Wednesday, August 24, 2016

திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 77)

பொழுது விடிஞ்சது. கடமைகளைச் சட்னு முடிச்சுட்டு ராயாஸ் கரிடாரில் ஓடிப்போய் ஜன்னலாண்டை நின்னேன். சூரிய உதயமாகிக் கொஞ்சநேரம் ஆகித்தான் போச்சு. மஹாமகக் குளத்தில் தண்ணீர்  பெருகி இருக்கு.  உள்ளூர் சனம் நடைப்பயிற்சியில். கம்பித்தடுப்புப் போட்டு வச்சுருக்கும் குளக்கரைப் படிகட்டுகளில்  'மனிதர்களுக்கு' அனுமதி இல்லை :-)

சீக்கிரமா ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பலாமேன்னார் கோபால்.  கீழே இருக்கும் ரைஸ் அன் ஸ்பைஸில் இட்லி வடை காஃபி ஆச்சு. சட்னி சாம்பார் எனக்கு வேணாம். கொஞ்சம் நெய் சக்கரை கிடைக்குமான்னு கேட்டதுக்கு நோ சொல்லாமல் உடனே கொண்டு வந்து கொடுத்தார் சூப்ரவைஸர்.
அறைக்குப்போய்  எடுக்க வேண்டிய கேமெராக்களையும் தண்ணி பாட்டிலையும் எடுத்துக்கிட்டுக் கீழே வர்றோம்.....   நம்ம சீனிவாசன்...வெளிப்புறத்திலிருந்து ஓட்டமா  வந்தவர் 'யானை வந்துருக்கு மேடம்'ன்னார்.  என்னையோன்னு சின்ன சம்ஸயம். கை மட்டும் கேட்டுப்பக்கம் நீண்டுருக்கே....  வெளியே போய் எட்டிப் பார்த்தால்....  ஆஹா.... சுத்திவர ஒரே கூட்டம்!
இந்தப் பயணத்தில்  இதுவரை கண்ணில் படவே இல்லை:-(  விசாரிச்சால் கேம்ப் போயிருக்காங்களாம். அப்ப இவர் எப்படி?
தனியார் யானை. இங்கே ஒரு சாயிபாபா கோவிலில் கும்பாபிஷேகமாம். அதுக்கு மஹாமகக்குளத்துத் தீர்த்தம் எடுத்து யானை மேல் வச்சுக் கொண்டுபோறாங்க. கூடவே யானைக்கு முன்னால் ஒரு செண்டை மேள கோஷ்டி! கிட்டப்போய் க்ளிக்கிட்டுத்தான் வருவேன்னு போயிட்டேன். ஒருபத்துப் பதினைஞ்சு க்ளிக்கானது.  எனக்குப்பின்னாலேயே  நம்ம வண்டி வந்ததால் ஏறிக்கிட்டேன். யானைக்குப் பின்னாலேயே   கொஞ்சதூரம் போனதும் யானை லெஃப்ட் எடுத்துருச்சு.

கிட்டத்தட்ட 42 கிமீ தூரத்தில் திருக்கண்ணபுரம்.  ஒன்னேகால் மணி நேரப் பயணம். போற  வழியில் நாகப்பட்டினம் போகும் சாலையில் நாம் ரைட் எடுக்கறோம்.  அழகான தென்னைமர வரிசைகள் ரெண்டுபக்கமும்!  ஒரு பக்கமா வரிசையில் போகும் பள்ளிக்கூடச் சிறுமிகள்!  பெண்கள் பள்ளியோ?

கோவிலுக்கான தோரண வாசலில் அஞ்சாழ்வார்கள் !  கடந்தால்
பிரமாண்டமான குளம். தண்ணீர் ஏராளம். சுத்தமா வேற இருக்கு!!!!


