Wednesday, September 28, 2005

நியூஸிலாந்து. பகுதி 6

வாழ்க்கையும் வசதிகளும்
*********************
நாம் வாழும் வாழ்க்கை நம் கையில்தான் என்றாலும், சொந்த நாட்டை விட்டு வந்து, புது முகங்களுக்கிடையில்நாம் புதிதாக ஆரம்பிக்கப் போகும் வாழ்வில் உள்ள நல்லது கெட்டதுகளைச் சொல்கின்றேன்!


இதுவரை, நியூஸிலாந்து நாட்டைப் பற்றிய விவரங்களை ஓரளவு(!) சொல்லியாயிற்று. இனி இங்கே வந்துபுது வாழ்வை ஆரம்பிக்க நினைத்திருப்பவர்களுக்கு இப்போது நான் தரும் சில தகவல்கள் உபயோகமாகஇருக்கும்.


நம் நாட்டுப் பெண்கள் வீட்டு வேலைக்கு உதவியாளர்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். ஒரு நாளைக்குவீட்டுவேலை உதவியாளர் வரவில்லையென்றால், வீடு திமிலோகப்படுமல்லவா? அந்த நிலை இங்கேஇல்லை. ஓஹோ..தினம் தவறாமல் வேலைக்கு வருவார்களா? நல்லாதாயிற்று என்று கனவு காணவேண்டாம்!


வேலைக்கு ஆட்கள் கிடைத்தாலும் அவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கட்டுப்படியாகாது! ஒரு மணிக்கு குறைந்ததுபத்து டாலர்கள். நம் இந்திய ரூபாயில் 300. ஒரு இரண்டு மணிநேரமாவது வேலை இருக்காதா? ஒரு நாளைக்கு600 ரூபாய்கள். மாதத்திற்கு? ஹைய்யோ!


அது மட்டுமல்ல, வெள்ளைக்கார வேலையாட்கள் நமக்கு, எவ்வளவுதூரம் 'உதவி'யாக இருப்பார்கள்? இங்கேஒரு பாத்திரம் தேய்ப்பதில்கூட அவர்கள் முறை நம்முறையிலிருந்து மிகவும் மாறுபட்டதுதான். நாம் பாத்திரங்களைஒவ்வொன்றாகத் தேய்த்து, பின் தண்ணீரில் நன்றாகக் கழுவுவோம் இல்லையா? ஆனால் இங்கேயோ?அவர்கள், 'சிங்க்'கில் தண்ணீரை நிரப்பி, அதில் சிறிது 'லிக்விட் ஸோப்'கலந்து விட்டு,பத்திரங்களை அதில் முக்கிஎடுத்து வைப்பார்கள். பிறகு அவைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒரு சிறிய 'டவல்' கொண்டு ஈரம்போக வெறுமனேதுடைத்து வைத்துவிடுவார்கள். இது எப்படி இருக்கு?


சமையலுக்கும் அவர்கள் உதவி செய்ய முடியாது. நம் சமையல் முறைகள் வேறு அல்லவா? தப்பித் தவறி செய்தார்கள்என்றால், உப்புப் பார்க்க நாம் சுவைத்துப் பார்க்கும் விதத்தில் இல்லாமல் கரண்டியை அப்படியே வாயில் வைத்துச் சுவைத்துவிடுவார்கள். 'எச்சில், கிச்சில்' எல்லாம் பார்க்க மாட்டார்கள். இதுபோல பலதும் சொல்லிக் கொண்டே போகலாம்.(எப்படியோ, வேலைக்கு ஆள் வைக்காமல் இருப்பதற்கு சாக்கு சொல்லியாச்சு!)
வீட்டு வாடகையும் இங்கே வாரத்திற்குதான். நகரங்களில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட இடத்திற்கு வாரம் 200 டாலர்கள்குறைந்த பட்சம் வசூலிப்பார்கள். நகரத்தில், பேட்டைக்குப் பேட்டை அது இன்னும் கூடும்.
அடுத்த செலவு மின்சாரம்! அநேகமாக எல்லா வீட்டுச் சாதனங்களும், அடுப்பு உள்பட மின்சாரத்தாலே இயங்குகின்றன. குளிருக்காகவீட்டில் ஹீட்டர்கள் இருக்குமல்லவா? மேலும் வீட்டு உபயோகங்களுக்கான வென்னீர் 'டேங்க்'களில் எப்போதும் வென்னீர் சூடாகிக்கொண்டே இருக்கும். தூங்குவதற்கும், படுக்கையில் நாம் 'எலக்ட்ரிக் ப்ளாங்கெட்' விரித்திரிப்போம். அது ஒரு விதமான கதகதப்பைத்தரும். அப்படி இப்படி என்று மின்சாரத்துக்கும் குறைந்தது மாதம் 200 டாலர்கள் ஆகும். குளிர் காலமென்றால் இன்னும் கூடும்!


