Friday, May 17, 2013

ஆயிரம் உண்டிங்கு........


வேலியில் போற ஓணானை மடியில் எடுத்துக் கட்டிக்கிட்டால்..........  இப்படித்தான் இருக்கும்போல. தினம் குறைஞ்சபட்சம் 30 நிமிசம் நடக்கணுமுன்னு டாக்குட்டர் சொல்லி இருக்காங்க. இந்தக்குளிரில் எங்கேன்னு  நடக்கப்போறது? அதனால் மால் வாக்கிங் போறது உண்டு.  முந்தி இருந்த வீட்டுக்கு எதிர்ப்புறம் ஷாப்பிங் செண்டர் ஒன்னு இருந்ததால் எல்லாம் வசதி.  இதுவே என் கோவில். ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு சந்நிதியின் பெயர்.  ஒரு  டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு   நவகிரக  சந்நிதின்னு பெயர் வச்சுருந்தேன். எல்லா சந்நிதியிலும் போய் சுற்றிவந்து ஸேவிச்சுக்கிட்டு வர  (விண்டோ ஷாப்பிங் உட்பட) 40 நிமிஷம் ஆகும்!  '

இந்த வீட்டுக்கு வந்ததும் நடை குறைஞ்சுதான் போச்சு.  இதுக்குள்ளே த வேர்ஹௌஸ் என்ற பெயரில் ஒரு பெரிய கடை வந்துருச்சு. ஷாப்பிங் மால்களில் லேட் நைட்ன்னு வாரம் ஒருநாள்தான் இரவு 9 வரை திறந்திருக்கு. ஆனால் இங்கே வாரம் ஏழுநாள் லேட் நைட் தான். கோபால் ஆஃபீஸில் இருந்து வந்ததும் வாக் போக வேர்ஹௌஸ் போவோம்.


இங்கே வழக்கமான ஸேல் ஐட்டங்கள் இல்லாம ஏற்கெனவே ஸேலில் இருந்து விற்கப்படாமல் மீந்து போன  சமாச்சாரங்களை  ஃபர்தர் டிஸ்கவுண்ட்ன்னு  நாலைஞ்சு Bபின்களில் போட்டு வைப்பாங்க. ஆரம்பத்தில் 10க்கு விற்ற பொருள் 7 ஆகி அப்புறம்  5, 3ன்னு  இறங்கி வந்துக்கிட்டே இருக்கும். நானும் பார்க்கிறேன் 100% டிஸ்கவுண்ட் மட்டும் வரவே மாட்டேங்குது:(

இந்த ஸேல் Bபின் சண்டிகேஸ்வரர் சந்நிதி(மாதிரி) கடைக்கு வந்தேன்னு  அங்கே போய் ஆஜர் கொடுக்கலைன்னா சரிப்படாது எனக்கு:-)

இப்படியாப்பட்ட ஒரு நாளில்  அங்கே Jigsaaw Puzzle item   ஏழெட்டு கிடந்துச்சு. எனக்கு நேரம் சரியில்லைன்னு அப்போ தெரியாது. கையில் எடுத்துப் பார்த்தேன்.  ஒவ்வொன்னும் ஒரு டிஸைன் என்றாலும் மனசை இழுத்தது ஒரு மயில்! நம் தேசியப்பறவை! விட முடியுதா?  அதுவும்ஸேலில் கிடக்கு.  வாங்கும்போதே கோபால் அஸ்து போடப்பார்த்தார். மயில் கொள்ளை அழகுன்னேன். ஆயிரம் துண்டுகள். அம்மாடியோ!!  ஆயிரமா?


