Monday, September 26, 2005

நியூஸிலாந்து. பகுதி 4

குளிர் குளிர் குளிர்


நம் நாட்டை ஒப்பிடும்போது இங்கே குளிர் கொஞ்சம் கூடுதல்தான்! இதுக்கு முக்கியமானகாரணம் எதுன்னா, இந்த நாட்டுக்கு ரொம்பப்பக்கத்திலே 'தென் துருவம்' இருக்கறது. இங்கேயும்நான்கு பருவங்கள் ஒரு வருஷத்திற்கு உண்டு. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் அப்புறம்இலையுதிர் காலம். எல்லாம் மும்மூணு மாசங்கள் என்று சொன்னாலும்கூட, நம்மைப் போல 'ட்ராபிகல்க்ளைமேட்' நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாக் காலங்களும் குளிர் காலம்தான். வேணும்னாகுறைந்த குளிர், அதிகக்குளிர், ரொம்பவே அதிகமான குளிர் இப்படியெல்லாம் சொல்லலாம்! அதிலும்'சதர்லீ' எனப்படும் காற்று அடிக்கும் தினம் என்றால் கேட்கவே வேண்டாம்! தென்துருவத்திலிருந்துவரும் காற்றல்லவா? எலும்பைக் கூட உருக்கும் குளிர் என்றால் மிகையில்லை.'அடிமைப்பெண்'எம்.ஜி.ஆர். போலதான் நிமிராமல் நடக்கவேண்டும்.

குளிர்காலத்தில் பனிமழை பொழிவதும் அதன் காரணம் வீடுகள், கார்களின் கூரைகளிலும் வெள்ளைப்போர்வையாகப் பனிகட்டிகள் வீற்றிருப்பதும் பார்ப்பதற்கு வெகு அழகாக இருப்பது உண்மையே என்றாலும்இந்தப் பனியின் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் நஷ்டமாவது எனக்கு மிகவும் வருத்தத்தையேதருகிறது.


இங்கே ஆடுகள் நிறைய உண்டு என்று முன்பே குறிப்பிட்டேன் அல்லவா? அவைகளுக்கு பேறுகாலம்அனேகமாக ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பித்துவிடுகிறது. அப்போது குளிர்காலம்முடிவடையும் தருணம் தான். ஆனால், இங்கே அப்போது தென் துருவத்திலிருந்து குளிர்காற்று அடித்தாலும்,அல்லது மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அது பனித்துகளாக மாறி விடும்.


ஆட்டுப்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு தீராத தலைவலிதான்! அந்தக் குளிர் தாங்காமல் அந்தப்பிஞ்சு உயிர்கள் இவ்வுலகத்தைவிட்டே போய்விடுகின்றன. இறந்துபோன சடலங்களை வாரி வாரி வண்டியில்போடுவதை தொலைக்காட்சி செய்தியில் காண்பிக்கும்போது மிகவும் துக்கமாக இருக்கும்.அவைகளை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தால் இந்த இழப்பு நேராதே என்று வருந்துவேன்.ஏன்தான் இப்படிச்செய்கிறார்களோ?


ஆனால், பாருங்கள். இன்று தொலைக்காட்சிச் செய்தியில் ,இந்த நாட்டில் உள்ள பிராணிவதைத் தடுப்புச் சங்கம்முதல் முறையாக ஒரு பண்ணை வைத்திருப்பவர்கள் மேல் வழக்கு தொடர்ந்துள்ளது என சொல்லப்பட்டது.காரணம், இந்த வாரம் பெய்த பேய் மழையால், வடக்குத் தீவில் உள்ள ஒரு பண்ணையில் வெள்ளப் பெருக்குஏற்பட்டு, அதன் உரிமையாளர்களின் கவனக்குறைவினால் ஒரு இரவு முழுதும் மாடுகள் தண்ணீரில் தலைமட்டும் வெளியே தெரியும் வண்ணம் நின்றிருக்கின்றன!
பண்ணை உரிமையாளர்கள் சொன்னது, அவர்கள் 'கேட்'டைத் திறந்து விடும்போது, தண்ணீர் உள்ளே புகுந்துவிட்டது. அதனால் அவைகளை மேடான நிலத்திற்கு ஓட்டிக்கொண்டு போகமுடியவில்லை.பார்க்கலாம், மாடுகளுக்கு நீதி கிடைக்கிறதா என்று! (கிடைத்தது. )


