Sunday, January 13, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 7

'சூடாக் கொஞ்சம் காபி எடுத்து வரவா?' என்று கேட்டபடி உள்ளே போன கடைசித் தங்கையைப் பார்த்துத் தலையை ஆட்டினார் தேவா. அதிர்ச்சி அடைந்தவராகத் திண்ணைமீது உட்கார்ந்திருந்தவர் கை தாடியை நீவியவாறு இருந்தது.


"அம்மா இப்படித் திடீரென்று.......ச்சே...... உள்ளூரில் இருந்திருக்கலாம்..
யாருக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று. போனமுறை வந்திருந்தபோது நல்லாத்தானே இருந்தார்கள்!"



"ஏண்ணே.......அதுவே கிட்டத்தட்ட ரெண்டுவருசம் ஆச்சே.ஆமாம் நீ எங்கே போயிருந்தே? ஒரு கடுதாசியாவது அப்பப்பப் போட்டுருக்கலாமுல்லே?"

"......................"


"ஆளு எல்லாம் அனுப்பி உன்னைத்தேடு தேடுன்னு தேடி அலைஞ்சுட்டோம். கடைசியில் சுகுமாரந்தான் எல்லாம் செய்யும்படி ஆச்சு... என்னத்தைச் சொல்றது போ. ஆனா அம்மா மனசு ரொம்ப அடிச்சுக்கிச்சு.வருவே வருவேன்னு வழி பார்த்துக்கிட்டே இருந்தாங்க. ஹூம்...."


"ப்ச்....."


"குடும்பத்துலே எல்லாருக்கும் மூத்தவன் இப்படி செஞ்சுட்டியே..."


"ஏம்மா..நீ வேற. நான் என்ன வேணுமுன்னா செஞ்சேன். காசிக்குப்போயிட்டு வரலாமுன்னு கிளம்பிப்போனவனை விதி எங்கியோ கொண்டு போயிருச்சு.
திருவேங்கடத்தைப் போய்ப் பார்த்துட்டு அங்கே இருந்துதான் நேரா இங்கே வந்தேன்"


" அட! நல்லா இருக்கானா? பொண்ணுங்க எப்படி இருக்காளுங்க? லலிதாவுக்குக் கல்யாணம் முடிஞ்சதா முந்தி ஒரு லெட்டர் வந்துச்சு. அப்புறம் ஒண்ணுத்தையும் காணோம்"



" மூணு பேருக்குமே கல்யாணத்தை ஜாம்ஜாமுன்னு நடத்திப்புட்டான். கெட்டிக்காரப்பய. தங்கச்சிங்க மேலே ரொம்பப் பாசமாத்தான் இருக்கான். பெரியவளுக்கு இப்போ ரெண்டு பசங்க. உள்ளூர்லேதான் கட்டிக்கொடுத்துருக்கு அவளையும், கஸ்தூரியையும். விஜயாதான் கொஞ்சம் தள்ளி வேற ஊரில். அது பெரிய டவுன் "


" பரவாயில்லையே.....அப்ப மகன் கல்யாணம்தான் பாக்கின்னு சொல்லு"


" ஆமாம்மா...அது விசயமாத்தான் அம்மாகிட்டேக் கேக்கலாமுன்னு வந்தேன்............ நம்ம சொந்தத்துலே எதாவது பொண்ணுங்க இருக்கா?"


" ஆ(ஹ்)ங்.............. மூத்தவன் நீ. எங்கிட்டே கேக்கறே? ரெண்டு நாள் இருப்பேல்லே?"



" இருக்கலாம். ஆனா இன்னும் தொரைசாமியைப் பார்க்கலை. திருப்பதிக்குப் போயிருக்கானாம். நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கேன்."