கரையில் ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி!   இதுவே ஒரு   சின்னக்கோவில் என்றுதான் சொல்லணும். குறுக்குவாட்டில் நீளமா அமைச்சுருக்கும்   முன்மண்டபத்துக் கூரையில் ராமாவதார , க்ருஷ்ணாவதார ஸீன்கள்!  இடதுபக்கம் ஆஞ்சிக்கு சந்நிதி.  ஒரு ஸ்லோகம் சொல்லிக் கும்பிட்டுக்கோன்னு  சந்நிதி வாசல் முகப்பில் எழுதிப்போட்டுருக்காங்க!ஜெய் சிரஞ்சீவா, ஜெகதேயவீரா, அசகாய சூரா, அஞ்சனி குமாரா.... வாங்க கோரஸாப்  பாடலாம்!
பூட்டிய கம்பிக்கதவு வழியா தரிசனம் ஆச்சு. அப்படியே குளத்தை எட்டிப் பார்த்துக் க்ளிக்கிட்டுக் கோவிலுக்குள் நுழையறோம்.

ஆஞ்சி சந்நிதிக்கும் கோபுரவாசலுக்கும் இடைப்பட்ட இடத்துக்குக் கூரை போட்டு வச்சுருப்பதால் இங்கிருந்து ராஜகோபுரம் பார்வைக்குத் தெரியாது!  ஏழுநிலை ராஜகோபுரமுன்னு நினைக்கிறேன். வாசலில் இருந்த பூ விற்பவரிடம் 'துளசி' வாங்கினார் நம்மவர். தோணி இருக்கும் போல!
கோபுரவாசலுக்குள்ளேயே  இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூஜிக்கப்பட்ட நவக்ரஹ சந்நிதி. பூட்டி இருக்கு! பொதுவாகப் பெருமாள் கோவில்களில் நவகிரஹ சந்நிதிகள் இருப்பதில்லை.  விதிவிலக்காக  ஒன்னு ரெண்டு கோவில்கள் இருக்கு. அதுலே ஒன்னு நாம் ஏற்கெனவே போயிருக்கும் மதுரை கூடலழகர் சந்நிதி.  இது  நமக்கு ரெண்டாவது. இன்னும் வேறெங்கே இப்படி அமைஞ்சுருக்குன்னு தெரிஞ்சவங்க சொல்லலாம் :-)

கோபுரவாசலைக் கடந்தால் பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிகள். இங்கேயும் மேலே தளம் எழுப்பி இருப்பதால் ராஜகோபுரத்தின் பின்னழகும் பார்க்க வாய்ப்பில்லை. கோவிலின் அடுத்த பிரகாரத்துக்குள் போனவுடன் கண்ணில் பட்டவர் இவர்! தங்கமே தங்கம்! கருடவாஹனம். எதிரில் ஆழ்வார்கள் பாசுரம் பளிங்குக் கல்வெட்டில். இந்த முன்மண்டபத்தில் கூரை  உள் விதானங்களில் சித்திரங்கள் ஏராளம்! திருக்குளத்து ஸீன் ஒன்னு சிம்பிள் அண்ட் ஸ்வீட்!
ஜயவிஜயர்கள் இருபுறமும் காவல் நிற்க,  அர்த்தமண்டபத்தைக் கடந்தால் மூலவர்           நீலமேகப்பெருமாள்  சந்நிதி. உற்சவர் சௌரிராஜப் பெருமாள் . ஆனால்  உற்சவர் பெயரைத்தான்  கோவிலுக்கும் சொல்கிறார்கள்.
இது எப்படி இருக்குன்னா  ஒரு வீட்டிலே யாருக்கு புகழ் கூடுதலோ அவுங்க பெயரைச் சொல்லிக் கூப்புடறதுபோல:-) பூனா வாழ்க்கையில் என் பெயர் அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாது. தபால்காரர், பால்காரர் உட்பட  எல்லோருக்கும்  நான் 'ச்சிண்ட்டூ கா மா' !!!  நம்ம சிண்ட்டூதான்  ஃபேமஸ் :-)

கிழக்கு  நோக்கி நிற்கிறார் நீலமேகர். எந்தவிநாடியிலும் புறப்படத்தயார் நிலையில்     கையில் ப்ரயோகச்சக்கரம்!  ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் இருபக்கங்களிலும். கூடவே இன்னும் ரெண்டு தேவிகள். இதில் ஒருவர் பத்மாவதி. செம்படவர் இனத்தைச் சேர்ந்த மன்னன் மகள்!

கண்ணபுரத்தென்கருமணியேன்னு  நம்ம குலசேகராழ்வார்,  ஸ்ரீராமனுக்குத் தாலாட்டுப் பாடி இருக்கார்!

