ராயல் கோர்ட்லே இருக்கும் க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை! எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம் போகணுமே!
ரெஸ்ட்டாரண்ட் பணியாளரிடம், மதுரை ஸ்பெஷல் என்னன்னதும் திருதிருன்னு முழிச்சவர் வடை என்றார். ஒரு பக்கம் ஹைய்யா நம்ம வடைன்னு மகிழ்ச்சியா இருந்தாலும், வடையா?ன்னதுக்கு, தோசைன்னார். குறைஞ்சபட்சம் இட்லின்னுசொல்லி இருக்கப்டாதோ? மல்லிப்பூ இட்லி! திகைச்சுப்போன பணியாளர் 'நான் இந்த ஊர் இல்லீங்க'ன்னார்:-)))
அப்புறமா ஒருசிலர் சாப்பிட வந்தாங்க.
இந்த வருச இந்தியப்பயணத்தின் மொத்த நோக்கமே சேரநாட்டுதிவ்ய தேசங்களை தரிசிப்பதுதான். இடையில் மதுரை மாநாடு, நமக்குக் கிடைச்ச போனஸ்! முதலில் போட்ட திட்டம் இதனால் கொஞ்சம் மாறிப்போச்சு. அதனால் என்ன ... இன்னொருமுறை போகலாம் என்று தீர்மானிச்சு, மதுரைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.
மதுரையில் இருந்து தேனி வழியா போடிநாயகனூர். (கோபாலின் அவதார ஸ்தலம்!) உறவினர்களைச் சந்திச்சுட்டு, அப்படியே பூட்டிக் கிடக்கும் வீட்டையும் ( மாமனார் & மாமியார் ரெண்டு பேரும் சாமிகிட்டே போய் 3 வருசம் ஆகுது) எட்டிப் பார்த்துட்டு போடிமெட்டு வழியா மூணார். அங்கே ஒரு ரிஸார்ட்டில் இரவு தங்கிட்டு, மறுநாள் கோட்டயம்.
ஆனால் இடைவிடாது பெய்த பெருமழையில் போடிமெட்டு பாதையில் நிலச்சரிவும், கற்கள் விழுந்து பாதைகள் மூடியிருக்குன்னும் சேதி. வேற வழி என்னன்னு பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி , செங்கோட்டை வழியா செங்கண்ணூர் போயிடலாம்.
ஸ்ரீவில்லின்னதும் உள்மனசுக்குள்ளே மகிழ்ச்சிதான். நம்ம ஆண்டாள் இருக்காளே! போனமுறை கொஞ்சம் இருட்டும்நேரம் போனதால் சரியாப் பார்க்கலை என்ற மனக்குறை வேற பாக்கி. இப்பப் பகல் பொழுது என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.
ஆனால்....நம்மவர், 'அதிகநேரம் கோவிலில் இருக்கமுடியாது. சாமி தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினால்தான் அதிகமா இருட்டுமுன் கேரளா போய்ச் சேரலாம். இதுக்கும் மலைப்பாதை வழியாத்தான் போகணும்' என்றார்.
என்ன ரூட்ன்னு வலையில் பார்த்தால் தென்காசி வழி! ஆஹா.... குற்றாலம். பார்த்துட்டுப் போகலாம்தானே? தேவதைகள் சதாஸ்து சொன்னார்கள்!
திருப்பரங்குன்றம், திருமங்கலம், க்ரிஷ்ணன் கோவில் வழியா ஸ்ரீவில்லிக்குள் நுழையும்போது மணி பத்து. மதுரையிலிருந்து கிளம்பி சுமார் ஒன்னரை மணிநேரம் ஆகி இருக்கு. எண்பது கிமீதான். கோபுரவாசலில் கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.
நீண்டு போகும் பாதையில் யாருமே இல்லை. என்ன இப்படின்னு நடந்து போனால், கொஞ்ச தூரத்தில் காவல்துறைக்காரர், இதன்வழியா அனுமதி இல்லைன்னார். ஆமாம்.... இதை கோபுரவாசல் அருகிலேயே உக்கார்ந்து சொல்லக்கூடாதா? நோ எண்ட்ரி போர்டாவது வச்சுருக்கலாமுல்லெ? இல்லைன்னா ஒரு கம்பித்தடுப்பு.... அதான் நேராப்போகும் சாலைகளில் ஏகப்பட்டது வச்சு வேகத் தடுப்பா ஆகி இருக்கே!
