Monday, February 23, 2015

நீலக்குயில்கள் ரெண்டு, மாலைப்பொழுதில் இன்று ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 24)

என்னதான் சொல்லுங்க மதுரை மல்லிக்கு ஈடு இணையே இல்லை. எவ்ளோ நெருக்கமாத் தொடுத்து வச்சிருக்காங்க, பாருங்க. முந்தியெல்லாம் 100, 200ன்னு நூத்துக்கணக்கில் கொடுப்பது மட்டும் இப்போ முழக்கணக்கா ஆகி இருக்கு. அதுக்காக  முக்கா முழத்தை கையைக் குறுக்கி முழுசாக்காட்டும் வித்தையை  இவுங்க  இன்னும் படிக்கலை போல இருக்கே!

மதுரையின் அரசியை தரிசிக்கப்போய்க்கிட்டு இருக்கோம். பார்க்கிங்  கிடைப்பது  கஷ்டமாகிப் போச்சு. இங்கே சுத்தி அங்கே சுத்தின்னு  பாதி மதுரையைப் பார்த்தபின் இது வேலைக்காகாதுன்னு  புரிஞ்சு போச்சு. உண்மையைச் சொன்னால்.... நாம் தங்கி இருக்கும் ராயல் கோர்ட்டில் இருந்து (மேற்கு வெளி வீதி) இடதுபக்கம் கொஞ்சம் தூரம் வந்து டவுன்ஹால் ரோடு திரும்பி நேராப்போனால் கோவிலின் மேற்கு கோபுரவாசல்! சுமார் ஒரு கிமீ.பொடிநடையில்  நடந்தாலும் பத்து, பதினைஞ்சு மினிட்தான்.

எதோ ஒரு தெருவில்   வண்டி நடமாட்டம் அவ்வளவா இல்லை. அங்கே வண்டியை நிறுத்திய சீனிவாசன்,  இப்படியே இறங்கி நடந்து போயிருங்க. நான் இங்கேயே வண்டியுடன் காத்திருக்கேன் என்றார். பொதுவாக நாம் கோவில்களுக்கோ சாப்பிடவோ போகும்போது சீனிவாசனை அம்போன்னு விட்டுட்டுப்போகும் வழக்கம் இல்லை. நம்ம கூடவே வந்து சாமிதரிசனம் செஞ்சுக்குங்கன்னு கூட்டிப்போவதுதான் எப்போதும்.  இதைக்கூட ஒரு முறை நாத்தழுதழுக்கச் சொன்னார், 'உங்ககூட வந்துதான்  நிறைய கோவில் பார்த்துருக்கேன் மேடம். மத்தவங்களோடு போனால் கோவில் வாசலில் காத்திருக்கச் சொல்லிட்டு அவுங்க போய்க் கும்பிட்டு வருவாங்க'


அது எப்படிங்க? நம்மைப் பத்திரமாக் கூட்டிப்போகும்போது நாமும் அவர்களை நம்ம  குடும்ப நபர் போல் பார்த்துக்க வேணாமா?   ஆனா..ஒன்னு,சீனிவாசன் கோவிலுக்குள் வந்து விடுவிடுன்னு நேரா சாமி தரிசனம் செஞ்சுட்டு வண்டிகிட்டே போய்  நின்னுக்குவார்.  சில சமயம் குட்டித்தூக்கம்.  எனக்கு ஒரு கோவிலுக்குள் போனால் பார்க்கணும். எல்லாம் பார்க்கணும். இல்லேன்னா திருப்தியே இருக்காது.

சாப்பாட்டுக்கும்  சில சமயம் கூப்பிட்டவுடன் வருவார். கொஞ்சம்பெரிய இடமுன்னா  சில சமயம் தயங்குவார். அப்போ அவருக்கு வெளியே சாப்பிடக் கொஞ்சம்  காசு  கொடுத்துருவோம்.  உண்மையைச் சொன்னால்... அவருக்குக் காசாக வாங்கிக்கத்தான் விருப்பம்.

"நீங்க சாமி தரிசனம் பண்ணவேணாமா சீனிவாசன்? "

பட்ன்னு பதில் வருது, "நேத்து ராத்ரிபோய் பாத்துட்டு வந்துட்டேன்.   எப்போ? ஹோட்டலில் உங்களை விட்டேன் பாருங்க.  அதுக்குப்பின்  டவுன்ஹால்  ரோடுலே சாப்பாட்டுக்கு  நடந்து போனப்ப , என்னமோ தோணி கோவிலுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். கூட்டமே இல்லை . நல்லாவே சாமி தரிசனமாச்சு."