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்தென் கருமணியே !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ.

  நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், குலசேகராழ்வார்னு அஞ்சு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் இது. மொத்தம் 128  பாசுரங்கள்! நூத்தியெட்டு திவ்யதேசங்களில் முக்கியமானது!

மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட
காலை மாலைகம லமலர் இட்டுநீர்
வேலைமோ தும்மதில் சூழ்திருக் கண்ணபுரத்து
ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே.

பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்திரங்கள்னு திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் அஞ்சு கோவில்கள். இப்படிப் போற 108 தரிசனங்களிலேயே  எல்லா பஞ்சங்களையும் தரிசனம் செஞ்சுக்கிட்டா...  எக்ஸ்ட்ரா பாய்ண்ட்ஸ் கிடைச்சுருது :-)  இந்த ஊருக்கே அந்தக் காலத்தில் க்ருஷ்ணாபுரம் என்ற பெயர்தானாம்!

 உற்சவர் தான் சௌரிராஜன். தலைநிறைய கட்டுமுடி. கொண்டை வேற போட்டுக்கறார்!

சௌரி கதையைப் பார்ப்போமா?

ஸ்ரீதரன் (ரங்கன்னு  கூட இவருக்கு ஒரு பெயர் இருக்காம்)  பட்டருக்கு ஒரு  காதலி. பெருமாளுக்குப் போட்ட மாலைகளை அவளுக்குப்போட்டு அழகு பார்த்து சுகித்திருக்கும் பழக்கம். அர்த்தஜாமப் பூஜை ஆனாட்டுக் கோவில் நடை சாத்தியதும் மாலைகளைக்  கொண்டுபோயிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ப்ரேமம் கூடிப்போய் பொழுதோடவே மாலைகள் இடம் மாறிக்கிட்டு இருந்துருக்கு.

ஒருமுறை  அந்த தேசத்து ராஜா, திடும்னு கோவிலுக்கு வருகை.

மஹாராஜாவைக் கோவில்மரியாதையுடன் மாலை போட்டு வரவேற்க வேணுமா இல்லையா?  சந்நிதித்தெருவிலே ராஜா ஊர்வலம் வந்துக்கிட்டு இருக்கு.  இன்னும்  கொஞ்ச          நேரத்துலே கோவில் வாசலுக்கு வந்துருவார். குடத்தில் சட்னு தண்ணீரை ரொப்பிப் பூரணகும்பம் ஆக்கியாச்சு.  இப்போ  மாலை?  குறுக்கு வழியில் காதலி வீட்டுக்கு ஓடுனவர், அங்கிருந்த மாலையைக் கையோடு கொண்டு வந்துட்டார். அவள் வீடு கோவிலையொட்டியேதான் இருந்துருக்க வேணும், இல்லையோ!

பூரணகும்பத்தோடு மாலைமரியாதை ஆச்சு மஹாராஜாவுக்கு. கண்களைத் தாழ்த்தி மாலையைப் பார்த்த மன்னருக்கு திடுக்!  அதுலே ரெண்டு தலைமயிர் ஒட்டிப் பிடிச்சுருக்கு!

என்ன பட்டரே  இது என்ன அநியாயம்னு  கோபமாக் கேக்கறார் அரசர்.

 ஐயோ... சிரசில் இருக்கவேண்டியது  மாலையிலா? சிரச்சேதம் உறுதியாசசேன்னு மனசுக்குள்ளே மறுகியவர், பரந்தாமா என்னக் காப்பாத்துன்னு   மனசுக்குள்ளே ஓசைப்படாமல் கதறுகிறார்.  வாய் மட்டும், உறுதியான குரலில் 'இது பெருமாளுக்குச் சார்த்தின மாலை மன்னரே. அதான் அவருடைய தலைமுடி இதில் வந்துருக்கு' ன்னு  ஒரே போடாப் போட்டார்.

