Friday, September 07, 2018

ஒரே கல்லில் நாலு மாங்கா.......... (பயணத்தொடர், பகுதி 6 )

லோட்டஸ்ஸில் ரொம்பவே வசதியான சமாச்சாரம் ஒன்னு இருக்கு! முக்கியமா வெளிநாடுகளில் இருந்து வர்றவங்களுக்கு இது உண்மையிலேயே  சௌகரியம்தான்.
வெவ்வேற  ஏர்லைன்ஸ் வெவ்வேற பேகேஜ் அலவன்ஸஸ்  வச்சுருக்காங்க. இதுலேகூடப் பாருங்க....  அமெரிக்கா போற ஃப்ளைட்டுலே  ரெண்டு பெட்டிகள்,  23 கிலோ கிலோ வீதம் கொண்டுபோகலாமாம். எங்களுக்குன்னு விதிச்சிருக்கும் சிங்கப்பூர்  ஏர்லைஸில்  முப்பது கிலோதான். அதுகூட  இப்ப ரெண்டு மூணு வருசமாத்தான்.  முந்தியெல்லாம்  இருவது கிலோ மட்டும்தான். கூடுதல்  கட்டணம் கட்டி எடுத்துப்போன கண்ணீர் கதைகள் நிறைய நம்மிடம் இருக்கு....

இந்தியாவில் உள்நாட்டுப் பயணமுன்னா செக்கின் பேகேஜ் பதினைஞ்சு கிலோதான்.  வெளிநாட்டுப் பயணிகள் வெறும் பதினைஞ்சு எடுத்துக்கிட்டு இந்தியா வர முடியுதா?  எதோ போகட்டுமுன்னு  கொடுக்கும் முப்பத்துலே பாதின்னா நடக்கற காரியமா சொல்லுங்க? கொண்டுபோகும் பெரிய பெட்டிகளைப் பாதுகாப்பா வச்சுட்டு, உள்நாடு  சுத்திட்டுத் திரும்ப இங்கே வரும்போது  பெரியவைகளோடு வரணும். அப்படித்தான் செஞ்சுக்கிட்டு இருக்கோம். அந்தப் பெரிய பெட்டிகளை இங்கே லோட்டஸில் விட்டுட்டுப் போவோம்.  அதுக்குன்னு தனியா ஒரு அறை வச்சுருக்காங்க. என்ன ஒன்னு திரும்ப இங்கே வந்து  தங்கணும். அதுதானே நியாயமும் கூட.... இல்லையோ?

ஒரு பத்துநாளுக்கு வேண்டிய துணிமணிகளையும், மற்ற சமாச்சாரங்களையும் எடுத்துக் கேபின் பேகில் வச்சுட்டு, கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்ச கையோடு நாலு கட்டடம் தள்ளி இருக்கும் சுஸ்வாத்  கடையில் போய் கொஞ்சம் தீனி வகைகளையும் வாங்கி வந்தோம். பயணம் போகும் இடத்தில் எங்கே இதுக்கெல்லாம் அலையறது, சொல்லுங்க.

இந்த சுஸ்வாத் கடை  ரொம்பகாலமா இங்கே இருக்கு! வீட்டுலே செய்யறதைப்போல நல்ல  ருசி.  கொஞ்சம் விலை அதிகமானாலும், தரம் சூப்பர்! கோதுமை ஹல்வா ரொம்பவே நல்லா இருக்கு!  மிளகு சீடைன்னு  ஒன்னு...   ரொம்பக்குட்டிக்குட்டியா  எப்படித்தான்  உருட்டறாங்களோ!  ஒருவாரம், பத்துநாள் கூட வச்சுருந்து  சாப்பிடலாம்.  சென்னையில் இருக்கும் நாட்களில், சட்னு  உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குப் போகும்போது இங்கே வந்து  கொஞ்சம் தீனி வகைகளை வாங்கிக்கிட்டுப் போயிருவோம்.  லோட்டஸுக்குப் பக்கத்தில் இருக்குன்றது இன்னொரு ப்ளஸ் பாய்ன்ட் நமக்கு :-)
சில வருசங்களுக்கு முன்னே இன்னும் ரெண்டு கிளைகள் வேற திறந்துருக்காங்க. சீர் முறுக்கு வகைகள் ஒன்னு சுவரில் இருந்தது!  கடை மாதிரி பரபரப்பா இல்லாம, வீடு மாதிரியான சூழல் என்பதும் நல்லாத்தான் இருக்கு!  காலை ஒன்பது முதல் இரவு ஒன்பதுவரை கடை திறந்துருக்கும்.   மலர்ந்த முகத்தோடு நிறைய இளம்பெண்கள் வேலை செய்யறாங்க.  ரெண்டு வார்த்தை ருசியைப் பாராட்டிச் சொல்லிட்டு வெளியே வந்தோம்.
அப்பதான் வாசலில் தண்ணீர் தெளிச்சுக் கோலம் போடறாங்க!  இதென்னடா.... ஒன்பதே காலுக்குக் கோலம்னு விசாரிச்சால், காமாக்ஷி சொல்றாங்க, 'ஒம்பது மணிக்கு வேலைக்கு வர்றேங்க. வந்ததும் முதல் வேலை இதுதான்'னு ! அதுவும் சரியாத்தான் இருக்கு, இல்லே?  காலையில் அவுங்க வீட்டு வேலைகளை முடிச்சுக்கிட்டுத்தானே வேலைக்கு வரமுடியுது! நல்ல அழகான புடவை உடுத்திக்கிட்டுப் பளிச்ன்னு  இருந்தாங்க காமாக்ஷி.  கோலம் போட்டுட்டு, ரெண்டு துளசிகளுக்கு அபிஷேகமும் செஞ்சது எனக்குப் பிடிச்சுருந்தது :-)
அறைக்கு வந்து பயணத்திட்டங்களையும், ஹொட்டேல் புக்கிங் சமாச்சாரங்களையும் சரிபார்த்து முடிச்சு,  பகல் சாப்பாடா மாம்பழம், தயிர் வகைகளை ஒரு கை பார்த்தோம். ஃப்ரிட்ஜைக் காலி செய்யணுமே :-)

