Wednesday, August 10, 2016

சுக்ரபுரி என்னும் திருவெள்ளியங்குடி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 71)

தேரழுந்தூர் கோவிலுக்குப்  போகும்போதே  கண்ணில் பட்ட இன்னொரு  கோவிலைத்  திரும்பி வரும்வழியில் பார்த்துக்கலாமுன்னு  போனோம். கோவில் முகப்பில் ரெங்கன் இருந்ததே காரணம்!   ஒரு நிமிட ட்ரைவ்தான். பாழடைஞ்சு இருக்கும் அக்ரஹாரத்தையொட்டியே இருக்கு.
ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில்!   வாசலில் இருந்து தலையைத் திருப்பிப் பார்த்தால்  ஆமருவியப்பன் கோபுரம் தெரியும்!
இங்கே கேட்டைக் கடந்தால்  பெரிய வெளி முற்றம்.  ஒரு அம்பது  மீட்டர் தொலைவில்  கோவில் வாசல். அங்கேயும் ஒரு கம்பி கேட்.  அப்புறம் ஒரு நீண்ட நடை. அந்தக் கோடியில் படிக்கட்டுகள் பத்து. மேலேறிப்போய்  இடதுபக்கம் திரும்பினால்.....  கருவறையில் அரவணையில்  பள்ளிகொண்ட ரெங்கன்!  தனியார் கோவில் போல!  தீர்த்தம் சடாரி கிடைச்சது.

வணங்கிட்டுக் கிளம்பிட்டோம்.  இன்னும் கொஞ்சதூரத்தில் சிவன் கோவில்(வேதபுரீஸ்வரர்)  ஒன்னு இருக்கு.  அங்கேதான் ஹரனும் ஹரியும் சொக்கட்டான் ஆடுன மண்டபம் இருக்கு.  மேலும் இந்த ஏரியாவில் கம்பர் மேடுன்னு கேள்விப்பட்ட இடம் ஒன்னும் இருக்கு.  எங்கேன்னு கேட்டுப் போகலாமான்னு  நினைப்பதற்குள்  மாயவரம் கும்பகோணம் சாலைக்கு வந்துருந்தோம்.  ப்ச்....   இனி ஒருக்கில் ஆகட்டேன்னு  பயணத்தைத் தொடர்ந்தோம். நமக்கு  முன்னால்  அதே  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் அணி வண்டி.  பாட்டை நிறுத்திட்டுப் போய்க்கிட்டு இருந்தாங்க.

குத்தாலம், பந்தநல்லூர், திருப்பனந்தாள், சேங்கானூர்  கடக்கும்போது அலங்கார வளைவு ஒன்னு கண்ணில் பட்டது. ஸ்ரீ ப்ரேமிக ஜன்மஸ்தான்.  நம்ம பெரியவாச்சான் பிள்ளையின்  அவதாரஸ்தலம் இல்லையோ?

  மணி பனிரெண்டாகப்போகுது.  எப்படியும் கொஞ்சம் வேகமாப் போனால் வெள்ளியங்குடி கோவிலையும் தரிசனம் செஞ்சுக்கலாமேன்னு   ........
ஆனால் ஒன்னு பாருங்க.... எதுக்கு அவசரப்படறோமோ   அது  நாம் நினைச்சமாதிரி அமையறதில்லை. இத்தனைக்கும் கூகுள் மேப் செல்லில் வழிகாமிச்சுக்கிட்டே இருந்தும்,  மெயின் ரோடை விட்டு உள்ளே போனபோது  வழி தவறிப்போச்சு :-(   முக்கால் மணியில் போக வேண்டிய இடத்துக்கு  80 நிமிட் ஆகிருச்சு.
கோவிலை மூடிட்டாங்க.  கோபுரமும் தென்ன ஓலை மறைப்பில். திருப்பணி ஆரம்பிச்சுருக்கு.  கோவில் காவல்காரர்,  'இப்பதான் பட்டர் வீட்டுக்குப் போனார். இதோ போய் கூட்டுட்டு வரேன்'னு ஓடுனார்.

