Monday, January 26, 2015

எழுத்தாளர் ஏகாம்பரியின் மாடித்தோட்டம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 16)

பாலாவின் வீட்டில் இருந்து கிளம்ப அஞ்சு நிமிசமிருக்கும்வரை ஏகாம்பரி அதாங்க நம்ம எழுத்தாளர் ஏகாம்பரி வீட்டுக்குப் போகும் எண்ணமே இல்லை.  நம்ம திட்டத்தின்படி,  கனியைப் பார்த்துட்டு அங்கிருந்து நேரா அண்ணன் வீடு.

'மணி இன்னும்  நாலு கூட ஆகலையே....  உன் தோழி வேற  (ஏகாம்பரிதான்)  வீட்டுக்கு வரலை, வரலைன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்கன்னு  சொல்றியேம்மா'ன்னார் கோபால்.

அவுங்க வீடு கூட இங்கிருந்து ரொம்பப் பக்கமாம். போனமுறை கூட அவ்ளோதூரம் வந்துட்டு  என்னைப் பார்க்காமல் போயிட்டீங்களேன்னும் சொன்னாங்க. சரி போயிட்டுப்  போகலாமுன்னு  முதலில் அவுங்களுக்கு செல்லடிச்சேன். வீட்டுலே ஆள் இருக்கான்னு தெரியணுமுல்லெ?

'வாங்க வாங்க.வீட்டுலேதான் இருக்கேன்'னாங்க எழுத்தாளினி(! பெண்பால் சரிவருமா?) ஏகாம்பரி. விலாசம் கேட்டு வச்சுக்கிட்டேன். நம்ம பாலாவும் ரொம்பப்பக்கம்தான். நேர் ரோடு. பத்தே நிமிஷமுன்னு சொல்லி  கையை, தலையை ஆட்டி  கையாலேயே வழியைக் காற்றில்  வரைஞ்சும் காமிச்சு, நம்ம சீனிவாசனுக்கும் விளக்கிச் சொன்னார்.

அந்தப் பத்து நிமிச ஓட்டம்  என்னமோ மும்மடங்கா ஆகுமுன்னு அப்போ சீனிவாசனுக்கும் தெரியலை:-)

ஏகாம்பரியின் பேட்டைக்குள் நுழைஞ்சு அவுங்க  செல்லில் சொன்ன வழியில் போனா..... தெருமுழுக்கத் தோண்டி போட்டுருக்கு. டெட் எண்ட்!  இன்னொருக்கா செல்லடி.

பின்வாங்கி அடுத்த தெரு, இன்னுமொரு தெருன்னு பேட்டையைச் சுத்திப் பார்த்துக்கிட்டு,  வீட்டைக்  கண்டுபிடிச்சோம். மாடியில் வசிக்கிறாங்க ஏகாம்பரி.  நாயன்பர்களுக்கு  வரவேற்பு  தரும் வாசகத்துடன் வாசல்  மிதியடி:-)  காலிங் பெல்லின் அவசியமே  தேவைப்படாது. வாசலில் காலடி ஓசை கேட்ட மறுவிநாடி வீட்டுக்குள்ளே' வள் வள், லொள் லொள்.'

கீழ்தளத்தில் வசிக்கும் பெற்றோரை முதலில் அறிமுகப்படுத்தினதும், அஞ்சு நிமிசப்பேச்சு ஆச்சு. மறுபடி மாடிக்குப் போனோம். அவுங்க செல்லங்களை  வேறொரு அறைக்குள் வச்சுப் பூட்டிட்டாங்க.  எங்க கண்ணுலேயே காமிக்கலைப்பா:(  

அதுக்காகவிட்டுற முடியுமா?  ஊஞ்சலோடு இருக்கும்  ஹால் ஷோ கேஸில் செல்லங்கள் ஜெயிச்சு வாங்கினதை க்ளிக்கிக்கிட்டேன்:-)


சங்குப்பிள்ளையார்  ப்ரமாதம்!

