Friday, December 23, 2005

சிக்கனமா இல்லே கருமித்தனமா

புருஷன் நீட்டுன சம்பளக் கவரை வாங்கிப் பார்த்த சரோ அக்காவுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு. எள்ளும் கொள்ளும்வெடிக்கற முகத்தோட ' ஏங்க, கவர் பிரிஞ்சிருக்கே, திறந்துட்டீங்களா?'ன்னு கேட்டாங்க. மாமாவும் தயங்கித்தயங்கி,'கைமாத்து வாங்கியிருந்தேன்லெ, அதைத் திருப்பிக் கொடுத்துட்டுட்டு வந்தேன்'ன்னு சொன்னார்.


'சரி,சரி. அடுத்த மாசமும் இப்படிச் செஞ்சீங்கன்னா நான் மனுஷியா இருக்கமாட்டென், ஆமா'ன்னாங்க. மாமாவும்பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுனார்.


அன்னிக்கு ராத்திரி சாப்புடற சமயத்துலே, அக்கா கேட்டாங்க,'ஆமா, கைமாத்து வாங்குனதைத் திருப்பிக் கொடுத்தேன்னுசொன்னீங்கல்லே. எப்ப எதுக்கு கை மாத்து வாங்குனீங்களாம்?'னு மறுபடி ஆரம்பிச்சாங்க. மாமாவுக்குப் புரை ஏறிக்கிச்சு.ஒருகையாலே தலையைத் தட்டிக்கிட்டே பரிதாபமா ஒரு 'லுக்'வுட்டார்.


"ஏங்க எத்தனை தடவை சொல்லியிருக்கேன். யார் கிட்டேயும் கைமாத்து, கிய்மாத்துன்னு வாங்காதீங்கன்னு. வேலைக்குக் கிளம்பறப்ப கைச்செலவுக்குக் காசு வேணுமுன்னா வீட்டுலே இருந்தே கொண்டு போகலாமுல்லே?"


" ஆமாம் சரோ. நீ சொல்லியிருக்கேதான். ஆனா அன்னிக்குக் கூடவேலை செய்யற ஜெகனுக்குக் கல்யாணப் பரிசுவாங்கப் பணம் கலெக்ட் செஞ்சாங்க. எங்கையிலே காசு அவ்வளவா இல்லே. அதுனாலே நம்ம மூர்த்திகிட்டே முப்பது ரூபா வாங்கிக் கொடுத்தேன்."


" முப்பது ரூபாயா பரிசுக்குக் கொடுத்தீங்க?"


" இருபது ரூபாதான் கொடுத்தேன். கைச்செலவுக்கு இருக்கட்டுமுன்னு முப்பதா கடன் வாங்கிட்டேன்."


" அப்ப அந்த மீதிப் பத்து ரூபாயை என்ன செஞ்சீங்க?"


மாமா திருதிருன்னு முழிச்சுக்கிட்டே யோசிக்கறாப்போலெ மேலே கூரையைப் பாத்துக்கிட்டு இருந்தார்.


" சிகெரெட், பீடான்னு செலவாயிருக்கும்.இல்லே?"


அக்காவோட 'கொக்கி'யைக் கவனிக்காம மாமா தலையை ஆட்டுனார். அவ்ளோதான், சிகெரெட்டுச் சனியனைவிட்டுத்தொலைக்கச் சொல்லி ஒரு மைல் நீள லெக்சர் கேக்கும்படியாச்சு.


சரோ அக்கா கல்யாணம் கட்டுனது சொந்த மாமனைத்தான். அம்மாவோட கடைசித்தம்பி. தாய்தகப்பன் இல்லாதபுள்ளைன்னு ரொம்பச் செல்லம் கொடுத்து வளத்துட்டாங்க ச்சின்னப்பாட்டி. படிப்பும் அவ்வளவா ஏறலை. மிலிட்டரியிலேசேரப்போறேன்னு போய், அங்கே ரெண்டு நாளைக்கு மேலே தாக்குப் பிடிக்காம திருட்டுத்தனமா ஓடிவந்துட்டாராம்.புடிச்சுக்கிட்டுப் போக ஆளு வந்துருமுன்னு ஒரு வாரம் பரண் மேலே ஏறி ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாராம். ஆளும் வரலை,தேளும் வரலையாம். அப்பதான் சுதந்திரம் கிடைச்சதுன்னு ஒரே கோலாகலமா இருந்துச்சாம். இவர் வெளியே வந்துவேடிக்கைப் பாக்கப் பயந்துக்கிட்டு இருந்தாராம். எப்படியோ இந்த கலாட்டாலே இவர் தலை தப்பிச்சதாம்.கொஞ்ச நாள் கழிச்சு, பக்கத்துலே புதுசாத் தொடங்குன ஃபேக்டரியிலே ஆள் எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கேபோனப்ப, அவுங்களே பார்த்து வேலைக்குச் சேத்துக்கிட்டாங்களாம். எப்படியோ வேலை, மாசாமாசம் சம்பளமுன்னு இருந்தாலும், காசைக் கணக்காச் செலவு செய்யமட்டும் கத்துக்கலை. சினிமா, ஓட்டல்னு சிநேகிதனுங்க கூடச் சுத்தறது.கைக்காசு தீந்து போனா, ச்சின்னப்பாட்டிக்கிட்டே வந்து கடன் வாங்கறது. கடன் என்னா கடன்? திருப்பித் தராத கடன்தான்.


இப்படிச் சுத்தறானே, ஒரு கால்கட்டைப் போட்டாச் சரியாயிருமுன்னுதான் அக்கா மகளைக் கட்டிவச்சாங்க. சரோஜாவும்நல்ல பொண்ணுதான். பத்துவரை படிச்ச பொண்ணு. நல்லா எலுமிச்சம்பழ நிறம். நல்ல அடர்த்தியான நீண்ட கூந்தல்.என்னா, பல் மட்டும் கொஞ்சம் எடுப்பு. கொஞ்சம்னா கொஞ்சமே கொஞ்சம். ஆனா, கெட்டிக்காரி.