சரின்னு இறங்கி நடந்தோம். பின்னாலேயே ஓடிவந்த சீனிவாசன், 'இப்ப ரொம்ப கெடுபிடி பண்ணறாங்க.  செல் எல்லாம் வாங்கி  வச்சுக்கறாங்க' என்றார். இதென்னடா  மதுரைக்கு வந்த சோதனை, இப்படி ஒவ்வொருமுறை ஒவ்வொரு சட்டமுன்னு  நம்ம செல்ஃபோன்களையும்,  கேமெராவையும் வண்டியிலேயே வச்சுட்டோம்.


அப்புறம்  திடீர்னு கோபால் , அவரிடம், நாங்க உள்ளே போனால் எவ்ளோ நேரமாகுமுன்னு தெரியாது. நீங்க சாப்டுட்டு ,  ஹொட்டேலுக்குப்போய்  ரெஸ்ட் எடுங்க. நாளைக்குக் காலையில் சீக்கிரமா கிளம்பணும்.  நாங்க ஆட்டோ எடுத்துக்கிட்டு வந்துடறோம்  என்றார். 'இல்லீங்க நீங்க ஃபோன் பண்ணுங்க. நான் வந்துடறேன்னார் சீனிவாசன்.  நான்.... தலையை ஆட்டிவச்சேன்.

எந்தத் தெருவுக்குள் நுழையலாமுன்னு ஒருவிநாடி தயங்குனப்ப...அங்கே வந்துக்கிட்டு இருந்த ரெண்டுபேர் சட்னு ஒரு இருட்டு சந்துக்குள் நுழைஞ்சாங்க. கோவிலுக்குப் போறவழியான்னதுக்கு ஆமாவாம். நாங்களும் பின் தொடர்ந்தோம். விளக்கே இல்லை. ஆனால் தூரத்தில் டன்னலுக்குளிருந்து வருவதுபோல் ஒரு ஒளிப்புள்ளி.  தப்பா வந்து மாட்டிக்கப் போறோமோன்னு ஒரு விநாடி திகைச்சது உண்மை.

சின்னச் சந்துதான்.  மூணு நிமிசம் ஆச்சு கடந்துபோக. அதுக்குள்ளே மனசு என்னம்மா  யோசிக்குது பாருங்க. சின்னச்சின்ன கடைகள் வளையல் ,பொட்டு, சிறு தீனி இப்படி.  வெளிச்சம் வந்ததும் பயம் போயிருச்சு:-)

கோவிலருகில் வந்து சேர்ந்துட்டோம்.கீழஆவணி மூலவீதின்னு நினைக்கிறேன்....  பூக்காரம்மாவிடம் பூ வாங்கி, சாமிக்கும் கொஞ்சம் பங்கு தரலாமேன்னு  தோணுச்சு. அஹம் ப்ரம்மாஸ்மி மனசுக்குள்ளே வந்ததாலும் அதை ஓரங்கட்டினேன்.....

பயங்கர செக்யூரிட்டி போல!  காலணிகளைப் பாதுகாக்குமிடத்தில்  செருப்புகளை விட்டுட்டுத் திரைக்குள் நுழைஞ்சேன்.  கையில் விரல்களைத் தவிர ஒன்றுமில்லை!  அப்ப பூ? அது கோபாலின் வசம்:-)

 கோவிலுக்குள் காலடி எடுத்து வச்சோம். கொஞ்ச தூரத்துலேயே ஆஞ்சி இருந்தார்.  பூ அவர் காலடிக்குப் போச்சு. தானே தானே மாதிரி   பூக்களில் கூட  யார் யாருக்குன்னு பெயர் எழுதி இருக்கலாம்!