கோவிலுக்கு எதிரில்  ஆஞ்சிக்கு ஒரு தனி சந்நிதி.  அந்தாண்டை  எதோ கட்டிடவேலை. கழிப்பிடம் கட்டறாங்களாம். ரொம்ப நல்ல சமாச்சாரம். இளம் எஞ்சிநீயர்  சுரேஷ் குமாரிடம் பேச்சுக் கொடுத்தோம்.  இன்னும் ஒரு மாசத்துலே வேலை முடிஞ்சுரும்.  பூசு வேலை முடிஞ்சு  டைல்ஸ் பதிக்கணும். வயதானவர்களுக்காக  வெஸ்ட்டர்ன் டைப்பும்,  இந்தியன் டைப்புமா  லேடீஸ் பகுதிக்கு  அஞ்சு டாய்லெட்ஸ்.  அந்தப் பக்கம் ஆண்களுக்கு இதே போல அஞ்சு. வந்து பாருங்கன்னார்.  நம்மவர் போய் எட்டிப் பார்த்துட்டு வந்தார்.



கழிவறை  கட்டுவது முக்கியம். அதுக்குத் தேவையான தண்ணீர் சப்ளை எப்படி? அது ரொம்பவே முக்கியமுன்னேன்.  மூணு  டேங்க் தண்ணீர்  வசதி செஞ்சுருக்காங்களாம்.  போதுமான தண்ணீர் எப்பவும் கிடைக்கும் என்றார்.

கோவில் சாவியுடன் திரும்பிவந்த  மணி,  'வாங்க உள்ளே போய் இருக்கலாம்.  பட்டர் இதோ பின்னாலயே வரேன்னார்' என்றார். பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடி வணங்கி  உள்ளே போறோம்.


இங்கே கருடாழ்வாருக்கு   நாலு கைகள். பக்கத்துச் சுவரில் 'வாகனங்களை விபத்தின்றி காக்கும் சங்கு சக்கரத்துடன் எழுகின்ற நிலையில் சதுர்புஜ கருடாழ்வார் 'னு எழுதி இருக்கு.  க்ளிக்கும்போது காவல்காரர் மணி , 'திவ்யதேசக் கோவிலில் இங்கே மட்டும்தான் இப்படின்னார்.

'இல்லையே.....  இதே மாதிரி ஒன்னு பார்த்துருக்கேனே' ன்னு சொல்லும்போது,  'இல்லம்மா   இங்கே மட்டும்தான்'னு சொல்றார். கண்ணை நகர்த்தினால்  அங்கொரு  ஓவியம். இயற்கை காட்சிதான்.  அதையும் பார்த்துருக்கேன்ன்னு மனசில் க்ளிக் ஆச்சு.  எங்கே எப்போ.....குழப்பம் அதிகமா ஆவறதுக்குள்ளே.....  பட்டர்ஸ்வாமிகள் வந்துட்டார்.
மூலவர் சந்நிதிக்குப்போகும் கதவைத் திறந்து உள்ளே போனதும் நாங்களும் பின்னாலயே போய் தரிசனம் ஆச்சு.

கோலவில்லி ராமர். கிடந்த கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.  வழக்கமா கருப்பு நிறக் கல்லில் நாம் பார்க்கும் மூலவரைப்போல் இல்லாமல்  நீல வண்ணத்தில்! ஆதிசேஷன், மற்றவர்கள்  எல்லோருமே அழகான நிறத்தில்  வண்ணம் பூசியவர்களா இருக்காங்க.
ராமர் பாம்புப் படுக்கையில் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு. முன்பே பார்த்திருக்கேன்னா....   இப்ப எதுக்குப் புதுசாப் பார்க்கறாப்லெ இருக்கு....   என்னவோ குழப்பம் போங்க.

தரிசனம் முடிஞ்சதும்,  பட்டர்ஸ்வாமிகள் கிளம்பிப் போயிட்டார். நாங்கதான் கோவிலை  வலம் வர்றோம்.



முடியுடை அமரர்க் கிடர்செய்யும் அசுரர் தம்பெரு மானையன் றரியாய்
மடியிடை வைத்து மார்வம்முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபல் மணிகளின் ஒளியால்
விடிபகல் இரவென் றறிவத ரிதாய திருவெள்ளி யங்குடி யதுவே

நம்ம திருமங்கை ஆழ்வார் , கோலவில்லியின் அழகைப் பத்துப் பாசுரங்களில் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.



இவர் இங்கே ராமனாக இருப்பதால்தான்  கோவிலுக்கு வெளியே நேர் எதிரில் ஆஞ்சி நின்னு வணங்கிக்கிட்டு இருக்கார்!