" ஆமாம்.....எங்களையெல்லாம் விட உனக்கு சிநேகிதக்காரங்கதானே ஒசத்தி. போ, போயிட்டு வா"


"அட, நீ என்னம்மா? இன்னிக்கு நேத்தாப் பழக்கம்? அது இருக்கட்டும். அவன் வீட்டுலே கொஞ்சம் சாமானுங்களைப் போட்டுட்டுப் போனேன். அதையெல்லாம் எடுக்கணும்"



இரவு சாப்பாட்டின் போது, பஞ்சாப் விவகாரங்களையெல்லாம் சொன்னார். 'கதையாட்டம் இருக்கு' என்றபடி ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சுகுமாரன்.



உறவினர் வீட்டில் கல்யாண வயசில் பெண்கள் இருக்கின்றார்களா என்ற ஆராய்ச்சி நடந்தது. 'பெரியக்காவோட கடைசிப்பெண் இருக்கா. ஆனா படிக்கிற பொண்ணை எப்படிக் கேக்கறது?'

'டக்' என்று ஆர்வம் வடிந்து போனது. இப்ப எல்லாப் பொண்களும்தான் படிக்கிறாங்க.


திருவேங்கடத்துக்கோ படிப்பில்லை. யாரு பொண்ணு கொடுப்பா? அதுவும் அம்மாந்தூரம்............ நம்மாளுங்க யாரும் தரமாட்டாங்க.



அங்கங்கே உறவினர்களுடன் இதுபற்றிப் பேசியதில், 'ஐய்யோ.....தேவா பையனுக்கா? எதை நம்பிக் கட்டிக்கொடுக்கறது? அந்தப் பேச்சே வேண்டாம்' என்று ஒரே மாதிரி பதில் வந்தது.



தன் ஆப்த நண்பன் தொரைசாமியுடன் சேர்ந்து ஆலோசித்தார் தேவா. "பொண்ணுக்கு இந்தி தெரிஞ்சிருக்கணும். இல்லேன்னா கஷ்டமாயிரும். அதை வச்சுக்கிட்டே கொஞ்சநாளில் அவுங்க பேசற பாஷையைப் புடிச்சிறலாம்."


தெரிந்தவர்களிடம், அதுவும் உறவுக்காரர்களிடம் சொல்லிவைத்துப் பெண் கிடைப்பது என்பது நடக்காத காரியமென்று புரிந்தது.



"பொண்ணுக்கும் பொடவைக்கும் பிணைபடக்கூடாது. நாளைக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா நம்ம தலையை உருட்டுவாங்க"


' கலம் மேஜ் பர் ஹை'

கிதாப். குர்ஸி. ஆத்மி. லட்கி,

ஜமீன் பர் காகஜ் ஹை

மேரா நாம் ராம் ஹை

மெய்(ன்) இஸ்கூல் ஜாதா ஹூ(ம்) '



அடடே!! பொண்ணுக்கு நல்லா இந்தி தெரியும்போல இருக்கே......

அங்கே இங்கே என்று தேவாவின் நட்புகள் தேடியதில் கிடைத்தவள் கனகா.
அட, நம்ம முன்சாமியண்ணனின் தம்பி பொண்ணுப்பா. நல்லாப் படிச்ச பொண்ணு. எட்டாப்பு முடிச்சுருச்சு. பக்கத்துலே ஒரு இந்தி வகுப்பு நடக்குதுன்னு அங்கே போய்க்கிட்டிருக்கு. மூணே பரிட்சைதானாம். முடிச்சுட்டா, இந்திப் பண்டிட் வேலைக்கு(???) போலாமாம்.