வழக்கம்போல்  பிரகாரங்களைச் சுற்றி வரலாமுன்னா,  அம்மன் சந்நிதிக்கு  உள்ளே போக 20 ரூன்னு எழுதி இருந்தது.  இப்பவே  கூட்டம் அதிகமாக இருக்கே, முதலில் அம்மனை தரிசனம் செஞ்சுட்டு  வந்துடலாமேன்னு  இருபது ரூ. வரிசையில் சீட்டு வாங்கிக்கிட்டு அம்மன் சந்நிதிக்குப் போனோம்.
என்னென்னவோ கட்டம் போல் தடுப்புகள் போட்டு, எங்கே இருக்கோமுன்னே முதலில் புரியலை. ஒரு  சின்ன  கம்பிப்பாலம் போல இருப்பதில்  நடக்கறோம்.  ரெண்டு பக்கமும்  கம்பித்தடுப்பு. முன்னாலிருக்கும்  மக்கள்ஸ் எல்லாம் இடது பக்க இடுப்பை   நாப்பத்தியஞ்சு டிகிரி, அறுபது டிகிரின்னு  வளைச்சு   என்னமோ பார்க்கறாங்க. சிலர்  தொன்னூறு டிகிரி வரை. என்னவா இருக்குமுன்னு எட்டிப் பார்த்தால் எனக்கொன்னும் தெரியலை.வரிசை வேகமா நகர்ந்துக்கிட்டே போகுது. நமக்கு வலது பக்கத்தில் இருக்கும் கம்பித்தடுப்பைத் தட்டி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கார் ஒருத்தர். தரிசனம் பண்ணுங்க தரிசனம் பண்ணுங்கன்னு.   சரி நாம் சாமியைப் பார்க்கலாமுன்னு தயாரா கண்களை உள் சந்நிதிக்கு அனுப்பறேன். அதுக்குள் கால் கம்பித்தடுப்பின் முக்கால்வாசி தூரத்தில் இருக்கும் திறப்பினருகில் வந்துருக்கு. இந்தப்பக்கம் வாங்க வாங்கன்னு கூச்சல். அந்தப்பக்கம் போனால்....  மண்டபத்தின் வெளியே நிக்கறோம். அவ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்!

என்னடா இது சாமியைப்  பார்க்கலையே?  அதான் இடுப்பை ஒடிச்சுப் பார்த்திருக்கணுமாம். ஒடிக்காதது என் தப்பு:(

அண்ணனைப் பார்த்து கத்துக்கிட்டாள் போல!  திருப்பதி வாசனை இங்கேயும்:( இருபதை வாங்கிக்கிட்டு ஏமாத்திப்புட்டாளே!  அன்ணனும் தங்கச்சியுமா நல்ல்ல்ல்ல்ல்ல்லா  இருங்க!

அப்புறம் ஐயன் சந்நிதி காலியாக் கிடக்க அங்கே போய் , 'மனைவியின் அட்டகாசத்தையும் அக்கிரமத்தையும் என்னன்னு கேக்கப்டாதா நீர்? ' புலம்பிட்டு மற்ற சந்நிதிகளை ஒரு சுற்று சுற்றி வந்தோம். இது மதுரைன்றது மறந்துபோச்சான்னார் சிவர்!


சாமிகள் எல்லாம் அப்படிக்கு அப்படியேதான் இருக்காங்க. கோவில் ஆசாமிகள் பண்ணும் அட்டகாசம்தான் அதிகம்:(ஒருமுறை மீனாட்சியை தரிசனம் செய்யப்போனப்போ... அம்மனுக்குக்கிட்டே  ஒரு ஏழெட்டடி தூரத்தில் உக்கார்ந்து கும்பிட்டது நினைவுக்கு வந்துச்சு. சுமார் 10 நிமிசம் சாமிக்கு முன்னால். கோபால் கழுத்தில் பூச்சரம் எல்லாம் போட்டாங்க.


மீனாட்சி அம்மன் கோவிலும் நம்ம ஸ்ரீரங்கம் போலதான். முழுசும் பார்த்துட்டேன்னு சொல்லமுடியாத வகை. ஒருமுறை ஆற அமர உள்ளே போய் சுத்திப் பார்க்கணும்.  நல்லதா ஒரு பகல்நேரம் கிடைக்கணும் அதுக்கு.  இதை எழுதும்போது கோபாலிடம் சொன்னதுக்கு, ஒரு நாலைஞ்சுநாள் தங்கி இருந்துட்டு வரலாம் என்றார்.  வேலையில் இருந்து ஓய்வு பெறும் நாளுக்குக் காத்திருக்கணும்.
கோவிலை விட்டு வெளிவந்து கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடக்கும்போது, எனக்கு ஒரு மீனாட்சி வாங்கிக்கணும் என்றேன். 'ஏற்கெனவே ஓவர் வெயிட்' என்றார். நானா? சீச்சீ..... பெட்டிகளின் வெயிட்டைச் சொன்னேன் என்றார்:-)))