லோட்டஸில் தங்கும் நாட்களில் ஒரு நாளோ இல்லை ரெண்டு நாளோ வேறெங்காவது போறதா இருந்தால்  அறையைக் காலி செய்யமாட்டோம். இப்போ  எட்டு நாட்கள் என்றதால்  ஒழிக்க வேண்டி இருக்கு.

நமக்கு ஃப்ளைட் சாயங்காலம் ஆறு மணிக்குத்தான்.  ரெண்டு மணி நேரத்துக்கு முன்னே வரணும் என்ற மிரட்டல் இருக்கே :-)  மதியம் மூணு மணிக்கு  செக்கவுட் பண்ணிட்டு பொட்டிகளை ஒப்படைச்சுட்டு, ஏர்ப்போர்ட் கிளம்பியாச்சு.  சதீஷ் வண்டி கொண்டு வந்துருந்தார். ஜஸ்ட் ஏர்ப்போர்ட் ட்ராப் மட்டும்தான்.  வழக்கத்தை விட அதிகமோன்னு மனசுக்குள்ளே ஒரு தோணல் இருந்துக்கிட்டே இருக்கு  எனக்கு.

ட்ரூஜெட் ஏர்லைன்ஸ். மைஸூர் போகுது. செக்கின் பண்ணிட்டுக் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். மஹாபலிபுரம் இருக்கு ஏர்ப்போர்ட்டில்:-) சின்ன  அளவில்  நல்லாத்தான் செஞ்சு வச்சுருக்காங்க.  நாலு பக்கங்களிலும் நாலுவிதமான  சிற்பக்குவியல்களின் மாதிரிகள்!  உண்மையில் அங்கே பரந்து விரிஞ்சு  இருப்பதை  இங்கே ஒரே கல்லில் நாலு மாங்காவா பண்ணிவச்சதைப் பாராட்டத்தான் வேணும்!





செக்யூரிட்டிச் செக் முடிச்சுட்டு உள்ளே போனால்.... புக்‌ஷாப்பில்  பழைய கால  ஹிக்கின்பாதம்ஸ் கட்டடத்தின் படம்!   ஜயவிஜயர்கள் வேற இருந்தாங்க இன்னொரு பக்கம்.  'பழமையைப் போற்றுதும்....' னு  பால் கேன், டிஃபன்கேரியர், கெட்டில் வகையறாக்கள் இன்னொரு இடத்தில்!


ஒன்னரை மணி நேர ஃப்ளைட். சரியான ஓட்டை ப்ளேன்! கடமுட சத்தம் அதிகம். புதுக் கம்பெனிகள் உருவாக்கி,  பழைய விமானங்களை வாங்கி, உள்ளூர் பயணத்துக்குப் பறக்கறாங்க.  பறக்கும்போது கிடைச்ச  சூரிய அஸ்தமனம் ஸீன் அழகு!
இந்தியாவின் முதல் சுத்தமான நகரமாம்!  ஏர்ப்போர்ட் சுத்தமாத்தான் இருக்கு. ஊருக்குள்ளே போய்ப் பார்த்தால் லக்ஷணம் தெரியலாம் .  ஆடம்பரமில்லாம....  மைஸூரின் முக்கிய இடங்களின் படங்களை சுவரில் வரைஞ்சு வச்சுருக்காங்க.