ஏகப்பட்டது பண்ண அனுபவம் இருக்குன்னு ஒரு மெத்தனம். எங்கே வச்சுப் ப்ண்ணன்ற யோசனையில்  ரெண்டு வாரம்போச்சு.  நல்லதாஒரு பலகையை கார்டன் ஷெட்டில் இருந்து தேடி எடுத்துச் சுத்தம் பண்ணிக் கொடுத்தார் கோபால். எல்லாம் தன்னைப்பிடுங்காமல் இருந்தால் சரி என்ற எண்ணம்தான்.  ரெண்டு நாற்காலியின் மேல் வச்சு சரியா இருக்குன்னுட்டார்.


அட்டைப் பெட்டியைப் பிரிச்சேன். உள்ளே ஆயிரம் துண்டுகள் அடங்கிய பொதி! குனிஞ்சு குனிஞ்சு அடுக்க முடியுமா?  உயரக்குறைவா இருக்கே:(  அடுக்கி முடிச்சதும் அளவு  29 X 23 அங்குல அளவு வருமாம். அதனால் பலகையை அப்படியே டைனிங் டேபிளுக்கு மாத்தினேன்.  இந்த வேலை முடியும் வரை  சாப்பாடு துளசிவிலாஸ் கையேந்தி பவனில்தான்.

முதலில்  ஓரப்பகுதிகளைத் தனியாப் பிரிச்சுக்கணும். (அனுபவம்) செஞ்சேன். அப்புறம் மீதி இருப்பவைகளை  நிறப்ரகாரம் பச்சை, ப்ரவுண், நீலம்னு பிரிச்சு, அப்புறம்  அதுலேயே  கரும்பச்சை இளம்பச்சை, கடும் நீலம், இளநீலம் இப்படி வகைகளைப்பிரிச்சு வச்சுக்கவே  ஒன்னரை நாளாச்சு.

முதலில் பார்டர்களைப் போட்டுட்டால் மத்ததெல்லாம் ஜுஜுபி இல்லையோ!!!   முக்கி முனகி ஒரு பக்க பார்டர் சரியா வந்துருக்கு(அப்படீன்னு நினைக்கிறேன்!) நடுவிலே பார்த்தால்  எந்தத் துண்டைக் கையிலெடுத்தாலும்  ரொம்பத் தெரிஞ்சமாதிரி இருக்கே தவிர  ஒன்னும் சரியா பொருத்த முடியலை.  மயிலை உத்து உத்துப்பார்த்து கண்வலியும் தலைவலியும் மிச்சம். அப்படியும்  ஒரு மாதிரி தப்பும் தவறுமா மற்ற மூணு பக்க பார்டர்களை அமைக்கப் போராடிக்கிட்டே இருக்கேன், இன்றுவரை.


மயிலின் தலைப்பகுதி கொஞ்சம் தனித்துவமாத் தெரிஞ்சது . அதை அடுக்க ஆரம்பிச்சு ஓரளவு வெற்றி!


மகள் இந்த Puzzles செய்வதில் கெட்டிக்காரி. வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஹெல்ப் மீ  ஹெல்ப் மீன்னு வேண்டுவேன்.  கிட்டே வந்து பத்து நிமிசம் கண்கொட்டாமல் பார்த்துட்டு, இட்ஸ் டூ காம்ப்ளிகேட்டட் என்று  திருவாய் மலர்ந்தாள். உடனே அப்பா.....  'நான் அப்பவே சொன்னேன் ஆயிரம் வேணாம். நூறு இருந்தாப்பரவாயில்லைன்னு ...... கேக்கலையே...... கேக்கலையே....':(   இன்னும் ஒரு அஞ்சு நிமிசம்  பார்த்துக்கிட்டே இருந்து  நான் போட்ட பார்டரில்  இருந்து நாலைஞ்சு துண்டுகளை எடுத்துட்டு வேற நாலைஞ்சை  வச்சு நிரப்பினாள். அட!  இப்போ சரியா இருக்கே!