தாயார்,  தனிச்சந்நிதியில்.  மரகதவல்லின்னு பெயர். மூடிய கதவுக்கு முன்னால் நின்னு கும்பிடு போட்டேன். கதவு பளிச்ன்னு இருக்கு, வார்னிஷ் போட்டாப்ல.
வெளிப்ரகாரத்தில்  ஏகப்பட்ட ஆடுகள். அம்மாவின் ஆடுகளாக இருக்கணும்.   ஆடுகளின் சுதந்திரத்தைப் பார்த்தால்  காவல்காரரின்  உடமையோன்னு சம்ஸயம் :-)
தனிச்சந்நிதியில் ஆண்டாள்.  வெளிக் கதவு திறந்தே இருந்தது. உள்ளே கம்பிக்கதவின் வழியா தரிசனம்!  கத்தரிப்பூ நிறப் புடவையில் இருக்காள். இவளை இதே நிறத்தில் பார்த்த நினைவு(ம்) வருதே.....    தூமணி மாடம் ஆச்சு.
எல்லா சந்நிதிகளுக்கு வெளியிலும் வெள்ளையடிக்கும் வேலை நடக்குது. சாரம் கட்டி விட்டுருக்காங்க. வேலை செய்யும் ஆட்களும்  வந்து சேர்ந்தாங்க.

திரும்ப முன்பக்கம் போய் சதுர்புஜ கருடாழ்வாரை (குழப்பத்தோடு) கும்பிட்டுக் கிளம்பினோம்.

மஹாவிஷ்ணுவுக்காக கோவில்களைக் கட்டிக்கிட்டு இருக்கும்  தேவதச்சன் மயன், இங்கத்துப்  பெருமாளை ராமர்கோலத்தில்  பார்க்க ஆசைப்பட்டதால், கையில் இருக்கும் சங்கு சக்கரங்களைப் பக்கத்தில் இருக்கும்  கருடாழ்வாரிடம் கொடுத்து வச்சுக்கச் சொல்லிட்டு,  'ராமர் கோலம்' காமிச்சார் என்று கோவில் கதை!

திரும்ப அசுரர்கள் காலத்துக்குப் போகலாம் வாங்க. தேவர்களுக்கு ஆர்க்கிடெக்ட் விஸ்வகர்மா. அசுரர்களின் ஆர்க்கிடெக்ட் மயன். இவர்தான் நம்ம ராவணனின்  மாமனார். மண்டோதரியின் அப்பா.  விஸ்வகர்மா, அழகான கோவில்கள் கட்டி விட்டுக்கிட்டு இருக்கார்.  மயனோ.... மகளுக்கான  சீதனமா  ராவணனுக்கான மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும்  தங்கம்,வெள்ளி, வைரம், முத்துன்னு வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்கார்.  தேவலோகத்துக்குச்  சரி சமமா அசுர லோகங்களும்!  சொல்லப்போனால்  ஆடம்பரமா இருந்தது அசுரலோகம்தான்.


ஒரு சேஞ்சுக்கு  நாமும் ஒரு கோவில் கட்டினால் என்னன்னு மயனுக்குத் தோணுச்சு. தயங்கித்தயங்கி தன் ஆசையை வெளிப்படுத்தறார்.  அதுக்கென்ன? போய் பெருமாளிடம் பர்மிஷன் வாங்கிக்கிட்டுக் கட்டிக்கொடுத்துருன்னு சொல்லிட்டாங்க அசுரத் தலைவர்கள். எப்பவும் கெட்ட குணம் இல்லையாக்கும். அப்பப்ப  கொஞ்சம் வரும் போகும் அம்புட்டுதான்.  தேவர்கள் பண்ணாத அக்கிரமமா?

பெருமாளைக் கும்பிட்டு அனுமதி வாங்க இங்கே வர்றார் மயன்.  அப்ப  அசுரத் தச்சனுக்குக் காட்சி கொடுக்கறார்  மஹாவிஷ்ணு. மயனுக்குத் தெரியும் இவர்தான்  ராமாவதாரம் எடுத்துத் தன் மாப்பிள்ளையைப் போட்டுத் தள்ளியவர்னு. ராமரா அவதாரம் செஞ்ச கோலத்தை தான் பார்க்கலையேன்னு, 'ராமர் வேஷங்கட்டி எனக்குத் தரிசனம் கொடுங்கோ'ன்னு விண்ணப்பிக்கிறார்.