ப்ரீபெய்ட் டாக்ஸின்னு ஒன்னு இங்கே இல்லை.  ஹொட்டேல் பெயரைச் சொன்னதும்,  கொஞ்சம் அதிகமாக் கேட்டுட்டாங்கன்னு  'நம்மவர்' சொன்னார்.  ராடிஸன்ப்ளூ போய்ச் சேர்ந்தோம். ரூம் வித் வ்யூ என்ற  கணக்கில் 'பேலஸ் வ்யூ உங்களுக்கு'ன்னார்  வரவேற்பில் இருந்தவர்.
அறைக்குப்போய் வ்யூ பார்த்தேன்.  அதோ..............
இப்பவே மணி எட்டரை. இங்கேயே இருக்கும் மைசௌத் ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம்.  நான் நினைக்கிறேன்...  நாம் மட்டும்தான் இன்றைக்கு அங்கே சாப்புடறோமுன்னு!  அங்கிருந்த  நாலைஞ்சு பணியாளர்களும் ஓடி வந்து  கூப்புட்டுப்போய் உக்காரவச்சு நம்மைச்சுத்தி நின்னுக்கிட்டாங்க :-) வராது வந்த  மாமணியோ......
சௌத் என்பதால் நாலு மொழிகளிலும் சாப்பாடு ஐட்டங்கள் அந்தந்தப் பகுதியின் பெயரோடு! வேஞ்சின ரொய்யலு, மீன் வட்டிச்சது,  மைஸூரு நாட்டிகோழி சாறு, கோளா உருண்டை கொழம்பு....   சரிப்படாதேன்னு   இட்லி, தோசை இருக்கான்னா கல்தோசை பண்ணவான்னாங்க.
டிஸ்ஸர்ட்டுக்கு 'பேக்டு ஒப்பட்டு'!  என்னவோ சுமாராத்தான் இருந்தது எல்லாமே.... கல்தோசை சின்னதா இருக்குமுன்னு கையாலே காமிச்சுட்டு தடிதடியா ரெவ்வெண்டு. ப்ச்....
டிஸ்ஸர்ட்டைத் தின்ன முடியாதுன்னதும்  பேக் பண்ணிக் கொடுத்தாங்க.  கொஞ்ச நேரம் கழிச்சுத் தின்னால் ஆச்சு :-)
அலங்காரம், ஆடம்பரமா இருக்கே தவிர ஒன்னும் சரி இல்லை.  இதுலே நமக்கு கிஃப்ட் வேற !  எனக்கு  மூணு ஜோடி வளையும்,  'நம்மவருக்கு' ஒரு பென்ஸிலும் :-) எழுதி எழுதிப் பென்ஸிலைக் கரைச்சுப் புழுக்காணி ஆனதும் நட்டு வைக்கலாமாம்.  நம்மதுலே மலபார் ஸ்பினாச். (இங்கே கொண்டு வரக்கூடாதே....   பார்க்கலாம்..... பென்ஸில் என்ற கணக்கு இருக்கே.... )

 சரி... போய்த் தூங்கலாம். நாளைக்குக்கதை நாளைக்கு....

தொடரும்......  :-)


5 comments:

said...

அருமை நன்றி

said...

அட..பலகாரமும் , மைசுரும்..

said...

ஒரே கல்லில் நாலு மாங்கா... :)))

தொடர்கிறேன்.

said...

அவர்கள் மஹாபலிபுரத்தை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தார்கள் என்றால், நீங்கள் புகைப்படம் வாயிலாக துல்லியமாக எங்களுக்கு கட்டி விட்டீர்கள். மிக்க நன்றி. எல்லா படங்களுமே அருமை.

said...

காமராஜர் வானூர்தி நிலையத்துல மாமல்லபுரம் வெச்சிருக்காங்களா... போய் ஒன்றரை வருடத்துக்கு மேல ஆகப்போகுது. கவனிச்சுப் பாத்த நினைவில்லை.

அடுத்தது மைசூரா.... தூய்மையான நகரம்னு சொல்லிக்குவாங்க. ஆனா மைசூரு பலவகைல கொஞ்சம் கடுப்படிக்கிற ஊரு. சாப்பாடு சரியிருக்காது. மைசூரு மக்களை இயல்பாவே நம்ப முடியாதுன்னு சொல்வாங்க. என்னோட அனுபவத்துலயும் அது உண்மைதான்னு வெச்சுக்கோங்களேன்.

பேக்டு ஒப்பட்டு இப்படித்தான் இருக்குமா? பாத்தாலே எதோ தப்பாத் தெரியுதே!!! கல்தோசைல என்ன தப்பு பண்ண முடியும்!!! ஆனாலும் பண்ணியிருக்காங்களே... ஒன்னும் சொல்றதுக்கில்ல.