கண்ணில் பட்ட ஒரு கடையில்  நுழைஞ்சேன். இங்கேதான் போனமுறை சிவலிங்கம் வாங்கின நினைவு.  மீனாட்சி வேணும் என்றதும், நம்மவர் 'சின்னதா எடுங்க'ன்னார்.

'முகத்தில் களையே இல்லையேம்மா'ன்னார்!

'இத்துனூண்டு  விக்கிரஹம்ன்னால் மூக்கும்  முழியும் எப்படி இருக்கும்? "

கொஞ்சம் பெருசா வாங்கிக்கலாமுன்னால்...'வெயிட் வெயிட்.....'

'ச்சும்மா இருங்க. என் கேபின் பேகில் வச்சுக்கறேன்'னேன்.

இது சரி இல்லை அது சரியில்லைன்னு  பார்த்து ஒரு பனிரெண்டு இஞ்ச்  முடிவு செஞ்சேன்.

நம்ம வீட்டு தாயாரை விட  பெருசா இருக்கக்கூடாதுன்னு அடுத்த கண்டிஷன் போட்டார்.

ஏனாம்?

வீட்டில் தன்னை விட நாத்தனார்  பெரியவளா இருந்தால் மனைவிக்குப் பிடிக்காதாம்.  அப்படியா?

"இப்ப நீயே பாரு, உனக்கு வாங்கிக்கொடுப்பதை விட உசத்தியா என் தங்கைக்கு வாங்கிக்கொடுக்க நீ விடுவயா?"

'நல்லா இருக்கே! அதுவும் நடந்துதானே இருக்கு! மறந்துட்டீங்களா?'ன்னு பழைய கதையை எடுத்துவிட்டேன். யானை மெமரி!!!!

எனக்கு இதுதான் வேணும் என்றதும்  வேறவழி இல்லாமல் சரின்னார்:-)

என்ன விலைன்னு கேட்டதும் எடுத்துக்கிட்டுப்போய் எடை போட்டு மூணு கிலோ. கிலோவுக்கு இவ்ளோன்னு கணக்கு சொன்னார்  கடைக்காரர்.   அடக்கடவுளே !   கடைசியில் சாமிக்குமே எடைக்குக் காசுதானா?

'தரிசனம் தராம  இருந்ததுக்கு உன்னை வாங்கியே இருக்கக்கூடாது. அங்கே உன் பசங்க, வீட்டுக்காரர் எல்லாம் இருக்காங்கன்னுதான்  ஃபேமிலி  ரீ யூனியன் என்று உன்னைக்கொண்டு போறேன்'னு அவளிடம்  சொன்னேன்.


அதே போல வீட்டுக்கு வந்ததும்  துணி மணி நகை நட்டுப்போட்டுக் குடும்பத்தை ஒன்னாச் சேர்த்தும் வச்சேன். அதுக்கான புண்ணியம் உண்டா நம்ம கணக்கில்னு தெரியலை:-)

நம்ம வீட்டு மஹாலக்ஷ்மியை விட  ஒன்னரை  செமீ உயரம் கூடுதல். க்ரீடம்  பெருசா இருப்பதாலோ?

ஆனா.... முகத்தில் பெண்மையின் நளினம் இல்லாமல் கொஞ்சூண்டு, கொஞ்சமே கொஞ்சம்  ஆம்பிளத்தனமிருக்குன்னு  இப்பத் தோணுது.  ஒருவேளை இதுதான் ராஜ கம்பீரமோ?

அங்கிருந்து கிளம்பி வரும்போது,  எங்கியாவது சாப்பாட்டை முடிச்சுக்கலாம் என்றார் கோபால். எங்கே? காலேஜ் ஹௌஸ் போகலாமுன்னு  சொன்னால்  அது ரொம்பதூரம். இங்கேயே முருகன் இட்லிக்கடையில் சாப்பிடலாம் என்றார்.