அதுக்குப்பிறகு  வீட்டு வந்தாலும் இந்த மேஜைக்கு எட்டியே  உக்கார்ந்துட்டுப் போறாள்.
 பார்டருக்கு ரெண்டு டிஸைன் மாறிமாறி இடம் பிடிக்குதுன்னா... நடுவில் உள்ள அனைத்துக்கும் ஒரேமாதிரிதான்:( மெஷீன் வெட்டிப் போட்டுருக்கும்!


வலையில் இருக்கு வழின்னு  மேய்ஞ்சதில் ரெண்டு இடுகைகள் கிடைத்தன, முதலாவதைத் திறந்தேன். அதுலே போட்டுருப்பது ரொம்பச்சரி.

முதலில் அட்டைப் பொட்டியைத் திறந்து உள்ளே இருக்கும் பொதியை எடுத்து வெளியில் வைக்கணும். அப்புறம் கன்னத்துலே பளார் பளார்ன்னு  ரெண்டு அறை கொடுத்துக்கணும். நம்ம கன்னத்துலேயேதான்!  முதலாவது  இப்படிக் குட்டிக்குட்டியா ஆயிரம் துண்டுகளை வாங்குனதுக்கு. அடுத்த அறை  இந்த ஆயிரத்தைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து  முழிச்சுக்க.  வெள்ளைக்காரப் பதிவர் என்பதால் நாசுக்கா கன்னத்துலே அறை என்று சொல்லிட்டார். உண்மையில்  இது நம் காலில் இருப்பதைக் கழட்டி நாமே நம்மை  அடிச்சுக்கவேண்டிய வகை:-)


அதிர்ச்சி விலகுனதும் பொதியைத் திரும்ப அட்டைப்பொட்டிக்குள்ளே வச்சு மூடி  கண்காணாத ஒரு இடத்துலே எடுத்து வச்சுரணும்.  ஸ்ப்ரிங் க்ளீனிங் சமயம் இது கண்ணில் படும் வரை. இந்தப் பதிவருக்கு  ஆறு வருசம் கழிச்சுக் கண்ணில் பட்டதாம்.  வேலை போய்விட்ட ஒரு நன்னாளில் அழுது முடிச்சுட்டு, பார்க்காம போட்டு இருக்கும் டிவிடிகள், வாசிக்காமல் விட்டுவச்ச புத்தகங்கள்  எல்லாம்  பார்த்து,வாசிச்சுத் தீர்ந்த ஒரு நன்னாளில் வீட்டையாவது துடைச்சுச் சுத்தப்படுத்தலாமுன்னு கிளம்புனப்போ கண்ணில் பட்டுருக்கு. இப்பதான் வேலை வெட்டி இல்லையேன்னு அதை மறுபடி பிரிச்சு வச்சு எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு  ஒரு 200 துண்டுகளை அடுக்கிட்டார். இதுக்குள்ளே அட்டைப் பொட்டியில் இருக்கும் படத்தை உத்துப் பார்த்துப்பார்த்து மனசுலே அப்படியே பதிஞ்சு போச்சு. கொஞ்சம் ஷேப் வர ஆரம்பிச்சதும்  மனசுலே ஒரு உற்சாகம் வந்து மெள்ள மெள்ள அடுக்கி முடிச்சே முடிச்சுட்டார். அப்பதான் தெரியுது இதுலே ஒரு துண்டு மிஸ்ஸிங்ன்னு! போகட்டும் போ 999 துண்டு Puzzle!


இந்தமாதிரி விளையாட்டு விளையாடும் ஆட்கள் மனம் சோர்ந்து போகாமல் இருந்தால் எப்படியும் ஒரு அஞ்சு முதல் எட்டு வருசத்துக்குள்ளே விளையாடி முடிச்சுடலாமுன்னு கடைசியில் டிப்ஸ் வேற கொடுத்துருக்கார்!


