Friday, August 26, 2016

திருநாகை சௌந்தர்யராஜன் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 78)

திருக்கண்ணபுரத்தில் இருந்து சுமார் முப்பது கிமீ. 33 நிமிட்லே வந்துருக்கோம். சாலை அருமையா இருந்தது! ஊருக்குள் வந்தாட்டு கொஞ்சம் நெரிசலான போக்குவரத்துதான். இதோ கோவில் வாசலில் வந்து இறங்கியாச்சு.  போனமுறை வந்து போனது மனசுக்குள் வந்து நின்னது.
இடுக்கமா ரெண்டு  கட்டடங்களுக்கிடையில் ஒட்டிப்பிடிச்சுருக்கும் கோபுரவாசல். சின்னதா  ஒரு முன்வாசல்.  கடந்து உள்ளே போறோம். நீளமாப் போகும்  மண்டபம். தூண்கள் எல்லாம் ப்ளெய்னா இருக்கு. சிற்பங்கள் ஒன்னும் இல்லை :-(  இங்கேயே நமக்கு வலதுபக்கம் வாகனமண்டமும், இடதுபக்கம்  கோவில் அலுவலகமுமா இருக்கு. கண்ணெதிரே  பலிபீடமும் கொடிமரமும், பெரிய திருவடியுமா.....
 பெருமாளைப் பார்த்தபடி இருக்கும்  கருடன் சந்நிதியின் உள்ளே பளிச் விளக்கு!  வெளியே  பக்தர்கள் விளக்கேத்தி வைக்க ஒரு அமைப்பு.  சந்நிதியில் போய் விளக்குகளை வச்சு அங்கெல்லாம் கரி பூசி வைக்காமல் இருக்க ஒரு  கம்பிவலைத் தடுப்பு!  ரொம்ப நல்லா இருக்கு.
நேரா உள்ளே போய்   பெருமாளை ஸேவிச்சுக்கிடோம்.  மூலவர் பெயர்  நீலமேகப்பெருமாள். நின்ற கோலம். பெரிய உருவம். இடுப்பிலே தகடு தகடா பெரிய  ஒட்டியாணம்.  சுமோ மல்யுத்தக்காரர்கள் போட்டுருப்பதைப்போல்  பட்டை பட்டையா இருக்கு!   ஒவ்வொரு தகட்டிலும் ஒரு அவதாரமுன்னு தசாவதாரத்தைத் தரிச்சுண்டு இருக்கார்!   பளபளன்னு  தங்கமா ஜொலிச்சது போன முறை. இப்ப....   இருக்கு. ஆனால் அவ்வளவா ஜொலிப்பில்லை :-(  இந்த தசாவதார ஒட்டியாணம் இங்கே  மட்டும்தானாக்கும்!
உற்சவர் சௌந்தர்யராஜனைப் பார்த்த கண்கள்  பார்த்தபடியே நின்னுபோயிரும்!  ஹம்மா....   பெயருக்கேத்தாப்போல் என்ன அழகு!   திருமங்கை ஆழ்வார் இங்கே தரிசனத்துக்கு வந்தவர்....   மூச்சடைச்சு  நின்று பாட்டாப்பாடி இருக்கார். அவருடைய வழக்கப்படி   பாடிய   பத்துப்பாடல்களிலும்   'அச்சோ ஒருவர் அழகியவா' ன்னு   அழகை எல்லாம் வர்ணிச்சு வர்ணிச்சுக் குழைஞ்சுபோய் நின்னவர்,  நாகை அழகியார்ன்னு  புதுசாப் பெயரும் வச்சுட்டார்!

இப்படி ஆரம்பிச்சவர்.............

பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில்நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர்தோழீ,
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா

இப்படி முடிக்கிறார்!

 எண்டிசை யுமெறி நீர்க்க டலும் ஏழுல குமுட னேவிழுங்கி
மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்
அண்டத் தமரர் பணிய நின்றார் அச்சோவொருவரழகியவா.

போகட்டும்.... இவ்ளோ அழகோடு இங்கே வந்து நிற்பதன் காரணம் என்னன்னு பார்க்கலாம்!