கல்யாணம் கட்டுன புதுசுலே இன்னொரு சித்தி வீட்டுலே இருந்துருக்காங்க. அந்தச் சித்தப்பு சரியில்லை. அந்த ஆளொடபார்வையும் பேச்சும் அசிங்கமா வரம்பு மீறுதா இருந்திருக்கு. சரிப்பட்டு வராதுன்னு, மாமன்கிட்டே சொல்லித் தனிக்குடுத்தனம் போயிருச்சு அக்கா. மாமாவுக்கு ஒரே பயம், எப்படி சமாளிக்கப்போறோமுன்னு. அக்காதான் தைரியம்கொடுத்துருக்கு.


வாடகை கம்மின்னு, ஊரைவிட்டுக் கொஞ்சம் தொலைவா வீடு பார்த்துக்கிட்டு வந்துட்டாங்க. அருமையான வீடு.ச்சுத்திவரத்தென்னமரங்க. நடுவுலே ஓட்டு வீடு. அக்கம்பக்கத்துலேயும் பத்துப்பன்னெண்டு வீடுங்க இருந்துச்சுதான். அதெல்லாம்கொஞ்சம் தள்ளி. குரலெடுத்துக் கூப்புட்டாக் கேக்கற தொலைவுதான்.அதனாலே பயம் இல்லாம இருக்க முடிஞ்சது.


மொதல்லே ரெண்டு மூணுமாசம் அக்காவுக்கு இந்த வரவு செலவு புரிபடலை. அம்மா வீட்டுலே காசுக் கவலையில்லாம இருந்தவங்க. அப்புறம் பாத்தா மாசத்துலே பாதி நாகூட சம்பளம் போறலை. ஒரு நாளு அமைதியா உக்காந்து, என்ன ஏதுன்னுமாமாகிட்டே விசாரிச்சது. மாமாவோட சம்பளம் ரெண்டு வயித்துக்கு தாராளம். சிநேகிதங்க கூடச் சுத்தறதுதான் காரணமுன்னுகண்டு பிடிச்சுச்சு. நல்ல வார்த்தையாச் சொல்லி, இனிமேப்பட்டுச் சம்பளம் கவர் பிரிக்காம வூட்டுக்கு வரணும். அக்காவேசெலவு எல்லாத்தையும் பார்த்துக்குமுன்னு சொல்லி வச்சது. மேற்கொண்டு அந்த மாசப் பத்தாக்குறைக்கு நகை ஒண்ணைக்கொடுத்து அடகுவச்சுப் பணம் கொண்டாரச் சொல்லிச் சமாளிச்சது.


அக்கா கவர்மெண்ட்டுலே நிதி மந்திரியா இருக்கவேண்டிய ஆளு. அவ்வளோ சாமர்த்தியம். நல்லா பட்ஜெட்டுப் போட்டுச்சு.சகல செலவுக்கும் இதுக்கு இவ்வளோன்னு ஒதுக்குச்சு. அனாவசியமான செலவு ஒண்ணும் இருக்கக்கூடாதுன்னுசொன்னப்ப, மாமாவும் 'இவ ஏதோ நல்லதுக்குத்தான் சொல்றா'ன்னு நினைச்சாரு பாருங்க அங்கேதான் இருக்கு அக்காவோடஅதிர்ஷ்டம். என்னதாம் பொம்பளைக் கணக்குப் போட்டுச் செஞ்சாலும், ஆணோட ஒத்துழைப்பு இல்லேன்னா 'டமால்'தானே?


தினம் பொழுது பலபலன்னு விடியறப்பவே அக்கா எந்திருச்சுரும். வீட்டுவாசலைச் சாணித் தெளிச்சுப் பெருக்கி ஒருசின்ன மூணு புள்ளிக் கோலம் போட்டுரும். அக்கா மகா கெட்டிக்காரின்னு சொன்னது இந்தக் கோல விசயத்துலே மட்டும்பலிக்காமப் போச்சு. நிதைக்கும் அந்த ஒரே கோலம்தான். பாசிமணி, பூத்தைய்யல், க்ரோஷா பின்னுறதுன்னு எல்லாத்துலேயும்அழகா நறுவிசாச் செய்யற அக்காக்கு இந்தக் கோலம் மட்டும் இப்படிப் பண்ணுமா? இந்த ஒரு கோலத்தைத் தவிரவேற ஒண்ணும் தெரியாதாம். மெய்யாவா இருக்கும்? என்னாலே நம்பவே முடியலை. நம்பித்தான் ஆகணும், ஏன்னா வெள்ளிக்கிழமை வூடுவாசல் கழுவினாலும், அடுப்படி மொதக்கொண்டு எல்லா ரூம்புலேயும் இதே கோலம்தான்.

அதுக்கப்புறம் காப்பி பலகாரம் எல்லாம் செஞ்சு, மத்தியான சாப்பாட்டையும் ஆக்கிக் கையோடு மாமனுக்குக் கொடுத்தனுப்பிச்சிரும்.மாமாவுக்கு வேலை காலையிலே ஏழரை மணிக்கு. அவரு ஏழுமணிக்குக் கிளம்புனாத்தான் சரியா இருக்கும். அஞ்சுமைலு சைக்கிள் மிதிக்கணுமுல்லெ.


அவர் போன கையோட அக்கா குளிச்சு நல்லா உடுத்திக்கிட்டு வீட்டைத் துப்புரவா ஒழுங்குபடுத்தி வச்சுட்டு, பூத்தைய்யல் போடஉக்காந்துரும். தலகாணி உறை, படுக்கை விரிப்புன்னு எதாவது அலங்காரம் அதுக்குன்னே இருந்துக்கிட்டே இருக்கும். பகல் சாப்பாடுஆன கையோட 'கல்கி' புஸ்தகத்தை எடுத்துவச்சுக் கொஞ்ச நேரம் வாசிக்கும். அக்கம்பக்கம் இருக்கற பொம்பளைங்க கடுதாசிஎழுதிக்க, அவசரத்துக்கு சக்கரை, காப்பித்தூள் கடன் வாங்கன்னு யாராவது வருவாங்க.


கடன் கேட்டா இல்லைன்னு சொல்லாது. கடைவீதியிலே இருந்து இம்மாந்தூரம் இருக்காங்க. ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஒதவலேன்னா எப்படின்னு சொல்லும். சமையல் ரூமுலே ஒரு நோட்டு வச்சிருக்கும். அதுலே என்னா சாமான் கடன் கொடுத்துச்சுன்னு அவுங்க முன்னாலேயேஎழுதி வைக்கும். அந்த ஆளுங்களும் அதைப் பாக்கறாங்கள்ளெ, அவுங்க வூட்டுக்கு அந்தச் சாமான் வாங்கிட்டு வந்தவுடனே திருப்பிக் கொடுத்தரணுமுன்னுசொல்லும். திருப்பிக் கொடுத்தவுடனே அவுங்க முன்னாலேயே எழுதுனதை அழிச்சுரும். இப்படிக் கொடுக்கவும் வாங்கவுமா இருந்துச்சு. அப்பப்பக் காசும்அஞ்சு பத்துன்னு கடன் கொடுக்கும்.


சாயந்திரம் மாமா அஞ்சுமணிக்கு வந்துருவார். அதுனாலே ஒரு நாலுமணிபோல அடுப்புப் பத்தவச்சு சாயங்கால டிபன் செய்யும். பஜ்ஜி, போண்டா, வடைன்னு எதுவாச்சும் இருக்கும்.சட்னி, காபி எல்லாம் ரெடி. தினம்தினம் இப்படி வாய்க்கு ருசியாத் தின்னு மாமாவோட ஓட்டல் போக்கு நின்னுச்சு. அப்படியே சாயந்திரத்துக்கும் எதாச்சும் சமைச்சு வைக்கும். ஃப்ரிட்ஜ், மிக்ஸி சமாச்சாரமெல்லாம் இல்லாத காலம்.இட்டிலி தோசைக்கு தினமும் மாவு அரைக்கும்.


இங்கெதான் இருக்கு விஷயம். நாமெல்லாம் பஜ்ஜி போட்டோமுன்னு வையுங்க, எல்லாரும் தின்னுட்டு மிச்சம் இருக்குதுல்லே. அக்காகிட்டேஇதெல்லாம் நடக்காது. ஆளுக்கு நவ்வாலு பஜ்ஜி, இல்லே மும்மூணு போண்டான்னு அதுக்கேத்த மாவுபோட்டுச் செய்யும். தப்பித்தவறி யாராவது,ஏன் நானே போனாலும் நமக்கு ஒண்ணும் இருக்காது. வரேன்னு முன்னாலேயெ சொல்லியிருந்தாத்தான் நமக்கும் திங்கக் கிடைக்கும். அதென்ன கணக்கோ சரியாப் பத்து இட்டிலிக்கு வராப்பல மாவு அரைக்கும்!அட, இத்தை வுடுங்க. குழம்பு ரசம்கூட ரெண்டே பேருக்குச் சரியாயிரும். என்ன மாயமோ?


நானும் இருக்கேனே, அண்டா அண்டாவாக் காச்சிவச்சுட்டு, அய்யா தின்னுங்க, அம்மா தின்னுங்கன்னு கத்திக்கிட்டு இருக்கறதைப் பாக்கணுமே!


கொஞ்சம் கொஞ்சமாக் காசு சேத்து, நகை, புடவை, மாமாக்கு நல்ல துணிமணிங்கன்னு வாங்குச்சு. ரெண்டு வருசத்துலேயே அங்கே பக்கத்துலேகொஞ்சம் இடம் வாங்கி ச்சின்னதா ஒரு கல்லு வீடு கட்டுச்சு. செங்கல் சுவர். ஆனா மேல் கூரை மட்டும் ஓலை. எல்லாம் அளந்துவச்சாப்ல அந்தவீடுகூட கணக்கா ரெண்டு ரூம், ஒரு அடுப்படி. வூட்டுக்கு பின்னாலே ஒரு பாத் ரூம். அடுத்த வருசம் மாமாவுக்கு போனஸ் வர்றப்ப ஓடு போட்டுக்கலாமுன்னு திட்டம்.


கல்கியிலே வர்ற தொடர்கதைகளை எடுத்துச் சேகரிச்சு பைண்டு பண்ணி ஒரு பக்கம் அலமாரியிலே அடுக்கி வச்சிருக்கும். படிக்க எடுத்தா,'கவனமாபக்கத்தைத் திருப்பு. கிழிஞ்சிரப்போகுது'ன்னு சொல்லும். ஒரு புத்தகத்தை ஒழுங்காத் திருப்பிக் குடுத்தாத்தான் இன்னொண்ணு கிடைக்கும். அதான் அதையும் நோட்டுலே எழுதி வச்சுருமே!


பொட்டி நிறையப் புடவை இருக்கு. ஆனா வீட்டுலே கட்டிக்கன்னு ரெண்டே ரெண்டு புடவை எடுத்துத் தனியா வச்சுக்கும். குளிச்சுட்டுக் கையோடதொவைச்சு வச்சுரும். சரிப்பா, இன்னிக்கு மழை வந்துருச்சு. தொவைக்க முடியலை. மறுநாள் பொட்டிலே இருந்து ஒண்ணை எடுக்குங்கறீங்க? ஊஹூம். நேத்துத் தொவைக்காம வச்சதை எடுத்துத் தொவைச்சு வீட்டு எரவானத்துலேஒரு பக்கம் முடிஞ்சிட்டு, அடுத்த பக்கத்தைக் கையிலே புடிச்சுக்கிட்டு நிக்கும். படபடன்னு அடிக்கற காத்துலே ஒருஅஞ்சு நிமிசத்துலே பொடவை காஞ்சுருமுல்லே. குளிச்சுட்டுக் காய்ஞ்சதைக் கட்டிக்கும்.


சொந்தக்காரங்க வீட்டுக்கோ, சினிமாவுக்கோப் போறப்ப அக்காவைப் பாக்கணுமே. அருமையா உடுத்தி அலங்கரிச்சுக்கிட்டுப்போகும். தம்பி பொண்டாட்டி இப்படி செட்டா இருந்து நாலு காசு வச்சுருக்கறது, மத்த சித்திமாருக்கு கொஞ்சம் பொறாமைதான்.'பொண்டாட்டிக்கு உக்கார்ற மணைக்கட்டை' மாதிரி ஆயிட்டான் தம்பின்னு அவுங்களுக்குள்ளெ பேசிக்குவாங்க.பாட்டிக்கு மட்டும் ரொம்ப சந்தோஷம். இருக்காதா பின்னே? இப்பெல்லாம் மாமா 'கடன்' கேட்டு வர்றதில்லேல்ல!இந்தக் காலக்கட்டத்துலேயே அக்கா கர்ப்பிணி ஆனாங்க. குழந்தை எட்டு மாசத்துலே பொறந்துச்சு. அதுக்கு ஆண்டவன்போட்ட ஆயுசு ஒரு மாசம்தான். அக்கா மனசொடைஞ்சு போயிட்டாங்க. 'குழிப்பிள்ளை மடியிலே'ன்ற மாதிரி ஆறுமாசத்துலே மீண்டும் ஒருமுறை கர்ப்பம்.


நம்ம ஜனங்களுக்குப் பேச்சுன்றது எவ்வளோ சக்தியான ஆயுதமுன்னு தெரியுமோ தெரியாதோ, பேச ஆரம்பிச்சாங்க.இதெல்லாம் அரசபுரசலா அக்கா காதுக்கு வந்துச்சு. வரணுமுன்னுதானே மக்கள் பேசறது? பேசுனாங்க.
ஆச்சு, ஒம்போது மாசம். அக்காவுக்குப் பயம் வந்துருச்சு போல. 'இங்கே பிரசவம் வேணாம். பெரியக்கா வீட்டுக்குப்போயிரலாம். பெரியக்கா நல்ல அனுபவசாலி. அதுக்கே அஞ்சு புள்ளைங்க. நாலு பொண்ணு, ஒரு பையன்னு இருக்காங்க.அது என்னப் பாத்துக்கும்'ன்னு சொல்லி பெரியக்கா ஊருக்குப் போயிட்டாங்க.


அங்கே ஒரு மாசம்போல எல்லாம் நல்லாத்தான் போச்சு. குழந்தையும் பொறந்துச்சு. ஆம்பளைப்புள்ளே. ரொம்ப அழகாஇருந்துச்சாம். அச்சு அசலா அம்மா மாதிரி நிறமாம். அதோட விதியும் சரியில்லே. ஹூம்...


மக்காநாளே புள்ளை கண்ணை மூடிருச்சு. புள்ளை பொறந்ததைச் சொல்ல, வேற ஊருலே இருந்த மாமாவுக்குத் தந்திபோச்சு. அந்த சந்தோஷம் முழுசுமா மனசுக்குள்ளே போறதுக்குள்ளே இன்னோரு தந்தி பின்னாலயே போச்சு, துக்கசெய்தியைச் சுமந்துக்கிட்டு.


அக்கா ரொம்ப துக்கத்துலே ஆழ்ந்துட்டாங்க. உடம்பும் பலஹீனமாப் போச்சு. எப்பப் பார்த்தாலும் அழுகை. பெரியக்கா சமாதானமெல்லாம் எடுபடலை. 'உனக்குச் சின்ன வயசுதானே. அடுத்த புள்ளை இதோன்னு பொறந்துரும் பாரு. நல்லாசாமிக்கு வேண்டிக்கலாம். பெருமாளே, என் அப்பனே, கண்ணைத் திறந்து பாரு. ஒரு குழந்தையைக் கொடுப்பா. உன் கோயிலுக்கு வந்து புள்ளைக்கு மொட்டை போடறொம்'னு சாமியைத் துணைக்குக் கூப்புடறாங்க.


இதெல்லாம் அக்கா காதுலே ஏறவே இல்லை. அழுகை, ஓயாத அழுகை. 'வெறுங்கையோடே ஊருக்கு எப்படித் திரும்பிப் போவேன். மாமா மூஞ்சுலே எப்படி முழிப்பேன்'னு ஒரே புலம்பல். மாமாவும் 'லீவு வாங்கிக்கிட்டு பத்து நாள்ளே வரேன்'னுமறுபடி எழுதுனார். எண்ணி எட்டே நாள். மாமாவுக்கு இன்னொரு தந்தி பறந்துச்சு. முதலுக்கே மோசம்.


அழுது அழுது மகராசி போய்ச் சேர்ந்தாச்சு. மாமா லபோ திபோன்னு அடிச்சுக்கிட்டு பாட்டியோட கிளம்பிப்போனார்.எமன் வாயிலே போனதை மீட்க முடியுமா? எல்லாம் போச்சு. ஆறு வருச வாழ்க்கை முடிஞ்சது.


மாமாவுக்கு பேச்சே நின்னு போச்சு. ஊருக்குத் திரும்பிவந்து கருமாதியெல்லாம் செஞ்சாங்க. நடு வூட்டுலே அக்காவோடபடத்தை வச்சு, அக்காவோட துணிமணி நகை நட்டெல்லாம் வைக்கணுமுன்னு பாட்டி சொல்லிட்டாங்க. மாமா எல்லாத்தையும்வாரிக் கொண்டுவந்து வச்சார். பாத்தவங்க கண்ணு அப்படியே நிலைகுத்திருச்சு. என்னா துணிமணிங்க, எவ்வளோ நகை நட்டு.ஒண்ணுத்தையும் அனுபவிக்காமப் போய்ச் சேர்ந்த புண்ணியவதியை நினைச்சவுடனே எல்லாருக்கும் அழுகை பீறிக்கிட்டு வந்துச்சு.


ஆச்சு ஆறு மாசம். மாமா வேலைக்குப் போறதும், பாட்டி வீட்டுலே சாப்பிடறதும், ராவானால் வூட்டுக்கு வந்து தூங்கறதுமாப் போகுது.போச்சு. ' இப்படியே இவனை விடக்கூடாது.எப்படியாவது இன்னொரு கல்யாணம் செஞ்சுவச்சுரணும்'ன்னு பாட்டி மெதுவாப் பேச்சைஆரம்பிச்சாங்க.


ஆரம்பத்துலே வேணவே வேணாமுன்னு சொல்லிக்கிட்டிருந்த மாமாவோட குரல் நாளாக ஆக நீத்துப் போச்சு. அதுலே பாட்டி வேறகல்யாணம் ஒரு வருசம் முடியறதுக்குள்ளெ செஞ்சாதான் ஆச்சு. இல்லேன்னா மூணு வருசம் கழிச்சுத்தான் செய்யணுமுன்னு சொல்லிட்டாங்க. அரக்கப் பரக்கப் பொண்ணு பாத்தாங்க.


பொண்ணு நல்ல பொண்ணா இருக்கணும். காசு பணம் எல்லாம் பெருசுல்லைன்னு சொல்லிட்டாங்க பாட்டி. தெரிஞ்சவுங்க மூலமாரொம்ப வசதி இல்லாத ஒரு பொண்ணைப் பார்த்து முடிச்சாங்க. பொண்ணுக்கு அப்பா இல்லை. பொண்ணு,குழந்தையா இருந்தப்பவே இறந்துட்டாராம். அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களாம். படிப்பு அறவே இல்லை. சொந்தக்காரங்க வீட்டுலே தங்கி வளருதாம்.


அக்காவோட தலை திவசம் முடியறதுக்குள்ளேயே கல்யாணம் நடந்துச்சு. அக்காவோட பொட்டியைத் திறந்து பார்த்தபுது அக்காவுக்கு கண்ணு விரிஞ்சு போச்சு. ஏற்கெனவெ அழகான பெரிய கண்ணு அதுக்கு. பாட்டி சொல்லிட்டாங்க,இப்ப எதையும் எடுக்கக்கூடாது. வருசப்பூசை முடிஞ்சாவுட்டு எடுக்கலாமுன்னு.தலை திவசமும் வந்தது. அக்காவோட துணிமணி, நகை நட்டெல்லாம் இன்னொருக்கா வெளியே வந்துச்சு.பூசை எல்லாம் நல்லபடியா நடந்துச்சு.


ஆச்சு வருசம் ஏழு.


இப்ப மாமாவுக்கு 4 பொட்டைப் புள்ளைங்க. அன்னிக்கு யதேச்சையா மாமாவைக் கடைவீதியிலே பார்த்தேன். கையிலே சிகெரெட்டுப்புகைஞ்சுக்கிட்டு இருந்துச்சு. என்னப் பாத்ததும் அதை ஒரு இழுப்பு இழுத்துட்டுக் கீழே போட்டு மிதிச்சார்.வீட்டுக்கு ஏன்வர்றதில்லைன்னு கோச்சுக்கிட்டார். வீட்டை வித்துட்டாராம். இப்ப டவுனுக்குள்ளேயே வாடகைக்கு இருக்காங்களாம்.


'எப்படி இருக்கீங்க?'ன்னு கேட்டேன். 'அக்கா மாதிரி வராது'ன்னார். மாமியாரும் வீட்டோட வந்துட்டாங்களாம். பொண்ணுக்குக்கூடமாட உதவியா இருக்காங்களாம். நாலு புள்ளைங்களைப் பாத்துக்கணுமே.


ஒரு நா வீட்டுக்குப்போனேன். சாமான்செட்டெல்லாம் இறைஞ்சு கிடந்துச்சு. பசங்க ஒரே அழுகையும், அழுக்குமாஇருந்துச்சுங்க. அக்கா படம் சுவத்துலே காஞ்ச மாலையோட இருந்துச்சு. புது அக்கா ஒரு அழுக்குச் சீலையைக்கட்டிக்கிட்டு இருந்துச்சு. காதுலே கழுத்துலே ஒரு பொட்டுத் தங்கம் இல்லே. மூக்குத்தி மட்டும் தூங்கறாப்போலஇருந்துச்சு. மாமாவும் அழுக்கு லுங்கியோடு பாயிலே படுத்துக்கிட்டு இருந்தார். போனதுக்குக் கொஞ்ச நேரம் இருந்துட்டுவந்துட்டேன். வெளியே வர்றப்ப என் கண்ணு அக்காவோட படத்தைத் தன்னாலே பாத்துச்சு. 'தனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தம் ஒன்னுமில்லை'ன்னு சொல்றது போல அக்காவோட பார்வை இருந்துச்சோ?


நாலுநாளு கழிச்சுப் பாட்டியைப் பார்க்கப் போனேன். என்னைப் பாத்து அழுதுச்சு. கண்ணு வரவர மங்கி இருக்காம்.எப்ப வந்தேன்னு கேட்டுச்சு. விவரம் சொல்லி, மாமாவைப் பார்த்ததையும் அங்கே போனதையும் சொன்னேன். அப்பஅங்கிட்டு வந்த சித்தி சொல்லுச்சு, 'அந்தப் பொண்ணு ஒண்ணும் சரியில்லைம்மா. சரோஜாவைப்போல வராது. வந்தஆறே மாசத்துலே எல்லாப் புடவையையும் கட்டிக் கிழிச்சிருச்சு. தாம் தூமுன்னு செலவு செஞ்சு எல்லாம் போச்சு.உங்க மாமா வீட்டைவித்து, நகையை வித்து இப்ப ஒண்ணுமில்லாமக் கிடக்கான். சிக்கனமாக் குடும்பம் நடத்தத்தெரியலை பாத்தியா?'


'பாவி, பார்த்துப்பார்த்துச் செஞ்சு ஒன்னையும் அனுபவிக்காமப் போய்ச் சேர்ந்தா. இதுக்கு இருந்துருக்கு விதி எல்லாத்தையும் ஆண்டு அனுபவிக்க'ன்னு சொல்லி பாட்டி அழுதுச்சு. 'சரோ மாதிரி வராது'ன்னு சொல்லி ஒரு குரல் ஒப்பாரி வச்சது.


சரோ மாதிரி எப்படி வரும்? ஒவ்வொருத்தரும் ஒரு ரகம் இல்லையா? ஒண்ணுபோல ஒண்ணு இருக்குமா என்ன?


திரும்பி வர்றப்ப அக்காவை நினைச்சுக்கிட்டே வந்தேன், அக்கா சிக்கனமா இருந்துச்சா இல்லெ கருமியா இருந்துச்சான்னு.

30 comments:

said...

இதுக்குத்தான் துளசி நான் புதுசா வாங்குற/கிடைக்கிற எதையுமே உடுத்தி/பாவிச்சுப் பாத்திடுறது!! :O)

இல்லன்னா குறுகுறுன்னு இருக்கும்!!

said...

கதை சொல்ல உங்ககிட்ட தான் அக்கா கத்துக்கணும். ரொம்ப டச்சிங்கா எழுதியிருக்கீங்க.

நான் பத்தாவது படிக்கிறப்ப செத்துப்போன எங்க அம்மா ஞாபகம் தான் வந்துச்சு. காசு பணத்துக்கு எங்க வீட்டில குறையில்லைன்னாலும் எங்க அம்மா கொஞ்சம் சிக்கனமாத்தான் இருந்தாங்க. ஆனா எங்க அப்பாவோட ப்ரண்ட்ஸும் அம்மாவோட பழகினவங்களும் அவங்களையும் எங்க அப்பாவையும் கஞ்சாம்பட்டின்னு என் காது படவே பேசியிருக்காங்க.

எனக்கும் அந்த குணம் கொஞ்சம் இருக்கும் போல இருக்கு. 2 வருஷத்துக்கு முன்னால வாங்குன புது சட்டை பாண்ட்டை இன்னும் நான் போடலை; பொங்கல், தீவாளின்னு ஏதாவது பண்டிகைக்குப் போடலாம்ன்னு. என் வீட்டம்மா தான் ஷ்ரேயா மாதிரி வாங்கி வந்த மறு நாளே போட்டுக்கிட்டு ஆபீஸ் போயிடுவாங்க :-)

said...

ஷ்ரேயா & குமரன்,

வருகைக்கு நன்றி.

நான் ஒரு காலத்துலே இப்படித்தான் 'ரிஷிப்பிண்டமா' இருந்தேன். கடையிலிருந்து
வீட்டுக்கு வந்தவுடனேக் கட்டிப்பார்த்துருவேன்.

இப்பக் கொஞ்ச வருஷமா புதுசெல்லாம் அப்படியே இருக்கு. ம்கள் முதல்லே கட்டிக்கட்டுமுன்னு இருப்பேன்.
அப்படியும் இங்கே நடக்கற விழாவுக்கெல்லாம் கட்டிக்கிட்டுப் போறதுதான்.

மாமாதான் அப்படியே கொஞ்சம் வச்சிருக்கார். அதான் போறப்ப வாரப்பன்னு எடுத்துக்கிட்டே இருக்காருல்லெ.

said...

நிஜக்கதையோ, கற்பனையோ - நல்லா இருக்கு...

said...

அக்கா கவர்மெண்ட்டுலே நிதி மந்திரியா இருக்கவேண்டிய ஆளு. //

ஒவ்வொரு வீட்டு பொம்பளையும் அப்படிதாங்க இருக்கணும். அப்படி இருந்துட்டா நாட்டோட நிதியமைச்சரோட வேலை ரொம்ப சுளுவா போயிரும்.

கதை சொல்ல உங்ககிட்ட தான் அக்கா கத்துக்கணும். ரொம்ப டச்சிங்கா எழுதியிருக்கீங்க.//

'அக்கா'ங்கறத விட்டுட்டு குமரன் சொல்ற கமென்ட்சை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

said...

கதை அருமை.
வரவுக்குள் செலவு சிக்கனமே. அப்படி செலவு செய்து பெற்ற வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்காதது கஞ்சமே. சரியா?

said...

டீச்சர். ரொம்ப நல்லாச் சொல்லீருக்கீங்க டீச்சர். கதை சொல்வது எவ்வளவு கஷ்டமுன்னு எனக்குத் தெரியும். ஆனா சுளுவாச் சொல்றது ஒங்களுக்கே கை வந்த கலை.

கதையப் படிச்சதும் குமரனுடைய பின்னூட்டத்தப் படிச்சதுமே நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப செண்ட்டியாகி கண்ணுல தண்ணி கொளம் கட்டுது. அதுனால ஒரு +வ் ஓட்டப் போட்டுட்டு ஒதுங்கிக்கிர்ரேன்.

said...

நமக்கெல்லாம் அந்த சிக்கனம் வராது துளசி. க்றிஸ்த்மஸுக்குன்னு எடுத்து வச்ச சேலையை போனவாரம் பிறந்தநாளைக்கே கட்டியாச்சு. அப்போதானே மறுபடி புடவை வாங்கலாம். இதிலே வில்லனே டெய்லர்தான். நாளைக்கு புதுப் புடவைக்கு ப்ளவுஸ் தைச்சு தரமாட்டேன்னுட்டான்.
கருமியோ தருமியோ கட்டிக் கிழிக்கத்தானே புடவை!! ஐயையோ நம்ம தருமி இல்லப்பா, சும்மா ரைமிங்கா இருக்கட்டுமேன்னு!

said...

தருமி,

கற்பனையில் கொஞ்சம் நிஜத்தைக் கலக்கறதுதானே கதை.
இதுவும் அதே ரகம்தான்.

said...

டிபிஆர்ஜோ,

உங்க பாராட்டுக்கு நன்றிங்க.

மணியன்,

சரியாச் சொன்னீங்க. இருக்கறதையும் கொஞ்சம் அனுபவிச்சுப் பாக்கணும்.
அதுதான் நல்ல வாழ்வு வாழ்ந்ததுக்கு அடையாளம், இல்லே?

said...

ராகவன்,

நன்றி.

டீச்சருக்கு விளங்காத ஒண்ணு இருக்கு தெரியுமா?
அதான்,அந்த ஓட்டுப்பெட்டி உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்போல.
நம்ம ஹரிச்சந்திரனோட மனைவியின் மாங்கல்யம் மாதிரி:-))))

வேற யாரும் அதைக் கண்டுக்கறதே இல்லை.

said...

தாணு,
போனவாரம் பிறந்தநாளா?
சொல்லவேஇல்லை(-:

எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.( ச்சும்மா ஒரு வாரம்தான் பிந்திப்போச்சு)

said...

"தாணு,
போனவாரம் பிறந்தநாளா?
சொல்லவேஇல்லை(-:

எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.( ச்சும்மா ஒரு வாரம்தான் பிந்திப்போச்சு)"//

தாணு,
நானும் டீச்சரோடு சேந்துக்கிறேன்.

said...

துளசி நல்லா இருக்கு. சில பேருக்கு எப்படியும் காசு சேர்த்து ஆழ்ந்து காட்டனும்னு ஆசை வர அதுவே ஒரு வெறியாகி செய்யறது.
நான் சேர்த்தும் வைக்கறதில்ல, தேவை இல்லாம வாங்கறதும் இல்ல. எப்பவாவது வாங்கனும்னு தோனிச்சுனா, நமக்குத்தான் வேணும்னு சொல்றவங்க பத்தாம கஷ்டப்படறவங்க நிறைய பேரை தெரியுமே, வாங்கி கொண்டுபோய் கொடுத்துடறது.

said...

//வேற யாரும் அதைக் கண்டுக்கறதே இல்லை. //

என்ன அக்கா அப்படி சொல்லிட்டீங்க. இராகவன் சொல்லிட்டுச் செஞ்சார். நாங்களெல்லாம் சொல்லாம செய்றோம்.

said...

பத்மா & குமரன்,

வருகைக்கு நன்றி.

குமரன்,

ஓட்டுபெட்டியிலே ரெண்டே ரெண்டு ஓட்டு வுழுதுப்பா.
ஒண்ணு என்னது. அப்ப இன்னொண்ணு?
( என்னோட கள்ள ஓட்டோ?)

said...

என்ன அக்கா அப்படி சொல்லிட்டீங்க. டாப் 25ல உங்கப் பதிவுகள் வந்திருக்கே.

said...

குமரன்,
இப்பத்தான் பார்த்தேன்.

ஓட்டுவாங்க'கேன்வாஸ்' செய்யணுங்கறது எவ்வளோ உண்மை பார்த்தீங்களா?:-))

said...

பத்மா, துளசி,
இந்த கதை (சம்பவம்?)யை பொறுத்தமட்டில் , அதை கருமித்தனம் என்றெல்லாம் சொல்லமுடியாது. பத்மாவும் அதை
//சில பேருக்கு எப்படியும் காசு சேர்த்து ஆழ்ந்து காட்டனும்னு ஆசை வர அதுவே ஒரு வெறியாகி செய்யறது. // எழுதுவது டிஸப்பாயிண்டிங் ஆக உள்ளது.

அவர் இறப்பது முன்பே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத பட்சத்தில் , மிகவும் திட்டமுடன் வாழ முயன்றிருக்கிறார். அதற்க்காக் அவரை பாராட்ட் மட்டுமே முடியும். கருமித்தனம் என்று எப்படி சொல்லமுடியும்? மேலும் கடைசியில் ,அவர் இல்லாமல் புருஷன் அழிவதும் காட்டப்படுகிறது(?)
யார் மேல் தவறு? குழந்தைகள் இறந்தவுடன் விசனத்தில் தானும் இறந்துவிட்டார் என்றால் அவரது பாசம் எத்தகையதாக வரது மந்தில் இருந்திருக்கவேண்டும்? ஏன் யாரும் அப்படி பார்க்கமாட்டேன் என்கிறீர்கள்?

said...

//ஏன் நானே போனாலும் நமக்கு ஒண்ணும் இருக்காது. வரேன்னு முன்னாலேயெ சொல்லியிருந்தாத்தான் நமக்கும் திங்கக் கிடைக்கும். //
இதை அமெரிக்காவிலோ, நியீசிலாந்திலோ செய்தால் ப்ளான்னிங்? இந்தியாவில் செய்தால் கருமித்தனமா?

said...

கார்த்திக்,

விளக்கமான பார்வை. இந்தக் கோணத்தில் பார்க்கணுமுன்னு 'சட்'ன்னு யாருக்கும் தோணலை பாருங்க.

அப்புறம் இந்த ப்ளானிங்....:-))))))

said...

கார்த்திக்
திட்டமிடல் வேறு, கருமித்தனம் வேறு. திட்டமிடல் இருக்கும் இடத்தில் சந்தோஷமும் இருக்கும். ஆனால் இதில் துளசி எழுதியதில் அனுபவிக்காமல் இறந்துவிட்டால் என்பது வேறுபடுத்துகிறது. நகைகளாக சேர்த்து வைப்பதிலும் புடவைகள் சேர்ப்பதிலும் இருப்பதைவிட திட்டமிடுதலை ஓய்வு நேரத்தில் செய்யும் தொழிலில் பார்த்தேன். ஆனால் அது தொடரவில்லை. நான் சிலரை சந்தித்திருக்கிறேன். அடுத்த வீட்டைவிட தான் வசதியாக இருக்க, பொருட்களை சேர்க்க வெறி வந்து சிக்கமமாக இருப்பதுண்டு. இங்கே தன் கணவனின் பெற்றோர்களை பிரிந்து வந்து, தன்னம்பிக்கை இல்லாத கணவனை வழிநடத்தி இருந்தாலும் கடைசியில் ஒரு போட்டியில் வெற்றி பெற இருந்ததாக படுகிறது. தனியாய் இருக்கிறோம் என்ற ஒரு பயமும் இழையோடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அதைத்தான் குறிப்பிட்டேன் இதில் அமெரிக்கா இந்தியா என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை:)

said...

டீச்சர், அக்கா கருமித்தனம் பண்ணல..ரொம்பத் திட்டமிட்டு ஒவ்வொரு செலவையும் கம்மி பண்ணி, பணம் சேர்த்து வாழ்ந்திருக்காங்க..அதன்படிதான் அவங்களால ரெண்டு வருஷத்துலயே சொந்தமா நிலம் வாங்கி, வீடு கட்ட முடிஞ்சிருக்குது..இல்லையா? இப்ப நாம ஒருத்தர் சம்பாத்தியத்துல, ரென்டு வருஷத்துக்குள்ள இப்படிச் சேமித்து, நிலம் வாங்கி, வீடு கட்டி, புடவை,நகைன்னு சேமித்து வைக்க முடியுமா? :(

என்ன ஒண்ணு குழந்தைகளோட வாழக் கொடுத்து வைக்கல..மற்றபடி அக்கா அவங்க மனசுக்குத் திருப்தியான (தையல், புத்தகம்,சமையல், சினிமா,சொந்தக் காரர்கள்னு) நல்ல சந்தோஷமான வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்க.. அது கருமித்தன வாழ்க்கையில்லையே :)

said...

வாங்க ரிஷான்.

மூணு வருசமாகுது இந்தப் பதிவை எழுதி. இப்போ ஒருமுறை படிச்சுப் பார்த்தேன். மனசுக் கஷ்டமாப் போயிருச்சு.

அக்கா, கொஞ்ச நாளுன்னாலும் நல்லா நறுவிசாத்தான் வாழ்ந்து போயிருக்கு.

ஹூம்.....

said...

'கட்டுஞ் செட்டுமா’ன்னு சொல்வாங்களா உங்க பக்கத்திலே. அப்படித்தான் வாழ்ந்திருக்காங்க உங்க அக்கா. கருமித்தனமா இல்லை. சிறந்த திட்டமிடல் ரிஷான் சொல்லியிருப்பது போல. அதை அனுபவிக்கும் காலம் வரும் முன்னே விதி விளையாடி விட்டதுதான் சோகம்.

said...

டீச்சர் ஏதோ எங்களுக்கு நடந்த மாதிரி இருக்கு...."கதை சொல்லி"ன்னு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் உங்களுக்கு

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதேதாங்க. அதேதான். சரியாச் சொன்னீங்க.

said...

வாங்க நான் ஆதவன்.

அதெப்படிங்க கதை சொல்லின்னு ஒரு டாக்குட்டர் பட்டம்?

பேசாம டாக்குட்டர் கொடுத்தாவே போதும். ஸ்டெத் ஒன்னு வாங்கி வச்சுருக்கேன் அம்மா நினைவாக. அதையும் பயன்படுத்துனமாதிரி இருக்கும்:-))))

said...

அசந்த போயிட்டேன் மேடம்

உங்க அக்காவின் வாழ்க்கையும் சிக்கனமும்,
நீங்கள் அதைக் கண்முன்னாடி கொண்டு வருகின்ற விதமும்.

என்ன சொல்றதுன்னே தெரியல, அப்படியே ப்ரமிச்சு போயிட்டேன்.

தயவு செய்து இதையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடுங்க மேடம்.
இங்க இருக்குற பெண் எழுத்தாளரெல்லாம் தோத்துப்போய்டுவாங்க.

said...

வாங்க அமித்து அம்மா.

நீங்க வேற...... சும்மாவே மண்டை கனம் தாங்காமல் ஆடிக்கிட்டு இருக்கு...

இன்னிக்கு நண்பர் ஒருத்தர் சேட் லைனில் வந்து கதை சுமாராத்தான் போகுது. ரமணி சந்திரன் கதை போல. கொடுமையா இருக்குன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.

பேசாம நிறுத்திரலாமான்னு கேட்டேன். இதெல்லாம் ரொம்பவே ஓவர்ன்னு சொல்றார்!