Friday, August 05, 2016

திருச் சிறுபுலியூர் ரங்கநாதர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 69)

கொஞ்சும் புறாக்களுக்கு பைபை சொல்லி எட்டரைக்குக் கிளம்பிட்டோம். அதுக்குமுன்னே காலை உணவா இட்லி, வடை, வெண்பொங்கல், கேசரி, காஃபி ஆச்சு.
போறவழியில் ஒரு பக்கம் பனை, மறுபக்கம் தென்னைன்னு அழகான சாலை!
சிறுபுலியூர், மாயவரத்தில் இருந்து ஒரு 16 கிமீ தூரத்தில். அரைமணி நேரம் ஆச்சு, கோவில்வாசலில் இறங்கும்போது!  அஞ்சடுக்கு ராஜகோபுரம்!  ஹம்மா.....  என்ன ஒரு அழகு!  கோபுர சிற்பங்களை நாள் பூரா பார்த்து அனுபவிக்கலாம்!  திருத்தமான முக அழகுடன்  அருமையோ அருமை!

ராஜகோபுரத்தின் அழகைப் பார்த்து 'ஆ' ன்னு நிற்கும் நமது வலது கைப்பக்கம் இன்னொரு மூணு நிலை கோபுரத்துடன் இன்னொரு கோவில். உள்ளே மூடிக்கிடக்கு.  திரும்பி வரும்போது பார்க்கணும்.

ராஜகோபுரத்தாண்டை ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி. கீழே காலை வச்சால் ஒரே எண்ணெய்ப் பிசுக்குன்னு  காலைச் சேர்த்துவச்சு அடக்க ஒடுக்கமா உக்காந்துருக்கார். சனம் எண்ணெயைக் கொட்டி, பூசி மொழுகி விளக்கை ஏத்தியாச்சு. எரிஞ்சணைஞ்ச தீக்குச்சியைக்கூட அங்கேயே போட்டு வைக்கணுமுன்னு ப்ரார்த்தனை போல :-(
 கோவில்வாசலில் கிருபா சமுத்திரப்பெருமாள் என்றுதான் பெயர்!  உற்சவர் பெயரில்தான் கோவில்!   கோபுரநடையிலேயே  1973இல் கோவிலுக்குக் குடமுழுக்கான விவரங்கள் பளிங்குக் கல்வெட்டில்.  அதுக்குப்பின்?  ஊஹூம்....  ஆச்சு 43 வருசம் :-(   அடுத்த கல்வெட்டில் திருமங்கையின் பாசுரங்கள்! பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  இது  108   திவ்ய தேசக்கோவில்களில் ஒன்னு! அதுக்காகத்தான் நாமும் வந்துருக்கோம், தரிசனம் செஞ்சுக்க :-)

கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,
பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
அருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.

கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம். கொடிமரம்,பலிபீடம்,  பெரிய திருவடி கண்ணெதிரே வெளிப்ரகாரத்தில்.  கொடிமரத்துக்கு ரெண்டு பக்கமும் சின்ன மண்டபங்கள். இடது பக்கம் ஆண்டாள் சந்நிதி. கோவில் மணியும் இங்கேதான் மண்டபத்தின் மேலே!


பாவமா ஆண்டாள் தனியா ஒற்றையா நிக்கறாள். அச்சச்சோ....    வெளியவே துரத்திட்டாங்களா என்ன?   ப்ச்.....  தூமணி மாடம் ஆச்சு.
வலதுபக்கம் திருவாய்மொழி மண்டபம்.  ரொம்ப பழைய காலத்து அமைப்பு!
இன்னொரு மூணு நிலைக்கோபுரத்து வழியா அடுத்த பிரகாரம் போறோம். பெரிய கோவிலாகத்தான் இருக்கு.  கருவறை கோஷ்டத்தில்   விஷ்ணுதுர்கை. விநாயகர்.





இந்தாண்டை  விஷ்வக்ஸேனர்.
சுத்திவர ஓடும் மண்டபம்  அழகா இருக்கு!  விஷ்ணு பாதம் இங்கே விசேஷமாம்!


கண்ணாடி பதிச்சக் கதவுகளுடன் பள்ளியறை மண்டபம்.  உயரத்தில்  தசாவதார ஓவியங்கள்.  சமீபத்துலே வரைஞ்சது போல. பளிச்ன்னு இருக்கு.  குடமுழுக்குக்குத் தயாராகறாங்களோ!



மூலவர் கிடந்த கோலம்.  சின்ன உருவத்தில் இருக்கார்.  பால சயனம் என்று சொன்னார் பட்டர். சலசயனக்கோலம்.  பெயர் அருள்மாகடல் பெருமாள்.  மூலவரின் காலாண்டை  புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர். இந்தப் பக்கம் பதஞ்சலி.

இந்தப் புலிக்கால் முனிவர், சிதம்பரத்தில் புலிக்கால் வேணுமுன்னு தவம் செஞ்சவர். அப்படியே ஆச்சு. பொழுது புலரா இருட்டில்  மரத்தில் ஏறி, மலரப்போகும் பூக்களைப் பறிச்சு ஸ்வாமிக்கு சார்த்தணுமுன்னு  ஆசைப்பட்டு, மரமேறரதுக்காகப் புலிக்கால் கேட்டவர்.

