Sunday, January 20, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 9

'இன்றைக்கென்று பார்த்து இந்தப் பெண் எங்கே இன்னும் காணோம்?' என்றவாறே பின்வாசல் கதவை அடிக்கடி எட்டிப்பார்த்தபடி இருந்தார் மா ஜி. கையில் ஒரு தபால்கார்டு. பிதா ஜிக்கும் பரபரப்பு இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தார். 'இத்தனை நாளில் நீயே மத்ராஸி படிக்கக் கற்றுக்கொண்டிருக்கலாம். இப்போது பார்......தவிக்கிறாய்'.


'கொஞ்சம் சும்மா இருங்களேன். ஹரியிடமிருந்து வந்த கடிதம்தான் இது என்று தபால்காரர் முத்திரையைப் பார்த்துச்சொன்னார். இல்லாவிட்டாலும் நமக்கு வேறேங்கே இருந்து கடிதம் வருமாம்? என்ன எழுதி இருக்கின்றானோ? கல்யாணம் நல்லபடி முடிந்ததா? எப்போது திரும்ப வரப்போகிறான்?'


பச்சைக் கடலைச் செடிகளை சின்ன சுமையாகக்கட்டித் தலையில் சுமந்து கொண்டுவந்து 'தொப்'எனத் தரையில் போட்டாள் கஸ்தூரி. 'அங்கே கடலைச் செடியை........' என்று ஆரம்பித்தவளை ....


அதெல்லாம் கிடக்கட்டும். இதைப்பார்'' என்று கடிதத்தைக் கண்முன்னே ஆட்டினார் மாஜி.


தலையில் இருக்கும் தூசியைக்கூடத் தட்டிவிடாமல்,'ஹை...அண்ணன் கடிதமா? என்று ஓடிவந்தாள்.



கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தவளின் முகத்தைப் 'படித்து'க்கொண்டிருந்தார் மா ஜி. கஸ்தூரியின் முகமே முக்கால்வாசி விஷயத்தைச் சொல்லிவிட்டது. அண்ணன் கல்யாணம் முடிந்துவிட்டது. பெண்ணின் பெயர் கனகா. சீக்கிரமாகவே கிளம்பி வந்துவிடுவாராம் புது அண்ணியுடன். பிதாஜியின் கால் குணமாகி வருகிறதா? உங்கள் உடல்நலம் எப்படி என்றெல்லாம் கேட்டு எழுதி இருக்கிறார். இது அண்ணி எழுதித் தந்த கடிதமாம் என்றாள்.


ஹரிக்கு மனசெல்லாம் பிதா ஜியின் கால் கட்டும், மா ஜி எப்படிச் சமாளிக்கிறார்களொ என்றும்தான் இருந்தது. வயல் வேலைகளைப் பற்றிக் கவலை இல்லை. அதெல்லாம் ஆகாஷ் நன்றாகவே பார்த்துக் கொள்வான்.
'இந்தியில் ஒரு கடிதம் எழுதித் தாயேன்' என்று தபால்கார்டைக் கனகாவிடம் நீட்டினான் ஹரி.


ஐய்யோ...எனக்கு அவ்வளவெல்லாம் எழுதத்தெரியாது. இப்போதுதான் எழுத்துக்கூட்டிப் படிக்கச் சொல்லித் தருகிறார்கள். அதுவும் சின்ன வாக்கியங்கள். 'மேரா நாம் ஹரி ஹை' என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் கனகா.



"அப்ப உனக்கு இந்தி தெரியும் என்று அப்பா சொன்னது? "


"ஆமாம். தெரியும். அதான் இந்தி வகுப்புக்குப் போகிறேனே. இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு. இன்னும் போகப்போகக் கற்றுக்கொள்வேன்"



ஹரிக்கோ தமிழ் எழுதத்தெரியாது. எந்தக்காலத்திலோ படித்தது. எல்லாம் மறந்து போயிற்றே.......


."சரி. அப்ப நான் சொல்லச்சொல்ல நீயே தமிழில் எழுது. கஸ்தூரி படித்துச் சொல்வாள்."


ஆங்கிலத்தில் எழுதி பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த விலாசத்தை எடுத்துக்கொண்டான். தபால் ஆபீஸ் வாசலில் நின்ற ஒருவர் விலாசம் எழுதித் தந்தார். பெட்டியில் போட்டாச்சு.


