Tuesday, January 08, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 5
ம்ம்ம்ம்ம்ம்ம்....இப்ப என்ன அதிசயமா நடந்துபோனது என்று நீங்கள் எல்லாம் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? ஊர் உலகில் இல்லாததா? விருப்பமில்லை என்றுதான் அவளே அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டாளே........நான் கூட அந்தக் காலத்துலே இப்படி'' என்று ஆரம்பித்துவிட்டு, மா ஜியின் முறைப்பைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டார் பிதா ஜி. ஆனாலும் அவர் சிரிப்பதைக் குலுங்கும் முதுகில் தெரிந்துகொண்ட ஹரிக்கும் சிரிப்பு வந்தது.

'போதும். உங்கள் பிரலாபம்' என்ற மா ஜியிடம்,'நானும் அதைத்தான் சொல்கின்றேன். போதும்.....இதை அப்படியே விட்டுவிட்டால் போதும் இல்லை....மேற்கொண்டு இதைப்பற்றி இன்னும் எதாவது செய்யலாம் என்று இருந்தால்.........ம்ம்ம்ம்.
எந்த முடிவா இருந்தாலும் அதைக் கஸ்தூரிதான் எடுக்கவேண்டும்.
நன்றாக யோசனை செய்து ஒரு முடிவைச் சொல்லும்மா என்றார் பிதா ஜி.

இந்த ஒருவாரமாக வீட்டில் ஒரு பயங்கர அமைதி. பிதா ஜிதான் இறுக்கத்தைக் குறைக்க எவ்வளவோ முயன்றார் 'அன்று' முதல் ஆகாஷ் வேலைக்கும் வரவில்லை. அவனுக்கும் அவர்கள் வீட்டில் நல்ல மண்டகப்படி. அண்ணிமாரும், அம்மா நவ்ஜீத்தும் வறுத்தெடுத்துவிட்டார்கள்.

"அந்தப் பெண் கஸ்தூரி, எங்களையெல்லாம் வயலில் பார்க்கும்போது எவ்வளவு ஆசையாக ஓடிவந்து பேசுவாள். கள்ளங்கபடமில்லாத கலகலச் சிரிப்பு. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஹரியோடு பேசமுடியும்? தினமும் அவனைப் பார்த்தே ஆகவேண்டுமே. அவன் வயலைக் கடந்தல்லவா நம்மிடத்துக்குப் போகவேண்டும்....."

"அவர்கள் எவ்வளவு வசதியான குடும்பம். நம்முடைய ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் நட்புடன் இருப்பார்களே. இவன் இப்படி விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டானே? பெரியவர் என்ன சொல்வாரோ?
வேலைக்கு வராதே என்று விரட்டிவிட்டால் எங்கே போவான்? குடும்பத்துக்கே கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டாயேடா "

" போடா..போ. பெரியவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேள். . எங்கிருந்தோ தூரதேசத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு படும்? தவறுதலாக அப்படி நடந்துகொண்டேன் என்று அவளிடமும் சொல்"

இவர்கள் எரிச்சல்படுவதைப் பார்த்து, உள்ளூரப் பயம் இருந்தாலும், அந்த வயதுக்கே உரிய அசட்டுத்தைரியத்துடன் 'நான் செய்தது அப்படி என்ன பெரிய தவறு? விருப்பம் இல்லை என்றுதானே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாள். அதற்கு ஏன் நீங்கள் அனைவரும் இந்தக் குதி குதிக்கிறீர்கள்?' என்று முரண்டினான் ஆகாஷ்.


இருட்டுப் பிரியும் அதிகாலையில் பாலைக் கறந்துவிட்டு, கிணற்றடிக்குப் போன ஹரி, அரையிருட்டில் நிற்கும் உருவத்தைக் கவனித்துவிட்டான். தலையைக் குனிந்தபடி நின்றிருந்த ஆகாஷ், 'நான் வேலைக்கு வரலாமா? என் மனதில் அன்று அப்படித் தோன்றியதைச் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கணும்' என்று மெல்லிய குரலில் கூறினான்.