இன்னொருத்தர்  ஆறே மணி நேரத்தில் செஞ்சு முடிச்சுடலாமுன்னு சொல்லி முதலில் பார்டரை அடுக்கிட்டால் மற்றதெல்லாம்  சுலபமுன்னு அஸால்ட்டாச்  சொல்லிப்போயிருக்கார்.  ஊஹூம்.... இது .... இப்படித்தானே  நானும் ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த ஆறு மணி நேரம்.... ஒரேதா ஆறு மணி நிக்க நம்மாலே ஆகாது. ஏன் ? உக்கார்ந்தா துண்டுகளை அடுக்க  எப்படி பலகை முழுசையும் பருந்துப்பார்வை பார்ப்பது?


நானோ ரெண்டுங்கெட்டானாக் கிடக்கேன்.  இதுக்குன்னே உக்காந்து யோசிச்சு ஒரு ஐடியாக் 'கண்டு பிடிச்சேன்'!!  பொதுவாப்பார்த்தால் எல்லாமே கண்ணுக்குப் புலப்பட்டு குழம்பிப்போயிருதுல்லே?  சர்ஜரி நடக்கும்போது  எந்தப்பகுதியில் வெட்டணுமோ அது மட்டும் தெரிவது போல ஜன்னல் வச்ச துணியை மேலே போர்த்திவிடறாங்க பாருங்க..... அதே தான்:-)

ஒரு அட்டையில்  சின்னதா ஜன்னல் வெட்டிக்கிட்டு  அதை அட்டைப்பொட்டியில் இருக்கும் டிசைனில்  கொஞ்சம் கொஞ்சமா நகர்த்திவச்சு கட்டத்துக்குள் இருக்கும் பகுதிகளை மட்டும் அடுக்குவது. இது எப்படி இருக்கு? வொர்கவுட் ஆகுமா? necessity is the mother of invention என்று சொன்னது சும்மானாச்சுக்குமில்லே கேட்டோ:-)

இப்படியெல்லாம் 'சிந்திச்சு  மூளை கலங்கிக் கிடக்கும்போது, 'அங்கென்னவோ ஆடுதுன்னு' நம்ம ரஜ்ஜு மேசைமேல் தாவிக்குதிச்சு நோட்டம் விடறான்.  ஐயோ.... இதுவரை அடுக்குனதைக் கலைச்சுடப்போறானேன்னு கலங்கினேன். ஆனால்.... சும்மாச்சொல்லக்கூடாது  மெத்து மெத்துனு நோகாம அடி எடுத்து வைக்கிறான் ,செல்லம்!
ஆரம்பிச்சு மூணு வாரம் ஆன நிலையில் இப்படி இருக்கு. எப்படியும்  ஒரு 257 வாரத்தில் முடிச்சுருவேன்.  இதுக்காக எட்டு வருசமெல்லாம் டூ மச்:-)

நம்ம கை அசைஞ்சால் அவனுக்குத் தாங்கலை கேட்டோ.... ஓரு தாவல். லேப்டாப் மேலே வந்து உக்காரும்போது..... ஸ்க்ரீனிலுள்ளது அப்படியே இருக்குன்னா பாருங்க!!!!


தலைவலி நீங்கிப் புத்துணர்ச்சியுடன் துண்டுகள் அடுக்க அப்பப்போ ஒரு காஃபியோ டீயோ குடிச்சுக்கட்டுமுன்னு  கோபாலும் மகளுமா  ரெண்டு மக்
வாங்கிக் கொடுத்துருக்காங்க மதர்ஸ் டே கிஃப்ட்டாக !


தோழி ஒருநாள் வந்துருந்தாங்க.  மேஜையில் இருக்கும் புதிர்க்கடையைப் பார்த்துட்டு  ஒரு நிமிஷம் ஆடாம  அசையாமநின்னு யோசிச்சவுங்க கேட்டது.........  'இதை அடுக்கிமுடிச்சதும்  என்ன செய்வீங்க?'


ஙே............

27 comments:

said...

எதற்கும் ரெண்டு இடுகைகளில் உள்ளதை கவனத்தில் கொள்ளவும்...

