Wednesday, September 19, 2018

கோவில் வேணுமா? நான் கட்டித் தரேன்.... (பயணத்தொடர், பகுதி 11)

நிலமும் தந்து அதுலே கோவிலும் கட்டிக் கொடுத்தது ஹிந்து ராஜா! இதுலே என்னவாம்? ராஜா கோவில் கட்டமாட்டாரா என்ன? கொடுப்பார், கொடுக்காமல் என்ன?  ஆனால் இது கிறிஸ்துவக்கோவில் ஆச்சே!!  சர்ச்சு....
இப்பக்கண்டி இதுபோல ஒரு நியூஸ், 'சர்ச் கட்டிக்கொடுத்த ஹிந்து'ன்னு வந்துச்சுன்னு வையுங்க.... சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்! எல்லா டிவி சேனலிலும் இதுதான் தலைப்பு !

திப்புவின் காலத்துக்கப்புறம்  தலைநகர், ஸ்ரீரங்கப்பட்னாவில் இருந்து மைஸுருக்கு மாறுச்சு.  திரும்ப உடையார் அரசர்களின் ஆட்சி!  வெள்ளையர்களும் குளிர்விட்டுப்போய் இந்தப் பகுதிக்கு வரத்தொடங்கினாங்க. அவுங்க சாமி கும்பிட ஒரு இடம் வேணும், அப்படியே அவுங்களுக்கு ஒரு கோவிலும் வேணுமேன்னு  யோசிச்ச மன்னர், இடங்கொடுத்து, மரத்துலேயே  சர்ச் கட்டிக் கொடுத்துட்டார்.  வருஷம் 1843 ! அந்தக்காலக்கட்டத்துலே மைஸூர் அரண்மனையே முழுக்க முழுக்க மரக்கட்டடம்தான், கேட்டோ!
காலப்போக்கில் மக்கள் தொகை பெருகினதும்,  கொஞ்சம் பெரிய சர்ச்சா இருந்தால் தேவலாமுன்னு  தோணியதும்,  தாத்தா கட்டிக்கொடுத்த இடத்துலே புதுசா, பெருசா தேவாலயம் கட்டிக் கொடுத்துருக்கார் அப்போதைய மன்னர்! அவரே அடிக்கல் நாட்டியும் இருக்கார்! 1933 இல் கட்ட ஆரம்பிச்சு 1936 இல் முடிச்சுருக்காங்க.  ஃப்ரெஞ்சுக் கட்டடக்கலை நிபுணர் டிஸைன் செஞ்சுருக்கார்.
ரெண்டு கூம்பு கோபுரத்துடன் கம்பீரமா நிக்கும் சர்ச்சுக்கு வந்துருக்கோம் இப்போ. பழுது பார்த்துப் பராமரிக்கும் வேலை இப்ப நடந்துக்கிட்டு இருக்கு. பட்ஜெட் 2.7 கோடி ரூபாயாம்!  சர்ச்சுக்குப் பெயர் செயிண்ட் ஜோஸஃப் சர்ச்சுன்னு  சொன்னாலும்.   செயின்ட் ஃபிலோமினா சர்ச் என்ற பெயர்தான் எல்லோருக்கும் தெரிஞ்சதா இருக்கு!

யார் இந்த ஃபிலோமினாள் ?

மூணாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.  கிரேக்கச் சிற்றரசில் ஒர் இளவரசி. தெய்வத்தை வேண்டிக்கிட்டுப் பிறந்த குழந்தை, தெய்வபக்தியோடு வளர்ந்துருக்கு.  பொண்ணுக்குப் பதிமூணு வயசானதும்,  தாய் தகப்பனோடு  ரோமாபுரிக்குப் பயணம் போயிருக்காங்க.  அங்கத்து அரசர் பொண்ணின் அழகில் மயங்கித் தனக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்கச் சொல்லிக் கேக்கறார்.

 பாவம்.... குழந்தைப்பொண்ணு....     தனக்குக் கல்யாணத்தில் விருப்பமே இல்லைன்னு சொல்லப்போக,  அரசருக்குக் கோபம் வந்து, சிறையில் அடைச்சு வச்சுச் சித்திரவதை செய்து, கசையடி கொடுத்துன்னு  கொடுமைப்படுத்தியதும்  பொண்ணு செத்துப்போயிருது!

