Friday, January 18, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 8

தேவாவும் தொரைசாமியும் நெருங்கிய நண்பர்கள்தான். ஆனால் எப்படி இந்தமாதிரி ஒரு குண வித்தியாசம்?
தொரைசாமி மனித மனங்களை நன்றாகப் படித்தவர். தன்னருகே இருக்கும் எவருக்கும் மனக்குமைச்சல் வராமல் பார்த்துக் கொள்வார். வெள்ளம் வருமுன்னே அணைபோடும் கவனம். உதவி என்று வந்துவிட்டால் தட்டாமல் செய்து கொடுப்பார். குடும்பத்தினர் மீது அப்படி ஒரு ஒட்டுதல். மகன் வயிற்றுப் பேரன்களுக்கு முடி இறக்கத்தான் திருப்பதி போய் வந்தார். பெருமாளின் மீது தீராத ஒரு பக்தி. கல்யாணம், பெருமாள் கோயிலில் என்றதும் முதல் ஆளாக சீக்கிரமாகவே வந்துவிட்டார். அது மட்டுமில்லை. கல்யாணத்துக்கு முன்னின்று உதவ வேணும் என்று தேவாவும் கேட்டுக் கொண்டாரே.


ஆற அமர இருந்து இறைவனைத் தொழுது முடித்துவிட்டுக் கொஞ்ச நேரம் காலாற நடக்கும்போது கண்ணில் பட்ட ஒரு ஓட்டலில் காஃபி ஒன்றைக் குடித்துவிட்டு மறுபடியும் கோவிலில் நுழையும்போது, சொல்லி வைத்தாற் போல் பெண்வீட்டுக்காரர்களும், பிள்ளைவீட்டுக்காரர்களுமாக வந்து சேர்ந்தனர்.

இரு கூட்டமும் ஒன்றை யொன்று பார்த்த பார்வையே ஒரு மாதிரி இருந்தது.
இன்னும் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து சேரவில்லை. அவர்களுக்குத் தனியாக வாடகைக்கார் ஏற்பாடு செய்துள்ளதாக முன்சாமி தெரிவித்தார்.

குடும்ப சம்பிரதாயங்கள் வெவ்வெறாக இருந்தபடியால் ஒரு சிறு குழப்பம். பெண் வீட்டுக்காரர்கள் தேவாவிடம் கேட்டதற்கு, எல்லாம் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டாராம். தம்பி தங்கைகளைக் கேட்டால் எந்த பூதம் கிளம்புமோ என்று உள்ளூர ஒரு பயம். சம்பந்தியே பச்சைக்கொடி காட்டியாச்சு. இன்னும் என்ன?

கனகாவின் வீட்டிலும் எல்லாம் தொத்தா சொல்படியே. கல்யாண விருந்து வீட்டிலேயே ஏற்பாடு ஆனது. சமையலுக்கு என்று ஒரு ஆளைப் போட்டுவிடலாம். அக்கம்பக்க சொந்தங்கள் கூடவே இருந்து உதவி செய்யும். தாலிகட்டி முடிந்ததும், அவர்கள் பேட்டையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு முதலில் வந்து பொங்கலிட்டுப் பூசையைச் செய்துவிடலாம்.
"நியாயமாப் பார்த்தால் நம்மூட்டு வழக்கப்படி கல்யாணமே ஆத்தா முன்னாலேதான் நடத்தணும். மத்த எல்லாத்துலேயும் நம்மிஷ்டத்துக்கு வுட்டதாலே.....அவுங்க கோயிலில் தாலி கட்டட்டுமுன்னு நாமும் விட்டுக் கொடுக்கணும்தானே?"


தொத்தாவுக்கு பெரிய மனசு.

தாலியை முகூர்த்தத் தேங்காய்மேல் வைத்து ஆசீர்வாதத்துக்குக் கொண்டுவரும்போதே...... பார்வையால் அளந்தனர் பிள்ளைக்குச் சொந்தக்காரர்கள். சுகுமாரனின் அம்மா மட்டும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தார். தனக்குத்தானே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு.