சட்னு கண்ணில் பட்டது வெண் பளிங்கு பூஜை மாடம்!   பிள்ளையார் தலையில் அன்றலர்ந்த அழகான  செம்பருத்தி.  வியப்பின் எல்லைக்குப் போனேன்!  பெரியாரிஸ்ட்டின் வீட்டிலா?  'கணவர் பக்தி மான்.  மேலும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப்பிடிக்கும். வீட்டின் ஒரு பகுதிதான் பூஜை இடம் என்பதால் எல்லாமே பளிச்.'  கொள்கை விளக்கம்  ரொம்பச் சரி.  அடுத்தவரின் கருத்தை மதிக்கத் தெரியும் உயர் குணம். க்ரேட்!

எழுத்தாளர் (எழுத்தாளினி) ஏகாம்பரி, இப்பல்லாம் எழுதுவதை ரொம்பக் கு'ரை'ச்சுக்கிட்டு (மொட்டை மாடி)தோட்ட வேலையில்  மூழ்கிட்டாங்க.  'நுனிப்புல்' மேயாமல், ஆழ்ந்து  'உழுது' போட்டு வச்சிருக்கும்  தோட்டம்!




சம்பங்கி,மல்லி, ரோஜா, கனகாம்பரம், அரளி, செத்தி,  செம்பருத்தின்னு பூக்களும் இடையில் நானும், காய்கறிச் செடிகளுமா  நீட் அண்ட் டைடி! ரொம்ப அழகான சின்னத் தோட்டம்.

ஏகாம்பரி வீட்டு வெண்டைக்காய்:-)

 பக்கத்து  ஏகாம்பரி வீட்டுப் பப்பாளிக்காய்:-)

ஆமாம்..... இந்த ஏகாம்பரி யாருன்னு கண்டுபிடிச்சீங்களோ?  தோட்டம் பற்றிய குறிப்புகள் எல்லாம் நக நுனியில்!   உண்மையான ஈடுபாடும்  செடிகொடிகளைப்பற்றிய  அறிவு சேகரிப்பும் இல்லைன்னா...இது சாத்தியமே இல்லையாக்கும், கேட்டோ!




இன்னும் கொஞ்சநேரம் கதைகள் பேசிட்டு, அன்பளிப்பாக  தந்த  'ஆவி'யுடன்  கிளம்பி  அரை மணியில் அண்ணன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
'முதல்நாள் ராத்திரியே இங்கே வந்து தங்கி அதிகாலை கங்கா ஸ்நானம் செஞ்சு தீபாவளி கொண்டாடி  இருக்கலாம்.  இப்படி   இந்த நேரத்துக்கு வரயே'ன்னு  ஒரு  ஆலாபனை!

காஃபி, தீபாவளி  பலகாரங்கள் எல்லாம் ஒரு கை 'பார்த்துட்டு,  இருட்டானதும் பட்டாஸ் வெடிப்பு ஆரம்பம். இது ஒரு மாதிரி  'கேட்டட் கம்யூனிட்டி' லிவிங் என்பதால் (பத்து வீடுகள் மட்டுமே!)  ஒருவர் மாற்றி ஒருவர் என ஆரம்பிச்சு  ஒரு மணி நேரத்துக்கு  டப் டுப். டமார் டமார்.


ராச்சாப்பாட்டையும் அண்ணன் வீட்டுலேயே முடிச்சுக்கிட்டு அறைக்குத் திரும்பினோம். இரவு ட்யூட்டில் நம்ம  ரங்கநாதன். தீபாவளி ஸ்பெஷல் என்னன்னு கேட்டால்,  'இன்றைக்கு இட்லி சாப்பிட்டேன்' என்றார்! ஹைய்யோ  இட்லியா !!!!  ஊருக்குப் போகலை. சென்னையில் தான் இந்த வருசமும் தீபாவளியாம்.

வீட்டில் இருந்து கொண்டு வந்த தீபாவளி சமாச்சாரங்களில்  ஒரு பாதியை  ரங்கநாதனுக்கும் மற்றொரு பாதியை சீனிவாசனுக்கும்  பங்கு போட்டதும்தான்  மனசுக்கு நிம்மதி ஆச்சு.