இந்தக் குளிரைத் தாங்கும் வண்ணம் இங்கே வீடுகள் முதலில் கட்டப்படவில்லை. இங்கே முதலில் குடிபெயர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த விவசாயிகள். அப்போது வீடுகளில் மரக்கட்டைகளைஎரித்து வீட்டை உஷ்ணப்படுத்தினார்கள். இந்தப் பழக்கம் இன்னும் உள்ளது. எல்லா வீடுகளில் இருந்தும்புகைபோக்கி மூலம் வரும் புகையானது, நகரைச் சூழ்ந்துகொண்டு அப்படியே நின்றுவிடுகிறது. இதனால்கொஞ்ச நஞ்சம் வரும் சூரிய வெளிச்சமும் பூமிக்கு வருவது தடைப்படுவதுடன், விமானப் போக்குவரத்துக்கும்இடைஞ்சலாகிவிடுகிறது. இதைக் குறைப்பதே இங்குள்ள நகரக் கவுன்சிலின் முக்கிய வேலையாக உள்ளது.மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்றால் அதன் கட்டணம் பயங்கரமாக ஏறிக்கொண்டே போகிறது.


இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல வந்துவிட்டன அல்லவா? தற்போது கிடைத்துள்ள விவரத்தின்படி, குளிரைக் கட்டுப்படுத்தி, வீட்டினுள் ஏற்படுத்தும் உஷ்ணத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒருவிதமான பஞ்சு நுரைபோல உள்ள 'பிங்க் பேட்'என்னும் பொருள் வீட்டின் உட்புறச் சுவரில் பதிக்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் புதிதாகக் கட்டும் வீடுகளில் தான் செய்யமுடியும். பழைய வீடுகளுக்கு இதைச் செய்ய முடியாது. ஜனத்தொகை அவ்வளவாக இல்லாத காரணத்தால் புதிதாக வீடுகள் கட்டப்படுவது குறைவே.


இதெல்லாம் குளிருக்குத் தெரியுமா ? வழக்கம்போல வந்து நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது!இதுக்கெல்லாம் ஒரு கால அட்டவணையும் உள்ளது.குளிர்காலம் என்றால் ஜூன் முதல் தேதி தொடங்கும்.செப்டெம்பர் மாதம் ஒன்று முதல் இங்கே வசந்த காலம். இப்படியே டிஸம்பர் மாதம் கோடை, மார்ச் முதல்இலையுதிர்காலம். இதெல்லாம் அதிகாரபூர்வமான தேதிகள். ஆனால் இயற்கை அன்னைக்கு எந்த அட்டவணையும் தேவையில்லை! ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் வரும்போதே, 'டா·போடில்' பூக்க ஆரம்பித்துவிடுகிறது.


வசந்த காலத்தில், இங்கு வித விதமான மலர்க்கூட்டங்களைப் பார்த்தாலும், மற்ற எல்லாக் காலங்களுக்கும்பூக்கள் பூக்கின்றன. இப்போது இங்கே நல்ல குளிர். ஆனாலும், பார்ப்பதற்கு 'ரோஜா'வைப் போலத்தோன்றும் 'கமீலியா' பூக்கள் பல நிறங்களில் பூத்துக் குலுங்குகின்றன. அவைகளுக்கு 'குளிர் விட்டுப் போச்சு'என்று நினைப்பேன். மேலும் 'விண்டர் காக்டஸ்' என்னும் செடியும் அழகாகப் பூக்கின்றது, இந்தக்குளிரிலும்!