கிளிப்பச்சை நிறத்தில் புடவையணிந்திருந்த மணப்பெண்ணைக் கண்டதும், இன்னொரு பார்வைப் பரிமாற்றம்.

'அந்த மிட்டாய்க்கலர் புடவைதான் பொண்ணுக்கு அம்மாவா?' கிசுகிசுப்பான குரலில் கேட்ட அண்ணிக்கு, 'யாருக்குத் தெரியுது' என்று அசுவாரசியமாய் பதில் வந்தது நாத்தனாரிடமிருந்து.
கனகாவின் கழுத்தில் தாலி ஏறியது. திருவேங்கடத்தின் சித்தப்பா மகள் தாலி முடிய நின்றதற்காக நாத்தனார் சீராகக் கிடைத்தது ஒரு புடவை. அதன் நிறத்தைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறியதோ?

தேவாவின் குணத்தையறிந்த குடும்பம், ஒன்றும் பேசாமல் மெளனமாக இருக்க முயற்சித்தது. தொரைசாமி கவனித்துக்கொண்டே இருந்தார்.
ஒரே ஜாதியில் நடக்கும் கல்யாணங்களில் கூட எதாவது குற்றங்குறைகளைக் கண்டுபிடித்துச் சண்டைக்கு நிற்கும் குணம் கொண்ட மக்கள். அதிலும் இது ஜாதி விட்டு ஜாதி. போதாததற்கு துன்னூறும் நாமமும் என்ற பிரிவு வேற. சொல்லணுமா?

கல்யாணப் பரிசாக குடும்பம் முழுசும் சேர்ந்து வாங்கிய நெக்லெஸ் பெட்டியைத் திறந்து காண்பித்தபடி திருவேங்கடத்தின் கைகளில் திணித்தார் மூத்தச் சித்தப்பா. கண்கள் விரியப் பார்த்தாள் கனகா. இந்த நகைக்குப் பின்னால் இருந்த கதையை அவள் அறிவாளா?

திருவேங்கடத்தின் திருமணப்பத்திரிக்கை கிடைத்தவுடன் கூடிய அவசர 'மகாநாட்டிலே'யே இதுபற்றித் 'தீர்மானம்' எடுக்கப்பட்டது. ஆளாளுக்குச் சில்லரையாக எதாவது செய்யாமல் மொத்தமாகச் சேர்த்து ஒரு கண்ணியமான பரிசாகத் தரலாம் என்று சொன்னதே சுகுமாரனின் அம்மாதான். 'அட! பரவாயில்லையே.... எல்லோரைக் காட்டிலும் இளையவளாக இருந்தாலும் கருத்தானவளாக இருக்கிறாளே' என்று மகிழ்ந்தார் பெரியக்காவின் கணவர்.

'எவ்வளவுன்னு தர்றது?' என்று முணுமுணுத்த பெரிய அண்ணியிடம், 'அந்தப் பொட்டப்பசங்க கல்யாணத்துக்குத்தான் நாம ஒண்ணுமே செய்யலை. இதுதான் அவுங்க வீட்டுலே கடைசிக் கல்யாணம். இதுக்காவது நிரக்கச் செய்யணும் இல்லையா?' என்றாள்.

"அவன் எந்தக் காட்டுலேயோ கொண்டு கல்யாணத்தை வச்சான். நமக்குச் சொல்லக்கூட இல்லை. இதுலே என்னான்னு செஞ்சிருக்கமுடியும்?"

"ஆமாம். சொல்லிட்டாலும்....... அதுக இங்கே இருந்தப்ப ஒரு நல்ல நாள் பொல்லநாளுக்குக்கூட ஒண்ணும் வாங்கித் தரலை சித்தப்பன்மாருங்க.....
நாமளும் நியாயமா இருக்க வேண்டாமா?"