அவனை உற்று நோக்கிய ஹரிக்கு, 'சட்' என்று ஒரு இரக்கம் வந்தது. 'நானா உன்னை வேலைக்கு வரவேண்டாமென்று சொன்னேன். நீயாகத்தானே வரவில்லை. இந்த ஒரு வாரமும் பயந்து கொண்டு ஒளிந்திருந்தாய் அல்லவா?' என்று சிரித்தான். மா ஜியும் பிதாஜியும்தான் ரொம்பக் கோபமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லிவைத்தான். இதைக்கேட்ட ஆகாஷின் கண்களில் மெல்லிய கலக்கம்.

கஸ்தூரிக்கு எல்லோரையும் பிடிப்பதுபோலவே ஆகாஷையும் பிடிக்கும். அவனுடன் எப்போதும் சிரித்துப் பேசுவாள். அதற்காக அவனைக் கல்யாணம் செய்துகொள்வது...... நினைத்தும் பார்த்ததில்லை. அக்கா, கல்யாணத்திற்குக்
காத்திருக்கும்போது நான் எப்படி? முதலில் அவன் மீது எனக்கிருக்கும் அன்பு
விசேஷமான ஒன்றில்லையே........

மா ஜியுடன் ஒரு நாள் தனித்திருக்க நேர்ந்தபோது, தன்னுடைய குழப்பத்தைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டாள். தாயன்பு மிக்க மா ஜி அவள் தலையை வருடியபடி ஆதரவாகவும் மிகுந்த கவனத்துடனும் தன்னுடைய எண்ணங்களைக் கூறினார்.

"நான் திருமணம் முடித்து இந்த ஊருக்கு வந்ததுமுதல் நவ்ஜீத்துடன் பழக்கம். நம் வயலுக்குப் பக்கத்தில் இருப்பதால் தினமும் ஒருமுறையாவது சந்தித்துப் பேசாமல் இருந்ததில்லை. நல்ல மரியாதைப் பட்ட குடும்பம். காசு பணத்தில்தான் அவர்கள் ஏழையே தவிர குடும்பத்தில் அன்பு, பாசம் என்று கணக்கெடுத்தால் நம்மையெல்லாம் விட செல்வந்தர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அங்குவந்த மூன்று மருமகள்களையும் சொந்தப்பெண்போன்றே நடத்துகிறார்கள். நீயும் இங்குவந்த நாளில் இருந்து கவனித்திருப்பாயே.....எப்போதாவது சண்டை, சச்சரவு என்று விரும்பத்தகாதவைகள் அங்கே நடந்துள்ளதா? பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வீடு, கோயிலுக்குச் சமம் அல்லவா? அந்த வீட்டுப் பையன்களும் தங்கமானவர்கள்தான். அதிலும் ஆகாஷ் ஊருக்கே ஒரு செல்லப்பிள்ளை. எந்த வம்பு தும்புக்கும் போகாதவன்.

ஆனால் இதில் உன் விருப்பம்தான் மிகவும் முக்கியம். நாங்கள் அவனைக் குழந்தை முதல் பார்த்துக் கொண்டிருப்பதால் குற்றங்குறைகள் எங்கள் கண்களில் படாமல் போயிருக்கலாம். நீயே நன்றாக யோசனை செய்து சொல். ஹரியும் உன் விருப்பப்படியே செய்யலாம் என்று நினைக்கிறான்.

பிஜ்யா மட்டுமே 'அந்த வேலைக்காரன் ஏதோ உளறினான் என்று விடாமல், எதற்காக இப்படிக் கூடிக்கூடிப்பேசுகிறார்களோ?' என்ற ஏளனத்துடன் இருந்தாள்.

கஸ்தூரியும் பலவிதமான சிந்தனைகளுக்குப் பிறகு, தனக்கு ஆகாஷை மணம் முடிக்க விருப்பம்தான் என்றாலும் முதலில் பிஜ்யாவின் மணம் முடியவேண்டும் என்று மா ஜியிடம் கூறினாள். நியாயம்தானே?