நம்ம துருவன் இருக்கானே.... (அதான் துருவநக்ஷத்திரமா இப்போ வானில் ஜொலிக்கிறவன்)  சித்தியின் கொடுஞ்சொல் தாங்காம இங்கே வந்துதான் பெருமாளை மனசில் இருத்தி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு அருள்புரிய  வந்த பெருமாள், அவருடைய வழக்கபடி 'என்ன வரம்  வேண்டுமோ கேள்'னு சொல்ல, முனிசிரேஷ்டர்கள் வழக்கப்படி  'இப்படியே உம் தெய்வீக அழகோடு இங்கே இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேணும்' என்று  கேட்டதற்கு இணங்க இங்கேயே தங்கிவிட்டார் அழகர்!

நாம் இப்போ நின்னு ஸேவிக்கும்  மண்டபத்துக்கு  ஜக்கலு நாயக்கர் மண்டபமுன்னு பெயர்!  இவர் அந்தக் காலத்துலே டச்சுக்காரகள் இந்தப் பகுதிகளைப் பிடிச்சு வச்சுருந்த சமயம் அவர்கள் தரப்பில் வேலை செய்த அதிகாரி.  இங்கே கடற்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்  கட்டன்னு கொடுத்த பணத்தை வச்சுக் கோவிலை அழகாப் பெருசா கட்டியவர்!   தூரத்துலே வரும் கப்பல்களுக்கு விளக்குதானே தெரியணுமுன்னு இந்த அழகான ஏழுநிலை ராஜகோபுரத்துக்கு உச்சியில் ஒரு விளக்கும் வச்சுட்டாராம்!   அந்தக் காலத்துலே !!!!

ஆதியில் இருந்த கோவிலைக் கட்டியவர் சாலிசுக சோழன். இவர் ஒரு சமயம் ஒரு நாககன்னிகையைப் பார்த்துக் காதல் வசப்பட்டார். நாகம் என்னவோ சரசரன்னு ஒரு பொந்துக்குள்ளே போயிருச்சு.  பெருமாளை மனம் உருகி வேண்ட,  நாகராஜனைக் கூப்புட்டனுப்பிய பெருமாள், உம் பெண்ணை  இந்த அரசருக்குக் கல்யாணம் பண்ணிவைன்னு  சொன்னதும், அப்படியே ஆச்சு.  அந்த நன்றிக் கடனாத்தான் கோவிலை எழுப்பினாராம் சாலிசுக சோழர்!

 இந்த ரெண்டு சிங்கங்களும் ஏன் இப்படி நட்டநடுவிலே உக்கார்ந்து வெயில்காயுது?
அதெப்படி....  நாகராஜனைக் கூப்பிட்டால் ஓடி வந்துருவானான்னு கேட்டால்.....
ஆதிசேஷன் என்னும் நாகராஜன்  ஒருசமயம் இங்கே வந்து  ஒரு  திருக்குளத்தைத் தன் வாலால் தோண்டி, அதன் கரையில் உக்கார்ந்து  பெருமாளைக்குறிச்சு தவம் செய்யறான்.  சாரபுஷ்கரணின்னு  அந்தக் குளத்துக்குப் பெயர். தவத்தை மெச்சிய பெருமாள் காட்சி கொடுத்ததும், அவருடைய  அழகைக் கண்டு மெய்மறந்த சேஷன், 'எப்பவும்  தேவரீர் உங்ககூடவே இருக்கணும் , என்னை  படுக்கையாக ஆக்கிக்    கொள்ளுங்கோ'ன்னு வேண்டியதும், அன்றுமுதல்  ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கை ஆனார்!  நாகம் தவம் செய்த இடமுன்னுதான் ஊருக்கே நாகப்பட்டினம் என்ற பெயர் வந்ததாம்!



இப்படி இருக்க ஒருகாலத்தில்  நம்ம பெரியதிருவடிக்குப் பசி. பாதாளலோகத்தில் இருக்கும் நாகராஜன் வாசுகியின் புத்திரன்  கமுகனைச் சாப்பிடலாமுன்னு  ஒரு யோசனை.  சமாச்சாரம் தெரிஞ்சுபோன கமுகனுக்கு ஒரே பயம்! எப்படி இந்த கண்டத்தில் இருத்து தப்பிக்கலாமுன்னு  யோசிச்சவன்,  இங்கே வந்து    சாரபுஷ்கரணியின் கரையில் உக்கார்ந்து  ஆதிசேஷனைக்  குறிச்சு தவம் செய்யறான்.