இரவு  ரொம்ப நேரம் வரை  பட்டாஸ் சப்தங்கள் இங்கொன்னும் அங்கொன்னுமாக் கேட்டுக்கிட்டே இருந்தாலும்....  ஏதோ ஒரு  கணத்தில்  தூக்கத்தில் மூழ்கித்தான் போனேன்.

தொடரும்..........:-)

அனைவருக்கும் இந்தியக் 'குடி'யரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்!




Friday, January 23, 2015

தாய்மை !

தாய்மைக்காக  நம்ம வீட்டுக்குள்ளேயும் வெளியேயும்   என்ன இருக்குன்னு தேடியதில் அகப்பட்டவை.














என்னடா... எல்லாமே இப்படி! ஒருவேளை  நமக்குத்  தாய்மை உணர்வே போயிருச்சோன்னு  திகைச்சுப்போய் தேடினதில்  கிடைச்சார் ஒரு தாயுமானவர்!




Thursday, January 22, 2015

முத்தம் கொடுத்துட்டான்ப்பா !!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 15)


நாலுமணி கூட ஆகலை... அதுக்குள்ளே யாருக்கோ அவசரம்!  தீபாவளி கொண்டாடத் தொடங்கிட்டாங்க...  மூடி இருக்கும்  ஏஸி அறை  ஜன்னல்கள் பிளந்து போகும் பட்டாசு சத்தம்!

கோபமே எனக்கு வரலை:-) இப்படி  ராவோடுராவா பட்டாஸ் சத்தம் கேட்டு  வருசம்  33 ஆச்சே!

நம்ம பூனா வரலாற்றில்    கோமளா மாமிதான் அவுங்க இருக்கும் 'வாடா'வில் முதல் பட்டாஸ் கொளுத்திப்போடும்  ஆள்.  அதைக்கேட்டுத்தான் மொத்த வாடா சனமும்  'திவாலி ஆ கயா'ன்னு கண்ணைத் திறப்பாங்க.

கோபால் டிவி ரிமோட்டுக்குப் பாய, நான் லேப்டாப்புக்குப் பாய்ஞ்சேன்.  இங்கே ஃப்ரீ  வைஃபை  இருக்கு. நல்லாவும் வேலை செய்யுது. நம்ம மக்கள்ஸ்   மின்மடலிலும் பதிவுகளிலும் அனுப்பிவச்ச வாழ்த்துகளை நான்  படிக்க,  டிவியில் சினிமாக்காரர்கள் ஆடம்பரமான அலங்காரத்தில்  வாழ்த்துகள்   சொல்லிக்கிட்டு இருக்காங்க.

டிவிக்காரர்கள் எப்பவோ  ரெக்கார்ட் செஞ்சு வச்சதை, எதோ இப்பத்தான் நேரில் நின்னு சொல்றாங்க என்பதைப்போல் ரசிச்சுக்கிட்டு இருக்கார் இவர்.
ஆறுமணியாகட்டும் என்று காத்திருந்து  செல்ஃபோனில் தீபாவளி வாழ்த்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லிக்கிட்டு இருந்தோம். எவ்ளோ நாளாச்சு இப்படியெல்லாம் .....


'கங்கா ஸ்நானம்' முடிச்சு,  கோபால் புதுத்துணி எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியாகிட்டார்.  "கவலைப்படாதேம்மா. எதாவது சல்வார் கமீஸ் போட்டுக்கோ.  சீனிவாசன் வந்ததும் புதுப்புடவை கட்டிக்கலாம்."

கவலையா? அப்டீன்னா என்ன? நான் ஜாலியாத்தான் இருக்கேன். வீட்டு வேலைகளோ அடுப்படி சமாச்சாரமோ இல்லை பாருங்க.  கொண்டுபோன துணிகளை  ஆராய்ஞ்சேன்.  போன பொங்கலுக்கு  மச்சினர் வீட்டுலே வச்சுக்கொடுத்த புடவையை ப்ளவுஸ் தச்சுக்கக் கொண்டுபோனது கண்ணில் பட்டது.  மதுரை மாநாட்டுக்குக் கட்டிக்க இன்னொரு புடவையும்  வச்சுருந்தேன்.  அதன் ப்ளவுஸ் இதுக்குச் சரியாகுமான்னு பார்த்தால்....  நாட் பேட்!   மேலும்  வச்சுக்கொடுத்ததுக்கு ரன்னிங்லே ப்ளவுஸ் துணி.  அதிரசம் தின்னாப்லெ இருந்துச்சு.