நவ்ஜீத்திடம் ஒரு நாள் மா ஜி இந்த விவரங்களைக் கூறினது ஆகாஷுக்கு எட்டியது. எத்தனை வருடங்கள் ஆனாலும் கவலை இல்லை. கஸ்தூரிக்காக இந்த ஜென்மம் முழுவதும் காத்திருப்பேன் என்று கடைசி அண்ணியிடம் வசனம் பேசினானாம்:-) இப்போதெல்லாம் பக்கத்து டவுனில் சினிமா பார்க்கப் போய்வருகிறானல்லவா?

லலிதாவின் இளைய மைத்துனர்களுக்குக் கல்யாணம் நிச்சயமானது. பிள்ளை வீட்டுக்காரர்களின் சில சடங்குகளுக்கு மா ஜியுடன் பிஜ்யாவும் கஸ்தூரியும் போய்வந்தனர். வரமாட்டேனென்று முரண்டு பிடித்தவளைக் கெஞ்சிக்கூத்தாடிக் கால்பிடித்து, வழிக்குக் கொண்டுவந்தாள் கஸ்தூரி. 'இந்தச் சின்னவளுக்கு இருக்கும் பொறுப்பும், பொறுமையும், சாமர்த்தியமும் யாருக்கும் வராது' என்று பெருமிதம் அடைந்தார் மா ஜி.

'எல்லாம் நன்மைக்கே' என்று ஒரு பழமொழி உண்டல்லவா? அதைப்போன்றே இதிலும் ஒரு நன்மை விளைந்தது. லலிதாவின் மைத்துனன் அம்ரித்தின் மனைவியின் தூரத்து உறவினர் ஒருவர் பிஜ்யாவைப் பார்த்ததும் தங்கள் மகன் ஜீத்துக்குப் பொருத்தமாக இருப்பாளென்று நினைத்தார். அவர் மனைவிக்கு, மத்ராஸிப் பெண்'' என்ற தயக்கம் இருந்தாலும் கல்யாண வீட்டில் லலிதாவின் அனுசரணையைக் கண்டதாலும், பர்மீந்தர் தன் மருமகளைப் பற்றி ஊர்முழுதும் புகழ்ந்து கொண்டிருந்த செய்தியை முன்பே கேட்டிருந்ததாலும், லலிதாவின் தங்கை என்பதால் அவளும் நல்ல குணவதியாகவே இருக்கவேண்டும் என்றும் நம்பினார். ஜீத்தும், பிஜ்யாவின் அழகைக் கண்டு அதிசயித்துப் போயிருந்தான்.

மெல்ல இவ்விஷயம் லலிதாவை எட்டியது. அவளுக்கும் பரம சந்தோஷம்.

''மாப்பிள்ளைக்குக் கம்பீரமான தோற்றம். நன்றாகப் படித்திருக்கிறார். பிலாஸ்பூரில் அரசாங்க வேலையில் இருக்கின்றார். மூத்த அண்ணன் இருவருக்கும் இரண்டு தங்கைகளுக்கும் திருமணமாகி விட்டது. இன்னும் ஒரு தங்கைதான் பாக்கி. செல்வத்துக்கு குறைவில்லை. பிஜ்யா கொடுத்து வைத்தவள்தான்''

'' அப்பாடா..... இந்தப் படிக்காட்டை விட்டுத்தொலைத்து, நகரில் போய் வசிக்கலாம். நல்ல சம்பளமாமே. நாகரீக வாழ்க்கைக்குக் குறைவிருக்காது. முக்கியமாக, இந்தக் கஸ்தூரி ஒரு வேலைக்காரனை மணக்கப் போகிறாளாமே.... அதை விடக் கேவலம் உண்டா? இதெல்லாம் நடக்குமுன் இங்கிருந்து போய்விடலாம். இப்படி ஒரு வரன் வந்ததே என் அழகினால்தான்'' பிஜ்யாவுக்குத் தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியை அதிகம் வெளிப்படுத்த வேண்டாமே என்று கூடுதல் கவனமெடுத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு திருமணங்களையும் ஒரே சமயத்தில் வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த மா ஜி, இதைப் பற்றிப் பர்மீந்தரிடம் ஆலோசனை கேட்டார்.