அப்பாவைக் கொண்டுதான் எழுதச் சொல்லவேண்டும். அவரைப் பார்த்தே ரெண்டு வாரமாகிவிட்டது. இங்கே விட்டுவிட்டுப் போனவர்தான். கனகாவின் வீட்டுச் சொந்தங்களைப் போய்ப் பார்ப்பதும், உயிர்காலேஜ், செத்தகாலேஜ் எல்லாம் போய்வந்ததும், ரெண்டுமூன்று முறை பீச் போனதும் என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.. இதில் மூன்று சினிமா வேறு பார்த்தாகிவிட்டது. இந்த மூன்றுமே கனகா ஏற்கெனவே பார்த்த படங்கள்தானாம்.



கனகா ஒரு சினிமாப் பைத்தியம். பார்த்த படங்களையே அலுக்காமல் திரும்பத் திரும்பப் பார்ப்பாள். அக்கம்பக்கத்தில் 'அக்காவோ, சித்தியோ அத்தையோ' படம் பார்க்கத் துணைக்குக் கூப்பிட்டால் போதும். கிளம்பி விடுவாள்.


அப்பாவை வரச் சொல்லவேண்டும். தானே போய்த் தேட முடியாது. எங்கே இருக்கிறாரோ என்னவோ? நல்லவேளையாக தொரைசாமி(பெரியப்பா) வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சொல்லி அனுப்பியிருக்கிறான்.


தகப்பனும் மகனுமாகக் கிளம்பிக் கல்மண்டபம் அருகே நடந்து கொண்டிருந்தனர். மகன், கண்டிப்பாகச் சொல்லிக்கொண்டிருந்தான், ஊருக்குக் கிளம்பவேண்டிய அவசியத்தை. கையோடு கொண்டுவந்த கார்டில்,
'வந்து கொண்டிருக்கிறேன்' என்று அப்பாவைக் கொண்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தான்..



'இப்போதுதானே திருமணம் முடிந்தது. உடனே பெண்ணைக்கொண்டு போய்விட்டால் இன்னும் திரும்ப அவளைப் பார்க்க எத்தனை நாள் செல்லுமோ என்று, மூணுமாதங்களாவது இருந்தே போகவேண்டும்' என்று தேவாவிடம் ஏற்கெனவே வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார் முன்சாமி.

"மூணுமாசம் எல்லாம் முடியவே முடியாது. அங்கே எல்லா வேலைகளும் போட்டது போட்டபடி வந்துருக்கேன். பிதாஜிக்கு வேறு மாவுக்கட்டு போட்டுருக்கு. அவரை டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். தங்கச்சிகளும் கவலையாக இருப்பாங்க. உடனே கிளம்பினால்தான் ஆச்சு.
எனக்குவேறு உடம்பு சரியில்லை"


"என்னப்பா ஆச்சு உடம்புக்கு? சொல்லவேயில்லை?"


"வயிறு ஒண்ணும் சரியில்லை. மூணுநேரமும் அரிசி. சரிப்பட்டு வரலை. நானே ரொட்டி செஞ்சுக்கறேன் என்றால், புதுமாப்பிள்ளை சமைக்கிறதா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்கிறாங்கள் கனகா வீட்டில். பொண்ணு மாப்பிளைக்கு விருந்து என்று சொந்தக்காரர்கள் வீடுகளுக்குப் போய்ப்போய் போதுமென்னிருக்கு..


"அப்ப அடுத்தவாரம் புறப்படவேண்டும் என்று சொல்லிவிடலாமா?"

"அடுத்தவாரமெல்லாம் தாங்காது. நாளைக்குப்போறென்னு சொல்லுங்க."


"ம்ம்ம்ம்ம்.என்னப்பா நாளைக்கே போகணுமுன்னு சொல்றே.....நடக்கிற காரியமா? உன் மாமனார் வீட்டுலே என்ன சொல்வாங்களொ? அங்கெ உன் சித்தப்பாக்களும், அத்தைகளும் கட்டாயம் பொண்ணுமாப்பிளையைக் கூட்டிக்கிட்டுவரணும்னு அன்னிக்கே சொல்லிட்டுப் போயிருக்காங்க. அவுங்களுக்கு நான் என்னன்னு பதில் சொல்றது?"