"ஆமாம். அவுங்க வேற ஜாதியாச்சேப்பா. நம்மூடுங்களிலே பொண் எடுப்பாங்களா? "


"ஐய்ய.............நம்ம தேவாண்ணே அப்படிப் பட்ட ஆளா? எப்பனாச்சும் ஜாதி பத்திப் பேசிக்கீறாரா? "


"அட, நீ ஒண்ணு. முன்சாமியண்ணன் மொதல்லே இதுக்கு சம்மதிக்க வேணாமா? அத்தச் சொல்லு. "



"சரி..தேவாவை விடு. அவங்க சாதி சனம்? மொதல்லே அம்மாக்கெளவி என்ன சொல்லுமோ? "


"ஏஏஏ......கெய்வி எங்கே இருக்கு? அதான் போய்ச்சேந்துருச்சே......அது ஒரு கோராமை.... தேவா எங்கிய்யோ போய்ட்டாப்பல. அங்கே பொணத்தை வச்சுக்கிட்டு அல்லாடுறாங்க. இங்கே ஆள் வந்து தேவா எங்கே எங்கேன்னு தொளைச்சு எடுத்துட்டாங்கபா. உனக்குத்தான் தெரியுமே...தேவா அப்படிச் சொல்லிட்டுப்போற ஆளா? போனா போனவிடம் வந்தா வந்தவிடம்...
கடைசியிலே பேரன் கொள்ளி வச்சானாம். "



"தேவா வீட்டுலே இப்ப அதுதான் மூத்தது. மத்தவங்க இவர் பேச்சைக் கேட்டுத்தான் ஆவணும். "


முனுசாமியின் தயவால் துறைமுகத்தில் வேலை செய்யும் கூட்டம் இப்படி அலப்பரைந்துகொண்டு இருந்தது. சரக்கு ஏத்த இறக்க என்று இருக்கும் சின்ன ஒப்பந்தக்காரர் முனுசாமி. இவருடைய தம்பி சின்னசாமியும் அண்ணன் கூடவேதான் இருந்து தொழில் செய்துகொண்டிருக்கிறார். இவர் மகள் கனகாதான் இப்போதையக் காட்சியின் நாயகி.



வீட்டுக்கூடத்தில் ஓரமாகப் படுத்திருந்த தொத்தாவைச்சுற்றி உட்கார்ந்து பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'என்னடா சொல்றே......நம்ம தேவாவோட பையனுக்காக் கேக்கறாக?'


"ஆமாம் தொத்தா. தேவாவை ஒனக்குத் தெரியாதா? அவுங்கப்பாரு காலத்துலே இருந்தே நமக்குப் பழக்கம்தானே? "

"அதாம்ப்பா எனக்கும் ரோசனையா கிடக்கு. தேவா பொண்டாட்டி பட்ட கஷ்டத்தையும் பாத்தவதானே நான்? "


"அதுவுஞ்சரிதான். ஆனா நாம அவரு பையனுக்குத்தானே பேசறோம்.
அவன் கல்யாணம் முடிச்சுக் கூட்டிட்டுப் போயிருவானில்லெ....நல்ல அம்சமான பையந்தான்."

"இருந்தாலும்....... "


"பையன் போனவிசை வந்துருந்தப்ப நீ கூடப் பார்த்தயே....காணாமப்போனவன், கிடைச்சுட்டான்னு தேவா இங்கெ கூட்டியாந்து காமிச்சுச்சு இல்லெ. நல்ல பணக்காரவங்கதான் அவனை எடுத்து வளத்தவங்க. தேவாகூட அங்கெ போய் நாலு மாசம் இருந்துட்டு வந்து கதைகதையாச் சொல்லுச்சு. நல்லமாதிரி சனங்களாம். தங்காச்சிகளைக் கொண்டுபோன சடுதியில் மூணு பேருக்கும் கண்ணாலத்தை முடிச்சுட்டானாம். கெட்டிக்காரன்.....



நம்ம பொண்ணை நல்லாப் பாத்துக்குவாங்க. என்ன தொலைதூரமாப் போச்சு...... நினைச்சா கொண்டா வரக் கொள்ள முடியாது. மத்தபடி செல்வாக்கா இருப்பா. "


அவர்கள் வீட்டில் எதுவாக இருந்தாலும் 'தொத்தா' சரி என்று சொன்னால்தான் நடக்கும். சித்தப்பாவின் மனைவி. வீட்டிலே தற்சமயம் இருக்கும் பெருந்தலை.