வல்லியம்மா  ஃபோனில் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லி, ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கிளம்புன்னாங்க.  கீழே போகும்போது,கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் 'ஹேப்பி தீபாவளி'  சொல்லிக்கிட்டே  போய்ச் சேர்ந்தோம். விருந்தினர்கள் அதிகமில்லை. ஒரு  பத்து பேர்தானாம்.  பணியாளர்கள் ரொம்பவே ரிலாக்ஸ்டா இருக்காங்க  ரெஸ்ட்டாரண்டில். எல்லாமே  நார்த்தீஸ்.  திவாலி முபாரக் ஆச்சு!


தோழியும் மகனுமா வந்து சேர்ந்துக்கிட்டாங்க.   புடவை ரொம்ப நல்லா  இருக்குன்னு பாராட்டு வேற!  அதுலேயே அரைவாசி வயிறு நிறைஞ்சுருச்சு. மீதி காலுக்கு இட்லி வடை காஃபி. கடைசிக் கால் காலி. அப்படித்தானே சாப்பிடணும், இல்லையோ!

சீனிவாசன்  சொன்ன டைமுக்கு வந்துட்டார். ஆனால் தோழி சொல்லி வச்சுருந்த வண்டிக்கு  ட்ரைவர் வந்து சேரலையாம்.தீபாவளிதான் காரணமாம்.  ஆட்டோவில் போக முடிவு.  சீனிவாசனையே  கொண்டு விட்டுட்டு வரச் சொல்லிட்டு அவர் திரும்பி வந்தவுடன், மச்சினர் வீட்டுக்குக் கிளம்பிப் போனோம்.

வழியெல்லாம்  பட்டாஸ் வெடிச்ச குப்பைகள், ஒரிஜினல் குப்பைகளை மறைச்சுக்கிட்டு  இருந்துச்சு.

'எப்படியும் நாலுமணி நேரமாவது ஆகும். அதுவரை ச்சும்மா ஏன் தேவுடு காக்கணும்? நீங்க வீட்டுக்குப்போய் தீபாவளி நாளில் குடும்பத்தோடு இருந்துட்டு,  நாங்க ஃபோன் பண்ணும்போது வாங்க'ன்னு சீனிவாசனிடம் சொன்னதும் அவருக்கு முகம் 1000 வாட்!

"கிளம்ப அரைமணிக்கு முன்னால் சொல்லுங்க ஸார். வந்துர்றேன்"

ஊரில் இருந்து  வந்த உறவினர்களும்  நிறைஞ்ச   குடும்ப தீபாவளியா இருந்துச்சு.  நாத்தனாரின் சம்பந்திகள்!   என் புடவையைப் பார்த்ததும் மச்சினர் மனைவி கண்ணில் ஒளி!  அவுங்க போன பொங்கலுக்கு வாங்கிக் கொடுத்ததாச்சே!  'இன்னுமாக்கா கட்டாம வச்சுருந்தீங்க?'ன்னு  வியப்புதான்.   முந்தி ஒரு காலத்துலே புடவை வாங்கிட்டு வீட்டுக்குள் நுழைஞ்ச அடுத்த விநாடியே கட்டிப் பார்த்துருவேன்.  ரிஷிப்பிண்டம். ராத்தங்கமாட்டேன். அதெல்லாம்  போனபிறவின்னு வச்சுக்கணும்:-)

"உங்களுக்குப் புடவை இன்னும் வாங்கலைக்கா.  நீங்க ஊருக்குத்  திரும்பிப்போகும்போதுதான்   கொடுக்கணும் . என்ன கலர் வேணுங்க்கா? அதே பச்சைதானா?"

அதுக்குள்ளே  எங்க நாத்தனார், 'அண்ணிக்கு ஒரு புடவை வாங்கியிருக்கேன்'னு சொல்லிக் கொடுத்தாங்க.