கோடை வந்தாலே கொண்டாட்டம்தான். அதை வரவேற்க என்றே பெரிய விழா உண்டு. அன்று இரவு வாணவேடிக்கை நடைபெறும். அதற்காக என்றே ஒரு நிபுணர் பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து வருவார்.எல்லாம் ஒரு ஒழுங்குமுறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதேபோல, கோடை முடியும் சமயமும், அதைவழியனுப்புவது போல ஒரு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். ஊரே திரண்டு வந்து வேடிக்கைப் பார்க்கும்.
பட்டாசைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. இங்கே பொதுவாகப் பட்டாசுகள்கிடைப்பதில்லை.ஆனால் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி 'கை ·பாக்ஸ் டே' என்று கொண்டாடப் படுகிறது.இந்த 'கை ·பாக்ஸ்' என்பவன், 1605 ஆம் ஆண்டு, ப்ரிட்டிஷ் பார்லிமென்ட் கட்டிடத்தை தகர்ப்பதற்காக,திட்டம் போட்டவன். ஆனால் திட்டம் நிறைவேறும் முன்பே, வெடி மருந்துடன் பிடிபட்டு, மரண தண்டனைவிதிக்கப்பட்டு மரணம் அடைந்தான். அந்த நாளையே ஆங்கிலேயர்கள், 'கை ·பாக்ஸ்'தினமாகக் கொண்டாடுகிறார்கள்.சுருக்கமாகச் சொன்னால் இவன்தான் ஆங்கிலேயர்களின் 'நரகாசுரன்' எனலாம்! இந்த நிகழ்ச்சிக்காக இங்கே அக்டோபர் மாதம் 25/26 தேதிகளில் இருந்து, பட்டாசு விற்பனை உண்டு. எல்லாம்கம்பி மத்தாப்பு, பூ மாரி போல் இருப்பவை மட்டுமே. வெடிகள் வெடிக்க முடியாது. அது தடை செய்யப்பட்டுள்ளது.இவைகளும் நவம்பர் 5 ஆம் தேதி மாலை வரை மட்டுமே கிடைக்கும். அதற்குப்பின் விற்பனைக்கு அனுமதி இல்லை.
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், பதினாலு (14) வயதுக்குட்பட்டவருக்கு விற்க மாட்டார்கள். பெரியவர்கள்மட்டுமே வாங்க முடியும்!பட்டாசு கொளுத்த, சின்ன வயதுக்காரர்களுக்குத்தானே மிகவும் விருப்பம்!


எப்படியோ ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விழாவால் எங்களுக்கும் ஒரு நன்மை உண்டு. நம் நாட்டுப் பண்டிகை'தீபாவளி' அனேகமாக அக்டோபர்/ நவம்பரில் தானே வருகிறது. இங்கே கிடைக்கும் இந்த பட்டாசுகளை வாங்கி வைத்துக்கொண்டு, தீபாவளி சமயம் நம் வீட்டுப் புல்வெளியில் கொளுத்தி (சும்மா, ஒரு சாஸ்த்திரம்,சம்பிரதாயம் தான்) மகிழ்வோம்.


இந்தக் குளிரினாலும் நாட்டுக்கு நன்மை உண்டு. இதுவும் அன்னியச் செலாவணியை ஈட்டுகிறது! பூமத்திய ரேகையின் வடக்கில்இப்போது கோடை அல்லவா? ஆகவே பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள், பனிமலைகளைத் தேடி, இங்கேவருகிறார்கள்.'சதர்ன் ஆல்ப்ஸ்' என்று அழைக்கப்படும் மலைத் தொடரில் உள்ள பனி படர்ந்த இடங்கள் இவர்களின் விளையாட்டுமைதானமாகிவிட்டன! இந்த மலைத் தொடரில்தான் பூமத்திய ரேகையின் தெற்கில் உள்ள மிக உயரமான மலைச் சிகரம் இருக்கிறது.இதன் பெயர் 'மவுண்ட் குக்'. இந்தத் தீவைக் கண்டு பிடித்தவர்தான் 'கேப்டன் குக்'. சில ஆண்டுகளுக்கு முன், இந்தச் சிகரம்அதன் கூம்புப் பகுதி உடைந்து விழுந்து கொஞ்சம் குள்ளமாக ஆகிவிட்டது! 'மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை' என்றுசொல்வதுபோல இதுதான் இன்னமும் உயர்ந்த இடமாக உள்ளது!


ஆட்டக்காரர்களுக்குத் தேவையான அளவில் பனி இல்லையென்றால், செயற்கை முறையில் பனியை இப்போதெல்லாம் உருவாக்கிவிடுகின்றனர்! எல்லாம் ஒரு வியாபார நோக்கம்தான்! இவை மட்டுமின்றி, எளியவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் இயற்கையேபல இடங்களில் பனி பெய்து வைக்கிறது! சிறிய குன்றுகள் ஏராளமாக 'ரோடு' ஓரத்திலேயே இருக்கின்றன. முதல்நாள் நல்ல பனிமழைபெய்துவிட்டு, மறுநாள் நல்ல வெயிலாக இருக்கும் பட்சத்தில், சின்னக்குழந்தைகள் உள்ளவர்களும், நம்மைபோல 'பனிச் சறுக்கை'ரசிக்கமட்டுமே தெரிந்தவர்களும் கூட்டமாக இந்த இடங்களுக்கு படை எடுப்போம்! 'ப்ளாஸ்டிக் ஷீட்'எடுத்துக் கொண்டுபோய், குன்றில்கொஞ்சதூரம் ஏறிவிட்டு, அந்த விரிப்பில் உட்கார்ந்தால் தானாய் வழுக்கிக்கொண்டு கீழே வந்துவிடலாம்!
'ரோஜாக் கன்னங்களுடன்' சிறுவர், சிறுமியர் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதே அருமையாக இருக்கும்! ஐந்தாறு மாதக் குழந்தைகளும்இதில் ஈடுபடும்!