'ம்ம்ம்ம்ம்ம்...... ஒம்பொண்டாட்டி என்ன சொல்றா?' என்றபடி எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார் தொத்தா.


நடப்பது தன் கல்யாணப்பேச்சு என்று தெரிந்தாலும், என்ன முடிவு ஆகுமோ என்று மனதில் ஒரு பதைப்புடன், சின்னப்பாட்டியின் அருகில் ஒட்டி உட்கார்ந்து பெரியப்பா, பெரியம்மா இன்னும் மற்றுள்ளோரின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கனகா.


"ஏண்டி.. உனக்கிஷ்டம்தானா? "


வெட்கச்சிரிப்புடன் தலையை ஆட்டினாள் கனகா. போனமுறை இங்கே வந்த ஹரியைப் பார்த்திருக்காள். அவந்தான் தனக்கு என்று பேச்சு வந்ததில் இருந்து கட்டாயம் நடக்குமா? எப்படியாவது நடக்கணுமே என்ற பதற்றத்தில் இருந்தாள்.


மூணுநாள் ரயில் பயணமாமே........ அங்கெ எப்படி இருக்கும் ஊரெல்லாம்? சோறே கிடைக்காதாமே...... ரொட்டியைத் தின்னா வவுத்துக்காகுமா..... ....
ச்சீ...இதென்ன சோத்தைப் பத்தி நினைப்பு....


'அதுகிட்டே என்னாத்தைக் கேக்கறது? அது கொழந்தைப்புள்ளெ. கட்டிக்கன்னா கட்டிக்கிடப்போகுது. எங்களையெல்லாம் கேட்டுக்கிட்டா கண்ணாலம் ஆச்சு?' இடையில் புகுந்தாள் கனகாவின் அம்மா சாந்தி.


ரோஸ்கலரில் அச்சடித்தக் கல்யாணப் பத்திரிக்கையைப் படித்தவாறே 'பொண்ணு பேரு கனகாவா?' என்றாள் தேவாவின் இளைய தங்கை.


'அண்ணனுக்கு புத்தி கெட்டுப்போச்சு' என்று மனதில் எண்ணம் ஓடியது.


'ஆமாம். நம்ம கன்னியப்பன் இருந்தாரில்லை அவர் பேத்தி' என்றபடி தேவா முகமெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்.


"திருவேங்கடத்துக்கு லெட்டர் போட்டுட்டேன் . அடுத்தவாரம் கிளம்பி வந்துருவான். நான் இன்னும் நம்ம வீட்டு ஆளுங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும். கிளம்பறேன். மறக்காம கல்யாணத்துக்கு வந்து சேருங்க "


நம்ம வீட்டில் கல்யாணம் நடக்கப்போகுதா என்று சுகுமாரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.



எதிர் பார்த்தது போலவே மறுநாள் தேவாவின் தம்பி வீட்டில் 'அவசரக்கூட்டம்' ஏற்பாடானது.


"இதென்ன அண்ணன் இப்படிச் செஞ்சுட்டார்?"


"நல்லவேளை அம்மா போய்ச் சேர்ந்துட்டாங்க, இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காம."


"ப்ச்.......எப்ப நம்ம பேச்சை கேட்டுருக்கார்? எல்லாம் அவருக்குத் தோணியபடிதான்."


"ஏண்டா உனக்கு கன்னியப்பன் யாருன்னு ஞாபகம் இருக்கா? "

"அடப் போக்கா..... உனக்கே அவர் யாருன்னு தெரியலைன்னா எனக்கெப்படி?"