'நியாயத்தைப் பற்றி யாரு பேசறது....... ' மாமியாரின் நகைகளை எல்லாம் இளைய நாத்தனார் எடுத்துக்கொண்ட கடுப்பு அந்த அண்ணிக்கு இருந்தது. ஒன்றும் பெரிய நகைகள் இல்லையென்றாலும் அந்த ரெட்டைவடம் சங்கிலிக் கொஞ்சம் கண்ணில் உறுத்தத்தான் செய்தது. அதுபோக நாலு கம்பி வளையலும், ஒரு காப்பும்தான். மற்றதெல்லாம் சிறுகச்சிறுக, எல்லாரும் அவர் உயிரோடு இருந்தபோதே அடித்துக்கொண்டு போய்விட்டார்களே.

கடைசித்தங்கை இளவயதிலேயே விதவையாகிப் போன வருத்தத்தில் மற்ற அக்காமார்கள் ,'போகட்டும். அவள்தானே அம்மாவைக் கடைசிவரை வைத்துப் பார்த்துக்கொண்டாள்' என்று விட்டுவிட்டனர்.

எப்போதும் போலவே மூத்த அக்காவின் கணவர்தான் எல்லோரையும் ஒருவிதமாகச் சமாளித்துச் சமாதானப்படுத்தினார். அக்காவும், பெரிய அண்ணியும்தான் நகைக்கடைக்குப்போய் இதை வாங்கி வந்தனர். மூணரைப் பவுனுக்கு பார்க்கக் காத்திரமாகவே இருந்தது.

தொத்தா கோவிலுக்கு வரவில்லை. உடம்பும் முடியவில்லை. அதேசமயம் அங்கே நடக்கும் சமையலை மேற்பார்வை செய்ய ஆள் வேண்டாமா?
பெண்ணும் மாப்பிள்ளையும் முதலில் போய் தொத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டுப் பேட்டை மாரியம்மன் கோவிலுக்குப் போயிரணும். அங்கே அதற்குள் பொங்கலிட ஆரம்பித்து எல்லாம் தயாராக இருக்கும். படையலை முடித்துக்கொண்டு வீட்டில் விருந்து.

இனி கல்யாண விருந்தில் கலாட்டா ஆகுமோ என்று நினைத்த தொரைசாமி, அக்காள் கணவரை ஒரு ஓரமாக அழைத்துப்போய், 'உங்களுக்கெல்லாம் ஓட்டலில் சாப்பாட்டுக்குச் சொல்லி இருக்கு. அங்கே நேராப் போயிரலாமா?' என்று கேட்டார்.


எந்த ஓட்டலில்? அங்கே வீட்டில் சமையல் நடக்குதே என்று விழித்த தேவாவிடம், 'எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ பொண்ணு மாப்பிள்ளைக்கூடப் போ' என்றார்.

'அதான் தாலிகட்டியாச்சே. இனி அவுங்க பொறுப்பு' என்று சொல்லிச் சிரித்தார் தேவா. வாடகைக்காரில் மணமக்களையும், பெண்ணின் பெற்றொர்களையும்,
கனகாவின் தம்பி தங்கைகளையும் அடைத்து அனுப்பியானது.

மணி ஒன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பெண்ணின் பெரியப்பாவுடன் என்னவோ பேசிவிட்டு, வில்லிவாக்கத்திலிருந்து பூக்கடை போகும் பேருந்தில் தேவாவின் வீட்டாரை ஏற்றிக்கொண்டு தேவாவுடன் கிளம்பினார் தொரைசாமி.

பெண்வீட்டுக்காரர்கள் தங்கசாலை வழியே ராயபுரம் புறப்பட்டார்கள்.

பாரி முனையில் இறங்கி அங்கே இருந்த ஒரு ஓட்டலில் எல்லோருக்கும் 'கல்யாண விருந்து'. தேவாவின் பக்கத்து ஆட்கள் பதினாலே பேர்கள்தான்.
உணவு முடிந்ததும் எல்லோருமாகப் பெண் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று ஒரு சின்ன விவாதம்.

'இப்போதே நேரமாகிவிட்டது. செண்ட்ரல் போய் அம்பத்தூர் ரயில் பிடிக்கலாம். திருவேங்கடத்தையும் பொண்ணையும் நம் வீட்டு விருந்துக்கு அழைத்தால் போயிற்று' என்றார் அக்காவின் கணவர். எல்லாம் தொரைசாமியின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும்போது உருவான திட்டம்தான்.