"இல்லைப்பா. சித்தப்பாகிட்டேயெல்லாம் நீங்களே சொல்லிருங்க"



"அது எப்படிப்பா? நாளைக்கு நமக்கு அங்கே மரியாதை இல்லாமப் போயிருமே......ஒண்ணுவேணுன்னா செய்யலாம். இப்படியே அம்பத்தூர் போய் எல்லார்ட்டேயும் சொல்லிக்கிட்டு வந்துரலாம். நாளைமத்தநாள் பேச்சு வராதுல்லே......."


ரயிலைப் பிடித்தார்கள்.





'காலையிலே இருந்து காக்கா கூப்புட்டுக்கிட்டே இருந்துச்சு. என்னடான்னு இருந்தேன்....சரியாப்போச்சு' என்றபடி மூத்தாரை வரவேற்றார் தம்பி மனைவி...

"என்ன நீங்க மட்டும் வந்துருக்கீங்க? பொண்ணு வரலையா? "



தேவா, எல்லாவற்றையும் சொன்னதும், 'இருங்க. உங்க தம்பி கடைக்குப் போயிருக்கார். இப்ப வந்துருவார். இன்னிக்கு ராத்திரி பலகாரம்தான். சாப்புட்டுப்போலாம்' என்றார் சித்தி.


தம்பி வந்ததும் எல்லாம் ஒருமுறை விவாதிக்கப்பட்டது.


"சரிண்ணே. அவன் கஷ்டத்தையும் பார்க்கணுமே. எத்தனைநாள்னு அங்கே மாமியார் வீட்டிலே இருக்கமுடியும்? உன் வீடுன்னு இருந்தா அவனுக்கு செளகரியமா இருக்கும். நீதான் உனக்குன்னு ஒரு இடமில்லாமச் சுத்திக்கிட்டு இருக்கே. இங்கெ எங்கூட வந்திருன்னு சொல்லிச் சொல்லி வாய் வலிக்குது.

அவன் போக்குலே விடு. வராமக் கொள்ளாம போயிருவானா என்ன? தொரைசாமியண்ணேகிட்டே சொன்னாப்போதும். அவர் , பக்குவமா விசயத்தை எடுத்துச்சொல்வார்"


"நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். கடைசி வண்டி போயிரப்போகுது. நாங்க கிளம்பறோம். தங்கச்சிங்ககிட்டே நீயே சொல்லிரு. கத்தப் போறாளுங்க. நான் அப்புறமா ஒரு நாள் வர்றேன்"


விஷயம் கேள்விப்பட்ட தேவாவின் குடும்பம் 'கத்தவில்லை'. அப்பாடி...போய்த் தொலையட்டும் என்ற ஆசுவாசம்தான் முகத்தில்.


வீடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு அலறிக்கொண்டிருந்தார்கள். சாந்தியும் கனகாவும் ஒரு மூலையில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடிக் கண்ணீர்தாரை வழியும் முகத்தோடு.


"நாளைக்கேக் கிளம்பணுமுன்னா எப்படி?"


"ஒண்ணுவேணா செய்யலாம். மாப்பிளை முன்னாலே கிளம்பிப் போகட்டும். கனகாவை அப்புறமா நாம கொண்டுபோய் விட்டுட்டு வரலாம். என்ன தொத்தா, சரிதானே?"

தொரைசாமி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.


வயசும் அனுபவமும் மூத்துக்கிடந்த தொத்தா, 'அது மட்டும் வேணாம்' என்பதுபோலத் தலையை ஆட்டினார்.


"யார் கொண்டு போவா? இங்கேயும் வேலைவேலைன்னு ஓடுனாத்தானே பொழைப்பு. அந்தூரு பாஷைகூடத்தெரியாது. என்னான்னு வழி கண்டுபிடிச்சுப் போவீங்க? தேவாவை நம்பி நான் அனுப்ப மாட்டேன். போனா நீங்க யாராவதுதான் போகணும்.......என்னிக்கிருந்தாலும் இவ அவன் பொண்டாட்டிதான். அவங்கூடத்தானே இருக்கோணும். இப்பவே அவங்கூட அனுப்பறதுதான் நல்லது. இனி உங்க இஷ்டம்..........."