"ஆனாலும் இப்படிப்போய் பொண்ணெடுப்பாருன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை"


"அதுக்கு அவரைக் குத்தம் சொல்லி என்ன செய்ய? நீங்க யாராவது பொண்ணைக் குடுக்கறேன்னு சொன்னீங்களா? "


சமயம் பார்த்து மூத்த நாத்தனாரைச் சீண்டினார் மூத்த தம்பி மனைவி.
அந்தம்மா மட்டும் சும்மா இருப்பார்களா?


'அதுக்காக, டாக்டர் படிச்சுக்கிட்டு இருக்கும் பொண்ணை அவனுக்குக் கட்டிவைக்கணுமா?' என்று நொடித்தார்.





(பெரிய குடும்பமாக இருப்பதால் எல்லோரையும் பேர் சொல்லி அறிமுகம் செய்வது சற்றுச் சிரமம்)


சண்டை உருவாகும் நேரம் என்று உணர்ந்த அவர் கணவர், 'ஞாயித்துக்கிழமையா இருக்கு. லீவுகீவு ஒண்ணும் போடவேண்டாம்' என்று பேச்சை மாற்றினார்.

"நல்லவேளை கல்யாணத்தைக் கோவிலில் வச்சுருக்காங்க. அண்ணந்தான் கண்டிப்பாச் சொன்னாராம். எங்க அம்மாவுக்கு இந்தக் கோயில்தான் ரொம்பப் பிடிக்கும். அங்கேதான் வைக்கணுமுன்னு...."


வில்லிவாக்கம் பெருமாள் கோயிலில் கல்யாணம். முகூர்த்தம் பத்தரை பன்னெண்டு. அன்று காலையில் ஒம்போது மணி லோக்கலில் அம்பத்தூரில் இருந்து வில்லிவாக்கம் செல்வது என்று முடிவு செய்தனர்.
'எல்லாரும் கரெக்டா வந்துருங்க' என்றதோடு ''அவசரக்கூட்டம்' ஒரு முடிவுக்கு வந்தது.


கடிதம் வந்தது முதல் ஒரு பரபரப்பு பிதா ஜியைத் தொற்றிக்கொண்டது. மா ஜியும், அவரும், ஹரியும் சேர்ந்து மத்ராஸ் போகவேண்டும் என்று முடிவு செய்தார். இங்கே மற்ற வேலைகளை ஆகாஷ் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் அண்ணன் கல்யாணம் பார்க்க ஆசை இருந்தாலும், இங்கே கடமைகள் காத்திருந்தன. எப்படியும் இங்கேதானே வந்து சேரப் போகிறான். அப்போது அண்ணியைப் பார்த்தால் போச்சு என்று ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொண்டனர்.




பிரயாணத்திற்குக் கொஞ்சம் புதுத்துணிகள் வாங்கலாம் என்று பக்கத்து டவுனுக்குப் போனார்கள் பிதாஜியும் ஹரியும். என்னவோ போதாத காலம்,
பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கால் தவறி விழுந்துவிட்டார் பிதா ஜி. ஏற்கெனவே இருந்த கால்வலியுடன் இப்போது எலும்பு முறிவும் சேர்ந்து கொண்டது.


கட்டுப்போட்ட காலுடன் யாத்திரை கஷ்டம் என்பதால் பயணத்திட்டம் எல்லாம் மாறியது. கணவரைக் கவனித்துக் கொள்ள மா ஜி தேவைப்பட்டார். வயதானவருக்குக் கூடமாட உதவ ஆள் வேணாமா?



தனித்துப் பயணம் செய்துதான் ஆகவேண்டும் என்று ஹரி புறப்பட்டான். கல்யாணத்தைத் தள்ளிப்போடலாம் என்று தீர்மானித்தவனை வற்புறுத்தி வழியனுப்பி வைத்தனர் கிராமத்தினர்.


பயணம் தொடரும்........................




நாளைக்குப் பொங்கல் பண்டிகையாச்சே. அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாளுக்கான வாழ்த்து(க்)கள்.

36 comments:

said...