"என்ன? சாமி சிலையில் தலைமுடியா?  எங்கே  காண்பியும், பார்க்கலாம்"

பெரிய கோவில் இல்லையா? அங்கே இருந்து பிரகாரங்களைத் தாண்டி கருவறைக்கு முன் வந்து நிக்கறார் மன்னர். திரைக்குப்பின் சாமி!   மனநடுக்கத்தோடு திரையை மெல்ல தள்ளித் திறக்கிறார் பட்டர்.
தலையில் கட்டுமுடியோடு காட்சி கொடுக்கறார் பெருமாள்!  என்ன கருணை பாருங்க அவனுக்கு!

 (ஆமாம்.... இப்படி கெட்ட செயலுக்கு எல்லாம் துணை போறது  நல்லாவா இருக்கு? அதான் சாமியைத் தொட்டு  அலங்கரிச்சுப் பூஜை செய்யும் ஆட்களுக்குத் துளிர்த்துக் கிடக்கு....  ஒரு பயபக்தி வேணாமோ?  ப்ச் ... ஆரம்பிச்சு வச்சதே  இந்த நீலமேகம்தானோ? ) 

அப்போ இருந்து  சவுரி முடி வச்சுக்கிட்ட சௌரிராஜன் ஆனார் எம்பெருமாள்!   இவர் இங்கெ கோவில் கொண்டதுக்குக் கூட ஒரு கதை இருக்கு, தெரியுமோ?
ஒரு காலத்தில்  முனிவர்கள் பலர் ஒன்னாச் சேர்ந்து நாராயணனை நினைச்சுக்   காட்டுலே தவம் செய்யறாங்க. சோறு தண்ணி இல்லை. உடம்பு வத்திப்போய் ஈர்க்குச்சியாகிருச்சு. சட்னு பார்த்தால் நெற்பயிர்போல் நிக்கறாங்க. உபரிசிரவசு மன்னனின் படைவீரர்கள் அந்தப் பக்கம் வர்றாங்க. நெல்வயல்  பயிர் நல்லா முத்திக்கிடக்குன்னு நினைச்சு அறுப்பை ஆரம்பிச்சுட்டாங்க.  பதறி வந்த  பெருமாள், சிறுவனா உருமாறி படைவீரர்களோடு போர் புரியறார்.

இப்பப் படைவீரர்களின் முறை, கும்பல்கும்பலா நெற்குவியல்மாதிரி  செத்து விழறாங்க. மன்னர் பார்த்துட்டு,  தன் படை வீரர்களைக் காப்பாத்த ஓடிவந்தவர்,  மஹாவிஷ்ணுவால் தனக்கு உபதேசிக்கப்பட்ட எட்டெழுத்து மந்திரத்தைப் படைக்கலனா ஏவி விட்டார். அது நேரப்போய் சிறுவன் காலடியில் சரண் அடைஞ்சது!

ஆஹா.... வந்தவர்  பெருமாள்னு உணர்ந்து  இவனும் காலடியில் விழுந்து வணங்கி வேண்ட எல்லாம்.... சுபம்!  அப்ப அவன் வேண்டிக்கிட்டதால்  இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செஞ்சுக்கிட்டு இருக்கார் பெருமாள். பையன் பேர் நீலமேகம் !
தாயாருக்குத் தனிக்கோவில்!   கண்ணபுரத்துநாயகி!

தினமும் அர்த்தஜாம பூஜையின்போது  பொங்கல் படைக்கிற கோவில் இதுவாத்தான் இருக்கணும். முனையதரயன் பொங்கல்னு பெயர்.  உள்ளூர் கிராமத்தலைவன். பெருமாள் மேல் பக்தியும் பிரியமும் கூடுதல். சாமிக்குப் படைக்காமல் சாப்பிடறதே இல்லை. அரசருக்குச் சேரவேண்டிய கிராமத்து வரிப்பணத்தைக் கட்டலைன்னு பிடிச்சு சிறையில் போட்டுட்டாங்க. அரசரின் கனவுலே போன பெருமாள், 'இவன் என் பக்தன். நல்லவன். விட்டுரு'ன்னு சொல்லி இருக்கார்.  பெருமாளிடமிருந்தே   காண்டக்ட்  சர்ட்டிஃபிகேட் கிடைச்சுருச்சு!   ஜெயிலில் இருந்து விட்டுட்டாங்க. தன்கிராமத்துக்கு  நடையா நடந்து வந்து சேரும்போது இருட்டிப்போச்சு. ராத்திரி.