அங்கே பெண்வீட்டில் அவ்வளவாக வசதிகள் போதாது. சாக்கடைச் சந்து மாதிரி இருக்கும் தெருவின் வழியாகப் போகவேண்டும். 'படித்தவர்கள்' யோசிப்பார்களோ....... கனகா வீட்டினரைப்பற்றி இருக்கும் எண்ணத்துக்கு இன்னும் மரியாதைக் குறைவு ஆகிவிடுமோ 'என்றுதான் தொரைசாமிப் பக்குவமாகத் திட்டத்தை மாற்றிவிட்டிருக்கிறார்.

அவர் நினைத்ததில் தப்பே இல்லை என்கிற மாதிரிதான் இருந்தது தேவாவின் குடும்பம் தனித்து ரயிலடியில் விட்டபோது. தொரைசாமியும் தேவாவும் அப்படிப் போனார்களோ இல்லையோ, ஆரம்பித்துவிட்டது கச்சேரி.
ஒவ்வொன்றையும் கவனமாக ஞாபகப்படுத்தி அர்ச்சனை செய்துகொண்டு வந்தார்கள். அவ்வப்போது இடையில் சொல்லிக்கொண்டது, 'நல்லவேளை அம்மா உயிரோடு இல்லை, இதையெல்லாம் பார்க்க'

படிப்பும் பணமும் இருக்குமிடத்தில் பண்பு வரவேண்டும். ஆனால் பாசாங்கல்லவா வந்து முன் நிற்கிறது!

தேவாவின் குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சியோடு காணப்பட்டவன் ஒரே ஒரு ஆள்தான். சுகுமாரன்.

கனகா வீட்டில் கல்யாண சாப்பாடு ஒரே அமர்க்களமாக இருந்தது. அண்டை அயல் மக்களும் குழந்தைகளும் குடும்பங்களுமாக மகிழ்ச்சியுடன் ஒரே கலாட்டா. ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் போலவே அக்கா, மாமா, பெரியப்பா அத்தை என்று உறவாடிக்கொண்டிருந்தனர் அனைவரும். அதில் முக்கால்வாசிப்பேர் முன்சாமியிடம் வேலைக்கு இருக்கும் தினக்கூலி ஆட்கள்தான் என்று சொன்னால் நம்புவதற்குக் கஷ்டம்தான்.

விருந்தின் சுவை அதன் ருசியில் இல்லை!

பிள்ளைவீட்டு ஆட்கள் வராதது நம் தொத்தாவிற்குக் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. தொரைசாமி சற்றுநேரம் தொத்தாவருகில் அமர்ந்து பேசிச் சரிக்கட்டி விட்டார்.

திருவேங்கடத்துக்குக் கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற் போல இருந்ததென்னவோ நிஜம். அவனை சகஜ நிலைக்குக் கொண்டுவர நம் தொரைசாமியை விட்டால் வேறு யார்?

சிறிது ஓய்வு எடுக்கச் சொல்லி அறையில் தனித்து விடப்பட்டவனை, குழந்தைப் பட்டாளங்கள் கண்ணை மூட விடவில்லை. மாலை வெய்யில் தணிந்ததும் அடுத்த தெருவில் ஃபோட்டோ பிடிக்கப் போய்வந்தார்கள். மாலையும் கழுத்துமாகக் கல்யாணப் போட்டோ. அப்புறம் ஸ்டுடியோக்காரரின் வற்புறுத்தலால் பிறைநிலவில் அமர்ந்து ஒன்று.
நம்ம ஹரியும் கனகாவும் நிலவையே பிடித்துவிட்டார்கள்.

( கதை(?) நடந்த காலக்கட்டம் 1950 களில் )


பயணம் தொடரும்................................

22 comments:

said...

கல்யாணமும் ஆச்சு. அடுத்து என்ன?

said...

பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரி...குத்தம் சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குதே.

// இலவசக்கொத்தனார் said...
கல்யாணமும் ஆச்சு. அடுத்து என்ன? //

என்ன கொத்ஸ் இது... எதை கேக்கனும்னு ஒரு இது இருக்குல்ல :)

said...

ஹரி-க்கு டயலாக்ஸ் எதுவுமே இல்லையா? எனக்கு இங்க பிடிக்கல...சீக்கிரம் பஞ்சாப்-க்கு ரயிலேறலாம்..

said...

ஆகா - சென்னையேயே கலக்கீட்டிங்க போங்க - சின்னச் சின்ன வெசயத்தேக் கூட கவனிச்சு எழுதி இருக்கீங்க - சென்னலே எத்தனை வருசம் பழக்கம் - ம்ம்ம் - 1950 ?? அப்ப்டித் தெரிலேயே - தங்க சாலை - ராயபுரம் - செந்த்ரல் - அம்பத்தூரு - பஸ் - ரயில் - பாரி முனை - விருந்து - 2000 மாதிர்ல்ல தெர்யுது - ம்ம்ம்ம்ம்ம்ம் ஆக கதாநாயகனுக்குக் கல்யாணம்ம் ஆச்சு - கல்யாண வூட்லே உறவுக்க்காரங்க பேசுற பேச்சும் - குறை சொல்றதும் - நெரைவா முடிக்கறதும் - அய்யோ உங்க வூட்டுக்க் கல்யாணம் மாதிரி ரசிச்சு எழுதி இருக்கீங்க

said...

வாங்க கொத்ஸ்.

ராகவன் பதில் சொல்லிட்டார் உங்களுக்கு:-))))

said...

வாங்க ராகவன்.

ஏடாகூடமாக் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னதுக்கு நன்றி:-))))


குற்றம் குறை சொல்லும் கூட்டம் எப்பவும் இருப்பதுதானே?

said...

வாங்க தங்ஸ்.

ஹரிக்கு ஏது டயலாக்? இது தேவாவின் பேட்டை.

அவர்தான் பிள்ளைக்கு வாய்:-)))

பஞ்சாப் போகத்தான் வேணும். எப்பன்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

said...

வாங்க சீனா.

//தங்க சாலை - ராயபுரம் - செந்த்ரல் - அம்பத்தூரு - பஸ் - ரயில் - பாரி முனை - விருந்து //

மிண்ட், பாரீஸ் கார்னர், பஸ் அப்படியெல்லாம் எழுதி இருக்கணும். தமிழில் சொல்றேன்னு சொதப்பிட்டேனா?(-:

said...

தொச்சி வாழ்க.(தொரசாமி தான்)

கல்யாணம்னா இது கல்யாணம்!!!
அப்பா, பக்கத்தில நின்னு பார்த்த மாதிரி இருக்கு.
எப்படி எழுதினாலும், சென்னன சென்னைதான்.
பிள்ளை வீட்டுக்
காரங்க பிள்ளைவீட்டுக்காரங்கதான்.
ஹரியும்கனகாவும் சுப வாழ்வு வாழணும்.

said...

//விருந்தின் சுவை அதன் ருசியில் இல்லை//

போட்டீங்களே ஒரு போடு!

said...

கல்யாண விவரிப்புகள் நன்று..கிளிப்பச்சை, மிட்டாய் கலர் புடவைகள்..என்ன பரிசு கொடுக்காலாமமென்ற பேச்சு..கல்யாணத்தில் கலந்து கொண்டது போலிருந்தது..

said...

சூப்பர் கல்யாணம்...;))

Anonymous said...

\\மாலை வெய்யில் தணிந்ததும் அடுத்த தெருவில் ஃபோட்டோ பிடிக்கப் போய்வந்தார்கள். மாலையும் கழுத்துமாகக் கல்யாணப் போட்டோ. அப்புறம் ஸ்டுடியோக்காரரின் வற்புறுத்தலால் பிறைநிலவில் அமர்ந்து ஒன்று.
நம்ம ஹரியும் கனகாவும் நிலவையே பிடித்துவிட்டார்கள்.\\
அந்தக்கால கலியாண போட்டோ பாத்தமாதிரி இருக்கு உங்க வர்ணனை

said...