தொத்தா பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

மறுநாள் செவ்வாயாக் கிடக்கு. வேணாம். புதனுக்குப் புறப்படலாம். பொன்னுக் கிடைச்சாலும் புதன் கிடைக்காது..


அவதி அவதியாக மூட்டைகள் கட்டப்பட்டன. முட்டாய்க் கடைக்காரரிடம் போய் பலகாரங்கள் வாங்கியாந்தார்கள். நாலைஞ்சு ரவிக்கைகள் தைச்சு எடுத்திக்கிட்டுப்போகணும் என்று பசங்களிடம் கொடுத்தனுப்பியாச்சு. 'இன்னிக்கு ராத்திரிக்குள்ளே தச்சு வரணும் ஆமா' என்ற கட்டளையோடு.


சந்தோஷம், துக்கம் எல்லாம் கலந்த ஒரு நிலையில் பிரமிப்பாக இருந்தாள் கனகா. முணுக்கென்றால் அழுகையும், கலீர் என்ற சிரிப்புமாக. பெரியப்பா பையன்வேற, 'புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே,
சில புத்திமதிகளைச் சொல்லுறேன் கேளு முன்னே' என்று பாடிக்கொண்டுக் கலாட்டா செய்து கொண்டிருந்தான்.


"ஏங்க்கா....மூணுநாளா ரயில்லெ போவே? அப்ப துன்றது தூங்கரதெல்லாம் ரயில்லெயா?" பொடிசுகள் கேட்டதும் கண் குப்பென்று நிறைந்தது கனகாவுக்கு.


ரயிலடியில் மொத்தக் குடும்பமும்....ம்ம்ம்ம்..........இல்லையில்லை தொத்தாவைத்தவிர மற்றவர் அனைவரும். தேவாவாவது வருவார் என்று பார்த்தால் அவரைக் காணோம்......

பத்திரமாப் போயிட்டு வாம்மா.

போனதும் கடுதாசி போடு.

பத்திரமாப் பாத்துக்குங்க மாப்பிளை.

எங்களைவிட்டு மொதத்தடவையா பிரிஞ்சு போறா.....
அய்யோ தாங்கலையே.................


ஏகப்பட்ட இரைச்சலுடன் நகர்ந்தது ரயில் வண்டி.


பயணம் தொடரும்.......................

24 comments:

said...

ஓ ஊருக்குப் பொறப்பட்டாச்சா.....அங்க போய் என்னென்ன ஆகப் போகுதோ.. பொறுத்திருந்து பாப்போம். ஒருவேளை பஞ்சாபி இந்திப் படங்களா கனகா பாப்பாளோ என்னவோ...

இந்தச் சப்பாத்தி சோறு விவகாரம் பெரிய விவகாரம். நான் பெங்களூர் போன புதுசுல எங்க அத்த வீட்டுல இருந்தேன். அத்தை மிலிட்டிரில லெப்டிணட்டு கர்ணலா இருந்தவங்க. தினமும் சப்பாத்தி ஆபீசுக்குக் கட்டிக் குடுப்பாங்க.

எனக்குத்தான் சாப்பிட முடியாது. ஆபீஸ்ல ஜோத்சனான்னு ஒரு கன்னடப் பொண்ணு. அந்தப் பொண்ணு நல்லா புளியோகரே, சித்ரான்னா, மொசுரன்னா, உப்பிட்டு, அவரேக்காய் ஹுளி இப்பிடி விதவிதமா வரும். அந்தப் பொண்ணுக்கு சப்பாத்தி ஓக்கே. நாங்க டிபன்பாக்ஸ் மாத்து பண்ணிக்கிருவோம். :) ஆனா.. இப்ப சோறைக் குறைச்சாச்சு. சோறுன்னாலே கொஞ்சோலதான்.

Anonymous said...

\\எங்களைவிட்டு மொதத்தடவையா பிரிஞ்சு போறா.....
அய்யோ தாங்கலையே\\ முதல்முதல்ல லெடீஸ் ஹாஸ்டல்ல தங்கப்போனபோது, அப்பாடி சுதந்திரம்னு சந்தோஷமா போனேன். வீட்ல யாராவது இப்படி சொல்வாங்கன்னு பாத்தா, எல்லாரும் அவ தைரியான பொண்ணு அதெல்லாம் சமாளிச்சுக்குவான்னுட்டாங்க. கலியாணமாகி நியூஸி வரும்போதும் அதே கதைதான். இது எப்படி இருக்கு

said...