கணவனுக்குப் பசிக்குமேன்னு  அவசர  அவசரமா சிம்பிளா அரிசியும் பருப்புமா சேர்த்து ஒரு பொங்கல் சமைச்சாங்க மனைவி.  அதைக் கையில் எடுத்துக்கிட்டுக் கோவிலுக்கு ஓடோடி வர்றார். சாமிக்குப் படைச்சுட்டுச் சாப்பிடணும். நடுராத்ரி. கோவில் மூடியாச்சு.  வாசலில் வச்சுப் படைச்சுட்டு வீட்டுக்குப் போய் சாப்பிட்டுப் படுத்தார்.

காலையில் கோவிலுக்கு வந்த பட்டர், கோவிலுக்குள் பொங்கல் வாசனை தூக்கலா இருக்கேன்னு  நினைச்சுக்கிட்டுக் கருவறையைத் திறந்தால் மூலவர் வாயில் பொங்கல் ஒட்டிக்கிட்டு இருந்துருக்கு!  ஆஹா...  பெருமாளுக்குப் பிடிச்ச சமாச்சாரம் இதுதான்னு நினைச்சு அன்று முதல் கோவில்நடை  சாத்துமுன் பொங்கல் பிரசாதம் படைக்கறது வழக்கமா ஆகிருச்சு. இப்பவும்தான்!  இந்தப் பொங்கலுக்கே முனையதரயன் பொங்கல் என்ற பெயரும் நிலைச்சுருச்சு!

இந்தத் தலமே  ஸ்ரீவைகுண்டம். இங்கே  நாம் வந்தாலே ஸ்ரீவைகுண்டத்துலே நமக்கு ஓரிடம் அலாட் ஆகிரும் என்பதால் கோவிலில் கூட  பரமபத வாசல் கிடையாது!
மாசிமகம் இங்கே பெரிய திருவிழாவாக் கொண்டாடறாங்க. நம்ம கருடாழ்வார் அம்ருதக் கலசத்தோடு வானத்தில் பறந்து போனப்ப, ஒரு விநாடி, அம்ருதமே நம்ம கையில்னு கர்வப் பட்டுட்டாராம்.  பலன்? தொபுக்கடீர்னு கீழே கடலில் விழுந்தார்.  அப்புறம் பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டு இங்கே வந்தவருக்கு எல்லாம் சுகமே!  தனிச்சந்நிதி கூட இருக்கு!
அப்ப இருந்துதான் பெருமாளுக்கு வாஹனமா ஆனாராம்! இங்கிருந்து ஒரு 18 கிமீ தூரத்தில் இருக்கும் திருமலைராயன் பட்டினம் கடற்கரையில்தான் பெருமாள் காட்சி கொடுத்துருக்கார்.

விழுந்தப்பத் தெறிச்ச அம்ருதத்துளி விழுந்த நீர்நிலைதான் கும்மோணத்து மஹாமகக்குளம்!  இதோ இன்னும்   இந்த வருசத்து மாசிமகத்துக்கு பதினெட்டுநாள்தான் இருக்கு என்றபடியால்  கோவிலில் விழாவுக்கான ஏற்பாடுகள் நடக்குது. மூங்கில்கள் வந்து இறங்கி இருக்கு பந்தல்கள் போட!  தெப்பம், தேர் இப்படி அட்டகாசமா இருக்குமாம்!  இவ்ளோ பெரிய குளத்துலே தெப்பம் ஜொலிக்கறதை மனக்கண்ணால் பார்த்துக்கிட்டேன். ஹைய்யோ!!!!
பெருமாள் கோவில்களில் பொதுவா இருக்கும் ஆழ்வார்கள் சந்நிதியுடன், இங்கே விபீஷணாழ்வாருக்கு ஒரு தனிச் சந்நிதி!  இவருக்குத் தன் நடை அழகை நடந்து காமிச்சாராம் நம்ம பெருமாள்!  (கேட் வாக் ?)
பிரகாரத்தில் வலம் வரும்போது ஸ்ரீவேணுகோபாலனுக்கு(ம்) ஒரு சந்நிதி :-)
இப்படி பெரிய மதில்சுவராட்டம் ஒரு சந்நிதிக்குப் பின்புறம்!   எங்கேயும்  நான் இதுவரை கோவிலுக்குள் பார்த்திராத அதிசயம்!  ஒருவேளை அடுத்த பிரகாரத்தைப் பிரிக்கும் சுவரோ?
சுத்தமான பிரகாரங்கள்தான். ஆனால்  தரைப் பராமரிப்பு   போதாது :-(
நல்ல பெரிய கோவில்தான்!
நம்ம ஆண்டாளம்மாதான்.  தூமணி மாடம் ஆச்சு :-)