கதைன்னு போட்டு அது பக்கத்துல அப்ப நிஜம்மா?/

அப்படியே நொடிச்சிட்டு அங்கயும் இங்கயும் கல்யாண வீட்டில் ஆளுங்க இருக்கற மாதிரி ஒரு பிரமையா இருக்கு.. எந்த கல்யாணவீட்டுலயும் பாக்கலாமே இப்படி.. ஹ்ம்...

said...

வாங்க வல்லி.

தொச்சியோட நல்ல மனசுக்கு அவர் நல்லாவே இருந்து போனார்ப்பா.

கல்யாணத்துக்கு வந்து போனதுக்கு மொய் பின்னூட்டம்தானா?:-))))

said...

வாங்க சிஜி.

கூட்டமா இருந்து அன்போடு உறவாடி உண்ணும்போது நாக்கு ருசியை மறந்துபோகுதுதானே?

முற்றத்துலே பாட்டியைச் சுத்தி உக்காந்து கை முத்தையா வாங்கித் தின்னும்போதும் இப்படித்தான். வயித்துக்கே கூட, அளவு மறந்து போகும்:-)))

said...

வாங்க பாசமலர்.

உங்களை வேற இடத்துலே பார்த்தபோது, அட! நம்ம நினைக்கறதையே சொல்றாங்கன்னு இருந்துச்சு.

எதுவா?

"நாணயங்கலுக்கு மட்டுமே இரு பக்கம்..வாழ்க்கைக்குப் பல பக்கங்கள்.."

said...

வாங்க கோபி.
இருந்து சாப்புட்டுப் போனீங்கதானே?:-)))))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

என்னதான் நல்ல புடவை உடுத்துனாலும் அந்தக் காலத்துப் போட்டொவிலே வேற மாதிரிதான் தெரியும்(-:

கலர் இல்லை பாருங்க

said...

வாங்க முத்துலெட்சுமி.

எந்தக் கதை(?)ன்னாலும் அதுலே ஒரு உண்மைச்சம்பவம் இருந்தே ஆகணும், ஒரு ஒன் லைனர் மாதிரி.

சயின்ஸ் ஃபிக்ஷந்தான் விதி விலக்கு.
இது என் சொந்தக் கருத்து
(பின்னூட்டத்துக்குக்கூட டிஸ்கி போட்டுக்கும்படியா ஆயிருச்சு நிலமை)

said...

ம்ம்ம். சாதி விட்டு சாதி கல்யாணம்ன்னா எப்படி இருக்கும்ன்னு நல்லாவே சொல்லியிருக்கீங்க. சாதி வேறுபாடெல்லாம் இன்னும் இருக்கத் தான் செய்யுதுங்க. 1950ல நடந்ததுன்னு சொன்னாலும் சரி இப்ப நடந்ததுன்னு சொன்னாலும் சரி. நிலைமை அவ்வளவா மாறலை தான். :-(

நிறைய மனுசங்களோட பழகுன அனுபவம் உங்க எழுத்துல நல்லா தெரியுது. ஒவ்வொருவரும் எப்படி சிந்திப்பாங்க; என்ன என்ன செய்வாங்கன்னு அனுபவத்துல இருந்து எழுதுன மாதிரி இருக்கு.

said...

வாங்க குமரன்.

நீங்க சொன்னது சரிதான்.

மனுசங்களைப் பார்க்கறது என்னோட ஒரு ஹாபின்னும் சொல்லலாம்.

கொஞ்சம் போரடிச்சா, இங்கே பக்கத்து மாலில் போய் அங்கே இருக்கும் பெஞ்சுலே உக்கார்ந்தாப் போதும். எத்தனை ரகம்!!!!!!

ஸ்நோ ஃப்ளேக்ஸ் போலத்தான். ஒருத்தரை மாதிரி ஒருத்தர் இல்லை.