அது ஏன் இருக்கும் தெய்வத்தையெல்லாம் விட்டுட்டுப் ஆதிசேஷன்? எல்லாம் இனம் இனத்தைச் சேரும் என்ற காரணம்தான்.  மேலும் பெரிய இடத்துலே இருக்கார். ஒரு வார்த்தை Bபாஸ் காதுலே போடமாட்டாரா என்ன?

இப்போ போன  திருக்கண்ணபுரம் பதிவில்,   அம்ருதம் சுமந்து போன ஆணவத்தால் கருடன் தொபுக்கடீர்னு  கடலில் விழுந்து, பிறகு  நாராயணனை வணங்கி அவருக்கு வாஹனமா இருக்கும் பேறு அடைஞ்சது வாசிச்சீங்கதானே?  அப்ப கருடனுக்கு எஜமானர் பெருமாள், இல்லையோ?  அவர் பேச்சுக்கு  அடங்கி நடப்பார், இல்லையோ? அவரே இவனைத் தின்னாதேன்னா  அப்புறம் தின்னத்தான் துணிவு வருமோ?

தவத்தை மெச்சிய பெருமாள் , அதே கருடவாஹனத்தில் வந்து  கமுகனுக்குக் காட்சி கொடுத்துக் கமுகனை அப்படியே தூக்கி  பெரிய திருவடியின் கையில் ஒப்படைச்சு இவனைக் காப்பாத்தவேண்டியது உன் பொறுப்புன்னுட்டார்.  திருடன்கையில் பொட்டிச் சாவியைக் கொடுத்தாப்ல :-)
அதான் போல இருக்கு இடுப்பு பெல்ட் கூட  பாம்புதான் கருடருக்கு! எல்லா நகைநட்டும் அரவங்களே   சின்னதும் பெருசுமா  உடம்பு சைஸுக்கு ஏத்தபடி!


இந்தக் கோவிலில்  தசாவதார ஒட்டியாணம் மட்டுமே ஸ்பெஷல் இல்லையாக்கும். இன்னும்  சிலதும் இருக்கு.  அதுலே ஒன்னு  இங்கே தாயார்களுக்கும் ப்ரம்மோத்ஸவம் தனியாக நடக்குது. நம்ம ஆண்டாளுக்கும் கூட என்பதுதான் எனக்கு ஆச்சரியமான விஷயம்.  இதனால்  மூணு கொடிமரம்!  பெருமாள், தாயார்  சௌந்தர்யவல்லி,  பூமி நாச்சியார் ஆண்டாளம்மா!  ஹைய்யோ!


இன்னொன்னு என்னன்னா....  கருட சேவை நடக்குது பாருங்கோ...  அப்போ வாஹனமா  பெரியதிருவடி பெருமாளை ஏந்திவருவாரே   அதே போல தாயாருக்கும் கருடியில் புறப்பாடு உண்டு.  கருடன்  அண்ட் கருடி  :-)
படத்தை நம்ம கைலாஷியின் பதிவிலிருந்து சுட்டுருக்கேன். அவர் கோபம் கொள்ளாதிருக்கட்டும், பெருமாளே!  சுட்டுக்கோன்னு அனுமதி கொடுத்துட்டார். நன்றிகள்.
கருட இனமா இருந்தாலும் பொம்நாட்டி இப்படித்தான் இருக்கணுமுன்னு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு  பார்த்தீங்களா? கருடன் சிறகை விரிச்சு வச்சுக்கலாம்.  கருடி? அடக்க ஒடுக்கமாய்  சிறகைக் கொஞ்சம் நிலம் நோக்கித்தான் வச்சுக்கணும்.  அதுதான்   அலவ்டு!