அப்புறம் கார்! பெட்ரோலின் விலை சர்வதேச மார்கெட் நிர்ணயம் என்பதால் அவ்வளவு வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. எனினும்கார் இல்லாமல் வாழ்க்கை ரொம்பவும் கஷ்டமே! பஸ் வசதிகள் அருமையாக இருந்தாலும், குறைந்தது வீட்டுக்கு ஒரு வண்டியாவதுவேண்டியிருக்கும்! 'சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம்' என்ற பழஞ்சொல்லுக்கு இங்குதான் முழு அர்த்தமும்தெரியவந்தது.


இவ்வளவு கார்கள் ஓடினாலும் , சாலைகளில் 'ஹார்ன்' சப்தம் கேட்க்காது! மிகவும் அவசியம் என்றால் தவிர யாரும்'ஹார்ன்' உபயோகிப்பதேயில்லை. என் பதினேழு வருட கார் ஓட்டும் அனுபவத்தில் ஒரு முறைகூட 'ஹார்ன்' அடித்ததே இல்லை.அடுத்த முறை இந்தியா வரும்போது ஒரு முறை அடித்துப் பார்க்க வேண்டும்!


மலிவு விலையில் கார்கள் கிடைத்தாலும், அப்புறம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அந்த கார்கள் தெருவில் ஓடலாயக்கா என்று பரிசோதனைகள் உண்டு. அப்போது எல்லாம் சரியாக இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். அதற்கான செலவுகள் தனி. அப்புறம் வருடம் ஒரு முறை பதிவு வரிகள் தனி( இது நம் நாட்டிலே உள்ள 'ரோடு டாக்ஸ்')அதன்பின், இன்ஷ¥ரன்ஸ் கட்டணம். ஒரு சின்னப் பழுது பார்க்கும் வேலைக்குமே 800, 1000 என்று கறந்துவிடுவார்கள்!அதுவுமல்லாமல், நாம், மற்றவர்கள் வண்டியை இடித்து விட்டோமானால், அது நல்ல வண்டியாக இருந்துவிட்டால் அதற்குண்டானபழுது பார்க்கும் செலவுக்கு, நமக்கு மட்டும் இன்ஷ¥ரன்ஸ் இல்லாவிட்டால் தொலைந்தோம். இதற்கு பயந்தே கட்டாயம் இன்ஷ¥ரன்ஸ்எடுத்திருப்பது நல்லது.


போக்குவரத்து விதிகள் கடுமையாக அனுசரிக்கப்படுகின்றன. அங்கங்கே ரகசிய கேமெராக்கள் உண்டு. சாலை விதிகள் மீறப்பட்டால்அபராதம் அதிகம்! ஒட்டுனர் உரிமம் பெறவும் செலவு உண்டு. முதலில் சாலை விதிகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, ஒரு தேர்வுக்குச்செல்லவேண்டும்.உங்களுக்குத் தரப்படும் கேள்வித்தாளிலேயே விடைப்பகுதிகள் இருக்கும்.அவை'சுரண்டல் லாட்டரி'யில் உள்ளதைப்போலமறைந்திருக்கும். ஒவ்வொன்றிற்கும் நான்கு விடைகள். A B C D நீங்கள் அதில் ஒரு விடையைத் தேர்ந்தெடுத்து, 'சுரண்ட வேண்டியது'தான்.அது சரியா இல்லையா என்று உடனே தெரிந்து விடும். எல்லாம் சரியென்றால் மட்டுமே உங்களுக்கு 'லேணர்ஸ் லைசென்ஸ்' கிடைக்கும்.


அது இருந்தால்தான், நீங்கள் 'ட்ரைவிங் ஸ்கூல்'லில் சேரமுடியும்! அங்கேயும் கற்றுக்கொள்ள மணிக்கு 45 டாலர்கள் செலவாகும். பிறகுஉரிமம் பெற ஒரு முறை பணம் கட்டினால், பரிசோதகருடன்,ஒரு நாள் உங்களை சாலையில் வண்டியோட்டச் செய்து பரிசோதிப்பார்கள்.அதில் தேறினாலே உங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். அதற்குப்பின்தான் நீங்கள் முழு லைசென்ஸ் பெறமுடியும்.


இங்கே வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள, குறைந்தபட்ச வயது பதினைந்து வருடங்களும் ஆறுமாதங்களும். இதனால்தான் இந்த உரிமம் விஷயத்தில்இவ்வளவு கட்டுப்பாடும் கண்டிப்பும். 16 வயதுகூட நிறையாத இளம்பருவத்தினர் ஆர்வக்கோளாறால், விபத்துக்குக் காரணமாகிவிடுவார்களோஎன்றுதான் இந்தக் கவனிப்பு.


கட்டுப்படுத்தப்பட்ட ஓட்டுனர் உரிமம் கிடைத்தவர்கள்,காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரைதான் கார் ஓட்டலாம்.அதன் பின்பு கார் ஓட்டத்தடை உண்டு.


அனைவருக்கும் பொதுவாக, மது அருந்திவிட்டு கார் ஓட்டுகின்றார்களா என்றும் அவ்வப்போது பரிசோதனைகள் நடக்கும். 'Any One, Any Where, Any Time' என்றெல்லாம் உண்டு. பிடிபட்டால் தண்டனை அதிகம். சில சமயம் உரிமம்ரத்து செய்யப்படும் அபாயமும் உண்டு!


தொலைபேசிக்கு மாதாமாதம் 40 டாலர்கள் கட்டணம் உண்டு. இதில் உள்ளூருக்குப் பேசுதல் முழுவதும் இலவசம். ஆனால் இங்கேஉள்ள மற்ற நகரங்களுக்குப் பேசினாலும், பன்னாட்டு சேவைக்கும் தனியாக பணம் கட்டவேண்டும். அது மிகவும் கூடுதல் என்பதால்இப்போதெல்லாம், நாங்கள் '·போன் கார்டு' வாங்கி வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு, மற்ற நாடுகளுக்குப் பேசுகின்றோம்.


அடுத்து வருவது சாப்பாட்டுச் செலவு. கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு எப்படியும் வாராவாரம் மளிகை,பால், ரொட்டி என்று குறைந்தது 200 டாலராவது ஆகும். ரொம்பவும் சிக்கனமாக, வெளியில்போய் உணவு உட்கொள்ளாத நிலையானால்கொஞ்சம் குறையலாம்! நல்லவேளையாக இங்கே பல இந்திய மளிகை சாமான்கள் விற்கும் கடைகள் வந்துவிட்டன. அவர்களுக்கிடையில்உள்ள வியாபாரப் போட்டியினால், நமக்கு மலிவாகப் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. நாங்கள் இங்கே வந்த புதிதில் பருப்பின்விலை கிலோ 10 டாலர்கள். இப்போது 2.50 டாலர்கள்.


இப்போதெல்லாம் நம் காய்கறிகள் கூட கிடைக்க ஆரம்பித்துள்ளது. எல்லாம் ·பிஜித்தீவிலிருந்து வருகின்றன. விலை மிகவும் அதிகம்என்றாலும், இதுவாவது கிடைக்கிறதே, கிடைத்தவரை லாபம் என்ற உணர்வுதான்! எத்தனை நாட்களுக்குத்தான் முட்டைக்கோசும்,காலி·ப்ளவருமே சாப்பிட்டுக் கொண்டிருப்பது?