ஆமாம் இந்த கனகா என்னமோ இந்தி பண்டிட் அப்படின்னு இல்ல சொன்னாங்க? இல்லை நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா? இந்தி மாமியார் தமிழ் மருமகள் நடுவே நம்ம ஹரி!! ஐயா ஜாலி!! :))

said...

ஹரி, கனகா - தனிக் குடித்தன்ம் புதுக்குடித்தனத்துக்குக் கிளம்பியாச்சு
வாழ்த்துகள்

said...

சின்னத் தொடர் என்று சொல்லி எழுத ஆரம்பித்து கூட்ஸ் வண்டி ஆக்கிட்டிங்களே. அப்போ மெகா தொடர் எழுதினால் அம்புட்டுதேன். அடுத்த நெடும் தொடர் ஆரம்பிக்க கோலங்கள் திருச்செல்வத்துக்கு ( சைடுல தான், கோலங்கள் இன்னும் 10 வருசத்துக்கு முடியாது)
கதை ஆசிரியர் மற்றும் வசன கர்த்தாவேண்டுமாம்.
:)

நான் கலாய்பதற்காக சொன்னேன்.
எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

said...

//நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். கடைசி வண்டி போயிரப்போகுது. நாங்க கிளம்பறோம். தங்கச்சிங்ககிட்டே நீயே சொல்லிரு. கத்தப் போறாளுங்க. நான் அப்புறமா ஒரு நாள் வர்றேன்"

விஷயம் கேள்விப்பட்ட தேவாவின் குடும்பம் 'கத்தவில்லை'. அப்பாடி...போய்த் தொலையட்டும் என்ற ஆசுவாசம்தான் முகத்தில்.//

உண்மையில் பலர் இப்படித்தான்..

அங்கே போனதும் கனகாவின் வாழ்க்கை எப்படியிருக்கும்..
பார்க்கலாம்.

said...

எனக்குக்கூட கல்யாணம் ஆனப்போ பொண்ணு இந்தி நல்லா பேசுமாம்ன்னு சொல்லிவச்சிருக்காங்க மாப்பிள்ளைக்கிட்ட.. மூணு எக்ஸாம் பாஸ் பண்ணா இந்தி பேச முடியுமா என்ன? பழகினாத்தானே வரும்.. இரண்டுவருசம் வயலின் கத்துக்கிட்டதை அந்த பொண்ணு வயலின் எல்லாம் வாசிக்குமாம்ன்னு கச்சேரி செய்யும் ஆர்டிஸ்ட் கணக்கா சொல்லிவச்சிருக்காங்க..பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு எப்படியாவது கல்யாணத்துக்கு ஒத்துக்கவச்சா போதும்ன்னு...

இந்த இந்தி பண்டிட் பத்தி கேட்டவுடனே இதெல்லாம் தான் நியாபகத்துக்குவருது.

said...

போன பின்னூட்டத்தில் சொன்னதெல்லாம் எங்க வீட்டுல விட்ட கதையில்லை பையன் வீட்டுலயே பையனை சம்மதிக்கவைக்க என்னைபத்தி விட்ட கதையாக்கும்..

said...

அதெல்லாம் கன்அகா நல்லக் கத்துக்குவா. புருசனாக் கொண்டவன் சரியாயிருந்தால்,
கூரைலேருந்து கூவலாம்.
ஹரி நல்லவன். சாமர்த்தியசாலி.
குடும்பத்தை நல்லபடியாக் கொண்டு போவான்.

அன்புதானே எல்லாத்துக்கும் அடிப்படை.
அது பஞாபில நிறையவே இருக்கு:)))

said...

வாங்க ராகவன்.

//அத்தை மிலிட்டிரில லெப்டிணட்டு கர்ணலா இருந்தவங்க//


அட! அத்தைச் சொல்லலையே.
நிறைய மிலிட்டரி கதைகள் கிடைச்சிருக்குமே!