முதல்லே கடை  எங்கே இருக்குன்னு தெரிய வேணாமா?  அங்கிருந்த காவல்துறையாளரிடம் கேட்டால்... இப்படியேநேராப்போய் இடக்கைப் பக்கம் திரும்புங்கன்னார். சரின்னு   அப்படியே போனதில்    இட்லிக் கடைக்கு   வந்தாச்சு.

மாடியில்  சர்வீஸ் இருக்குன்னாங்களேன்னு மாடிக்குப்போனோம். சின்ன இடம்தான். எத்தனையோ  நறுவிசாக வைக்கலாம். ஆனால் நெரியும் கூட்டத்துக்கு இது போதுமுன்னு நினைச்சிருக்கலாம்.  நான் ஒரு தோசை.  இங்கே சட்னி எல்லாம் ஓடும் என்பதால்  நான் வாங்கிக்கலை. வெறும் தோசை ஓக்கே! கோபாலுக்கு அவர் இஷ்டப்படி.  ஒரு சின்னப்பையந்தான் கீழே அடுப்பங்கரைக்கும் மாடிக்குமா ஒடி ஓடி பரிமாறிக்கிட்டு இருந்தான்.   வாஷ் பேஸின் ஏரியா எல்லாம் ரொம்பவே சுமார்:(

கீழே இருக்கும் ஜிகர்தண்டா கடை நினைவுக்கு வந்ததும்  ரெண்டு  சின்ன க்ளாஸுக்கு  காசைக்கட்டி சீட்டு வாங்கினோம்.  கீழே போய்  ஜிகர்தண்டா ஆச்சு.

இப்ப ராயல்கோர்ட்டுக்குத் திரும்பணும். சீனிவாசனை வரச்சொல்லலாமுன்னா ஃபோன்? அது காரில் இருக்கே! பேசாம  ஆட்டோ எடுத்துக்கலாமுன்னு  நின்னதில்  ஒரு வண்டி கிடைச்சது.  இடம் சொல்லிட்டு ஏறி உக்கார்ந்தோம். வண்டி கிளம்புனதும் திடுக் !!

நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூடித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு....

முதுகுக்குப்பின்னால் இருந்து பாட்டு முழங்குது!    ஒருவிநாடி திகைச்சவளுக்கு அப்புறம் வந்ததே  சிரிப்பூ......  ஆனாலும் மதுரை ஆட்டோக்காரர்களுக்கு ரொம்பத்தான் இது. ஆட்டோ சத்ததையும் மீறி இவ்ளோ சத்தமாப் பாட்டா? எதோ கல்யாண ஊர்வலம் போறது போல!பாட்டு முழக்கத்தோடு 'ராயல்' கோர்ட் வந்து சேர்ந்தோம்:-)

தொடரும்..........:-)

PINகுறிப்பு:  படங்கள் எல்லாம்  மூணரை வருசத்துக்கு முந்தி போன பயணங்களில் எடுத்தவை.  காட்சி மாற்றங்கள் இல்லாதபடியால் அவைகளில் சில(!) இங்கே:-) 
கேமெராச் சீட்டு வாங்கி இருந்தாலும் கோவிலுக்குள் ஃப்ளாஷ் வேண்டாமேன்னு இருந்ததால் படங்களின் தரம் சுமாராத்தான் இருக்கு:(

மற்ற மதுரைக் காட்சிகள் நாளை!

28 comments:

said...

படங்கள் ஜோரோ ஜோர். குறிப்பாக அந்தத் தெப்பக்குளத்தை என்ன ஜோராக எடுத்திருக்கிறீர்கள்? மறுபடியும் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்தேன் உங்கள் தயவில். மீனாட்சி அம்மன் கோவில் மாறி இருப்பதை நாசூக்கான வார்த்தைகளில் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பார்த்த திருப்தியே இப்போதெல்லாம் வருவதில்லை. தடுப்புப் போட்டதால்தான் கூட்டம் நெரிகிறது. காசு!! அம்மன் சன்னதியைக் கூட அப்ப்ரதட்சனமாகத்தான் சுற்ற வேண்டும்! ம்ம்ம்...

அப்புறம் சீனிவாசன் எப்படி வந்து சேர்ந்தார்? நீங்க ஆட்டோ பிடிச்சு வந்துட்டீங்கன்னு எப்படி அவர் தெரிஞ்சுண்டார்?

said...