போனமுறை  நாகப்பட்டினம் சௌந்திரராஜனைத்  தரிசனம் செஞ்சுட்டு ஒரு பதினைஞ்சு கிமீ தூரம் போனபிறகுதான் சௌரிராஜனை மிஸ் பண்ணிட்ட விவரமே தெரிஞ்சது. அப்புறம் வரணுமுன்னு நினைச்சது  இப்படி நாலு வருசத்துக்குப் பின்னேதான் லபிச்சது, போங்கோ!

அப்போ அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் நம்ம பதிவுலகத்தோழி பதிவர் ரஞ்சனி நாராயணன்,  இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களேன்னு  சொன்னதும் ரொம்பவே ஃபீலாகிப்போச்சு. விட்டதைப் பிடிச்சுட்டேன் இப்போ:-)

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை
அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடுசாராவே

குறையொன்றுமில்லை, துயர்பாடு  சாராவே  என்ற திருப்தியுடன், இன்னொருக்கா நம்ம ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பிட்டோம்!

தொடரும்..........:-)


PIN குறிப்பு: என்னமோ  காலை முதல்   எடுத்துத் தள்ளிய க்ளிக்ஸை ஆல்பம் போடலாமேன்னு  தோணுது.  யானை வேற இருக்கே :-)    ஃபேஸ்புக்கில் போட்டு வைக்கிறேன்.  அங்கே போடுவது சுலபமா இருக்கு!   போட்டுட்டுச் சொல்றேன், ஓக்கே?16 comments:

said...

"திருக்கண்ணபுரம்" ன்னு 2 போஸ்ட் வந்திருச்சு - in today's date.
I think the top most post is incomplete or redundant.

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

இப்ப முதலில் தெரிவது வெறும் படங்கள் இருக்கும் ஆல்பம்தான். ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு இங்கே ஷேர் செஞ்சுருக்கேன்.

கவனமாக் கவனிச்சதுக்கு நன்றி :-)

said...

அருமை..

said...

""(ஆமாம்.... இப்படி கெட்ட செயலுக்கு எல்லாம் துணை போறது நல்லாவா இருக்கு? அதான் சாமியைத் தொட்டு அலங்கரிச்சுப் பூஜை செய்யும் ஆட்களுக்குத் துளிர்த்துக் கிடக்கு.... ஒரு பயபக்தி வேணாமோ? ப்ச் ... ஆரம்பிச்சு வச்சதே இந்த நீலமேகம்தானோ? ) "”
உண்மைதான். தப்புப் பண்றவங்களையெல்லாம் இப்படியே காப்பாத்திக்கிட்டிருந்தால் அவர்கள் மீண்டும் அதையேதானே செய்வார்கள்

said...

பெருமாளைக் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.

said...

பெரியவர்களுக்கு மரியாதை தரும் நிமித்தம் இன்னாரின் அம்மா என்று சொல்வது வழக்கம்

said...

தாயார் சந்நிதியில் ஒரு பெரிய தேன்கூடு இருக்கும்னு அது தேவர்கள்ன்னும் கல்யாணத்துக்காக கும்பலா வந்ததாவும் சொல்லுவாங்க .. நீங்க கல்யாண படம் வேற போட்டுருக்கீங்க !! பார்த்தீங்களா ? அது மட்டும் இல்லாம இந்த கோவில் விமானத்தையும் பார்க்க முடியாது என்றும் சொல்லுவாங்க . முனிவர்கள் தவம் இருக்குறதால அவங்கள தொல்லை படுத்த கூடாதுனு (மதில் சுவர் வச்சு மறைத்திருப்பார்களாம்) .. ஒரு பத்து வருஷம் முன்ன படிச்ச ஞாபகம் அவ்ளோவே .. இந்த கோவில்தான்னு நினைக்கிறேன் :)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி!

said...