டிபன்பாக்ஸ் மாத்து நல்ல ஐடியாவா இருக்கே:-))))

வயித்துப்பிரச்சனை வந்தாத் தாக்குப்பிடிக்கறது ரொம்பக் கஷ்டம்தான்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

//யாராவது இப்படி சொல்வாங்கன்னு பாத்தா//

அந்த அளவுக்கு நம்ம வீரக்கதைகள் வீட்டுக்குத் தெரிஞ்சுருக்கே:-))))

said...

வாங்க கொத்ஸ்.

மாமியார் மருமகள் சண்டையில் ஹரி மாட்டிக்கிடறதுலே அப்படி என்னங்க உங்களுக்கு ஜாலி?

ஊர் ரெண்டு பட்டா யாருக்கோ சந்தோஷமாமே:-)

said...

வாங்க சீனா.

வாழ்த்துகளை அவுங்களுக்கு அனுப்பிட்டேன். நன்றியாம். சொல்லச்சொன்னா கனகா:-)))

said...

வாங்க கோவியாரே.
என்னைப் பத்தி எனக்கே நல்லாத் தெரிஞ்சதுனாலேதானே ரயில் வண்டின்னு ஆரம்பிச்சேன். எத்தனை பெட்டியை வேணுமுன்னாலும் கோர்த்துறலாமே. நல்லவேளை பஸ் ன்னு இருந்தா கதை கந்தல்தான்:-)))))

said...

வாங்க பாசமலர்.

மக்கள்ஸ் சொல்றதுலேதான் தேன். கிட்டிமுட்டிப்போனா பலருடைய ஒரிஜினல் முகம் இப்படித்தான் இருக்கும்.
அந்தக்காலத்துலே இருந்தே இப்படித்தான்போல(-:

இல்லாமயா 'வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு' ன்னு பழமொழி வந்திருக்கும்?

said...

வாங்க முத்துலெட்சுமி.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணலாமாம். இதுலே அந்தப் பொய்களைச் சொல்றதுக்கு ரெண்டுபக்கத்துக்கும் உரிமை இருக்கு.

என்ன.............உங்களுதுலே அவுங்க அந்தப் புகழை எடுத்துக்கிட்டாங்க:-)))))

இப்பவாவது வயலினில் தேறுனீங்களா இல்லையா?

said...

வாங்க வல்லி.

குடும்பம் நல்லா ஆகறது ரெண்டுபேர் கையிலேயும் இல்லையா?
நல்லா இருக்கணுமுன்னுதான் நானும் வேண்டறேன்.

அது என்னங்க பஞ்சாபுலே அன்பு நிறைய இருக்குன்னு சொல்லிட்டீங்க! அப்ப நம்மூட்டுலே???????????

said...

கனகாவை வழி அனுப்பிட்டு இங்க வந்தா அக்காங்களோட கதை பெரும் கதையால்ல இருக்கு! ;))

said...

அட.நம்ம ஹரிகிட்ட அன்பா இருக்கறவங்க பஞ்சாப்காரங்க தானே.!!!!
அதைச் சொன்னென்.:)
நம்மூட்டுல அன்பு இல்லாமலா நாம இங்க இருக்கோம்:)))

said...

பஞ்சாப்-ல கடலைச்செடி இருக்கா?
//ஏகப்பட்ட இரைச்சலுடன் நகர்ந்தது ரயில் வண்டி// எனக்கென்னவோ ஹரியும், கனகாவும் ஸ்லோமோஷன்ல ஓடிப்போய் ஏறின மாதிரி ஒரு ஃபீலிங்பா..

said...

வாங்க கோபி.

அக்காங்க கதையும் அம்மாங்க கதையும் ..... சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். முடிவே இல்லாதது

said...

வாங்க கோபி.

அக்காங்க கதையும் அம்மாங்க கதையும் ..... சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். முடிவே இல்லாதது

said...

வல்லி, இன்று முதல் தமிழ்க்காரர்களும் ஹரியிடம் அன்பாக இருக்கணுமுன்னு அரசாணை பிறப்பிக்கணும்.

said...

வாங்க தங்ஸ்.

கொத்துக்கடலை அங்கே ஏகத்தும் இருக்கு.

ஸ்லோ மோஷன்......
படப்பிடிப்பு சமயம் ஞாபகம் வச்சுக்கணும்:-)))