சரின்னு வலது பக்கமாச் சுத்திக்கிட்டுப்போறோம். எதிரில் பூக்காரம்மா. ஒரு முழம் தலைக்கு வாங்கிக்கிட்டேன். இன்னும் அஞ்சே முழம்தான் இருக்குன்னு.... இழுத்தாங்க. சரி சூடிக்கொடுத்தவளுக்கே ஆகட்டுமே!
இன்னிக்குச் சீக்கிரமா வீட்டுக்குப்போய் வீட்டுவேலையை முடிக்கப்போறேன்னு சந்தோஷமாச் சொன்னாங்க. பெயரென்னங்கன்னதுக்கு 'கோதை'ன் னு பதில் !
கோவிலுக்குள் போய் ஆண்டாளம்மாவை தரிசித்தோம். பூவை வாங்கி அவளுக்கு மாலையாகச் சார்த்தினார் பட்டர். (காலடியில் வீசி எறிய இன்னும் படிக்கலை போல. அவரை சென்னை, வெங்கட்நாராயணன் சாலை திருப்பதி தேவஸ்த்தானக்கோவில் பட்டர்களிடம் ட்ரெய்னிங் அனுப்பணும்!)
கண்ணாடிக்கிணறை எட்டிப்பார்த்துட்டு ஏற்கெனவே வந்து போய் எழுதியும் ஆச்சு என்பதால் பக்கத்துலே இருக்கும் நந்தவனத்துக்குப் போனோம்.
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் இங்கே:-)
ஆண்டாள் அவதாரம் செஞ்ச இடம். திருப்பூர நந்தவனம். போனமுறை உள்ளே போகலையேன்னு பார்த்தால் சந்நிதி காலி. பட்டர் தேவுடு காத்துக்கிட்டு இருந்தார். உள்ளே போய் ஸேவிச்சுக்கிட்டு அப்படியே வடபத்ர சாயி தரிசனத்துக்குப் போனோம்.
இடது பக்கம் சக்கரத்தாழ்வாருக்கு அழகான மண்டபமும் சந்நிதியும். சக்கரத்தாழ்வாருக்கு ஒரு கும்பிடு நேர் எதிர்ப்புறம் வானுயரக் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ராஜகோபுரம்.
படிகள் ஏறி மேலே போனால்....மூலவருக்கு முன் பெரிய திரை! தைலக்காப்பு !
இதென்னடா, இப்போ ஐப்பசிதானே? இல்லையோன்னுன்னு விசாரிச்சால்..... இங்கே ஐப்பசிக்கு(ம்) இப்படியாம். வலதுபக்கத்துலே உற்சவர்களை வச்சு அங்கேதான் தினப்படி பூஜை நடக்கறது.சடாரி, தீர்த்தம் கிடைச்சது.
பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி? என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............ ன்னு சொல்லணுமோ!
நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களில்(108) நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு நாப்பத்தி எட்டாவது இடம்(48)
இந்த முறையும் கோவில் குளத்தையும், தேர் நிற்குமிடத்தையும் பார்க்கவே இல்லையேன்னு இப்ப இந்தப் பதிவு எழுதும்போதுதான் நினைவுக்கு வருது:(
நாப்பதே நிமிசத்தில் தரிசனம் முடிச்சு ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பி, மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோபுரம் பார்த்து வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு. ஏனோ நம்ம வடுவூர் குமார் நினைவுக்கு வந்தார்:-)
வழியில் ஒரு குன்று, ப்ரேக் இன்ஸ்பெக்ட்டர்களின் ஊர்வலம், இன்னொரு குன்றின்மேல் கோவில்(என்ன கோவிலோ?) அப்புறம் சேத்தூர் வெயிலுக்குகந்த விநாயகர் திருக்கோவில் சிலபல சமாதிகள் இப்படி எல்லாம் கடந்து போறோம்.
விவசாயம் நல்ல முறையில் நடக்குதுன்னு கண்ணுக்கு எதிரில் தெரியும் காட்சிகள் சொல்கின்றன.
கடைய நல்லூர் கடந்து தென்காசி நோக்கிப்போகும்போதே சாரலின் குளிர்மை மனசுக்குள் வந்துருச்சு. இடது பக்கம் திரும்பி தென்காசி ஊருக்குள்ளே போகாமல் நேராகக் குற்றாலம்தான் அடுத்த நிறுத்தம்.
எல்லாரும் குளிக்க ரெடியாகுங்க.