ஓ...! இப்படி ஒரு கண்டிஷன் இருக்கா...?

படம் எல்லாம் எடுக்க முடியாதே என்று நினைத்த போது, முடிவில் அதற்கான பதிலை அறிந்தேன்...

said...

ஜிகர்தண்டா ஊரின் பேமஸ் என்பதால் தெருவுக்குத் தெரு கிடைத்தாலும் மிகச்சில கடைகளைத் தவிர மிச்ச இடங்களில் வெகு சுமாராய்த்தான் இருக்கும். குறிப்பாக கோவில் அருகே! விளக்குத் தூண் அருகே நல்லாயிருக்கும்.

said...

கோவில் பிரகாரத்தில் படம் எடுக்க விடுகிறார்களா? ஆச்சரியம் தான்...

said...

ஜருகண்டி இப்ப எல்லாக்கோயில்கள்லயும் நுழைஞ்சுருச்சு.

சொக்கனாதர் என்ன செய்வார்? பாவம்.. ;-)said...

ஆஹா மதுரை மல்லிகை.. எனக்கும் ரொம்ப பிடிக்கும். அவர்கள் அதை நெறுக்கித்தொடுப்பது மிக அழகு.

மீனாட்சி கோவில் படங்கள் மிக அருமை.
said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த அழகில் அங்கே வாங்கிய தல வரலாறு புத்தகத்தில் எப்படி வழிபடவேண்டும் என்று போட்டிருப்பது ஒரு தமாஷ்!

"அம்பாள் முன் நின்று ஸ்தோத்திரங்கள் சொல்லித் துதித்து பிரகாரத்தை ரெட்டைப்படை எண்ணில் வலம் வரணும்"

இப்ப இருக்கும் தள்ளுமுள்ளில் நடக்கிற காரியமா?

சீனிவாசன், ஹொட்டேலில் ட்ரைவர்களுக்கு ஒதுக்கி இருக்கும் அறையில் இருந்தார். ரிஸப்ஷனில் சொல்லி அவரை வரவழைச்சோம். கெமெரா, செல்ஃபோன்களைக் கொண்டு வந்து கொடுத்துட்டு தூங்கப்போனார்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பெரிய கண்டிஷனா இருக்கே:-))))

நாளொரு விதி செய்வோம் போல!

said...

@ஸ்ரீராம்.

உண்மைதான், நல்லா இருந்தா ஆளாளுக்கு பிஸினஸ் ஆரம்பிச்சுடறாங்களே!

திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் போலி இருட்டுக்கடை அல்வாக் கடை இருக்கு!!!!

அதே ஏரியாவில் என்பதும் உண்மை!

ஒரிஜினல் கடைக்கு பெயர்ப்பலகையே கிடையாது:-)))

said...

வாங்க கார்த்திக் சரவணன்.

அப்போ எடுக்க விட்டாங்களே! கேமெரா டிக்கெட் வாங்கினால் போதும்.

உள்ப்ரகாரத்திலும் கொஞ்சம் எடுத்தேன். அவை நாளைய ஸ்பெஷல் ஃபோட்டோ பதிவில்:-)

said...

வாங்க சாந்தி.

நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் இதுவரை வரலை. (டச் வுட்)

நிம்மதியா அவன் முன் உக்கார்ந்து தரிசிக்கலாம்.

said...

வாங்க ரமா ரவி.

அழகு மட்டுமா....மணமும் தூக்குதேப்பா!

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

மதுரை என்பது எப்போதுமே மனசுக்கு நெருக்கமான ஊர். நீங்க கையில் வைத்திருக்கும் நெருக்கமான மல்லிகளைப் போல.

said...

ஹூம், ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மீனாக்ஷியைப்போய்ப் பார்த்துட்டு வந்ததெல்லாம் நினைவில் வருது. இப்போ டிசம்பரில் போனப்போ நாங்க போகலை. பையரும் மருமகளும் மட்டும் போனாங்க. :)))) நீங்க சொல்றாப்போல் ஒரு நாலைந்து நாள் அங்கே தங்கிப் பார்க்கணும். எப்போக் கூப்பிடப் போறானு தெரியலை. :)

said...