' முதலில் பிஜ்யாவின் திருமணம் முடியட்டும். ஆகாஷ், கஸ்தூரி திருமணத்திற்கு என்ன் அவசரம்? இன்னும் சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம். இப்போது அவ்வளவாக வசதிப்படாது' என்றார் பர்மீந்தர்.

'நகரவாசிகளின் ஆடம்பரத்திற்கு நம்மால் ஈடுகட்ட முடியுமா? அவர்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருக்குமோ என்னவோ? எளிய முறையில்தான் ஆகாஷின் திருமணம் நடத்த முடியும். இதற்கே கொஞ்சம் கடன் வாங்கவேண்டித்தான் ஆகவேண்டும். நாம் கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்' என்ற எண்ண ஓட்டம் அவர் மனதில்.

மூன்றே மாதங்களில் பிஜ்யாவின் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு மனமகிழ்ச்சியுடன் செய்தான் ஆகாஷ். படித்த மாப்பிள்ளை என்ற பயபக்தியுடன் ஹரியும் மா ஜி, பிதா ஜியின் ஆலோசனைகளை அனுசரித்து, கூடுமானவரையில் விமரிசையாவே கல்யாணத்தை நடத்தி முடித்தான்.

அதே மாதத்தின் கடைசியில் ஆகாஷ், கஸ்தூரியின் நிச்சயதார்த்தம் வீட்டளவில் நடந்தது. அடுத்த அறுவடை முடிந்தபின் டும் டு டும்.


மதராசில் பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போனது. பக்கவாதம் வந்து
இடதுகைப்பக்கம் செயலில்லாமல் படுத்தபடுக்கையானார். மரணம் அடுத்துவந்து நிற்பதை உணர்ந்தவருக்கு மகன் இருக்குமிடம் தெரியாமல் மனம் அலைபாய்ந்தது. மற்ற குடும்பத்தினர் அவ்வப்போது வந்து சென்றனர். தேவா இருக்குமிடம் யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் நோயாளி இருப்பதால் வேலைகள் கூடின. அதன் காரணமாகவே ஒரு சிடுசிடுப்பு வந்து ஒட்டிக்கொண்டது இளையமகள் முகத்தில்.

தெருவில் சாமி ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீ ராம நவமி. வீட்டில் இருந்த அனைவரும் வாசலில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுகுமாரன் தேங்காய் பழத்தட்டுடன் நின்றுகொண்டிருந்தான். சாமி வீட்டு வாசலில் வந்ததும் தீபாராதனை ஆனது. கற்பூர ஆரத்தியைப் பாட்டிக்குக் காண்பிக்க உள்ளே வந்தான். 'பாட்டி, பாட்டி. சாமி வந்துட்டுப் போயாச்சு. இந்தா ஆரத்தி' என்றான். கண் திறக்காமல் கிடந்தவர் நெற்றியில் கற்பூரச்சூட்டை ஒற்றிவிட்டுத் தேங்காயைத் தின்பதற்காக அவசரமாக அம்மிக்கல்லுக்கு ஓடினான். சாமியின்கூடவே பாட்டியும் போனது யாருக்குமே தெரியாது.

அன்று ஞாயிறு என்பதால் வீட்டில் உறவினர் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கூடத்தில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த பாட்டியின் கடைசி மருமகள் ஏதோ எடுக்கவென்று மாமியார் படுத்திருந்த இடத்துக்கு போனவள் பாட்டியின் முகத்தில் உட்கார்ந்திருந்த ஈயை விரட்டும்போதுதான் லேசான சந்தேகம் தோன்றியது.

அடடடா...... என்ன ஒரு சாவு!! ஸ்ரீராமனே நேரில் வந்து கொண்டுபோயிட்டான்!!

