Monday, September 17, 2018

அரண்மனை விஸிட்டும் ஐவரின் அழகும் (பயணத்தொடர், பகுதி 10)

கிட்டத்தட்ட ஏழு நூற்றாண்டு சரித்திரம் இந்த இடத்துக்கு இருக்கு! மைஸூர் அரசவம்சம் ஆட்சிக்கு வந்தது கி பி .1399 .  அப்பெல்லாம் விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்துருக்கு.  மஹிஷாசுரனை வதம் செஞ்ச சாமுண்டீஸ்வரி, இங்கே கோவில் கொண்டதால் இந்த  ஊருக்கு மஹிஷாசூருன்னு  பெயர் வந்து, காலக்கட்டத்தில்  அது மருவி மைசூருன்னு ஆகிப் போயிருக்கு! 


தலைநகரம் இதுதான்.  ஹைதர் அலி ஆட்சியில்தான்  ஸ்ரீரங்கப்பட்னாவைத் தலைநகரமா மாத்திக்கிட்டாங்க.  திப்பு சுல்தான் ஆட்சிக்குப்பின் திரும்ப மைஸூரே தலைநகரமா ஆச்சு.

வெள்ளையர் பாரதத்தைப் பிடிச்சுவச்சு ஆண்டுக்கிட்டு இருந்த காலத்தில் அவுங்களுக்குத் தோணியபடி உள்ளூர் பெயர்களையெல்லாம் சொல்லியும் எழுதியும் வச்சு அதுவே நமக்கும் பழக்கப்பட்டுப் போயிருச்சு பாருங்க. அதையெல்லாம்  இப்ப சமீபகாலமா அந்தந்த மாநிலம் அந்தப் பழைய பெயர்களையெல்லாம்  திரும்பக் கொண்டாந்துக்கிட்டு இருக்காங்க. மும்பை, கொல்கத்தா, ஒடிஷா, மைஸூரு, சென்னை னு  பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம்.

ஆதிகாலத்து அரண்மனை முழுக்க முழுக்க மரக் கட்டடம்தான்.  இவ்ளோ பெருசா இப்ப இருக்கறாப்லெ இருந்துருக்காதுன்னு நினைக்கிறேன். ஒரு தசரா விழா நடக்கும் சமயம் 1896 ஆம் வருஷம் அரண்மனை தீக்கிரையாகி மொத்தமா அடியோடு அழிஞ்சே போயிருக்கு.
அப்புறம் 1912 ஆம்  வருஷம், ப்ரிட்டிஷ்காரர் ஹென்றி இர்வின் என்ற கட்டடக்கலை நிபுணர் டிஸைன் செஞ்சு   கட்டுனதுதான் இப்போ நாம் பார்க்கும் மைஸூர் அரண்மனை. க்ரானைட்டும், பளிங்கும், கண்ணாடியுமா வச்சு இழைச்சுருக்காங்க.
(எத்தனை  சினிமாக்களில் பார்த்துருக்கோம், இல்லே!!  இப்பெல்லாம் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கறதில்லை. பயணிகளுக்காவது  படம் எடுத்துக்க அனுமதி கொடுக்கப்டாதோ? அதுவும் இல்லை. இருபத்திநாலு வருசத்துக்கு முன்னே ஒருமுறை  இந்த அரண்மனையைப் பார்த்துருக்கோம். ப்ருந்தாவன் தோட்டத்தைப் பார்க்க வந்தபோது! அப்பவே உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னுட்டாங்க. )