என் நண்பன் இங்கு வந்து அமெரிக்கா திரும்பிப் போகும் போது இரண்டு சிலைகள் வாங்கிப்போனான். இரண்டும் சேர்த்து 30 கேஜீ இருந்தது. இரு பெட்டிகளில் ஒருவாறு எடையை மீறாதபடி பாக் செய்து எடுத்துப்போனான்,.அவன் கஸ்டம்ஸ் சோதனையின் போது திருட்டச் சிலைக் கேசோ என்று வாட்டி விட்டார்களாம். நல்ல வேளை அதை வாங்கிய கடையின் ரசீது இருந்து தப்பினான்.
மதுரையில் செர்வீசும் தரமும் உயர வாய்ப்பில்லை. ஏனென்றால் எப்படியும் கூட்டமும் ஜனங்களும் இருந்தே இருப்பார்கள். தரத்தையோ சேவையையோ உயர்த்த வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை. கோவிலை விட்டு எட்டிப் போனால் ஒருவேளை இம்ப்ரூவ் ஆகலாம்.

said...

மதுரைக்காரி இப்படிச் செஞ்சிட்டாளா? அதான் அவளையே வாங்க வெச்சுட்டா.

ஆனா அழகு. என்ன இருந்தாலும் ராணியாச்சே.

ஒரு குடும்பத்த ஒன்னு சேத்த புண்ணியம் உங்களுக்கு உண்டு.

காலேஜ் ஹவுஸ்னா கிட்டத்தட்ட ஸ்டேஷன் வரைக்கும் வரனும். அவசரத்துக்கு முருகன் இட்லிக்கடை சரிதான்.

said...

சொல்ல மறந்துட்டேனே.. அந்தக் குடும்பத்தை ஒன்னு சேக்கப் போற புண்ணியத்துக்கே... நீலக்குயில்கள் ரெண்டு பாட்டு போட்டிருக்கா மீனாட்சி. வாழ்க. வாழ்க. :)

said...

மீனாட்சி அம்மனும் இந்த நிலைக்கு வந்தாச்சா. என்னப்பா அனியாயம். மல்லி ஒன்றுதான்
மாறாமல் இருக்கு போல. மதுரைக் காற்றாவது அடித்ததா. படங்க்கள் மதுரையை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. ஏக்கம் தான். ஆனால் அந்தத் தூசியும் கூட்டமும் மதுரை மாறி நாட்களாகிறது என்று தெரிகிறது.

said...

நீங்கள் வாங்கிய மீனாட்சியை தினம் தரிசிக்கலாம் அழகு.
100 ரூபாய் கொடுத்து நன்றாக பார்க்கலாம் என்று உறவினர்களுடன் போய் ஏமாற்றம் அடைந்தேன். 100க்கும் அதே விரட்டல்தான். முன்பு திங்கள் கிழமை வைரகிரீடம், தங்கபாவடைபோட்டு இருக்கும் போது அப்பாவுடன் ராஜ மரியாதையுடன் மீனாட்சி அருகில் போய் பார்த்த காலத்தை நினைத்துக் கொள்கிறேன்.

என் கணவர் கூட்டத்திற்கு பயந்து கோவில் போய் பலவருடங்கள் ஆகி விட்டது. இந்த முறையும் 10 நாட்கள் இருந்தும் பார்க்கவில்லை.

நேற்றுக்கூட மதுரை மல்லி 100 எண்ணிக்கைதான்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் போலும் முழத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.
பதிவும், படங்களும் சூப்பர்.

said...

வாங்க ஜோதிஜி.

எனக்கும் வத்தலகுண்டு நினைவுகள்தான் அதிகம். அந்தக் காலத்தில் அது மதுரை மாவட்டம்தான்.

அம்மா அடிக்கடி வேலையின் காரணம் மதுரைக்கு போய் வரத்தான் வேணும். கூடவே அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு நானும் போய் வருவேன்:-)

கோபாலின் ஊரும் முந்தி மதுரை மாவட்டம்தான். அவருக்கும் மதுரையோடு ஒரு இணைப்பு இன்னும் இருக்கே!

நம்ம நர்சிம் இருக்கார் பாருங்க. அவர் ஒரு சமயம் நம்ம சென்னை வீட்டுக்கு வந்திருந்தார். பேசிக்கிட்டு இருக்குபோது, சட்னு கோபாலிடம் நீங்க மதுரையான்னு கேட்டாரா.... ஆச்சரியமாப்போச்சு. பேச்சு காட்டிக் கொடுத்துருச்சாம்:-))))

said...