ஆனால், விளையாடி முடித்த பின்பு, அனைவரும் அவரவர் கொண்டு போயிருந்த 'ப்ளாஸ்டிக் விரிப்பு'களை அங்கேயே விட்டுவிடாமல்கவனமாக திரும்ப எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்! இங்கேயும் இப்போதெல்லாம் 'ப்ளாஸ்டிக் அரக்கனை' எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.


சும்மா குளிர் குளிர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே! எத்தனை டிகிரி என்று யாருக்கும்சந்தேகம் வரவில்லையா?


இப்போது குளிர் காலம் அல்லவா? ஆகையால் பல நாட்களில் 'சிங்கிள் டிஜிட்' தான். அநேகமாகஏழு அல்லது எட்டு டிகிரி வரை வரும். பனி பெய்யும் நாட்களில் ஸீரோ டிகிரி அல்லது சில சமயங்களில்மைனஸ் இரண்டு, மூன்று என்று போகும்.


கோடையில் பதினெட்டு முதல் இருபத்தி இரண்டுவரை போகும். எப்போதாவது இருபத்தொன்பது, முப்பதுஆகிவிடும். அன்று தெருவில் நம்மை காண்போரெல்லாம் 'இண்டியன் சம்மர், நல்லா இருக்குமே உங்களுக்கு'என்று அன்புடன் விசாரிப்பார்கள்.(நமக்கும் அது ரொம்ப சூடாத்தான் இருக்கும்.இங்கே வந்து அநேக ஆண்டுகள்ஆனதால் நம் உடல் இந்த ஊர் காலநிலைக்குப் பழக்கப்பட்டிருக்கும் அல்லவா? ஆனால் ஒரு அசட்டுச் சிரிப்பைமட்டும் காட்டிவிட்டு போகவேண்டியதுதான்!)


இந்த உஷ்ணமே நமக்கு அதிகமாகத் தெரிவதன் காரணம் என்னவென்றால், இங்கே காற்றில் ஈரப்பதம் இல்லை.ஆகவே எந்த சூட்டுக்கும் நமக்கு உடல் எரிவது போல இருக்குமே தவிர வேர்க்காது. உடம்பு வேர்த்தால் தானேசூடு வெளியேறும்! ( அணியும் ஆடைகள் அழுக்காகாது. இது ஒரு லாபம்)
மற்றபடி வசந்த காலம், இலை உதிர்காலம். இவை இந்த குளிருக்கும், சூட்டுக்கும் இடைப்பட்டது தான். ஆனால்காலம் எதுவாக இருந்தாலும், தெற்கேயிருந்து காற்று வந்தால் 'தொலைந்தோம்' எப்போதும் ஒரு குளிருக்கான 'கோட்' கையிலிருப்பது மிகவும் அவசியம்.


இங்கே நியூஸிலாந்துலே குளிராச்சா. எதுவுமே கெடாது. பழைய குழம்பை கீழே ஊத்துறதுக்கு ஒரு காரணம் வேணுமேன்னு, ·ப்ரி¢ட்ஜ்லே வைக்காம வெளியிலே வைப்பேன். அது கெட்டுப் போயிட்டா,ஆஆஆஆ கெட்டுப் போச்சு,அதனாலே கீழே ஊத்தியாச்சுன்னு 'ஜஸ்டி·பை' பண்ணலாம்னு பாத்தா,ஊஹ¥ம் .. கெடாம நல்லாவே இருக்கும். ஊரே ·ப்ரிட்ஜ்லே இருக்கற மாதிரிதான்.


நன்றி: சங்கமம் 2004


( இந்தத் தொடர் தமிழ்நாட்டைவிட்டு வெளியே இதுவரை போகாத மக்களுக்காக எழுதப்பட்டது)

11 comments:

said...