72 ஏக்கர் பரப்பளவில்  சுத்திவர மதில் சுவரும், நாலு பக்கமும் அலங்கார வாசல்களுமா, பெரிய தோட்டத்துக்கு நடுவில்  அட்டகாசமான அழகோடு இருக்கு.  தெற்குவாசல் வழிதான்  இப்போ நாம் உள்ளே போறோம்.  அம்பது ரூபாய் கட்டணம்.
அம்பா விலாஸ் ன்னு இந்த அரண்மனைக்குப் பெயர் !  விலாஸுன்னதும் எதோ ரெஸ்ட்டாரண்டுன்னு நினைச்சுக்காதீங்க. இது  மைசூரு அரசவம்சத்தின் குலதெய்வமான அந்த அம்பாள் சாமுண்டீஸ்வரியின் சொத்து !
அரண்மனைக்கு நேரெதிரா அரசர் சாமராஜேந்த்ர உடையார் சிலை ஒரு சின்ன அலங்கார மண்டபத்தில்! அரண்மனை வாசலிலேயே இடமும் வலதுமாக் கோவில்கள்!  நம்ம ஆஞ்சிக்கு  ஒரு கோவில் வலப்புறத்தில்!  கோட்டை ஆஞ்சநேயர் !வெளிப்புற  முற்றத்தில்  கொடிமரம் போல் இருக்கும் தூணில் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கார்!


இடப்புறம் வரிசையா மூணு கோவில்கள்(சந்நிதிகள்!)அதுலே ஒன்னு நவகிரஹங்களுக்கு! சந்த்ரமௌலீஸ்வரர் &  ராமர்,  மற்ற ரெண்டு சந்நிதிகளில்!

வாசலுக்குள் நுழைஞ்சதுமே நம்மாளின் 'அடையாளம் ' பார்த்துட்டேன் :-)  எங்கே (ஒளிச்சு)வச்சுருக்காங்கன்னு  பார்க்கணும்.
வாசலாண்டையே ஸ்ரீ புவனேஷ்வரா கோவில்.  கோட்டைக்குள்ளே சுமார் இருபத்தியிரண்டு கோவில்கள்  சின்னதும் பெருசுமா இருப்பதாக் கேள்வி. 

எல்லா வாசல்களுக்குப் பக்கத்துலேயும்  கோவில்கள் ! காவல் தெய்வங்கள் :-)
வெங்கலப் பெண்சிங்கங்கள்  வாசலாண்டை ! (முதலில் புலின்னு நினைச்சுட்டேன்.... ஹிஹி...)
தோட்டத்துக்கு நடுவில்  கம்பித்தடுப்புக்குள்ளே கம்பீரமா நிக்கும் அரண்மனை!  மனிதர்கள் போக அங்கங்கே  இடைவெளி விட்டுத்தான்  வச்சுருக்காங்க.

சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  மழை வந்துருச்சு! எல்லோரும் ஓடிப்போய் அரண்மனையில் தஞ்சம் அடைஞ்சோம். 'நல்ல சமயமடா.... இதை நழுவ விடலாமோ'ன்னு ....  டீ வித்துக்கிட்டு வந்தார் ஒருவர்.  நமக்கும் ஒரு சாய் ஆய்க்கோட்டே....

அரசகுடும்பத்தோடு அமர்ந்து டீக்குடிக்கச் சான்ஸ்  இல்லையாக்கும். அரசர் குடும்பம் இப்ப இங்கே வசிக்கலையாம். ஒரு பகுதியில் மட்டும் உறவினர்கள் இருக்காங்களாம்.


முழு அரண்மனையும் இப்போ கர்நாடகா அரசின் பொறுப்பில் இருக்கு!  நல்ல சுத்தமாத்தான் பராமரிக்கிறாங்க. தினமும்  மாலையில் விளக்குப்போடறாங்க. 97000 லைட்ஸ் ! ஜொலிப்புக்குக் கேட்கணுமா? (அதான் நம்ம அறையில் இருந்தே தெரியுது !)   
உள்ளூர், வெளியூர், வெளிநாடுன்னு  சுற்றுலாப் பயணிகள் கூட்டம் !


குழந்தைகளுக்கு மழை ஒரு கொண்டாட்டம் !
மழை  விட்டதும்  மறுபடியும் சுத்தப்போனோம்.  ஸ்வேத வராஹ ஸ்வாமி ,  மஹாலக்ஷ்மி, த்ரிநயனேஷ்வரா,காயத்ரி, ப்ரஸன்ன க்ருஷ்ணஸ்வாமி, லக்ஷ்மி ரமணஸ்வாமி,  வெங்கட ரமண ஸ்வாமின்னு பனிரெண்டு பெரிய கோவில்கள்.  இந்தக் கோவில்களில் ரொம்பப் பழசு  வெங்கர ரமண ஸ்வாமியோடது. ரொம்பவும் இளைய கோவில்கள்  புவனேஷ்வராவும், காயத்ரியும்!எல்லாமே மாலை அஞ்சு மணிக்குத்தான் திறக்கறாங்க. நமக்குக் கொடுப்பினை இல்லை, போங்க.....


ஃபோட்டோ எடுத்து அங்கேயே ப்ரிண்ட் எடுத்துக்கொடுக்கும் வியாபாரம் வேற!  அரசு இதுக்கெல்லாம் ஒரு கட்டணம் வசூலிக்குமுன்னு நினைக்கிறேன்.
'அந்தப் பக்கம் பாரு'ன்னு  'நம்மவர்'குரல் கொடுத்ததும் திரும்பிப் பார்த்தால்.....  ஆஹா.....   நம்மாட்கள்   ஐவர் :-) உடனே அந்தப் பக்கம் போயிட்டேன்.  காயத்ரி, விஜயா, காவேரி, லக்ஷ்மி, பார்வதின்னு எல்லோரும் பெண்களே!

தசரா கொண்டாட்டம் மைஸூரு ஸ்பெஷல் விழா!  அதில் பங்கெடுக்கும் யானைகள்  பெரும்பாலும் களிறுகளே!  750 கிலோ கனம் வரும் அம்பாரியைச் சுமக்கணுமா இல்லையா?  இந்த கனத்தைக் குறைக்கணுமுன்னு  இப்போ  யோசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. பாரம்பரிய அரச உடையலங்காரத்தில்  இருக்கும் அரசரின்  தரிசனமும் அப்போதான் லபிக்கும்! அவருக்கும் தன் மக்களைப் பார்க்கும் மகிழ்ச்சியும் அப்போதான் :-) லக்ஷக் கணக்குலே பயங்கரக்கூட்டம் இருக்குமாம். சுமார் நானூறு வருஷத்துக்கு முன்னே ஆரம்பிச்ச  விழா இப்போ பெரிய அளவில்!

இவ்ளோ கோலாகலமா  வாழ்ந்துக்கிட்டு இருக்கும் ராஜ குடும்பத்துக்கு ஒரு சாபம் ஏற்பட்டுப்போச்சுன்னு  சரித்திரம் சொல்லுது.  தலக்காடு சாபம் !

ஒரு சமயம் விஜயநகரப்பேரரசு காலத்தில்,   மன்னர் திருமலைராஜா தன் மனைவி அலமேலம்மாவுடன்  எதோ வழிபாட்டுக்காகத் தலக்காடு போயிருக்கார்.  அப்போ பார்த்து,  ராணி அலமேலம்மாவின் பொறுப்பில் இருந்த தாயார் ரங்கநாயகியின் நகைகள் எல்லாம் மைஸூர் சிற்றரசர், தன் படைகளை அனுப்பி எடுத்துக்கிட்டு வந்துட்டாராம்.

விஷயம் தெரிஞ்சதும்,  ரொம்ப கோபம் அடைஞ்ச  அலமேலம்மா, 'இந்தத் தலக்காடு ஒன்னுமில்லாத நிலமா மணல் மூடிப்போகட்டும்,  மாலங்கி நதியில் நீர் வற்றிப் போகட்டும், மைசூர் அரச வம்சம் வாரிசற்றுப் போகட்டும் ' னு சாபம் கொடுத்துட்டுத் தன்னுயிரை மாய்ச்சுக்கிட்டாங்க!

சாபம் பலிச்சுப் போச்சு! இப்பவும் மைஸூர் அரச வம்சத்துக்கு நேரடி வாரிசு இல்லை. தத்து எடுத்த மகனே அரசராக பட்டங்கட்டப்படுகிறார்!   (இந்தக் கதைக்கும் வெவ்வேற வெர்ஷன்ஸ் உண்டு.  ஆனால் மண்மூடிக்கிடக்கும் தலக்காடும்,  வெறும் மடுவாகிப்போன மாலங்கி நதியும், அரசகுடும்பமும் சாட்சியாத்தானே இருக்கு, இல்லே? )  ப்ச்.... 

யானையைப் பார்த்ததும்  தசரா, அதனோடு அரசர், அப்படி இப்படின்னு  மனசு எங்கெங்கயோ போயிருச்சு.... போகட்டும். நிகழ்காலத்துக்கு வரலாம்.
அழகா அசைஞ்சு இங்கேயும் அங்கேயுமாப் போய்க்கிட்டு இருக்கும் யானைகளைப் பார்க்கறதே ஒரு தனி சுகம்!
அஞ்சு பேரும் மக்களை ஆசிர்வதிக்கும் வேலையில் பயங்கர பிஸி! எல்லாம் ஒரு கால்மணி நேரம்தான்!  சம்பாரிச்சுக் கொடுத்தது போதுமுன்னு கிளம்பிட்டாங்க. நாங்களும்தான்! 





உள்ளே ம்யூஸியம் எல்லாம் இருக்கு. ஆனால் நமக்கு நேரம் இல்லை.  வெளியே சுத்துனதே ஒன்னரை மணி நேரம் எடுத்துருச்சு.  உள்ளே  சுமார் ரெண்டு மணி நேரமாவது வேணும். ரொம்ப வருஷத்துக்கு முன்னே பார்த்துருக்கோமேன்னு இப்ப விட்டுட்டோம்.... சவுண்ட் & லைட்ஸ் ஷோ (ஒலியும் ஒளியும்) கூட இருக்கு. ஏழு மணிக்குத் திரும்ப வரமுடியுமான்னு தெரியலை....

வாங்க வேற இடம் பார்க்கலாம்.

தொடரும்....... :-)

19 comments:

said...

எங்கள் பயணத்தில் மைசூர் அரண்மனையை காலையிலும், மின்னொளியில் இரவிலும் பார்த்தோம். கண்ணுக்கு விருந்து. இன்று உங்கள் பதிவு மூலமாகக் கண்டோம், அழகான அதிகமான படங்களுடன் நன்றி.

said...

தங்களால் நானும் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி...

வாழ்க நலம்!..

said...

தமிழக அரசை விட (எந்தஆட்சி வந்தாலும் இருந்தாலும் போனாலும்) கர்நாடக அரசு சுற்றுலாத்துறை அழகாக பராமரிக்கின்றது என்பது முற்றிலும் உண்மை.

said...

பலமுறை மைசூருக்குப் போயிருந்தாலும் அரண்மனைக்குள் போனதில்லைசில ஆண்டுகளுக்கு முன் ஒரு 360டிக்ரீ வீடியோ ஒன்று பார்த்தேன் இப்போது அது கிடைக்கவில்லை

said...

அம்மாடி... எவ்ளோ படங்கள்? படித்ததை விட பார்த்தது அதிகம்!

said...

அருமை நன்றி

said...

மைசூரோட உண்மையான பழைய பெயர் எருமையூர்... அது மருவி எம்மேயூரு... பின்னாடி வடமொழில பேர் வெச்சாதான் மார்டன்னு வந்த சமயத்துல மொழி மாற்றம் பண்ணி மகிஷூரு... அப்புறம் மைசூரு. பழைய பேருக்குப் போகனும்னா... இன்னைய கன்னடத்துல எம்மேயூருன்னுதான் வைக்கனும். :)

வெள்ளைக்காரனுக்கு எதிரா போரிட்டு நாட்டையும் உயிரையும் பல மன்னர்கள் இழந்த சமயத்துல வெள்ளைக்காரனுக்கு ஆல்-இன்-ஆல் வேலை பாத்து வளமா இருந்த மன்னர்களும் உண்டு. மைசூர் சமத்தானம் அப்படியாகப்பட்டது. அதான் இந்த நிலமை.

மைசூர் அரண்மனைல படப்படிப்பு முந்தி நடந்திருக்கு. எம்.ஜி.ஆர் நடிச்ச மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துல மைசூர் அரண்மனை வெச்சுதான் அரண்மனைக்காட்சிகளும் பாட்டுக் காட்சிகள் கொஞ்சமும் எடுத்திருக்காங்க.

வாரிசில்லாமப் போகட்டுங்குற சாபம் இப்ப முறிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். சமீபத்துல மன்னருக்கு நேரடி வாரிசா கொழந்தை பொறந்திருக்குன்னு கேள்விப்பட்ட நினைவு.

said...

அழகான இடம். சிறு வயதில் சென்றது. ஒன்றும் நினைவில் இல்லை.

said...

நாங்கள் சென்றுவந்து நினைவுக்கு வந்தது மா...

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மின்விளக்கின் ஒளியில் கிட்டப்போய்ப் பார்க்கலை. ஹொட்டேல் அறையில் இருந்து கொஞ்சம் தெரிஞ்சது. அதுவே அழகுதான்!

said...

வாங்க துரை செல்வராஜூ,

வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஜோதிஜி.

உண்மை. சுற்றுலாத்துறை சிறப்பா வேலை செய்தால் மாநிலத்துக்கு நல்ல வருமானம் இல்லையோ!

முந்தி உடுபி கோவிலுக்காக மங்களூர் போனப்ப, அந்தப் பகுதிக்கான சுற்றுலாத்துறை, ஏர்ப்போர்ட்டில் கொடுத்த விவரங்களை வச்சே அந்தப் பயணம் முழுசும் நடத்த முடிஞ்சது. இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த் என்பது ரொம்பச் சரி!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நாங்களும் இந்த முறை அரண்மனைக்குள் போகலை. போனமுறை பார்த்ததோடு சரி! அப்போ வெளியே வரும்போது வளாகத்தில் ஊதுபத்தி, மைஸூர் சந்தன சோப், சந்தன எண்ணெய் எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் வாங்கிவந்தோம்.

said...

வாங்க ஸ்ரீராம்.

நீங்க சொன்னபிறகுதான் எத்தனை படமுன்னு போய்ப் பார்த்தேன். 34 ! அம்மாடி.... யானைன்னதும் கணக்கு வழக்கில்லாமப் போயிருச்சே!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிரா.

வளைஞ்சு கொடுத்து அரசைக் காப்பாத்திக்கிட்டாங்க போல! சமஸ்தானங்களை இணைச்சால் காசு தர்றோமுன்னு சொல்லி வாக்கு கொடுத்துட்டு, கடைசியிலே மன்னர் பரம்பரை யாவாரம் செய்ய வச்சுட்டாங்க பார்த்தீங்களா?

நானும் சில படங்களில் அரண்மனையைப் பார்த்த நினைவு. கொஞ்சும் சலங்கையில் கொஞ்சம் அங்கேதானோ?

சாபம் நீத்துப்போனதும் நல்லதுக்குத்தான்! எல்லாத்துக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கணுமுல்லே ! :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்குமே 24 வருஷத்துக்கு முந்தி பார்த்தது அவ்வளவா நினைவில்லை. பதிவர் காலத்துக்கு முன்! பதிவரான பிறகுதான் கண்ணையும் காதையும் தீட்டி வச்சுருக்கேன் :-)

said...

வாங்க அனுராதா பிரேம்!

ஆஹா..... நன்றி!

said...

நன்று