வாங்க கீதா.

ரொம்ப கெடுபிடியால்லே இருக்கு இப்போ:(

பார்க்கலாம். அடுத்தமுறை சில நாட்கள் தங்க இயலுமான்னு.

ராமேஸ்வரம் (முக்கியமா திருப்புல்லாணி) போகணும். அப்போ இங்கே தங்கும் எண்ணம். உங்க பயணத்தொடரை தொடர்ந்து வருகிறேன்.

said...

வாங்கஜி எம் பி ஐயா.

சிலைகளைக்கொண்டு வருவதில் சிக்கல்கள் இருக்குதான்.

நம்ம வீட்டுக்கு முதல்முதலில் சாமி வந்தப்ப தமிழக அரசின் எம்போரியமே அனுப்பி வச்சுட்டாங்க.
அதன்பின் இந்தியாவில் சிலவருடங்கள் இருக்க வேண்டியதாப்போனதில், கடவுளர்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து தினசரி பூஜைகள் அதிகமா முடங்காமல் பார்த்துக்கொண்டோம்.
திரும்ப நியூஸி வந்தபோது எங்களுடனே வந்துட்டாங்க.
எனக்கு சாமி வந்த சமாச்சாரம் இங்கே:-) நேரமிருந்தால்பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2005/10/blog-post_24.html

said...

வாங்க ஜிரா.

உண்மையைச் சொன்னா காலேஜ் ஹவுஸ்தான் நம்ம ராயல்கோர்ட்டுக்கு ரொம்பப் பக்கம். இது ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில்தான் இருக்கு.

இவர்தான் எப்பவும் முருகன் முருகன்னுக்கிட்டு இருப்பார்:-)

எனக்கு காலேஜ் ஹவுஸ்தான். சின்னவயசில் அம்மாகூட மதுரைக்கு வரும்போதெல்லாம் இங்கேதான் சாப்பிடுவோம்.

இப்பக் குடும்பமே கூடிக்களிக்குது நியூஸியிலே:-)))

said...

வாங்க வல்லி.
எனக்குத் தெரிஞ்சே மதுரை ரொம்பத்தான் மாறிப்போச்சு.

ஒரு பத்து வருசத்துக்கு முந்திகூட அம்மன் முன்னால் உக்கார்ந்து பூஜை பார்க்க முடிஞ்சதேப்பா. இப்ப என்னன்னா.....

குண்டு வைக்கப்போறோம் குண்டு வைக்கப்போறோமுன்னு மிரட்டல்கள் வருவதால் கெடுபிடி அதிகமாப்போச்சு.

தீவிர வாதம் ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் (அது யாரா இருந்தாலுமே) நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கட்டும்!

said...

வாங்க கோமதி அரசு.

மகள் சின்னவளா இருந்தபோது இந்தியாவைக் காமிக்கறேன்னு தமிழ்நாட்டுலே சில இடங்கள் மதுரை திருச்சி, தஞ்சாவூர், கோவைன்னு சுற்றினோம். குருவாயூரில் துலாபாரம் கொடுக்க வந்த பயணம் அது.

எல்லா இடங்களிலும் சுலபமா தரிசனம் கிடைச்சது.

இப்பக் கூட்டத்தை நினைச்சாலே.... போகணுமான்னு இருக்கே:(

said...

பொற்தாமரைக்குளத்தின் மண்டப ஓரத்தில் மராமத்து செய்கிறேன் என்று இடித்துப் போட்டிருந்தனர்.அதை சரி செய்து விட்டார்களா?

said...

வாங்க கார்த்திகேயன்.

இரவு நேரத்தில் போனதால் சரியாக் கவனிக்கலை:(

இடிச்சதை, சரி செஞ்சுருப்பாங்கன்னு நம்பறேன்.

said...

ஸ்ரீரங்கம் கதையா அங்கும்.... அடடா இந்த மனிதர்கள் பண்ணும் அட்டகாசம் தாங்கலையே....

மதுரை மல்லி நாலு நாலா வெச்சு கட்டுவாங்க...

இங்கயும் எண்ணிக்கை கணக்கும் உண்டு, முழமும் உண்டு.