இந்தக் கொடுமைகள்  பலதில் தெய்வாதீனமாக தப்பி வந்ததாகவும்,  அதிசயங்கள் நடந்ததாகவும்  அவுங்க புராணங்களில் எழுதியிருக்காங்க. ஏசு கிறிஸ்துமேல் அளவில்லாத பக்தியுடன் இருந்தும், வாழ்நாளில் குறைஞ்சபட்சம் ரெண்டு அற்புதங்கள் நடத்தியும் ,  மக்களின் வேண்டுகோளும் இருந்தால், அவர்களை புனிதர் என்று போப் ஆண்டவர்,  அறிவிப்பாராம்.
எல்லாஞ்சரி.மூணாம் நூற்றாண்டு ஃபிலோமினா  இங்கே எப்படி வந்தாங்க?

நம்ம ஹிந்துப் புராணக்கதைகள் போலவே மற்ற மதத்துச் சமாச்சாரங்களும்  வழிவழியாச் சொல்லப்பட்டுருக்கும்தானே?

1926 ஆம் வருஷம், ஈஸ்ட் இண்டீஸ்லே இருந்து வருகை தந்த ஒரு கிறிஸ்துவ மதத் தூதர் (போப் ஆண்டவர்  அனுப்பினாராம்)   செயின்ட் ஃபிலோமினாளின் அதிசய சக்திகளைச் சொல்லி,  புனிதரின்  'ரெலிக்ஸ்' தன்னிடம் இருக்குன்னும்  சொல்லப்போக,  இந்த அற்புதங்களைக் கேட்ட அரசரின் அதிகாரி, இங்கே சர்ச்சில் அவற்றை வைக்கலாமுன்னு யோசனை சொல்லி இருக்கார்.
அதுவும் சரின்னு தூதர்  ஃப்ரான்ஸுக்குத் திரும்பிப்போய், அடுத்த வருசமே ஃபிலோமினாள் சிலையை அனுப்பி இருக்கார்.
இதே சர்ச்சில், கருவறைக்குக் கீழே  அடித்தளத்தில் ஒரு  நிலவறை எழுப்பி அங்கே சிலையை பிரதிஷ்டை பண்ணிட்டாங்க.
பேஸ்மென்ட்டில் இருக்கும் அறைக்குப் போகும் படிகளில் இறங்கிப் போனோம். அங்கே  சயன கோலத்தில் செயின்ட் ஃபிலோமினாள்!

ப்ரிட்டிஷ்காரர்களின் வழிபாட்டுக்கு, ஃப்ரெஞ்சு கட்டடக்கலை நிபுணர் , ஜெர்மன் ஸ்டைலில் டிஸைன் பண்ணி, க்ரேக்க நாட்டுப் புனிதர் சிலையை பிரதிஷ்டை செஞ்சு, மொத்த செலவையும்  ஹிந்து அரசர் ஏத்துக்கிட்டுன்னு...... என்னெவெல்லாம் நடந்துருக்கு பாருங்க!  இதுவும் ஒரு அற்புதம் இல்லையோ!!!

 வெளியே வளாகம் ரொம்பப்பெருசு!  தேவாலயத்தின் வாசலில் ரெண்டு பக்கமும் மேடையில் செயின்ட் ஜோஸஃபும்,  செயின்ட் ஃபிலொமினாவும் ஆளுக்கொருபக்கமா நிக்கறாங்க.




வளாகத்தின் இன்னொரு பக்கம் குன்றும் மேடையுமா ஒரு அமைப்பு. நிகழ்ச்சிகள் நடத்திக்கும்  திறந்தவெளி அரங்கம்!

இன்னொரு பக்கம்   இவுங்க நடத்தும் பள்ளிக்கூடம்  (செயின்ட் மேரீஸ்!) கூடவே ஒரு அனாதாலயமும்  இருக்கு!
மைஸூரு சுற்றுலாக் கழகம்,  அங்கே  பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களின் பட்டியலில் இந்த சர்ச்சையும் சேர்த்துருக்கு!   அதனால் பயணிகள் கூட்டமும் நிறைய !



நாமும் வேற இடத்துக்குப் போகிற போக்கில், புனிதர் ஃபிலோமினாளையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு இதோ கிளம்பிட்டோம்!


தொடரும்....   :-)

8 comments:

said...

கேள்விப்பட்டிராத இடம். படங்களும் இடங்களும் அழகு.

said...

படங்கள் அழகு...

கதைகள் சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

அழகிய இடமும், சுவாரஸ்ய தகவல்களும்,...

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்..

ஊருக்குள் இருக்கும் கோவில்தான் இந்த சர்ச்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

ரசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !