Friday, October 26, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 39


20/1
என்னமோ பரிட்சைக்குப் போறதுபோல இருக்கு.
இன்னைக்குத்தான் பில்டிங் இன்ஸ்பெக்ஷன் ஃபைனல்! காலையிலே 10.30க்கு வராங்களாம்! நாங்க அங்கெ சீக்கிரமாவே போயிட்டொம்.
இவர்தான் வீட்டையெல்லாம் நல்லா ப்ரூம் போட்டு ப்ரஷ் செஞ்சுவச்சார். நான் கொஞ்சம் 'மணி ப்ளாண்ட் எடுத்துக்கிட்டுப் போனேன்.
கொஞ்சம் அலங்காரம் இருக்கட்டும்ன்னு! நாம்தான் இதை 'மணி ப்ளாண்ட்'ன்னு சொல்றோம். இதுக்கு இங்கத்துப் பேர் 'டெவில்ஸ் ஐவி' ஒருவேளை பணம், சாத்தான் ன்னு மறைமுகமாச் சொல்றாங்களோ? நேத்தே நம்ம பில்டர் எல்லா ரப்பிஷ்ம் எடுத்துட்டுச் சுத்தம் செஞ்சு வச்சார். '



இன்ஸ்பெக்டர் வந்தாச்சு! ச்சும்மா அங்கும் இங்கும் பார்த்துட்டு, கிச்சன்லே ஒரு ட்ரா இழுத்துப் பார்த்துட்டு, டாய்லெட்டை ஃப்ளஷ் செஞ்சு
பார்த்துட்டு, சரின்னுட்டாரு. கெஸ்ட் டாய்லெட்லே உள்ளெ விளக்கு சுவிட்சைத் தேடுனாரு போல, கோபால் சொன்னாரு அது வெளியே
வச்சிருக்கு. ஆளுங்க உள்ளெ போறதுக்கு முன்னாலெ விளக்கு வரட்டும்ன்னு''!



அடுப்பு தரையில் இருக்குல்லையா....அது ஒரு பலகை மேலே உக்காரணுமாம். அதுக்கு ஒரு அஞ்சு செ.மீ உயரப் போர்டு வைக்கணுமுன்னு சொன்னார். அப்புறம் அடுப்போட ரெண்டு பக்கமும் சுவத்திலே ஹூக் போட்டு ஒரு சங்கிலியாலே கட்டிப் போடணுமாம். (இல்லேன்னா ஓடிப்போயிருமா? ) வாய்வரைக்கும் வந்த வார்த்தையை முழுங்குனேன். எல்லாம் சேஃப்டிக்காகவாம். முன்னாலே சரிஞ்சு விழுந்துருமாமே. இவ்வளோ பெரிய அடுப்பு சரியுமா? சரி. அவுங்களோட சட்ட திட்டங்கள். செஞ்சுரலாம்.



மத்த ரெண்டு பெட் ரூமுக்குப் பக்கத்துலே ஸ்மோக் அலாரம் வைக்கலை. அது மூணு மீட்டருக்குள்ளெ இருக்கணுமாம். நான் சொன்னேன்
பேட்டரியிலே வேலை செய்யற ஒண்ணை வாங்கி அந்த பாத்ரூம் வாசலிலே வச்சுட்டா ரெண்டு ரூமுக்கும் ஆச்சுன்னு .அதை க்ரேக் வைக்கறேன்னு சொன்னாரு.அந்த இன்ஸ்பெக்டர் ஒரு டெம்ப்ரரி சர்ட்டிஃபிகேட் எழுதிக் கொடுத்துட்டுப் போனார். சரியானது அப்புறம் அனுப்புவாங்களாம்!