சிதம்பரத்தில் இருந்த இவர்,  முதிய வயதில் , ஈசனிடம் தனக்கு மோக்ஷம்  கிடைக்க அருள் செய்யணுமுன்னு விண்ணப்பிக்கிறார்.  அதெல்லாம் பெருமாளின் ஏரியா. நீர்  ஸ்ரீரங்கம் போய் அங்கே தவம் செய்யும் என்று அனுப்பறார்.  அட மோக்ஷமா? எனக்கும் வேணுமேன்னு பதஞ்சலியும் அவருடன் கிளம்பிப்போறார்.  திக்கு திசை தெரியாமல் வழி தவறி இங்கே வந்துடறாங்க.  இனிமேலும் நடந்து போகத் தெம்பில்லைன்னு இங்கேயே தவம் செய்ய உக்கார்ந்தாச்சு.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாள் மனம் இரங்கி,  இங்கே வந்து தரிசனம் தர்றார்.  பெரிய உருவமாக் கால்நீட்டிப் படுத்தும் கூட, முதியோர்களுக்கு கண்பிரச்சனை இருந்தபடியால்  மசமசன்னு இருந்துருக்கு.  இங்குட்டும் அங்குட்டுமாச் சரியாப் பார்க்கமுடியலையேன்னு  சொன்னதும், இப்புடு ச்சூடுன்னு  சின்ன உருவமா காட்சி கொடுத்தாராம். அதான் பாலகனின் பால சயனம்.


புலிக்கு தரிசனம் கொடுத்த இடம் புலியூர்.  முனிவர் புலி சைஸில் இருந்துருப்பாரா  என்ன?  அதான் சிறுபுலியூர். இப்ப மரியாதை நிமித்தம் திரு சிறுபுலியூர்!  ஓக்கேவா?
உற்சவர் கிருபாசமுத்திரர்!   உற்சவர் தாயார் தயா நாயகி!

தாயார்  திரு மா மகள் நாச்சியார் தனிச் சந்நிதியில்.




பிரகாரங்கள் ஓரளவு சுத்தமாவே இருக்கு.  தலவிருட்சம் இங்கே வில்வமரம்!   தோட்டத்தில் நறுங்கிப்போய்  நிக்கும் வாழை, நோஞ்சானாய்  குலை தள்ளி இருக்கு. நந்தவனப்பொறுப்பு ஏத்துக்கிட்டது  நம்ம கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்!
வலம் வந்துக்கிட்டு இருக்கோம். இடதுபுறம் வாகனமண்டபமும், கோவில் அலுவலகமும் மூடிக்கிடந்தது.  வலப்பக்கம் திரும்பினால்......
உண்மையான கிருபாசமுத்திரம்தான்னு  எனக்குக் கருணை காமிச்சுட்டான் கருணைக் கடலான்!



வைகுண்ட ஏகாதசிக்குத் திறக்கும் சொர்க்கவாசலில் ஒரு நாளாவது போகவேணுமுன்னு எனக்கு ஒரு ஆசை. கூட்டத்துக்குப் பயந்து  அன்றைக்குக் கோவிலுக்கே போகமுடியாமத்தான் போய்க்கிட்டு இருக்கு இதுவரை.

ஆனால்.....  இங்கே சொர்க்கவாசல் திறந்துருந்தது. எனக்கே எனக்கான்னு உள்ளே நுழைஞ்சேன். பெருமாள் அரூபமா அங்கேதான் இருந்தார்.  உள்ளே வெளியே,  உள்ளே வெளியேன்னு சிலமுறை சொர்க்கத்துக்குள் நுழைஞ்சு புறப்பட்டது......  ஹா.... மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு.  ஸோ சொர்க்கம் ஒன்வே இல்லையாக்கும்:-)

இந்தக் கோவிலுக்கு மேலே கருடன்  பறப்பதில்லைன்னு சொல்றாங்க.  ஏன் என்பதற்கு ஒரு கதையும் இருக்கு!

ஒரு சமயம் கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் தம்மில் யாருக்குப் பெருமாள் மேலே பக்தி அதிகம் என்று ஒரு சந்தேகம் வந்துருக்கு.  ரெண்டுபேரும் எதிராளிக்கு பக்தி அதிகமுன்னு  சம்மதிச்சு இருப்பாங்களோ?  ஊஹூம்....   சண்டை மூண்டுபோச்சு. கருடனிடமிருந்து தன்னைக் காப்பாத்திக்கணுமேன்னு பெருமாள் காலடியில் சரண் அடைஞ்சது  ஆதிசேஷன்.  பயப்படாதே.... இங்கேயே சுருண்டுக்கோன்னுட்டார் பெருமாள்!  சுருண்டு படுத்த  சேஷன், படுக்கையானது  அப்போதிருந்துதான்!