தொடரும்.....:-)
22 comments:
பக்கத்து ராஜபாளையத்தில் தான் படித்தேன் அம்மா... பல வருடங்கள் கழித்து ஆண்டாள் கோவிலின் உள்ளே - படங்கள் மூலம்...
இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இனிய நினைவுகள் என்றால் மனசுக்கு(ம்) நல்லதே!
குற்றாலத்தில குளியலா? நீங்க அசலூரு இல்லியா, குளிங்க. நாங்கெல்லாம் தூரத்தில நின்னு பாத்துட்டு வந்துடுவோம்.
\\ பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி? என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............ ன்னு சொல்லணுமோ!// appathana teacher neenga thirumpi thiumpi avarai parkka koviliukku varuveenga.
கொடுத்த பூவை காலில் விட்டெறிவது சென்னைப் பழக்கம் டீச்சர். கூட்டம் அள்ளுதுன்னு பட்டர்கள் இப்படிப் பண்றாங்க. ஏன்னு கேட்டா திருவடியில் வைக்கிறது புண்ணியம்னு சொல்லிருவாங்க.
அந்த வெத்தலக்கிளி ரொம்ப அழகு. அதுல வாய்க்கு வெச்சிருக்குறது மாதுளை மொட்டுன்னு நெனைக்கிறேன்.
நாயக்கர் மகள்னு ஒரு படம் வந்தது. கதைப்படி திருவரங்கத்துல எடுத்திருக்கனும். ஆனா அனுமதி கிடைக்காததால திருவில்லிபுத்தூர் கோயில்ல எடுத்தாங்க. கோயில் கோபுரங்கள்ளாம் காட்டுவாங்க. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம். பொழுது போகாட்டி ஒருவாட்டி பாக்கலாம். சுஜாதா நடிப்பு நல்லாருக்கும்.
போடிநாயக்கனூர்தான் கோபால்சார் ஊரா? அங்க எங்க சொந்தக்காரங்களோட சொந்தக்காரங்களோட சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எப்பயோ கேள்விப்பட்டிருக்கேன். யாருன்னு கூட மறந்து போச்சு.
அடுத்து தெங்காசி குற்றாலமா... அட்டகாசம்.
மிக அழகான படங்கள். அந்த ராஜகோபுரம் அருமை.
(நம் தமிழக அரசு emblem ல் இருக்கும் கோபுரம் அதுதான்.)
அடுத்தது குற்றாலம?? உங்களுடன் நாங்களும் வருகிறோம்.
துளசிதளம்: ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)= திருமதி துளசி கோபால் அவர்களின் எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி அற்புதமான பதிவு. இவர்கள் எங்கள் மூத்த பதிவர். அனேகமாக எல்லா பதிவர்களுக்கும் இவர் தான் முன்னோடி. எனது முதல் பதிவு, ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் பற்றியது, அந்த பதிவை இவருக்கு சமர்ப்பணம் என எழுதியிருந்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க மகிழ்ச்சி அம்மா திருமதி Tulsi Gopal
குற்றாலத்துக்கு மூன்று முறை போய் இருக்கிறேன் முதல் தடவை என் இளைய மகன் நாற்பது நாள் குழந்தை. ஒரு திருமணத்துக்குப்போகும் வழியில் இன்னொரு முறை அருவியில் நீர் குழாய் நீர் போல் வந்து கொண்டிருந்தது, ஸ்ரீ வில்லிப் புத்தூரும் போய் இருக்கிறோம். ஒரே பதிவு இரு முறை பதைவாகி விட்டதா?
எல்லாம் சிறப்பாத்தான் இருக்கு. பால்கோவாவைக் காணோமே?
ஆண்டாள் கோயில் தொடங்கி பல இடங்களுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. புகைப்படங்கள் மிகவும் அருமை.
ஃபோட்டோ எடுக்குறதுல என்னயப் போலவே இருக்கீங்களே துள்சி. லவ் யூ டியர். ஹாஹா
நம்ம கண்ணால பார்த்தத எல்லாம் ப்லாகில் போட்டுடணும். அதே அதே. :)
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
உள்ளூர் மக்கள் நல்லா விவரமாத்தான் இருக்கீங்க:-)
வாங்க பித்தனின் வாக்கு.
நலமா? எங்கே ரொம்ப வருசமா ஆளையே காணோம்?
திரும்பத்திரும்ப வரவழைக்கச் செய்யும் சதியா இது? அட!
வாங்க ஜிரா.
திருவடியில் 'வச்சால்' தேவலையே! விட்டெறிவதுதானே சங்கடமாப்போகுது. அதில் சமீபத்தில் கோவிலில் போர்ட் வச்சுருக்காங்க...'துளசியைக் கொண்டு வர வேண்டாம்'
அடப்பாவிகளா! பெருமாளே வேண்டாமுன்னு அவர்களிடம் வந்து சொன்னானா என்ன?
கிளிக்கு நந்தியாவட்ட இலைகள் தான் மெயின். கூடவே இளம்வெற்றிலையும். தினம் ஒரு புதுக்கிளி என்பதால் முதல் நாள் கிளியை விக்கறாங்களாம். ஏலம் விடுவதும் உண்டாம்.
நாயக்கர் மகளா? கிடைச்சால் பார்க்கிறேன்.
வாங்க ரமா ரவி.
ராஜகோபுர சமாச்சாரம் இந்தப்பதிவில் கொடுத்துள்ள சுட்டியில் இருக்கு.
திங்கக்கிழமை குற்றாலக்குளியல்:-)
வாங்க ரத்னவேல்.
கூடுதல் புகழ்ச்சி கேட்கக் கூச்சமா இருக்கு!
அதுக்குத் தகுதிவேணுமேன்னு புதுக் கவலையும் இப்போ!
வாங்க ஜிஎம்பி ஐயா.
எனக்கு இது குற்றாலம் ரெண்டாம் முறை
முதல்முறை தமிழ்மணத்தில் சேர்க்கமுடியலை. போராடிப் பார்த்துட்டு இரண்டாம் முறை பதிவை மீண்டும் காப்பி & பேஸ்ட் செய்து பதித்தேன். இது தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டால் முதலில் போட்டதை எடுக்கலாமுன்னு நினைக்குமுன் அதுக்கு பின்னூட்டங்கள் வந்துருச்சு.
ரெண்டாவதாக போட்டதையும் தமிழ்மணத்தில் சேர்க்க முடியலையேன்னு இதையாவது எடுத்துடலாமுன்னு போனா இதுக்கும் பின்னூட்டங்கள் வந்துருக்கு.
அதான் என்ன செய்வதென்று குழம்பி ரெண்டையும் அப்படியே விட்டு வைக்க வேண்டியதாப்போச்சு.
ஆண்டாள் ஆசைப் பட்டுட்டா.... ரெண்டு முறை வரணுமுன்னு!
டபுள் ட்ரபிள்:-)
வாங்க நெல்லைத்தமிழன்.
பால்கோவாவை உள்ளூர் மக்களுக்கு விட்டுக் கொடுத்துட்டேன்!
மீண்டும் நியூஸி திரும்பும் பயணத்தில் சிங்கையில் கிடைப்பதை வாங்கி அங்கேயே தின்னுட்டு வரணும். நியூஸிக்குக் கொண்டு வர முடியாது. அரசின் அனுமதி இல்லை.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
பயணத்தில் பல இடங்கள் வருதே!
ரசிப்புக்கு நன்றி.
வாங்க தேனே!
இது நான் பெற்ற இன்பம் வகை இல்லையோ! அதுதான் உலக மக்களுக்கும் பங்கு:-)
இந்தப் பதிவைப் படிக்காம அடுத்த பதிவுக்குப் போயிட்டேன்.
தாயாரும் பெருமாளும் தைலக்காப்பா. எப்படியோ ஸ்ரீவில்லிபுத்தூர் தரிசனம்
கிடைத்தது. திருமுக்குளம் வெகு அழகாக இருக்கும். .தம்பி இப்போதுதான் போய்வந்தார். நிறைய திருப்பணிகள் நடக்கிறதாம்.
அவளுக்கென்ன அந்த ஊர் ராஜாத்தி. பூக்காரக் கோதையும் மகிழ்வோடு இருக்கட்டும்.
வாங்க வல்லி.
இது ஆண்டாள் கொடுத்த போனஸ்! எதிர்பாராதது. நம்ம பயணத்திட்டத்தில் இல்லையாக்கும், கேட்டோ!
குளத்தை இப்பவும் மிஸ் பண்ணிட்டேன்ப்பா:(
ஆண்டாள் ரங்கமன்னார், கருடர் தரிசனம் கிடைச்சதுப்பா. வடபத்ர சாயிதான் தைலக்காப்பு.
Post a Comment