இவங்களும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. குடுக்குற வீட்டுல எடுத்தாலும் விட மாட்டாங்க. என்ன மனுசங்கய்யா!!!!!

சரி.. ஹரிக்கும் கனகாவுக்கும் என்னாகுதுன்னு பாப்போம்.

said...

வாங்க ராகவன்.

" வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது"

ஹரி கனகா நல்லா இருக்கணும்.

said...

ரீச்சருக்கும் பள்ளியூடத்தில் எல்லாருக்கும் நம்ம பொங்கல் வாழ்த்துகள்.

said...

என்ன ரீச்சர், இன்னும் அடைப்புக் குறிக்குள் க்கன்னா இருக்கு? பழக்க தோஷமா? :)

said...

பொங்கல் வைத்தாகிவிட்டதா?
எனக்கு நேற்றே ஒரு பாசக்கார வலிப்பதிவர்,அவர் வீட்டுக்கு கூப்பிட்டு போட்டார்.:-)
இந்த கதையை நடுவிலேயே விட்டுவிட்டேன்...இன்னும் இரண்டு பாகம் படித்துவிட்டு வருகிறேன்.

said...

//பாசக்கார வலிப்பதிவர்,//

ரொம்ப அனுபவிச்சுப் படிச்சு இருக்கீங்க போல!! :))

Anonymous said...

//பொண்ணுக்கு இந்தி தெரிஞ்சிருக்கணும். இல்லேன்னா கஷ்டமாயிரும்.// இது கொஞ்சம் பிரச்சனைதான். தமிழ்நாட்டுல இந்தி தெரிஞ்ச பெண்கள் கொஞ்சம்தானே.

//இந்திப் பண்டிட் வேலைக்கு(???) போலாமாம்.// ந‌ல்ல‌ காமெடி போங்க‌.

எப்ப‌டியோ ஹ‌ரிக்க‌ ந‌ல்ல‌ ம‌னைவி கிட‌ச்சாச்சரி.(அது உங்க‌ கையில‌ இல்ல‌ இருக்கு)

Anonymous said...

Labels: எலும்பு முறிவு

அப்படின்னு இருக்கு. ????

said...

பொண்ணு தேவிகா பொண்ணு கனகா மாதிரி இருக்குமா?

பிதா ஜிக்கு சீக்கிரம் குணமாகனும்..

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

said...

//பாசக்கார வலிப்பதிவர்,//

ரொம்ப அனுபவிச்சுப் படிச்சு இருக்கீங்க போல!! :))
செம கில்லி இது.
ஐய்யையோ!!! டீச்சர் காப்பாத்துங்க....:-))

said...

ஹையா..ஹரிக்குக் கல்யாணம்.ஹரிக்குக் கல்யாணம்!

said...

கிளம்பறச்ச காலை ஒடைச்சக்கணுமா பிதா ஜி.
பாவம் ஹரி. கனகா அவனுக்கு நல்ல துணையா இருக்கட்டும்.

பிள்ளை வீட்டுச் சீரா சூடியான்,சாடி,பளபளா ஸ்லிப்பார் எல்லாம் அனுப்பலாமா:))

said...

வாங்க கொத்ஸ்.

நம்ம பள்ளிக்கூடத்தில் பொங்கல் களை கட்டிருச்சு:-))))

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

அவ்வையார் காலத்துலேயே கள் இருந்துச்சுச்சாம்ப்பா.

கொண்டாட்டமுன்னா அது இல்லாமலா...
அதான் சேர்த்துருக்கேன்.

பெரியவர் வேணாமுன்னு சொன்னாலும் நம்ம ஸ்டைல் ஆச்சேன்னு விட முடியலை.

said...

வாங்க குமார்.

இன்னிக்கு போகி கொளுத்தியாச்சு.
நாளைக்குத்தான் பொங்கணும்:-)))

நிதானமாத்தான் படிச்சுட்டு வாங்க. ஹரி இங்கே எங்காவது கிடப்பான்:-))))

said...