சூப்பர் மார்கெட்டுகள் சிலது, எப்போதுமே திறந்திருக்கின்றன. 24 மணி நேரம், வாரம் ஏழு நாட்கள். ஷாப்பிங் சென்டர்களில் சினிமாதியேட்டர்களும், '·புட் கோர்ட்' என்று அழைக்கப்படும் உணவங்காடிகளும் நிறைந்து காணப்படுகின்றன!


இங்குள்ள மக்களை 'கிவி' என்று சொல்வார்கள். அவர்களுக்கு நம் இந்திய உணவு வகைகள் மிகவும் பிடித்துப் போய்விட்டதால்,இப்போதெல்லாம் நிறைய இந்திய உணவகங்கள் பெருகிவிட்டன. இன்றையக் கணக்கில் நான் வசிக்கும் 'கிறைஸ்ட்சர்ச்' என்றஊரில் மட்டும் 37 இந்திய உணவகங்கள் இருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


பிறகு மருத்துவச் செலவு! ஒரு முறை மருத்துவரைப் பார்க்க குழந்தைகளுக்கு 28ம், பெரியவர்களுக்கு 45ம் செலவாகும். இது தவிர ஏதாவதுமருந்து எழுதித்தரும் பட்சத்தில், மருந்தகத்தில் அவைகள் வாங்கும் செலவு தனி.


வீட்டில் உள்ள பொருட்களுக்கு 'இன்ஷ¥ரன்ஸ்' மிகவும் அவசியம். ஏதாவது விபத்தோ, களவோ நடந்தால் அதற்கு நஷ்ட ஈடு கிடைக்கும்.உயிர் இழப்பு,வன்முறையில் தாக்கப்படுதல் போன்றவைகளுக்கு மட்டுமே காவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். சாதாரணக் களவுகளுக்குஒரு முக்கியத்துவமும் இல்லை.


இதெல்லாமே அடிப்படைத் தேவைக்கான செலவுகள். இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள், வாரம் குறைந்த பட்சம் உங்கள் குடும்பத்துக்குஎவ்வளவு தேவைப்படும் என்று!


இங்கே குடியுரிமை பெற்றுக் குடியேறும் மக்களுக்கு, முன்பு கிடைத்து வந்த உதவித் தொகைகள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன. இரண்டுஆண்டுகளுக்கு அவர்களுக்கு Unemployment benefit எதுவும் கிடைக்க வாய்ப்பிலை என்பதால், அவர்களுக்குத் தேவையான பணம்முதலியவற்றை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.


வேலை கிடைத்துவிட்டால் கவலை இல்லை. ஆனால் கிடைக்கும்வரை.....


நன்றி: சங்கமம் 2004

12 comments:

said...

இந்த 'ஃபோன் கார்டு' மட்டும் இல்லைன்னா கொஞ்சம், இல்லை இல்லை நிறையவே கஷ்டந்தாங்க! அதென்னமோ தெரியல, இந்தியாவுக்கு இதுல (தொ.பே.கட்டணம்) மட்டும் மிக உயர்ந்த இடத்தைக் கொடுத்து வச்சிருக்காங்க. :)

said...

ஆமாங்க இராதாகிருஷ்ணன்.
இப்ப நம்ம டெலிகாம் ஒரு ஸ்பெஷல் ரேட் கொடுத்திருக்கு. இந்தியாவுக்கு 19 சென் ட் ஒரு நிமிஷத்துக்கு. இது இன்றைய நிலவரம். உடனே அதை மாத்துனாலும் மாத்திருவாங்க.

said...

முட்டைக்கோசும் கோலிஃபிளவரும் வேற வேறயா? நான் ரெண்டும் ஒரே பொருள் என்டு நினைச்சிட்டிருக்கிறன்! :O(

முட்டைக்கோஸ் என்பது என்ன? ப்ரொக்கொலியா?

said...

முட்டைக்கோஸ் தான் கேபேஜ்

said...

நாங்க அதை "கோவா" என்டு சொல்வோம்.

said...

நாங்க இந்தியாவுலே இருக்கர ஒரு ஸ்டேட்டை 'கோவா'ன்னு சொல்வோம்:-)

அப்புறம் பால்கோவாவை 'கோவா'ன்னு சொல்வோம்.

said...