மத்தியானம் நாங்க மறுபடியும் கார்பெட் வேட்டைக்குப் போனோம். இப்ப என்ன டிஸைன், எவ்வளவுன்னு எல்லாம் விவரம் இருக்கறதாலே (மொத்தம்
மூணு இடத்துலேதான் இது கிடைக்குதாம். அதான் ஒண்ணு இல்லைன்னு ஆயிருச்சே ) ரெண்டே இடம்தானே சீக்கிரம் பார்த்துடலாம்ன்னு
போனோம். ஜேட் ஸ்டேடியம் (இதை அநேகமா நீங்க டிவியில் பார்த்துருக்கலாம். இங்கேதான் க்ரிக்கெட் மேட்ச் நடக்கும்) பக்கத்துலே ஒரு கடையிலெ ஏற்கனவே பார்த்து வச்சிருக்கோம். அங்கே போறதுக்கு முன்னே நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே மந்தவெளித் தெருவிலே (மேண்டவில் ஸ்ட்ரீட்) ஒரு கார்பெட் கடையிலே ஸேல் இருக்கு ச்சும்மா அங்கெ போயிட்டுப் போலாம்ன்னு போனா அங்கெ நம்ம டிஸைன் இருக்கு. இதுதான் அந்த மூணாவது கடையாம்! அங்கே இருந்த அலிஸ்டர்கிட்டே விவரம் சொன்னோம். முதலிலே பத்தாயிரத்துச் சொச்சம் சொன்னாரு. அப்ப நான்
சொன்னேன், 'ஏற்கெனவே இன்னோரு இடத்துலே கேட்டு வச்சிருக்கேன். இப்ப இங்க கேக்கறேன். எது மலிவோ அங்கெ கொடுப்பேன்'னு!
அப்புறம் அந்த ஆளு சொன்னாரு எவ்வளோன்னு அளவெடுக்கணும்.
50 மீட்டர்ன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரத்துலே 9500க்கு
தரலாம்ன்னு சொன்னார். ஆனா எதுக்கும் அந்த ப்ளானைத் தாங்க அளந்துட்டு ஃபோன் செய்யறேன்னும் சொன்னார்.
(ஆமாமாம். ஊர் முழுக்க நம்ம ப்ளானைக் கொடுத்தப்ப இங்கெ கொடுக்க விட்டுப்போச்சு போல! இந்தாப்பா வச்சுக்கோ)
அங்கேயே நம்ம வைனலுக்கும் சொல்லியாச்சு! எல்லாத்துக்கும் ஒரு க்வோட் தரென்னு சொன்னாங்க.
நாங்க அந்த வீட்டுக்குக் கொஞ்சம் கொஞ்சமா சாமான்களை எடுத்துக்கிட்டுப் போலாம்ன்னு வேலையை தொடங்குனோம். இங்கத்து அடுக்களையிலே இருந்து கொஞ்சம் சாமான்கள் எடுத்துக்கிட்டுப் போனோம். மத்த சாமான்களை கார்பெட் போட்டதுக்கு அப்புறம்தான் வைக்கணும். அடுக்களைன்னா டைல்ஸ்தானே? கஷ்டம் இல்லைன்னு தோணுச்சு.
அதுக்குள்ளெ கார்பெட்க் கடை அலிஸ்டர் ஃபோன் செஞ்சு டிஸைன் ஒரே மாதிரின்னா ( நீளக்கோடு, குறுக்குக் கோடு) காசு கொஞ்சம் கூடும்.
நெடுக்கு, குறுக்குன்னா 9500 சரின்னாராம். மொதல்லே எது நெடுக்கு, எது குறுக்குன்னு தெரியலையெ...... அதுக்காக ஒருதடவை கடைக்குப் போனோம்.
அங்கே பார்த்தா அப்படி ஒண்ணும் ப்ரமாத வித்தியாசம் இல்லை! நாலு மீட்டர் அகலம் இருக்கே. அதுவுமில்லாம கன்டின்யூடா இல்லாம நடுவிலே ஒரு ப்ரேக் வருதுல்லே. அதுனாலெ குறுக்கு, நெடுக்காவெ இருக்கட்டும்ன்னு சொல்லிட்டு அட்வான்ஸ் கொடுத்தோம். செவ்வாய்க் கிழமை வீட்டுக்கு வந்து அளந்துட்டு வியாழன் கார்பெட் போட்டுடுவாங்களாம்! நல்லதாப் போச்சு! வைனல் க்வோட் 2300ன்னு சொன்னாங்க. அது ஜாஸ்தி, அங்கெ கார்பெட்டும்
வாங்கறதாலெ விலை குறைக்கணும்ன்னு சொன்னோம். அப்புறம் 2100க்கு தரேன்னாங்க. உடனே சரின்னு ஒத்துக்கிட்டோம்.ஹப்பர்லே
2700 சொன்னாங்களே! அது வர நாளாகுமாம். வர்றப்ப வரட்டும்!