வாங்க ச்சின்ன அம்மணி.
என் கையில் என்ன இருக்கு? எல்லாம் அவுங்கவுங்க அதிர்ஷ்டமாம்.

பழமொழி கூட இருக்கு.

said...

வாங்க தங்ஸ்.

கதை நடந்த காலத்தில் தேவிகான்னா யாருன்னே யாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அப்புறம் கனகா எங்கே?

said...

குமார்,

கொத்ஸ் மொக்கையிலே பிஸியா இருக்கார். நாமெல்லாம் இந்தப் பக்கம் ஓடிறலாம்:-))))

said...

வாங்க பாசமலர்.

நீங்களும் நம்ம 'சுகுமாரன்'போலவே குஷியா இருக்கீங்க!!!

said...

வாங்க வல்லி.

ஹரி கொண்டு வந்த மூட்டையை நீங்க எப்பப் பிரிச்சுப் பார்த்தீங்க?

கரெக்டா எல்லாத்தையும் சொல்றீங்களே!!!!!

said...

இத்தனை தங்கை இருந்தும் தாலிபிடிக்கவும் கேலி செய்யவும் ஆளில்லாமல் ஹரி கல்யாணமான்னு மனசு கேக்கல எனக்கு ....

said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

தொடர்கதை படிக்கும் பொறுமையெல்லாம் இல்லாததால் இதுவரை போர்சன்ஸ் எல்லாம் ஸ்கிப். முடிந்நபின் ஸ்டடி ஹாலிடேய்ஸில் ஒரே நாளில் படித்து பாஸ் செய்வோம் :))

said...

ப்ரஸெண்ட் டீச்சர்....

பொங்கல் வாழ்த்துகளை
டீச்சருக்கும் வகுப்புத்தோழர்களுக்கும்
தெரிவித்துக் கொள்கின்றேன்!

said...

யப்பா எப்படியோ ஹரிக்கு ஜோடி கிடைச்சிடுச்சி...;)

ஆனா டீச்சர் கடைசியில படிக்கும் போது அடுத்த பாகத்துல ஏதவாது ஆதிர்ச்சி இருக்குமேன்னு தோணுது.

தொத்தா - எங்க அம்மாவை இப்படி தான் கூப்பிடுவாங்க எங்க அக்காங்க எல்லாம்...இப்ப எல்லாம் சித்தி தான் ;)

said...

ஹரிக்குக் கல்யாணம் - மகிழ்ச்சியா இருக்கு - ஆனா தங்கைகள் போக முடிலே - சூழ் நிலைகள். மா ஜியும் பிதா ஜியும் போகாதது துளசி கைங்கர்யம். காலை ஒடைச்சிட்டாங்க.காரணம் அடுத்த பகுதிகள்ளே தான் தெரியும். பாப்போம்

said...

வாங்க முத்துலெட்சுமி.

இதுதான் கொடுப்பனைங்கறது(-:

தூரதேசத்தில் இருந்துக்கிட்டு, எத்தனையோ அண்மைகளை நஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும் ஓரு வாழ்க்கை.

சிலபேருக்கு இப்படி அமைஞ்சு போயிருதுப்பா.

said...

வாங்க மணியன்.

அர்ரியர்ஸ் கூடிக்கிட்டே போகப்போகுது..ஆமாம்:-))))

said...

வாங்க சிஜி.

வகுப்புக்கே பொங்கல் மகிழ்ச்சியைக் கொடுத்துருக்கு.

நன்றிங்க.

said...

வாங்க கோபி.

அவரவருக்கு 'ஜோடி'யைப் படைக்காம விட்டுருவானா ஆண்டவன்?

அதைவிட வேறு வேலை என்னவாம்?:-)))

திருப்பங்கள் நிறைஞ்ச வாழ்க்கை எல்லாருக்கும் இருக்குமா?:-))))

said...

வாங்க சீனா.