'இப்ப தீபாவளிக்குத் தர்ற புடவையைபொங்கலுக்குக் கட்டிக்குவேன்'  சொன்ன கையோடு  'எனக்கு தயவு செஞ்சு யாரும் புடவை வாங்கித் தராதீங்க.  அங்கேபோனால்  கட்டிக்க ச்சான்ஸே இல்லை.  அப்படி எதாவது  பரிசு கொடுக்கணுமுன்னு நினைச்சால்.....  சின்னதா ஒருபொம்மை வாங்கித்தாங்க.கொலுவுக்கு வச்சுக்கறேன் 'என்றேன். சரிதானே?

சின்னதுக்கு  இது புரிஞ்சுருச்சு போல!  நம்ம பையிலே தன்னுடைய  சின்ன பொம்மை ஒன்னைப் போட்டு வச்சுருக்கு!  நியூஸி வந்தபின்தான் கவனிச்சேன்.  அட என் செல்லமே! கொலுவுக்கு ஆச்சு:-)))))

நானானி  கொடுத்த இருட்டுக்கடை அல்வாவை எடுத்து வெளியில் வச்சேன்.  'ஏது! 'ன்னார் மச்சினர்!   பதிவராக ஆனதின் பயன் என்றேன்:-)   பாதியை  அங்கே  துண்டு போட்டு விளம்பிட்டு,  மீதிப் பாதியை கால் வாசி கால் வாசியா ரெண்டு பங்கு போட்டேன், தசரதன்  கெட்டான்:-))))


வீட்டுக்கு இப்போதைய பெருந்தலை நம்ம கோபால்தான் என்பதால் ஆசிகளும்,  கைநீட்டங்களும்  நடந்து முடிஞ்சது. இங்கே வரும் வழியிலேயே பசங்க அங்கங்கே டப் டுப்புன்னு  பட்டாஸ் வெடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
நாங்க போனபோதுதான் வீட்டுலே  கடைசி பந்தி ப்ரேக்ஃபாஸ்ட் நடந்துக்கிட்டு இருந்துச்சு.  நாம் ஏற்கெனவே  லோட்டஸில் சாப்பிட்டாச்சுன்னதும் கொஞ்சமாக் கோச்சுக்கிட்டாங்க. எனக்குக் காலையில் மருந்து எடுத்துக்கணும். அது வெறும் வயிற்றில் கூடாது என்பதால்....  தின்னாம எங்கேயும் கிளம்ப விடமாட்டாரு நம்ம கோபால்.

ஆனாலும் விடாம சூடா 'வடை' போட்டுத்தர்றேன்னு  ஆரம்பிச்சாங்க.  நம்ம வீக் பாய்ண்டைத் தொட்டதும்.....  தலையை  ஆட்ட வேண்டியதாப்போச்சு சரின்னு:-)

பட்டாஸ் சத்தம் அதிகமாக் கேக்க ஆரம்பிச்சது. இவ்ளோ நேரம் பசங்க எல்லாம் சாப்பிடப்போயிருந்தாங்க போல. சின்னுவுக்கு உடம்பெல்லாம் நடுக்கம்.  வாடான்னதும் பக்கத்துலே வந்து உக்கார்ந்துக் கிட்டான். பாவம் குழந்தை.




நாத்தனார் பேரன். தீபாவளிக்கு  சிலந்தி உடுப்பு:-)



மச்சினர் மகன் 'கத்தி' பார்க்கக் கிளம்பினான்.  மகள், ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்குத் தீபாவளி பலகாரம் எடுத்துக்கிட்டுப் போறாளாம். எங்களுக்கும்  தீபாவளி பலகாரம் ஒரு பொதி கிடைச்சது.

கதைகள் பேசி கலகலப்பாய் பொழுது போனது.  மதிய சாப்பாடு  ஆனதும்  கிளம்பி நேரா பதிவர் சந்திப்புக்குப் போனோம்.

அங்கே.....அஞ்சே  நிமிசத்தில் ம்ருதங்கம் வாசிக்கக் கத்துக்குவார் நம்ம கோபாலுன்னு நான் கனவிலும் நினைக்கலை!