இந்தக் கோவிலில் நின்றான், இருந்தான் கிடந்தான் என்று மூணு போஸிலும் நமக்கு ஸேவை சாதிக்கிறார் நம்ம பெருமாள்.   மூலவர்   நீலமேகம் நிக்கறார். வைகுண்டநாதர் சந்நிதியில் இருந்து,  ரங்கநாதர் சந்நிதியில் கிடக்கின்றார்.
வரைஞ்சவர்,  பெயர் போட்டு வச்சுருக்கார் பாருங்கோ !
அதென்னவோ  மற்ற சந்நிதிகள் எல்லாம் மூடியே கிடக்கு. நாமும் கம்பிக்கு வெளியில் இருந்தே ஒரு கும்பிடு!  ரங்கநாதர் சந்நிக்குள்ளே  ஒரு நரசிம்மர் சிலை இருக்காம் எட்டுக் கைகளோடு!  அவரைப் பார்க்க முடியலையேன்னு  கொஞ்சம் கவலை  இருக்கு.  பார்க்கலாம் எப்பவாவது வாய்க்குமான்னு....
போனமுறை பார்த்ததுக்கு இப்போ கோவில் கொஞ்சம் மாறிப்போய்த்தான் இருக்கு!  அப்போ பார்த்த ரங்கராஜன் பட்டர்ஸ்வாமிகளைக் காணோம். வேறொருவர் இருந்தார்.  அவரிடம்  விசாரிச்சு இருக்கலாமேன்னு இப்பத் தோணுது!




எப்பவும்போல் சுத்தமாத்தான் இருக்கு  கோவில் என்பது மகிழ்ச்சி!
தொடரும்.........:-)


24 comments:

said...

// கருடன் சிறகை விரிச்சு வச்சுக்கலாம். கருடி? அடக்க ஒடுக்கமாய் சிறகைக் கொஞ்சம் நிலம் நோக்கித்தான் வச்சுக்கணும். அதுதான் அலவ்டு! //

Correct but நமக்கெல்லா வயசாயிடுச்சி. அதனாலே this is OK. எப்படியு ஒங்க போஸ்ட்ட இளம் பெண்கள் யாரும் படிக்கமாட்டாங்க. அதனால பொளச்சீங்க. இல்லேன்னா ஏன் எதற்கு woman freeedom அப்டின்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. காப்பாத்துடா (ஆண்களை) பெருமாளே.

said...

// எப்பவும்போல் சுத்தமாத்தான் இருக்கு கோவில் //
Felt happy. Thank you நாகை வாழ் நல்மக்களே.

said...

இது பழசில்லையா?
விழுந்து பிரண்டு விளையாடி, மாங்காய் அடிச்சி தின்ன, வைகுண்ட ஏகாதேசி நாடகத்தில் நடித்த இடம் இந்த கோவில்.

said...

வாங்க விஸ்வநாத்.

தேவலோகத்தில் கூட பெண்ணடிமைத்தனம் இருந்துருக்குன்னு இப்போத் தெரிஞ்சுபோச்சு ! போய்த்தான் சரி செய்யணும் போல :-)

said...

வாங்க குமார்.

ஆ.... அது நாலுவருசப் பழசு. இது புத்தம்புதுசு :-)

அதுலே கோவில்கதை சொல்லாம வேறொரு கதை சொல்லும்படியா அமைஞ்சது. இதுலே அக்மார்க் ஒரிஜினல் கோவில் கதை இருக்கு :-)


பதிவு எழுதும்போது உங்க நினைவு வந்தது உண்மை !

said...

துளசி டீச்சர்... கோயில் பொய்கையைக் காண விட்டுப்போச்சா? சில வருடங்களுக்கு முன் நாங்கள் சென்றிருந்தபோது பாசி படிஞ்சு ரொம்பப் பச்சையாக இருந்தது. அதை சுலபமாக சரி பண்ண ஏதேனும் வழி இருக்கான்னு தெரியலை

said...

வாங்க நெல்லைத் தமிழன்.


பொய்கையை எட்டிப் பார்த்தேன். என்னவோ க்ளிக்கலை. போனமுறை பார்த்தப்பவும் நல்லாத்தானே இருந்துச்சு.

இதோ போன பதிவின் சுட்டி.

http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/blog-post_11.html

said...

நாகப்பட்டினத்துல காத்தான் சத்திரம் போனீங்களா டீச்சர்? அதான்.. “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்”னு காளமேகப் புலவர் பாடிய சத்திரம் இன்னும் இருக்குதா? இன்னுமா இருக்கப் போகுது!!!!

கோயில் நல்லா துப்புரவா இருக்கு. ஓவியங்களும் அருமை.

கருடி இறக்கை கீழ எறங்கி தொங்கலா இருக்கு. ஆணாதிக்கம்.