என்னங்க இது! நானே பிதாஜியைப் பஸ்ஸிலே இருந்து தள்ளிவிட்டுட்டேன்னு நினைக்கிறீங்களா?

:-))))))

said...

வாங்க சீனா.

என்னங்க இது! நானே பிதாஜியைப் பஸ்ஸிலே இருந்து தள்ளிவிட்டுட்டேன்னு நினைக்கிறீங்களா?

:-))))))

said...

இந்தக் கதையை படம் எடுத்தால், யாரை ஹரியாகப் போடுவது?
யார் யாரை ஹரியின் தங்கைகளாக போடுவது
எனத் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் எல்லாம்
தலையை பிய்த்துக்கொண்டு இருக்கார்களாம்.

ஆனால் ஒரு குத்து பாட்டு, ஒரு ஃபைட் அட் லீஸ்ட்
வேண்டும் என்கிறார்கள். அடுத்த பயணத்தில் ஒரு
குத்து பாட்டு, ஒரு ஃபைட் ஸீன், ஒரு கனவு சீன்
எதற்கும் இன்ட்ரட்யூஸ் செய்துவிடுங்கள்.
நிசமா
தமிழ் சினிமாவில் இதுதான் அடுத்த ஹிட்.
மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.

said...

ரொம்ப நல்லா சுவாரஸ்யமா போய்க்கொண்டு இருகிறதுங்க. முழுதும் படித்து எழுதுகிறேன்.

said...

வாங்க மேனகா.

ஹரி கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூன் பாட்டு கனவு சீன் அண்டார்டிக்லே வச்சுக்கலாம். எனக்கு வீட்டுக்குப் பக்கத்துலே என்றதால் கேமெரா க்ரூ, ஷூட்டிங் வசதிகள் ஏற்பாடு செய்ய சுலபம்.( பொழுதன்னிக்கும் என்ன சுவிஸ் வேண்டிக்கிடக்கு?)

பெண்ணுக்கு நலுங்கு சமயம் (இப்பெல்லாம் அந்தாக்ஷரி ஃபேமஸ்ன்னு சொல்றாங்களே கல்யாண வீடுகளில் ) ஒரு பெரிய குரூப் டான்ஸ்.
காக்ராவும், சுடிதாருமா ஜொலிக்கணும். ஆம்பிளைகளுக்கு ஒரு அஞ்சு மீட்டர் துப்பட்டா போதும்தானே?

ஃபைட் சீன் தான் பஞ்சாப்லே வச்சுக்கணும்.எந்த மாதிரி க்ரூரமா இருக்கணுமுன்னு ஆக்ஷன் இன் சார்ஜ் முடிவு செஞ்சு சொல்வார். கனல் கண்ணனைப்போட்டா, அவரும் ஒரு சீன்லே வந்தே தீருவேன்னு அடம் பிடிக்கிறார்னு கேள்வி:-)))))

இன்னும் எப்படி மெருகேத்தலாமுன்னு ஐடியாவை அள்ளி விடுங்க.உங்களையெல்லாம்தான் மலைபோல நம்பி இருக்கேன்.

said...

வாங்க ஜீவி.

முழுசும் படிச்சுட்டே வாங்க. படம் எடுக்கும்போது டிஸ்கஷனுக்குச் சொல்லி அனுப்பறேன்:-)))))

said...

ஹரி/திருவேங்கடம் - கனகா பேரு பொருத்தம் நல்லா இருக்கு. ஆனா என்ன பிதா ஜிக்கு இப்படி காலு உடைஞ்சு போச்சே.

said...

வாங்க குமரன்.

வயசானவங்களுக்கு இப்படித்தான் கீழே விழுந்து கையைக் காலை உடைச்சுக்கும்படி ஆகிருது.

பாவம். கல்யாணத்துக்குப் போகணுமுன்னு எவ்வளவோ ஆசையா இருந்தார்.....ப்ச்