 பெருமாள் அப்போ நல்ல மூடில் இருந்துருக்கணும். 'நோ ஒர்ரீஸ். வெறும் மனுஷ்யனாத்தான் இப்படி இருந்தேன்'னு சொல்லி, தன் கையில் இருந்த சங்குசக்ராதிகளைப் பக்கத்தில் தொடர்ந்து நின்னுக்கிட்டு இருந்த  கருடாழ்வாரிடம், 'இதைக் கொஞ்சம் பிடிச்சுக்குங்கோ'ன்னு கொடுத்துட்டு,  வெறுமனே வில்லோடு கோலம் காமிச்சுருக்கார்.

கையில்  சங்கு சக்ரம் வாங்கின பெரியதிருவடி, அதை ஜம்ன்னு தன் கைகளில் ஏந்தி அவரும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கிட்டார். அம்மா நகையைக் குழந்தை போட்டுப் பார்க்கறாப்போல!


கிளம்பிய அரை மணியில் கும்மோணம் போய்ச் சேர்ந்தோம். நிற்க.....
வீடு திரும்பியதும், வெள்ளியங்குடியைத் துளசிதளத்தில்  இருக்கோன்னு தேடினால் இருக்கு!!!!

ஆஹா....    நேத்து கீழச்சாலை கோவில் மூடி இருந்ததே...  அந்தக் கணக்கில்  இதை டபுள் என்ட்ரியாப் போட்டால் கணக்கு சரியாகாதா?

திருவெள்ளியங்குடிக் கோவில்  புராணக் கதைகளை, அப்போ எழுதினதை அப்படியே இங்கே காப்பி அண்ட் பேஸ்ட்  செஞ்சுக்கறேன்.  படங்களையும் அன்றும் இன்றும் என்று போட்டால் ஆச்சு:-)


வாங்க கதைக்குள் போகலாம்.  அப்படியே..... ராமாவதாரத்தைக்   கட் பண்ணி வாமன அவதாரத்துக்குப் போறோம்.  மஹாபலிச்சக்ரவர்த்தியின் யாகம் நடந்து முடிஞ்சு  தானம் கொடுக்கும் நேரம். கேட்டது கேட்டபடி.  சிறுவனான வாமனன், தன் சின்னப் பாதத்தைக் காமிச்சு மூணடி நிலம் வேண்டறான்.  மஹாபலிக்கு ஒரே வியப்பு.  இத்துனூண்டு  இடத்தை வச்சு இவரென்ன பண்ணுவாரோன்னு....

அரசரின் குருவாகிய சுக்ராச்சாரியாருக்கு, வந்தவர் யாரென்று தெரிஞ்சு போச்சு! லேசா அரசரின் காதைக் கடிச்சார். "வந்தவன் லேசுப்பட்டவனல்ல. ஜாக்ரதை."  அரசருக்குச் சொல்ல முடியாத பெருமை.  ஆனானப்பட்ட விஷ்ணுவுக்கே நாம் தானம் கொடுக்கப் போறோமுன்னு!  தந்தேன்னு சொல்ல, தாரை வார்க்கணும். கெண்டியைக் கையில் எடுத்தார்.
தாங்க முடியலை குருவால். சட்னு வண்டு ரூபம் எடுத்துக் கெண்டி ஓட்டையில் போய் அடைச்சுக்கிட்டு உக்கார்ந்தார். சரிச்ச கெண்டியில்  தண்ணீர் வரலை. நோ தண்ணி, நோ தானம்.  இதென்னடான்னு  மூக்கு வழியா (கெண்டிச்சொம்பு மூக்கு) பார்த்தால் கருப்பா என்னவோ அடைசல். யாகம் நடக்கும் இடத்தில் தர்பைக்குப் பஞ்சமா?  எடுத்தார் ஒரு புல்லை. அதால் மூக்கைக் குத்திவிட்டார்.

இதை வாமனர் செஞ்சாருன்னு சொல்வார்கள். எனக்கென்னமோ   மஹாபலி செஞ்சாருன்னுதான் தோணுது. லாஜிக் பாருங்க. வாங்க வந்தவன் அதிகப் பிரசங்கித்தனமா ராஜா கையில் இருக்கும் கெண்டி மூக்கைக் குத்த முடியுமா?  கேட்ட பொருள் கிடைக்கும் வரை நீட்டிய கைகளுடன் இருப்பதுதானெ மரியாதை?  அப்படி மரியாதையே தெரியாத மண்டுவா மஹாவிஷ்ணு?