'பார்த்தியா.....  இந்தப் பாம்பு கடைசியில் எங்கேபோய்  வாகாக் கிடந்துருச்சு' ன்னு  கருடனுக்குக் கோபம் அதிகம் ஆச்சு. இனி  இந்த இடத்துக்கு மேல் பறக்கப் போறதில்லைன்னு சபதம் போட்டுட்டுப் போயிருச்சு!

கிடந்து சேவை சாதிக்கும் பெருமாள், தென் திசை நோக்கிக் கிடப்பது  ரெண்டே ரெண்டு தலங்களில் தானாம். அதுலே ஒன்னு திருவரங்கம்!   அப்ப இன்னொன்னு...  இந்த சிறுபுலியூரில்தான்!

திருமங்கை ஆழ்வார் இங்கே வந்தப்ப, பெரும் ஆளைத் தரிசிக்கப்போறோமுன்னு ஆவலாக வந்தவர்,  சின்னப்பாலகனா  இருந்த பெரிய ஆளைக் கண்டு ஏமாந்துட்டாராம். 'திருக்கண்ணபுரத்துக்கு வந்து  பாரும்'  என்றாராம் பெருமாள் :-)
நல்லதரிசனம் ஆச்சுன்னு  கோவிலை விட்டு வெளியில் வந்தால் ராஜகோபுரத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கோயில் கதவு திறந்துருந்தது. அங்கே வாசலில்  நாலைஞ்சு பெண்கள் .  அது என்ன இடமுன்னு விசாரிச்சேன். அன்னதானக் கூடமாம்!  உள்ளே போய் எட்டிப் பார்த்திருக்கலாமோ.......

அப்ப  சரின்னுட்டு, இதோ அடுத்த கோவிலுக்குக் கிளம்பினோம்.

தொடரும்............ :-)





15 comments:

said...

// எரிஞ்சணைஞ்ச தீக்குச்சியைக்கூட அங்கேயே போட்டு வைக்கணுமுன்னு ப்ரார்த்தனை போல//
அந்த குப்பைய வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயி என்ன பண்ண ன்னு ஜனங்க நெனச்சிருப்பாங்க

said...

ஆடிப்பூர நாளில் ஆண்டாள் தரிசனம் ஆச்சு உங்கள் பதிவின் மூலம்.
இந்த கோவிலுக்கு இரண்டு மூன்று தரம் போய் இருக்கிறேன், உறவினர்களை அழைத்துக் கொண்டு.

ஒரு மாதம் ஆகிவிட்டது நான் இணையம் பக்கம் வந்து பயண தொடரை தொடர்கிறேன்.

said...

கோயில் நல்லாத் துப்புரவா இருக்கு.

அனுமாரை புஜபல அதிதீரவீரப் பராக்கிரம பாகுவாக் காட்டாம, கனிவானதொரு குரங்கின் வடிவத்தில் செதுக்கியிருப்பது மிக அழகு.

விளக்கு பொருத்திய பிறகு குச்சியை அங்கயே போட்டுட்டுப் போற நம்ம மக்களோட பக்தி மனநிலையைப் புரிஞ்சிக்க முடியல.

said...

சிறுபுலியூர் சென்றதில்லை. விரைவில் செல்வேன். எனது பயணத்திற்கு உங்களது பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

அழுக்கை விட்டுட்டுப்போனால்.... உங்க பாபம் என்றும் தொலையாதுன்னு போர்டு வைக்கலாமான்னு யோசனை :-(

said...

வாங்க கோமதி அரசு.

நீங்கல்லாம் பிறந்த வீட்டு சீதனம் போல! லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்துருவீங்கன்னு தெரியும் :-)

வேற ஒரு இடத்தில் இணையத் தொடர்பு பிரச்சனைன்னு நீங்க சொல்லி இருந்ததைப் பார்த்து வச்சுக்கிட்டேன்.

said...

வாங்க ஜிரா.

என்ன சொன்னால் சனம் திருந்துமுன்னு இன்னும் தெரியலையேப்பா........ :-(

செல்லம்போல் உக்கார்ந்துருக்கு அந்த ஆஞ்சி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்க போய் வந்து அந்த அன்னதானக்கூடத்துக்குள் என்ன சந்நிதின்னு சொல்லுங்க.

ஆதிசேஷனோன்னு ஒரு சம்ஸயம் எனக்கு.

said...

கோவிலும் எண்ணைப் பிசுக்கும் இணைபிரியாதவை - குறிப்பாக நமது ஊர் கோவில்கள்! :(

வழமை போல படங்களும் தகவல்களும் சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

பெருமானும் பாலகனாக...

ஆஞ்சநேயரும் அடக்கமாக....அருமை...

கிருபா சமுத்திரப்பெருமாள் ...உற்சவர் தாயார் தயா நாயகி!

அருள்மாகடல் பெருமாள்...தாயார் திருமாமகள் நாச்சியார்...

அழகு...

said...

சிறுப்புலியூர் பெருமாளை தரிசனம் செஞ்சாச்சு...தொடர்கிறேன் டீச்சர்..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகை, மகிழ்ச்சி !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சின்னப்புலிதான். பயமில்லாமல் தரிசிக்கலாம்:-)

தொடர்வருகைக்கு நன்றி.

said...

nandri anna