21/1
தினமும் கொஞ்சம் சாமான் போகுது! இங்கே 'பன்னிங்ஸ்'ன்னு ஒரு பெரிய ஹார்ட்வேர் கடை இருக்கு. ஆஸ்தராலியன் கம்பெனி. உள்ளூர் வியாபாரத்தை அமுக்கறமாதிரி இங்கே கொஞ்சம் விலை மலிவு. வேற எந்தக் கடையிலாவது இதே சாமான் இவுங்களைவிட விலை குறைவுன்னு நாம் நிரூபிச்சால், அதைவிட இன்னும் 10 சதவீதம் குறைச்சும் தருவாங்க. செடிகள் முதல் வீடு கட்டும் சாமான்கள் வரைக் கொட்டிக்கிடக்கு. அங்கெ அருமையான லேஸ் திரைச்சீலைகள் கிடைச்சது. ரெடிமேட். கணக்குப்போட்டுப் பார்த்தால் நாம் துணி வாங்கித் தைக்கறதைவிட சில டாலர்கள் குறைவாவே இருக்கு. நமக்கு வேலையும் மிச்சம். அங்கெ இருந்து தேவையானதை வாங்கி வந்தோம். உள்ளெ லேஸ் கர்ட்டைன் போட ஆரம்பிச்சோம். நல்லா அழகா இருக்கு! இன்னும் ரெண்டு வாங்கி சாமி ரூமுக்குப் போடணும்ன்னு முடிவாச்சு!

அங்கெ போட நினைச்ச கண்ணாடி பை போல்ட் கதவுக்கு இன்னும் கொடேஷன் வரலை. மூணாயிரம் ஆகுமுன்னு வாய் வார்த்தையாச் சொன்னாங்க. யோசிக்கணும். அதுவரை லேஸ் திரைச்சீலை இருக்கட்டும்.
பன்னிங்க்ஸ் போனா அங்கெ அதை வாங்கிகிட்டு அப்படியே டவல் ரைல்ஸ் ரெண்டும் வாங்கினோம். ச்சின்ன சின்னதா சில பல சாமான்கள்
வாங்கிக்கிட்டே இருக்கணும்! அங்கெ வாழைமரம் விக்கறாங்க. ஆசையா இருந்துச்சு! அது ஒண்ணு வாங்கினோம். 20$தான். அருமையா இருக்கு! ஏற்கெனவே ஆக்லாந்துலே இருந்து ஒரு சமயம் வாங்கி வந்துக் கண்ணுக்குக் கண்ணா வச்சுக் காப்பாத்தும் நம்ம கருவேப்பிலைச்செடிக்கு ஒரு துணையாவும் இருக்கும்.
குளிர் ஊருலே இருந்தாலும், கனவு காண ஒரு ட்ராப்பிகல் கார்டன் வேணும்.
செம்பருத்திச்செடி கண்ணுலெபட்டப்ப அதையும் வாங்கிவச்சுருக்கேன். ரப்பர் மரக்கூட்டம் ஒண்ணு இருக்கு. இதுக்கெல்லாம், அங்கேயும் ஒரு கன்ஸர்வேட்டரி அமைச்சுக்கணும்


22/1
இன்னைக்கும் சாமான்கள் கொண்டு போனோம். அங்கே அடுக்கி வைச்சுட்டு, கண்ணாடி க்ளாஸுங்களையெல்லாம் புது டிஷ் ட்ராலெ
வச்சு சுத்தம் செஞ்சேன். நேரம் எடுக்குது. ஆனாலும் சத்தமே இல்லை. நல்லா அழகாக் கழுவிருச்சு!

இங்கேயே பல சாமான்களைக் கழுவிக் கொண்டுபோகணும்ன்னு என்னோட ப்ளான். ஆனா இந்த ஆக்ஸிடெண்ட் ஆனதுனாலெ வேலை
அவ்வளவா செய்ய முடியலை. இவரோ பதபதன்னு பதைக்கிறாரு. எல்லா ஸ்டீல் சாமானும் பிசுக்கா இருக்கு. ஆனா கேக்கற ஜாதி
இல்லையே. வம்பு வேணாம்ன்னு ச்சும்மா இருந்துட்டேன். யாராலே முடியுது? எப்பவும் மல்லுக்கு நிக்க! அங்கே போனப்புறம் சுத்தம்
செய்யலாம்ன்னா, கழுவி எங்கே காய வைக்கறது? இங்கேன்னா கன்ஸர்வேட்டரியிலே வச்சுட்டு, பூட்டிடலாம். சொன்னா கேட்டாத்தானே?
(இப்ப எதுக்கு அடி போடறேன்னுபுரிஞ்சிருக்குமே:-))))

23/1
லினன் கப்போர்டு அடுக்கலாம்ன்னு முடிவாச்சு! கழிச்சுக் கட்டுறதை செஞ்சிட்டு மீதியை எடுத்துக்கிட்டுப் போனோம். எல்லாம் பாத்துப்பாத்து
அடுக்கினோம். கண்ணாடிப் பாத்திரம் மத்தியானம் கொண்டு போகணும். டூரேயோட ஆள் பால்( அஞ்சுபிள்ளைக்காரன்)வந்து வெளியே
ஒரு ஸ்ப்ரே போட்டு சுத்தம் செஞ்சார். அவரோட ரெட்டைப் பசங்களும் வந்து என்னமோ தேச்சுக்கிட்டு இருந்துச்சுங்க!

மத்தியானம் போய் மத்த லேஸ் கர்ட்டெயின் எல்லாம் போட்டு முடிச்சோம். நாளைமுதல் இவர் வேலைக்குப் போயிடுவார். அதுக்குள்ளெ
சில வேலையை முடிக்கணும்ன்னு அவசரப்படராரு!

24/1
காலையிலெயெ ஒழுகுற கட்டரிங்கைச் சரி செய்ய மெட்டல் க்ராஃப்ட் ஆளு வருதாம்! இவர் உடனெ போனார். கார்பெட்டுக்கு அளக்க ஒரு ஆளு நாளைக்கு வர்றதா ஃபோன் வந்துச்சாம்! கேரியும் 12.30க்கு வந்து பாக்கி வேலையை முடிக்கப்போறாராம்!

எனக்கு இன்னைக்கும் ஃபிஸியோவுக்குப் போகணும். இன்னும் கார் ஓட்டிப் பார்க்கலை! வலிக்குமான்னு தெரியலை! அதனாலெ அங்கெ போய்
என்ன நடக்குதுன்னு பார்க்க முடியாது!

நானும் ஒரு வாரமா, அங்கெ போறப்ப கேமரா கொண்டு போகணும்னு நினைக்கறேன். படங்கள் எடுத்து நாளாச்சு! ஆனா மறந்து மறந்து போகுது! வேற வேற சாமான்கள் கொண்டு போறதாலெ இது மட்டும் மறந்துபோகுது! இன்னைக்குக் கட்டாயம் கொண்டுட்டு போகணும்!

சாயந்திரம் இவர் வேலையிலிருந்து வந்ததும் அங்கெ போனோம். மறக்காம கேமெராவும் கொண்டு போனோம். அங்கெ சில படங்கள் எடுக்கறப்பவே
'கார்டு ஃபுல்' அப்படின்னு சொல்லுச்சு நம்ம கேமெரா! இதைத்தான் விடியா மூஞ்சி வேலைக்குப் போனா.....ன்னு சொல்றதா?

நாளைக்கு கார்பெட்க்கு அளக்க வராங்க. கார்பெட் போட்டுட்டா அடியிலே இருக்கற குப்பையெல்லாம் அப்படியே தங்கிரும்! இந்த ஆளுங்க
அதையெல்லாம் 'கண்டுக்காம'த்தான் கார்பெட் போட்டுட்டு போயிருவாங்க! எல்லாம் 'பாப்பாத்தியம்மா மாடு வந்தது....கதைதான்!!!!

குப்பையெல்லாம் ப்ரஷாலே கூட்ட ஆரம்பிச்சோம். புழுதியெல்லாம் பறந்து பறந்து வேற இடத்துலே உக்காருது! சரின்னுட்டு நம்ம சென்ட்ரல்
வேக்கும் க்ளீனர் எடுத்து குப்பையை எல்லாம் ஒரு மாதிரி பெருக்கியாச்சு! கூட்டலும் பெருக்கலும்தான்!!!!!!!

இப்ப இடுப்பும் முதுகும் விண்டு விரியுது! ஒரே வலி! இனி நாளைக் கதை நாளைக்கு!

தொடரும்................

16 comments:

said...

துளசி, வீடு கட்டிப் பார் என்பது எவ்வளவு பொருத்தமான பழமொழி. அதை விட அதைச் சுவையாக ஒரு சிறு செய்தி கூட வீடு விடாமல் நாட்குறிப்பில் எழுதுவது என்பது எவ்வளவு பெரிய வேலை. இருக்கும் வேலைகளுக்கு நடுவில் அதையும் சிறப்புறச் செய்வதற்கு பாராட்டுகள்.

ஆம்மம் பின்னூட்டங்களூம் இட்டு பதிவும் போட்டு எப்படி முடிகிறது உங்களால்.

நான் ஒரு வார காலமாக பின்னூட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். பதிவு ?? எப்போது ?? தெரியவில்லை.

said...

வாங்க சீனா.

பாராட்டுனதுக்கு நன்றி.

நமக்குத் தொழில் எழுத்துன்னு இப்ப ஆகிப்போச்சு.

வாலண்டியர் வேலைதான்:-))))

ஆனா ஆரம்பத்துலெயே,இதை ஜர்னலா எழுதணுமுன்னு ஒரு முடிவோடுதான் இருந்தேன்.

கோபாலும் பிடுங்காம இருந்தாச் சரின்னு முழு ஆதரவும் கொடுக்கறார்:-)))))

said...

செக்கிங் வந்தவர் எதுக்கு டிராவை இழுத்துப்பார்த்தார்????
இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.:-))

said...

//'பாப்பாத்தியம்மா மாடு வந்தது....கதைதான்!!!!//

இது என்ன கதை??

அதையும் சொல்லிடுங்க அத்தையம்மா. :))

said...

வாங்க குமார்.

அது எதுக்குன்னு எனக்கும்தான் புரியலை.ஒருவேளை அவர் வீட்டுலே ட்ரா இழுக்கும்போது கொஞ்சம் டைட்டாப் பிடிக்குதோ என்னவொ?:-))))

said...

வாங்க கொத்ஸ்.

அந்தக் கதையா?

நானும் கேள்விப்பட்டது இப்படித்தான்.
அந்தக் காலத்தில் பால் வியாபாரம் செய்யரவங்க, மாட்டை வாடிக்கையாளார்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து அவுங்க கண்முன்னே பால் கறந்து தருவாங்களாம். எல்லாம் தண்ணீர் கலக்கும் மோசடியைத் தடுக்கவாம். ஆனா அவுங்களுக்கு இந்த தண்ணீர் கலக்கும் வித்தை தெரியாதா என்ன?

மாட்டை ஓட்டிக்கிட்டு வந்து, ஒரு குரல் மாடு வந்துச்சுன்னு கொடுத்துட்டு உடனே கறக்க ஆரம்பிச்சுருவாங்களாம். பழைய காலத்து வீடுகளில் அடுக்களையில் இருந்து வாசலுக்கு வர்றதுக்கே மூணு நிமிஷத்துக்குமேலெ ஆகும்.ஏற்கெனவே கொஞ்சம் தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் பாலைக் கறந்தாப்போச்சு:-))))

கதை லாஜிக்கா இருக்கா மருமானே?

said...

அய்யய்ய்ய்யொ !!!

எனக்குத் தெரிஞ்ச பாப்பாத்தியம்மா கதை வேற மாதிரி இல்ல இருக்கு.