உள்ளே அனுப்பின தர்ப்பை, வண்டின் கண்ணைப் பதம் பார்த்துருச்சு. வலி தாங்காமல்,  ஐயோன்னு  தெறித்து வெளியில் விழுந்த வண்டு, கண்ணில் ரத்தம் வழியும் சுக்ராச்சாரியாரா உருமாற்றம் அடைஞ்சு நின்னதைப் பார்த்த மன்னருக்குப் பாவமாவும் இருக்கு, கோபமாவும் இருக்கு. கேட்டதைத் தவறாமல் கொடுப்பவன் என்ற பெயருக்குக் களங்கம் வரும்படி நடந்துக்கிட்டாரேன்னு....   குருவுக்கோ.... சிஷ்யன் அழிஞ்சுப் போகப்போறானேன்னு மனசுலே பதற்றம்.

வேற கெண்டி கொண்டு வரச்சொல்லி தாரை வார்த்துத் 'தந்தேன்' என்றதும், வாமனர் விஸ்வரூபம் எடுத்து மேலேயும் கீழேயுமா ஈரேழு புவனங்களை ரெண்டடியில் அளந்துட்டு, மூணாவது அடிக்கு இடம் கேட்டார். 'இனி ஏது இடம்? என் தலை தான் பாக்கி. இதுலே  உம் காலை வையும்' என்றதும் அப்படியே ஒரே அமுக்.  கொல்லாமல் உயிரோடு பாதாளத்துக்கு அனுப்பிட்டார்.  ஏன் கொல்லலை? முதலில்  மஹாபலி நல்லவர் அண்ட் வல்லவர். மேலும் பக்த ப்ரஹலாதனின்  பேரன்.  உன்னோடு இருந்து உன் பரம்பரையைக் காப்பேன்னு  நரசிம்ம அவதாரத்தில் சொன்ன உறுதிமொழியை  நட்டாத்துலே விடமுடியுமோ?

இப்பக் கண்பார்வை போன சுக்ராச்சாரியார்,  மீண்டும் பார்வை திரும்ப என்ன செய்றதுன்னு யோசிச்சு, அந்த  பெருமாளையே சரண் அடையத் தீர்மானிச்சார்.  தவம் செய்ய இடம் தேடி வந்தப்ப, இங்கே மார்கண்டேய மகரிஷி தவம் செஞ்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து, இது நமக்கும் சரியான இடம்தான்னு  இங்கே குடி இருந்து  தன் தவத்தை ஆரம்பித்தார்.  தவத்துக்குப் பலன் கிடைச்சது. போன கண் மீண்டும் வந்துச்சு.  அதான் கண்பார்வைக் குறைபாடு நீங்கவும், எப்போதும் கண்பார்வை குறைவில்லாமல் இருக்கவும் கோலவில்லியைக் கும்பிடுங்கோன்னு சொல்றாங்க.



வெள்ளி என்னும் சுக்ரன் குடி வந்ததால் இந்த இடத்துக்கு  வெள்ளியங்குடின்னு பெயர். திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவெள்ளியங்குடி.  பழைய காலத்துப்பெயர் பார்கவ க்ஷேத்ரம். சுக்ரபுரி.


திருவெள்ளியங்குடி கோவிலை தரிசனம் செஞ்சால்  108 திவ்யதேசக் கோவில்களையும் தரிசிச்ச பலன் கிட்டுமாம்.  அப்ப இந்தக் கணக்கில் நாம் ரெண்டு முறை , 108   கோவில்களை முடிச்சுட்டோமுன்னு  சந்தோஷப் பட்டுக்கலாமா!!!

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 8 முதல்  12. மாலை 5 முதல் 7 வரை.


திருவெள்ளியங்குடி 'அன்று'  படங்களை இங்கே பார்க்கலாம் :-)



தொடரும்........  :-)


16 comments:

said...


எந்தக் கோவிலுக்குப் போனாலும் அதற்கான கதை உங்களிடம் கிடைக்கும்தானே

said...

ராமரை தரிசனம் செய்தாயிற்று...

எத்தனை கழிவறை கட்டினாலும், தண்ணீர் வசதி செய்தாலும் சனம் அதை நாறடிக்கத் தான் போகிறார்கள்...:((

said...