தேவாவின் நண்பர் வீட்டுக்கு ஆள் போனது. அவருக்கும் தெரியாதாம். காசிக்குப் போகிறேன் என்று சொல்லிப்போனவர் இன்னும் வரவில்லையாம். எங்கே இருக்கிறாரோ? யாருக்குத்தெரியும்? விவரம் கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன் என்றாராம்.

பாவம். மகனின் கையால் கொள்ளிவாங்கக் கொடுத்து வைக்கவில்லை. எல்லாரும் கூடிப்பேசி, பேரன் கையால் ஆகட்டும் என்றதால் சுகுமாரன்
கிரியைகளைச் செய்தான். பாட்டியின் வீடு அவனுக்கு என்று முடிவாகி இருந்ததும் ஒரு காரணம்.

தேவா, கல்கத்தாவை விட்டுக் கிளம்பி மதுராவிலே சிலமாதங்கள் சுற்றித்திரிந்துவிட்டு, 'மகனைப் பார்க்கலாம்' என்ற யோசனையுடன் ரயில் ஏறினார்.

பயணம் தொடரும்...................

22 comments:

said...

ஆகா... பெரிய தொடரா இது... நாவலாட்டமால்ல இருக்கு... ம்... சும்மா சூப்பரா எழுதறீங்க கதை.எனக்கு நாவல் எடுத்தா அப்படியே மத்தவேலையெல்லாம் மறந்து முடிவு படிச்சே ஆகனும்..இப்ப என்ன ...

said...

:) கல்யாணத்துக்கு

:( பாட்டிக்கு

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

said...

ஹரி-ய விட்டு கதை விலகிப்போகுதேன்னு நெனச்சேன்..நல்லாருக்கு..லாவகமா கொண்டு போறீங்க..

நம்ம சீரியல்காரங்க கண்ணுல இந்த கதை பட்டுதோ,இன்னும் ரெண்டுமூணு பஞ்சாப் தங்கச்சிகள சேர்த்து நாலஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க..

said...

பொண்ணுங்களை கரையேத்தியாச்சு. பாட்டியையும் மேல ஏத்தியாச்சு. அடுத்து ஹரியோட அப்பாதானா... அவருக்கு என்னவோ...

said...

ரீச்சர்,சூப்பரா இருக்கு. இது சீரியலா? திரைப்படமா? எதா இருந்தாலும் சொதப்பிடுவாங்க சாக்கிரதை!!

said...

வாங்க முத்துலெட்சுமி.

எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்குமில்லை. கொஞ்சம் பொறுங்களேன்:-))))

said...

வாங்க கோபி.

பாட்டி ரொம்பப் பாவம்ப்பா. அந்தவரை ரொம்ப நாள் படுக்கையில் கிடந்து 'ச்சீ'ப்படாமல் சீக்கிரம் போனாங்க.

said...

வாங்க தங்ஸ்.
//நம்ம சீரியல்காரங்க கண்ணுல இந்த கதை பட்டுதோ,இன்னும் ரெண்டுமூணு பஞ்சாப் தங்கச்சிகள சேர்த்து நாலஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க..//

அப்படீங்கறீங்க:-))))))

said...

வாங்க ராகவன்.

//அடுத்து ஹரியோட அப்பாதானா... அவருக்கு என்னவோ...//

யாருக்கு எப்ப, எப்படின்னு யாருக்குத்தெரியும்? எல்லாம் தலையிலே எழுதி அனுப்புறதுதானாமே...(-:

said...

வாங்க கொத்ஸ்.

சொதப்ப விடலாமா? நாமே சீரியலா எடுத்தா ஓடாதா?

சீரியஸ்ஸாத்தான் சொல்றேன்:-)))))
பாட்டு சீன்ஸ் நிறைய வைக்கலாம். நம்ம தமிழ்மணம் கவிதாயினிகளும் கவிஞர்களும் பாட்டு எழுதலாமில்லையா?

said...