அந்தக்காலத்துலே பாப்பாத்தி அம்மா வீட்டு மாட்டெ எல்லாம் வேற யாராச்சும் தான் மேய்க்கக் கூட்டிப் போவாங்க. மேச்சுட்டு வீட்டுலே கொண்டு வந்துவிட்டுட்டு - பாப்பாத்தியம்மா மாடு வந்துடுச்சு ன்னு - சொல்லிட்டுப் போய்டுவாங்களாம். கட்டினா கட்டிக்கோ, விட்டா விட்டுக்கொன்னு அர்த்தம். என் வேலையெ முடிச்சிட்டேன். உன் வெலையெ பாத்துக்கொ. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு அர்த்தம். டீம் ஒர்க்-டீம் ஸ்பிரிட் என்பது இல்லாத டீம்னு அர்த்தம்.

Anonymous said...

கருவேப்பிலையும், வாழையும் க்ரைஸ்ட்சர்ச்சுல வளருதா? நல்லா தண்ணி அளவா விட்டு வளத்துங்க.
அத்தை, மருமகன்னு இன்னொரு பாசக்கார குடும்பம் வலையுலகத்துல உருவாகுது போலிருக்கு:)

said...

வீடு கட்றதுல இவ்வளவு விசயம் இருக்கா???
அம்மாடி அம்மா....
எழுத்து நடை அருமை

said...

துளசி அக்கா.. இப்பிடி சும்மா வீட்ட காட்டி சமாளிச்சுடலாம்ன்னு நெனக்காதிங்க.. எல்லாம் முடிஞ்சதும் என்னிய வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைக்க மறந்துடாதிங்க...

said...

வாங்க சீனா.

உங்க கதையும் நல்லாத்தான் இருக்கு. ஆனா மாட்டைக் கொட்டிலில் கட்டிட்டுப் போகணுமா இல்லையா?

டீம் ஸ்ப்ரிட் சுத்தமா இல்லை(-:

said...

வாங்க ச்சின்ன அம்மிணி
கருவேப்பிலை வந்து அஞ்சு வருசமாச்சு. ரொம்பக் கொஞ்சமா வளருது.

வாழை இதுவரை மூணு முறை செத்துப் பிழைச்சது. போனவாரம் திடீர்னு ஒரு நாள் மைனஸ் 4 வந்து ஃப்ராஸ்ட் அனதுலெ அழகா வந்துருந்த இலைகள் எல்லாம் ........

ப்ரவுணாயிப்போய் இருக்கு(-: புது இலை வந்தபிறகு சருகைக் கழிக்கணும்.

said...

வாங்க செல்வம்.
புது வீட்டுக்கு முதல்முறையா வந்துருக்கீங்க.

நல்லா இருக்கீங்களா?

'செல்வம்' வந்தா நான் வேணான்னா சொல்லப்போறேன்?:-)))

said...

வாங்க ரசிகன்.

நலமா?

இன்னும் ரெண்டு வாரத்துலெ வீடு ரெடி:-))))

நீங்க டிக்கெட்டு எடுத்துருங்க. விருந்து
சமையல் நீங்க வந்தபிறகுதான்:-))))

said...

. கெஸ்ட் டாய்லெட்லே உள்ளெ விளக்கு சுவிட்சைத் தேடுனாரு போல, கோபால் சொன்னாரு அது வெளியே
வச்சிருக்கு. ஆளுங்க உள்ளெ போறதுக்கு முன்னாலெ விளக்கு வரட்டும்ன்னு''!//

ஆஹா, கெஸ்டா வந்தா நல்லா இருக்கும் போல.
எத்தனையோ வீட்டில இந்த ஸ்விட்சைத் தேடறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.

நல்லா வீட்டைக் கட்டற துளசி கோபாலுக்கு வாழ்த்துகள்.

said...

வாங்க வல்லி.
முதல்லே சுவிட்சை உள்ளெ வச்சிட்டார் நம்ம கேரி. விளக்குப்போட்டவுடன் கூடவே எக்ஸாஸ்ட் ஃபேனும் ஓடும்விதமாக வச்சிருக்கோம்.

அங்கெ ஜன்னல் கிடையாது. இருட்டுலே எப்படி சுவிட்சைத் தேடறது?

உள்ளெ இருந்ததை வெளியில் வச்சு, உள்ளே போட்ட சுவர் ஓட்டைக்கு ஒரு டம்மி ஸில்வர் கவர் போட்டுவச்சுருக்குப்பா.