நீங்க ஏன் Bபாஸ்னு எழுதுறீங்கன்னு தெரியும். ஆனாலும் தவிர்க்கும் படி வேண்டிக் கேட்டுக்கிறேன். _/|\_

said...

நான் பார்க்காத கோயில். பதிவு மூலமாக அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

said...

செம அழகன் !!! நிறைய புதிய தகவல்கள் !! போன முறை போல கண்ணு கலங்கவில்லை போல இருக்கே :)

said...

எத்தனையோ இடங்களுக்குப் போனதில்லை. இதுவும் ஒன்று

said...

அருமை.

ஒட்டியாணத்தைத் தாண்டி மனசு போகலை. தசாவதார ஒட்டியாணம்ன்னா அடடா!!

said...

சென்ற வருடம்தான் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அதனால்தான் கோவில் மிளிர்கின்றது. அடியோங்கள் சென்ற போது துவாரபாலகர்களும் தங்க கவசத்தில் ஜொலித்தனர்.

அமர்ந்த கோல கருடனைப் இத்தலத்தில் விசேஷம்.

said...

சுத்தமாக இருக்கும் கோவில்... மகிழ்ச்சி.

தொடர்கிறேன் டீச்சர்.

said...

வாங்க கைலாஷி.

ஆஹா.... தங்கக்கவசம் அணிந்த ஜயவிஜயர்கள்!!!!

பெரிய திருவடியை நாங்களும் ஸேவித்தோம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சுத்தம் பார்த்தால் மனசுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கு!

ஆனால் பல இடங்களில் நம்ம மகிழ்ச்சியைச் சாகவிட்டுடறாங்களே :-(

said...

எங்க ஊர் கோயில் பற்றி எனக்கு தெரியாதவற்றையெல்லாம் எழுதி இருக்கிறீர்கள், சிறப்பு

said...

வாங்க ஜிரா.

ரெண்டுமுறை நாகப்பட்டினம் போயும்கூட ஊருக்குள் சரியாச் சுத்திப் பார்க்கலை. எல்லாம் ஓடு ஓடுன்னு ஓட்டம்தான். முதலில் இந்த 108 முடியட்டும். அப்புறமா வச்சுக்கலாம் கச்சேரியை :-)

உச்சரிப்பு முக்கியம் என்பதால் சில இடங்களில் 'அப்படி' சொல்ல வேண்டி இருக்கு. என்ன செய்ய? தமிழில் ப,க,ச எல்லாம் ஒன்னொன்னுதானே.........

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாய்ப்பு கிடைக்கும்போது கட்டாயம் போய் வாங்க. மூலவர் அழகோ அழகு!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

இப்பெல்லாம் பூஞ்சை மனசு, மெல்ல மெல்லக் கல்லாகி வருது போல :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நானும் போகாத இடங்கள் கணக்கில் அடங்கா! கிடைச்ச வாய்ப்பைக் கோட்டைவிடாமல் இருக்க முயற்சி செய்கிறேன்.

வாழ்நாள் போதுமான்னு தெரியலை!

said...

வாங்க சாந்தி.

ஒட்டியாணத்தின் அழகை உங்க அண்ணனிடம் காட்டியப்ப... அவர் மனசெல்லாம் திக் திக் திக்! எங்கே கேட்டுறப்போறாளோன்னுதான் :-)

said...

வாங்க கோவியாரே!

அப்பப்பப் போய்ப் பார்த்தால்தானே கதைகள் தெரியும்!

உள்ளூர் சமாச்சாரம் என்றால் அப்புறம் பார்த்துக்கலாம் என்ற ஒரு எண்ணமும் வந்துருதே...

said...

// உச்சரிப்பு முக்கியம் என்பதால் சில இடங்களில் 'அப்படி' சொல்ல வேண்டி இருக்கு. என்ன செய்ய? தமிழில் ப,க,ச எல்லாம் ஒன்னொன்னுதானே......... //

அது தமிழின் குறை கிடையாது என்பதால் தவிர்க்கச் சொன்னேன். நீங்கள் எழுதும் முறை தமிழுக்கு ஏதோ ஊனம் இருப்பது போலப் பட்டதால் சொன்னேன். விவாதத்துக்காகவோ சண்டையிடுவதுக்காகவோ அல்ல. முடிவு உங்களுடையது. :)