ரீச்சர், ஒண்ணு சொல்ல மறந்து போச்சு. ஒரு எழுத்துப்பிழை இருக்கு போல இருக்கே... பிரதாபம்? பிரலாபம்?

said...

பெரிய தொடர் கதையாகப் போகிறது. நன்றாகவே போகிறது. ஒவ்வொரு செய்தியையும் நன்றாக கவனித்து எழுதுகிறீர்கள். ராம நவமி. சாமி வீட்டு வாசலில் வந்து அழைத்துச் செல்கிறது என்றால் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

said...

கொத்ஸ்,

நானும் 'தாபமா' இல்லே 'லாபமா' ன்னு யோசிச்சேன். சீட்டுக்குலுக்கினதில் லாபம். அதான்.....

ஆமாம்.இப்படி ஒரு சொல் இருக்கா? இருந்தா அதுக்கு உண்மையான பொருள் என்ன?

தெரிஞ்சாச் சொல்லுங்களேன்.

said...

வாங்க சீனா.

பாட்டிக்கு நல்ல சாவுதான். 'அங்கே வந்தாவது சுகப்படு'ன்னு நேரில் வந்தே கொண்டுபோனாரோ?

தொடர் கொஞ்சம் பெருசாத்தான் போயிருச்சு. எப்படித்தான் சுருக்கினாலும்....நடந்ததை விட்டுறமுடியலை:-)

said...

பிரலாபம் (p. 702) [ piralāpam ] {*}, s. (பிர) sorrow, grief, lamentation, புலம்புகை; 2. unmeaning speech, பயனில் சொல்.

பிரலாபசன்னி, a raving fit.

பிரதாபம் (p. 702) [ piratāpam ] {*}, s. (பிர) greatness, honour, பெருமை; 2. fame, கீர்த்தி; 3. bravery, heroism; 4. splendour, brilliancy.

பிரபாவம் (p. 702) [ pirapāvam ] {*}, s. (பிர) dignity, majesty, பிரதாபம்; 2. fame, renown, கீர்த்தி; 3. light, lustre, ஒளி.

தாபமா? லாபமா? பாவமா? :)))

said...

சுருக்க வேண்டாம் துளசி மேடம்...சுவாரசியமான தொடர்தானே..எத்தனை அத்தியாயங்கள் இருந்தால் என்ன?

போன பதிவின் உங்கள் விசாரிப்புக்கான பதில்...பயணம் பத்தே நாள்தான்..முடித்துத் திரும்பி வந்தாயிற்று..

said...

கொத்ஸ்,
நீங்க இப்படி அகராதி 'படிச்சவர்'னு நான் நினைக்கவே இல்லை.
பொருளுக்கு நன்றி.

இதுலே அம்மாவின் பார்வையில் 'லாபம்'
அப்பாவுக்கோ 'தாபம்'.

அப்ப நமக்கு? வெறும் 'பாவம்'தான்:-))))

said...

வாங்க பாச மலர்.

ரொம்பப் போரடிச்சுரப்போகுதே என்ற பயம்தான்:-))))

said...

Good Posting and nice photos, thank you,

have a good day

said...

பாட்டி சாமிகிட்ட வந்த சேதி பஞ்சாபுக்கு வரவேன்டாமா.
கஸ்தூரிகுட்டி ரொம்ப ஸ்வீட்:)

எப்போ துளசி ந்ஈங்க
இந்தக் கிராமத்துக்குப் போனீங்க??
இவ்வளவு ரியலிஸ்டிக்கா இருக்கே!!!!!!!

said...

வாங்க வல்லி.

ஜனங்களுக்கு மகா சோம்பல். யாரு மெனெக்கெட கடுதாசி எல்லாம் எழுதரது? வீட்டுலே வேற யாராவது செய்யட்டுமேன்னு இருக்கறதுதான்.

ஹரிக்கு மட்டும் ஒரு மெயில் ஐடி இருந்துருந்தா நானே ஈமெயில் அனுப்பி இருப்பேன்:-)))))

said...

Thanks David:-)