வாங்க பிரகாசம்.

உடனடி தண்டனை கொடுக்கமாட்டானாம்! தெய்வம் நின்று கொல்லும் னு சொல்லி வச்சுட்டாங்க.... :-(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கும், தரிசனம் செஞ்சதுக்கும் நன்றி. மீண்டும் வருக !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

அட! அப்டீங்கறீங்க? பசங்க வால்த்தனம் பொறுக்கமுடியாமக் கூட அப்படிக் கூப்பிடுவதுண்டு. :-)

கண்ணனம்மா.... உங்க புள்ளை என்ன பண்ணி வச்சுருக்கான் பாருங்க..........

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

மதில்சுவர் விளக்கம் சரியாகத்தான் இருக்கணும்.

ஆனால் தேன் கூடும் சரி என்றாலும் அது இங்கே இல்லை. இன்னொரு பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரத்தில் அதுவும் ஒன்னு. இங்கே பாருங்களேன்.


http://thulasidhalam.blogspot.com/2015/08/72.html

said...

அழகான கோவில். சிறப்பான பகிர்வு.

தொடர்கிறேன்.

said...


ஆஹா! நம்ம சவரிப்பெருமாள்!
தலபுராணங்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. அதனால் ஒதுக்கி விடலாம்.
ரொம்பவும் அழகான பெருமாள். நீர் தளும்பும் அந்தத் திருக்குளம்!


//கண்ணபுரத்தென்கண்மணியேன்னு நம்ம குலசேகராழ்வார், ஸ்ரீராமனுக்குத் தாலாட்டுப் பாடி இருக்கார்!// கருமணியே என்று மாற்றி விடுங்கள், ப்ளீஸ். கருமணியே என்றுதான் பாடியிருக்கிறார், அதனால்.

//மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவியிறு வாய்த்தவனே !// மணிவயிறு என்று இருக்க வேண்டும்.

இந்தமுறையாவது மிஸ் பண்ணாமல் சேவித்துவிட்டு வந்தீர்களே, அதிர்ஷ்டம் தான். அடுத்தமுறை முனயதரையன் பொங்கலை மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

பலசமயங்களில் திருக்கண்ணபுரத்தின் உள்ளே செல்லும் பேருந்து கிடைக்காமல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இருபக்கமும் வயலும், மரங்களும் சூழ்ந்த சாலை வழியே நடந்து போயிருக்கிறோம்.

நானே போய்விட்டு வந்தது போல மனம் சிலிர்த்துப் போனேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

திருக்குளத்தின் அளவுக்கும் சுத்தத்துக்குமே ஒரு முறை போய் தரிசிக்கலாம்! ஆளரவம் இல்லாத கோவில். நிம்மதியான தரிசனம்!

வாய்ப்பு கிடைத்தால் விட்டுடாதீங்க!

said...

வாங்க ரஞ்சனி.

கோவில் போகும்போதும் அங்கே இருந்தபோதும் உங்கள் நினைவு வந்தது உண்மை!

தமிழ்த் தட்டச்சு, கொஞ்சநாளாக ரொம்பவே படுத்துகிறது. வ்துவிண்க்டோஸ் .... ஐயோ... இதுதான்.... விண்டோஸ் 10 போட்டபிறகு, கலப்பை சரியா ஓடலையேன்னு அதை எடுத்துட்டுப் புதுக் கலப்பையை இறக்கி சால் ஓட்டுகிறேன். மேலே பார்த்தீங்கல்லே... தட்டச்சும்போது எழுத்துகள் தானாவெ இந்தப்பக்கம் அந்தப்பக்கம் ஓடிப்போய் ஒட்டிக்குது. கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்த்தாலும்..... ப்ச்.

முனயதரையன் பொங்கல்.... ச்சான்ஸ் இல்லைன்னு தான் இருக்கேன். அவனுக்கு ஆசைன்னா கூப்பிட்டு ஊட்டட்டும். யார் வேணாமுன்னது ? :-)