துளசி, உங்களுக்காச்சி எனக்காச்சி (எங்களுக்காச்சி), 17 வருஷம் ஹார்ன் அடிக்காம ஓட்டுனீங்கள்ள; எங்க ஊருக்கு வாங்க..17 நிமிஷம் ஓட்டிட்டீங்கன்னா பாத்துக்குவம்...!

said...

நான் அமெரிக்காவில் சில மாதங்கள் இருந்த பொழுது இந்தியாவில் உள்ள தொலைபேசி வசதிகளை நினைத்து பெருமைப் பட்டதுண்டு.

அங்கு காலிங் கார்டு இல்லாவிட்டால் கதை கந்தலோ கந்தல். அடிக்கடி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம்மூரில் வீட்டை விட்டு வெளியே வந்தால் நூறு STD பூத்கள்.

ஐரோப்பாவிலும் STD பூத்கள் நிறைய இருக்கின்றன. அவையெல்லாம் பெரும்பாலும் ஆப்ரிக்கர்களால் நடத்தப் படுகின்றன. இந்திய பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நடத்துகின்றார்கள்.

காரில்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வாழ முடியாது போல இருக்கின்றது. ஐரோப்பாவில் நான் சுகமாக அனுபவித்த ரயில் பயணங்கள் அமெரிக்காவில் பெருங்கொடுமை. ரயிலைப் படிக்கக் கூட காரையோ பஸ்ஸையோ பிடிக்க வேண்டியிருக்கிறது.

said...

ஆமாங்க தருமி, நானும் கவனிச்சேன். ஒருகை ஸ்டீரிங்க்லேயும் ஒருகை ஹார்ன்னும்தான்.
என்னா சத்தம் ரோட்டிலே. அப்பப்பாஆஆஆ


ராகவன்,

நீங்க சொல்றது ரொம்பச் சரி. அதான் காரு....

சோறில்லாமல் இருந்தாலும் இருப்பாங்களே தவிர
காரில்லாமல் இருக்க மாட்டாங்க.

காலிங் கார்ட் இல்லாமல் ஃபோன் லைனிலேயே பேசலாம்தான். பில் வர்றப்ப
ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக்:-)

said...

(17 வருட டிரைவிங் வாழ்க்கையில் என்றது, என் காதில் 17 வருட அரசியல் வாழ்க்கையில் என்று தப்பாக விழுந்துவிட்டது. அங்கே எலெக்ஷனில் நின்னுடாதீங்க, ஜெயிச்சிடப் போறீங்க.)

அக்கரைப் பச்சை அருகில் வந்ததும் அச்சுறுத்துமோ?

said...

'மழை' ஷ்ரேயா
//முட்டைக்கோசும் கோலிஃபிளவரும் வேற வேறயா? நான் ரெண்டும் ஒரே பொருள் என்டு நினைச்சிட்டிருக்கிறன்! :O(//
//முட்டைக்கோஸ் என்பது என்ன? ப்ரொக்கொலியா?//

துளசி கோபால் said

//நாங்க இந்தியாவுலே இருக்கர ஒரு ஸ்டேட்டை 'கோவா'ன்னு சொல்வோம்:-)
//அப்புறம் பால்கோவாவை 'கோவா'ன்னு சொல்வோம்.//

அட உங்க லொள்ளு தாங்கலப்பா.

G.Ragavan said
//காரில்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வாழ முடியாது போல இருக்கின்றது.//

இராகவன் இங்கலாம் "கால்" இல்லாமல் கூட வாழ்ந்துரலாம் ஆனா "கார்" இல்லாம இருக்க முடியாது.

said...

தாணு,

அதெல்லாம் 'துணிஞ்சவனுக்கு துக்கமில்லை'தான்.

அச்சுறுத்துதல்?

எதுக்கு பயம்? நாமெல்லாம் வீரத்தமிழர்கள் இல்லையோ?

கல்வெட்டு,

கால் இல்லாம....கார் இல்லாம

ஹாஹாஹாஹா...

நல்லாச் சொல்லிட்டீங்க.