257 வாரத்தில் முடிச்ச பிறகு ஒரு பதிவு போட்டுடுங்க... இப்போதே வாழ்த்துக்கள் சொல்லிறேன்... ஹிஹி...

said...

நானும் பார்க்கிறேன் 100% டிஸ்கவுண்ட் மட்டும் வரவே மாட்டேங்குது:( ..!!??'இதை அடுக்கிமுடிச்சதும் என்ன செய்வீங்க?'

இதைத்தான் வாங்கும் முன்னே கேட்டிருந்தால் வாங்க்மாட்டோமே..!

சொந்த செல்வில் சூன்யம் ..!1

said...

மயிலே மயிலே உன் தோகை எங்கேன்னு பாடத் தோணுது.

விடாதிங்க டீச்சர். ஒங்களால முடியும். இந்த மயிலை அடுக்குனதை வெச்சு ஒரு பத்து இருபது பதிவுகள் எங்களுக்கும் போனசாக் கெடைக்கும்.

மயில்வாகனன் அருள் புரியட்டும். :)

said...

மயிலே மயிலே இறகு போட்டுக் கொள் னு சொல்லுங்க:)கோடி நமஸ்காரமம்மா.

ம்ஹூம் பார்த்தாலே தலை சுத்துது. இதான் தலைவலிக்காரணமா:)
பாரு இந்த ரஜ்ஜுவை.நாசுக்காப் பிரச்சினையைத் தாண்டிவிட்டது!!!
252 வாரமா. கீஞ்சது கிருஷ்ணகிரி.


வாழ்த்துகள் தாயே.
அதென்ன மகளும் மேட்சிங்கா மயில் கோப்பை வாங்கி இருக்காங்க.!

said...

நல்ல யோசை சொன்னாரு முதல் பதிவர்!
நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாம பண்ணுங்க; பண்ணுங்க; பண்ணிகிட்டே இருங்க!
அனுபவங்களை எழுதுங்க; படிக்க நாங்க இருக்கோமில்ல!

கூடிய விரைவில் மயில் வடிவு பெற வாழ்த்துகள்!

said...

/// 'இதை அடுக்கிமுடிச்சதும் என்ன செய்வீங்க?' ///

நான் சொல்றேன். அடுக்கியதும் (?) அவசரப்பட்டுக் கலைத்துவிடாதீர்கள்.ஒவ்வொரு துண்டாக வரிசைப் படித் திருப்பி, மார்க்கர் பேனாவைக் கொண்டு வரிசை எண் போட்டுக் கொள்ளுங்கள்! இனி நீங்கள் தாராளமாகக் கலைக்கலாம்! உங்கள் உழைப்பு வீண் போகாது - அதுதான் நம்பர் இருக்கே... இனி எப்ப வேணும்னாலும் உடனே அடுக்கிடலாம்!

சரவணன்

said...

ஹா..ஹா..பதிவைப்படிக்காமலேயே..மயில் செஞ்சிட்டீங்களா என்று வேக வேகமாக ச்க்ரால் செய்து பார்த்தால் அவ்வ்வ்


ஆனாலும் துளசிம்மாவுக்குதுணிச்சல் ஜாஸ்திதான்.1000 பீஸ் இருப்பதை செலக்ட் செய்து இருக்கிறதைத்தான் சொல்லுறேன்..எனக்கு அந்த பொதியை பார்த்ததுமே தலை சுற்றிப் போச்சு.

மால் வாக்கிங் சூப்பர் ஐடியாகவாகத்தான் இருக்கு.ஆனாக்க இப்படி ஏடாகூடமா மாட்டிக்ககூடாது.

சரிதான் இதெல்லாம் 257 வாரம் வரை கஷ்டப்பட்டு செய்து முடிச்சு அப்புறம் இதை வச்சி என்ன பண்ணுவீங்க துளசிம்மா?

said...

ஒருவருக்கு எட்டு வருஷம், இன்னொருவருக்கு 6 ம்ணி நேரம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள். பொறுமையாய் முதலில் கலர் பிரித்து அழகாய் தனிதனியாய் பிரித்து வைத்து இருப்பதற்கே பாராட்ட வேண்டும்.

அப்படி அடுக்கி விட்டால் சரவணன் அவர்கள் சொன்னது போல் பொறுமையாய் நம்பர் போட்டு விட்டால் கலைந்தாலும் அடுக்கி கொள்ளலாம்.

உங்கள் கஷ்டம் தெரிந்த ரஜ்ஜு அழகாய் நடந்து வருகிறார் கலைக்காமல், அதற்கும் பாராட்டுக்கள்.

அப்பா, மகள், வாங்கி கொடுத்த கப் அழகு. தோகை மயிலை இப்போதைக்கு அதில் பார்த்து மகிழ்ந்து கொள்கிறோம்.

said...

தலைப்பைப் பார்த்து, சீரியஸ் மேட்டரோன்னு வந்தா, ‘சிரி’யஸ்!!

ஆனாலும் உங்க பொறுமையக் கண்டு ஆச்சரியம்தான் - ஆயிரம்னு தெரிஞ்சும் வாங்கிருக்கீங்களே!!

ஆமா, அப்ப இது செஞ்சு முடிக்கிற வரைக்கும் (குறைஞ்சது 257 வாரத்துக்கு) டைனிங் டேபிளில் சாப்பிட முடியாதா?? :-)

said...

வாக்கிங்னா கையை வீசி, வீசி நடக்கணும்னு சொல்வாங்களே? மால்ல அது முடியுதா? ஒருவேளை ஒங்க ஊர் மால்ல முடியுமாருக்கும். இங்கன்னா கையை உடம்போட ஒட்டி வச்சிக்கிட்டுத்தான மாலுக்குள்ள போக முடியும்? நீட்டுனா யாரையாவது இடிச்சிருவோமோங்கற அளவுக்கில்ல கூட்டம் அலைமோதுது!

said...

தோகை மயில் எழுந்து பறக்க வாழ்த்துகள்.

வாழ்க! மயிலாருடன் :))

said...

ஆனாலும் திட மனசுக்கரர்தான்ப்பா நீங்க ! ரஜ்ஜு ஏறினப்ப எப்பிடி பொறுமையா போட்டோ எடுததீங்களோ . எனக்கு பதறுது ஐயோ கலைச்சுட போகுதேன்னு ! எப்போ எவ்ளோ தூரத்துல இருக்கீங்க . அப்பபோ போட்டோ போடுங்கப்பா !!All the best.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

முதலிரண்டில் முதலில் உள்ளதுதான் நடக்கும்போல இருக்கு:-)

அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கு நன்றி.

ஐயோ..... இன்னும் 257 வாரம்தான் இருக்கு:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.


ஐயோ...... இப்படி ஆகிப்போச்சேன்னு இருக்கு:-)))))

said...

வாங்க ஜிரா.

அங்கெதான் ஒரு தப்பு பண்ணிட்டேன். பொதியைப் பிரிக்குமுன் மயில்வாகனனின் அண்ணனைக் கும்பிட்டு ஆரம்பிச்சு இருக்கலாம்!

இப்பவும் தாமதமில்லை. புள்ளையாருக்கு ஒரு டாலர் முடிஞ்சு வச்சுட்டுப் போரைத் தொடர்வேன்:-)

said...

வாங்க வல்லி.

கணக்கு தப்பு. 257 வாரம் அண்ட் கீஞ்சது கிஷ்ணகிரி!!!

said...

வாங்க ரஞ்ஜனி.

மயில்தலை மட்டும் வடிவம் பெற்றுவிட்டது. கழுத்து இன்னும் இல்லை..... நான் மயில் கழுத்தைச் சொன்னேன்:-))))

அதை முடிச்சுட்டு,மயில்கழுத்துக்கலரில் ஒரு பட்டுப்புடவை வாங்கிக்கறதா ஒரு வேண்டுதல் வச்சுக்கணும்:-)

said...