கழிப்பறைகள் கட்டாயம் தேவை. அதோடு அதன் பராமரிப்பும். இந்தியா வெளிநாடுன்னு பல இடங்கள்ள நான் பார்த்த வரைக்கும் பொதுக் கழிப்பறையை அவ்வளவு முறையாக யாரும் பயன்படுத்துவதில்லை.

எனக்கென்னவோ அந்தக் கோயிலில் பள்ளி கொண்டிருப்பது மகாவிஷ்ணுவோ என்று ஒரு ஐயம். கையில் இருக்கும் வில் சார்ங்கமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இராமனாக இருந்திருந்தால் தாயார் பெயர் சீதையாக இருந்திருக்க வேண்டுமே. மரகதவல்லி என்று இருந்திருக்காதே. இருமாதரைச் சிந்தையாலும் தொடாத கோலமாயிற்றே. சீதையைத் தவிர வேறு யாரையும் (திருமகளின் அம்சமாகவே இருந்தாலும் கூட) நாயகியாக வைத்துக்கொள்ள மாட்டாரே என்று தோன்றுகிறது.

said...

சில நேரங்களில் மனதில் தோன்றுவதை பின்னூட்டமாக எழுதி விடுகிறேன் பிழையாயின் பொறுத்தருளவும்

said...

படங்கள் உடன் அருமையான தகவல்
தொடருங்கள்



குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

said...

அம்மா நகையைக் குழந்தை போட்டுப் பார்க்கறாப்போல! //
அருமையாக சொன்னீர்கள் துளசி.
அம்மா நகையை போட்டுக் கொண்டால் அதில் எவ்வளவு பெருமிதம், எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்.
அனுமனுக்கும் கிடைத்து இருக்கும் தானே அப்படி ஒரு அனுபவம்.

said...

அனுமனுக்கு என்று போட்டு விட்டேன், கருடாழ்வாருக்கு. என்று வர வேண்டும்.

said...

இதுவரை இக்கோயிலுக்குப் போனதில்லை. அவசியம் செல்வேன். உங்களது பதிவு இந்த எண்ணத்தை தூண்டிவிட்டது.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கதைகளுக்கு என்ன பஞ்சம் நம்மகோவில்களில்? ஒரே கதை பல விதங்களில் சொல்லப்பட்டுருக்கே!

//சில நேரங்களில் மனதில் தோன்றுவதை பின்னூட்டமாக எழுதி விடுகிறேன் பிழையாயின் பொறுத்தருளவும்//

இதெல்லாம் பிரச்சனையே இல்லை. பொய்முகம் போட்டுக்கணுமா என்ன?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தண்ணீர் வசதி இருந்தால் சனம் சுத்தம் படிக்காதா என்ற ஆதங்கம்தான் எனக்கு.

பெருமாளே.... சனத்துக்கு 'நீரே' நல்ல புத்தியைக் கொடும்!

said...

வாங்க ஜிரா.

மயனின் வேண்டுகோளுக்காக அந்த நிமிட் கட்டுன வேசம்தான் அது :-)

ஒரு வேசத்துக்காக மனைவி பெயரை மாத்திக்கிட்டு இருக்க முடியுதா என்ன?

அடுத்த தலைமுறை மக்கள், கழிப்பறையை முறையாகப் பயன்படுத்துவாங்கன்னு நம்பணும். ஒரு விழிப்புணர்வு கல்வியுடன் சேர்த்துப் பள்ளிகளில் ஆரம்பிச்சால் கொள்ளாம்.

said...

வாங்க ஜீவலிங்கம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

பெரிய திருவடியை சிறியதாக மாத்திட்டீங்களா !!!! நோ ஒர்ரீஸ். :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்க ஏரியாதானே? நினைச்சால் போய் வரலாம்! கொடுப்பினை!

நாங்களும் இந்த 108 ன்னு ஆரம்பிச்சதால்தான் இங்கெல்லாம் போனோம். இல்லேன்னா.... எங்கே விடியுது.... ப்ச்...

said...

சிறப்பான தகவல்கள்....

உங்கள் கூடவே நாங்களும் இரண்டு முறை 108 தரிசனம் பெற்றோம்! :)

said...

"சுக்ரஸ்தலத்தை மிதித்த பெரூமை
உங்களூக்கு "
"சுக்கிரன் மூலம் தன்பெரூமையை உலகறியச்செய்த "தலைவரின் தனிப்பெரூம் கரூணை எங்களூக்கு "
"வாழீய நீ எம்மான் "