பனிச்சறுக்குன்னு நீங்க சொன்னோன்னதான் நினைவுக்கு வருது..
extreme sports-பிரியர்களுக்கு சொர்க்கம் நியுஸிலாந்துன்னு சொல்றாங்களே.. நான் கூட ஒருதடவை பார்த்திருக்கேன்.. டிவியில தான். ரெண்டு மலைக்கு நடுவுல கயிறு கட்டி அங்கிருந்து இங்கேயும், இங்கேயிருந்து அங்கேயும் அந்தரத்தில பறக்கறாங்க.. வித்தியாசமா இருந்தது.

பிரிட்ஜ் வச்சுக்க தேவையில்லங்கறது இந்த குளிர்ல ஒரு சவுகரியம். உங்களுக்கு பரவாயில்ல.. இங்க ரொம்ப நேரமெல்லாம் பால், தயிரெல்லாம் இந்த இயற்கை பிரிட்ஜில வச்சீங்கனா, அப்புறம் பால உடைச்சுதான் சாப்பிடணும். :)

நேத்திய க்ளாஸ் கட் பண்ணதுக்கு சாரி டீச்சரக்கா..

said...

நேத்து என்ன கார் ரேஸா? அப்படியே ஓட்டிக்கிட்டு இங்கெ வரவேண்டியதுதானே?

said...

மழைக்குளிருக்கு, பனிக்குளிரையும் வாசிச்சவுடனே நல்லா நித்தா வருது துளசி. :O)

ம்ம், அது வந்து என்னத்தைச் செய்ய... வேலை செய்யணுமே!

said...

பதிவுகளிலே சூடா 'குஷ்பு'விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு. படிச்சுப் பாருங்க தூக்கமெல்லாம் ஓடிப் போயிரும்.

said...

ஷ்ரேயா.. இவ்ளோ நாளும் உங்க ஊரில வெயிலோ வெயிலடிச்சிட்டு நான் திரும்பிற இன்னிக்கு பாத்து அங்கை நல்ல மழைக் குளிரு.. அதுசரி.. அந்த வெயிலுக்கை எப்பிடி இருக்கிறீங்க ஷ்ரேயா.. அப்பப்பா... என்ன வெயில்.. என்ன வெயில்.. ?

said...

சயந்தன் - உங்களை மாதிரி நுவரேலியாவில பிறந்து வளர்ந்தாக்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்! :OP

said...

டீச்சர்,
வாசிக்கும்போதே குளுருது...

said...

நியூஸிலாந்து தொடர் முடியற வரைக்கும் எல்லாரும் வகுப்புக்கு வரும்போது 'ஸ்வெட்டர்' போட்டுக்கிட்டு வரணும்.

போட்டுக்கிட்டு வராதவுங்க 'பெஞ்சு'மேலே ஏறி நிக்கணும்:-))))

said...

அக்கா,
நன்றாக போகிறது தொடர்.
ஆடு மேய்ப்பு நியூசிலாந்தில் முக்கியமான தொழிலா?

said...

அப்படின்னா மாவு எப்படி புளிக்க வப்பீங்க?
சொல்ற ஒவ்வொரு யோசனைக்கும் சொன்னவர் ஐந்து குட்டி கரணம் போட்டுக்கொள்ளலாம்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

said...

வாங்க தறுதலை
(என்ன பேருப்பா?)

கொஞ்சமா அரைச்சா, தயிர் மேக்கர்லே வைக்கலாம். நிறைய அதாவது வாரத்துக்கு அரைச்சா 'அவன்'லே வச்சு எடுக்கலாம்.
ஈஸ்ட் போட்டா அது ஒரு வாசனை (யக்) வருதுன்னு எப்பவாவது ஆப்பம் செய்யும்போது மட்டும் ஒரு சிட்டிகை.

இன்னொருவிதத்துலே 'ஈனோ ஃப்ரூட் சால்ட்' போட்டு ஒரு பதினைஞ்சு நிமிஷத்தில் தோசை ஊத்திக்கலாம்.

இப்ப சொன்ன ஒவ்வொரு ஐடியாவுக்கும் நீங்க அஞ்சஞ்சு குட்டிக்கரணம் போட்டுக்கலாம்:-)))))

யோசனை சொன்னவருக்கு உடம்பு வணங்காது:-)))