வாங்க சரவணன்.

சூப்பர் ஐடியாவுக்கு தேங்க்ஸ்ங்க.

எனக்குத் தோணாமப் போச்சு:(

முடிச்சதும் ஃப்ரேம் போட்டு வச்சுக்கலாமுன்னு நினைச்சேன்:-)

said...

வாங்க ஸாதிகா.

குட்டிச் சாத்தான் ஒன்னு கிடைச்சா அதை பஸில் அடுக்கச் சொல்வேன்:-)

சரவணன் சொன்ன ஐடியாவைப் பார்த்தீங்களா!!! அதைத்தான் செய்யணும் இன்னும் 257 வாரம் கழிச்சு:-)

said...

வாங்க கோமதி அரசு.

ரஜ்ஜுவுக்கு இப்போ டைனிங் டேபிள் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அதனடியில் உக்கார ஆரம்பிச்சுருக்கான். நான் டேபிளுக்குப்பக்கம்போனால் உடனே குதித்து மேலே ஏறி என் பி பியை எகிறவைக்கிறான்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி. உருப்படியாச் செஞ்சவேலை பத்து டப்பாவில் பாகம் பிரிச்சதுதான்:-))))

said...

வாங்க ஹுஸைனம்மா.

பாய்ண்டை டக் ன்னு புடிச்சீங்க!!!!!

முந்தாநாள் ஃபிஜியில் இருந்து வந்த ரெண்டு நண்பர்களை இண்டியன் ரெஸ்டாரண்டு கூட்டிப்போனோம்.

அதான் வீட்டுலே சாப்பாடு ரெடின்னாலும்
உக்காந்து சாப்பிட இடம் இல்லையே:-))))

said...

வாங்க டிபிஆர் ஜோ,

மால்கள் நல்லா அகலமான தெருக்களோடுதான் (!) இருக்கு இங்கே.

மால் திறக்குமுன் அதிகாலையில் அங்கே நடைப்பயிற்சி செஞ்சுக்கவும் முக்கியமாக முதியோர்களுக்கு இடம் கொடுக்கறாங்க.

எட்டரைக்குத்தான் மால் திறப்பாங்க. அதனால் பிரச்சனை இல்லை.

said...

வாங்க மாதேவி.

மயிலாருக்கு உயிர் வரணும் முதலில். அப்புறம் பறக்கலாம்:-))))

said...

வாங்க சசி கலா.

திட மனசு இல்லேன்னா வாழ்வதெப்படி:-))))

ஆனாலும் ரஜ்ஜு செல்லம் ரொம்பவே உஷார் கேட்டோ!

தினமும் க்ளிக் க்ளிக்தான்.

said...

ரஜ்ஜூவை எல்ப்புக்கு கூப்பிட்டுக்கலாமே :-))

said...

வாங்க அமைதிச்சாரல்.

மேஜைக்குப் பக்கம் போனாலே ...பார்த்துக்கிட்டே இருந்து, ஓடி வந்து ஒரே தாவு. ஆனால் ஓரமா! அப்புறம் மெதுவா காலெடுத்து பலகையில் வைக்கிறான்.

இவ்ளோ எல்ப்பு போதுமுன்னு இருக்கான்:-)))

said...

பேசாம அடிக்கி முடிச்சதுக்கு அப்பறம் எல்லா பீஸுக்கு பின்னாடியும் ஆடர்வாரியா நம்பர் எழுதிடுங்க . அப்பறம் எத்தன தடவ வேணுன்னாலும் பண்ணி முடிச்சு அழகு பாத்துக்கலாம் . ஒரே நாளுல , ஒரே மணிநேரத்தில முடிச்செல்லாம் சாதனை படைக்கலாம் . ஐயோ! ஐயோ! .