளையாடுறதுன்னா பொட்டலத்தத் தலைகீழா வெச்ச மாதிரி மண்ணக் குவிச்சிட்டு, வாசல்னு கொஞ்சம் மண்ண ஒரு பக்கம் எடுக்குறதுதான்.

இங்க என்னடான்னா பிஎச்டியே வாங்கிருக்காங்க போல. அட்டகாசம்.

said...

எல்லாமே அசத்தல்..

said...

மணல் கோட்டைகள் - சிற்பங்கள் என அனைத்துமே அழகு.....

அனைத்தையும் ரசித்தேன் டீச்சர்.

said...

அற்புதமான புடைப்புகள். படங்களில் அனைத்தும் அற்புதம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க கீத மஞ்சரி.

இன்னும் நாலே நாளென்று நினைக்கும்போது எனக்கு துக்கம் தொண்டையை அடைக்குது:(

said...

வாங்க jk22384.

நீங்க சொன்னதும் போய்ப் பார்த்தேன்.
பத்து வரி பதிவு என்றால் இன்னும் பெரிய ஃபாண்ட் பயன்படுத்தலாம். மூணு நாலுபக்கம்வரும் பெரிய பதிவுகளில் இது சாத்தியமா?

இந்த பத்தரை வருடங்களில் இப்போதான் முதல்முறையா இப்படி ஒரு குற்றச்சாட்டு!

நாமென்ன கவர்மெண்ட் ஆஃபீஸிலா வேலை செய்யறோம்?இல்லை பத்திரிகையா நடத்தறோம்?

கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எதாவது எழுதலாமேன்ற ஆர்வத்தில் எழுத வர்றோம். இதுலே ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் போட்டு ஆர்வத்தீயை அணைச்சுட்டால் ஆச்சா?

என்னமோ போங்க.

அவர் கருத்தை அவர் சொன்னார். அதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கு.

என்னதான் கூகுள்காரன் இலவசமா கொடுத்தாலும்...... ப்ச் விடுங்க. எதாவது சொல்லி வச்சுருவேன்.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

மீடியாக்காரர் சொன்னதுக்கு அப்பீல் ஏது?

மகிழ்ச்சியே! நன்றி.

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

ஒரு பிசினும் இல்லைங்க.மண்ணில் ஈரம் இருக்கும்படி பார்த்துக்கணும். உலரவிடக்கூடாது.

மண்ணும் மிருதுவான பொடிவகை. மணலாக இருக்காது என்பதால் அப்படியே நிக்குது உலரும் வரை. அதான் சின்ன ஸ்ப்ரேயரால் ஈரம் பண்ணிக்கிட்டே இருக்காங்க.

said...

வாங்க ரமா ரவி.

ஆமாம்ங்க படிகள் அழகோ அழகுதான்.
ரசிப்புக்குநன்றீஸ்.

said...

வாங்க கில்லர்ஜி.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

அங்கெ உங்க கோடையிலும் இப்படிக் கொண்ட்டாட்டங்கள் இருக்கும். விட்டுடாதீங்க.

said...

வாங்க பகவான் ஜி.

உள்ளீடு ஒன்னும் வைக்கலைங்க.

வெறும் மண்தான்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

கோட்டைச் சுவர் மாதிரி கட்ட ஒரு சின்ன பக்கெட் கூட பசங்களுக்கான விளையாட்டுச் சாமான்களில் இருக்கு.
மண் தோண்ட ஒரு சின்ன ஷவல், இந்த பக்கெட் இன்னும் சில சமாச்சாரங்கள் எல்லாம் Beach Set for Summer என்று கிடைக்கும்.

ஈஸியா கோட்டை கட்டிப் பழகிருவாங்க சின்ன வயசுலேயே:-)))

said...

வாங்க சாந்தி.

ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ் & ரோஷ்ணியம்மா,

ரெண்டுபேருக்கும் ஒரே பதிலா நன்றிகளைச் சொல்லிக்கறேன்.