குழந்தைக்கண்ணன் கனிவமுதன் தன் இசைக்கருவிகளோடு பேசிக்கிட்டு இருக்கானே தவிர, அம்மா ஊட்டும் பருப்பு  சாதத்துக்கு வாயைத் திறக்கலை:-)
இந்த வருசம் நம்ம தலயின்  'அம்மா' தவறிப்போனதால்  வீட்டுலே தீபாவளி இல்லை. ப்ச்.....

நானானியின் அல்வாவில் கால் வாசி கொஞ்சம் மன ஆறுதலைக் கொடுத்துருக்கணும்!

கோபாலுக்கும் கனிக்கும் ஒரு புரிதலும் அன்பும் இருக்கு என்பதை கடந்து போன  நாட்களில் கவனிச்சு இருக்கேன். இப்பவும் அதேதான்.... சட்னு  ரெண்டு பேரும்  வாசிப்பு, சங்கீதமுன்னு தங்கள் உலகத்துக்குள் போயிட்டாங்க.



நானும்  பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியருமா  எங்க பேச்சைத் தொடர்ந்தோம். நேரம் ஓடத்தான் செஞ்சது.  அப்பதான்  அங்கிருந்த ம்ருதங்கத்தை ஆசையோடு பார்த்தார் கோபால். வாசியுங்களேன்னு சொன்னதுதான்.... பாலாவை அந்த க்ஷணமே குருவா ஏத்துக்கிட்டார். குரு தாளக்கட்டுச் சொல்ல சிஷ்யன் வாசிச்சதை  நீங்க கேட்டுக்கணும்:-))))

அஞ்சே நிமிசத்தில் ம்ருதங்கம் 'அடிக்கக்' கத்துண்டார்!!!!!

அதிர்ச்சியில் என் கை நடுங்க, நம்ம க்ளிக்ஸ் ஒன்னுமே சரியா வரலை:(

கல்யாணம் ஆன புதுசுலே   நம்ம கோபாலுக்கு  ம்ருதங்கம் வாசிக்கக் கத்துக்கணுமுன்னு  ரொம்ப நாளா ஆசை.  சுமார் ஏழு வருசம் கத்துக்கணும் என்று  சொல்லி ஆசையில் வெந்நீர் வார்த்தேன். "அப்போ ஈஸியாக் கத்துக்கும்  வாத்தியம் எது?"  வேறென்ன  ஜால்ரா தான்னு சொன்னதை நம்பி வாசிக்க ஆரம்பிச்சவர் இன்னும் நிறுத்தலை:-)  யாருக்கு  வாசிக்கிறார் என்பதில்தான் மாற்றம்!  மனைவி,மகள் என்று  தொடங்கி, இப்போ  ரஜ்ஜூவுக்கு:-)

நம்ம லக்ஷ்மி அண்ட் பாலாவுக்குத் தெரிஞ்சவங்க  மகள் பஸில் அடுக்குவதில் நிபுணி.  நம்ம மயில் கதை உங்களுக்குத் தெரியுமோல்யோ?  தோல்வியை கம்பீரமா ஒப்புக்கொண்டு  அதை மூட்டை கட்டிக் கொண்டு போயிருந்தேன்.   அட்டகாசமா அதைச் செஞ்சு முடிச்சுட்டாங்க ஐஸ்வர்யா.  இங்கே என் மனமார்ந்த வாழ்த்துகளைப் பதிவு செஞ்சுக்கறேன்.  ஹேட்ஸ் ஆஃப் ஐஸூ!

லக்ஷ்மி அனுப்பி வச்ச  நியூஸி மயில்:-)

இங்கேயும் லட்டு, மிக்ஸர், ஏலக்காய் சேர்த்த அருமையான டீன்னு தீபாவளிப் பலகாரத்தை ஒரு கை பார்த்துட்டு அடுத்த  பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம்:-)

பாலா வீட்டு மஹா'லக்ஷ்மி '  சீனிவாசனையும் மறக்கலை.

கிளம்புற நேரம் முத்தம் கொடுத்துட்டான்ப்பா!!!!


தொடரும்.........:-)